என்னிதய தாள லயமாய் நீ – 16

அத்தியாயம் – 16

“டேய் வீரா, என்ன காரியம்டா பண்ணிப்போட்டு வந்திருக்கவன்? யோசிச்சுதேன் இப்படியெல்லாம் பேசிப்போட்டு வந்திருக்கியா?” என்று அதிர்ந்து போய்க் கேட்டான் சுப்பு.

கடையில் அமர்ந்திருந்த அதிவீரன், சுப்பு கேட்டதற்கு உடனே பதில் சொல்லாமல் மேஜையின் மீது தாளமிட்டான்.

“ஏலேய், உங்-காது கேட்குதா இல்லையா? வாய் இருக்குண்டு என்ன வேணும்னாலும் பேசிப்போட்டு வந்துடுவியா?” என்று சுப்புக் கத்தலாகக் கேட்க,

காதில் விரலை விட்டு குடைந்து கொண்ட அதிவீரன், “ஏன்டா ரேடியோ குழாயை முழுங்கியவனாட்டம் கத்துறவன்? எங்-காது நல்லாத் தேன் கேட்குது…” என்றான்.

“காது கேட்குதுண்டா கேட்டதுக்குப் பதில் சொல்லுடா இவனே. வாயை பொத்திட்டு இருக்கவன்…” சுப்பு கடுப்பாகக் கேட்க,

“என்ன சொல்ல சொல்றவன்? யோசிச்சுதேன் திருவோட அப்பனை பார்க்க போனேன். ஆனா, என்ன பேசுறதுண்டு எல்லாம் யோசிச்சிட்டு போவல. அப்ப வாய்ல என்ன வந்துச்சோ அதைப் பேசிப்போட்டு வந்தேன்…” என்று இலகுவாகச் சொல்லி தோளை குலுக்கினான்.

“என்னடா யாருக்கு வந்த விருந்தோண்டு சொல்றவன்? நீ பேசிப்போட்டு வந்தது சரியில்லடா வீரா. அந்தப் புள்ளக்குத்தேன் பிரச்சினை ஆவும்…” இப்படி இருக்கிறானே, என்ற அலுப்புடன் சொன்னான்.

“பிரச்சினை வரட்டும்டா.பிரச்சினை வந்தாத்தேன் தெளிவு வரும். குழம்பிய குட்டையில் தேன் மீன் பிடிக்க முடியும்…” என்று அலட்சியமாகச் சொன்னவனை, வெட்டவா? குத்தவா? என்பது போல் பார்த்தான்.

“என்னடா ரொம்பப் பாசமா பார்த்து வைக்கிறவன்?” தாளமிட்டுக் கொண்டே கேட்டான் அதிவீரன்.

“ஏன்டா செஞ்ச காரியத்தோட வீரியத்தைப் பத்தி யோசிக்காம, வியாக்கியானம் பேசிட்டு இருக்கறவன். அந்தப் புள்ள அனுபவிச்சுட்டு இருக்கிற சித்திரவதை போதாதா? இப்ப நீ செஞ்சு போட்டு வந்த காரியத்தில் இன்னும் தானே அந்தப் புள்ளய வைய்வாய்ங்க. நீ பேசியது எல்லாம் அந்தப் புள்ள மேலதேன் விடியும்டா…” என்று வருத்தமாகச் சொன்னான் சுப்பு.

அதிவீரனுக்கும் அது தெரிந்தே தான் இருந்தது. ஆனால், அதற்காகத் தான் பேசியது தவறு என்று அவன் நினைக்கவே இல்லை.

பேச்சின் விளைவு அங்கையைத் தாக்கவே செய்யும். ஆனால், வேறு வழியேது? புண் ஆற வேண்டும் என்றால் வலிக்க அறுத்துத் தான் ஆக வேண்டும்.

இருக்கும் துன்பத்துடன் அவளுக்கு இன்னும் துன்பம் வரும் தான். ஆனால், இத்தனை நாள் பட்ட துன்பம் தீர வழி வேண்டும் என்றால் இந்த வலியைத் தாங்கித் தான் ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

சுப்புவும், அதிவீரனும் பேசிக் கொண்டிருக்க, அப்போது தலையில் முக்காடு போட்டு முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு இளம்பெண் உள்ளே நுழைய, இருவரும் பேச்சை நிறுத்தினர்.

