என்னிதய தாள லயமாய் நீ – 17

அத்தியாயம் – 17

‘செத்தாலும் என் பொண்டாட்டியாகத்தான் சாவாள்’ என்று சொல்லிவிட்டாலும், அங்கையைச் சாகவிட அதிவீரன் தயாராகயில்லை.

மருத்துவமனைக்குப் போய்ச் சேர்வதற்குள் அவன் துடித்த துடிப்பு அவனுக்கு மட்டுமே தெரியும்.

அவன் தாலி கட்டும் வரை லேசான மயக்கத்தில் இருந்த அங்கையற்கரசி அவன் தாலி கட்டியவுடன் முழு மயக்கத்திற்குச் சென்றிருந்தாள்.

காரை ஒருவர் ஓட்ட அங்கையுடன் அவன் மட்டுமே சென்றான். யாரையும் காரில் ஏற விடாததால் திகைத்து நின்றிருந்தவர்கள், பின்னால் வேறு வண்டிகளில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

அதைக் கூட அவன் கவனிக்கவில்லை. அவன் நினைவு எல்லாம் தன் மடியில் மயக்கத்துடன் கிடந்த மனைவியின் மீது மட்டுமே இருந்தது.

உடையைத் தவிர எந்த ஆபரணமும் இல்லாத அவளின் கழுத்தில் இப்போது அவன் கட்டிய தாலி மட்டுமே கிடந்தது.

மாலை மாற்றி அவளுக்குக் கடவுள் முன் கட்ட நினைத்த தாலி, இப்போது ஊரே பார்க்க அவள் நினைவு இல்லாமல் கட்டப்பட்டிருந்தது.

சிறிது நேரத்தில் மருத்துவமனை சென்று சேர, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள் அங்கையற்கரசி.

உள்ளே அவளுக்குச் சிகிச்சை ஆரம்பிக்கப்பட, வெளியே அவளுக்காக உயிரை பிடித்துக் கொண்டு காத்திருந்தான்.

அவளை இந்த முடிவுக்குத் தள்ளி விட்டவர்கள் மீது கொலைவெறியே வந்தது. தன் மீதும் சேர்த்து தான். தானும் அவளின் இந்த நிலைக்குக் காரணம் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்து தான் இருந்தது.

தான் இன்னும் நிலைமையை நிதானமாகக் கடைபிடித்திருக்க வேண்டும் என்று தோன்றினாலும், எப்போது இருந்தாலும் அங்கை பக்க உறவினர்களின் நிலைப்பாடு மாறாதே… தனக்கும் வேறு வழி இல்லையே என்று நினைத்துக் கொண்டான்.

இன்னும் காலம் கடத்தியிருந்தாலும், அப்போதும் இப்படி ஏதாவது வலிக்க வலிக்க நடந்தே தீரும் என்று உணர்ந்து தான் அவளை இப்போதே தன்னிடம் கொண்டு வர நினைத்தான். ஆனால், அதற்கு அவள் சாவு வரை போவாள் என்று அவனும் எதிர்பார்த்திருக்கவில்லை.

வாழவே பிடிக்கவில்லை என்று அவள் தாமரையிடம் சும்மா மட்டும் சொல்லவில்லை. சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்திருக்கிறாள் என்றும் புரிந்தது.

அவன் தவிப்புடன் வெளியே நடந்து கொண்டிருக்க, அப்போது அங்கையின் குடும்பத்தினர் அங்கே வந்து சேர்ந்தனர்.

முதலில் வேகமாக அதிவீரனின் அருகில் வந்த துரைப்பாண்டி அவனை அடிக்கப் பாய்ந்து வந்தார்.

அவரை உறுத்துப் பார்த்தவன் தன்னிச்சையாக விலகி நின்றான்.

