என் சித்தம் சித்திரமே – 01

என் சித்தம் சித்திரமே 01

“வெண்ணிலா.”

“…”

“டீ வெண்ணிலா!”

“…”

“ஒரு குரலுக்கு என்னாங்கிறவ, இத்தனை தடவை கூப்பிட்டும் எதிர் குரலு தராம என்னடி பண்ணிட்டிருக்க?”

குரலை உயர்த்தி உரக்கக் கூப்பிட்டாள் செல்வி.

“…”

வெண்ணிலாவின் ஒன்றுவிட்ட அண்ணனுடைய மனைவி இந்த செல்வி. மூடியிருந்த வாசற்கதவைப் பார்த்து அவள் ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம். வெண்ணிலா வெளியே எட்டிப் பார்க்கவில்லை.

“பாட்டீ…”

எப்போதும் வீட்டை அடைகாப்பது போல் அங்கேயே கிடக்கும் காந்தம்மாளைச் செல்வி கூப்பிட, அவரையும் காணவில்லை.

வெண்ணிலாவின் அம்மாவைப் பெற்ற கிழவி, காந்தம்மாள். அவருக்கு வெண்ணிலாவின் அம்மா, நீலவேணி ஒரே மகள். 

காந்தம்மாளுக்குக் குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியம். ஆனால் அவருடைய வயிற்றில் பிறந்து நிலைத்தது நீலவேணி மட்டுமே. 

வயிற்றில் கரு தங்குவதே பெரும்பாடாக இருந்து, நல்லபடியா பிறந்த ஒற்றை மகள் நீலவேணி மேல் உயிரை வைத்து வளர்த்துவிட்டார். 

அவருடைய வீடு தான் அவ்வீடு. மகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் நீலவேணியை மனோகருக்குக் கட்டிக் கொடுத்து, மகளையும் மருமகனையும் தன்னுடனேயே வைத்துக்கொண்டார். 

மனோகருடைய குடும்பம் பெரிய குடும்பம்… உறுப்பினர்கள் அதிகம். நடுவில் பிறந்தவருக்கு வீட்டில் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாமல் இருக்க, நீலவேணியை மணந்து வீட்டோடு மாப்பிள்ளையாகி இருந்தார்.

நீலவேணி மனோகர் தம்பதிக்கும் வெண்ணிலா ஒரே மகளாகிவிட… ஒற்றைப் பிள்ளையோடு நின்றுவிட்ட மகள் மீது காந்தம்மாளுக்கு வருத்தமிருந்தது. 

காலப்போக்கில் அவரவருக்குக் கொடுப்பினை என்னவோ அது தானே கிட்டும் என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டார்.

நான்கைந்து பேருக்குப் போதுமான அளவான வீடு. சுற்றியும் நல்ல இடமிருந்தது. அந்த வீட்டின் உள்ளமைப்பின் அளவிற்கு சுற்றியிருந்த இடம் அதிகமே. அந்தக்காலத்தில் சல்லிசாக வாங்கிப் போட்டிருந்தார் காந்தம்மாளின் கணவர் ஆனந்தன்.

வீட்டைச் சுற்றியும் தாராளமாக இடமிருந்ததால் மரங்கள் செடிகொடிகள் எனச் சூழ்ந்திருக்க, அக்கம்பக்க வீடுகள் தூரமாகியிருந்தன. 

செல்வி இருந்த அவதிக்கு என்ன ஏதென்று அவளுக்குப் பக்கத்து வீட்டிற்கு போய் விசாரிக்கவும் வழியில்லை.

கொல்லைப்பக்கமும் போய்ப் பார்த்தாள். அங்கு ஜின்னி செல்வியின் குரல் கேட்டு மெதுவாகக் குரைத்தது. அதன் தீனமான குரைப்பு செல்விக்கு எரிச்சலூட்டியது.

“வயசானாலும் காந்தம் எவ்வளவு வெடுப்பா இருக்குது. உனக்கென்ன கேடு… நல்லா தின்னு போட்டு, குலைச்சிட்டு வெடுப்பா வீட்ட காவ காப்பியா… கெழடு கெழடு! 

