என்னிதய தாள லயமாய் நீ – 15

அத்தியாயம் – 15

“ஏலேய், கூறு கெட்டவனே! கேன கிறுக்கா… என்ன பேசுறோமுண்டு புரிஞ்சி தேன் பேசுறீயா?” அமர்ந்திருந்த கருப்பண்ணன் துள்ளிக் கொண்டு எழுந்து மகனை அடிப்பது போல் வந்தார்.

அசராமல் தந்தையைப் பார்த்தவன், “நல்லா புரிஞ்சி தேன் பேசுறேன்…” என்றான் திடமாக.

“புரிஞ்சி பேசுறானாம். புரிஞ்சி… அடி செருப்பால. திரும்ப மொதல இருந்து ஆரம்பிக்கிறயாடா. புத்திக் கெட்டவனே! அவ தாலி அறுத்தவடா…” என்று கத்தினார் காமாட்சி.

திண்ணையில் அமர்ந்திருந்த பேச்சியம்மாள் சத்தம் கேட்டு உள்ளே வந்தார்.

“அவ தாலி அறுத்தவண்டு நீங்க சொல்லித்தேன் எனக்குத் தெரியணுமாக்கும்? எங்-கல்யாணத்த பார்க்க நீங்க ரொம்ப ஆசைப்பட்டீக. அது தேன் நான் ஆசைப்பட்டவளையே எனக்குக் கட்டி வைங்கண்டு சொன்னேன்…” என்று அலட்சியமாகத் தோளை குலுக்கினான்.

“என்ன பேராண்டி விவரம் இல்லாம பேசுறவன்? கல்யாணம் கட்டணுமுண்டா நம்ம சொந்தத்திலேயே பொண்ணுங்க நிறைய இருக்கும் போது, கல்யாணம் கட்டி ஒரே வாரத்துல புருஷனை எமனுக்குத் தூக்கி கொடுத்துட்டு தாலியை இழந்தவளையா ஒனக்கு கட்டி வைக்க முடியும்?” என்று பேச்சியம்மாள் கேட்க,

“அதானே! அவளே ஒரு ராசி கெட்டவ. அவளைப் போய்…” என்று காமாட்சி சொல்ல,

“அம்மா…” என்று அதட்டியவன், “அவ ராசி இல்லாதவண்டு எதை வச்சு சொல்றீங்க? அவ புருஷனை இழந்ததாலா? அவ புருஷன் செத்ததுக்கு அவென் மட்டுந்தேன் காரணம். குடிச்சுப் போட்டு வண்டியை கொண்டு போய் லாரில விட்டுச் செத்தது அவென் தப்பு. அவளா அவனைக் குடிக்க அனுப்பினா?

அவளா போய் லாரியில் கொண்டு போய் மோதுண்டு சொன்னா? வாழ்க்கை முச்சூடும் கூட வருவா-ண்டு நினைச்சவன் குடிக்கு ஆசைப்பட்டதால போய்ச் சேர்ந்தா அதுக்கு அவ பழியா? இனி ஒரு தடவை ராசி அது இதுண்டு சொன்னீங்க… அப்புறமேட்டுக்கு நடக்கிறதே வேற…” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

“ஆத்தாடி! இவென் எப்படிப் பேசுறாண்டு பாருங்க…” என்று கணவனிடம் சொன்னார்.

“அவனுக்குக் கிறுக்குப் புடிச்சு போச்சுடி…” என்று கடுப்பாகச் சொன்ன கருப்பண்ணன், “இப்ப முடிவா என்ன தான்டா சொல்றவன்?” என்று கேட்டார்.

“இனி நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். அங்கைய தேன் கட்டிக்கிடுவேன்…” என்றான்.

“அதுக்கு நாங்க சம்மதிக்க மாட்டோம்டா. தாலி அறுத்தவளை எங்க மவனுக்குக் கட்டி வைக்கிற அளவுக்கு எங்களுக்குப் பெரிய மனசு இல்லை…” என்றார் காமாட்சி.

அதிவீரனின் பார்வை தந்தையின் பக்கம் சென்றது. அவரின் முடிவும் அது தான் என்று அவரின் பாவனையே சொல்லிவிட, அப்பத்தாவை பார்த்தான்.

