என்னிதய தாள லயமாய் நீ – 4

அத்தியாயம் – 4

திறந்திருந்த கதவை லேசாகத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் திருநாவுக்கரசு.

“வாங்க மச்சான்… வாங்க…” என்று ராகம் போட்டு வரவேற்றாள் கூடத்தில் இருந்த தாமரை.

“அடுத்து என்ன, வந்த வழிய பார்த்து போங்களா?” என்று கேலியாகக் கேட்டபடி கூடத்தில் வந்து நின்றான்.

“ஆத்தாடி! உங்களை நா அப்படிச் சொல்ல முடியுமா மச்சான்? நீங்க யாரு… இந்த வூட்டு மருமவனாச்சே…” என்றாள் நீட்டி முழுங்கி.

“மருமவனா இல்லண்டா போவ சொல்லிடுவ போலயே?” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டான்.

தாமரை அவனை முறைக்க, “சரி, சரி விடு தாமு. மாமா எங்க? உள்ளார இருக்காகளா?” என்று கேட்டான்.

“என்னைய தாமு சொல்லாதீக மச்சான். ஆம்பள பய பேரு கணக்கா தாமு, கிமூனுட்டு…” என்றாள் சற்றுக் கோபமாக. அவளின் கோபம் பின்னதுக்குப் பதில் சொல்லவிடாமல் வெட்டிவிட்டது.

“வூட்டுக்கு வந்தவக கிட்ட என்னடி வாயாடிட்டு இருக்கவ?” என்று அதட்டிக் கொண்டே அங்கே வந்த அவளின் அன்னை சிவகாமி, “வாய்யா, இப்பத்தான் வந்தீரா? இட்லி அவிச்சி, கோழி அடிச்சுக் கொழம்பு வச்சிருக்கேன். வாரும், சாப்பிடலாம்…” என்று திருநாவுக்கரசை உபசரித்தார்.

“வேணாம் அத்தை. இப்பத்தான் வவுறு முட்டுக்கத் தின்டு போட்டு வாறேன். ஆத்தாளும் கோழி கொழம்பு தேன் வச்சிருக்கு…” என்றான்.

“சரிய்யா, எதுக்கு நின்னுக்கிட்டே இருக்குரீரு? சேரில் உட்காரும்…” என்றார்.

“இருக்கட்டும் அத்தை. பெரிய மாமனை பார்த்துப்புட்டு போகலாமுண்டு தேன் வந்தேன். மாமன் உள்ளார இருக்காரா?”

“இல்லைய்யா. ஓ ரெண்டு மாமனுங்களும் நம்ம தென்னந்தோப்புப் பக்கம் போயிட்டு வாறேண்டு போயிருக்காக. காலை கஞ்சி இன்னும் குடிக்கலை. இன்னும் செத்த நேரத்தில் வந்துருவாக…” என்று சிவகாமி தகவல் சொல்லிவிட்டு, அவனுக்குக் குடிக்க ஏதாவது எடுத்து வரலாம் என்று உள்ளே சென்றார்.

“நீங்க உட்காருங்க மச்சான்…” என்று அவனுக்கு ஒரு மர நாற்காலியை எடுத்துப் போட்டாள் தாமரை.

நாற்காலியில் அமர்ந்தவன், “எங்க புள்ள என்னோட அரசியைக் கண்ணுலயே காணல?” குரலை தாழ்த்தி ரகசியமாகக் கேட்டான்.

“அது ஒரு திருட்டுப் பூனை. திருட்டுப் பூனை எங்கன இருக்குமுண்டு நினைக்கிறீக?” என்று அவளும் குரலை தாழ்த்தி ரகசியமாகச் சொல்ல, அவனின் பார்வை பட்டென்று அடுப்பங்கரை பக்கம் திரும்பியது.

அதுவரை அடுப்பங்கரை வாசலில் உள் பக்கமாக நின்று, ஒளிந்து நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அங்கையற்கரசி, அவன் பார்வை தன் பக்கம் திரும்பியதை எதிர்பாராமல், திருதிருவென முழித்துவிட்டு, சட்டென்று மறைந்து கொண்டாள்.

அவளைக் கண்டுவிட்டவன் உதடுகள் நமட்டு சிரிப்புடனும், குறும்பு புன்னகையிலும் விரிந்தன.

‘திருட்டுப் பூனை தேன். திருட்டுப் பார்வையைப் பாரு!’ என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டான்.

