என்னிதய தாள லயமாய் நீ – 14

அத்தியாயம் – 14

மேலும் ஒரு மாதத்தைக் கடந்திருந்தது.

அங்கையைக் கோவிலில் பார்த்த பிறகு மீண்டும் இரண்டு, மூன்று முறை பார்த்தான் அதிவீரன்.

தாமரை தான் அக்காவை வெளியே அழைத்து வருவாள்.

நாட்கள் சென்றாலும் வள்ளி அங்கையைப் பேசுவது சிறிதும் குறையவில்லை.

அவரின் வார்த்தையின் வீரியத்தில் தாக்கப்பட்ட அங்கை இன்னும் நலிந்து தான் போனாள்.

அவளின் நலிவை காணும் போதெல்லாம் அதிவீரன் துடித்துப் போவான்.

மகளை இப்படிப் பேச்சு வாங்க விட்டுவிட்டு அவளின் அப்பா என்ன செய்கிறார் என்ற கோபம் துளிர்த்துக் கொண்டு வரும்.

ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கும் நிலை வேறு அவனைக் கொல்லாமல் கொள்ள, தன்னையே வெறுத்த நிலையில் இருந்தான் அவன்.

வாரத்தில் ஒரு நாள் தாமரை அக்காவை வெளியே அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தாள்.

அதை அறிந்து கொண்டவன், அன்று கடையில் வேலை இருந்தும் மாறனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவர்கள் வழக்கமாக வரும் கோவிலுக்குச் சென்று காத்திருந்தான்.

அவனின் காத்திருப்பைப் பொய்யாக்காமல் அங்கையும், தாமரையும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

இருவரும் சாமி கும்பிட்டு விட்டு அமரவும் அவனும் அவர்கள் கண் மறைவில் அமர்ந்து கொண்டான்.

“சோறு திங்கிறீயா இல்லையா அங்கை? வர வர எலும்பும் தோலுமா ஆகிட்டு வர்றவ…” என்று தாமரை வருத்தத்துடன் கேட்க,

“திங்கிறேன். திங்காம என்ன?” என்று அங்கை சொல்ல,

“எங்க திங்கிறவ? சோறையே கண்ணுல காணாதவளாட்டம் இருக்கவ…”

“ப்ச்ச்!” சலித்துக் கொண்டாள் அங்கை.

“அத்தை இன்னும் வாயை அடக்கவே இல்லையா அங்கை?”

“விடு தாமரை. அதைப் பேசி என்ன ஆவ போவுது?”

“என்ன நீ இம்புட்டு விரக்தியா பேசுறவ? அத்தை பேசினா பதிலுக்குப் பேசி விடு. அதை வுட்டுப்புட்டு எதுக்கு உன்னையே நீ வருத்திக்கிற?” என்று கடிந்து கொண்டாள் தாமரை.

“ம்ப்ச், போ தாமரை. ஏன் வாழுறோமுண்டு இருக்கு…” என்றதும், அவளை வேதனையுடன் பார்த்த தாமரை,

“என்னாச்சு அங்கை. போன வாரத்தை இந்த வாரம் ரொம்பச் சலிப்பா பேசுறவ? அத்தை புதுசா எதுவும் பிரச்சினை பண்ணுதா?” தாமரை கேட்க,

அங்கை பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

அவள் கண்கள் மட்டும் பதில் சொல்வது போல் கண்ணீரை வெளிப்படுத்தின.

அதுவே என்னவோ இருக்கிறது என்று தாமரைக்குச் சொல்லிவிட, “இப்ப என்னண்டு சொல்ல போறீயா இல்லையா?” என்று அதட்டினாள்.

அங்கை அப்போதும் அமைதியாக இருக்க, “பேசுக்கா. இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” பொறுமை பறக்க கேட்டாள்.

