என்னிதய தாள லயமாய் நீ – 6

அத்தியாயம் – 6

“எங்க அவென்? எங்கன போனான் எங்குடியை கெடுக்கப் பொறந்தவன்?” என்று வீட்டிற்குள் நுழையும் போதே துண்டை உதறிக் கொண்டே ஆத்திரத்துடன் நுழைந்தார் கருப்பண்ணன்.

“என்னாத்துக்கு உள்ளார வரும் போதே ஆட்டம் போட்டுக்கிட்டே வர்றீரு…” காமாட்சி புரியாமல் கேட்க,

“வாடி, இவளே… ஆட்டம் போடணுமுண்டு நேந்துக்குட்டு வந்துருக்கேன் பாரு. கேண சிறுக்கி. எங்கடி உம் மவன்? கூப்பிடுறீ…” என்று நாக்கை மடித்துக் கடித்துக் கொண்டு ஆத்திரமாகக் கேட்டார்.

கணவரின் கோபத்தில் மிரண்டு விழித்துப் பதில் சொன்னார் காமாட்சி.

“தூங்க வூட்டுப்பக்கம் வராத மவன், இன்னைக்குத் தேன் வந்து மச்சுக்குள்ளார படுத்திருக்கியான்…”

“தொரை செஞ்சுப்புட்டு வந்த காரியத்துக்குத் தூக்கம் ஒன்னு தேன் கேடு. எம் மான மருவாதையை வாங்கிப் போட்டு வந்தவனுக்குச் சொகுசு கேட்குதோ? வெளியே வரச் சொல்லு அவனை…” என்று ஆத்திரமாகக் கத்தினார்.

“அப்படி என்னங்க பண்ணினயான்?” காமாட்சி விவரம் கேட்க, அக்கினியாக விழித்து மனைவியை எரித்தார்.

சட்டென்று பின் வாங்கியவர், “இந்த ஆளுக்கு எந்தச் சாமி வந்து இறங்குச்சுண்டு இந்த ஆட்டம் ஆடுறாரோ?” என்று முனகிக் கொண்டே தலையில் அடித்தபடி மகனின் அறைக்குள் நுழைந்தார்.

தந்தை கத்தியது உள்ளே வரை கேட்டாலும், கேட்காதது போல் கட்டிலில் படுத்திருந்தான் அதிவீரன்.

மல்லாக்கில் படுத்து, கையை வைத்துக் கண்ணை மறைத்தபடி படுத்திருந்தாலும், உறக்கம் சிறிதும் அண்டாதவனின் உடலும், மனமும் எஃகிரும்பாய் இறுகிப் போயிருந்தது.

அதை அறியாத காமாட்சி, “என்ன காரியம்டா செய்துபோட்டு வந்தவன்? ஒ அப்பன் அய்யனார் கணக்கா, அருவா இல்லாம திங்கு திங்குண்டு ஆடிட்டு இருக்காரு…” என்றார்.

கண்ணை மறைத்திருந்த கையை எடுத்து நிதானமாக அன்னையைப் பார்த்தவன், “மூஞ்சில தின்னூரை அடிச்சு உம் புருஷனை மலை இறக்குறதை விட்டுப்புட்டு இங்க என்னாத்துக்கு வந்து கேள்வி கேட்டுக்குட்டு நிக்கிற?” என்று எரிச்சலுடன் கேட்டான்.

“டேய் மவனே, உங்கப்பனுக்குக் கோபம் வந்தா கையை நீட்டி போடுவார்டா. இப்ப வேற அய்யனார் கணக்கா நிக்கிறார். நான் போய்ப் பேசி கையை நீட்டிப் போட்டா நான் பரலோகம் போய்ச் சேர்ந்திடுவேன்டா. உன்னைய தேன் கூப்பிடுறாரு. எழுந்துச்சி வா…” என்றார்.

“கட்டுன புருசனை சமாளிக்க முடியலை. நீயெல்லாம் என்ன பொஞ்சாதி?” என்று கடுப்பாகக் கேட்டுக் கொண்டே எழுந்து வந்தான் அதிவீரன்.

அவன் வெளியே சென்ற போது, தன் மகனிடம் எதற்காகக் கோபமாக இருக்கிறான் என்று கேட்டுக் கொண்டிருந்தார் பேச்சியம்மாள்.

அன்னைக்குப் பதில் சொல்லாமல் எரிச்சலுடன் குதித்துக் கொண்டிருந்த கருப்பண்ணன் மகனை பார்த்ததும், உக்கிரமாகப் பார்த்தார்.