“பார்த்தீகளா மச்சான் உங்க ஆளை? நீங்க வந்ததுமே அங்கன போய் ஒளிஞ்சிக்கிட்டா. உங்க மேல அம்புட்டு பயம்…” என்று தாமரை கேலியாகச் சொல்ல,

“அது பயமில்லை புள்ள. இந்த மச்சான் மேல உள்ள பாசம்…” என்றான் மயக்கும் புன்னகையுடன்.

“ம்க்கும்… பாசம் கண்டவ தேன் இப்படி ஓடி ஒளியிறாளாகும்?” என்று அவள் நொடித்துக் கொள்ள,

“உன்னைய கட்டிக்கப் போறவன் வரும் போது நீ என்ன செய்யப் போற-ண்டு நானும், என் அரசியும் பார்க்கத்தானே போறோம். இதெல்லாம் உனக்குப் புரியாது புள்ள…” என்று அவன் தாமரையிடம் வம்பளந்து கொண்டிருந்த போதே, ஒரு சொம்பில் எதையோ எடுத்துக் கொண்டு, அடி மேல் அடி எடுத்து வைத்து அங்கே வந்தாள் அங்கையற்கரசி.

அவனின் கண்கள் ரசனையுடன் அவளைத் தலை முதல் கால் வரை வருடிக் கொண்டிருந்தன.

அக்காளையும், மச்சானையும் சுவாரசியமாக வேடிக்கை பார்த்த தாமரை, “ஆத்தாடி ஆத்தா! பொண்ணு அன்ன நடை நடக்குறா. மச்சான் மயங்கி ரசிக்கிறாரு. என்னே கண் கொள்ளா காட்சி! உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயமே முடிஞ்சி போச்சுது. என்னவோ இப்பத்தேன் பொண்ணு பார்க்க வந்தவக கணக்கா பார்த்துக்கிட்டு இருக்கீக…” என்று இருவரையும் கேலி செய்தாள்.

“நிச்சயம் முடிஞ்சா பொண்ணு பார்க்க கூடாதா என்ன? என் அரசிய நான் அப்படித்தேன் பார்ப்பேன்…” என்றான் திருநாவுக்கரசு.

அவர்கள் பேசிக் கொண்டது காதில் விழுந்தாலும் தலையை நிமிர்த்தாமல் சொம்பை கொண்டு வந்த அங்கையற்கரசி, கைகள் மெலிதாக நடுங்க, சொம்பை தன் வருங்காலக் கணவனின் புறம் தீட்டினாள்.

அதனை வாங்காமல் திரு அவளின் முகத்தையே குறுகுறுவெனப் பார்க்க, இன்னும் ஏன் சொம்பை வாங்கவில்லை என்பது போல் மெல்ல தன் நயன விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள் அங்கை.

அவள் பார்வை தன்னைத் தீண்டியதும், கண்களைச் சிமிட்டி, குறும்பு சிரிப்பை உதடுகளில் நெளிய விட்டபடி அவளைப் பார்த்தவன், “என்னது இது?” சொம்பை பார்வையால் சுட்டிக் காட்டி கேட்டான்.

“பதினி…” மிழற்றினாள் பாவை.

“ம்ம்? கேட்கலை…” என்ற அவன் நமட்டு சிரிப்புடன் கேட்க,

“பதினி மச்சான்…” என்று இன்னும் சற்று குரலை உயர்த்திச் சொல்ல,

“ம்கூம்…” என்று ராகம் போட்டவன் சொம்பை வாங்காமல் இருக்க,

“அட! அக்கா எம்புட்டு நேர்ந்தேன் சொம்பை சுமந்துட்டு நிப்பாளாம்? சட்டுப்புட்டுன்னு வாங்குங்க மச்சான்…” என்றாள் தாமரை.

“நீ சொல்லிபுட்டா ஆச்சா? ஒ அக்கா, வாங்குங்க மச்சா-ண்டு சொல்லலையே… அப்புறம் எப்படி வாங்குவதாம்? மாப்ள மருவாதை முக்கியம் இல்ல? அதை ஒ அக்கா தரலையே…” என்று மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு மாப்பிள்ளை முறுக்குக் காட்டினான்.

தொண்டை குழி விக்கிக் கொண்டது போல அதிர்ந்து விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள் அங்கை.

