என்னிதய தாள லயமாய் நீ – 7

அத்தியாயம் – 7

“டேய் வீரா, என்னைய பாரு. இங்க பாரு…” என்று லேசான போதையுடன் நண்பனை அழைத்துக் கொண்டிருந்தான் சுப்பு.

நண்பனை பார்க்காமல் எங்கோ இலக்கில்லாமல் பார்வையைப் பதித்து, வெறித்துக் கொண்டிருந்தவனுக்குச் சுப்புவின் அழைப்பு எல்லாம் அவனின் செவியை எட்டவே இல்லை.

அனைத்து புலன்களும் மரத்துப் போனது போல், உணர்வற்று தான் இருந்தான் அவன்.

“ஏலேய் வீரா, அங்க என்னத்தைடா பார்க்கிறவன்? இப்படித் திரும்பு…” என்று அவன் நாடியில் கை வைத்து தன் பக்கம் திருப்பினான் சுப்பு.

உணர்வில்லாமல் நண்பனை பார்த்த அதிவீரனின் கண்கள், அவனின் மெல்லிய உணர்வுகளுக்கு வெளிபாடாய் கண்ணீரால் நிரம்பியிருந்தது.

“டேய்… அழுவுறீயாடா?” என்று வாயை பிளந்து அதிர்ந்து கேட்டான் சுப்பு.

அவன் கேள்வியில் வெறிந்த கண்களைச் சட்டென்று சிமிட்ட, கண்களில் தேங்கியிருந்த நீர் பட்டென்று கன்னத்தில் உருண்டோடியது.

அப்போதுதான், தான் அழுகிறோம் என்பதையே உணர்ந்த அதிவீரன், தன் சட்டை காலரை பற்றி ஈரத்தை துடைத்துக் கொண்டான்.

“மச்சான், இந்தா அடிடா…” என்று தன் முன்னால் இருந்த மதுபானத்தை அதிவீரனின் பக்கம் நீட்டினான்.

மறுப்பாகத் தலையை அசைத்தான் அதிவீரன்.

“உம் மனசு இப்ப எப்படித் தவிச்சுப் போய்க் கிடக்குமுண்டு எனக்குத் தெரியும் மாப்ள. உன் தவிப்பு குறையணுமுண்டா இதை அடி மாப்ள…” என்று சுப்பு சொல்ல,

அந்தப் பாட்டிலை பிடித்து அவன் பக்கமே தள்ளி வைத்த அதிவீரன், “எனக்கு இருக்குறது தவிப்பு இல்லைடா சுப்பு. வலி! மரண வலி! மரண வலி செத்தால் தேன் போவும். நான் செத்தால் தேன் போவும்…” என்று அவன் வலி நிறைந்த குரலில் சொல்ல,

“டேய் மாப்ள…” என்று அதிர்ந்து கத்தினான் சுப்பு.

“பதறாத மாப்ள. நான் சாவ மாட்டேன். நான் ஏன் சாவணும்? எங்-குயிலம்மா எனக்கு வேணுமுண்டு ஆசை பட்டேன். ஆனா, அவளுக்குத் திருவை தான் புடிச்சு இருக்குண்டு தெரிஞ்ச பிறகு அவ விருப்பம் நடக்கட்டுமுண்டு நான் விலகி வந்துட்டேன். அதுக்காக அவளை மறந்து போட்டு வேற வாழ்க்கையை எல்லாம் தேடிக்க மாட்டேன்டா. அவள் எனக்குத் தேன்னு நான் நினைச்ச நினைப்பு எப்பவும் மாறாதுடா…” என்றான் உறுதியாக.

“என்னடா வீரா இப்படிச் சொல்றவன்? அந்தப் புள்ளக்கும், திருவுக்கும் இந்த நேரம் கல்யாணம் முடிஞ்சிருக்கும்டா. இப்பவும் இப்படிப் பேசுறவன்?” என்று சுப்பு அதிர,

அவன் சொன்ன வார்த்தையை ஜீரணிக்கக் கண்களை இறுக மூடி உடல் விறைத்தவன், தொண்டை குழி வலியில் ஏறி இறங்க தவித்தான்.

இனி இந்த வலி தன் வாழ்நாள் முழுவதும் தொடர போகும் வலி என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

புரிந்ததை ஜீரணிக்கத் தான் அவனால் முடியவில்லை.

இன்று திருநாவுக்கரசிற்கும், அங்கையற்கரசிக்கும் திருமணம்.