கண்களைத் துடைத்துக் கொண்ட அங்கை, “உங்கிட்ட அதை எப்படிச் சொல்றதுண்டு தெரியலைடி…” என்று முனகினாள்.

“எதுவா இருந்தாலும் சொல்லு. தங்கச்சியா நினைக்காம உன் சிநேகிதியா நினைச்சுக்கோ…” என்று ஆறுதலாகச் சொன்னாள்.

அதன் பிறகும் சில நொடிகள் அமைதியாக இருந்த அங்கை மெல்ல தொண்டையைச் செருமி பேச ஆயத்தமானாள்.

“ஒரு வாரம் புருஷன் கூட வாழ்ந்தும் ஏன் புள்ள வரலைண்டு கேட்குறாகடி தாமரை…” என்று சொல்லி முடிக்கும் போது தேம்பிவிட்டாள்.

“என்ன?” என்று அதிர்ந்தாள் தாமரை.

அதே அதிர்வு தான் அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அதிவீரனுக்கும் வந்தது.

ஒருவாரம் வாழ்ந்ததும் பிள்ளை வரம் எத்தனை பேருக்கு கிடைத்துவிடும்? சிலருக்கு வருடக் கணக்காக கூட ஆகும் போது இதென்ன இப்படி? என்று தான் அவனுக்குத் தோன்றியது.

அவன் நினைத்ததையே தான் தாமரையும் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அத்தை என்ன முழுசா லூசாவே ஆகிடுச்சா? அவனவன் பிள்ளை வரம் கேட்டு வருச கணக்கா தவம் கிடக்குறான். ஒரே வாரத்தில் புள்ள வேணுமாக்கும் அந்த அத்தைக்கு?” என்று கடுப்பாகக் கேட்டாள்.

“மச்சானோட அவுக வம்சம் இல்லாம போயிடுச்சாம். உனக்கு ஏன் புள்ள தழையில? புள்ள வந்துருந்தா எம் மவன் முகத்தைப் பார்க்க முடியாத ஏக்கத்தைப் பேர புள்ள முகம் பார்த்து போக்கிருப்போம்ண்டு சொல்றாகடி தாமரை. அவுக அப்படிச் சொல்லவும், எனக்கும் கூட அந்த ஆசை வந்துச்சு. எனக்குண்டு ஒரு புள்ள இருந்தா இந்த ஜென்ம பொறப்பை நான் எம் புள்ள முகம் பார்த்து வாழ்ந்துக்கிடலாமுண்டு நினைச்சேன். என் நினைப்புக்கு ஏத்த மாதிரி நான் தலைக்குக் குளிக்காம இருந்தேன்டி…” என்று அங்கை தயக்கத்துடன் சொல்ல,

“அக்கா…?” என்று தாமரை கூடச் சற்று ஆவலாகவே கேட்டாள்.

உதட்டை பிதுக்கி, மறுப்பாகத் தலையை அசைத்த அங்கை, “மச்சான் போன துக்கத்துல மன உளைச்சலில் இருந்ததால வூட்டுக்கு விலக்காகுறது தள்ளி போயிருச்சு போலடி. போன வாரம் குளிச்சிட்டேன்…” என்று ஏமாற்றத்துடன் சொல்ல, தாமரையின் முகமும் ஏமாற்றத்தை பிரதிபலித்தது.

“எனக்கு ரொம்பக் கஷ்டமா போயிருச்சுடி. ஆனா, என்னைய விட அத்தைக்கு ரொம்ப ஏமாத்தம் போலிருக்கு. புள்ள பெத்துக்கக் கூட நீ லாயிக்கு இல்லையா. என்ன பொம்பள ஜென்மம்டி நீ. நீயெல்லாம் ஏன் பொம்பளயா பொறந்த? ராசி கெட்டவளேண்டு ரொம்பப் பேச ஆரம்பிச்சுட்டாகடி தாமரை…” என்றவள் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

அவளை அணைத்துக் கொண்டு ஆறுதல்படுத்திய தாமரை, “விடுக்கா. மவன் போன துக்கத்துல அத்தைக்கு மூள குழம்பி போச்சுது போலிருக்கு. புள்ள வரலைண்டா அதுக்கு நீ என்ன பண்ண முடியும்? அது கூடப் புரிஞ்சுக்காம அதுதான் அறிவில்லாம பேசுதுண்டா நீயும் அழுதுகிட்டு கிடக்கவ…” என்றாள்.