என்ன வேண்டும் என்பது போல் அதிவீரன் எழுந்து நிற்க, தன் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கினாள் அந்தப் பெண்.

வியப்புடன் அவளைப் பார்த்த அதிவீரன், “தாமரை? என்ன இங்கன வந்திருக்க?” என்று கேட்டான்.

அவனைக் கோபத்துடன் முறைத்த தாமரை, “என்ன காரியம் செஞ்சி போட்டு வந்திருக்கீரு? புத்தியோட தேன் இப்படிப் பேசிப் போட்டு வந்தீரா? இப்ப உங்களால அக்கா அங்க என்ன பாடு பட்டுட்டு இருக்காண்டு தெரியுமா?” என்று ஆத்திரமாகக் கேட்டாள்.

முகம் மாறியவன், “அங்கைக்கு என்னாச்சு?” என்று இறுகிய குரலில் கேட்டான்.

“இன்னும் என்ன ஆவணும்? சும்மாவே எங்க அத்தைக்காரி அக்காவை கொத்தி தின்னுட்டு இருந்தாக. இப்ப அடிச்சு கொல்லாதது ஒன்னுதேன் குறை. வார்த்தையாலயே அவளைச் சாகடிச்சுட்டு இருக்கு…” என்றாள் வெறுப்புடன்.

“தாமரை, இப்ப என்ன நடந்துச்சுண்டு தெளிவா சொல்லு. என்ன பேசிச்சு உங்க அத்தைக்காரி?” என்று பொறுமை இல்லாமல் கேட்டான்.

“நீங்க தோப்புல மாமாவை பார்த்து பேசிப்போட்டு வந்ததை அவரு வூட்ல வந்து அத்தைகிட்ட சொல்லிட்டாரு. அதைக் கேட்டதில் இருந்து அத்தை பைத்தியக்காரி கணக்கா கத்துக்கிட்டு கிடக்கு. பொண்டாட்டி செத்தா புது மாப்ள ஆகுற மாதிரி, நீ புருஷன் செத்ததும் புதுப் பொண்ணு ஆகுறியோ? எம் மவன் செத்து கொஞ்ச நாளிலேயே உனக்கு ஆம்பள சுகம் கேட்குதா? அப்படிண்டு…” என்று தாமரை சொல்ல, ஆத்திரத்தில் மேஜையை ஓங்கி அடித்தான் அதிவீரன்.

திடுக்கிட்டு அவனைப் பார்த்தாலும், தாமரை சொல்லிக் கொண்டே போனாள்.

“இதுக்கே உமக்குக் கோபம் வருது. ஆனா, இன்னும் காது கொடுத்து கேட்க முடியாதது எல்லாம் அத்தை பேசிட்டு இருக்கு. அக்கா நான் அப்படி நினைக்கலைண்டு சொல்லி அழுகுறதை காது கொடுத்து கேட்காம கூட வைஞ்சுகிட்டே கிடக்கு…” என்றாள் தாமரை.

“அந்தப் பொம்பளைக்கு இருக்கிறது நாக்கா தேள் கொடுக்கா?” என்று கோபத்துடன் கேட்டான் அதிவீரன்.

“இதுக்கெல்லாம் காரணம் நீரு தேன். உங்களை யாரு மாமாகிட்ட போய்ப் பொண்ணு கேட்க சொன்னது?” என்று தாமரை கோபமாகக் கேட்க,

“தப்புதேன்…” என்று தலையை அசைத்தான் அதிவீரன்.

அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த சுப்பு நண்பனை வியப்பாகப் பார்த்தான்.

சற்றுமுன் தான் எடுத்து சொன்னதற்குக் கூட அலட்சியமாக இருந்தவன், இப்போது தப்பு என்று ஒப்புக் கொண்டானே? என்று வியந்தான்.

“தப்புதேன் தாமரை. நான் போய்ப் பேசிருக்கக் கூடாது. பொண்ணு கேட்டது தப்பு. பொண்ணைத் தூக்கியிருக்கணும்…” என்று அதிவீரன் கண்கள் பளபளக்க சொல்ல,

“ஆ!” என்று அதிர்ந்து வாயை கை கொண்டு மூடினாள் தாமரை.

‘அட கிராதகா! அது எப்படிடா நல்லவன் கணக்காவே பேசி வைக்கிறவன்?’ என்று மனதில் நண்பனுக்கு அர்ச்சனை செய்து கொண்டான் சுப்பு.