முகத்தில் மாப்பிள்ளை முறுக்கை காட்டினாலும், கண்கள் அவளைக் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்ததைக் கண்டவள், அவஸ்தையுடன் எச்சிலை கூட்டி விழுங்கினாள்.

“சொல்லி போடு அக்கா. அப்புறமேட்டுக்கு மாப்ள மருவாதை கொடுக்கலைண்டு பஞ்சாயத்து கூட்டிட போறாரு…” என்று தாமரை எடுத்துக் கொடுக்க,

“ஆமா, எம் மாமனுங்ககிட்ட தேன் மொத பஞ்சாயத்து…” என்றான் கண்களை உருட்டிக் கொண்டு.

அவன் தன்னைச் சீண்டுவது புரிந்து மனம் சிணுங்கினாலும், ஒரு வேளை விளையாட்டாகக் கூட அவன் தன் தந்தையிடம் சொல்லிவிட்டால் கூட, தந்தை தன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார் என்று தெரியும்.

அதனால், “பதினி குடிங்க மச்சான்…” என்று மென்மையாகச் சொன்னாள்.

அவளின் குரலில் இருந்த மென்மையை ரசித்துக் கொண்டே, அவள் கையில் இருந்த சொம்பை வாங்கிக் கொண்டான்.

அதற்காகவே காத்திருந்தது போல், அவன் கையில் கொடுத்து விட்டு வேகமாக அடுப்பங்கரைக்குள் புகுந்து கொண்டாள் அங்கையற்கரசி.

அப்போது வெளியே சென்றிருந்த முத்துப் பாண்டியும், துரைப் பாண்டியும் வந்து விட, தாமரையும் உள்ளே சென்றுவிட்டாள்.

“வாய்யா மாப்ள. வந்து ரொம்ப நேரமாச்சா? தோப்பு வரைக்கும் போயிருந்தோம்…” என்றார் முத்துப் பாண்டி.

“செத்த நேரத்துக்கு முன்ன தேன் வந்தேன் மாமா. அம்மா ஒரு சேதி சொல்லி விட்டாக. அதான், சொல்லிப் போட்டு போவலாமுண்டு வந்தேன்…” என்றான்.

“என்ன சொல்லிவிட்டா எந்-தங்கச்சி?” என்று விசாரித்தார்.

சட்டை பையில் இருந்து ஒரு மடித்த காகிதத்தை எடுத்து அவர் புறம் நீட்டியவன், “இதுல பத்திரிகைல அடிக்க வேண்டியது எழுதி இருக்கு மாமா. இது சரியா இருக்கா-ண்டு பார்த்துச் சொல்லுவீகளாம். எதுவும் விட்டுப் போயிருந்தா சரி பண்ணிட்டுப் பத்திரிகை அடிக்கக் கொடுக்கலாமுண்டு அம்மா சொல்லி விட்டுச்சு…” என்றான்.

வாங்கிப் பார்த்தவர், தம்பியிடமும் ஒரு முறை பார்க்க சொன்னார்.

“அம்புட்டும் சரியா இருக்கு அண்ணே…” என்று துரைப் பாண்டி சொன்னதும்,

“அப்புறம் என்னய்யா… ஆத்தாக்கிட்ட சொல்லிடு. பத்திரிகை அடிக்க எப்போ கொடுக்கணுமுண்டு வள்ளி சொல்லி விட்டாளா?” என்று கேட்டார்.

“அதுக்குத் தேன் நா மருத வரை இன்னைக்குப் போறேன் மாமா. போய்ப் பத்திரிகை மாடல் வாங்கியாறேன். அதைப் பார்த்துட்டு அச்சடிக்கக் கொடுத்துப்புடலாம்…” என்றான்.

“சரிய்யா. படிச்ச புள்ள நீரு. அம்புட்டும் சரியா செய்துடுவீர்…” என்றார் முத்துப் பாண்டி.

“சரி மாமா. அப்போ நான் கிளம்புறேன்…” என்று விடைபெற்று வெளியே வந்தான்.

விவசாயப் பிரிவில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தந்தையுடன் சேர்ந்து விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தான் திருநாவுக்கரசு.

அங்கையற்கரசி, தாமரையும் கூட இளங்கலை படிப்பை மட்டும் முடித்திருந்தனர். பெண்களைப் படிக்க வைத்தாலும், வேலைக்கு அனுப்புவதில் எல்லாம் விருப்பம் இல்லாத அவர்களின் தந்தைமார்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு வீட்டில் தான் இருந்தனர்.