“எதுக்கெடுத்தாலும் ராசியில்லாதவ, தரித்திரம் பிடிச்சவ, பீடைனே வைய்யுறாகடி தாமரை. எனக்கே இப்ப எல்லாம் நான் அப்படித்தானோண்டு இருக்கு. இந்தத் தரித்திரம் புடுச்சவ எதுக்கு இந்தப் பூமியில இருக்கணுமுண்டு இருக்கு…” என்றாள் தேம்பலுடன்.

“அட, ச்சீ! நீயும் லூசாட்டம் உளறாத. நீ அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நீயா ஏதாவது யோசிச்சு மனச குழப்பிக்கிட்டு கிடக்காதே…” என்று அதட்டினாள் தாமரை.

அக்காவும், தங்கையும் பேசிக் கொண்டிருக்க, ஒன்றுவிடாமல் கேட்ட அதிவீரனின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

அங்கையை அனுதினமும் வார்த்தையாலேயே கொல்லும் வள்ளியை அடித்து நொறுக்கும் வேகம் எழுந்தது.

அதை விட, மகளை இப்படி நிர்கதியாக விட்டுவிட்டு முத்துப்பாண்டி ஏன் பேசாமல் இருக்கிறார் என்ற கேள்வி பிடித்து ஆட்டியது.

அங்கையும், தாமரையும் கிளம்பும் போது வழக்கம் போல் பின்னால் சென்றான்.

அங்கை வீட்டிற்குள் சென்றதும் இன்று திரும்பி செல்லாமல் தாமரையின் பின் சென்றான்.

வீட்டிற்குச் செல்ல தாமரை ஒரு சந்திற்குள் திரும்ப, அவனும் திரும்பும் போது சட்டென்று நின்று அவன் முன் வந்து நின்றாள் தாமரை.

அவன் வேகமாக நின்றுவிட, “யோவ்! நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். நீரு என்ன எம் பின்னாலேயே வாறீரு? என்ன நினைச்சுட்டு இருக்கீரு? ஏ அப்புகிட்ட சொன்னா உன்னைய வகுந்துடுவாரு…” என்று ஆவேசமாகத் தாமரை சொல்ல, அதிவீரன் புன்சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.

“இந்தா, இங்கன என்ன சோவா காட்டுறாய்ங்க? பல்லை காட்டுறீரு… சண்டைக்காரவுகிட்ட பேச கூடாதுண்டு ஒதுங்கி போனா, நீரு ரொம்பத் தேன் பண்றீரு. எதுக்கு எம் பின்னாலேயே வர்றீரு?” என்று கோபமாகக் கேட்டாள்.

“நான் உம் பின்னால வர்றதை இன்னைக்குத் தேன் கண்டியா என்ன?” என்று நமட்டு சிரிப்புடன் கேட்டான்.

திருத்திருவென முழித்தவள், “அது…” என்று இழுத்தாள்.

“ம்ம், சொல்லு…”

“ஒரு மாசமா பார்க்குறேன். எம் பின்னாலேயே வர்றீரு…” என்றாள் அவனைக் கூர்ந்து பார்த்த வண்ணம்.

“தப்பு…” என்று தலையை அசைத்தவன், “நான் இன்னைக்குத் தேன் உம் பின்னால வாறேன்…” என்றான்.