“என்ன இப்படி எல்லாம் பேசுறீரு?” தாமரை அதிர்வு மாறாமல் கேட்க,

“உம் பெரியப்பன்கிட்ட இனி பேச்சே இல்லை. வீச்சுத் தேன்னு சொல்லிப் போட்டு வந்தேன். காரியத்தில் இறங்க அவைய்ங்களே எனக்கு ரூட்டு போட்டு கொடுக்குறாய்ங்க…” என்றவன் தாடையைத் தடவிய படி சில நொடிகள் யோசித்த அதிவீரன்,

“டேய் சுப்பு, இன்னைக்குச் சாயந்தரம் எனக்கும், அங்கைக்கும் கல்யாணம். அதுக்கு என்ன பண்ண முடியுமோ அந்த சோலியை எல்லாம் நீ தேன் பார்க்கிற…” என்று அதிரடியாகச் சொல்ல,

“அடேய்!” என்று அதிர்ந்து கத்தினான் சுப்பு.

“ஆத்தாடி!” என்று தாமரையும் நெஞ்சில் கை வைத்து அதிர,

“உனக்குக் கொடுக்க வேண்டிய சோலியை இன்னும் கொடுக்கவே இல்லையே அதுக்குள்ளார நீ ஏன் கத்துற?” என்று தாமரையிடம் அசால்டாகக் கேட்டவன்,

“நீ என்ன பண்றனா, சாயந்தரம் அங்கையைக் கோவிலுக்குக் கூட்டிட்டு வந்துடு…” என்றான்.

“அம்மாடியோவ்! என்னைய கொல்ல வழி பாக்குறீரா? உமக்கு விளையாடுறதுக்கு நான் தானா கிடைச்சேன்…” என்று பதறினாள் தாமரை.

“விளையாடுறேனா?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டவன், “டேய் சுப்பு, என்னைய பார்த்தா விளையாடுற மாதிரியா இருக்கு?” என்று நண்பனிடம் கேட்டான்.

அதிவீரனின் முகத்தில் இருந்த தீவிரம் அவன் விளையாட்டுக்கு சொல்லவில்லை என்பதை நன்றாகவே எடுத்துரைத்துக் கொண்டிருக்கையில் சுப்பு எப்படி இல்லை என்று சொல்வான்.

“வீரா, நீ ரொம்ப அவசரப்படுற. நிறையப் பிரச்சினை வரும்டா. செத்த நிதானமா இரு…” என்றான் சுப்பு.

“நிதானமா? நான் இதுவரைக்கும் நிதானமா இருந்தது போதாதா?” என்று விழிகளை உறுத்து கேட்டான்.

“இந்தா பாரும். இதெல்லாம் சரியில்லை. என் அக்கா வாழ்க்கையில் நீரும் பிரச்சினைய தராதீருமுண்டு சொல்லி போட்டு போவலாமுண்டு தேன் வந்தேன். இப்ப என்னனா ஏதேதோ பேசிட்டு இருக்கீரு. எனக்குப் பயமா இருக்கு. நான் போறேன்…” என்று வேகமாகத் தாமரை அங்கிருந்து கிளம்பப் போக,

“அப்ப நீயும் காலமெல்லாம் உன் அக்கா சித்திரவதை அனுபவிக்கட்டுமுண்டு தேன் ஆசைப்படுறீயோ?” என்ற அதிவீரனின் கேள்வியில் பட்டென்று நின்றாள்.

“என்ன பேசுறீரு? நான் எப்படி அப்படி நினைப்பேன்?” என்று கோபமாகக் கேட்டாள்.

“உன் அக்கா நல்லாயிருக்கணுமுண்டு ஆசைப்பட்டா நான் சொல்றதை செத்த பொறுமையா கேளு…” என்றான்.

