என்னிதய தாள லயமாய் நீ – 3

அத்தியாயம் – 3

இரவு முழுவதும் சரியாகத் தூங்காததால், கண்கள் தீயாக எரிந்தன. ஆனால், அதை விட மனம் தீயாய் தகிக்க, கண் எரிச்சலை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை அதிவீரன்.

அதிகாலை ஐந்து மணி ஆகியிருந்தது. தங்கள் களத்து மேட்டில் படுத்திருந்தவன், எழுந்து நின்று சோம்பல் முறித்தான்.

நழுவிய வேஷ்டியை பிடித்து நன்றாக இழுத்துக் கட்டிக் கொண்டு, கயிற்றுக் கட்டிலை எடுத்து மோட்டார் அறைக்குள் போட்டுவிட்டு வெளியே வந்தான்.

அப்போது நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச ஆள் வர, கூடவே அவனின் தந்தை கருப்பண்ணனும் வந்து கொண்டிருந்தார்.

தந்தையைப் பார்த்ததும் முகத்தைச் சுருக்கியவன், அவர் வந்ததற்கு எதிர்திசையில் நடையைக் கட்டினான்.

மகனின் முகத்திருப்பலை கண்டாலும், கருப்பண்ணன் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவர் வந்த வேலையை வேலையாளிடம் சொல்ல ஆரம்பித்தார்.

விறுவிறுவென நடந்து சென்ற அதிவீரன், நேராக அவர்களின் நிலத்தைத் தாண்டியிருந்த, பொட்டல் காட்டில் இருந்த ஒரு குடிசையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

அந்தக் குடிசையை விட்டு வெளியே வந்த போது குளித்து வேறு உடைக்கு மாறியிருந்தான்.

சூரியன் மெல்ல கிழக்கில் செந்நிறத்தை வானத்தில் வண்ணம் தீட்ட ஆரம்பித்திருந்தது.

“வணக்கம் மாஸ்டர்…” என்றபடி அப்போது ஒருவன் வர,

“வாடே முருகா, காப்பித் தண்ணி வாங்கியாந்தியா?” என்று கேட்டான் அதிவீரன்.

“வாங்கியாந்துட்டேன் மாஸ்டர். செத்த பொறுங்க. லோட்டாவில் ஊத்தி எடுத்தாறேன்…” என்று அவனைத் தாண்டி குடிசைக்குள் சென்றான் முருகன்.

டீ கடையில் தூக்குவாளியில் வாங்கி வந்திருந்த காஃபியை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தான்.

அதை வாங்கிப் பருகிக் கொண்டே, சூரியக்கதிரின் ஒளிவீச்சை பார்த்தான்.

“என்னா மாஸ்டர், நேத்தைக்கு எல்லாம் ஒரே ஆட்டமாம். வூரே பேசுது…” என்று முருகன் நமட்டு சிரிப்புடன் கேட்க,

அவனைத் திரும்பி உக்கிரமாகப் பார்த்த அதிவீரனின் பார்வையில் கப்பென்று வாயை மூடிக் கொண்டான் முருகன்.

“என் வாயைப் புடுங்கவா காலங்காத்தால எழுந்து சலம்பிக்கிட்டு வந்தவன்? வந்த சோலியை பாருடா…” என்று அதட்டல் போட்டதும், பம்மிக் கொண்டு குடிசையில் சொருகியிருந்த ஒரு கம்பை உருவியவன், சிறிது தள்ளி சென்று, கம்பை சுழற்றி, மண்ணை ஒற்றி சலாம் வைத்தான்.

முருகன் கம்பை சுழற்ற ஆரம்பித்த போதே ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

வந்தவுடன் அதிவீரனுக்கு வணக்கம் சொல்லிவிட்டுக் கம்பை எடுத்து சுழற்ற ஆரம்பித்தனர்.

