என்னிதய தாள லயமாய் நீ – 2

அத்தியாயம் – 2

“டேய், என்னடே சொல்றவன்?” சுப்பு அதிர்ச்சியாகக் கேட்க,

“நெசத்தைச் சொல்லுறேன்…” அலட்டிக் கொள்ளாமல் சொன்னான் அதிவீரன்.

“அது நம்ம கூட்டாளிக்கு நிச்சியம் முடிச்ச பொண்ணுடா…”

“நீ சொல்லலைண்டா எனக்குத் தெரியாது பாரு? அவளுக்கு நிச்சியம் முடிஞ்சி போச்சுதுண்டு தானே அந்தக் குத்தாட்டம் போட்டேன்…”

“ஒனக்கு என்னமோ ஆகிப்போச்சுடா. அந்தப் புள்ளய மனசுக்குப் புடிச்சுருக்குண்டு சொல்றவன், அது நிச்சியத்துக்குக் குத்தாட்டம் போட்டே-ண்டு சொல்ற? உம்ம நெனப்புத்தேன் என்னடே?”

“என் நெனப்பு அம்புட்டும் அவ மட்டுந்தேன் இருக்காண்டு சொன்னா நீ நம்பவா போற?”

“நம்புற மாதிரி காரியம் இல்லையேடா நீ செத்த நேரத்துக்கு முந்தி பண்ணினது…”

“நம்பு மாப்ள, நம்பு!”

“அப்புறம் என்னாத்துக்குடா குத்தாட்டம்?”

“அது சந்தோச குத்தாட்டமுண்டு நெனைச்சியோ? இல்லைடே இல்ல. எனக்குள்ளார குத்தி கொடையுது பாரு ஒரு வலி! அந்த வலி தாங்க மாட்டாம போட்ட ஆட்டம்டா அது…” என்றவன் குரலிலும் வலி அப்பட்டமாகப் பிரதிபலித்தது.

அவனின் வலி சுப்புவிற்கும் புரிந்தது.

“டேய் மாப்ள, அம்புட்டு அந்தப் புள்ள மேல லவுசாடா?” வியந்து கேட்டான்.

‘ஆமாம்’ என்று மௌனமாகத் தலையை அசைத்தான் அதிவீரன்.

“எப்படிடா? இம்புட்டு வருசமா உங்கூடவே சுத்திக்கிட்டுக் கிடக்கேன். உம் மனசுல இப்படி ஒரு நெனப்பு இருக்குண்டு எனக்குக் கூடத் தெரியலையேடா?” தலையைக் குலுக்கிக் கொண்டு கேட்டான் சுப்பு.

“எப்படித் தெரியும்? நா காட்டாம ஒனக்கு எப்படித் தெரியும்?” என்று அதிவீரன் கேட்க,

“எங்கிட்ட காட்டாட்டி கூடப் போவுது. ஆனா, அந்தப் புள்ளக்கிட்ட காட்டியிருந்தா இப்ப அவளுக்கு நிச்சியம் முடிஞ்சிருக்காதேடா?” என்று கேட்டான் சுப்பு.

“அந்தப் புள்ளகிட்ட காட்டலைண்டு உங்கிட்ட சொன்னேனா?” என்று கேட்டவனை, மீண்டும் வாயைப் பிளந்து பார்த்தான் சுப்பு.

“என்னடே சொல்றவன்? அந்தப் புள்ளகிட்டயும் சொல்லிட்டியா? அப்புறமும் எப்படிடா? ஒருவேளை ஒங்க ரெண்டு வூட்டுக்கும் பகைண்டு அந்தப் புள்ள சம்மதிக்கலையோ?”

“அப்படிச் சொல்லியிருந்தா கூட ஒ வூட்டுக்கு வந்து நானே பேசி உம் அப்பனை கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்கிறேண்டு சொல்லியிருப்பேனே?”

“ஓ, அப்புறம் என்ன சொல்லுச்சு?”