அவனை அடிக்க முடியாத ஆத்திரம் கூட, “ஏன்டா, எங்க புள்ள கழுத்துல எப்படிடா நீ தாலி கட்டலாம்? மொதல இங்கிருந்து போடா. எங்க புள்ள கண்ணு முழிச்சதும் தாலியை அத்து எறிஞ்சிடுவோம். உனக்கு இங்கே சோலி இல்லை. இடத்தைக் காலி பண்ணு…” என்றார் துரைப்பாண்டி.

முகம் இறுக அவரை முறைத்தபடி அழுத்தமாக நின்றானே தவிர, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

“இவனை அடிச்சு விரட்டுங்க அண்ணே. என்னைத் தைகிரியம் இருந்தா ஏ வூட்டு மருமவ கழுத்துல தாலி கட்டியிருப்பியான். இவனைச் சும்மா விடக்கூடாது அண்ணே…” என்று ஆவேசமாகத் தூண்டிவிட்டார் வள்ளி.

அப்போதும் அதே அழுத்தத்துடன் நின்றான் அதிவீரன்.

அவன் விரலை கூட அசைக்கவில்லை. ஆனாலும், யாராலும் அவனை நெருங்க முடியவில்லை.

சிலம்பத்தில் எதிராளிகளை எப்படி  விலக்குவது என்று தெரிந்தவனுக்கு இவர்கள் எம்மாத்திரம்?

ஏனோ முத்துப்பாண்டியும், முத்துவேலுவும் அவனைப் போல் மௌனமாக இருந்தனரே தவிர எதுவும் பேசவில்லை.

துரைப்பாண்டி தான் அவனை அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்.

அவர் அருகில் வந்த அவரின் மனைவி சிவகாமி, “என்னங்க செத்த நேரம் சும்மா இருங்க. உள்ளார நம்ம புள்ள என்ன நிலைமையில் இருக்குண்டு தெரியலை. அதைப் பத்தி கவலைப்படாம சும்மா குதிச்சிட்டு இருக்கீங்க?” என்று கடிந்து கொண்டார்.

“என்ன மதினி அவனுக்கு நீங்க ஒத்து ஊதுறீங்களா? அவென் தாலி கட்டினது ஏ வூட்டு மருமவ கழுத்துல. அதை என்னண்டு கேட்காம வாயை பொத்திட்டு இருக்கச் சொல்றீகளா?” என்று வள்ளி கோபமாகக் கேட்க.

“நீங்க பேசாதீங்க மதினி. எல்லாத்துக்கும் நீங்க தேன் காரணம். இன்னைக்கு எங்க புள்ள சாவ கிடக்குறதுக்கும் நீங்க தேன் காரணம். அவளைக் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீக? நான் தட்டி கேட்டதுக்கு என்ன சொன்னீங்க? அவ என்ன நீ பெத்த புள்ளயா? பெரியவருக்கா நீ பெத்துப் போட்ட? அவளுக்காக வரிஞ்சு கட்டிட்டு வர்றண்டு என்னை நீங்க அசிங்கமா கேட்கலை? என்னையே இப்படிப் பேசினவக அவளை என்னவெல்லாம் பேசியிருப்பீக. நான் பெறலைனாலும் அவ எம் புள்ளதேன். அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு. நீங்க எல்லாம் உருப்படவே மாட்டீங்க…” என்று சாபம் விட்டார் சிவகாமி.

மனைவி சொன்னதைக் கேட்டு துரைப்பாண்டி அதிர்ந்து போனார். தங்கை தன் மனைவியைத் தரம் தாழ்ந்து பேசியது அவருக்குத் தெரியாது.

இப்போது தெரிந்ததும் தங்கையை முறைத்துப் பார்த்தவர், அப்படியே அடங்கிப் போனார்.

தாமரை அவர்கள் பேச்சை காதில் வாங்காமல் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

வள்ளி தான் வாய் ஓயாமல் அப்போதும் அதிவீரனையும், அங்கையையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்.

சுப்புவும் விஷயம் கேள்விப்பட்டு வந்திருந்தான்.