அவள் விருப்பமில்லாமல் அவனைப் பார்க்க, “இதோ பார் தாமரை, உன் அக்காவை நான் என் உசுருக்கு மேல நினைக்கிறேன். அவளைப் பொக்கிஷமா பார்த்துக்கிடணுமுண்டு தேன் ஆசைப்படுறேன். அதுக்குத்தேன் முறைப்படி நடக்கட்டுமுண்டு உம் மாமனை பார்க்க போனேன். ஆனா, நடந்தது வேற. இப்ப அதைப் பத்தி பேசி ஒன்னும் ஆவ போறது இல்லை…

உங்க வூட்டுலயோ, எங்க வூட்டுலயோ யாரும் ஒத்து வர மாட்டாய்ங்க. நான் இப்பவும் வேடிக்கை பார்த்துட்டு இருந்தா, அங்கை அங்க சாகுற வரைக்கும் இடி சோறு வாங்கிட்டு இருக்க வேண்டியது தேன். நானும் மல்லுமட்டை கணக்கா அவ படுற கஷ்டத்தை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டுக் காலமெல்லாம் ஒத்தையில நிக்க வேண்டியது தேன்…” என்றான்.

“நீங்க ஏன் ஒத்தைல நிக்கணும்?” என்று தாமரை கேட்க,

அவளை வினோதமாகப் பார்த்தவன், “பின்ன, வேற ஒருத்திய கட்டிக்கிட்டு வாழ்வேண்டு நினைச்சியோ? என் வாழ்க்கைல பொம்பளண்டு ஒருத்தி வந்தா அது அங்கையா மட்டுந்தேன் இருக்க முடியும்…” என்றான் அழுத்தமாக.

வாயடைத்து போய் அவனைப் பார்த்தாள் தாமரை.

அவளைக் கண்டுகொள்ளாமல் சுப்புவின் புறம் திரும்பியவன், “சுப்பு, வூட்டுக்கு சாப்புட போன மாறன் இப்ப வந்துடுவியான். அவனைக் கூட்டிட்டு போய் மாலைக்குச் சொல்லிட்டு, நீ நம்ம வூரு கோவில் அய்யர்கிட்ட ஒரு கல்யாணம் நடத்தி வைக்கணுமுண்டு மட்டும் சொல்லிடு. எம் பேரோ, அங்கை பேரோ சொல்லாத. விஷயம் வெளிய கசிய கூடாது. தாமரை அங்கையைக் கூட்டிட்டு வந்ததும், அய்யர் சாமி முன்னாடி வச்சு தர்ற தாலியை வாங்கி நான் கட்டிடுவேன்…” என்று அதிவீரன் தன் திட்டத்தைச் சொல்ல,

“தாலி?” என்று கேட்டான் சுப்பு.

“நான் இப்ப கடைய அடைச்சுட்டு மருதைக்குப் போய் வாங்கியாந்துறேன்…” என்றான்.

“என்ன நீரு பாட்டுக்குத் திட்டம் போடுறீரு. என்னால எல்லாம் அங்கைய கூட்டிட்டு வர முடியாது. பெரியப்புவும், அப்புவும் என்னைய அப்பிப் போடுவாக. அவளைக் கூட்டிட்டு எங்கேயும் போவ கூடாதுண்டு என்கிட்ட சொல்லி வச்சுருக்காக. அதே போல அத்தையும் இனி அங்கைய வூட்டை விட்டு போவக் கூடாதுண்டு சொல்லிட்டாக…” என்றாள் தாமரை.

“ஓஹோ! வெவரமா இருக்காகளாக்கும்?” என்று நக்கலுடன் கேட்டான் அதிவீரன்.

“இப்ப என்னடா பண்றது?” என்று சுப்பு கேட்க,

“ஏன் தாமரை, உன் அக்கா வாழ்க்கைக்காக நீ கொஞ்சம் மெனக்கெட மாட்டியா?” என்று கேட்டான்.

சில நொடிகள் மௌனமாக இருந்த தாமரை, “மெனக்கெடுறேன். ஆனா, அக்கா? அவளுக்குச் சம்மதம் இல்லாம எப்படிக் கல்யாணம்? அதைப் பத்தி நீரு யோசிக்கவே இல்லையே?” என்று கேட்டாள்.

இப்போது அதிவீரனால் உடனே பதில் சொல்ல முடியாமல் போனது.

அவன் கண்களில் வலி!

சுப்பு நண்பனை பரிதாபமாகப் பார்த்தான்.

சில நொடிகள் செல்ல, தன் தொண்டையைச் செருமிக் கொண்ட அதிவீரன், “உன் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்றதுண்டு தெரியலை தாமரை…” என்றவன் தயங்கி நிறுத்தினான்.