“அவளுக்குத் திருவை பிடிச்சுருக்காம். பிடிச்சவன் கூடத்தேன் வாழுவாளாம்…” என்று கசந்த குரலில் சொன்னான் அதிவீரன்.

“ஓ!” என்ற சுப்புவிற்கு என்ன சொல்வதென்றே சில நொடிகள் தெரியவில்லை.

“சரி விடுடா. உம் மனசு அந்தப் புள்ளக்கு புரியாம போச்சுது. உன்னைய புரிஞ்சவ ஒருத்தி வருவா. அவளைக் கட்டிக்கிட்டு நல்லா வாழு…” என்று நண்பனுக்கு ஆறுதல் சொன்னான்.

“என்னைய புரிஞ்சவளா? எம் மனசுக்கு புடுச்சவ தேன் என்னைய புரிஞ்சவளா இருக்க முடியும்…” என்றான் அழுத்தமாக.

“டேய்?” என்று அவன் மீண்டும் அதிர,

“அவளுக்குப் பிடிக்கலைண்டு சொன்னதும் அப்படியே விட்டுப்புடுவேண்டு நெனைச்சியோ? விட மாட்டேன்டா. எனக்கு அவ தேன் பொஞ்சாதி. அதை அவளே நெனைச்சா கூட மாத்த முடியாது…” என்றவன் மீசையை முறுக்கிக் கொண்டான்.

“அவளுக்கு நிச்சியம் முடிஞ்சி போச்சுடா. அது உம் நெனைப்புல இருக்கா இல்லையா?” சுப்பு அதிர்வாகக் கேட்க,

“நிச்சியம் தானே முடிஞ்சிருக்கு. கல்யாணம் இல்லையே?” அசட்டையாகக் கேட்டான்.

“டேய் மாப்ள… என்னடா பண்ண போறவன்?” திகைப்புடன் கேட்டான்.

“செய்து காட்டுறேன் மாப்ள. அப்ப தெரிஞ்சிக்கோ…” என்று அசால்டாகக் கூறியவனைப் பார்த்து சுப்புவிற்கு இப்போது பயம் வந்தது.

“நம்ம கூட்டாளியும் இதுல இருக்கான்டா. அவனைப் பத்தி யோசிச்சியா?” பொறுக்க மாட்டாமல் கேட்டான்.

“அவ விசயத்துல என் அப்பன், ஆத்தாளே குறுக்க வந்தாலும் நா சும்மா இருக்க மாட்டேன்டா…” என்றான் தீர்க்கமாக.

“இப்படிச் சொல்றவன் அந்தப் புள்ளக்கு நிச்சியம் முடியுறதுக்கு முந்தி ஏதாவது செய்துருக்க வேண்டியது தானேடா?”

“செய்யலைண்டு நினைச்சியா? ஏ அப்பன் ஆத்தாக்கிட்ட சொன்னேன். போயி பொண்ணு கேளுங்கண்டு. ஆனா, அவுகளுக்கு எந்-தாத்தன் உசுரோட இருந்தப்ப நடந்த சமாச்சாரந்தேன் பெருசா போச்சுது. விரோதி வூட்டுப் பொண்ணைக் கேட்க மாட்டாகளாம்.

இனி எம் பொழப்பை நானே பார்த்துக்கிடுதேன். அவ விசயத்துல இனி ஏ அப்பனும் வேணாம். ஏ ஆத்தாளும் வேணாம். நானே களத்துல குதிக்கப் போறேன்…” என்று கண்கள் பளபளக்க செய்து காட்டிவிடும் வேகத்துடன் பேசியவனைக் கண்டு சுப்புவிற்குப் பயமாக இருந்தது.

அதிவீரன் ஒரு விஷயத்தைச் செய்ய முடிவெடுத்தால் செய்யாமல் விட மாட்டான். குறுக்கே எத்தனை தடைகள் வந்தாலும் முறியடிப்பான் என்று சுப்புவிற்கு நன்றாகப் புரியும்.