இன்றைய நாளில் அவர்களுக்குத் திருமணம் நடக்கும் அதே ஊரில் இருக்க முடியாமல், இரவே மதுரைக்கு வந்துவிட்டான் அதிவீரன்.

அவனைத் தனியாக விடாமல் சுப்புவும் அவனுடன் கிளம்பி வந்துவிட்டான்.

“நீ எதுக்கு வர்றவன்? போடா…” என்று அதிவீரன் துரத்திவிட்ட போதும், சுப்பு அவன் பின்னால் வண்டியில் தொற்றிக் கொண்டான்.

“விடிஞ்சா திருவுக்குக் கல்யாணம்டா. அவென் நம்ம ரெண்டு பேரையுமே எதிர்பார்ப்பியான். என்னால போவ முடியாது. நீயாவது போடா…” என்று எரிச்சலுடன் அவனை விரட்ட,

“திரு மட்டுமில்ல, நீயும் எங்-கூட்டாளி தேன்டா. பிரண்டுக்கு ஒரு சந்தோஷமுண்டா கூட இருப்பதை விட, கஷ்டம் வரும் போது கூட இருப்பது தேன்டா நல்ல நட்புக்கு அழகு. இப்போ திருவுக்குச் சந்தோஷ நேரம். அவனைச் சுத்தி அவென் சந்தோஷத்தை பங்கு போட்டுக்க, இப்ப நிறையப் பேரு அவனுக்கு இருப்பாய்ங்க. ஆனா, உன் கஷ்டத்தைப் பங்கு போட்டுக்க இப்ப நான் ஒருத்தனாவது உன்கூட இருக்கணும் மாப்ள. அப்படி உன்னைய நான் தனியா வுட்டுப்புட்டு போவ மாட்டேன்…” என்ற சுப்புவை வெறித்துப் பார்த்த அதிவீரன், அவனை இழுத்து இறுக அணைத்து விடுவித்தான்.

“நீயாவது நம்ம நட்புக்கு உண்மையா இருப்பதைப் பார்த்துச் சந்தோஷம் டா…” என்றான் அதிவீரன்.

“ஏன்டா அப்படிச் சொல்றவன்?” சுப்பு கேட்க,

“திருவுக்கு நான் உண்மையா இல்லைடா. அவனைக் கட்டிக்கப் போற பொண்ணையே எம் மனசுல சுமந்துகிட்டு, அவனுக்கு அவ கிடைக்கக் கூடாது… எனக்குத் தேன் கிடைக்கணுமுண்டு என்னன்னவோ சோலி பார்த்துப்புட்டேன். எம் மனசையும் அவனுக்குத் தெரியாம மறைச்சுப்புட்டேன். நான் இப்படி நடந்துகிட்டது நட்புக்கு செய்த துரோகம் தேன டா?” என்று வலியுடன் கேட்டான்.

“மாப்ள…” என்று அவன் தோளில் தட்டிய சுப்பு, “மனசு வேற, நட்பு வேறடா. உம் மனசு அந்தப் புள்ள பக்கம் சாயணுமுண்டு இருந்திருக்கு. நடந்துருச்சு. மனசுல நினைச்ச புள்ளய கல்யாணம் பண்ணிக்க உன்னால் முடிஞ்சதை செய்த. அது உம் மனசுக்கு நியாயமா நடந்திருக்க. அதே நேரம், அந்தப் புள்ளய கட்டிக்கப் போறவன், நம்ம கூட்டாளியா இருந்தது விதி.

நட்புக்கு பார்த்துட்டு இருந்தால் உம் மனசுக்குத் துரோகம் பண்ணனும். உனக்கு ரெண்டு பக்கமும் இடியை தந்தது விதி! விதி கூட நம்மால மோத முடியாதுடா. விடு! நடந்தது நடந்திருச்சு. இப்ப நீயே புரிஞ்சிக்கிட்டு அந்தப் புள்ளய விட்டு விலகி வந்துட்ட. இப்ப நீ நட்புக்கும் துரோகம் செய்யலை…” என்று சொல்லி அவனைத் தேற்றினான்.

யார் என்ன சமாதானம் செய்தாலும் தன்னவளை இழந்த வலியும், வேதனையும் போகப் போவது இல்லை என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

அந்த வலியும், வேதனையும் நிலை கொள்ளாமல் அவனைத் தவிக்க வைக்க, இரவு முழுவதும் தனது இரு சக்கர வாகனத்தில் சுப்புவுடன் சுற்றி வந்தான்.

