என்னிதய தாள லயமாய் நீ – 9

அத்தியாயம் – 9

சாலையில் இருந்த கூட்டத்தைப் பார்த்து இறங்கி சென்ற அதிவீரன், திருநாவுக்கரசு அடிபட்டு கிடப்பதை பார்த்து சர்வாங்கமும் ஆட அதிர்ந்து போனவன், “டேய் திரு…” என்று கத்தினான்.

“ஐயோ மாப்ள…” என்று சுப்புவும் கத்தினான்.

அவர்கள் ஊருக்குச் செல்லும் வழியில் ஒரு பெரிய வளைவு உண்டு. எதிரே வண்டிகள் வருவது கூடத் தெரியாது என்பதனால் அந்தச் சாலையில் செல்லும் போது மிகவும் கவனத்துடன் தான் வாகன ஓட்டிகள் செல்வார்கள்.

குடித்து விட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த திருநாவுக்கரசு சற்று கவனமற்று இருந்துவிட, திரு அந்த வளைவில் திரும்பிய அதே நேரத்தில் ஒரு லாரியும் எதிரே வந்து விட, அந்த விபத்து நேர்ந்து தூக்கி வீசப்பட்டுக் கிடந்தான் திருநாவுக்கரசு.

“இந்த முக்கு வளைவு ஆபத்துண்டு போர்டு வச்சு என்ன புண்ணியம்? மாசத்துக்கு ஒருக்கா எவனாவது இங்கன அடிப்பட்டுப் போறயான்…” என்று கூட்டத்தில் யாரோ சொல்லிக் கொண்டிருந்தனர்.

“யாராவது தூக்குங்கயா…”

“உசுரு இருக்காண்டு பாருங்க…”

“தண்ணீ கொண்டு வாங்கய்யா…”

“ஆம்புலன்ஸுக்கு சொல்லியாச்சா?”

“ஆம்புலன்ஸ் வந்துட்டு இருக்கு…” என்று பலவாறு பேச்சு குரல் காதில் விழுந்தாலும், எதையும் நின்று கவனிக்காமல் பதட்டத்துடன் திருவின் அருகில் ஓடி சென்று பார்த்தான் அதிவீரன்.

“குடிச்சுப் போட்டு வண்டி ஓட்டியிருப்பியான் போல. உசுரு இன்னும் இருக்குது. ஆம்புலன்ஸ் வருதாண்டு பாருங்கய்யா…” என்று கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுத்தார்.

திருவின் அருகில் அமர்ந்த அதிவீரன், “டேய், மாப்ள… திரு… கண்ணை முழிச்சுக்கோடா…” என்று பதட்டமாக அழைத்தான்.

தலையில் அடிபட்டு ரத்தம் பீறிட்டு வெளியேறியிருக்க, முகம் முழுவதும் ரத்தத்தில் குளித்தது போல் இருந்த அவனைப் பார்த்து அதிவீரனின் இதயம் வேகமாகத் துடித்தது.

“மச்சான், உனக்கு ஒன்னுமில்லடா. கண்ண முழிச்சிக்கோடா. இந்தா ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்…” என்று சுப்புவும் கதறிக் கொண்டிருந்தான்.

திருச் சுயநினைவை இழந்து மயக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

அப்போது ஆம்புலன்ஸ் வர, திரு அதில் ஏற்றப்பட்டான். அதிவீரனும் கூட ஏறிக் கொள்ள, சுப்புப் பின்னால் வண்டியில் பின் தொடர்ந்தான்.

ஆம்புலன்ஸில் முதலுதவி செய்யப்பட, “கண்ண முழிச்சுக்கோடா திரு. முழிச்சிக்கோடா. ஒனக்கு ஒன்னும் ஆவாதுடா. ஆவக்கூடாதுடா…” என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டே அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்தான் அதிவீரன்.

மதுரை செல்லும் பைபாஸ் சாலையில் ஒரு மருத்துவமனை இருக்க, ஆம்புலன்ஸ் அலறிய படி அங்கே சென்று சேர்ந்தது.