“வேணாம்ப்பு. இன்னொருத்தன் கூட வாழ்ந்தவளை போய் ஒனக்கு எப்படிக் கட்டி வைக்க முடியும்? உம் மனசை மாத்திக்கய்யா…” என்றார் நயமாக.

அவரை முறைத்தவன் மூவரையும் பொதுவாகப் பார்த்து, “உங்க முடிவை சொல்லிட்டீங்கல? என் முடிவு அவளைக் கட்டிக்கிறது மட்டுந்தேன்…” என்றான் உறுதியாக.

“நீ தலை கீழா நின்னாலும் அதுக்கு நாங்க சம்மதிக்க மாட்டோம்டா…” என்றார் கருப்பண்ணன்.

“உங்க சம்மதத்தை யாரு கேட்டா?” என்று நக்கலாகக் கேட்டவன், “எனக்கு அவ தேன்னு முடிவு பண்ணிட்டேன். அவளை எப்படிக் கல்யாணம் கட்டிக்கிறதுண்டு நான் பார்த்துக்கிறேன்…” என்றான்.

“அறிவு கெட்டவனே! இதெல்லாம் நடக்குமுண்டு கனவு காண்றீயா? அது எல்லாம் நடக்காதுடா. அவ அப்பன் எப்படிப்பட்டவண்டு எனக்குத் தெரியும். அவென் புள்ளய விதவையா சாவ விடுவானே தவிர, உனக்கு எல்லாம் கல்யாணம் கட்டித் தர மாட்டயான்…” என்றார் கருப்பண்ணன் எகத்தாளமாக.

“இருக்கட்டும்! அதை நான் பார்த்துக்கிறேன். நீங்க ஒன்னும் அதுக்காக வெசனப்பட வேணாம்…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

“இவென் என்னங்க இப்படிச் சொல்லிப் போட்டு போறயான்?” என்று காமாட்சி மிரட்சியுடன் கேட்க,

“நீ ஒன்னும் கவலைப்படாதேடி. அவன் நினைக்கிறது தலைகீழா நின்னா கூட நடக்காது. இப்ப என்ன அந்தப் புள்ள முத்துப்பாண்டி மவ மட்டுமுண்டு நினைச்சானா? முத்துவேல், வள்ளியோட மருமவ. அவளைப் பொண்ணு கேட்குறேண்டு போனா சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருப்பாய்ங்களா என்ன? விரட்டி அடிக்கப் போறாய்ங்க. தலையைத் தொங்க போட்டுட்டு வர போறயான். பார்க்கத்தானே போற…” என்று மீசையை முறுக்கி விட்டு நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டார்.

காமாட்சிக்கும் அப்போது தான் நிம்மதியான மூச்சு வந்தது.

அவர்கள் பேசிக் கொண்டது காதில் விழுந்தாலும், அதற்கு எல்லாம் அதிவீரன் அலட்டிக் கொள்ளவே இல்லை.

அங்கைக்குத் திருமணம் முடிந்திருக்காத போதே அவனின் விருப்பம் யாராலும் காது கொடுத்து கேட்கப்படவில்லை. இப்போது சொல்லவே வேண்டாம். நிச்சயம் போராட வேண்டியது இருக்கும் என்று தெரிந்தே தான் தன் முடிவை எடுத்திருந்தான்.

அப்போது அவன் நினைவில் இருந்தது எல்லாம் அடுத்து என்ன செய்யலாம் என்பது மட்டுமே.

இனியும் அங்கையை அந்த நரக வேதனையில் விட்டுவைக்கக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்.

இரண்டு நாட்கள் சென்றிருந்த நிலையில், திருநாவுக்கரசுவின் தந்தை முத்துவேல் அவரின் தோட்டத்தில் இருப்பதை அறிந்து அங்கே சென்றான் அதிவீரன்.

தென்னை மரத்திலிருந்து ஆட்கள் தேங்காயை இறக்கி கொண்டிருக்க, அதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார் முத்துவேல்.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று அவரின் முன்னால் சென்று நின்றான் அதிவீரன்.

அவனைக் கேள்வியுடன் பார்த்த முத்துவேல், “என்னப்பா, என்ன விசயம்?” என்று கேட்டார்.

“இப்படித் தனியா வாங்க, சொல்றேன்…” என்று ஆட்களை விட்டு விலக்கி அவரை அழைக்க, அவனைப் புரியாமல் பார்த்தார்.