தண்டத்துக்குச் சோத்த தின்னுட்டு இப்படிச் சோம்பிப் போயிக் கெடக்கியே. ஜின்னியாம் ஜின்னி… பேரைக் கேட்டா அழகு. ஆள பார்த்தா எழவு!”

கோபமோ ஆத்திரமோ வார்த்தைகள் மனிதனின் வாயிலிருந்து தாராளமாகத் தப்பிவிடுகின்றன. நாய் தான் எழவு என்று திட்டு வாங்கியது. வீட்டில் ஆளில்லாத கடுப்பில் செல்வி நாயை வைதாள்.

செல்விக்கு எப்படித் தெரியும்… அவ்வீட்டினருக்கு உண்மையிலேயே மிகப் பெரிய எழவை விதியோ சதியோ இழுத்து வரப் போவதைப் பற்றி? 

ஒருவேளை நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்திருந்தால், பாவம் அந்த வாயில்லா ஜீவனை வைதிருக்க மாட்டாளா இருக்கும்.

ஜின்னி அவளை பாவமாகப் பார்த்தது. செல்விக்குச் சில சமயம் பெற்ற பிள்ளையைப் பார்த்துக் கொஞ்சவே நேரம் இருக்காது. நாயை எங்கே இருந்து சட்டைசெய்வாள்.

மீண்டும் நாலு தடவை கத்திப் பார்த்தாள்.

‘இவளையும் காணோம்… கெழவியவும் காணோம். எங்க போயிருப்பாங்க… வீட்ட விட்டு எங்கேயாச்சும் வெளிய போறாப்பல இருந்தாக்க, வாய் ஓயாம ஒப்பிக்கும் கெழவி. நேத்து எதுவும் மூச்சுவிடலயே?’ அவள் யோசனை ஓடியது.

“போட்டீ! காலங்கார்த்தாலயே எந்தொண்டத்தண்ணி வத்தி போகப் போகுது. நீ வந்தா வா. வரலையா உம் பாடு. எனக்கென்ன நட்டம்!”

மேலும் அங்கேயே நின்று தன் நேரத்தைக் கொல்லப் பிரியப்படாமல், வெண்ணிலாவுக்கு வசவு மொழிப் பாடிவிட்டு வெளிக்கதவை மூடித் தாள்பாளை சரி பார்த்துவிட்டு வெளியேறினாள் செல்வி. 

மணி ஒன்பது அடிக்கும் முன்னே, செல்விக்குக் கடைவீதியில் இருக்க வேண்டும். ஞானமணி ஸ்டோர்ஸில் இந்த இரண்டு பெண்களுக்கும் வேலை.

பத்தாம் வகுப்பு பெயிலுக்கு இந்த வேலையே குதிரை கொம்பு என்பதை கவனமாக நெஞ்சில் பதிய வைத்திருந்தாள் செல்வி.

பதினேழு வயதில் துரையப்பனுக்கு வாக்கப்பட்டு, பத்தொன்பதில் வயிற்றைத் தள்ளி ஒரு பிள்ளையைப் பெறுவதற்குள் குடும்பமும் உறவும் படுத்திய பாட்டைத் தாளாமல், துரையப்பனே இந்த வேலையைப் பொண்டாட்டிக்கு வாங்கித் தந்திருந்தான்.

பணத்துக்காக அவள் வேலை செய்து தான் ஆக வேண்டும் என்றில்லை. பொண்டாட்டியின் மன நிம்மதி முக்கியம் என்கிற சூட்சுமத்தை அறிந்து வைத்திருந்தான் துரையப்பன். 

“வேலைய வாங்கித் தந்திட்டேன். இதைத் தக்க வச்சிக்கிறது உன் சாமர்த்தியம் செல்வி!” என்றிருந்தான்.

செல்விக்கு இப்போது வேலைக்குப் போய் நன்றாகப் பழகிவிட்டது. வீட்டில் புகுந்த வீட்டினரின் நச்சரிப்பு… கூடுதல் வீட்டு வேலை என்றிருக்க, அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள அவளுடைய வேலை உதவியது. 