அவன் அதிவீரனுக்கு ஆறுதல் சொல்ல, எதுவும் அவன் காதில் ஏறவில்லை. அவன் நினைவில் இருந்தது எல்லாம் எப்படியாவது அங்கை பிழைத்து விட வேண்டும் என்பதில் மட்டும் தான்.

மணித்துளிகள் கடக்க வெளியே வந்தார் மருத்துவர்.

அவரிடம் அனைவரும் கும்பலாக ஓட, அவன் கணவன் என்று சொல்லித்தான் அங்கையை அனுமதித்திருந்ததால் மருத்துவர் அவன் முகம் பார்த்து தான் பேச ஆரம்பித்தார்.

“முதலுதவி செய்து வாந்தி எடுக்க வச்ச பிறகு தான் இங்கே கொண்டு வந்து சேர்த்ததால் நிலைமை சீரியஸ் ஆகலை. இனி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை…” என்றார்.

அப்போது தான் நிம்மதி மூச்சு விட்டவன், “ரொம்ப நன்றிங்க டாக்டர்…” என்றவன் குரல் தழுதழுத்தது.

“பார்க்கலாமா டாக்டர்?” என்று கேட்டான்.

“பேஷண்ட் இன்னும் மயக்கத்தில் தான் இருக்காங்க. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஒருத்தர் மட்டும் போய்ப் பாருங்க…” என்று சொல்லிவிட்டு சென்றார்.

“அவ மயக்கம் தெளியட்டும். நாந்தேன் மொதல உள்ளார போவேன். அவ தாலிய அறுத்துப் போட்டாத் தேன் எனக்கு நிம்மதி…” என்று ஆவேசமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் வள்ளி.

அவரைக் கண்டு கொள்ளவே இல்லை அதிவீரன்.

சிறிது நேரத்தில் அங்கை கண்விழித்து விட்டதாகச் செவிலி வந்து சொல்ல, சுப்புவிற்குக் கண்ணைக் காட்டிய அதிவீரன் முதல் ஆளாக உள்ளே சென்றான்.

பின்னால் செல்ல போன வள்ளியை வழி மறைத்து நின்று கொண்டான் சுப்பு.

அவர் காச்மூச்சென்று கத்திக் கொண்டிருந்தார்.

படுக்கையில் துவண்டு போய்க் கிடந்த மனைவியைத் தலை முதல் கால் வரை வருடிக் கொண்டே உள்ளே நுழைந்தான் அதிவீரன்.

வெறும் எலும்பை சுற்றி துணியைப் போர்த்தியது போல் தான் கிடந்தாள் அங்கை.

அவளின் கண்கள் இறுக மூடியிருந்தன. எதற்கோ பயந்து கொண்டிருப்பவள் போல் அவளின் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

நிதானமாக அவளைப் பார்த்துக் கொண்டே அவளின் அருகில் சென்ற அதிவீரன், “குயிலம்மா…” என்று மென்மையாக அழைத்தான்.

இப்போது அவளின் உதடுக்கு இணையாகக் கைகளும் போட்டி போட்டு நடுங்க ஆரம்பிக்க, அதை உணர்ந்தாலும் அவளை அழுத்தமாகப் பார்த்தவன், “இப்ப நீ என் பொஞ்சாதி. தெரியும்ல? தெரிஞ்சிருக்கும். நான் உங்-கழுத்துல தாலி கட்டும் போது உனக்கு உசாரு இருந்துச்சு. அதுக்குப் பொறவு தேன் மயக்கம் போட்டண்டு எனக்குத் தெரியும். எம்புட்டு நாளைக்கு இப்படிக் கண்ணை மூடிட்டு இருப்ப? எப்ப இருந்தாலும் இந்த முகத்தை நீ பார்த்து தேன் ஆவணும் குயிலம்மா…” என்றான் மென்மையாக.

அவன் பேச பேச இன்னும் நடுங்கியவள், “போய்டுங்க… போய்டுங்க… இங்கிருந்து போயிடுங்க…” என்று நடுங்கிய உதடுகளுடன் முணுமுணுத்தாள்.