முதலுதவி செய்ததாலோ என்னவோ, அவரச சிகிச்சைக்குச் செல்லும் முன், திருவிற்கு நினைவு திரும்ப, “டேய் மாப்ள, திரு…” என்று அதிவீரன் அவசரமாக அழைக்க, அவனின் கையைப் பற்ற தன் கையை மெல்ல தூக்க முயற்சி செய்தான் திரு.

தானே அவன் கையை வேகமாக பற்றிக் கொண்ட அதிவீரன், “திரு, உனக்கு ஒன்னுமில்லடா…” என்றான் ஆதரவாக.

வீ… வீ…ரா…” என்று திணறிய படி திரு அழைக்க, 

“சொல்லுடா மாப்ள…” என்று கலங்கிய கண்களுடன் கேட்டான்.

“அ…அ…ர…சி…” என்றான் உதடுகள் நடுங்க.

“சுப்புவை தகவல் சொல்ல சொல்லிட்டேன்டா. வந்துடுவாக…” என்றான் வேகமாக.

அதன் பிறகும் அமைதியாக இருக்காமல், “அ…அ…ர…சி…” என்றான் மீண்டும். திருவின் முகத்தில் ஒருவித சஞ்சலம்.

அவன் ஏதோ சொல்ல முயல்கிறான் என்று புரிய, “சொல்லுடா திரு…” என்று குனிந்து, தன் காதை திருவின் உதடு அருகில் கொண்டு சென்றான்.

திரு ஏதோ மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போதே, அவசர சிகிச்சை பிரிவு வந்துவிட உள்ளே அழைத்துச் செல்லப்பட்டான்.

அதிவீரன் அப்படியே தளர்ந்து சுவரில் சாய்ந்து நின்றான்.

முகம் வெளுத்து, கண்கள் சிவந்து கலங்கியிருக்க, கைகள் நடுங்க, திருவின் ரத்தம் அவனின் மேலும் படிந்திருக்க, அவன் கவலையுடன் நின்றிருந்த போதே சுப்பு வந்து சேர்ந்தான்.

“ஏலேய் மச்சான், திரு எங்கடா? எப்படி இருக்கியான்?” என்று பதறிய படி கேட்டான்.

“உள்ளார கூட்டிப் போயிருக்காக மாப்ள. நினைவு வந்துச்சுடா. அவென் பொண்டாட்டி பேரை சொல்லிட்டே இருந்தியான். அவென் வூட்டுக்கு தகவல் சொன்னியா?” அதிவீரன் கேட்க,

“வரும் போதே சொல்லிட்டேன்டா. வந்துட்டு இருக்காய்ங்க. செத்த நேரத்துக்கு முன்ன தேன மாப்ள நம்மகிட்ட சிரிச்சு பேசிட்டு இருந்தியான். இப்ப… இப்படி மூஞ்சி பூரா ரத்தமா… என்னால கண் கொண்டு பார்க்க முடியலை மாப்ள. டேய் மாப்ள வீரா, அவனுக்கு ஒன்னும் ஆவாவது தானே?” என்று நடுங்கிப் போய்க் கேட்டான் சுப்பு.

அவன் கண்ணில் உற்பத்தியான கண்ணீர் அவன் கன்னம் தாண்டி உருண்டோடியது.

“அட, ச்சீ! ஒன்னும் ஆவாதுடா. கலங்காத…” என்றவனும் கலங்கிப் போய்த் தான் இருந்தான்.

சிறிது நேரத்தில் அரக்க பறக்க ஓடி வந்தனர் திருவின் குடும்பத்தினர்.

தலை கலைந்து, அழுததால் வீங்கியிருந்த முகத்துடன் வந்து கொண்டிருந்த அங்கையற்கரசியின் பரிதவித்த நிலையை அதிவீரனால் கண்கொண்டு காண முடியாமல் போக, வேகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அவர்கள் அருகில் வந்த திருவின் தந்தை முத்துவேல் விவரம் கேட்க, சுப்பு தான் அவரிடம் தெரிவித்தான்.