“இந்தா யாருகிட்ட லந்து பண்றீரு? ஒரு மாசமா எம் பின்னால வந்துட்டு இருக்கீரு. நான் பார்த்தேன். தேவையில்லாம பிரச்சினை வேண்டமுண்டு தேன் ஒதுங்கிப் போனேன். இன்னைக்கு என்னடானா விடாம தொரத்திக்கிட்டு வர்றீரு…” என்றாள்.

“ஒரு மாசமா வந்தேன். ஆனா, உம் பின்னால வரலை. இன்னைக்குத் தேன் உம் பின்னால வாறேன்…” என்றான் விளக்கமாக.

“எம் பின்னால வரலையா? அப்ப வேற யார் பின்னால வந்தீரு? யாருகிட்ட காது குத்த பார்க்குறீரு. எனக்கு ஏற்கெனவே காது குத்திட்டாய்ங்க…” தாமரை எரிச்சலாகச் சொல்ல,

“காது எல்லாம் சரியாத்தேன் குத்தியிருக்காய்ங்க. உங்கண்ணு தேன் சரியா தெரியலை போலிருக்கு. தெரிஞ்சிருந்தா நான் உம் பின்னால வரலை. ஒ அக்கா பின்னால வந்தேண்டு உனக்குத் தெரிஞ்சிருக்கும்…” அதிவீரன் இடக்காகச் சொல்ல,

“ஆத்தாடி!” என்று அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தாள் தாமரை.

“ஏ அக்கா பின்னால வந்தீரா?” என்று அதிர்வு இருந்தாலும் நம்பிக்கை இல்லாமல் கேட்டாள்.

அவன் ‘ஆமாம்’ என்று தலையை அசைக்க, தாமரை சட்டென்று கோபமாக அவனைப் பார்த்தாள்.

“ஏ அக்கா கல்யாணம் முடிஞ்சவ. அவ பின்னாடி சுத்துறேண்டு சொல்றீரு. உமக்கு வெட்கமா இல்லை?” என்று கோபமாகக் கேட்டாள்.

அவளை வலியை தாங்கிய கண்களுடன் பார்த்தவன், “ஒ அக்காவுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்றதுக்கு முன்ன இப்படி நான் அவ பின்னால சுத்தியிருந்தா அவ இந்த நேரம் என் பொண்டாட்டி ஆகிருப்பா. நீயும் அக்கா புருஷனுக்குக் கொடுக்குற மரியாதையை எனக்குக் கொடுத்திருப்ப. அப்ப கோழையா இருந்துபுட்டேன். அதனால தேன் நான் அவளை இழந்துட்டு நிக்கிறேன். அவ அவளோட வாழ்க்கையையே இழந்துட்டு நிக்கிறா…” என்றான் விரக்தியுடன்.

அதிர்ந்து அவனைப் பார்த்த தாமரை, “என்ன சொல்றீரு?” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.

“உண்மையைச் சொல்றேன். ஒ அக்காவை நான் விரும்பினேன். அதை அவகிட்ட சொன்னேன். என்ன நான் சொன்ன போது காலம் தாழ்ந்திருச்சு. அவளுக்குத் திருவைத் தேன் பிடிச்சிருக்குண்டு சொல்லிட்டா. அதுதேன் நான் விலகி நின்னேன். தப்பு பண்ணிட்டேண்டு இப்ப தோணுது. அவளை வம்படியா தூக்கிட்டு போயாவது கல்யாணம் கட்டியிருக்கணும். அப்படி மட்டும் நடந்திருந்தா புருஷனை இழந்து, இப்ப அவ மாமியா கிட்ட சித்திரவதை அனுபவிக்காம இருந்திருப்பா…” என்றான்.

தாமரைக்கு அவன் பேச பேச மலைப்பாக இருந்தது. என்ன சொல்கிறான் இவன்? என்பது போல் மலங்க மலங்க அவனைப் பார்த்தாள்.

அவனுக்கு அவள் மனநிலை புரிந்தது.