“கண்டிப்பா நான் பண்ண போறது கட்டாயக் கல்யாணந்தேன். உன் அக்காவுக்கும் என்னைய பிடிக்காது தேன். ஆனா, எனக்கு நம்பிக்கை இருக்கு தாமரை, அவ மனசு மாறும். வறண்டு போயிருக்கிற அவ மனசுல எனக்குண்டு ஒரு ஓரத்திலேயாவது நேசத்தைத் துளிர்விட வைக்க முடியுமுண்டு நம்புறேன். அந்த நம்பிக்கையில் தேன் துணிஞ்சு இதுல இறங்கியிருக்கேன்…” என்றான்.

அவன் தன் அக்காவின் மீது வைத்திருக்கும் நேசம் தாமரையைப் புரட்டிப் போட்டது.

“உன் நம்பிக்கை ஜெயிக்கும்டா மாப்ள…” என்று அவன் தோளை தட்டினான் சுப்பு.

மூவரும் பேசி ஒரு முடிவுடன் கலைந்து சென்றனர்.

தாமரை எப்படித் தனது அக்காவை வீட்டை விட்டு கோவிலுக்கு அழைத்துச் செல்லலாம் என்ற யோசனையுடன் வீட்டிற்குச் செல்ல, சுப்பு மாலை வாங்க சென்றான். அதிவீரன் தாலி வாங்க மதுரைக்குக் கிளம்பினான்.

அதிவீரன் தான் எடுத்த முடிவை செயல்படுத்துவதில் மட்டுமே முனைப்பாக இருந்தானே தவிர, அங்கையின் மனநிலை இப்போது என்னவாக இருக்கும் என்று யோசிக்க மறந்து போனான்.

கணவனின் இழப்பில் இருந்தே மீளாமல் தவித்துக் கொண்டிருக்கையில் அதிவீரனின் செயலால் மொத்தமாக வீழ்ந்தே போனாள் அங்கையற்கரசி.

சும்மாவே பேச்சால் கொன்று கொண்டிருந்த வள்ளி, இப்போது இன்னும் பல மடங்கு அதிகமாகப் பேசினார்.

“நீதேன் அவனைப் பொண்ணு கேட்டு வர சொன்னியா? அப்படியா உனக்கு ஆம்பளை சுகம் கேட்குது? எம் மவன் எப்ப சாவாண்டு அப்ப காத்திருந்தியோ? எம் மவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடியே அவனுக்கும் உனக்கும் தொடுப்பு இருந்ததோ?” என்று வாய்க் கூசாமல் கேட்டார்.

கேட்டவளுக்குத் தான் காதும், மனதும் கூசிப் போனது.

“இல்லை அத்தை… அப்படி எல்லாம் இல்லை…” என்று கதறியவளின் கதறல் வள்ளியின் காதுகளைச் சென்றடையவே இல்லை.

“இல்லாம தேன் ரூட்டா வந்து அவளை என்கிட்டயே கொடுத்துடுங்கண்டு அவென் கேட்டானோ? எம் மவன் சாகும் போது அவென் தேன் கூட இருந்தியான். ஒருவேளை நீயும் அவனும் சேர்ந்து தேன் எம் மவனைக் கொல்லத் திட்டம் போட்டீகளோ? இல்ல, நீ போட்டுக் கொடுத்த திட்டத்தை அவென் முடிச்சு வச்சானா?” என்று வள்ளி கேட்க,

“அத்தை…” என்று அதிர்ந்து கூவினாள் அங்கை.

“என்னடி அத்தை? நான் என்ன இல்லாததையா சொல்லிப்புட்டேன்? எனக்கு என்ன நாட்டு நடப்பு தெரியாதுண்டு நினைச்சுட்டு இருக்கியா? புருஷனை கள்ள புருஷனை விட்டு கொன்னு போடுறதை எல்லாம் கேள்விப்பட்டுத் தேன இருக்கேன்.

அதுபோல நீ அந்த வீரா பயலை வச்சு எம் புள்ளைய கொன்னுட்டு, இப்ப அவனைக் கல்யாணம் பண்ணிக்கத் திட்டம் போட்டுருக்க மாட்டண்டு என்ன நிச்சயம்?” என்று கையால் தரையில் அடித்துக் கேட்டார்.