அங்கைக்குத் திருமணம் முடிந்ததும், தாமரைக்கும் வரன் பார்த்து முடிக்க முடிவு செய்திருந்தனர்.

முத்துப் பாண்டியும், துரைப் பாண்டியும் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் தான். தென்னை, வாழை பருவ பயிர்கள் என்று தங்கள் உழைப்பை குறைவில்லாமல் கொடுப்பவர்கள்.

தங்கள் பெண்கள் விஷயத்தில் பாசம் எவ்வளவோ அதே அளவு கண்டிப்பையும் காட்ட கூடியவர்கள்.

ஊர் ஒரு சொல் எதுவும் தவறாகச் சொல்லும் படி நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்லி தான் வளர்த்தனர்.

தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டே இரு பெண்களும் வளர்ந்தனர்.

திருநாவுக்கரசு, அங்கையற்கரசி திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்க, திருமண வேலைகள் துரிதமாகவே நடந்து கொண்டிருந்தது.

மாமன் வீட்டில் இருந்து வெளியே வந்த திருநாவுக்கரசு, தான் நிற்க சொன்ன அதிவீரன் அங்கே இல்லாததால், கடைக்குச் சென்றிருப்பான் என்ற எண்ணத்துடன் அங்கே கிளம்பினான்.

விவசாயப் படிப்பை முடித்தாலும் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்ய நாட்டம் இல்லாமல், அவரின் அத்தனை பேச்சையும் வாங்கிக் கொண்டு, எனக்குப் பிடித்ததைத் தான் செய்வேன் என்று மதுரை செல்லும் வழியில் இருந்த சாலையில் ஒரு செல்போன் கடை வைத்திருந்தான் அதிவீரன்.

மதுரையில் இருந்து பத்துக் கிலோ மீட்டர் தள்ளி இருந்தது அந்தக் கிராமம். தங்கள் ஊருக்கு வெளியே நான்கு ஊர்களை இணைக்கும் சாலையில் தான் இருந்தது அதிவீரனின் கடை.

சிம் கார்ட், விலை குறைந்த கைபேசி, அதற்கான உறைகள், இன்னும் சில பல எலக்ட்ரானிக் பொருட்கள் என்று வாங்கித் தன் கடையை நிரப்பியிருந்தான்.

நான்கு ஊர்களை இணைக்கும், பேருந்து நிறுத்தம் அருகே கடை இருந்ததால் வியாபாரம் தொய்வில்லாமலே நடந்து கொண்டிருந்தது.

கிராமத்திலும் கைபேசியின் பயன்பாடு பெருகி விட்டதால், கடை தேடி வந்து கேட்பவர்களுக்கு அவர்கள் விருப்பம் போல் தன் கடையில் இல்லை என்றாலும், வாங்கி வந்து விற்பனை செய்வான். அதனால் அவன் கடை அங்கே பிரசித்தி பெற்றே இருந்தது.

ஆனாலும், தினமும் அந்தக் கடையை ஆரம்பித்தற்காக அவனின் தந்தை கருப்பண்ணன் மகனை திட்டாத நாள் இல்லை.

படிப்பை முடித்து விட்டு மகன் தன்னுடன் வந்து விவசாயம் செய்ய வருவான் என்று காத்திருக்க, அவர் ஆசையில் மண் அள்ளி போட்டுவிட்டு அல்லவா அந்தக் கடையை ஆரம்பித்தான்.

தனக்குப் பிடித்தது என்று முடிவு எடுத்துவிட்டால், தந்தையின் பேச்சோ, தாயின் பேச்சோ அவன் காதில் ஏறவே செய்யாது.

சிலம்பம் கற்றுக் கொடுப்பதும் அப்படித்தான். சிலம்பம் கற்றுக் கொடுக்கப் பெரிதாகப் பணமும் வாங்கிக் கொள்வதில்லை. அவன் வாங்கும் சொற்ப பணத்தை மீறி, தனக்குத் தெரிந்த ஒரு கலையைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஆசைக்காக மட்டுமே செய்து கொண்டிருந்தான்.

அதனாலேயே மதுரையில் இருந்து வந்து கூட அவனிடம் சிலம்பம் கற்றுச் செல்பவர்களும் உண்டு.

ஊர் கோவில் திருவிழாவின் போது, அவனின் குழுவில் இருந்து சிலம்பாட்ட போட்டியும் நடக்கும். அதிலும் அவன் கலந்து கொள்வதுடன், தன்னிடம் பயின்ற மாணவர்களையும் இறக்குவான்.

