என் சித்தம் சித்திரமே – 10

என் சித்தம் சித்திரமே 10

“குடுடா என் பொண்ணை இங்க. காலைலேயே கடுப்பை ஏத்துறான்! வாயை வச்சிட்டுச் சும்மாவே இருக்க மாட்ட நீ… வெளக்கெண்ணெ எனக்குப் பொண்டாட்டின்னா என் பேபிக்கு அம்மாடா என் சுதா. எங்க ரெண்டு பேருட்டயே அவளை அழகில்ல சொல்ற?

பேத்துருவேன் ஜாக்கிரதையா இருந்துக்க… உனக்கும் கல்யாணம் ஆகப் போகுது… ஒரு பொண்டாட்டி வரப் போறா… ஞாபகத்துல வச்சிக்க!”

தம்பியைப் பார்த்து ஒற்றை விரல் நீட்டி மிரட்டலாகச் சொன்ன சுந்தருக்குக் கோபத்தில் முகம் கடுக்க மூக்கும் சிவந்து வெட வெடத்தது.

சுதாவை எப்போதுமே சுந்தர் ப்ரொடெக்ட் பண்ணித்தான் பேசுவான். அவள் மேல் அவனுக்கு ஒரு பொஸசிவ்நெஸ் உண்டு. அதுவும் தம்பியிடம் தான் அதிகம் வெளிப்படும்.

எப்பவும், ‘என் பொண்டாட்டி அவ. அப்புறம் தான் உனக்கு பிரெண்ட்.’ என்பது போல அவன் செய்கைகளில் வெளிக்காட்டுவான். இது தான் சுந்தரின் இயல்பு.

சுதா ஒரு நாள் மயங்கி விழுந்து வைத்ததிலிருந்து சுரேனை வைத்து அவளிடம் வம்பு வளர்ப்பதைக் குறைத்திருந்தான்.

சுந்தர் இன்று அந்த உரிமை உணர்வைத் தாண்டிய ஓர் எரிச்சலும் கோபமும் சேர்ந்து எமோஷனல் கலவையாகிப் போனான்.

குழந்தையைத் தம்பியிடமிருந்து பறிக்காத குறையாக வெடுக்கென இழுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டான்.

எதிர்பாராத அவனின் செயலில் பேபி கசக்கப்பட்டு உடனே கையைக் காலை உதைத்துக்கொண்டு சிணுங்கச் செய்ய… சுந்தர் அவளைத் தட்டிக்கொடுத்துச் சமாளிக்க முயல… பேபி அவனது ஸ்பரிசத்தையும் குரலையும் கண்டு கொண்டவளாக மெல்ல அடங்கினாள்.

சுரேனோ இப்படியொரு எதிரொலியை துளி கூட எதிர்பார்க்கவில்லை… முழித்தான். அண்ணனை யோசனையுடன் பார்க்கச் செய்ய… அவன் முகம் சரியில்லாமல் இருந்தது.

என்னவோ இவனுக்கு என்று சுரேன் மனதில் ஓடியது. அதைக் காட்டிக்கொள்ளாமல் அவனிடம்,

“நா என்ன சொல்லிட்டேன் இவ்வளவு சீன்?” கேட்டு சுரேன் கண்களைச் சுருக்கிக் கேள்வியாய் புருவம் வளைத்து நிற்க… சுந்தர் அவனை முடிந்த மட்டும் முறைத்தான்… பதில் பேசச் செய்யவில்லை.

‘உரசிவிட்டுட்டியே சுரேன்!’ நினைத்தவன், “குட்டிம்மா, உங்கம்மாவ நா அழகில்ல சொல்வேனா?” கேட்டு அவள் கன்னம் தட்டி, தலையை வருடிவிட்டான். அண்ணனிடம் தணிந்தே போனான்.

இப்போதெல்லாம் இருவரும் அதிகம் வாயாடுவதில்லை. சுரேனுக்குத் தன் வேலையே அதிகமிருக்க வீட்டில் அவனைப் பார்ப்பதே அரிதாகிப் போனது.

யமுனா சதாசிவம் எப்படி இருந்தாலும் சுந்தர் தம்பியை மதித்துப் பேசத் தொடங்கியிருந்தான்.

யாரையுமே எதிர்பார்க்காமல் தம்பி அவ்வளவு ரோஷத்துடன் அவனுடைய உழைப்பில் படித்து; நல்ல வேலையில் அமர்ந்து; பெரிதாகச் சாதித்துக் காட்டியது சுந்தரைக் கவர்ந்தது.

சுரேனை அந்தளவு பெருமையாக உணர்ந்தான் கூட!