தங்கள் நண்பன் திருவும் இவ்விஷயத்தில் இருக்கிறான் என்பதால் வீராவிற்கும், திருவிற்கும் இடையே கைகலப்பு ஆகிவிடுமோ என்று கூட அவனுக்குப் பயமாக இருந்தது.

அனைத்தையும் விட முக்கியமாக அங்கையற்கரசி திருவைத்தான் பிடித்திருக்கிறது என்று தெளிவாகச் சொல்லியிருக்கும் நிலையில் இவன் இப்படிச் சொல்கிறானே என்றும் யோசித்தான்.

அப்போது பிடிக்காத பெண்ணைக் கட்டாயப்படுத்த போகிறானா என்ன? என்று தோன்றியதை அவனிடமே கேட்டான்.

“அந்தப் புள்ள அங்கைக்கு உன்னைய பிடிக்கலையே டா? அதுக்கு என்ன சொல்லப் போறவன்?”

“மாறிப் போறது தானே மனசு? அவ மனசும் மாறும்டா. விருப்பம் வேற. காதல் வேறடா. திருவை ஒன்னும் அவ மனசார நெனைச்சுக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கலையே? சின்ன வயசுல இருந்து பெத்தவக பேச்சைக் கேட்டு வளந்தவ. அவுக சொன்னாகண்டு இவளும் மண்டையை ஆட்டியிருக்கா. அம்புட்டுத்தானே?” என்று சாதாரணமாகச் சொன்னான்.

“அவ மனசார நெனைப்பை வளத்துக்கலைண்டு என்ன நிச்சியம்டா? அந்தப் புள்ள மனசுக்குள்ளார எம்புட்டு ஆசை இருக்குதோ?” என்றான் சுப்பு.

“அதெல்லாம் ஒன்னும் ஆசை இருக்காது. நீ என்னைய போட்டு மண்டைய காய வைக்காத. அவ தேன் எம் பொஞ்சாதிண்டு நா முடிவு பண்ணிட்டேன். நீ ஒ சோலி கழுதைய மட்டும் பாருடே…” என்று அதிவீரன் சிடுசிடுக்க, சுப்பு கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

எடுத்துச் சொல்வதைப் புரிந்து கொள்பவனிடம் பேசலாம்.

அனைத்தும் முடிவெடுத்து விட்டு அதன் படிதான் நடக்கப் போகிறேன் என்று பிடிவாதம் பிடிப்பவனை மாற்றுவது கஷ்டம் என்று புரிந்தது.

இதற்கு மேல் அவனிடம் மறுப்பாகப் பேசினால் கை நீட்ட கூடத் தயங்க மாட்டான் என்பதால், அமைதியாகிப் போனான் சுப்பு.

“எனக்கு ஏறிய மப்புக் கூட எறங்கிப் போச்சுடே…” என்றவன் பாட்டிலில் மீதி இருந்த மதுபானத்தை அப்படியே தொண்டைக்குள் சரித்துக் கொண்டான்.

அவன் பேச்சை எல்லாம் காதில் வாங்காமல் அங்கையற்கரசியின் மதிமுகத்தை மனதில் கொண்டு வந்து, தலையை அண்ணாந்து, அவளின் நினைவில் ஆழ்ந்தான் அதிவீரன்.

‘என் இந்தப் பொறப்புக்கு அர்த்தமே நீதேன் புள்ள. குயிலு… என் குயிலம்மா… உன்னைய வேற ஒருத்தன் கையில் விட்டுக் கொடுக்க மாட்டேன் குயிலம்மா…’ என்று மனதோடு அவளுடன் உரையாடினான் அதிவீரன்.

மதுபானத்தை அருந்தாமலே அவனின் கண்கள் போதையில் மிதந்தது போல், அங்கையின் நினைவில் மிதந்தன.

அதே நேரம் தன் அறையில் அப்போது தான் தூங்குவதற்கு விழிகளை மூடிய அங்கையற்கரசியின் விழிகளுக்குள் நர்த்தனம் ஆடுவது போல் தோன்றினான் அதிவீரன்.