அதிவீரன் சிலம்பாட்டம் குழுவிற்கு அந்தப் பகுதியில் தனிப் பெயரே இருந்தது.

தான் நினைத்ததையே செய்து, தன் விருப்பத்தையே நடத்தி பழகியவனுக்கு விழுந்த முதல் அடி தான், தான் விரும்பியவள் கிடைக்காமல் போனது.

அங்கையைத் தன் மனைவியாக்கி கொள்ள மலையளவு ஆசை இருந்தாலும், அதைச் செயல்படுத்த முடியாமல் கையாலாகாமல் இருப்பது தான் அவனை அடித்து வீழ்த்திக் கொண்டிருந்தது.

முதல் எதிர்ப்பு அவனின் பெற்றோர். கருப்பண்ணன் விரோதி வீட்டு படி ஏறி பெண் கேட்க மாட்டேன் என்று உறுதியாக நின்றுவிட்டார்.

அடுத்தது, அங்கைக்கு வெளியே இல்லாமல் சொந்தத்தில் மாப்பிள்ளை பேசியது. அந்த மாப்பிள்ளையும் அவனின் நண்பனாகிப் போனது. அதிலும் அவர்களுக்குச் சின்ன வயதில் இருந்தே திருமணம் பேசி வைத்திருக்க, திடீரென இவன் உள்ளே இறங்க முடியவில்லை.

தன் காதலுக்குத் தான் காதலிப்பவளே முட்டுக் கட்டையாக இருந்தாலும், ஏதாவது சந்தர்ப்பம் வாய்க்காதா, அவளைத் தன்னிடம் கொண்டு வர… என்று மீனிற்குக் காத்திருக்கும் கொக்கு போலக் காத்திருக்கவே செய்தான்.

அவன் மனதை பற்றி அறியாமல் அவனின் கடைக்குள் நுழைந்தான் திருநாவுக்கரசு. அவன் கூடவே சுப்புவும் வந்தான்.

“என்னா மாப்ள, நாந்தேன் காத்திருக்கச் சொன்னேன்ல? என்னைய விட்டுப்புட்டு வந்துட்ட…” என்று கேட்டுக் கொண்டே வந்தான் திருநாவுக்கரசு.

ஒரு கைபேசியை எடுத்து அதை ஏதோ செய்து கொண்டே, “நீ உம் மாமன் வூட்டுல விருந்தாடிட்டு வருவ. அதுவரைக்கும் என்னைய காவ காத்துக்கிட்டு நிக்கச் சொல்றியா?” என்று அவன் முகம் பார்க்காமல் கேட்டான்.

“போடா இவனே. மாமன் வூட்டுல கல்யாணம் வரை விருந்தாட கூடாதுண்டு ஏ ஆத்தா சொல்லிடுச்சு. சும்மா பேசிட்டு தேன் வர்றேன்…” என்றான் திருநாவுக்கரசு.

“நீ என்னடா மாப்ள இவென் கூட?” திருவின் பேச்சை காற்றில் விட்டுவிட்டுச் சுப்புவிடம் கேட்டான் அதிவீரன்.

“திரு மருத வரை போறானாம்டா. எனக்கும் மருதல ஒரு சோலி கிடக்கு. அதான் அவென் கூடவே போய் முடிச்சுட்டு வரலாமுண்டு கிளம்பிட்டேன்…” என்றான் சுப்பு.

“நீயும் மருத வாறீயா மாப்ள? நாம போயிட்டு சோலி முடிஞ்சதும் ஒரு சினிமா பார்த்துட்டு வரலாம்…” என்று திரு அழைக்க,

அவனை முறைத்துப் பார்த்தவன், “நான் என்ன உன்னைய போல வூரு சுத்தற பொழப்பையா பார்க்குறேன்? கடையை விட்டுப்புட்டு எல்லாம் என்னால எங்கனயும் வர முடியாது…” என்றான் சிடுசிடுப்பாக.

“இப்ப நான் என்னத்தைக் கேட்டுப்புட்டே-ண்டு இப்படிச் சுட்டெரிக்கிறவன்? கடையை இந்த மாறா பயகிட்ட விட்டுப்போட்டு வர வேண்டியது தானே? நாமளும் வூரு சுத்தி ரொம்ப நாளாச்சு. எங்-கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவை நாம எல்லாம் செட்டா போயிட்டு வரலாமுண்டு தேன் கூப்பிட்டேன்…” என்றான் திரு.