இளங்கலை, முதுகலை, இன்னும் வேலைக்காகத் திட்டமிட்டு… கூடுதல் தகுதிகளை வளர்க்கச் சில சிறப்புப் படிப்பு… யாருக்கும் தெரியாமல் உரிய தேர்வுகளை எழுதி…

ஏதோ படிப்பது போலச் சொல்லிச் சென்றவன் டிரெயினிங் முடித்து வேலைக்கான ஆர்டரும் வாங்கி வைத்துவிட்டே வீட்டில் சொன்ன சுரேனை உயர்வாகப் பார்க்கத் தோன்றியது சுந்தருக்கு.

எந்தத் துறையாக இருந்தாலும் என்ன… எதிலும் உழைப்பைப் போட்டால் தான் முன்னேற முடியும். மருத்துவத்துறையைப் போன்று காவல்துறையும் மக்கள் சேவை தானே?

கூடவே சுரேன் விருப்பப்பட்டக் கணினித்துறையும் இணைந்தே அவன் வேலையானதில் சுந்தர் மகிழ்ந்தான்.

இருவருக்குள்ளும் தனிப்பட்டக் கருத்து வேறுபாடுகள் இப்போதும் இருக்கின்றன தான். ஆனால், பல காலமாக நிலவிய அந்தக் குத்தல் பேச்சுக்கள், கோபதாபங்கள் நலிந்து விட்டன.

அதுவும் குழந்தை பிறந்து தான் அப்பாவானதும், சுந்தர் சுரேனிடம் முன்பு போலக் கடிக்கச் செய்யவில்லை.

குழந்தையை எடுத்துக்கொண்டு சுதா பிறந்த வீட்டிலிருந்து வந்த நாளிலிருந்து சுரேன் தினமும் சில நிமிடங்களாவது குழந்தையுடன் செலவிடுவதை விரும்பினான்.

எத்தனை வேலையிருந்தாலும் அவளைப் பார்க்காமல் அவனுடைய நாள் முழுமையடையாததாய்! அவ்வளவு பிரியம் சின்ன குட்டி மேல் சுரேனுக்கு!

குழந்தைகள் தானே உள்ளச் சிணுக்கமற்று எல்லோரையும் சமதையாக நினைப்பது! கள்ளம் கபடமற்ற அவர்களின் சிரிப்பும் உங்காவில் ஆரம்பித்துத் தொடரும் மழலையும் அதிசயம் தானல்லவா?

ஆசை ஆசையாக… சுந்தர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண்டு கொள்ளாமல் தான் பாட்டுக்கு பேபியுடன் பேசுவான், விளையாடுவான், சிரித்து மகிழ்வான். இன்றும் அது போல் தூக்கி வைத்துக்கொண்டு பேசினான்.

முந்தைய நாள் வெண்ணிலாவுடன் இருந்த மணித்துளிகளின் லயிப்பில் மிகவும் உல்லாசமான மனநிலையுடன் இருந்தான்.

அவளை எப்போது மறுபடியும் பார்க்க முடியும்… அவள் வீட்டிலிருந்து என்ன பதில் வரும்? அவள் ‘உம்’ சொல்வாளா… ‘ஊகூம்’ சொல்வாளா? கல்யாணம் நடந்து அதன் பின் அவளுடன் தன் வாழ்க்கை எப்படிப் போகும்?

இவ்வாறான சிந்தனைகளுடன் வளைய வந்தவன், அதே குதூகலத்தை வெளியில் காட்டச் செய்ய… அவன் சாதாரணமாகப் பேசியது ஒரு விவகாரமாகும் என்று நினைக்கவில்லை.

“என் பொண்ணைத் தொடாதடா!” சுந்தர் முறுக்கிக்கொள்ள…

“இந்த பிங்க் லோட்டஸ் எனக்கும் பொண்ணு தான… சித்தப்பா நானு பேபிய தூக்கக் கூடாது சொல்லுவியா? போடாங்… நொண்ணா!” சுரேன் அண்ணனிடம் உரிமையாகச் சண்டைப் பிடிக்கச் செய்ய…

“உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் போது தூக்கிக் கொஞ்சிக்க… இப்ப எங்க குவாலிட்டி டைம். தொந்தரவு பண்ணாம ஓடிடு!” சுந்தர் ஒரு விரல் நீட்டி பாவனையாகச் சொல்ல…

“கல்யாணமானா பொண்டாட்டி தான் வீட்டுக்கு வருவா… வப்பாட்டியவா கூட்டிட்டு வர முடியும்? லூசுப்பய!” என அண்ணனின் காதருகில் முணு முணுத்தான் சுரேன்.