வாசலில் அவன் ஆடிய ஆட்டம். தன்னை ஜன்னல் பக்கமாகப் பார்த்ததும் அவன் விழிகளில் வந்து போன பளபளப்பு! அனைத்தும் நினைவில் வர, தலையை உலுக்கிக் கொண்டு விழிகளைப் பட்டென்று திறந்தாள் அங்கையற்கரசி.

தாமரையுடன் பேசியதில் அதிவீரனின் நினைவு பின்னுக்குச் சென்றிருந்தாலும், மனதின் ஒரு ஓரத்தில் அவனின் நினைவு உறுத்திக் கொண்டு தான் இருந்தது.

அதிலும் அவனின் பார்வை! ஒரு நொடி தான் என்றாலும் தன் உயிரையே ஊடுருவுவது போல் அவன் பார்த்த பார்வைக்கு அர்த்தம் என்ன? தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.

அவன் இன்று ஆடிய ஆட்டத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

வேண்டுமென்றே தன் கவனத்தை ஈர்க்கவே ஆடினானோ என்று இப்போது தோன்றியது.

அவன் தன் மனதை தன்னிடம் சொன்னதும் அதற்குத் தான் மறுப்புத் தெரிவித்ததும் கூட அவளின் நினைவில் எழுந்தது.

தாயை இழந்து, தந்தையின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வளர்ந்தவள் தான் அங்கையற்கரசி.

தந்தை என்ன சொன்னாலும் அதை மறுக்காமல் கேட்டுக் கொள்வாள். தந்தை மட்டுமல்ல, அவளின் சித்தப்பாவும், சித்தியும் கூட எதைச் சொன்னாலும் அப்படியே கேட்டு நடப்பாள்.

தன் வீட்டுப் பெரியவர்கள் சொன்னால் அது தன் நல்லதிற்காக மட்டுமே இருக்கும் என்பது அவளின் எண்ணம்.

தங்கள் பேச்சை தட்டாமல் கேட்டு நடக்கும் மகளின் மீது முத்துப்பாண்டிக்கு பெருமையே உண்டு.

பெண்ணை அருமையாக வளர்ந்திருக்கிறோம் என்று மீசையை முறுக்கி விட்டுக் கொள்வார்.

தாமரையும் பெரியவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டாலும், அவளிடம் ஒரு துடுக்குத்தனம் உண்டு.

ஆனால், அங்கையற்கரசி அப்படி இல்லை. பெரியவர்கள் வாக்கே அவளுக்கு வேதவாக்கு.

அவர்கள் தான் சிறுவயதில் இருந்து அத்தை மகன் திருநாவுக்கரசுடன் அவளுக்கு முடிச்சுப் போட்டனர்.

சிறுவயதிலிருந்து அதைக் கேட்டு வளர்ந்தவளுக்கு வேறு ஆண் மகனை பெயருக்கு கூடத் திரும்பி பார்க்க பிடிப்பதில்லை.

அதே நேரம் திருநாவுக்கரசையும் காதல் கொண்டாளா என்று கேட்டால் அது அவளுக்கே தெரியாது. ஆனால், அவனின் மீது அவளுக்குப் பிடித்தம் இருப்பது மட்டும் உண்மை!

பெரியவர்கள் அவன் தான் உன் வருகாலக் கணவன் என்று சொல்லிவிட்டார்கள். அதனால், அவனைத் தன் கணவனாக மனதில் வரித்துக் கொண்டாள். சாதாரணப் பேச்சு வார்த்தை என்றாலும், அதற்கு உயிரூட்டி கொண்டாள் அங்கையற்கரசி.

சிறிய வயதிலிருந்து பேசி வைத்து, இப்போது பேச்சு வார்த்தைகள் வளர்ந்து, இன்று திருநாவுக்கரசுவிற்கும், அவளுக்கும் நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்திருந்தது.

அதில் அவளுக்கும் மகிழ்ச்சி தான்.