அவன் முகம் ஒரு நொடி இறுகி பின் இயல்பானது.

“போவலாம். உனக்குச் சரியானதும் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே இங்கிருந்து போவலாம்…” என்றான் இலகுவாக.

அவள் திகைத்து அடுத்து பேச வார்த்தைகளைத் தேட, அதற்குள் அவனே முந்திக் கொண்டான்.

“அரளி விதையை அரைச்சு உன்னைய பேசுன பொம்பள வாயில் ஊத்தாம, நீயே ஊத்திக்கிட்டயே… அம்புட்டு கோழையா நீ?” என்று கோபத்துடன் கேட்டான்.

அவ்வளவு நேரம் மூடியிருந்த இமைகளைப் பட்டென்று திறந்தாள் அங்கையற்கரசி.

அவளையே உறுத்துப் பார்த்தவன் கண்களை நேர் கொண்டு சந்தித்தவள், “அம்புட்டுக்கும் நீரு தேன் காரணம். என்னோட இந்த நிலைமைக்கு நீரு தேன் காரணம். உம்மால தேன் திரு மச்சானை நான் கொன்னுட்டதாக ஏ அப்புவும், அத்தையும் சொன்னாக. அவுக அப்படிப் பேச நீரு தேன் காரணம். எல்லாம் நீரு செய்துட்டு இப்ப நல்லவரு வேஷம் போட வந்தீரோ?” என்று குற்றம் சாட்டினாள்.

அவனின் கண்களில் வலியின் சாயல் வந்து போனது.

ஆனாலும் தளராமல் அவள் கண்களைச் சந்தித்தவன், “இல்லைனாலும் உன் அப்பனுக்கும், அந்தப் பொம்பளைக்கும் உன்னைய பேசவே தெரியாது பாரு. நான் காரணமாம்…” என்று நக்கலாகக் கேட்டான்.

அவள் அவனைக் கோபமாகப் பார்க்க, “இம்புட்டு நாளும் மூடியிருந்த வாயி இன்னைக்கு மட்டும் எப்படித் திறந்துச்சு? இப்ப நீ பேசிய பேச்சை முன்னாடியே அந்தப் பொம்பளைய பார்த்து உனக்கு ஏன் பேசத் தோணலை? அவுக குற்றம் சாட்டினாகண்டு சாவ துணிஞ்சதுக்குப் பதிலா நான் அப்படி இல்லைண்டு நீ அடிச்சு பேசியிருந்தா அது நியாயம்.

அப்ப எல்லாம் ஊமையா இருந்து தப்பு பண்ணிட்டு நான் காரணமாம். ஒரு உண்மையைப் பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லட்டா? உன்னோட இந்த நிலைக்கு நீ மட்டுந்தேன் காரணம்!” என்று கடுமையாகக் குற்றம் சாட்டினான்.

அவள் திகைத்து விழிக்க, “ஆமா, நீ மட்டும் தேன் காரணம். திருச் செத்ததுக்கு நீதேன் காரணமுண்டு திருவோட அம்மா பேசினப்ப நீ எதிர்த்து பேசாதது தேன் காரணம். அந்தப் பொம்பள என்ன பேசினாலும் அழுது, அந்தப் பொம்பளய நீ இன்னும் பேச தூண்டியது தேன் காரணம். அப்பவே நீ எதிர்த்து பேசியிருக்கணும். இல்லையா அந்தப் பொம்பள நிழலில் வாழாம வெளியே வந்திருக்கணும். படிச்சவ தானே நீ?

நீ ஏன் அவுக பேச்சுக்கு கட்டுப்பட்டு அங்கேயே முடங்கிப் போவணும்? அப்படி முடங்கிப் போவாம நீ வெளியே வந்திருந்தா சபாஷ்-ண்டு கை தட்டி நானே தள்ளி இருந்து உன் தைகிரியத்தை ரசிச்சிருந்திருப்பேன். அப்படி இல்லாம, உனக்குத் தாலி கட்டி என்கிட்ட பத்திரமா கொண்டு வரணும். அந்தப் பொம்பள வாயில் விழாம உன்னைய காப்பாத்தணுமுண்டு என்னைய யோசிக்க வைச்சதுக்கும் நீதேன் காரணம்…” என்று அவள் மீதே இரக்கம் இல்லாமல் குற்றம் சாட்டினான்.