அப்போதும் இது சீரியஸாகும் நினைக்கவில்லை.

“லூசாடா நீ! ஒரு வரமுறையில்லாம பேசுற? சுதா சுதா… எங்க இருக்கடி? இங்க வா… வந்து உன் பிரெண்டை என்னன்னு கேளு…” சத்தமாக கிட்சன் பார்த்துக் குரல் கொடுக்கச் செய்தான்.

சுதா இரவில் சரியாக உறங்கியிருக்கவில்லை. பாப்பா எப்படியும் ஒன்றிரண்டு தடவையேனும் இரவு எழுந்து கொள்வாள். நள்ளிரவு தாண்டிய நேரம்…

அந்த ஒரு மணி இரண்டு மணிக்கு விழித்து, மகளைக் கவனித்துச் சுத்தம் செய்து உடை மாற்றிப் பாலூட்டிவிட்டு இவள் உறங்க முற்படும் நேரம் தூக்கம் வரச் செய்யாது!

அதிலும் அவள் தாய் வீட்டிலிருந்து இங்கே திரும்பி வந்த இந்தச் சில நாட்களாய் சுந்தரின் அருகாமை… தனிமையில் தொலைந்த அவர்களின் கடந்த சில மாதங்களை ஈடு செய்யும் விதமாக அவனின் ஆக்கிரமிப்பு… சுதாவுக்கும் அந்தத் தேடல் தேவையானதாய்!

இரண்டு மாமியார்களும்; சுதாவின் அத்தம்மா; சுதாவின் சித்தியெனப் பெரியவர்கள் எல்லோரும் ஒரு ஐந்தாறு மாதங்களாவது இருவரையும் சேராமல் தனித்திருக்குமாறு சொல்லச் செய்ய… சரி சரியென அவர்களுக்கு மண்டையாட்டிவிட்டு, சுந்தரிடம் தானும் விரும்பியே தொலைந்தாள்.

ஏதோ ஒரு வெறுமை குழந்தை பிறந்ததிலிருந்து சுதாவை வருத்திக்கொண்டிருந்தது. அந்த வெறுமை கணவனின் அருகாமையில் மட்டுப்பட்டது. அவனுக்குச் சமமாகத் தானும் அத்தேடலில் ஈடுபட்டாள்.

அப்போது தோன்றாத குற்றவுணர்வு அவன் கூடல் முடிந்து விலகியதும் எழச் செய்ய… தான் பெரியவர்களின் பேச்சை மதிக்கவில்லையென ஒரு பதைப்பு!

சுந்தர் எல்லா நேரமும் வீட்டில் இருப்பதில்லையே! சில நாட்கள் இரவில் கூட அவன் ஹாஸ்பிடல் செல்லும் படியாகும். அவன் இல்லாத நேரம் எழும் வெறுமை என அவளைப் படுத்தியது.

ஏனென்று தெரியாமலே அவளின் தனிமையில் கண்களில் கண்ணீர் சுரக்கும்… பிரசவம் நடந்த முதல் சில வாரங்கள் வயிற்றைத் தடவிப் பார்த்து அழுததெல்லாம் இப்போது குறைந்திருந்தது.

இருந்தாலும் பூரணமாக சுதா இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

யமுனா மருமகளைக் கவனித்துப் பார்க்கவில்லை. சுதா சற்றுக் களைத்துப் போயிருப்பதாகத் தோன்றவும், நல்ல ஊட்டச்சத்துடன் பத்தியமாகவே அவளுக்குத் தனியாகப் பார்த்துச் சமைத்துக் கொடுத்தார். வீட்டு வேலைகளுடன் பேத்தியைத் தூக்கிக் கொஞ்சவே நேரம் பத்தவில்லை அவருக்கு.

சுதாவும் அவரிடம் எதையும் பேசச் செய்யவில்லை. சுந்தருக்கும் எதுவும் குறிப்பிடும் அளவுக்கு மனைவியிடம் வித்தியாசமாகத் தெரியவில்லை.

சுதாவுக்கு அதிகம் வேலையெனத் தெரியும். எல்லாப் புது அம்மாக்களுக்கு ஏற்பட்டது தானே? பழகிப் போகும் என்று சுந்தர் நினைத்தான்.

எதுக்கும் அவளுக்கு உதவக்கொள்ள யாரையாவது பார்த்து வேலைக்கு வைக்குமாறு அம்மாவிடம் சொல்லியிருந்தான். யாரும் சரியாக அமையவில்லை. அவனால் முடிந்தது மகளைத் தூக்கி வைத்திருப்பது, கொஞ்சுவது தான்.