“ஐயோ! என்னைய நம்புங்க அத்தை. நான் அப்படி எல்லாம் செய்யலை. மச்சான் கூட முழு மனசாத்தேன் வாழ்ந்தேன். எம் மனசுல வேற எவனும் இல்லை. அவென் என்கிட்ட கேட்ட போதே புடிக்கலைண்டு சொல்லி விரட்டி விட்டுட்டேன். அவனா வந்து கேட்டா, அதுக்கு நான் என்ன பண்ண முடியும் அத்தை?” என்றாள்.

“இந்தப் பசப்பு சோலிய எல்லாம் என்கிட்ட காட்டாதடி. அண்ணன் மவ-ண்டு உன்னைய ஏ வூட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு, ஏ வம்சத்தையே கருவருத்திட்டியே…” என்று அநியாயமாகக் குற்றம் சாட்ட, துடித்துப் போனாள் அங்கை.

இனி தான் எவ்வளவு பேசினாலும் தன்னை நம்ப மாட்டார் என்று புரிந்து போனது.

அந்த நேரம் அவளின் அப்பா முத்துப்பாண்டி அவளைக் காண வந்தார்.

அவரிடம் ஓடியவள், “அப்பு, நீங்களாவது என்னைய நம்புங்கப்பு. அத்தை என்னென்னவோ பேசுறாக. நான் அப்படி எதுவும் பண்ணலைப்பு. என்னைய நம்பச் சொல்லுங்கப்பு…” என்றாள் கதறலாக.

“ஒ அத்தை சொன்னதைக் கேட்டுட்டு தேன் இருந்தேன். வள்ளி சொன்ன பொறவு தேன் எனக்கும் திரு மாப்ள சாவுல சந்தேகமா இருக்கு. உனக்கு விருப்பம் இல்லாமயா ரூட்டா என்கிட்டயும், உம் மாமனார்கிட்டயும் அவென் பொண்ணு கேட்டுருப்பியான்?” என்று முத்துப்பாண்டி கேட்க,

“அப்பு…” என்று அதிர்ந்து அவரை விட்டுப் பின்னால் விலகி நின்றாள் அங்கையற்கரசி.

தந்தையும் இப்படிப் பேசுவார் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

தந்தையை வெறித்துப் பார்த்தவள், அப்படியே சுவரில் சாய்ந்து கீழே அமர்ந்தாள்.

அவளின் கண்களில் முற்றிலும் வெறுமை. வாழ்வையே வெறுத்த சூனியம் அவளைச் சூழ்ந்து கொண்டதை அறியாமல் அண்ணனும், தங்கையும் ஏதோ பேச ஆரம்பிக்க, மெல்ல எழுந்து வீட்டின் பின்பக்கமாக வெளியேறினாள் அங்கையற்கரசி.

தாலியை வாங்கிக் கொண்டு மதுரையிலிருந்து வந்து சேர்ந்தான் அதிவீரன்.

நேராகக் கோவிலுக்குச் செல்ல திருவின் வீட்டின் பக்கமாகச் சென்றவன், திருவின் வீட்டின் முன் கூட்டமாக இருப்பதைப் பார்த்து, கேள்வியுடன் வண்டியை நிறுத்தினான்.

“ஐயோ! இந்தப் புள்ள இப்படிப் பண்ணிப் போட்டாளே. புருஷன் போய்ச் சேர்ந்ததை அந்தப் புள்ளயால தாங்க முடியலை. அதுதேன் இப்படிப் பண்ணிடுச்சு…” என்ற குரல் காதில் விழ,

‘அங்கை…’ என்று மனதிற்குள் அலறியவன், கூட்டத்தை விலக்கி கொண்டு உள்ளே செல்ல, அப்போது தான் சிலர் அங்கையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர்.

“அரளி விதையை அரைச்சு குடிச்சுப் போட்டாளே…” என்று யாரோ கதறும் சத்தம் கேட்டது.

“வாந்தி எடுக்க வைக்கப் பாருங்கய்யா…” என்று யாரோ குரல் கொடுத்தனர்.

“ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போக வழி பாருங்கயா. பக்கத்து வூட்டுல ஒரு காரு இருக்கே. அதைக் கேளுங்க. ஆஸ்பத்திரிக்கு போவலாம்…” என்று விதவிதமான குரல் கேட்க, கூட்டத்தை விலக்கி உள்ளே சென்ற, அதிவீரனோ நிலை குத்திய கண்களுடன், கண்கள் சொருகி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அங்கையைப் பார்த்தான்.