அப்படித்தானோ? என்று அங்கையும் திகைத்து விழித்தபடி சிந்தித்தாள்.

சிந்தனையின் முடிவில், எப்படி வந்திருக்க முடியும்? அப்பாவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டே வளர்ந்தவள் அவள். என்ன படிக்க வேண்டும் என்று சொன்னாரோ அதையே படித்தாள். வேலைக்குப் போக வேண்டாம் என்று சொன்னதையும் கேட்டுக் கொண்டாள். யாரை திருமணம் செய்து கொள்ளச் சொன்னாரோ அவனையே திருமணமும் செய்து கொண்டாள். கணவன் இறந்த பிறகும் இனி நீ புருஷன் வீட்டிலில் தான் இருக்க வேண்டும் என்று சொன்னதையும் கேட்டுக் கொண்டாள். தந்தையின் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொண்டவளுக்கு வீட்டை விட்டு வெளியே வரும் தைரியம் எங்கிருந்து வரும்?

தனக்கு அந்தத் தைரியம் வந்திருக்கவே செய்யாது என்று அவளுக்குப் புரிந்து போனது.

கூடவே, தந்தை கடைசியாகப் பேசியதும் ஞாபகம் வர, சட்டென்று அவளின் கண்களில் கண்ணீர் பொங்கியது.

தன் கணவனைத் தானே கொன்றுவிட்டதாக அல்லவா சொல்லிவிட்டார். என் மீது அவ்வளவு தான் நம்பிக்கையா என்ற எண்ணத்தில் அவள் மனம் ரண வேதனையில் துடித்தது.

சிந்தனைக்குச் சென்று விட்டு அவள் கண்ணீர் விட ஆரம்பித்ததும், தன்னையே வருத்திக் கொள்கிறாள் என்று அதிவீரனுக்குப் புரிந்துவிட, “யார் என்ன சொன்னாலும் அது எல்லாம் உண்மையாகிடாது. உங்-கண்ணீரை காட்டி உன்னைய பேசுனவகளை ஜெயிக்க விடாத. என்னையும் சேர்த்துத்தேன் சொல்லுறேன்…” என்றான் அழுத்தமாக.

கண்ணீரை அடக்கிக் கொண்டு அவனைப் பார்த்தவள், “என்னோட நிலைய நீரு பயன்படுத்திக்கிட்டீரு இல்ல? அவ்வளவு தானா உம்ம புத்தி?” என்று இகழ்வாகக் கேட்டவள், தன் கழுத்தில் இருந்த தாலியில் கை வைத்து, “எனக்கு இது வேணாம்…” என்றபடி அதைக் கழற்ற போனாள்.

அவள் கையைச் சட்டென்று பிடித்துத் தடுத்தவன், அவளைக் கடுமையாக முறைத்தான்.

“ஒரு தாலி எப்ப ஒரு பொண்ணு கழுத்துல இருந்து இறங்குமுண்டு தெரியாதவளா நீ?” என்று இரக்கம் இல்லாமல் கேட்டவன், “நான் சாவணுமுண்டு நினைக்கிறயோ? நானும் ஒரு நாள் சாவேன். அப்போ இந்தத் தாலிய கழட்டிக்கோ. அதுவரைக்கும் இது உங்-கழுத்துல தேன் இருந்தாவணும்…” என்றான் கட்டளையாக.

சாவு என்ற வார்த்தையில் தாலியிலிருந்த அவளின் கை தன்னிச்சையாக நடுங்கியது.

ஒரு முறை தாலியை இழந்து அவள் விட்ட கண்ணீரும், கதறிய கதறலும், கேட்ட பேச்சுக்களும் கொஞ்ச நஞ்சமா என்ன?