இன்னும் மகளுக்குச் சுத்தப்படுத்திவிட்டு ஆடை மாற்றவெல்லாம் தெரியாது. முந்தைய இரவு மனைவியை மகள் படுத்தியிருக்க… காலையில் அவள் பாலூட்டி முடிக்கவும், அவளைச் சற்று நேரம் தூங்கச் சொல்லிவிட்டு மகளைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்திருந்தான்.

சில நிமிடங்கள் முன்னர் தான் சுதா தூக்கம் கலைய எழுந்தவள் அப்படியே குளித்துவிட்டு ரூமிலிருந்து வெளியே வந்தாள். நேரே கிட்சன் சென்று காலை டிஃபென் வேலைகளில் யமுனாவுக்கு உதவிக்கொண்டிருந்தாள்.

சுந்தரின் குரல் கேட்டும் காதில் விழாததைப் போல இவள் வேக வைத்த உருளைக்கிழங்கை உரித்துக்கொண்டிருக்க…

“சுதா சுந்தர் கூப்பிடறான் பாரு. பாப்பாக்கு எதுவும் வேணுமோ என்னவோ… என்னன்னு போய்ப் பார்த்திட்டு வா. இந்த வேலைய நா பார்த்துக்கறேன். போ போ…” என விரட்டிவிட்டார்.

சுந்தருக்குப் பூரி கிழங்கென்றால் மிகவும் பிடிக்கும். வார நாட்களில் முன்பெல்லாம் நேரம் இழுக்கும் பண்டங்களைச் செய்ய யோசிப்பார் யமுனா.

இப்போது மகன்கள் இரண்டு பேரும் எந்த நாளும் பிஸி ஆகிவிட, வாரத்தின் ஏழு நாட்களும் ஒன்றாகிப் போனது.

அதுவும் போக வீட்டு வேலைகளைச் செய்ய வரும் பெண்மணி ஞாயிறு வருவதில்லை. சனியும் ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி அடிக்கடி மட்டம் போட்டுவிடுவதால், அந்தம்மா வரும் நாட்களில் வைத்தே விரிவான சமையலைச் செய்யத் தொடங்கிவிட்டார்.

நமது விருப்பம் போலச் செய்வதென்றாலும் கூட வேலை செய்பவர்களைச் சற்று அனுசரித்துப் போனால் தான் நல்லது… அப்படி இருந்தால் தான் அவர்களும் வேலையில் நிலைத்து நிற்பார்கள்.

ஏழு நாட்களும் ஆளில்லாமல் கஷ்டப்படுவதைவிட, சனி ஞாயிறு வேலைகளைச் சுருக்கிக்கொண்டு… தனக்கு முடியாத போது ஸ்விக்கி, யூபர் ஈட்ஸ் ஆர்டர் போட்டு எனச் சமாளித்துக்கொள்ள யமுனா பழகியிருந்தார்.

பேத்தியைக் குளிப்பாட்டி மருமகளுக்கு உடனிருந்து அவளுக்கு உதவி செய்ய ஓர் ஆளைத் தேடி தேடி அலுத்துப் போயிருந்தார். ஒரு இரண்டு மணி நேரம் மட்டுமாவது யாரையாவது இருத்தலாமென்றால், ஆள் கிடைக்கவே இல்லை.

இதோ அரக்க பறக்க யமுனாவே சமையலைப் பார்த்துக்கொண்டிருந்தார். சுதா காலையில் சிறிதளவாவது மாமியாருடன் நிற்பாள். அவளை வேலை செய்ய விடாமல் சுந்தர், “சுதா சுதா” எனக் கூப்பிட செய்ய எரிச்சலுடன் தான் ஹால் போனாள்.

“என்ன என்ன இங்க பஞ்சாயத்து… காலைலேயே ஆரம்பிச்சாச்சா? புதுசு புதுசா தினமும் ஒரு சீன் கூட்டுறது உரண்டைய இழுக்குறது… ச்சைய் நீங்க வளந்தவங்களான்னே எனக்குப் புரிய மாட்டிது…”

அண்ணன் தம்பி இரண்டு பேரையும் முறைத்தபடி சத்தம் போட்டாள். சுரேன் அவளைப் பார்த்துச் சிரித்தவன், “குட் மார்னிங் சுதா!” சொன்னான். நண்பனை அலட்சியப்படுத்தினாள். முகத்தையும் திருப்பிக்கொண்டாள்.

“உன் பிரெண்ட் நீ அழகில்ல சொல்றான்! அவ தான் அழகாம்!” வத்தி வைத்தான் சுந்தர். அவன் முகத்தைப் பார்க்கணுமே… அந்த மாதிரி இருந்தது!