“விரோதி குடும்பமுண்டு ஏ அப்பன், ஆத்தா ஒ அக்காவை பொண்ணு கேட்க தயாராயில்லை. உம் பெரியப்பன் கிட்ட நானே போய்ப் பொண்ணு கேட்டப்ப சட்டையைப் புடுச்சுச் சண்டை போட்டு விரட்டி விட்டார். அப்படியும் அவளை விட மனசு இல்லாம, தூக்கிட்டுப் போய்க் கல்யாணம் பண்ணனுமுண்டு நினைச்சேன்…” என்று சொல்ல,

“ஐயோ!” என்று அதிர்ந்தாள் தாமரை.

அவள் குறுக்கிடவே இல்லை என்பது போல் பேசிக் கொண்டே போனான்.

“ஆனா உன் அக்கா சும்மா சொல்லலை, நிஜமாவே அவளுக்கு அவென் மேல விருப்பமுண்டு தெரிஞ்ச பொறவு தேன், அவள் நினைச்ச வாழ்க்கை வாழட்டுமுண்டு நினைச்சேன். ஆனா இப்படி எல்லாம் ஆவுமுண்டு நினைக்கவே இல்லை. புருஷனையும் இழந்து, இப்ப மாமியாக்கிட்டயும் இடி வாங்கிக்கிட்டு இருக்கா. அவளுக்கு இந்தத் துன்பம் வர நானும் ஒரு காரணமோண்டு உறுத்தலா இருக்கு. அவ துன்பத்தை எப்படியாவது போக்கணுமுண்டு தவிப்பா இருக்கு.

எனக்கே இப்படி இருக்கும் போது, உம் பெரியப்பனுக்கு ஏன் துடிக்கலை? எதுக்கு அவரு அங்கைய உங்க வூட்டுக்கு கூப்பிட்டுக்காம இப்படி இடி சோறு வாங்க விட்டுக்கிட்டு இருக்காரு? அங்கை புள்ள இப்படி ஓடா தேய்ஞ்சிக்கிட்டே போவுது. இப்படியே போனா அவ என்ன ஆவாண்டு கூட நினைக்காம எதுக்குத் தங்கச்சி வூட்டுல அவளை விட்டு வச்சுருக்காரு? ரொம்ப நாளா இந்தக் கேள்வி என்னைப் போட்டு உலுக்கி எடுத்துட்டு இருக்கு. அதுதேன் உங்கிட்ட கேட்கலாமுண்டு உம் பின்னால வந்தேன்…” என்றான் அதிவீரன்.

தாமரை பேச மறந்தவள் போலத் திகைத்து நின்றாள்.

இவ்வளவு நடந்திருக்கிறதா? என்று வியப்புடன் நினைத்துக் கொண்டாள்.

அவளைப் பொறுத்தவரை, அவன் சண்டைக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது மட்டுமே.

அவன் தன் அக்காவை விரும்பியிருப்பான். அவளிடம் தன் மனதை சொல்லி மறுப்பையும் வாங்கியிருக்கிறான். பெரிய தந்தையிடம் பெண் கேட்டு அவர் விரட்டி விட்டிருக்கிறார் என்பதெல்லாம் அவள் நினைத்து பார்த்திராத ஒன்று.

அதை விடத் தன் அக்காவை தூக்க நினைத்தானாமே? என்று அதிர்ந்திருந்தவள், ஒருவேளை அப்படித் தூக்கியிருந்தால் தன் அக்காவிற்கு இவ்வளவு துன்பம் நேர்ந்திருக்காதோ? என்று ஒரு நொடி அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவள் அந்தச் சிந்தனையில் இருக்க, “சொல்லு தாமரை, எதுக்கு அங்கையை இப்படியே விட்டு வச்சுருக்காக?” என்று கேட்டான் அதிவீரன்.