ஆனால், அவளுக்கு நிச்சயம் நடக்கப் போகும் தேதி ஊருக்குள் தெரியவரவுமே, ஒரு நாள் கோவிலுக்குச் செல்லும் வழியில் அவளை வழி மறைத்தான் அதிவீரன்.

அவன் அப்படி வந்து நிற்பான் என்று எதிர்பாராமல் மிரண்டு விழித்தாள் அங்கையற்கரசி.

பின் அவனை விட்டு விலகி நடக்க முயன்றாள்.

ஆனால், அவன் விலக விட்டால் தானே? அது ஒரு குறுகிய சந்து.

அந்த வழியாகத்தான் கோவிலுக்குச் செல்வது அவளின் வழக்கம்.

அன்று தாமரை வீட்டிற்குத் தூரமாகியிருந்ததால், தான் மட்டும் தனியாகக் கோவிலுக்குக் கிளம்பி வந்திருந்தாள்.

அவளைப் பொறுத்தவரை எதிர்வீட்டை சேர்ந்த ஆட்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்குப் பகையானவர்கள் என்பதால் ‘வழியை விடு!’ என்று கூட அவனிடம் வாயை திறந்து சொல்லவில்லை.

அவன் வழி விட மறுக்க, “ம்ப்ச்…” என்று சலிப்பாக உச்சுக் கொட்டிக் கொண்டாள்.

“நா உங்கிட்ட பேசணும் குயிலு…” என்று மென்மையாகக் குரலில் சொன்னவனை மிரண்டு பார்த்தாள்.

‘குயிலா? யாரைச் சொல்றான், என்னையவா?’ என்று தான் அவளுக்கு முதலில் தோன்றியது.

“உன்னையத்தேன் எங்-குயிலம்மா…” அவள் பார்வை புரிந்தது போல் பதில் சொன்னான்.

“என்னைய அப்படிச் சொல்லாதீக. எம் பேரு அங்கை…” என்றாள்.

“அது வூரு ஒலகத்துக்கு. எனக்குக் குயிலம்மா தேன்…” என்று மந்தகாச புன்னகையுடன் சொன்னவனைக் கண்டு பயந்து போனாள்.

என்றும் இல்லாமல் இவன் என்ன இப்படிப் பேசுகிறான்? என்று பயந்து போய் அவனைப் பார்த்தாள்.

“உன்னைய எனக்கு ரொம்பப் பிடிக்கும் புள்ள…” என்று காதலுடன் சொன்னவனைப் பார்த்து திடுக்கிட்டு இரண்டு அடிகள் வேகமாகப் பின்னே எடுத்து வைத்தாள்.

“என்னைய பார்த்து பயப்புடாத புள்ள. நீன்னா எனக்கு உசுரு. இது இப்ப நேத்திக்கி இல்ல. நீ தாவணி போட்ட காலத்துல இருந்தே உன்னைய எனக்குப் பிடிக்கும். உங்கிட்ட சொல்ல நினைப்பேன். ஆனா, நீ என்னைய பார்த்தாலே ஒதுங்கி ஓடுவ.

உன்னைய பயமுறுத்த வேணாமுண்டு தேன் தள்ளியிருந்தேன். ஆனா, இனியும் தள்ளியிருந்தா நீ என்னைய விட்டு மொத்தமா போய்டுவண்டு தெரிஞ்ச பொறவு, இன்னும் நா உங்கிட்ட பேசாம இருப்பதுல அர்த்தமில்ல-ண்டு தேன் வந்துட்டேன்…” என்று அவன் பேசிக் கொண்டே போக, அவளுக்கு நெஞ்சை அடைப்பது போல் இருந்தது.

“இப்படி எல்லாம் பேசாதீக. ஒங்க வூட்டுக்கும், எங்க வூட்டுக்கும் ஆவாது. ஏ அப்புக்கு தெரிஞ்சா அருவாள எடுத்து வீசிப் போடுவாரு வீசி…” என்றவள் கோவிலுக்குச் செல்லும் ஆசையை விட்டு வீட்டிற்குச் செல்ல திரும்பினாள்.