மகனின் நண்பனாக அவருக்கு அவனைத் தெரியும். திடீரென அவன் தன்னை இப்படிப் பேச அழைப்பது அவருக்குப் புரியாத புதிராக இருந்தது.

“செத்த நேரந்தேன். முக்கியமான விஷயம்…” என்றான் அதிவீரன்.

அவன் கண்களில் இருந்த தீவிரம் அவனிடம் அவரைத் தனியாகப் பேச தூண்ட, “சொல்லுப்பா…” என்று விலகி வந்து கேட்டார்.

“எனக்குச் சுத்தி வளைச்சு எல்லாம் பேச வராது. நேரா விசயத்துக்கு வந்துடுறேன். எனக்கு அங்கையைப் பிடிச்சிருக்கு. அவளைக் கட்டிக்க ஆசைப்படுறேன். அவளை எங்கிட்டவே தந்திடுங்க…” என்று பட்டென்று போட்டு உடைத்தான்.

“ஏய், என்னப்பா… என்ன சொல்ற நீ?” என்று அதிர்ந்து கத்தினார் முத்துவேல்.

கூடவே அவரின் முகம் கோபத்திலும் சிவக்க ஆரம்பித்தது.

“அவ யாரு-ண்டு தெரியுமா? எம் மருமவ. எம் மவனோட பொண்டாட்டி. அவளைப் போய்…” என்று கேட்டவர், அவனின் சட்டையைப் பிடித்துவிட்டார்.

தன் சட்டையைப் பிடித்திருந்த அவரின் கையை நிதானமாகப் பார்த்த அதிவீரன், “இப்படித்தேன் அங்கை கல்யாணத்துக்கு முன்ன, அவளைப் பொண்ணு கேட்டப்ப அவ அப்பாவும் என் சட்டையைப் பிடிச்சார். இப்ப நீங்க…” என்று விரக்தியாகப் புன்னகைத்தான்.

“என்ன சொல்ற நீ?” என்று அதிர்ந்து கேட்டார்.

“நடந்ததைச் சொல்றேன்…” என்றவன், அங்கையைத் தான் விரும்ப ஆரம்பித்ததிலிருந்து அனைத்தையும் சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்டு திகைத்து, சில நொடிகளில் தெளிந்த முத்துவேல், “இப்ப எதுக்கு இதை எல்லாம் எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கவன்?” என்று கேட்டார்.

“திரு இப்ப உசுரோட இருந்து, அங்கை அவென் கூடச் சந்தோஷமா வாழ்ந்திருந்தா இதை எல்லாம் யார்கிட்டயும் சொல்ல வேண்டிய அவசியமே எனக்கு வந்திருக்காது…” என்று அதிவீரன் சொல்ல,

“அப்ப எம் மவன் எப்ப சாவாண்டு காத்துக்கிட்டு கிடந்தயோ?” என்று கோபமாகக் கேட்டார்.

அவரை வெறித்துப் பார்த்தவன், “அப்படிக் கேவலமான புத்தி எனக்கு இல்லை. அவுக ரெண்டு பெரும் நல்லா இருக்கணுமுண்டு தேன் நினைச்சேன். ஆனா, நடந்ததை இன்னும் என்னாலும் ஏத்துக்கத் தேன் முடியலை. இப்ப எல்லாம் நான் அடிக்கடி நினைக்கிறது என்ன தெரியுமா? ஒ உசுருக்கு பதிலா என் உசுரு போயிருக்கக் கூடாதாடா திரு-ண்டு தேன்…” என்றவனை அவர் சலனமே இல்லாமல் பார்க்க,

“விதி அவென் வாழ்க்கையை மட்டும் இல்லாம அங்கை வாழ்க்கையையும் முடிச்சிருச்சுண்டு நான் அழாத நாள் இல்லை. இப்ப கூட உங்க வூட்டுல அங்கை நிம்மதியா இருந்திருந்தா இப்படி உடனே உங்க முன்னாடி வந்திருப்பேனா தெரியாது. ஆனா, அங்கை உங்க வூட்டுல நிம்மதியா இல்லாதது மட்டும் இல்லாம, ஏன் உசுரோட இருக்கோமுண்டு அவ நினைக்கிற நிலைக்குக் கொண்டு வந்து விட்டுட்டீக…” என்று குற்றம் சாட்ட, அவனை அதிர்ந்து பார்த்தார் முத்துவேல்.