விடிந்து மதுபான கடை திறந்த நேரத்தில் அவனை அங்கே அழைத்துச் சென்றுவிட்டான் சுப்பு.

பைத்தியம் பிடித்தது போல் அவன் சுற்றிய நிலையைத் தணிக்க, மதுபானத்தைக் குடிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் தான் அழைத்து வந்தான். ஆனால், அப்போதும் சுப்புவிற்கு வாங்கிக் கொடுத்தானே தவிர, தான் குடிக்க மறுத்துவிட்டான்.

“போதையில் அவளை மறக்க எனக்கு விருப்பமில்லடா மாப்ள…” என்றிருந்தான்.

இப்போதும் மதுபான கடையில் “அவள் எனக்குத் தேன்னு நான் நினைச்ச நினைப்பு எப்பவும் மாறாதுடா…” என்று அதிவீரன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போயிருந்த சுப்புவிடம், “அவளுக்குக் கல்யாணம் முடிஞ்சா என் மனசை மாத்திக்கணுமா மாப்ள?” என்று நிதானமாகக் கேட்டான்.

“கல்யாணம் முடிஞ்ச புள்ளய நினைக்கிறது தப்பு இல்லையா மாப்ள?” சுப்பு கேட்க,

“நான் சொல்றதை கேட்குறவைங்களுக்குத் தப்பாத் தேன் தெரியும் மாப்ள. மனசு! எம் மனசு முழுக்க அவ தேன் இருக்கா மாப்ள. அவ நினைப்பு எனக்கு இன்னைக்கு நேத்தைக்கு வரலை. எப்பவோ வந்திருச்சு. அப்பயே அவ திருவுக்குப் பேசி வச்சிருக்கிறவண்டு தெரிஞ்சாலும், அது சும்மா பேச்சு வார்த்தை தானேண்டு கொஞ்சம் அசால்டா இருந்துபுட்டேன்.

நம்ம வூருல இப்படிப் பேச்சு நடப்பதும், வளர்ந்த பொறவு அது மாறி போவதும் கூட உண்டு தானே? அப்படித்தேன் நினைச்சுப்புட்டேன். காதலை பொறுத்தவரை நான் கோழை மாப்ள. ரொம்ப ரொம்பக் கோழை. அதுதேன் அங்கைகிட்ட என்னால துணிந்து எங்-காதலை சொல்ல முடியலை.

திருவுக்கும், அங்கையும் நிச்சியமுண்டு பேசினப்பத் தேன் தப்பு பண்ணிப் போட்டேண்டு உறைச்சது. அதுக்குப் பின்னாடி போய் அங்கைகிட்ட எம் மனசை சொன்னா, எனக்குத் திருவை தேன் பிடிச்சிருக்குண்டு சொல்லிட்டா.

அப்பவும் கூட நான் நம்பல மாப்ள. ஏன்னா, திருவும், அங்கையும் அப்படி ஜாடை மாடையா பேசி கூட நான் பார்த்தது இல்லை. விருப்பம் இல்லாம வூட்டுல சொன்னதுக்கு மதிப்பு கொடுத்துக் கல்யாணம் பண்ணிக்கப் போறாகண்டு தேன் நினைச்சேன். அதுதேன் அவைய்ங்களுக்குக் கல்யாணம் முடியுறதுக்குள்ள எப்படியாவது அவளை என்கிட்ட கொண்டு வந்துபுடணுமுண்டு நினைச்சேன் மாப்ள. ஆனா, காலங்கடந்த முயற்சிண்டு அப்புறம் தேன் மாப்ள என் புத்திக்கு உறைச்சது…”

எங்கோ இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டே அதிவீரன் தன் மனதை கொட்ட, பரிதாபத்துடன் அவனைப் பார்த்திருந்தான் சுப்பு.

“இந்த நேரம் திருவுக்கும், அங்கைக்கும் கல்யாணம் முடிஞ்சிருக்கும். அங்கை திருப் பொண்டாட்டியாகிருப்பா. ஆனா… ஆனா… எம் மனசுல புகுந்த அங்கை அதே தாவணி போட்ட பருவ பொண்ணு தேன் மாப்ள. அவ இன்னும் அப்படியே தேன் எம் மனசுக்குள்ளார உட்கார்ந்திருக்கா. அவளோட அந்த உருவத்தை யாராலும் மாத்த முடியாது மாப்ள…” என்றான்.