அவரின் பார்வைக்குச் சிறிதும் அசையாமல் அதிவீரன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்க, அவரின் ஆத்திரம் இன்னும் கூடியது.

“செய்றதையும் செஞ்சி போட்டு நெஞ்சை நிமித்திக்கிட்டா நிக்கிறவன்…” என்று வேகமாக மகனை அடிக்கப் பாய்ந்து வந்தார்.

“யோவ்! உமக்கு என்ன புத்தி கெட்டு போச்சுதா?” என்று மகனை அடிக்க விடாமல் காமாட்சி குறுக்கே பாய,

“பாவி மவனே! எம் பேரனை அடிக்கக் கை ஓங்கிட்டு வர்றானே…” என்று பேச்சியம்மாள் கத்திக் கொண்டே, பேரனை அணைத்து காபந்து பண்ணினார்.

அதிவீரனோ அங்கே ஒன்றுமே நடக்காதது போல் சிலையாக நின்றான்.

“ஏய் கிறுக்கச்சி, தள்ளிப் போடி…” என்று மனைவியை ஒதுக்கிவிட்டு, கோபத்துடன் கருப்பண்ணன் மகனை நெருங்க,

“ஏலேய், போடா அங்கிட்டு…” என்று பேச்சியம்மாள் மகனை தடுக்க வர,

“ஆத்தா, அவன் செய்து போட்டு வந்தது தெரியாம அவனுக்கு வக்கலாத்து வாங்கிட்டு வர்றாதே!” என்று அன்னையை அதட்டினார்.

“எம் பேரன் என்ன செய்து போட்டு வந்தாண்டு இப்படிக் குதிக்கிறவன்?” பேச்சியம்மாள் கேட்க,

“என்ன செய்துபோட்டு வந்தானா? எம் மானத்தையே வாங்கிட்டு வந்துருக்கியான். அந்த முத்துப் பாண்டி பயகிட்ட போய்ப் பொண்ணு கேட்டுருக்கியான்…” என்று பல்லை கடித்துக் கொண்டு சொல்ல,

“அடி ஆத்தி!” என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து நின்றனர் காமாட்சியும், பேச்சியம்மாளும்.

“என்னய்யா சொல்றவன்?” பேச்சியம்மாள் அதிர்ந்து கேட்க,

“ஆமா ஆத்தா, இந்தப் பய இன்னும் அடங்கலை. அந்த முத்துப் பாண்டி பயலுகிட்டயே நேரா போயி பொண்ணு கேட்டுருக்கியான். அவென் எங்கிட்ட வந்து உம் மவனை அடக்கி வை. இல்லைண்டா உமக்குக் கொள்ளி வைக்கக் கூடப் புள்ள இல்லாம பண்ணிப்புடுவேண்டு சொல்லிட்டு போறயான்…” என்றார்.

“ஆத்தாடி!” என்று அதிர்ந்த காமாட்சி, “கூறுகெட்டு போச்சுதாடா உமக்கு? என்ன காரியம் பண்ணிப்போட்டு வந்திருக்கவன்?” என்று மகனின் முதுகில் மொத்தினார்.

அவன் அசையாமல் விறைத்து நிற்க, “ஏய், போடி அங்கிட்டு…” என்று மருமகளைத் தள்ளிவிட்ட பேச்சியம்மாள், “நீ செய்து போட்டு வந்த காரியம் லேசுப்பட்டது இல்லைப்பு. அந்தச் சிறுக்கிக்கு இன்னொருத்தன் கூட நிச்சியம் முடிஞ்சி போச்சுது. இனியும் அந்தச் சிறுக்கிய நினைச்சுக்கிட்டு பொண்ணு கேட்குறது எல்லாம் தப்பு ராசா…” என்றார் பேரனிடம்.

“அதுக்குத்தேன் அவளுக்கு நிச்சியம் முடியுறதுக்கு முன்னாடியே போய்ப் பொண்ணு கேளுங்கண்டு சொன்னேன். சண்டைக்கார குடும்பம் கேட்க மாட்டோமுண்டு தாம்தூமுண்டு குதிச்சீக. அவளுக்கும் நிச்சயம் முடிஞ்சி போச்சுது. அதுக்காக நான் பொத்திக்கிட்டு போவேண்டு நினைச்சீகளோ? எனக்குப் பொஞ்சாதினா அவ மட்டுந்தேன். அவ எனக்கு வேணும்ண்டா அவ அப்பன்கிட்ட நேரா கேட்டால் தான் உண்டுண்டு பொண்ணு கேட்க போனேன். பாவிப் பய! என் சட்டைய பிடிச்சிக்கிட்டு சண்டைக்கு வந்துட்டியான்…” என்று பல்லைக் கடித்தான் அதிவீரன்.