சிந்தனையிலிருந்து வெளியே வந்தவள், அவன் கேள்வியை உள்வாங்கி, “எங்க வூட்டு விசயத்தை உங்ககிட்ட எப்படிச் சொல்ல முடியும்?” என்று விறைத்துக் கொண்டு கேட்டாள்.

“நீ சொல்லலைண்டா உன் பெரியப்பன்கிட்டயே நேரா போய்க் கேட்பேன்…” என்றான் மிரட்டலாக.

அவனை நக்கலாகப் பார்த்தவள், “போய்க் கேளுங்களேன். அருவா வரும்…” என்றாள்.

“அருவாக்கெல்லாம் பயந்தவன் நான்னு நினைச்சியோ? உன் பெரியப்பன்கிட்டயே நேரா போய்க் கேட்குற அளவுக்கு எனக்குத் தகிரியம் இருக்கு. அதுனால ஒ அக்காவுக்கு எதுவும் பிரச்சினை வந்திட கூடாதுண்டு தேன் உங்கிட்ட கேட்டுட்டு இருக்கேன்…” என்றான் நிதானமாக.

தாமரை அப்போதும் அமைதியாக இருந்தாள்.

“தயவு செய்து சொல்லு தாமரை. என்னால அங்கைக்கு நடக்குற கொடுமையைப் பார்த்துட்டு நிம்மதியா இருக்க முடியலை. ராவு படுத்து நான் தூங்கி பல நாள் ஆச்சு. அவளை அப்படி வேதனை பட வுட்டுப்புட்டு நான் மட்டும் நிம்மதியா தின்னுட்டு திரியுறேண்டு இருக்கு. சொல்லு புள்ள…” என்றான் தவிப்புடன்.

அவனின் தவிப்பு அவளைத் தாக்கியது.

தன் அக்காவிற்காக அவன் அப்படி உருகுவதை அவளால் எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை.

அவனின் தவிப்பு உண்மை என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது.

அதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாமல், தன் பெரிய தந்தை அன்று தன் தாயிடம் சொன்னதைச் சொன்னாள்.

கேட்டவனின் முகம் கோபத்தில் செங்கொழுந்தாகச் சிவந்து போனது.

“கட்டிக் கொடுத்த பொண்ணை வூட்டோட கூட்டிட்டு வந்தா வூரு பேசுமா?” என்று பல்லை கடித்துக் கொண்டு ஆத்திரத்துடன் கேட்டவன், உள்ளங்கையை இறுக மடக்கி, தொடையில் குத்திக் கொண்டான்.

“வூருக்காகத் தேன் பொண்ணைப் பெத்துக்கிட்டாரா?” என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டான்.

“பெத்த பொண்ணை விடக் கௌரவம் முக்கியமா போச்சுதா உம் பெரியப்பனுக்கு?” என்று கடுப்புடன் தாமரையிடம் கேட்டான்.

என்ன பதில் சொல்லுவாள் தாமரை? அந்தக் கோபம் அவளுக்குமே இருந்தது தானே.

“அப்போ உன் அப்பனும், பெரியப்பனும் அங்கை வாழ்க்கையில் ஒரு முடிவும் எடுக்க மாட்டாய்ங்க இல்லையா?” என்று அவளிடம் கேட்டான்.

“எடுப்பாங்களாண்டு தெரியலை. அம்மாவே அப்புக கிட்ட பேசி ஓய்ஞ்சு போய்ட்டாக…” என்றாள் தளர்வாக.

யோசனையுடன் வானத்தை அண்ணாந்து பார்த்த அதிவீரன், சில நொடிகளில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போல் தாமரையைப் பார்த்தான்.

“உம் அப்புகளைப் போல நான் இல்லை தாமரை. அவுக வேணுமுண்டா அங்கை வாழ்க்கைக்கு ஒரு முடிவு எடுக்காமல் இருக்கலாம். நான் எடுத்துட்டேன்…” என்றான் திடமாக.

“என்ன முடிவு?” புரியாமல் அவனைக் கேட்டாள்.