காதல் பித்துப் பிடித்தவன் போல் பிதற்றுபவனை என்ன சொல்வதென்றே சுப்புவிற்குத் தெரியவில்லை.

எது சொன்னாலும் கிறுக்குத்தனமான அவன் காதல் மனதில் ஏறுமா என்றும் தெரியாததால் அமைதியாக இருந்து கொண்டான்.

காலம் சென்றால் அவன் மனதிலும் மாற்றம் வரலாம் என்ற எண்ணத்துடன் அவனுக்கு ஆறுதலாக உடன் இருந்தான்.

அங்கையின் திருமணம் முடிந்த மறுநாள் தான் வீடு சென்றான் அதிவீரன்.

அவன் வீட்டிற்கு வராததற்குக் கேள்வி கேட்ட வீட்டினருக்கு மௌனத்தையே பதிலாக்கினான். யாருடனும் பேச அவனுக்குப் பிடிக்கவே இல்லை.

எதிர் வீட்டில் இன்னும் கல்யாண களை முடியாமல் பந்தல் இருக்க, சில உறவினர்களின் பேச்சு சத்தமும் அவன் வீடு வரை கேட்டுக் கொண்டிருந்தது.

திடீரெனச் சலசலவெனச் சத்தம் கேட்க, தன் அறையின் ஜன்னல் வழி எதிர்வீட்டைப் பார்த்தான்.

பெண், மாப்பிள்ளை மறுவீடு வந்திருக்க, அவர்களுக்கு ஆரத்தி எடுத்துப் பெண்கள் புது மாப்பிள்ளையைக் கலாட்டா செய்து கொண்டிருந்தனர்.

அவ்வளவு சத்தம் கேட்க, அது எதையும் காதில் நுழைத்துக் கொள்ளாதவன், கண்களில் நுழைந்தவள் என்னவோ அங்கையற்கரசி மட்டுமே!

ஜன்னல் வழியாக அங்கையின் பக்கவாட்டுத் தோற்றம் தெரிய, கருப்பு நிறத்தழகி மஞ்சள் பூசி, கண்ணிற்கு மையிட்டு, நெற்றியில் மட்டும் இல்லாது, வகிட்டிலும் குங்குமம் வைத்து, கழுத்தில் நேற்று ஏறிய தாலியுடன் புதுப் பெண்ணிற்கே உரிய பூரிப்புடன் கணவனின் அருகில் நின்று கொண்டிருந்தாள் அங்கையற்கரசி.

உறவு பெண்களின் கேலியில் உண்டான நாணத்தையும், புன்னகையையும் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தவளை விட்டு அதிவீரனின் பார்வை அசையவில்லை.

அவள் இப்போது இன்னொருவனின் மனைவி என்பதை மூளை எடுத்துச் சொன்னாலும், மனம் அதைக் கேட்காமல் சண்டித்தனம் செய்து, அவன் பார்வையைக் கட்டிப் போட்டிருந்தது.

அவளைப் பார்க்க பார்க்க தன் இழப்பின் வலி அதிகமாகத் தெரிய, பட்டென்று ஜன்னலை மூடியவன், கட்டிலில் வந்து படுத்துக் கொண்டான்.

இன்றைய ஒரு நாளே இப்படி இருக்க, இனி வரும் நாட்களை எப்படிக் கடக்கப் போகிறோம்? என்ற மலைப்பு மனம் முழுவதும் வியாபித்திருந்தாலும், இந்த வலி தனக்கு இன்னும் இன்னும் வேண்டுமென்று நினைத்துக் கொண்டான்.

தன் காதலை அவளிடம் காலம் கடந்து சொன்னதற்காக, தன் காதலை அவளிடம் சேர்க்க முடியாததற்காக, இந்த வலி எல்லாம் தனக்குப் பற்றாது. இன்னும் வலிக்க வலிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவனுக்கு நிலையாக ஒரே இடத்தில் படுத்திருக்கக் கூட முடியவில்லை.

மூடிய அறைக்குள் இருந்தவன் நிலையில்லாமல் அறைக்குள் நடை போட்டான்.

அங்கையின் மதிமுகம் அவனை உன்மத்தம் கொள்ள வைக்க, தன் காதல் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தான்.

நடக்கும் போதே சுவரில் இருந்த கண்ணாடியைப் பார்த்தவன், அதில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்து அருவருத்துப் போனான்.