“எப்படி முட்டாப்பய கணக்கா பேசுறியாண்டு பாரு. இன்னொருத்தனுக்கு முடிவானவளை மனசார நினைச்சதே தப்பு. அந்தத் தப்பையும் பண்ணிப்போட்டு, இப்போ அவளுக்குப் பேசி முடிச்சி வூரெல்லாம் பத்திரிகை வைக்க ஆரம்பிச்ச பிறகு பொண்ணு கேட்டுருக்கியான். கொஞ்சமாவது அறிவுண்டு ஒன்னு இருந்தா இப்படிப் பண்ணுவியானா?” என்று கருப்பண்ணன் கோபமாகக் கத்த,

“பத்திரிகை கொடுக்க ஆரம்பிச்சா நான் பொத்திக்கிட்டு போவணுமோ? என்னால அப்படிப் போவ முடியாது. அவளுக்குத் தாலி இன்னும் கழுத்தில் ஏறலையே. அப்புறமேட்டுக்கு நான் ஏன் பொத்திக்கிட்டு இருக்கணும்? அதுதேன் பொண்ணு கேட்டேன்…” என்றான் தெனாவெட்டாக.

“கூறுகெட்டவனே…” என்று ஆரம்பித்துச் சில கெட்ட வார்த்தைகளையும் போட்டு மகனை திட்டி தீர்த்தார் கருப்பண்ணன்.

தந்தையின் கத்தலோ, அன்னையின் கதறலோ, அப்பத்தாவின் பேச்சோ எதுவும் அவன் காதில் ஏறவில்லை.

அங்கையைத் தன் வசம் கொண்டு வர ஏதாவது செய்ய வேண்டும் என்று பரபரத்த மனதிற்குத் தீனி போட, அவரின் தோப்பில் நேராகவே சென்று முத்துப் பாண்டியை பார்த்து அவரின் மகளைத் தான் விரும்புவதைச் சொல்லி பெண் கேட்டுவிட்டான்.

அதற்கு அவர் அவனின் சட்டையைப் பிடித்துச் சண்டையிட்டு, கொன்று விடுவதாக மிரட்டி என்று ஒரு ஆட்டமே ஆடிவிட்டார்.

அதற்காகச் சிறிதும் கலங்காமல் திடமாக அவரை எதிர்கொண்டுவிட்டு வந்திருந்தான்.

இப்போது தந்தையின் கோபத்திலும் நிதானத்தைத் தவறவிடவில்லை அவன்.

“இந்தா பாருடா, நமக்கு ஆகாத குடும்பம் என்பதையும் தாண்டி, அந்தப் புள்ளைக்குக் கல்யாணம் பேசி முடிவாகிடுச்சு. ஒரு பொட்ட புள்ள வாழ்க்கைய கெடுப்பது ரொம்பத் தப்பு. அந்தத் தப்பை எம் மவன் நீ செய்யக் கூடாது…” என்று தன் கத்தலுக்கு மகன் செவி சாய்க்கவில்லை என்றதும், நயமாக எடுத்துரைத்தார்.

“வாழ்க்கையைக் கெடுக்கிறேனா?” என்று முகம் சுளித்துக் கேட்டவன், “அவ வாழ்க்கை கெட்டு போவணுமுண்டு அவ எனக்கு வேணுமுண்டு நினைக்கலை. அவளை நல்லா பார்த்துக்கணுமுண்டு தேன் அவளைக் கட்ட நினைக்கிறேன்…” என்றான் தீர்க்கமாக.

“கேன கிறுக்கன் கணக்கா இருக்குடா உம் பேச்சு…” என்று கருப்பண்ணன் கடிய அவனின் முகம் கோபத்தில் சிவக்க, விருட்டென்று வீட்டிலிருந்து வெளியேறிவிட்டான்.

அதே நேரம் தங்கள் வீட்டின் பின் பக்கம் நின்று தம்பியிடம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தார் முத்துப்பாண்டி.

“நீரு ம்ம்-ண்டு ஒரு வார்த்தை சொல்லுங்க அண்ணே. அவனை வகுந்து போட்டு வந்துடுறேன்…” என்றார் துரைப்பாண்டி.