“இப்படியெல்லாம் அவ உங்கிட்ட வந்து சொன்னாளா என்ன?” என்று முகம் சிவக்க கேட்டார்.

அவரை இகழ்ச்சியாகப் பார்த்தவன், “அவ தனியா வேற சொல்லணுமாக்கும்? அதான் வூருக்கே தெரியுறது போலத் தானே உம்ம பொஞ்சாதி மருமவளை நடத்துறாக…” என்றான்.

அவருக்கு வாயடைத்துப் போனது. உடனே எதுவும் பேச முடியாமல் மௌனமானார்.

அவரை வாயடைக்க வைத்து விட்டாலும், “அங்கைய மட்டும் தப்பா நினைச்சுடாதீக. அவ அப்பவே என்னைய வேணாமுண்டு தேன் சொன்னா. இப்ப மட்டும் வேணுமுண்டு சொல்லிடுவாளா என்ன?” அங்கையை அவர் எதுவும் தவறாக நினைத்து விடக்கூடாது என்று வேகமாகச் சொன்னான்.

அவனை யோசனையுடன் பார்த்தவர், “அங்கை உன்னைய வேணாமுண்டு சொல்லிட்டா. இப்ப அவ ஏ வூட்டு மருமவளா இருக்கும் போது இப்படி நீ கட்டி வைங்கண்டு கேட்டு வர்றது உனக்கே நியாயமா இருக்கா? எந்தத் தைகிரியத்தில் இப்படிக் கேட்டுட்டு வந்து நிக்கிறவன்?” என்று கேட்டார்.

“அவளுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை என்னால கொடுக்க முடியும்ங்கிற தைகிரியத்தில் தான்…” என்றான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு.

“இதோ பார். அவ நிம்மதியா இல்லைண்டு நீயா நினைச்சுக்கிட்டா ஆச்சா? எம் பொண்டாட்டி புள்ள போன துக்கத்துல கொஞ்சம் பேசுறாளே தவிர, அங்கைய நாங்க யாரும் கொடுமை படுத்தலை. பெரிய நல்லவன் கணக்கா வாழ்க்கை தர்றேண்டு வந்து நிக்காத! போ… போய்ப் பொழப்பை பாரு…” என்றார் சற்று கடுமையாகவே.

“உம்ம பொண்டாட்டி கொஞ்சமா பேசுதா? இப்படிச் சொல்ல உமக்குக் கொஞ்சம் கூடக் கூசலை?” என்று ஆத்திரமாகக் கேட்டான்.

“டேய், நீ ரொம்பப் பேசுற. திருவோட கூட்டாளியாச்சேண்டு தேன் உன்கிட்ட கொஞ்சம் பொறுமையா பேசினேன். இனியும் உனக்கு மருவாதை இல்லை. போடா இங்கிருந்து. வந்துட்டியான் பொண்ணு கேட்டு. யார் வூட்டுப் பொண்ணை யாரு கேட்குறது? எம் மவன் பொண்டாட்டி அவ. அவ சாகுற வரை எம் மவனோட பொண்டாட்டியா மட்டுந்தேன் இருப்பா…” என்று முத்துவேல் சொல்ல,

“அந்தப் புள்ள அது வாழ்க்கைய ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ளார முடிஞ்சு போச்சுது. அந்தப் புள்ளய கால முச்சூடும் உங்க வூட்டு வேலைக்காரியா வச்சு அழகு பார்க்க போறீகளோ?” என்று ஆவேசமாகக் கேட்டான் அதிவீரன்.

“அழகு பார்க்குறோமோ, என்ன பார்க்குறோமோ… அது உனக்கு எதுக்குடா? உன் சோலி கழுதைய பார்த்துட்டு போடா…” என்றார் அவரும் அதே ஆவேசத்துடன்.

“திருவோட அப்பா கொஞ்சம் நியாயமா இருப்பாருண்டு நினைச்சுப்புட்டேன். அது தப்புண்டு நிரூபிச்சுட்டீர்…” அவன் சொல்ல,

“இங்க என்ன பிரச்சினை மாப்ள. இவென் எதுக்கு இங்கன வந்திருக்கியான்…” என்ற படி அப்போது அங்கே வந்தார் முத்துப்பாண்டி.