“நடக்கும் போது தெரிஞ்சுக்கோ…” என்றவன் அதற்கு மேல் அவளிடம் பேசிக் கொண்டிருக்காமல் விரைந்து அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

அன்று இரவு அவன் வீட்டிற்குச் செல்லும் போது, அவனின் தாயும், தந்தையும் அவர்களுக்குள் ஏதோ காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களைக் கண்டுகொள்ளாமல் நேராக அவன் தனது அறைக்குச் செல்ல, “டேய் மவனே, நில்லுடா. உன்னைய பத்தி தேன் பேசிட்டு இருக்கோம்…” என்றார் காமாட்சி.

அவன் நின்று கேள்வியாக அவர்களைப் பார்த்தான்.

“இன்னும் எம்புட்டு நாளைக்குடா இப்படிக் கோவில் மாடு கணக்கா திரிய போறவன்?” என்று கேட்டார்.

“இப்ப என்ன வேணும் உமக்கு?” என்று கடுப்பாகக் கேட்டான்.

“நான் வேற என்ன கேட்க போறேன்? எல்லாம் உங்-கல்யாணம் தேன். ராசாத்தி பொண்ணை உனக்குக் கொடுக்க ஆசையா இருந்தா. ஆனா நீ பிடி கொடுக்கவே இல்லைண்டு இப்ப அவ மவளுக்கு வேற மாப்ள பார்த்துட்டா. இன்னும் பத்து நாளுல நிச்சயம் வைக்கப் போறாளாம். சேதி சொல்லிவிட்டுருக்கா.

இனி உனக்கு வேற பொண்ணு தேன் பார்க்கணும். ஏன்டா இப்படிப் பண்றவன்? உன்னால, எங்களுக்கு நிம்மதியே இல்லை…” என்று புலம்பினார்.

அவரை அழுத்தமாகப் பார்த்த அதிவீரன், “இப்ப என்ன உங்களுக்கு நிம்மதி வேணும், நான் கல்யாணம் பண்ணிக்கணும். அம்புட்டுத் தானே?” என்று நிதானமாகக் கேட்டான்.

மகன் கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்ல போகிறானோ என்ற ஆர்வத்தில், “ஆமாடா வீரா…” என்றார் எதிர்பார்ப்புடன்.

“நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்றான் இலகுவாக.

காமாட்சியின் முகம் மலர்ந்து போக, கருப்பண்ணன் கூட மகனை ஆர்வமாகப் பார்த்தார்.

“ரொம்பச் சந்தோஷம்டா மவனே. நாளையே ஒனக்குப் பொருத்தமாக ஒரு பொண்ணை நானும், ஒ அப்பாவும் பார்த்திடுறோம்…” என்று காமாட்சி வேகமாகச் சொல்ல,

“வேண்டாம்மா. ஒனக்கு நான் அந்தக் கஷ்டத்தை எல்லாம் நான் கொடுக்கவே மாட்டேன். நானே பொண்ணு பார்த்துட்டேன்…” என்று அதிவீரன் சொல்ல,

“யாரை பார்த்த? யார் அந்தப் பொண்ணு?” என்று நெற்றியை சுருக்கி யோசனையுடன் கேட்டார் கருப்பண்ணன்.

“நான் அப்ப ஒரு பொண்ணு, இப்ப ஒரு பொண்ணுண்டு மாத்தி மாத்தி எல்லாம் பார்க்கவே மாட்டேன். எனக்கு எப்பவும் ஒரே பொண்ணு தேன். அவ அங்கை மட்டும் தேன். அவளைப் போய்ப் பொண்ணு கேளுங்க. உடனே கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்று அதிவீரன் நிறுத்தி நிதானமாகச் சொல்ல, கருப்பண்ணனும், காமாட்சியும் இருட்டடித்த முகத்துடன் மகனைப் பார்த்தனர்.