அதே சமயம் புருசனுடன் செலவளிக்கக் கிடைக்கும் தனிமையான நேரமும் எந்தவிதமான சண்டை சச்சரவில்லாமல் செல்ல, மனநிம்மதியுடன் வருவானமும் வரவு தானே?

தரமான பொருட்களை விற்கும் கடை ஞானமணி ஸ்டோர்ஸ். பொருட்களின் தரத்தைப் போல அங்குள்ள மனிதர்களும் பண்பானவர்கள்.

முதலாளி பிச்சைமணியிலிருந்து எடுபிடி கம் பியூன் எலியட்டு வரை மரியாதை தெரிந்தவர்கள். 

பெண்களுக்கும் அங்குப் பாதுகாப்பு. ஆண்கள் பெண்களைத் தரக்குறைவாகப் பேசவோ, தேவையற்ற செயல்களோ பாவனைகளோ எதுவும் இருக்காது!

அவரவருக்குரிய மதிப்பும் மரியாதையுமாக வேலை பார்க்க நல்ல இடம். அதனால் எக்காரணத்துக்காகவும் இவ்வேலையை இழக்கத் தயாராக இல்லை செல்வி.

“அவளுக்கென்ன… இந்த மடம் இல்லாட்டி, சந்த மடம். வேலை பார்க்காட்டியும் ஒன்னுமில்ல. என் வீட்ல இருக்க பிக்கல் பிடிங்கலுக்கு நா அப்படிச் சும்மா இருக்க முடியுமா!”

தன்னுடைய வீடும்; அதன் மனிதர்களும்; அங்குள்ள அரசியலும்‍ செல்விக்கு நினைக்கையிலேயே பெருமூச்சு ஒன்று கிளம்பியது. அதனை வெளியேற்றிவிட்டு நடையை எட்டிப் போட்டாள்.

வெண்ணிலாவைப் பற்றி யோசிக்க நேரமில்லாமல் கடைவீதியை அடைந்தாள்.

“எக்கா, நீ மட்டும் தனியா வர்றியே வெண்ணிலா எங்க?”

நடையின் ஊடே செல்வியுடன் சேர்ந்துகொண்டாள் இன்னொரு பெண்.

“தெரியலப்பா. வெண்ணிலா வீட்டாண்ட யாரையும் காணோம். அதுக்கும் மேல எனக்கும் அங்க நின்னு விசாரிச்சிட்டிருக்க பொறுமையில்ல.”

ஐ. டி. கார்டை ஸ்கேனரில் விட்டு அந்தப் பெண்ணும் செல்வியும் கடைக்குள்ளே நுழைந்தார்கள்.

விஸ்தீரமான அந்த ஞானமணி ஸ்டோர்ஸ் இரண்டு மாடிகளைக் கொண்டது. 

கீழ்த்தளத்தில் பாத்திரக்கடை மற்றும் பேன்ஸி ஸ்டோர்.

பாத்திரக்கடையில் மாதாந்திரப் பாத்திரச்சீட்டு, வாரா வாரம் விற்பனை ரசீதின் தொகைக்கு ஏற்றவாறு பரிசுப் பொருள் என்று வாடிக்கையாளர்களைக் கவரும் திட்டங்களை வைத்திருந்தார்கள்.

அதனாலேயே என்னவோ முக்கால்வாசி பெண்கள் அந்தக் கடைக்குத்தான் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அந்த பேன்சி கடையிலும் பெண்கள் கூட்டம் அலைமோதும்.

முதல் மாடியில் ரெடிமேட் ஸ்டோர்ஸ். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தனி தனியே மூன்று பிரிவுகளாக இயங்கின.

இரண்டாம் மாடியில் பர்னிச்சர் பிரிவு. ஒன்றிரண்டு பெண்களைத் தவிர இப்பிரிவில் வேலை செய்கிறவர்கள் மொத்தமும் ஆண்கள்.