‘தன் மனதிற்குப் பிடித்த பெண்ணிடம் தன் காதலை கொண்டு சேர்க்க முடியாத தான் எல்லாம் என்ன ஆண்மகன்?’ என்ற நினைப்பு மனதில் ஓட, எப்போதும் மேல் நோக்கி சுருட்டி விட்டிருக்கும் மீசையைக் கீழ் நோக்கி இழுத்துவிட்டான்.

அதன் பிறகும் தன் மேலேயே இருந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் வலது கையை ஓங்கி கண்ணாடியில் குத்திக் கொண்டான் அதிவீரன்.

ஜிலீரென்ற சத்தத்துடன் உடைந்த கண்ணாடி அவன் கையைப் பதம் பார்த்தது.

கையிலிருந்து ரத்தம் சரசரவென வெளியேறியது.

அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் மீண்டும் குத்திக் கொள்ளலாமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவனின் அறை கதவு படபடவென்று தட்டப்பட்டது.

“எய்யா ராசா… உள்ளார என்னய்யா செய்யுறவன்? என்ன சத்தம் அது?” என்று அவன் அறை சுவரின் சாய்ந்து அமர்ந்திருந்த பேச்சியம்மாள் எழுந்து வந்து குரல் கொடுக்க,

அந்தச் சத்தத்தைக் கேட்டு அடுப்பங்கரையில் இருந்து ஓடி வந்த காமாட்சியும் கதவை தட்டினார்.

“வீரா… வீரா… கதவை திறடா. என்னடா செய்றவன்?” என்று காமாட்சியும் கத்தினார்.

ஏற்கெனவே இரண்டு நாட்களாக வீட்டின் பக்கம் மகன் வராமல் போனதில் பதறி போயிருந்தனர். சுப்புவும் அவனுடன் இருக்கிறான் என்ற தைரியத்தில் தான் சற்று அமைதியாக இருந்தனர்.

இப்போது வீட்டிற்கு வந்தவுடன் கதவை அடைத்துக் கொண்டது மட்டும் இல்லாமல், சத்தம் வேறு கேட்கவும் இரண்டு பெண்களும் நடுங்கிப் போயினர்.

கருப்பண்ணன் வேறு வீட்டில் இல்லாமல் இருக்க, பயத்துடன் கதவை தட்டினர்.

அவர்களின் சத்தம் தாங்காமல் எரிச்சலுடன் கதவை திறந்தவன், “நானென்ன செத்தா போனேன்? ஏன் இப்படிக் கதவை போட்டு உடைக்கிறீக?” என்று கத்தினான்.

“அடப்பாவி மவனே! என்னடா, என்ன இது?” அவனின் கத்தலை பொருட்படுத்தாமல், மகனின் கையிலிருந்து வழிந்த ரத்தத்தைப் பார்த்து, காமாட்சி பதற,

“ஏன் ராசா இப்படிப் பண்றவன்?” என்று புலம்பிக் கொண்டே பேச்சியம்மாள் ஒரு துணியை வைத்து பேரனின் கை ரத்தத்தைத் துடைக்க வந்தார்.

அவருக்குக் கையைக் கொடுக்காமல் அவன் இழுத்துக் கொள்ள, “ஐயோ! எம்புட்டு ரத்தம் போவுது… கையைக் கொடுடா பேராண்டி…” என்று சத்தம் போட்டு, வம்படியாகக் கையை இழுத்து ரத்தத்தைத் துடைக்க, அதுவோ துடைக்கத் துடைக்கப் பெருகியது.

“போய் ஒரு பெரிய துணி எடுத்துட்டு வாடி. புள்ள கைல ரத்தம் பொங்குது. பொலம்பிட்டு இருக்கவ…” மகனின் ரத்தத்தைப் பார்த்து நிறுத்தாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்த மருமகளை அதட்டி விரட்டினார்.

அவர் துணியை எடுத்து வந்து கொடுக்க, அதை வைத்து கட்டிவிட்டவர், “ஆஸ்பத்திரிக்கு போவணுமே. இவன் அப்பன் வேற சோலியா வெளியே போயிட்டானே. இப்ப நான் என்னா பண்ணுவேன்…” என்று பேச்சியம்மாள் இப்போது புலம்ப ஆரம்பிக்க, அவரிடமிருந்து வெடுக்கென்று தன் கையைப் பிடிங்கி கொண்டான்.