“ம்ம்… காதுல விழுந்திச்சி! அவங்கவங்களுக்கு இருக்கிறது தான் இருக்கும். சுரேன் நா அழகில்லை சொன்னா எனக்கிருக்குற அழகு காணாம போகப் போகுதா… நீங்க நா தான் அழகு சொன்னா இப்ப இருக்குறது கூடப் போகுதா என்ன?

த்தூ இதெல்லாம் ஒரு பஞ்சாயத்து… இதுக்கு நா நாட்டாமையா? என்னைய வேலை செய்ய விடாம கூப்பிட்டிட்டு… பெரிய அக்கப்போரா இருக்கு உங்களோட… ச்சை… அந்தச் சொம்பு மட்டும் கையில இருந்துச்சி பொளந்திருப்பேன்!”

ஏறிக்கொண்டு வந்தவளிடம்,

“எதை?” கண்ணடித்து சுரேன் கேட்க…

“யாரைடி பொளக்கப் போற?” சுந்தரும் அதே நேரத்தில் கேட்கச் செய்ய…

“ம்ம் ரெண்டு பேர் முகரைய… கூட எதாவது சேர்த்து வச்சிப் பொளக்கணும்னா நா ரெடி! நீங்க? கேள்விய பாரு டாக்டருக்கு!” சுதா ஒரு ஃபார்மில் தான் இருந்தாள்.

அது தெரியாமல், “உனக்கெல்லாம் யாரு மெடிக்கல் காலேஜ்ல அட்மிஷன் தந்தாங்க கேட்கிறாடா…” சுந்தரைப் பார்த்துச் சிரித்தான் சுரேன்.

சுதா என்றைக்கும் இல்லாததைப் போல இன்று சுரேனைப் பிடித்துக்கொண்டாள்.

“வில்லங்கமாவே பேசி வைடா நீனு! வரப் போறவளைப் போய்க் கொஞ்சிக்க… இனி இந்த அழகில்லாதவ பெத்த பிள்ளைய நீ கொஞ்ச வேண்டியதில்ல. உன் சங்காத்தியமே எனக்குத் தேவையில்ல… எம் பொண்ண தொடாத! எங்கிட்ட பேசாத நீ!”

சுதாவுக்கு அப்படியொரு கோபம் வந்தது. கூடவே அழுகையும். தான் என்னமோ எப்பவும் போல ஜாலியாக பேச என்ன இவள் இப்படி ரியாக்ட் பண்ணுகிறாள் என சுரேன் திகைத்தான்.

சுந்தர் கத்திக்கொண்டிருந்த மனைவியைப் புரியாமல் பார்த்தான். குழந்தையை வாங்கத் தன்னை நோக்கி வந்தவளிடம், சுந்தரே குழந்தையை ஏந்தி நீட்டினான்.

மெல்லமாக மகளை வாங்கியவள் அப்படியே தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். மகளை அணைத்த நிலையிலேயே தேம்பி தேம்பி அழுதாள்.

சுந்தர் பதறிப் போய், “என்ன என்ன சுதா… எதுக்கு இந்த அழுகை அழுகிற? எப்பவும் நாங்க பேசிக்கிறது தான… இன்னைக்கி எதோ எனக்குப் பொறுமையில்லாம போச்சி. அவன்ட்ட கத்திட்டேன். உன்னையும் கூப்பிட்டு வச்சி டென்ஷனாக்கிட்டேன்.

சாரி… சாரிடி! அழாதடி… ப்ளீஸ்! பேபியும் அழுகிறா பாரு! வா இப்படி உட்காரு… என்கிட்ட தா பேபிய…” சோஃபாவில் அவளை அமர வைக்க முயல, அமராமல் அடமாக நின்றாள்.

குழந்தையையும் கணவனிடம் தராமல் மேலும் தன்னுடன் சேர்த்துப் பிடிக்கச் செய்ய… குட்டி வீரிட்டு அழ… அந்தச் சத்தத்தில் யமுனா கிட்சனில் போட்டது போட்டபடிக்கு ஓடி வந்தார்.

சுரேன் ஸ்தம்பித்து நின்றது அரை நிமிடம் இருக்குமோ என்னவோ… சற்றுத் தள்ளி நின்றிருந்தவன் நான்கு எட்டில் சுதா சுந்தர் அருகில் போனான்.

அண்ணனிடம், ‘நீ இப்ப எதுவும் பேசச் செய்யாதே! மகள் மேல் ஒரு கண் இருக்கட்டும். பக்கத்தில் நில்லு!’ என்கிறது போலக் கை காட்டி உதட்டில் விரல் வைத்துக்காட்டினான்.