சுரேனுக்குக் கீழே உள்ள இந்த இரண்டு பிரிவில் தான் வேலை. அவனுடைய மெயின் வேலை ஸ்டாக் கீப்பர்.

ஆனால் நீண்ட காலப் பரிட்சயமும் மற்ற வேலைகளில் அவன் காட்டும் ஆர்வமும் ஈடுபாடும் கடை முதலாளியைக் கவர்ந்திருக்க, அவருடைய நம்பிக்கைக்குரியவனாக ஆகியிருந்தான் சுரேன். 

அதனால் ரெடிமேடுக்கும் அவன் போய் நிற்பான். 

ஐந்தடி பத்து அங்குல உயரத்தில் ஒடிசலாய் இருந்தான். நிறம் சுண்டினால் இரத்தம் வரும் எனும் வகையில் சிவந்த நிறம் கொண்டிருந்தான். 

தோற்றத்தில் மிகவும் சாதாரணமானவன். சராசரியான துணிமணிகளை உடுத்திக்கொண்டு… ஆடம்பரம் இருக்காது. வெட்டி ஜம்பம் எதுவும் அவனிடம் இல்லை. 

இன்முகமும் நட்பு பாராட்டும் அவன் குணமும் அவனின் கூடுதல் தகுதிகள்.

செல்வியின் தலையைப் பாத்திரப் பிரிவில் கண்டதும் அவசரமாக அவளை நோக்கிப் போனான்.

“செல்வி செல்வி!”

“டேய் எடுபட்ட பயலே! எடைக்குப் போடுற நசுங்கிப் போன காப்பர் பாத்திரமாட்டம் இருந்துட்டு என்னைய ஏலத்துக்கு விடறியா? அதான் வாரேல்ல. பக்கத்துல வந்து பேசுடா பக்கி.”

“நல்ல வேளை காப்பருன்ன. அலுமினியம்ன்னு சொல்லாம. காலைலேயே நல்ல நல்ல வார்த்தைங்களா வாயிலயிருந்து கொட்டுதே… இந்த நாள் அமோகமா போகப் போகுது.”

தன்னை அவள் நசுங்கிப் போன பாத்திரம் என்று நக்கலடித்ததைச் சிரிப்புடனே எதிர்கொண்டான்.

“உங்கலருக்கு அலுமினியத்தைத் துணை கூட்ட முடியாது… அது சரி யாருக்கு நாளு அமோகமாம்?” ஓவர் கோட்டை மாட்டியபடி கேட்டாள் செல்வி.

“எனக்குத்தான். எனக்கே தான்! என்னைய நல்ல வார்த்தையால்ல அர்ச்சனை பண்ணியிருக்க. உனக்கும் இந்த நாள் நல்லாவே போகட்டும் செல்வி.”

“எனக்குப் பேரு வச்சப் பூரானே ஒத்து. வேலைய பார்க்க விடு.”

“செல்விங்கிறது கூப்பிடத்தானே வச்சிருக்காங்க?”

காதுக்குள்ளே சுண்டு விரலை விட்டுக் குடைந்தபடி சந்தேகமாகக் கேட்டான்.

“கல்யாணமானவளேன்னு மதிப்புக் குடுக்கத் தோணுதா பாரு!” செல்வி ஏமாற்றம் அடைந்தவளாகக் கோபத்துடன் சொன்னாள்.

“என்னைய காட்டிலும் வயசில சின்னவ தானுங்கிற…” சுண்டு விரலில் மட்டும் நீளமாய் வளர்த்து வைத்திருந்த நகத்தில் இல்லாத அழுக்கை நீக்கியபடி பேசிய சுரேனை மேலும் பேச விடாமல் முந்தினாள்.

“தெனாவெட்ட பாரு!” 

“அச்சோ தெனாவெட்டா எனக்கா? உன் கிட்ட அப்படி இருப்பேனா?”

“அது சரி…” 

“உரிமன்னு சொல்ல வந்தேன் செல்வி.”

செல்வியின் கோபத்திலே இறங்கி வந்தவன் போல சுரேன் சொன்னான்.