வேகமாக அவளின் கையைப் பற்றித் தடுத்தான் அதிவீரன்.

அங்கையற்கரசி உயிரே போனது போல் துள்ளி குதித்துக் கையை விடுவிக்க முயன்றாள்.

“விடும்…” அவள் அவனிடமிருந்து கையை இழுக்க,

“விடுறேன். ஆனா, நீ போவக் கூடாது. நா பேசுற வர இங்கன தேன் இருக்கணும். போனா ஒ வூட்டுக்குள்ளார வந்து உன் அப்பன் முன்னாடியே உங்கிட்ட பேசுவேன்…” என்று அவன் மென்மையாகச் சொல்வது போல் இருந்தாலும், அவளுக்கு அது மிரட்டலாகத்தான் தெரிந்தது.

“விடும்… நீரு என்ன எங்கிட்ட பேசணும்? எனக்குத் திரு மச்சான் கூட நிச்சியம் நடக்கப் போவுது…” என்றாள்.

“அவனை என்ன நீ விருப்பப்பட்டா நிச்சியம் பண்ணிக்கப் போறவ? வூட்டுல சொன்னாகண்டு தானே தலைய ஆட்டினவ?” என்று கேட்டான்.

“என் அப்பு விருப்பந்தேன் என் விருப்பம்!” என்றாள் அழுத்தமாக.

“ஒ அப்பனா அவன் கூட வாழப் போறாரு? நீ வாழப் போற வாழ்க்க உம் மனசுக்கு பிடிச்ச மாதிரி இருக்க வேணாமா?” என்று கேட்டான்.

“எனக்குப் பிடிக்கலைண்டு நீர் கண்டீரா? எனக்கும் திரு மச்சான பிடிச்சுருக்கு. இனி என் வழியில வராதீரும்…” என்றவள் தன் கையைப் பட்டென்று இழுத்தாள்.

அவள் திருவை தனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லவுமே அவன் மனம் ஆட்டம் கண்டு போக, அவன் கையும் தன்போக்கில் தன் பிடியை தளர விட, தன்னை விடுவித்துக் கொண்ட நிம்மதியுடன் அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டிருந்தாள் அங்கையற்கரசி.

அவன் கையைப் பிடித்த இடம் இன்றும் கூட அவளுக்குத் தகிப்பது போல் இருந்தது.

எப்போதும் இல்லாமல் அவனுக்கு எப்படித் தன்னிடம் அப்படிப் பேச முடிந்தது?

இதற்கும் அவனிடம் அவள் பேசியதே இல்லை. பகை வீட்டுக் குடும்பம் என்று விலகித்தான் செல்வாள்.

அதிலும் தன் நிறம் பற்றி அவளுக்கே குறை உண்டு. கருமை நிறத்தை கொண்ட தன்னை எப்படி அவனுக்குப் பிடிக்க முடியும்? என்றும் நினைத்துக் கொண்டாள்.

மனதிற்குக் கருமை, சிவப்பு என்று பாகுபாடு காட்ட தெரியாது என்று அவளுக்குப் புரியவே இல்லை.

நிச்சயம் நடக்கும் முன் அவன் எதுவும் தகராறு செய்வானோ என்று கூட அவள் பயந்தது உண்டு.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நிம்மதி பட்டுக்கொண்டாள் அங்கையற்கரசி.

ஆனால், அவளின் நிம்மதியை ஆட்டம் காண வைக்க அதிவீரன் தயாராகி விட்டான் என்பதை அறியாமல் போனாள்.

அந்த அறியாமையால் அவனின் நினைவை தன் மனதை விட்டு ஒதுக்கி தள்ள முயன்று அதில் வெற்றிக் கண்டு நித்திரையைத் தழுவினாள் அங்கையற்கரசி.

அங்கே களத்து மேட்டில் அவளைத் தன்னிடம் எப்படிக் கொண்டு வரலாம் என்ற தீவிர யோசனையுடன் நித்திரையைத் துறந்து விழித்தே படுத்துக் கிடந்தான் அதிவீரன்.