சுதா இருந்த நிலையில் சுரேனைக் கவனிக்கவில்லை. மகள் மீதே அவள் கவனம். மகளை அவ்வளவு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

என்னவோ அவளிடமிருந்து யாரும் குழந்தையைப் பறித்துக்கொள்வார்களோ என்கிற மாதிரி ஒரு வெளிறிய தோற்றம்… அலைபாயும் கண்கள்… அத்தனை பரிதவிப்பு அவள் உடல்மொழியில்!

ஒரே நிமிடத்துக்குள் தன் தோழியைப் பின்னிருந்து பற்றி அழுத்திப் பிடித்தபடி சோஃபாவில் அமர்த்தினான் சுரேன். அவள் சுரேனைத் தட்டிவிட பார்த்தாள். அவனோ லாவகமாக அதை முறியடித்தான்.

“என்னைத் தொடாத சொன்னேன்!” சுதா சுரேனைப் பார்த்துக் கத்தச் செய்ய…

“சுதா என்னடி இப்படி பிகேவ் பண்ணுற… பேபிய ஃப்ரீயா விடு! வலிக்கப் போகுது அவளுக்கு… அழுறா பாருடி!” சுந்தர் அவளைக் கடிந்துகொள்ள…

“பேபிய தான தொடக்கூடாது சொன்ன? நா உன்னைய தான தொட்டுப் பிடிச்சி உட்கார வச்சிருக்கேன். பேபி மேல என் கை படவே இல்லையே… பாரு இங்க.

இது கூட ஆபத்துக்குப் பாவமில்ல கணக்குல வந்திடும்… நீ என் பிரெண்ட் தான தப்பில்ல. கொஞ்சம் ரிலாக்ஸா உட்காரு சுதா.

இப்படி எதுக்குமா டென்ஷனாவ நீனு? நிதானமா பேசுற என் பிரெண்டை காணுமே? டேய் அண்ணா என் பிரெண்டை தேடித் தர்ற நீனு!”

தோழியிடம் நிதானமாகப் பேசி… அவளிடம் அதட்டலும் கனிவையும் காட்டியவன்… அண்ணனை விரல். நீட்டி மிரட்டினான்.

அங்கே வந்து நின்றிருந்த யமுனாவுக்கு முதலில் எதுவும் பதியவில்லை. அதிர்ச்சியில் அப்படியே பார்த்திருந்தார். பேத்தியைத் தூக்கச் சொல்லி மூளை சொன்னது.

அதைச் செயல்படுத்த முடியாதளவு மருமகளின் கோலம் இருந்தது. அவரின் கை கால் உறைந்திருக்க… பேச்சு வராமல் மேலண்ணம் கீழண்ணம் ஒட்டிக்கொண்டது. ஆனானப்பட்ட யமுனாவையே சுதா பயந்துகொள்ள செய்திருந்தாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகே,

“என்ன என்னாச்சி சுதா… பாப்பா எதுக்கு அழுகுது? ஏய் நீ என்ன இப்படிப் பாக்குற… என்னடா சொன்னீங்க மருமகள!” என்று யமுனாவின் குரல் ஒலித்தது. அதில் பதட்டம், ஒரு வித பயம், கவலை, கோபம் என்று கலந்து கட்டி வந்தது.

சுரேன் அவரின் நிலையைப் புரிந்துகொண்டான்.

“ம்மா… பேசாம இருக்கியா… சும்மா ஆளாளுக்கு ஒரு சீனை போட்டுக்கிட்டு! உன் மருமகள யாரு என்ன சொல்லிட்டான்னு இப்ப ஏறிட்டு வர்ற? போ போயி அவளுக்கு எதாச்சும் குடிக்கக்கொண்டு வந்து கொடு!” அம்மாவிடம் அமர்த்தலாகச் சொன்னவன்,

“டேய் உன் பொண்டாட்டிய அழகின்னு சொன்னா மட்டும் பத்தாது! அவளை ஆதரிச்சுப் பார்த்துக்கவும் தெரியணும்!” அண்ணனையும் விடவில்லை.

சுந்தரின் முகம் தொங்கிப் போனது. “நா இவளை நல்லாப் பார்த்துக்கல சொல்றியா?” வருத்தத்துடன் கேட்டான்.

“நல்லாப் பாத்துக்கிற தான். நா இல்ல சொல்லல. இது வேற… அவளைக் கவனிச்சுப் பாரு. கூடவே இரு. ஷி நீட்ஸ் சம்திங். அவ ஹஸ்பண்ட் மட்டுமில்ல நீ. டாக்டரும் தான். எமோஷனலாகாம என்னன்னு பாரு. யு ஆர் மிஸ்ஸிங் சம்திங் தோணுது! டிக் இட்… என்னன்னு கண்டுபிடி!”