“செல்வி செல்வின்னு கூப்பிடற உரிமைய ஓரங்கட்டிட்டுப் போய் உன் வேலையைப் பாரு. நகரு, எனக்கு இங்க தூசு தட்டணும்.”

“என்னடா இது ரோதனை! வயசுல சின்னவளை அக்கா, அம்மான்னா கூப்பிட முடியும்? நான் செல்வின்னு தான் சொல்லுவேன்!”

“என்னத்தையோ சொல்லித் தொலை. போ போ உங்க வேலையைப் போயிப் பாருங்க சுரேன் அவர்களே!” 

“வந்ததுமே லோலாயி? நடத்து நீ!” 

“போயிரு மவனே!” பல்லைக் கடித்து முறைத்தாள் செல்வி. 

“லோடு இறக்க ஆளுங்க இருக்காங்க.”

அந்த இடத்தை விட்டு நகருவேனா என்று அழுத்தமாக நின்றிருந்தான் சுரேன்.

“இறக்கி வைக்க ஆளுங்க இருக்கலாம். கணக்கெடுக்க உன்னைய நம்பித்தானே விட்டிருக்கு?”

“நையி நையிங்காத செல்வி. இப்ப டீ குடிக்கத்தான் வந்தேன். போறேன் பொறு.”

தோளைக் குலுக்கித் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் செல்வி. டஸ்டரை வைத்து ஒவ்வொரு அடுக்காகத் தூசு தட்டிக்கொண்டிருந்தவளைப் பார்த்தபடி சுரேன் பாடினான்.

“எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்

எங்கே அந்த வெண்ணிலா…” 

உன்னி மேனனைப் போலில்லை என்றாலும் ஓரளவு நன்றாகவே பாடினான். செல்வியும் அவன் நான்கைந்து வரிகள் பாட விட்டு, பிறகே அதட்டினாள்.

“ஏலேய் உஞ் ஜோலி கழுதைய பார்க்கப் போவியா! மெட்டுப் போட்டு பாட்டு பாடுறான் கெரகம்… அதுவும் மதினிகிட்டயே நாத்திய பத்தியா? தெகிரியந்தேன்!”

மிரட்டலாகச் சொன்னாள். அம்மிரட்டல் அவனை என்ன செய்யுமாம்? தன் அழகான பல் வரிசை தெரிய சிரித்தான் சுரேன்.

தோசை திருப்பியை நீட்டிக்கொண்டு நின்றவளுக்கு ஒரு சலாம் வைத்துத் தன் கலாய்ப்பை நிறுத்திவிட்டு, பின் தவிப்பும் கவலையுமாகக் கேட்டான்.

“இந்தா செல்வி… எங்க அவ?”

அதற்கு மேல் அவனால் பொறுமை காக்க முடியவில்லை. தன் ஆளைக் காணவில்லை என்கிற கவலையும், ஏன் அவள் வேலைக்கு வரவில்லை என்று தெரிந்துகொள்ளும் ஆவலுமாய் நின்றிருந்தான்.

செல்விக்குச் சுரேனின் கண்களில் ஆவலுடன் வெண்ணிலாவிற்கான காதல் தெரிந்தது.

அதுவரை தன்னுடைய பேச்சில் ஒட்டி இருந்த எடக்கை ஒதுக்கி வைத்தாள் செல்வி. சுரேனை கவலையுடன் பார்த்துச் சொன்னாள்.

“வேணாம்டா அவளை விட்டிரு. நீயும் ரெண்டு வருசமா அந்தப்புள்ளக்கி ரூட்டு விட்டு ரோடே கட்டிட்ட. ரோட்ல நடக்க மாட்டேன். தண்டவாளத்தில தான் ஓடுவேன்னு தாண்டவமாடுது அந்தப்புள்ள!”

செல்வியுடன் பாத்திரங்களை அடுக்கில் அடுக்கி வைத்தபடி பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்த சுரேன் அதிர்ச்சியுடன் செல்வியைப் பார்த்தான்.