ஒவ்வொருவரும் கம்பை சுழற்றுவதையும் கவனித்துப் பார்த்தவன், “அடேய் பூவு, என்னடா கம்பு சுத்துறவன்? ஒழுங்கா சுத்துடா…” என்று அதட்டிய படி அந்தப் பூவு என்ற பூவரசன் அருகில் சென்று, அவனிடம் கம்பை வாங்கி எப்படிச் சுற்ற வேண்டும் என்று சுழற்றிக் காட்டினான்.

“மூனு மாசமா சுத்துறவன். ஆனா, இன்னும் ஒழுங்கா சுத்த படிக்கலை. அப்புறம் என்னா இதுக்குடா நீயெல்லாம் கம்பு சுத்த கிளம்பி வந்தவன்?” என்று வாய் அவனை அதட்டிக் கொண்டிருக்க, கைகளின் சூழற்சிக்கு ஏற்ப அவனின் கால்கள் சுழன்று வந்து கொண்டிருந்தன.

“மன்னிச்சுக்கோங்க மாஸ்டர். இந்தா சரியா சுத்துறேன்…” என்றான் அடக்கத்துடன்.

அவன் கையில் கம்பை கொடுத்துவிட்டு, தள்ளி நின்று அவன் சரியாகச் சுழற்றுக்கிறானா என்று பார்த்துவிட்டே நகர்ந்தான் அதிவீரன்.

காலையில் ஆறுமணியில் இருந்து, எட்டு மணிவரை சிலம்பம் கற்றுத் தருவதே அதிவீரனின் முதல் பணி. அதைச் சில வருடங்களாகச் செய்து கொண்டிருக்கிறான்.

சிலம்பமும், அவன் செய்யும் உடற்பயிற்சியும் அவனைக் கட்டுக் கோப்பாக வைத்திருந்தது.

மனம் அங்கையற்கரசியின் நினைவில் சஞ்சலத்தில் இருந்தாலும், ஒரு நாளும் தன் கடமையில் இருந்து தவறுவதே இல்லை.

நேற்றைய சுவடை கூட முகத்தில் காட்டாமல், அவனிடம் சிலம்பம் கற்ற வந்தவர்களுக்குச் சிரத்தையாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

எட்டு மணிக்கு வந்தவர்கள் எல்லாம் கிளம்ப, அவனும் அந்தக் குடிசை வீட்டை பூட்டிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினான்.

மகனை கண்டதும், காமாட்சி சாப்பாட்டை எடுத்து வைக்க ஆரம்பிக்க, அதிவீரன் கண்டு கொள்ளாமல் தனது அறைக்குள் செல்ல போனான்.

“எய்யா வீரா, சாப்பிட வாய்யா…” என்ற அன்னையின் குரலுக்கு அவரைத் திரும்பிப் பார்த்தவன்,

“வேணாம். நீயும், உம் புருஷனும், அந்தக் கிழவியும் வயிறார தின்னுங்க…” என்று வெறுப்பாகக் கூறினான்.

“ஒனக்கு என்ன கூறுகெட்டு போச்சுதா ராசா? ஏன் இப்படிப் பண்ணிப் போட்டு கிடக்குறவன்? ரெண்டு நாளா வூட்டுல சோறு தின்னலை. ரவைக்கு வூடு வந்து சேராம களத்து மேட்டுல கிடக்குறவன். இதெல்லாம் சரியில்லைப்பு…” என்று புலம்பிக் கொண்டே அங்கலாய்த்தார் காமாட்சி.

அன்னையைத் தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்தான் அதிவீரன்.

“என்ன பார்வைப்பு? ஒனக்கு பிடிச்ச கறி சோறு பொங்கியிருக்கேன். தட்டுல போட்டு எடுத்தாறேன் தின்றியாப்பு?” என்று கேட்டவருக்குப் பதில் என்னவோ மௌனத்தையே கொடுத்தான்.

“ஆத்தி! எம் புள்ள, நான் பெத்தெடுத்த ராசா எங்கையால சோறு உங்க மாட்டிங்கிறானே! இதைக் கேட்க நாதியில்லையா?” என்று மகனின் பிடிவாதத்தைப் பார்த்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.