“எனக்கும் அந்த ஆத்திரம் இருக்கு தொரை. அதுக்காண்டி அவசரப்பட்டு நாம எதுவும் பண்ண வேண்டாமுண்டு தேன் அவனை மட்டுமில்லை, அவென் அப்பனையும் மிரட்டி போட்டு வந்திருக்கேன்…”

“நீரு அப்படி வுட்டுப்புட்டு வந்திருக்கக் கூடாது அண்ணே. அவென் உங்ககிட்ட வந்து நம்ம பொண்ணைக் கேட்ட போதே, வீச்சருவாளால சீவியிருக்கணும். எம்புட்டுத் தகிரியம் இருந்தா நம்ம பொண்ணை, அதுவும் கல்யாணம் முடிவாகிருக்கிற பொண்ணைக் கேட்டு வந்துருப்பியான்…” துரை ஆத்திரத்துடன் சொல்ல,

“அதுதேன்டா தொரை. என்ன தகிரியத்தில் அப்படிக் கேட்டு வந்தயான்? இப்பவும் நினைக்க நினைக்க மனசு ஆறலைடா தொரை…” என்று கொந்தளித்தார் முத்துப்பாண்டி.

“அவனுக்கு முன்னயே நம்ம பொண்ணு மேல ஒரு கண்ணு இருந்திருக்கும் போலண்ணே. அதுதேன் நிச்சியம் முடிஞ்ச அன்னைக்கு வூட்டு முன்னால அப்படி ஆடியிருந்திருக்கியான்…”

“அப்படித்தேன் போலத் தொரை . அந்தப் பய இம்புட்டு வினயம் பிடிச்ச பயலா இருப்பியாண்டு நினைக்கலை. இதை இப்படியே விடக் கூடாது தொரை. பய முழியும், பேச்சும் சரியே இல்லை. கல்யாணம் முடியுற வரை நம்ம பொண்ணைப் பாதுகாக்கணும் தொரை…” முத்துப்பாண்டி சொல்ல,

“அவனைக் கண்டந்துண்டமா வெட்டி போடாம, நம்ம பொண்ணைக் காவ காக்கணுமா அண்ணே?” ஆத்திரத்துடன் கேட்டார் துரைப்பாண்டி.

“தொரை, இது பொம்பள புள்ள காரியம். ஆம்புள தேடி வந்தாலும் பொம்பளங்க பேரு தேன் கெட்டுப் போவும். நம்ம பொண்ணு பேரு அப்படி யார் வாயிலயும் விழக் கூடாதுடா தொரை. இதுவரைக்கும் நம்ம பொண்ணுங்க நம்ம பேச்சுக்கு கட்டுப்பட்டு யார் வாயிலேயும் விழுற மாதிரி நடந்துகலை. இனியும் அப்படி நம்ம புள்ளங்க நடக்காதுண்டு எனக்கு நம்பிக்கை இருக்கு.

இந்தப் பய தேன் புதுசா நம்ம குறுக்கே வர்றயான். அவென் கண்ணில் நம்ம பொண்ணுங்களைக் காட்டாம இருந்தாலே போதும். எந்தப் பிரச்சினையும் வராது. அதுவும் கல்யாணம் முடியுற வரைக்கும் தேன். கல்யாணம் முடிஞ்ச பிறகு அந்தப் பயலால ஒன்னும் பண்ண முடியாது…” என்றார் முத்துப்பாண்டி.

“என்னண்ணே, அதுக்காண்டி அந்தப் பயலை அப்படியே விடச் சொல்றீங்களா?” என்று கோபப்பட்டார் துரைப்பாண்டி.

“நம்ம புள்ள கல்யாணம் நல்லபடியா முடிஞ்ச பிறகு அவனை என்ன செய்றதுண்டு பார்ப்போம் தொரை. அதுவரை தள்ளிப் போடு…” என்றான் முத்துப்பாண்டி.

ஆனாலும், துரைப்பாண்டியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அண்ணனும், தம்பியும் பேசி இப்போதைக்குத் தங்கள் பெண்ணைப் பாதுகாப்போம் என்று பேசி முடிவு செய்தனர்.

“இந்த விசயம் நமக்குள்ளார இருக்கட்டும் தொரை. வீட்டுப் பொம்பளகளுக்குத் தெரிய வேணாம். பயந்துடுவாக…” என்றார் முத்துப்பாண்டி.

“சரிண்ணே. நான் பார்த்துக்கிடுதேன்…” என்று மண்டையை ஆட்டினார் துரைப்பாண்டி.