“நீ… நீ என்ன… என்ன சொல்லுற செல்வி?”

“அவளுக்கு உம்மேல நாட்டமில்லன்னு உனக்குத் தெரியுமில்ல சுரேன்?”

“அன்பும் காதலும் எல்லோருக்கும் உடனே வந்திருமா? பழக பழகத் தான் வரும். மொதல்ல அவளுக்கு எம்மேல நாட்டமில்லன்னு தான் இருந்தேன் செல்வி. என்னாலே அவளை அப்படியே விட்டுக் கொடுக்க முடியலை.

கொஞ்ச நாளைக்கு என்னைய பார்த்துப் பழகினா தானா ஒரு ஆர்வம் வந்திரும்னு நினைச்சேன். அப்படி அதுவா வரலைன்னாலும் போக போக நானே என் மனசை எடுத்துச் சொல்லி உணர்த்திர்லாம்ன்னு நேரம் பார்த்திட்டிருந்தேன்.”

“உன் நெனப்புல தப்பில்லடா. ஆனா இவ விசயத்தில நீ நினைச்சது நடக்காது சுரேன்!”

சுரேனை ஒரு பரிதாபப்பார்வை பார்த்து வைத்தாள் செல்வி. அவளைப் புரியாமல் பார்த்தான்.

“அவ நாட்டம் வேற இடத்தில வேர் விட்டிருச்சுன்னு சொல்ல வர்றியா?”

“ஆமாடா. புது வேரா இல்லடா அந்தப் பழக்கம். நல்ல பிடிப்பா செடி முளைச்சிடுச்சி. இப்ப மொக்கும் வச்சி, பூவே மணம் பரப்புது!”

வெண்ணிலா வேறு யாரிடமோ காதல் கொண்டுவிட்டாளா? சுரேனுக்கு இதனை நம்ப முடியவில்லை.

“நெசமாத்தான் சொல்லுறியா நீ? உனக்கு இந்த விசயம் தெரிஞ்சதும் எனக்கு ஏஞ்செல்வி சொல்லலை?”

“நானெத்தடா கண்டேன். ஏதோ எளசுல மனசு நாலையுந்தே பார்க்கும். பார்த்ததைச் சொந்தம் கொண்டாட பிரியப்பட்டுப் போகும்ன்னு யோசனை செய்யலை.”

மனத்தாங்கலுடன் பகிர்ந்து கொண்டாள்.

“முன்னாடி, அம்மணிக்கு வயசு பத்தல. ஒரு ரெண்டு வருசமா பொறுத்திருக்கலாம்ன்னு விட்டுட்டேன். அப்புறம், கொஞ்சம் நெருங்க நினைச்சி வந்தா முறப்பைப் பத்த வச்சி காந்தல்ல விட்டா.”

படபடப்பாகப் பொரிந்தான்.

“இப்படி அலைய விடுறாளே சிறுக்கின்னு நாந்தவிக்க, இவ வேற எங்கையோ மனசை அலையவிட்டதும் இல்லாம, அதை அடகு வேற வச்சிட்டாளா? யாரவன்?”

ஏமாற்றத்தில் கொதித்து வந்த நெஞ்சுடன் உக்கிரமாக நின்றான்.

“ராகேஷ்!”

“அவரா?”

மரியாதையாகச் சொல்லத் தொடங்கி, பின்னர், “அவன!” பல்லைக் கடித்தான் சுரேன்.

“இதுங்க பழக ஆரம்பிச்சி மூணு நாலு மாசங்கூட இருக்காது. சும்மா நட்பா பழகிட்டிருக்குதுகன்னு நெனச்சேன். இப்படிப் போயி விழுவான்னு நினைக்கல. 

இது எதுல போயி முடியுமோன்னு எனக்கு வேற பக்கு பக்குன்னு இருக்குடா. எங்க வீட்ல அவருக்குத் தெரிஞ்சிச்சின்னா ஏம் மேல தான் ஏறி வருவாரு!”

எதிர்பாராத ஏமாற்றத்தில் தானும் சிக்கியிருப்பதை முகத்திலும் காட்டினாள் செல்வி. கூடவே ஒரு பயமும். 