“அங்கைய அவனுக்குக் கட்டிக்கிடணுமாம். அவ மாமனார் எங்கிட்டயே வந்து பொண்ணு கேட்கிறயான்…” என்று முத்துவேல் கோபத்துடன் சொல்ல,

“என்ன?” என்று அதிர்வுடன் ஆத்திரமும் கொண்ட முத்துப்பாண்டி, “உன்னைய சும்மா விட்டது தப்புடா. அன்னைக்கே உன்னைய வெட்டாம வுட்டுப்புட்டேன். உன்னைய இன்னைக்கு விட மாட்டேன்டா…” என்று கர்ச்சித்த படி அதிவீரனை அடிக்கப் பாய்ந்து வந்தார்.

இரண்டு கால்களையும் அகல விரித்துத் திடமாக நின்றவன், அவரின் கை தன் மேல் படவிடாமல் அவரின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டவன், “யோவ்! மேல கையை வைச்ச வெட்டி பொலி போட்டுடுவேன்…” என்று முகம் சிவக்க எச்சரித்தான் அதிவீரன்.

“ஏலேய், யார் எடத்துக்கு வந்து என்ன பேச்சு பேசுறவன்? நீ வெட்டி பொலி போடுற வரைக்கும் பார்த்துக்கிட்டு பொத்திக்கிட்டு இருப்போமுண்டு நினைச்சியோ? அந்த அருவாளை எடுங்க மாப்ள. இவனை ஒரே வெட்டா வெட்டி போட்டுறேன். இனி பொண்ணு கேட்கிறேண்டு இவென் வாயையே தொறக்க கூடாது…” என்று வேட்டியை மடித்துக் கொண்டு வந்தார் முத்துப்பாண்டி.

“வாய்யா, வா… நீ வெட்டத் தேன் எங்-கழுத்தை நீட்டிக்கிட்டு வந்துருக்கேன். கூறுகெட்ட கூவைகளா! வாழ வேண்டிய பொண்ணு வாழ்க்கை இழந்துட்டு நிக்குதே… அதுக்கு ஒரு வாழ்க்கை வேணுமுண்டு நினைக்கத் துப்புல்லை. என்னைய வெட்ட போறாராம். வாய்யா, முடிஞ்சா எம் மேல கை வச்சு பாருய்யா…” என்று அதிவீரனும் வேட்டியை மடித்துக் கட்டி, கை சட்டையை மேலே இழுத்து விட்டு, அவரை அடிக்கத் தயாராகவே நின்றான்.

“டேய், எம் பொண்ணு வாழ்க்கைய பத்தி கவலைப்பட நாங்க இருக்கோம். நீ எவென்டா அவளைப் பத்தி பேச?” என்ற முத்துப்பாண்டி அவனை அடிக்கக் கையை வீசினார்.

அசால்டாக அவரின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியவன், “நான் பேசாம வேற எவென்யா பேசுவியான்? நீயும், உந்தங்கச்சி புருஷனுமா? நீங்க நல்லா பேசுவீங்கய்யா. உம் பொண்ணு புருஷனை இழந்துட்டு மாமியாகிட்ட தெனம் தெனம் பேச்சு வாங்கி உசுரோட செத்துட்டு இருக்கா. உம் மாப்ள பொண்டாட்டி வாயை அடக்கத் துப்பு இல்லாம, பேச விட்டு வேடிக்கை பார்க்குறாரு. கேட்டா புள்ள போன துக்கத்துல பேசுதாம் அந்த அம்மா.

ஏன்யா, செத்தது அந்த அம்மாவோட புள்ள மட்டுமா? அங்கைக்குப் புருஷனும் தானே? புருஷன் செத்துப் போனா அதுக்கு அவ என்னய்யா பண்ணுவா? அந்த அம்மாவுக்குப் புள்ள போனா, அவளுக்குப் போனது அவ எதிர்காலம்யா. அதைப் பத்தி கொஞ்சமும் நினைக்காம அவ என்ன தப்பு செய்தாண்டு உந்தங்கச்சி அங்கைய உசுரோட கொன்னுட்டு இருக்கு?