அவ்வளவு பொறுமையாக சுரேன் பேசி வீட்டில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். மெல்லிய குரலில் அண்ணனிடம் சொல்லச் செய்தான். அப்படியொரு கனிவும் யோசனையுமாக ஒரு பார்வை!

மருமகளுக்கு அவள் பிடித்தம் போல் பாலில் கெட்டி டிகாஷன் விட்டு… சற்றுத் தூக்கலாக ஜீனி போட்டு எடுத்த வந்த யமுனாவின் காதில் சின்ன மகன் பேசியது அத்தனையும் விழுந்தது. அவருக்கு உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஓடியது. மனதில் முணுக்கென ஒரு வலி கூட!

சின்ன மகனை விழியெடுக்காமல் பார்க்கச் செய்ய… சுரேன் அவர் பார்வையை உணர்ந்து திரும்பிப் பார்த்து, ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்த…

யமுனாவுக்குக் கண்கள் கலங்கப் போக… “உஷ்!” உதடுகளைக் குவித்து ஒரு விரலால் அவரை அடக்கினான்.

எத்தனையோ வருடங்கள் போராடியது… இதோ எந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் அம்மாவிடம் ஓர் இளகல் வந்திருக்கிறது? இது நிரந்தரமானதா?

மெல்லிய முறுவல் மேவ நின்ற சுரேன் சுதாவைக் கவனிக்குமாறு அம்மாவுக்கு ஜாடை காட்டினான்.

யமுனாவும் சுரேன் சொன்னதைப் புரிந்தவராய் மருமகளை ஆதுரியமாகத் தடவிவிட்டு காபியை அவளிடம் கொடுக்க… சுதாவும் மறுக்காமல் கப்பை கையில் வாங்கிக்கொண்டாள்.

அந்த கேப்பில் சுந்தர் மகளைத் தன் மடிக்கு மாற்றி இருந்தான். அப்படியே அவன் அணைவாக மனைவியின் தோளில் கை போட்டு நெருக்கமாக உட்காரச் செய்ய…

“என்ன பண்றீங்க நீங்க? தள்ளி உட்காருங்க. அத்த இருக்காங்க… ஹால்ல வச்சி என்ன இது?”

சுதாவின் பேச்சே அவள் சற்று நார்மலானது போலக் காட்டியது.
அதில் மற்ற மூவரும் ஆசுவாசம் அடைந்து நிற்க… சுதா பல மாதங்களுக்குப் பின்னர் கணவன் முன் காபியை இரசித்து ருசித்துக் குடித்தாள்.

காபி குடிக்க மனைவி எவ்வளவு ஆவலாக இருந்திருக்கிறாள் என்பது சுந்தருக்கு அவள் பாவனையில் தெரிந்தது.

“எப்பவாச்சும் ஒரு நாள் தான்டி இந்த காபி சலுகை எல்லாம்… பேபிக்கு நீ பிரெஸ்ட் ஃபீட் பண்றது நிப்பாட்டுற வரைக்கும் மதர்ஸ் ஹார்லிக்ஸ் இல்லையா வெறும் பால் குடி. அம்மா உங்களுக்கும் சேர்த்துத்தான் சொல்றேன்!”

அப்படியே சுந்தர் சகஜமாக பேசச் செய்ய… சுதா கண்களைச் சுருக்கி உதடு சுளித்து அவனை முறைக்கச் செய்ய…

“எனக்கு ஆர்டர் போடுறளவுக்கு எம் பசங்க வளந்துட்டாங்க… போடா நீ! உங்கள பெத்து வளத்துவிட்ட எனக்குத் தெரியாதா?” யமுனா சுந்தரை முறைத்தார்.

வேறு சமயமாக இருந்தால் சுரேன் அம்மாவை, “என்னைப் பெத்தது மட்டும் தான் நீங்க. வளத்தது என் பெரிம்மா.” சீண்டச் செய்திருப்பான். இன்று சிந்தனையில் சிக்கியிருந்தவன் புன்னகைக்க மட்டுமே செய்தான்.

சுதா ரிலாக்ஸானது பார்த்து அனைவருக்கும் அப்பாடா என்றிருக்க… சுரேன் நேரத்தை உணர்ந்து, தான் குளித்துவிட்டு ஆயத்தமாகி அலுவலகத்துக்குப் போக வேண்டுமென அம்மாவிடம் சொன்னவன்,

தோழியைப் பார்த்து, “டேக் கேர் சுதா அண்ணி!” அந்த அண்ணியை அழுத்திச் சொன்னான் சுரேன்.