“இந்தா, கத்தாம கிடடி. அவென் மண்ட கனம் பிடிச்சுப் போய்க் கிடக்கியான். அவெனை என்னாத்துக்குத் தாங்குறவ? வவுறு காந்துனா தன்னால வந்து தின்னப் போறான். ஒப்பாரி வைக்காம போயி சோத்தை போட்டுக் கொண்டா. சோலி கிடக்கு…” என்று வீட்டின் பின் பக்கம் இருந்து கையையும், காலையும் கழுவி விட்டு, ஈரத்தை துண்டால் துடைத்துக் கொண்டே வந்த கருப்பண்ணன் மனைவியை அதட்டிய படி சாப்பிட அமர்ந்தார்.

“புள்ள ரெண்டு நாளா எங்கையால உங்க மாட்டிங்கிறான். அத என்னண்டு கேட்க மாட்டீங்கிரீரு. நீர் மட்டும் நேரா நேரத்துக்குக் கொட்டிக்கிரீரு…” என்று மெல்லிய குரலில் புலம்பிக் கொண்டே உணவை எடுத்து வைத்தார் காமாட்சி.

“நீ பொலம்புறது காதுல விழுதுடி. அவென் தெனவெடுத்துப் போய் உங்காம கிடந்தா, நானும் வவுத்துல ஈரத்துணியா கட்டிக்கிட முடியும்?” என்று மனைவியை அதட்டினார்.

அன்னையும், தந்தையும் பேசியது காதிலேயே விழாதது போல், தன் அறைக்குள் சென்று கட்டிலில் மல்லாந்து படுத்தான் அதிவீரன்.

தன் வீட்டினர் மீது அவனுக்கு மலையளவு கோபம் இருந்தது. அங்கையைத் தனக்குப் பிடித்திருக்கிறது. பெண் கேளுங்கள் என்று சொன்ன பிறகும், பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு மறுத்துவிட்டனர்.

எவ்வளவோ பேசிப் பார்த்தும், அவனின் அப்பாவோ, அம்மாவோ சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.

இப்போது அங்கைக்கு நிச்சயமே முடிந்து விட, வீட்டினரை அறவே வெறுத்தான்.

தனக்கு இருக்கும் கோபத்தை அவர்களிடம் காட்ட, வீட்டில் சாப்பிடுவதையே இந்த இரண்டு நாட்களாகத் தவிர்த்து வந்தான்.

அப்படி இருந்தும் கூட அவனின் தந்தை, அவனின் கோபத்தைப் பொருட்படுத்தவில்லை என்பது தான் அவனுக்கு வெறுப்பாக இருந்தது.

அந்த வெறுப்புடன் அவன் படுத்திருக்க, “ஏன் ராசா, உமக்கு என்னாச்சு? ஏன் இப்படிக் கிடக்குறவன்? ஒ ஆத்தா ஆக்குன சோறு புடிக்கலையா? அதுதேன் வூட்டுல சோறு திங்க மாட்டிங்கிறயோ?” என்று கேட்டபடி அறைக்குள் வந்தார் அவனின் அப்பத்தா.

“இந்தா கிழவி, மருவாதையா போயிரு. இருக்குற கடுப்புக்கு நல்லா பேசிப் போடுவேன்…” என்று தலையை நிமிர்த்திக் கூடப் பார்க்காமல் கடுப்பாகக் கத்தினான்.

“ஏன் ராசா, வைய்யிற? கட சாப்பாடு வவுத்துக்குச் சேராம போவ போவுதுயா. வூட்டுல ஒரு வாய் தின்னு…” என்று கெஞ்சலாகச் சொன்னார்.

“ம்ப்ச்…” என்று சலிப்பாக உச்சுக் கொட்டியவன் எழுந்து கட்டிலில் அமர்ந்தான்.

“இங்கன வா கிழவி…” என்று கதவருகில் நின்றிருந்தவரை அழைத்தான்.

“என்னா ராசா?” பேரன் அழைக்கவும் குமரிப்பெண் போல் வேகமாக வந்தார் பேச்சியம்மாள்.