இரு வீட்டிலும் கலக்கத்தை உண்டு பண்ணிவிட்டு, களத்துமேட்டில் படுத்திருந்த அதிவீரனின் மனம் நிலையில்லாமல் துடித்துக் கொண்டிருந்தது.

அங்கைக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் என்பதை அவன் மனம் ஏற்க மறுத்தது.

அவளை உன்னால் இன்னொருத்தனுக்கு விட்டு கொடுக்க முடியுமா? என்ற மனதின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அல்லாடினான்.

அடுத்து என்ன செய்வது? என்ற சிந்தனை தான் அவனுள் ஆட்கொண்டிருந்தது.

இனி நேர் வழி எல்லாம் சரிவராது என்று அவனுக்குப் புரிந்தது.

நேர் வழி இல்லை என்றால் அடுத்து? என்று யோசனையில் ஆழ்ந்தவனுக்குத் தோன்றியது எல்லாம் ஒன்றே ஒன்று தான்.

அங்கையற்கரசி தனக்கு வேண்டும் என்றால், அவளைத் தூக்க வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டான்.

கூடவே, அதை எப்படிச் செயல்படுத்தலாம் என்றும் அவனின் சிந்தனை, சிந்தாமல் சிதறாமல் அவனை ஆட்கொண்டது.

அவன் அங்கையைத் தூக்க முடிவு செய்ததும் அதைச் செயல்படுத்த சந்தர்ப்பம் பார்க்க ஆரம்பித்தான் அதிவீரன்.

முத்துப்பாண்டியும், துரைப்பாண்டியும் அங்கையைப் பாதுகாக்க முடிவு செய்திருந்ததால், அவள் எங்கே போனாலும், தனியாகப் போகக் கூடாது என்று அவளிடம் சொல்லி வைத்தனர்.

திருமணம் முடிவாகியிருந்த பெண் என்பதால் அந்தக் கட்டுப்பாடு என்று வீட்டுப் பெண்கள் நினைத்துக் கொண்டனர்.

அங்கை வீட்டை விட்டு வரும் சமயங்கள் குறைவு தான். அதிலும் கோவில் போவதற்குத் தான் பெரும்பாலும் வெளியே வருவாள்.

அப்போதும் தாமரை அவளுடன் இருப்பாள்.

வள்ளி மருமகளைக் கோவிலில் விளக்கு ஏற்ற சொல்லியிருந்ததால், வாராவாரம் போய்க் கொண்டிருந்தாள் அங்கையற்கரசி.

அன்றும் அதே போல் தாமரையுடன் கோவிலுக்குக் கிளம்பியவள், சிறிது நேரத்திற்குப் பிறகு தான் அதை உணர்ந்தாள்.

அன்று அதிவீரனும் அவளைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.

அவன் தன்னைப் பின் தொடர்வதைக் கண்டதும் அவளின் கண்ணில் அப்பட்டமாகப் பயமும், பீதியும் தெரிந்தது. மிரண்டு ஓரப்பார்வையால் அவனைப் பார்த்தாள்.

முழுக் கை சட்டையை முழங்கை வரை ஏற்றி மடித்து விட்டு, வேஷ்டியின் ஒரு முனையைத் தூக்கி பிடித்துக் கொண்டு, அவளையே தன் கண்ணை விட்டு மறையாமல் பார்த்துக் கொண்டு பின் தொடர்ந்து கொண்டிருந்தான் அதிவீரன்.

அவன் தன் பின்னால் வர வர அவளுக்கு நடுக்கம் உண்டானது. தன்னுடன் வரும் தங்கைக்குத் தன் நடுக்கத்தைக் காட்டாமல் சமாளித்தபடி நடந்தாள்.

கோவில் வர, கருப்பன் சிலைக்கு முன்னால் இருந்த விளக்கில் எண்ணெய் ஊற்றிக் கொண்டே அவன் எங்கே இருக்கிறான் என்று நோட்டம் விட, அதிவீரனை காணவில்லை.

அவன் பார்வையில் அகப்படவில்லை என்றதும், பரபரப்பாக மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு, நிம்மதி மூச்சுடன் விளக்கேற்றி சாமி கும்பிட்டாள்.

முடிந்ததும் இருவரும் கிளம்பிய போது, “அட! நல்ல தரிசனம் தேன்…” என்றபடி எதிரே வந்தான் திருநாவுக்கரசு.

அவனை அங்கே எதிர்பாராமல் இமைகள் படபடக்க, உதட்டில் சட்டென்று துளிர்த்த புன்னகையுடனும், நாணத்துடனும் அவனைப் பார்த்தாள் அங்கையற்கரசி.