விழுக்கென்று சுதா நண்பனை நிமிர்ந்து பார்க்க… சுந்தரும் யமுனாவும் ஆச்சரியமாக சுரேனைப் பார்த்தனர்.

“ஏய் நீ என்ன கூப்பிட்ட இப்போ? அண்ணின்னு சொல்லி என்னை அந்நியமாக்குறயா சுரேன்?” சுதா கோபமும் முறைப்புமாக நண்பனைப் பார்க்கச் செய்ய…

“ம்கூம்… நா உன் பிரெண்ட் மட்டுமில்ல… கொழுந்தனும் தான். என் உரிமைய உணர்த்துறேன். நீ பெத்த இந்த அழகுத்தாமரைய தூக்கிக் கொஞ்சணும். நீ நோ சொல்லக்கூடாது அண்ணி!” என்று சுரேன் சொன்ன பாவனையில் சுதா புன்னகைத்துவிட்டாள்.

சுரேனும் முறுவலுடன் சுந்தரின் தோளை அணைத்து விடுவித்து விட்டு ரூம் சென்றான்.

ரூம் கதவைத் தாளிட்டவன் அப்படியே போய் மெத்தையில் விழுந்தான். அவனுக்கு மனமே சரியில்லை. அக்கணத்தில் வெண்ணிலாவெல்லாம் பின்னுக்குப் போயிருந்தாள்.

இரண்டு நிமிடம் கண் மூடி தன் மெத்தையில் சரிந்தான். சுதாவும் குட்டிப்பொண்ணும் தான் இமைகளுக்குள்ளே முட்டி நின்றனர்.

‘என்னவாம் இவளுக்கு? இப்படியெல்லாம் எதுக்கு நடந்துக்கிறா? நிலாவ இவளுக்குப் பிடிக்கலையா?’

‘இதென்னடா அடுத்தடுத்துப் புதுத்தலைவலியா வந்து சேருது?’

‘ஒருவேளை அவ அம்மாவைத் தேடுறாளோ?’

சுரேனுக்கு ஒரு பொறி தட்டியது!

சுதாவுக்கு அம்மாயில்லை. அப்பா மட்டும் தான். உள்ளூரிலிருந்த அவளுடைய அத்தம்மா… அப்பாவின் அக்கா, சிங்கப்பூரிலிருக்கும் சித்தி… இவர்கள் தான் சுதாவுக்குப் பிரசவம் பார்த்திருந்தனர்.

தன் வீட்டை… குடும்பத்தை விட்டிட்டு அவள் சித்தியால் மூன்று வாரத்துக்கு மேல் இந்தியாவில் இருக்க முடியவில்லை. கடுசான சித்தப்பாவை விட்டிட்டு அவர் இத்தனை நாள் வந்திருந்ததே பெரிய விசயம். சுதா மனதைச் சமாதானப்படுத்தி இருந்தாள்.

அவர் உடனிருந்த வரைக்கும் சுதாவை அப்படிப் பார்த்துக்கொண்டார். அத்தம்மா கொஞ்சம் வயதானவர். அதுவும் போக முழு நேரமும் தம்பி வீட்டிலே இருக்க முடியவில்லை. கணவர், வயதான மாமியார் என அவருக்கும் வேலைகள் இருந்தன.

சுதாவின் துணைக்கும் உதவிக்கும் ஒரு தெரிந்த பெண்மணியை அத்தம்மா ஏற்பாட்டில் அவள் அப்பா நியமித்திருந்தார். அப்பாவைக்கொண்டே சுதா பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்தாள்.

இல்லையென்றால் யமுனாவும் நளினியுமே இங்கு வைத்து மருமகளுக்குப் பிரசவம் பார்க்கத் தயாராகயிருந்தனர்.

தனிமையிலிருக்கும் அப்பாவுடன் நான்கைந்து மாதங்களாவது இருக்கலாம். அவரும் குழந்தையுடன் நேரம் செலவளிக்க முடியும் என்று அங்குப் போனாள்.

அவள் நினைப்பில் தவறில்லை. ஆனால், பிரசவிக்கும் பெண்களின் மனநிலையைப் பற்றிய அனுபவம் அவளுக்கில்லையே?

சுரேன் ரூமுக்குள் போன அதே நேரத்தில்…

இவ்வளவு நேரமும் சுதாவை இவ்வீட்டினர் கவனித்துக்கொண்ட பாங்கை வெரெண்டாவில் நின்று பார்த்துக்கொண்டிருந்த சந்தானம் மற்றும் சௌந்தர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.