“இங்கன உட்காரு…” என்று கட்டிலை தட்டிக் காட்ட, அவரும் பேரன் சொல்கிறானே என்று ஆசையாக அமர்ந்தார்.

“ஏன் கிழவி, எதுத்த வூட்டுக்கும், நம்ம வூட்டுக்கும் அப்படி என்ன பகை? உம் புருசன் உசுருரோட இருக்கும் போது எதுக்கு அவைய்ங்க கூடச் சண்டை போட்டாரு?” என்று கேட்டான்.

“இத கேட்கவா ராசா கூப்பிட்ட?” என்று காத்து போன பலூனாகப் பேரனை பார்த்தார்.

“பின்ன உங்கூட ஆடுபுலி ஆட்டம் ஆடவா கூப்பிட்டேன்? நா கேட்டதுக்குப் பதிலைச் சொல்லு கிழவி…” என்றான்.

“அதை ஏன் ராசா கேட்குற? அது பெரிய பஞ்சாயத்து…” என்று பெருமூச்சு விட்டார்.

“அந்தப் பஞ்சாயத்துத்தேன் என்னண்டு கேக்குறேன்…” என்று கடுப்பாகக் கேட்டான்.

“அது வந்து ராசா…” என்று அவர் இழுக்க, அவனின் முறைப்புக் கூடியது.

இதற்கு மேல் சொல்லாமல் இருந்தால் பேரன் தன்னை ஒரு வழி ஆக்கிவிடுவான் என்று புரிந்தவர், சொல்ல ஆரம்பித்தார்.

“அது வந்து ராசா. நான் தினத்துக்கும் வாச தெளிச்சுக் கோலம் போடுவேனா…” என்று கதை சொல்வது போல் அவர் இழுக்க,

“நீ கோலம் போட்ட கதையவா கேட்டேன்? சண்டை போட்ட காரணத்த சொல்லு…” பொறுமை இல்லாமல் சிடுசிடுத்தான்.

“அதைத்தேன் ராசா சொல்லுதேன். தினத்துக்கும் வாச தெளிப்பேனா… அப்ப ஒரு நாளு எதுத்த வூட்டுக்காரி, அதுதேன் அந்தப் பாண்டியனுங்களோட ஆத்தா எங்-கூடச் சண்டைக்கு வந்துட்டா…” என்றார்.

“ஏன், ஒ வூட்டு வாசலுல தானே தண்ணி தெளிச்ச. அதுக்கு என்னாத்துக்குச் சண்டைக்கு வந்தாக?” பேச்சியம்மாளை சந்தேகமாகப் பார்த்த படி கேட்டான்.

“நான் தெளிச்ச தண்ணி அவ வூட்டு வாச வரை போயிருச்சாம். அதுக்குச் சண்டைக்கு வந்துட்டா பாதகத்தி. என்னா பேச்சுப் பேசுனா தெரியுமா?”

“நீ பதிலுக்குப் பேசாமயா இருந்த?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.

அதில் பேச்சியம்மாள் பேரன் தனக்கு ஆதரவாகக் கோபம் கொள்கிறான் என்று நினைத்து மகிழ்ந்து போனார்.

“சும்மா விடுவேனா? வேணுமுண்டே இன்னும் அவ வாசலுல தண்ணிய ஊத்தி வுட்டுப்போட்டேன். நல்லா நாக்க புடுங்கிக்கிட்டு சாவுற போலப் பேசி வுட்டுப்போட்டேன்ல. நா யாரு பேச்சியம்மாளாக்கும்…” என்று பெருமையாகச் சொன்னார்.

அப்போது பேரன் அவரைப் பார்த்த பார்வையை மட்டும் கண்டிருந்தால் அதோடு பேச்சை நிறுத்தியிருப்பார்.

ஆனால், அவர் தன்னுடைய பழைய வீர தீர பிரதாபங்களைச் சொல்வதில் முனைப்பாக இருந்தவர், பேரனின் பார்வையைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்.