“ஏஞ்செல்வி, உனக்குத்தான் எந்நெனப்புத் தெரியுமில்ல அவட்ட என் விருப்பத்தை எடுத்துச் சொல்லி இருக்கலாம்ல? உந்நாத்தனார்ன்னு அவளுக்கு ஆதரவா நின்னுட்டல்ல!”

“நாஞ் சொன்னாலும் அவ கேட்கல.” 

“என்கிட்ட சொல்றதுக்கென்ன… ம்ப்ச்…” 

செல்வியைக் குற்றம் சாட்டியவனின் கண்கள் சிவந்து கலங்கிவிட்டன. இயலாமையால் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

அந்த இடம் வீடாகவோ இல்லை வேற தெருவாகவோ இருந்திருந்தால், சுரேனின் கைகளில் அகப்படும் பொருட்கள் யாவும் காற்றைக் கிழித்துப் பறந்து சிதறித் தெறித்திருக்கும்.

அவன் வேலை செய்யும் இடமாகப் போய்விட்டது. தன் சுற்றுப்புறம் உணர்ந்து, கையில் எடுத்து வைத்திருந்த இடியாப்ப உழக்கை, “இடியட்டு” என்று சொல்லியபடி நங்கென்று அடுக்கில் வைத்தான்.

விடுவிடுவென்று வாயிலை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சுரேனை வெறித்தபடி நின்றாள் செல்வி. 

“இடியட்டுன்னு யாரைச் சொல்லுறான் இந்தப்பய? என்னையா? அம்புட்டு மரியாத தெரியாதவனா? ஒருவேளை அவனையே சொல்லிக்கிறானோ? 

அவங்கோவத்த இடியாப்பக் கட்டைல காட்டுறான்… பாவம் பயலுக்கு முகமே செத்துப் போச்சு.” முணுமுணுத்தாள்.

வாய் முணுமுணுக்க… கை பாட்டுக்குத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், வெண்ணிலா எங்கே போனாள் என்று செல்வியின் மூளை யோசித்துக்கொண்டிருந்தது.

காலையிலேயே வேலைக்கு வந்த சுரேனுக்கு வேலை வழக்கம் போல மும்முரமாக இருந்தது. ஆனாலுமே தன் மனம் கவர்ந்தவளைப் பார்க்க அவன் மனது தவித்துக்கொண்டிருந்தது.

வெண்ணிலாவை ஆசையாக, “நிலா, ஐஸ் க்ரீம், ஐஸு” என்று தான் கூப்பிட்டு வம்பிழுப்பான். அதுவும் ஐஸு சொல்லிக் கூப்பிடும் போது சுரேனுக்குக் கண்களில் அவ்வளவு குறும்பு வழியும். 

உதட்டைச் சுழித்து அவளைச் சீண்டலாகப் பார்த்து வைப்பான். அந்த நேரமெல்லாம் அவள் அவனை அலட்சியப்படுத்தி நகர்ந்து விடுவாள். 

ஏனோ, சுரேனுக்கு வெண்ணிலா செய்யும் அலட்சியம் கோபத்தைத் தருவதில்லை. அவளை எளிதாக எடுத்துக்கொண்டு சிரிப்புடனே விலகி நடப்பான். 

அவள் மேல் பொங்கும் காதலை வைத்துக்கொண்டு, பொறுமையாக அவள் சரி சொல்லக் காத்திருந்தான்.

அவள் மீது நேசம் வைத்திருக்கும் அவன் நெஞ்சம் வாரத்தில் ஆறு நாட்கள் அவளைக் கண்டால் தான் அடங்கும்.

விடுமுறை நாளை மட்டும் வெண்ணிலாவின் நினைப்புடன் வீட்டு வேலைகள், உறவினர், நண்பர்களுடன் அரட்டை, சினிமா என்று போக்கிக் கொள்வான்.

வேலை நாட்களில் அவ்வப்போது வந்து அவளைக் கண்களால் வருட வேண்டும். அந்த வாயாடிப்பேச்சைக் காதுகளால் கேட்க வேண்டும்.