“அட! வாங்க மச்சான். தரிசனமுண்டு உங்க பார்வை வேற எங்கனயோ இல்ல இருக்குது?” என்று கேலியாகக் கேட்டாள் தாமரை.

“எங்கண்ணுக்கு எது தெரியுதோ, அதுதேன் தரிசனம்…” என்றவன் கண்களோ, அங்கையின் முகத்தையே ரசனையுடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

அவளோ அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், வெட்கத்துடன் தலை குனிந்தாள்.

“சரிதேன். உங்க தரிசனம் அளவோட இருக்கட்டும். அளவுக்கு மீறுச்சு அருவா தேன் வரும்…” என்று நக்கலாகத் தாமரை சொல்ல,

“எதுக்கு இளநீ வெட்டவா?” என்று நமட்டு சிரிப்புடன் கேட்டான்.

“ம்ம்ம்… உம்ம தலையை வெட்ட…” என்று அவள் நொடிக்க,

“ஷ்ஷ், கோவிலில் வச்சு என்ன பேச்சுடி பேசுற?” என்று மென்மையாகத் தங்கையைக் கடிந்து கொண்டாள் அங்கை.

“அடி ஆத்தி! நான் உனக்காகத் தேன்டி பேசிட்டு இருக்குறேன். நீ என்னடாண்டா, மச்சானுக்கு வக்கலாத்து வாங்குறவ…” என்று தாமரை அக்காவின் மீது பாய,

“எனக்காகப் பேச ஒ அக்கா வராம, வேற யாரு வருவாகளாம்? வர வேண்டிய தேன் வந்துருக்கா…” என்று குறும்பு புன்னகையுடன் திருச் சொல்ல,

“அதெல்லாம் அவ கழுத்துல நீங்க மூனு முடிச்சு போட்ட பொறவு தேன். அதுக்கு முன்ன, அவ உங்களுக்காகப் பேச வந்தா அம்புட்டுத்தேன்…” என்று சிலிர்த்துக் கொண்டாள் தாமரை.

“என்ன செய்வியாம்?” என்று திரு உதட்டை சுளித்துக் கேட்க,

“எங்க அப்புகிட்ட போய்ச் சொல்லிப்புடுவேன். கல்யாணம் நெருக்கத்துல வந்துருச்சு. பொண்ணும், மாப்ளயும் வெளியே பார்த்துக்க வேணாமுண்டு நீங்க சொன்னதையும் மீறி, இவுக இரண்டு பேரும் என்னைய தனியா விட்டுட்டுத் தனியா போய்ப் பேசினாங்கண்டு சொல்லிப்புடுவேன்…” என்று சிறுபிள்ளை தனமாகச் சுட்டு விரலை நீட்டி எச்சரிக்கை செய்தாள்.

அவளின் செய்கையில் சிரிப்பு பீறிட்டு வர, அதை அடக்கிக் கொண்டே, “நீ சொல்றதுக்கு முன்ன வரை எனக்கு அப்படி ஒரு யோசனையே இல்லை. இப்ப நீ கொடுத்த யோசனை நல்லாயிருக்கு தாமு புள்ள…” என்றவன்,

அங்கையின் கையை மென்மையாகப் பிடித்து, “நானும், என் அரசியும் அந்தா இருக்குற வேப்ப மரத்துக்குப் பின்னாடி நிண்டு பேசிப்புட்டு வர்றோம். நீ அதுவரைக்கும் இங்கனயே நிண்டு யாரும் எங்க பக்கம் வராம பார்த்துக்க…” என்று தீவிரமாகச் சொன்னவன், “வா அரசி புள்ள போவலாம்…” என்று அங்கையையும் தன் புறம் இழுத்தான்.

“ஹான்!” என்று அதிர்ந்து தாமரை வாயில் கை வைத்து நிற்க, அங்கையோ முகம் நாணத்தில் சிவந்து, அவனின் கை தீண்டலில் சிலிர்த்து, இதழ்கள் வெட்கத்தில் நெளிய, சிறு தயக்கத்துடன் திருவின் முகத்தைப் பார்த்திருந்தாள்.

அவளின் அந்தப் பாவனைகளைச் சிறிது தள்ளி ஒரு மரத்தின் மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அதிவீரனின் மனம் சுருக்கென்று குத்திய வலியில் துடித்தது.

மனதின் வலி அவன் கண்களிலும் அப்பட்டமாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.