“மாறனை மட்டும் கடையில் விட்டுப்புட்டு வர முடியாது…” என்று தன்னிடம் வேலை செய்யும் பையனை சுட்டிக் காட்டி சொன்னவன், “உங்-கல்யாணத்துக்காக நாம செட்டு போட்டு சுத்த எல்லாம் எனக்கு நேரம் இல்லடே. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க…” என்றான் விட்டேத்தியாக.

“இவென் என்னடா பச்சமிளகாய வாய்க்குள்ள அதக்கி கிட்டு இருக்கிறவனாட்டமே கொஞ்ச நாளா சுத்துறயான். இவனுக்கு என்ன வந்துருச்சு?” என்று சுப்புவிடம் திருக் கேட்க,

“அவனுக்குப் பேய் பிடிச்சிக்கிச்சுடா. அதுதேன் அப்படி இருக்கிறயான். நீ கண்டுக்காத…” என்று சுப்பு கடுப்பாகச் சொல்ல, அவனை உக்கிரமாக முறைத்துப் பார்த்தான் அதிவீரன்.

“பேயா? என்னடா சொல்றவன்?” குழப்பத்துடன் கேட்டான் திரு.

“பேய் எனக்கு இல்ல மச்சி. அவனுக்குத் தேன் பிடிச்சிருக்கு. உச்சி முடியை கொத்தா பிடிச்சி பேயோட்டுனா அம்புட்டு பேயும் அத்துக்கிட்டு ஓடிப் போயிடும்…” என்று அதிவீரன் நக்கலாகச் சொல்ல, இப்போது சுப்பு அவனை முறைத்தான்.

அவர்கள் பேச்சுப் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்த திரு, தனது கைபேசியை எடுத்து, “சரி மாப்ள, நீங்க ரெண்டு பேரும் பேசுறது எனக்கு ஒன்னும் அகப்படலை. எம் போனுக்குப் பணம் போடணும். ஒரு நூறு ரூபாய்க்கு போட்டு கொடு…” என்றான்.

அவன் கைபேசிக்கு ரிசார்ச் செய்தவன், அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கல்லாவில் போட்டு விட்டு, அப்போது கடைக்கு வந்தவர்களையும் கவனிக்க ஆரம்பித்தான்.

திருவும், சுப்புவும் அங்கிருந்த நாற்காலியில் ஓரமாக அமர்ந்திருக்க, கடைக்கு வந்தவர்கள் சென்றதும் நண்பர்கள் முன் வந்தான்.

“மருதக்கு என்ன சோலியாடா போறீக?” என்று பொதுவாகக் கேட்டான்.

“எனக்கு எங்க வயலுக்குக் கொஞ்சம் உரம் வாங்கணும் மாப்ள…” என்று சுப்பு சொல்ல,

“எங்-கல்யாணத்துக்குப் பத்திரிகை பார்க்க போறேன் மாப்ள…” என்றான் திரு.

அவன் சொன்னதைக் கேட்டதும் அதிவீரனின் கைகள் எஃகாய் இறுகிற்று.

முக மாற்றத்தை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டான்.

அவனின் நிலையைச் சுப்பு கண்டு கொண்டான்.

‘கிறுக்கு பய. ஆசை வைக்க ஆளே இல்லாதது போல, அந்தப் புள்ள மேல போய் ஆசை வச்சுப்புட்டானே’ என்று மானசீகமாக நண்பனை திட்டினான்.

அதிவீரனின் நிலையைப் பற்றி அறியாமல், திருத் தனது திருமண வேலைகளைப் பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தான்.

அவன் பேச்சை காது கொடுத்து கேட்க முடியாமல் தணலாய் தகித்துப் போனான் அதிவீரன்.

ஏதாவது செய்து இந்தத் திருமணத்தை நிறுத்தி விடும் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் பெருகியது.

திருவை வெறித்துப் பார்த்தவன் உதடுகள் மெல்ல அசைந்து அவனையும் மீறி அந்தக் கேள்வியைக் கேட்டது.

அவன் கேட்டதில் சுப்பு, “டேய்!” என்று பதற,

“என்னடா வீரா இப்படிக் கேட்குறவன்?” என்று அதிர்ந்து கேட்டான் திருநாவுக்கரசு.