“ஆனா, அவ விடாம ரொம்பப் பேசினா. என்னைய வைஞ்சதும் உம் தாத்தனுக்கு வந்ததே கோபம். வீச்சருவாள தூக்கிட்டு அவள வெட்டப் போயிட்டாரு. உடனே அவ புருசன் அருவாள தூக்கிட்டு என்னைய வெட்ட வந்துட்டான். அப்படியே ரொம்பக் கைகலப்பு ஆகிப்போச்சுது. அதுல இருந்து அந்த வூட்டு ஆளுக மூஞ்சில முழிக்கறது கூட இல்லையே…” என்று பெருமையாகச் சொல்லிவிட்டு பேரனின் முகத்தைப் பார்த்தவர், கப்பென்று வாயை மூடிக் கொண்டிருந்தார்.

அதிவீரன் அய்யனார் போலல்லவா உக்கிரமாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன் ராசா?” மென்று முழுங்கி கேட்டார்.

“உம் மண்டைய ஒடைக்கவா, இல்ல கழுத்த அறுத்துப் போடவாண்டு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். வாச தெளிச்சாகளாம். அருவால எடுத்துட்டு வெட்ட போனாகளாம். உன்னைய எல்லாம் அந்த எதுத்த வூட்டு கிழடு ஏன் வெட்டாம வுட்டுச்சுண்டு இப்ப யோசிக்கிறேன்…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு வார்த்தையைத் துப்பியவன் விட்டால் அடித்து விடுபவன் போல் பார்த்தான்.

பேரனின் பார்வையில் மிரண்டு கட்டிலை விட்டு வேகமாக இறங்கினார் பேச்சியம்மாள்.

“என்ன ராசா எம் மேல கோபப்படுறவன்? அவுக என்னைய வெட்டுனா உமக்குச் சந்தோசமா ராசா?” என்று அப்பாவி போல் கேட்டு வைத்தார்.

“பின்ன உம்மால தானே இப்ப நா இப்படித் தவிச்சுப் போய்க் கிடக்கேன். இல்லனா எங்-குயில வூடு புகுந்து பொண்ணு கேட்டுருப்பேன்ல? நீயும் உம் புருஷனும் ஆடி சண்டை போட்டா அதோட விட வேண்டியது தானே? உங்க சண்டையை ஏ அப்பனும் இன்னும் ஏன் பிடிச்சு தொங்கிக்கிட்டு கிடக்காரு?” என்று கோபமாகக் கேட்டான்.

“அப்பன், ஆத்தாளுக்கு ஒன்னுனா எம்புள்ள கேட்க மாட்டானா ராசா? எம் புள்ளக்கு எம் மேல எம்புட்டுப் பாசம் தெரியுமா? என்னைய வெட்ட வந்தாய்ங்கண்டு எம் புள்ளயும் அருவாள தூக்கிட்டான்ல. பதிலுக்கு, அந்தப் பாண்டிய பயலுகளும் அரிவாள தூக்கி பெரிய சண்டையாகி போச்சுது. அப்புறமும் ஒன்னுமண்ணா பழக முடியுமா? அப்படிப் பழகத் தேன் நம்ம பரம்பரை என்ன சூடு, சொரணை இல்லாததா?” என்று கையை நீட்டி முழங்கி அவர் பேச,

“ஆமா, அப்படியே உம் பரம்பரை ராச பரம்பரை. சூடு, சொரணை வேணுந்தேன்…” என்று கடுப்புடன் நொடித்துக் கொண்டான் அதிவீரன்.

“என்ன ராசா இப்படிச் சொல்றவன்?” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்டார்.

“ஒழுங்கு மருவாதையா இங்கன இருந்து போயிடு. எனக்கு இருக்குற ஆத்திரத்துக்கு இன்னைக்கு நீ சுடுகாட்டுலதேன் தூங்கணும்…” என்று பல்லை கடித்துக் கொண்டு வார்த்தைகளைத் துப்பினான்.

அவனைப் பேச்சியம்மாள் அரண்டு போய்ப் பார்க்க, அவரைப் பார்க்க பிடிக்காதவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“எய்யா, ராசா… சாப்பாடு…” என்று அப்போதும் அவர் தயக்கத்துடன் இழுக்க, விருட்டென்று படுக்கையிலிருந்து எழுந்தவன், அவரைத் தாண்டி வெளியேறினான்.