அப்போது அங்கையின் அருகில் அழுது கொண்டே நின்றிருந்த தாமரையின் கண்ணில் அதிவீரன் விழ, ஓடி வந்து அவன் சட்டையைப் பிடித்தவள், “உம்மால தான்யா. உம்மால தேன் ஏ அக்கா இந்த முடிவு எடுத்துட்டா. ஏன்யா ஆளாளுக்கு அவளைக் கொத்தி தின்னீங்க? நீரு பேசாம இருக்க மாட்டாம பொண்ணு கேட்குறேண்டு போய், பெரியப்புவும், அத்தையும், உன் கூடச் சேர்ந்து திரு மச்சானை கொன்னுட்டீகண்டு அவ மேல பழி போட்டுடாகயா. அதைத் தாங்க முடியாமதேன் இந்த முடிவு எடுத்துட்டா…” என்று அவன் மார்பிலே சப்சப்பென்று அடித்தாள்.

அடியை வாங்கிக் கொண்டு அசையாமல் நின்றவன், அங்கை மேல் விழுந்த பழி சொல்லை கேட்டுத் துடித்துப் போனான்.

கண்கள் ரத்தமெனச் சிவக்க தாமரையைத் தாண்டி கண்களைச் சுழல விட்டவனின் கண்களில் முத்துப்பாண்டியும், வள்ளியும் விழ, தாமரையை விலக்கி நிறுத்தி விட்டு அவர்கள் அருகில் சென்றவன், முத்துப்பாண்டியை பிடித்து ஆவேசமாகத் தள்ளிவிட்டான்.

“அறிவு கெட்ட பெரிய மனுஷா. என் அப்பு எனக்கு நல்லது தேன் பண்ணுவாருண்டு நீ சொன்ன வார்த்தைகாகவே அங்கை திருவை கல்யாணம் பண்ணிக்கிட்டாய்யா. அவளா அவ புருஷனை கொல்லுவா? அவ கல்யாணம் முடிச்சு அவ புருஷன் கூடச் சந்தோஷமா வாழ்ந்தாள்ண்டு அவ கூட ஒரே வூட்டுல இருந்த உன்னால கண்டுபிடிக்க முடியலையோ?” என்று முத்துப் பாண்டியிடமும், வள்ளியிடமும் ஆத்திரமாகக் கேட்டவன்,

“நல்லா கேட்டுக்கோங்க. நாந்தேன் அங்கையை விரும்பினேன். அவ என்னைய திரும்பி கூடப் பார்த்தது இல்லை. அவ புருஷன் செத்தது முழுக்க முழுக்க விபத்து தேன். அவ மேல பழி போட உங்க யாருக்கும் தகுதியில்லை…” என்று ருத்ரதாண்டவமே ஆட, ஊரே வேடிக்கை பார்த்தது.

அப்போது பக்கத்து வீட்டில் இருந்து காரை ஒருவர் எடுத்துவர, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அங்கையைக் காரில் ஏற்ற தூக்கினர்.

அதிர்ந்து நின்றிருந்த முத்துப்பாண்டியும், வள்ளியும் பின்னால் ஓடிவர, அவர்கள் இருவரையும் ஒரு சேர விலக்கியபடி முன்னால் வந்த அதிவீரன், அங்கையைப் பார்த்தவன், சட்டென்று தன் சட்டை பையில் இருந்த தாலியை எடுத்து அங்கையின் கழுத்தில் கட்டினான்.

அனைவரும் அதிர்ந்து நிற்க, அங்கையைத் தூக்கி இருந்தவர்கள் கைகளில் இருந்து அவளைத் தான் தூக்கி கொண்டவன், முத்துப்பாண்டியையும் வள்ளியையும் பார்த்து, “இப்ப இவ எம் பொண்டாட்டி. இவ செத்தா கூட எம் பொண்டாட்டியாத்தேன் சாவா. இனி இவளுக்கு அப்பனும் இல்லை, அத்தையும் யாருமில்லை. அவளுக்குப் புருஷன் நான் மட்டுந்தேன் எல்லாம்…” என்று வார்த்தைகளைத் தோட்டாக்களாகத் தெறிக்கவிட்டவன், யாரையும் அருகில் விடாமல், தான் மட்டும் அங்கையைத் தூக்கி காரில் போட்டுக் கொண்டு அங்கிருந்து விரைந்தான் அதிவீரன்.