“எய்யா தம்பி, டாக்டரு என்ன சொன்னாரு? எம் புள்ள எப்படி இருக்கியான் யா…” என்று வள்ளி அழுது கொண்டே அதிவீரனிடம் கேட்க,

அவனால் அதற்கு மேல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு நின்றிருக்க முடியவில்லை.

வள்ளியின் பக்கம் திரும்பியவன் பார்வை, அவனின் பதிலுக்காகத் தவிப்புடன் காத்துக் கொண்டிருந்த அங்கையின் பக்கமும் கண நொடி தழுவி நழுவியது.

“டாக்டரு உள்ளார போனாரு. இன்னும் வெளியே வரலை…” என்றான் வள்ளியிடம்.

அதே நேரத்தில் அங்கையின் வீட்டினரும் வந்து அழுது புலம்பி விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மருத்துவர் வெளியே வர, அனைவரும் அவரைச் சூழ்ந்தனர்.

“எங்க புள்ள எப்படி இருக்கியான் டாக்டரு?” என்று முத்துவேல் வேகமாகக் கேட்டார்.

“ஸாரி, தலையில் பலமான அடி. எங்களால் ஆன முயற்சி எல்லாம் செய்து பார்த்துட்டோம். ஆனால், காப்பாத்த முடியலை…” என்ற மருத்துவர் கையை விரித்து விட்டு அகன்றார்.

“ஐயோ!” என்று நெஞ்சில் கை வைத்து கத்திய அடுத்த நொடி மயங்கி விழுந்தாள் அங்கையற்கரசி.

“திரு…”

“எய்யா ராசா… நான் பெத்த மவனே!”

“ஐயோ, மருமவனே!”

விதவிதமான கதறல் ஒலி கேட்க, அதிவீரன் முற்றிலும் உடைந்து மயங்கி விழுந்த அங்கையற்கரசியை உயிரற்றப் பார்வை பார்த்தான்.

‘ஏன்டா திரு… ஏன் உம் பொண்டாட்டியை இப்படி வுட்டுப் போட்டு போன? ஏன்டா போன? அப்படி உனக்கு என்ன அவசரம்?’ என்று தனக்குள் கதறி கொண்டவனுக்குக் கண்கள் கலங்கி கண்ணீர் வெளியேறியது.

“மச்சான், நம்ம திரு நம்மளை வுட்டுப்புட்டு போயிட்டானாம்டா…” என்று கதறி அவனை அணைத்துக் கொண்டு அழுதான் சுப்பு.

அதிவீரன் நண்பனின் பிடியில் இருந்தாலும், அவன் பார்வை முழுவதும் கீழே மயங்கி கிடந்த அங்கையின் மீது தான் இருந்தது.

அவனின் கண்களில் கண்ணீர் வடிந்தாலும், இதயம் என்னவோ ரத்த கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

மயங்கி விழுந்த அங்கையை அவளின் சித்தியும், தாமரையும் அழுது கொண்டே தாங்கி பிடித்து மயக்கம் தெளிய வைக்க முயற்சி செய்ய, துரைப்பாண்டியும், முத்துப்பாண்டியும் செய்வதறியாது திகைத்து கலங்கி போய் நின்றிருந்தனர்.

முத்துவேலும், வள்ளியும் தங்கள் ஒரே மகனை இழந்து தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தனர்.

தண்ணீர் தெளித்தும் அங்கை மயக்கம் தெளியாமல் இருப்பதைக் கண்ட அதிவீரன், மெல்ல அங்கிருந்து நகர்ந்து ஒரு மருத்துவரை அழைத்து வந்தான்.

ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கைக்குச் சிகிச்சை நடக்க ஆரம்பித்தது.

சிவகாமியும், தாமரையும் அவளுடன் இருக்க, இங்கே மற்ற மருத்துவமனை நடைமுறை நடந்து கொண்டிருந்தது.

கத்தலும், கதறலும் தொடர, ஆண்கள் திருநாவுக்கரசுவின் உடலை ஊருக்கு எடுத்துச் சொல்லும் வேலையில் இறங்கினர்.

நள்ளிரவு தான் உடல் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது மயக்கம் தெளிந்து அங்கையும் எழுந்திருந்தாள்.