அவளுடைய முறைப்புகளைச் சேகரித்து எண்ணிக்கொள்ள வேண்டும். அவற்றைத் திருப்பித் தரும் வழிகளை விதவிதமாக யோசித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அவனுக்கு எல்லாமே அவளாக ஆகிக்கொண்டிருந்தாள். இன்றோ எல்லாவற்றிற்கும் மொத்தமாய் ஒரு பேரிடி!

இப்படி என்று செல்வி சொன்னதைக் கேட்டதிலிருந்து சுரேனின் மனது அந்தத் தவி தவித்துக்கொண்டிருந்தது.

கடையின் பின் வாசலுக்கும் சரக்கு குடவுனுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். அவனுக்காக எலியட்டு ஒரு கப்பில் சூடாய் டீ கொண்டு வந்தான்.

“டீ சாப்டுங்கண்ணா இந்தாங்க.”

“ம்ப்ச். எனக்கு வேணாம்டா.”

“என்ன ஆச்சுண்ணா? எதுக்கு இப்படித் தனியா உட்கார்ந்திருக்கீங்க?”

“ஒன்னுமில்லைடா…”

“ஒன்னுமில்லாததுக்கா இப்படித் தனியா உட்கார்ந்திட்டு, முகத்த வேற உம்முன்னு வப்பீங்க?”

“…”

“இந்தாங்கண்ணா டீய குடிங்க. தெம்பு வரும்.” 

இன்னும் மற்றவர்களுக்கு டீ சப்ளை பாக்கியிருக்க, எலியட்டு அதற்கு மேல் அங்கே நின்று நோண்டவில்லை. சுரேன் அருகே ஒரு கப்பை வைத்துவிட்டு அவன் வேலையைப் பார்க்கப் பறந்தான்.

அந்த டீ அப்படியே ஆறி அவலாகிப் போய் ஈக்களுக்குக் குளமாகியது. ஏடு படிந்து கிடந்த டீயை சுரேன் வெறித்துக்கொண்டிருந்தான்.

சுரேனின் உடலைச் சூரியனார் பொசிக்கிக்கொண்டிருக்க… வெண்ணிலா அதைத் தணித்து அவன் மனதைக் குளிர்விக்காமல் மேலும் கருக்கிக்கொண்டிருந்தாள்.

ஆக மொத்தம் வெயிலும் காதல் வெண்ணிலாவும் சுரேனைப் படுத்திக்கொண்டிருந்தன.

“டேய் வெட்டியா உட்கார்ந்திட்டு நேரத்தைத் தண்டமாக்காம உன் வேலைய போயிப் பார்ப்பியா…” 

சுரேனைக் கடைக்குள்ளே காணாமல் வெளியே எட்டிப் பார்த்த செல்வி அவனை விரட்டிக்கொண்டிருந்தாள். 

“உன்னைய இங்க யாரு வரச் சொன்னா?” சுரேன் கடிய… 

“பய மூஞ்ச தொங்கப் போட்டிட்டுப் போனானே… என்னாச்சின்னு அக்கறையா வந்தேன் பாரு!” முகவாயை வெடுக்கென திருப்பினாள் செல்வி. 

“பார்த்துச் சுளுக்கிக்கப் போகுது… அப்படி நொடிச்சிட்டு யாரும் அக்கறை காட்ட வேணாம்.” 

“வாயி தான் வீம்பு பேசுது. மூஞ்சி செத்தில்ல கெடக்கு? கூம் என்னவோ போ… யாரு யாருக்கு என்ன விதிச்சிருக்கோ நம்ம கைல என்ன இருக்கு!” 

செல்வி பேசியபடி முன்னால் நடக்க… சுரேன் முகம் அப்படியே இருண்டு போனது. அதே நேரத்தில் வெண்ணிலா வேறொரு இடத்தில் உல்லாசமாக இருந்தாள். 

வெண்ணிலா சுரேனுக்கு வெளிச்சம் தருவாளா?