மீண்டும்… என்று நினைவில் கூட நினைக்க முடியாமல் நடுங்கிய கையைத் தாலியிலிருந்து எடுத்து விட்டிருந்தாள்.

வலுக்கட்டாயமாகக் கட்டப்பட்ட தாலி தான். அவள் சம்மதம் இல்லாமல் கட்டிய தாலி தான். ஆனாலும், அவளுக்குள் ஊறிப் போயிருந்த இயற்கையான தாலி மீதான பற்றுதல் அவளை அந்தச் செயலை செய்ய விடாமல் தடுத்துவிட்டிருந்தது.

அவள் தாலியிலிருந்து கையை எடுத்த பிறகே தன் கையை விலக்கிக் கொண்டான் அதிவீரன்.

வெளியே வள்ளி கத்துவது உள்ளே வரை கேட்க, அங்கையின் கண்களில் கலக்கம் உண்டானது.

அவள் எந்தத் தவறும் செய்யாமலே தன்னைப் பேசுபவர், இப்போது அவன் கையால் கட்டிய தாலியை தான் சுமந்து கொண்டிருப்பதற்கு இன்னும் என்னவெல்லாம் பேச போகிறாரோ? நினைக்கும் போதே அவளுக்கு நடுங்கியது.

அவளின் கலக்கத்தை உணர்ந்தவன், “செத்து பொழைச்சு வந்திருக்கவ. எதைப் பத்தியும் நினைக்காம, பேசாம கண்ணை மூடிக்கிட்டு தூங்கு. இனி உன்னைய யாரும் பேச நான் விடமாட்டேன். இனி என்னைய தாண்டி தேன் யாரும் உன்னைய நெருங்க முடியும்…” என்று அவளுக்குத் தைரியம் சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

அவன் வெளியே வந்ததும், “இம்புட்டு நேரமும் அவ கூடக் கொஞ்சி குழாவிட்டு இருந்தியோ? வெட்கம் கெட்டவனே… எங்க அவ? அவ சிண்டை புடுச்சி ஆட்டினாத்தேன் தெனவெடுத்து திரிய மாட்டா…” என்று வள்ளி ஆத்திரமாகப் பேசிய படி உள்ளே செல்ல போக, அவரை வழி மறைத்து நின்றான் அதிவீரன்.

“இப்ப அவ எம் பொண்டாட்டி. அவ கூட நான் கொஞ்சுறேன். குழாவுறேன். அதைப் பத்தி உமக்கு என்ன? அவளைப் பத்தி இனி ஒரு வார்த்தை உம்ம வாயிலிருந்து வந்துச்சு நான் மனுஷனா இருக்க மாட்டேன். பொம்பளையா போய்ட்டீக-ண்டு கையை நீட்டாம பொறுமையா இருக்கேன். என் பொறுமையும் போச்சு அப்புறமேட்டுக்கு பொம்பளைண்டு கூடப் பார்க்க மாட்டேன்…” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

“எம் மேலயே கையை வச்சுடுவியா நீ? எங்க வைடா பார்ப்போம். பொண்டாட்டியாம் பொண்டாட்டி. அவ எம் மவனோட பொண்டாட்டிடா. எம் மருமவ…” என்று கூவினார்.

“உம்ம மருமவளா? எப்ப உம் மவன் செத்ததும் அவளை ஒரு மனுஷியா கூட நடத்தலையோ அப்பவே அவ உம் மவன் பொண்டாட்டி இல்லைண்டு ஆகிட்டா. எப்போ அவளைச் சாகுற முடிவெடுக்க வச்சியோ, அப்பவே உம் மருமவளும் இல்லைண்டு ஆகிட்டா. இப்ப இங்க இருக்குறது செத்து பொழைச்சு மறு ஜென்மம் எடுத்து வந்திருக்கிறவ இந்த அதிவீரன் பொண்டாட்டி…” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னான்.