கண் விழித்தவள் காதில் மீண்டும் மருத்துவர் சொன்னது ஒலிக்க, “ஐயோ, மச்சான்… என்னைய விட்டுப்புட்டு போயிட்டீகளா?” ஓங்கி அவள் கத்தி கதறி அலறியதில் இங்கே அதிவீரனின் உயிர் நாடி நடுங்கிப் போனது.

“ஹய்யோ! இந்த இழப்பை அவெள் என்னண்டு தாங்க போறாளோ…” என்று மனதிற்குள் அவன் கதறினான்.

அழுதாலும், புரண்டாலும் மாண்டவர் வரப் போவது இல்லையே. மாண்டவன் நிம்மதியாகப் போய்ச் சேர்ந்துவிட்டான்.

இங்கே அவனைச் சார்ந்தவர்கள் அவனின் இழப்பை தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருந்தனர்.

குடி குடியை மட்டும் அல்ல. உயிரையும் குடிக்கும்! 

திருநாவுக்கரசுவின் பூத உடலுடன் அனைவரும் ஊர் போய்ச் சேர, அங்கே ஊரே திரண்டிருந்தது அவனின் வீட்டின் முன்.

அதுவும் ஒரு வாரத்திற்கு முன் மணக்கோலம் பூண்டவன், இப்போது சவ கோலம் பூண்டுவிட்டான் என்றதில் ஊரே கலங்கி போய் இருந்தது.

நேரம் யாருக்கும் நிற்காமல் ஓடியது.

காலை பதினொரு மணி ஆகியிருக்க, வீட்டின் முன்னால் திருநாவுக்கரசுவின் உடல் கிடத்தப்பட்டிருக்க, கத்தி, கதறி, அழுது, இப்போது அழ கூடத் திராணி இன்றிக் கணவனின் தலைமாட்டிலேயே உயிர் இருந்தும் உயிரே இல்லாதவள் போல் அமர்ந்திருந்தாள் அங்கையற்கரசி.

உடை ஒழுங்கில்லாமல் கசங்கி இருக்க, முடிந்திருந்த கூந்தல் கலைந்து முகம் வரை கிடக்க, நெற்றியில் இருந்த பொட்டு பாதி அழிந்திருக்கக் கணவனின் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அங்கை.

அவள் அருகில் தாமரை விசும்பி கொண்டிருந்தாள்.

ஒரு பக்கம் அக்காவின் கணவராக இருந்தாலும், அவளின் மச்சானாகத் திருவும், அவளும் கலாட்டாவாகப் பேசிக் கலாய்த்துக் கொண்டது எல்லாம் ஞாபகத்தில் வர, அதை எல்லாம் நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தாள்.

வள்ளி மகனின் அருகில் அமர்ந்து, அவனைத் தான் எப்படி எல்லாம் அருமை பெருமையாக வளர்ந்தோம். எப்படி வாழ வைக்க ஆசைப்பட்டோம் என்று சொல்லி சொல்லி அழுது கொண்டிருந்தார்.

புத்திர சோகம் சாதாரணமானது அல்ல. தாங்கள் பெற்றுக் கையில் குழந்தையாக ஏந்திய மகனை உயிரற்றுச் சடலமாகப் பார்ப்பது கொடுமையிலும் கொடுமை.

முத்துவேலும், வள்ளியும் அந்தக் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

ஆசை ஆசையாகத் திருமணம் முடித்துக் கொடுத்த மகள் இப்போது கணவனை இழந்து நிற்கிறாளே என்று அழுவதா? தங்கையின் ஒரே மகன் போய்ச் சேர்ந்துவிட்டானே என்று அழுவதா? மகன் இல்லாத தங்களுக்கு மகனாக இருப்பான் என்று நினைத்தவன் இல்லாமல் போனான் என்று நினைத்து அழுவதா? இனி தங்கள் மகள் வாழ்க்கை என்னாகும் என்று நினைத்து அழுவதா? எதை நினைத்து அழுவது என்று புரியவில்லை என்றாலும் அழுது கொண்டிருந்தனர் முத்துப்பாண்டியும், துரைப்பாண்டியும், சிவகாமியும்.