“என் ஆசைய எல்லாம் குழிய தோண்டி பொதைச்சுப்புட்டு இப்போ பாசம் இருக்குற மாதிரி பகுமானம் காட்டுறீகளோ?” என்று தன் மேல் உள்ள கோபத்தை அன்னை, அப்பத்தாவிடம் காட்டியவன், விருட்டென்று வீட்டிலிருந்து வெளியேறிவிட்டான்.

மகனின் பின்னால் ஓடி வந்த காமாட்சி அவன் வண்டியில் சென்றதை பார்த்துவிட்டு இயலாமையுடன் மீண்டும் வீட்டிற்குள் சென்றார்.

வீட்டிலிருந்து வெளியேறிய அதிவீரனின் கைகளில் வண்டி கட்டுப்பாடு இல்லாமல் பறந்தது.

அங்கிருந்து எங்கேயாவது சென்று விட வேண்டும் போல் அவனின் மனம் துடித்தது.

அவனின் சிலம்பம் வகுப்பு எடுக்கும் பொட்டல் காடு பக்கம் வண்டியை விட, அப்போது அவனின் வண்டியில் அங்கே வந்து அவனை வழி மறைத்தான் சுப்பு.

காமாட்சி அவனுக்குப் போன் மூலம் தகவல் சொல்லியிருக்க, அதிவீரன் வண்டியை நிறுத்தியதும் அவனை ஒன்றும் கேட்காமல், மருத்துவமனைக்கு அழைத்தான்.

‘வரமாட்டேன்’ என்று அதிவீரன் பிடிவாதம் பிடிக்க, “உம் மனசு புண்ணா கிடக்கிறது பத்தாதாடா? உடம்பையும் புண்ணாக்கிடணுமா?” என்று கடிந்து அதட்டி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் சுப்பு.

அதிவீரன் இங்கே காதல் வலியில் தவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், அங்கையற்கரசியின் வீட்டில் அவள் உறவுகள் சூழ, கணவன் அருகில் அமர்ந்து விருந்தை உண்டு கொண்டிருந்தாள் அங்கை.

அவளின் முகம் பூரிப்பில் மினுமினுத்துக் கொண்டிருந்தது.

“மச்சான், அக்காளுக்கு எடுத்து ஊட்டி விடுங்க…” என்று தாமரை கலாட்டா செய்ய, திருச் சிரித்துக் கொண்டே இனிப்பை எடுத்து அங்கைக்கு ஊட்டி விடக் கையை நீட்டியவன், அவள் வாயை திறந்த நேரத்தில் கொடுக்காமல் கையைப் பின்னால் இழுத்துக் கொண்டான்.

“அப்படிப்போடு…” என்று பெண்கள் எல்லாம் குரல் கொடுக்க, திறந்த வாயுடன் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள் அங்கையற்கரசி.

அவளைப் பார்த்து குறும்பாகக் கண்சிமிட்டி சிரித்த திரு, மீண்டும் அவளின் உதடு அருகில் கையைக் கொண்டு போனான்.

“அக்கா, ஏமாந்துடாதே! மச்சான் உன்னைய திரும்ப ஏமாத்த போறாரு…” என்றாள் தாமரை.

“இல்ல புள்ள, இப்ப ஏமாத்த மாட்டேன்…” என்று நல்ல பிள்ளையாகத் திருச் சொல்ல, அதை நம்பி மீண்டும் வாயைத் திறந்தாள் அங்கை.

அப்போதும் கொடுக்காமல் அவன் ஏமாற்றி மூன்றாவது முறையாகக் கொடுத்தான்.

இப்படிக் கலாட்டாவாகக் கல்யாண வீடு கலகலத்தது.

கலகலப்பின் நடுவே, அதிவீரனின் தடை இல்லாமல் தன் திருமணம் முடிந்ததில் அங்கைக்கு உள்ளுக்குள் அவ்வளவு ஆசுவாசமாக இருந்தது.

அதிவீரன் எதுவும் பிரச்சினை செய்வானோ என்று முத்துப்பாண்டியும், துரைப்பாண்டியும் பயந்தது போல் இல்லாமல் நல்லபடியாக மகளின் திருமணம் முடிந்ததில் அவர்களும் உற்சாகமாக இருந்தனர்.

அவர்களுக்கான சந்தோஷத்தை அவர்களிடமே கொடுத்துவிட்டு, வலி மொத்தத்தையும் தானே சுமந்து கொண்டான் அதிவீரன் என்பதை அவர்கள் அறியவே இல்லை.