அதுதேன் அப்படினா, நீர் உம் பெண்ணுக்காக என்னய்யா செய்தீர்? நீரு பெத்த பொண்ணு எம்புட்டு இடி வாங்கிச் செத்தாலும் பரவாயில்லை, புகுந்த வூட்டுல தேன் இருக்கணுமுண்டு வீம்பு புடுச்சுக்கிட்டு இருக்கீரு. உந்தங்கச்சிய தட்டி கேட்க கூட உமக்குத் துப்பு இல்லை. பொத்திக்கிட்டு இருக்கிறீரு. அப்போ உம் பொண்ணு எப்படிப் போனாலும் பரவாயில்லை. உமக்கு உம்ம கௌரவம் தேன் முக்கியம்?

பெத்த புள்ள மனசு அங்க துடிச்சுக்கிட்டுக் கிடக்குறது கண்ணுக்குத் தெரியலை. கண்ணுக்கு தெரியாத கௌரவ மசுரு உமக்குப் பெருசா போச்சுதோ? பாவிகளா! இந்த வாழ்க்கை வாழ்றதுக்குச் செத்து போவலாமுண்டு அந்தப் புள்ளய நினைக்க வச்சுட்டீகளே… நீங்க எல்லாம் நல்லா இருப்பீகளாய்யா?” என்று பற்களைக் கடித்துக் கொண்டு ஆத்திரமாகக் கேட்டான்.

அவனின் பல நாள் ஆதங்கம் மொத்தமும் வெடித்துக் கொண்டு வெளியே வந்தது.

மனதிற்குள்ளேயே அவன் புழுங்கிய புழுக்கம் எல்லாம் படபடவென்று வெளியே வந்தே விட்டிருந்தது.

முத்துப்பாண்டியும், முத்துவேலும் சில வினாடிகள் திகைத்து நின்றுவிட்டனர்.

அதிலும் அவன் இறுதியாகச் சொன்னது, செத்துப் போய்விடலாம் என்று அங்கை நினைத்தாளா என்பதில் அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

இருவரையும் வெறுப்புடன் பார்த்த அதிவீரன், “என்னடா இவென் பொசுக்கு பொசுக்குண்டு பொண்ணு கேட்க வர்றயான். நம்ம சம்மதம் இல்லாம அங்கைய நெருங்க மாட்டாண்டு நினைச்சீகளோ? உமக்குத் தேன் பொண்ணு புகுந்த வூட்டுல செத்தாலும் பரவாயில்லை. எப்படியும் போவட்டுமுண்டு தண்ணி தெளிச்சு வுட்டுப்புட்டீரு. ஆனா இந்த ஆளு, மருமவ தனிச்சி நின்னுட்டாளே அவளுக்கு எதுவும் நல்லது செய்வாரோண்டு ஒரு நப்பாசையில் வந்துபுட்டேன். பொண்ணைத் தூக்க முடியாத கோழைண்டு நினைச்சீகளோ? எல்லாம் முறையா செஞ்சாதேன் அங்கைக்கும் மருவாதைண்டு நினைச்சுத் தேன் பேச வந்தேன்.

ஆனா, நீங்க எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைங்க. இந்த மர மண்டைகளுக்குத் தன் வூட்டுப் பொண்ணை விடக் கௌரவம் தேன் முக்கியமுண்டு இப்ப எனக்கு நல்லா புரிஞ்சி போச்சுது. இனியும் பேசிட்டு இருந்தா நான் ஆம்பளயே இல்லை. இனி பேச்சே இல்லை. வீச்சு தேன்…” என்று கண்களைப் பெரிதாக விரித்து, புருவத்தை உயர்த்திச் சொன்னவன் கீழ் உதட்டை கடித்துத் தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

முத்துப்பாண்டி, முத்துவேல் இருவர் முகத்திற்கு நேராகவும் சொடக்கு போட்டவன், “நீங்க எவனும் அங்கைக்கு நல்லது பண்ண வேணாம்யா. நான் இருக்கேன் அவளுக்கு. அவளுக்காக மட்டுந்தேன் இது துடிச்சுட்டு இருக்குய்யா. இது மேல சத்தியம்! அவளை நிம்மதியா சந்தோஷமா வாழ வச்சு காட்டுவேன்…” என்று தன் இதயபகுதியை தட்டிக் காட்டி ஆவேசமாகச் சபதமிட்டான் அதிவீரன்.