அங்கை… அங்கையற்கரசி!

ஒரு வாரத்திற்கு முன் தன் அருகில் மாலையும், கழுத்துமாக மணக்கோலத்தில் சிரித்த முகத்துடன் இருந்தவன், இப்போது தனக்கு மட்டும் மாலையைச் சூடிக் கொண்டு சவமாகக் கிடக்கிறான்.

கணவனின் முகத்தை விட்டு இம்மியளவும் பார்வையை அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அங்கை. நேற்று இதே நேரம் தன்னிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவன், இன்று இந்த நேரம் இல்லை.

ஏற்க முடியவில்லை அவளால். நெஞ்சுக்கூடு காலியான உணர்வு.

தொண்டை குழி ஏறி இறங்க சில நொடிகள் அவதிப்பட்டவள், “ஆஆஆ…” என்று வெறி வந்தவள் போல் திடீரெனக் கத்தினாள்.

அனைவரும் திடுக்கிட்டு அவளைப் பார்க்க, “மச்சான் எழுந்து வா. எழுந்திரியா… எழுந்திரி. அரசி… அரசிண்டு என்னைய அரசியாட்டம் கொண்டாடுவீரே. எழுந்து வாரும்யா. ஒ அரசி அழுவறா. அவளை ஏன் அழ விட்ட? எழுந்து வாரும். என்னைய விட்டுப்புட்டு நீர் மட்டும் எங்கன போனீரு? எழுந்து வாரும்யா.

வெளியே போயிட்டு செத்த நேரத்தில் வந்துடுறேன் அரசிண்டு சிரிச்சிக்கிட்டே சொல்லிட்டு போனீரேயா. இப்ப செத்து போய் வந்திருக்கீரேயா. ஏன்… ஏன் என்னைய மட்டும் தனியா வுட்டுப்போட்டு போனீரு?” என்று அவனின் மார்பில் விழுந்து கதறி அழுதாள்.

அவள் அழுகையைப் பார்த்து அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் வெளியேறியது.

ஒரு ஓரத்தில் நின்றிருந்த அதிவீரன் அவளின் கதறலை கேட்க முடியாமல், காதுகளை இறுக மூட வழியற்றுக் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

இரண்டு உள்ளங்கைகளையும் அழுத்தமாக மூடி மூடித் திறந்தான்.

அவனுக்கு இருந்த ஆத்திரம் கலந்த வலிக்கு எதையாவது தூக்கிப் போட்டு உடைக்க வேண்டும் போல் இருந்தது.

“ஏன்டா திரு இப்படி அந்தப் புள்ளய கதற வுட்டுப்புட்டு போன? அவளைச் சந்தோஷமா பார்த்துக்கிடுவேண்டு சொன்ன செத்த நேரத்திலேயே இப்படி அவ சந்தோஷத்தை மொத்தமா அழிச்சிட்டு போயிட்டியேடா…” சடலமாகக் கிடந்த நண்பனிடம் கேள்வி கேட்டான்.

பதில் சொல்ல வேண்டியவன் எங்கனம் சொல்வான்?

அவன் மனதிற்குள்ளேயே கதறிக் கொண்டிருக்க, அங்கே கணவன் அருகில் இன்னும் அங்கை அரற்றிக் கொண்டிருந்தாள்.

“எங்கூட அப்படி வாழுணும், இப்படி வாழணும்ண்டு கதை கதையா சொன்னீரேய்யா. இப்ப ஏன் எங்கூட வாழாம என்னைய மட்டும் தன்னந்தனியா நிர்கதியா நிக்க வச்சுட்டு போனீரு? நான் மட்டும் எப்படி உன்னைய வுட்டுப்புட்டு இருப்பேன்? நானும் உங்கூட வாறேன். என்னையவும் கூப்பிட்டு போரும். நீர் இல்லாம நான் மட்டும் ஏன் வாழணும்? எழுந்திரியா… எழுந்திரு… இல்லனா நானும் ஒன்னோட வந்துடுவேன். வாய்யா ராசா… வந்துருய்யா… உன்னோட அரசி கூப்பிடுறேன் வந்துருய்யா…” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினாள்.