சட்டென்று பேச முடியாமல் வாயடைத்துப் போனார் வள்ளி.

‘அப்படிப் போடுடா மாப்ள’ மனதார மெச்சி கொண்டான் சுப்பு.

தாமரைக்குக் கை தட்ட வேண்டும் போல் இருந்தது. வாயில் கை வைக்காத குறையாக அதிவீரனை வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிவகாமியோ ஆனந்த கண்ணீருடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அங்கைக்கு ஒரு விடிவு வராதா என்று ஏங்கி கொண்டிருந்தவருக்கு, அதிவீரன் விடிவெள்ளியாகத் தெரிந்தான்.

வள்ளி வாயை மூடிக் கொண்டிருந்தது என்னவோ சில நொடிகள் தான்.

மீண்டும் அங்கையை அசிங்கமாகப் பேசியவர், “சரிதேன், அப்ப நான் நினைச்ச கணக்கா எம் மவனை நீயும், அவளும் திட்டம் போட்டுதேன் கொன்னுருக்கீக…” என்றார் வள்ளி.

முகம் சிவக்க அவரைப் பார்த்தவன், “வாயை மூடிடு. இருக்குற ஆத்திரத்துக்குப் பெரிய மனுஷிண்டு கூடப் பார்க்க மாட்டேன்…” என்று கோபத்துடன் இரைந்தான்.

“நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு? நீ தானே எம் மவன் செத்தப்ப கூட இருந்தவன்? அந்த எடத்துக்கு நீ எப்படிப் போன? எம் மவனைத்தேன் கொல்ல போனியோ?” என்று வள்ளி அவன் கோபத்தைக் கண்டாலும் அசராமல் கேட்க,

அவரை இளக்காரமாகப் பார்த்தவன், “மனசை கொல்ற நீயெல்லாம் மனுஷனை கொல்றதை பத்தி பேசுற பாரு. ஒரே தமாஷா இருக்குது. த்து… தெறிக்க…உம் மவனைக் கொன்னு கொலைகார பட்டத்தைச் சுமக்க எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சி போய்க் கிடக்கு?

அங்கைய நான் கட்டிக்கிடணுமுண்டு நினைச்சிருந்தா, அவ கல்யாணம் முடிஞ்சி, பொறவு திருவை கொன்னுட்டு தேன் செய்யணுமுண்டு நான் ஏன் நினைக்கணும்? அவளைக் கட்டுறதா இருந்தா, அவ கழுத்துல தாலி ஏறுற நிமிசத்துல கூட உம் மவனை விரட்டி விட்டு நான் தாலி கட்டியிருப்பேன். அப்படி ஏன் செய்யலை தெரியுமா? அந்தப் புள்ள விரும்பினது உம் புள்ளையதேன்.

அடுத்தவனை மனசுல சுமந்தவளை அவ விருப்பப்படி கட்டிக்கிடட்டுமுண்டு தேன் நான் அவளை விட்டு போனேன். இல்லண்டா அவளுக்கு எம் மேல விருப்பம் இல்லனாலும் முன்னாடியே அவளைக் கட்டி இருந்திருப்பேன். இப்ப உங்க அம்புட்டு பேரு முன்னாலயும் தாலி கட்டுன எனக்கு, அவளுக்குக் கல்யாணம் முடியுறதுக்கு முன்னாடியே கட்டிக்க முடியாதா என்ன? பேச்சை பாரு கொல்ல போறோமாம் இவிக மவனை.

“டீவி பொட்டில கண்ட கண்டதையும் பார்த்துட்டு பினாத்தாதே. உம் மவன் குடிச்சிட்டுப்போய் வண்டியை விட்டா அதுக்கு நாந்தேன் பழியோ? போமா அங்கிட்டு…” என்று அலட்சியமாகக் கையை வீசினான்.

அவனைக் கோபமாக முறைத்த வள்ளி மேலும் எதுவோ பேச வர, “வாயை மூடுடி!” என்று உரத்து குரல் கொடுத்தார் முத்துவேல்.