“வீரா… சோத்தை தின்னுட்டு போய்யா…” என்ற காமாட்சி குரலையும் அலட்சியம் செய்து வீட்டிலிருந்தும் வெளியேறினான்.

வெளியே இருந்த தன் இருசக்கர வாகனத்தை எடுக்கும் முன், அவனின் பார்வை எதிர் வீட்டை நோக்கிச் சென்றது.

வெளியே யாரின் நடமாட்டமும் இல்லாமல் இருக்க, இரு பெண்களின் பேச்சொலியுடன், சிரிப்பொலியும் சேர்ந்தே கேட்டது.

அதிலும் அங்கையற்கரசியின் சிரிப்பொலி தனியாகக் கேட்க, கண்களை இறுக மூடி சில நொடிகள் அப்படியே நின்றான்.

அவளின் சிரிப்பொலி ஒரு பக்கம் மகிழ்ச்சியையும், இன்னொரு பக்கம் வருத்தத்தையும் சேர்த்தே தந்தது.

அவளைச் சேர முடியவில்லையே என்று அவனின் ஒவ்வொரு அணுவும் துடிக்க, அவள் இன்னொருவருடன் சேர போவதை எண்ணி மகிழ்ந்திருக்கிறாள் என்பதை நினைக்கும் போதே மனம் இரணமாக வலித்தது.

“ஏன் குயிலம்மா எம் மனசு உனக்குப் புரியாம போச்சுது?” என்று மானசீகமாகக் கேட்டுக் கொண்டான்.

அவன் கேள்வி கேட்காத தூரத்தில் அவள் மனம் சிக்கியிருந்ததை அந்த ஆண்மகன் அறியாமல் போனான்.

தொடர்ந்து அவளின் சிரிப்பொலியை கேட்க முடியாமல், மனம் துடியாய் துடிக்க, விருட்டென்று பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து பறந்தான்.

அப்போது எதிரே தனது பைக்கில் வந்த திருநாவுக்கரசு, “டேய் வீரா, நில்லுடே…” என்று கத்தி நிறுத்த வைத்தான்.

அவனைக் கண்டதும் எரிச்சல் மண்டினாலும், பைக்கை நிறுத்திவிட்டு, “என்னடா திரு, என்ன இங்கிட்டு சுத்துறவன்?” என்று கேட்டான்.

“எம் மாமன் கிட்ட ஒரு விசயம் சொல்ல சொல்லி ஏ அம்மா சொல்லி விட்டுச்சுடா. அதைச் சொல்லிப்போட்டு போகலாமுண்டு வந்தேன். ஆமா, நீ எங்க கடைக்குக் கிளம்பிட்டியா?” என்றான் திருநாவுக்கரசு.

“ஆமாடா, பத்து மணிக்கு கடையைத் திறக்கணும். இப்ப போனாத்தேன் சரியா இருக்கும்…” என்றான்.

“அப்ப செத்த நேரம் பொறுடே. நானும் வந்துடுறேன். உங்கடையில எனக்கும் ஒரு சோலி இருக்கு. நானும் வர்றேன். இப்படி வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி வைய்யி. நா போய் எம் மாமன பார்த்துப் போட்டு வாறேன். அப்படியே எம் மாமன் பெத்த மவளையும்…” என்று கண்களைச் சிமிட்டி சொல்லிவிட்டுச் சென்றான்.

சென்றவனைத் திரும்பிப் பார்த்து வெறித்துப் பார்த்தான் அதிவீரன்.

தன் இழப்பின் வலி கூடிக் கொண்டே போவதும், அதைப் பொறுத்துக் கொண்டு தான் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதும், அவனின் ஒவ்வொரு அணுக்களையும் அக்கினியாய் தகிக்க வைக்க, திருநாவுக்கரசு காத்திருக்கச் சொன்னதைப் புறக்கணித்து விட்டு, விருட்டென்று வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியே விட்டான் அதிவீரன்.