ஊரே அவளின் அழுகையைப் பார்த்து அழுதது.

அதிர்ந்து கூடப் பேசாதவள் இன்று ஊரே பார்க்க அழுது அரற்றிக் கொண்டிருந்தாள்.

“தாமரை, மச்சானை எழுந்திரிக்கச் சொல்லுடி. என்னைய வுட்டுப்புட்டு எப்படித் தூங்குறாரு பாரு. எழுந்திருக்கச் சொல்லுடி தாமரை…” என்று அருகில் இருந்த தங்கையைப் போட்டு உலுக்கினாள்.

“ஐயோ, அக்கா!” என்று வார்த்தை வராமல் தாமரை அக்காளை கட்டிக் கொண்டு அழுதாள்.

மகளின் கதறலை பார்க்க முடியாமல், திருவின் காலடியில் சரிந்து அமர்ந்தார் முத்துப்பாண்டி.

“அப்பு… அப்பு… உங்க மாப்ளைய பாருங்கப்பு. எப்படிப் படுத்திருக்காருண்டு பாருங்கப்பு. நீங்களாவது அவரை எழுந்து வர சொல்லுங்கப்பு…” என்று அப்பாவிடம் ஓடினாள் அங்கை.

துண்டை வாயில் வைத்து அடைத்துக் கொண்டு குலுங்கி அழுதார் மனிதர். மகளுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் அவரால்?

“அத்தை… அத்தை… உங்க புள்ள அத்தை. நேத்தைக்குக் கூட உங்ககிட்ட சிரிச்சுக்கிட்டே போய்ட்டு வாறேன்மாண்டு சொல்லிட்டு போனாரே அத்தை. இப்ப மட்டும் ஏன் அத்தை நம்ம கிட்ட சொல்லாம போனார்?” என்று அவரின் கையைப் பிடித்து நியாயம் கேட்டாள்.

வள்ளி இன்னும் உடைந்து அழுதார்.

ஓடி ஓடி கணவனின் சடலத்தைச் சுற்றி சுற்றி வந்து அழுதவளை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

சிறிது நேரத்தில் சடலத்தை எடுக்க, “ஐயோ! அவரைக் கொண்டு போவாதீக…” என்று கத்தினாள்.

சிவகாமியும், தாமரையும் அவளை அணைத்துக் கொண்டு கதறினர்.

“மாப்ள போயிட்டார்மா. நம்மை எல்லாம் வுட்டுப்புட்டு போயிட்டார் தங்கம். திரும்பி வர முடியாத இடத்துக்குப் போயிட்டார்…” என்று சிவகாமி மகளை அணைத்துக் கொண்டு கதறினார்.

“என்னைய விடுங்க சித்தி. நானும் போவணும். அவரு போறாரு. என்னையவும் அவரோட கூட்டிட்டு போங்க. மச்சான், நானும் உங்க கூட வாறேன். என்னையவும் கூட்டிட்டு போரும்…” என்று பின்னாலேயே ஓடியவளை பெண்கள் சுற்றி வளைத்து பிடித்து நிறுத்தி கட்டிக் கொண்டு அழுதனர்.

அங்கையின் கதறல் அதிவீரனை விடாமல் துரத்தியது.

நண்பனின் இறுதி காரியத்திற்குச் சென்று கொண்டிருந்தவனுக்கு வாழ்வே வெறுத்தது.

என்ன வாழ்க்கை இது? என்ற எண்ணம் தலை தூக்கி ஆட்டிப்படைத்தது.

தன் கையைப் பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்த சுப்புவின் கையை இயலாமையில் நெரித்தான்.

அவனின் நிலை புரிந்த சுப்பு, அவனின் தோளில் தட்டி ஆசுவாசப்படுத்த முயன்றான்.

யாராலும் ஆற்றுப்படுத்த முடியாத துக்கம் அது!

மனம் முழுவதும் வெறுமையைச் சுமந்து, எரியூட்டப்பட்ட திருநாவுக்கரசுவின் சடலத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அதிவீரன்.