என்னிதய தாள லயமாய் நீ – 12

அத்தியாயம் – 12

இரவு முழுவதும் உறக்கம் சிறிதும் அவனை அண்டவில்லை. விழிகள் சிவந்து, வலியைக் கொடுத்தது.

அது மனவலியின் வெளிப்பாடு!

கண்களைத் தன்னிச்சையாகத் தேய்த்து விட்டுக் கொண்டான். ஆனாலும், வலி சிறிதும் குறையவில்லை.

படுக்கை முள் போல் குத்த, எழுந்தான்.

வீட்டின் பின் பக்கம் இருந்த குளியலறையில் குளித்துத் தயாராகி மீண்டும் அறைக்கு வந்த போது அவனின் தந்தை, அன்னை, அப்பத்தா மூவரும் அவனைத் தான் பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

அதை உணர்ந்தாலும் அலட்சியப்படுத்தியவன், வீட்டிலிருந்து வெளியேற போக, “ஏலேய், நில்லுடா…” என்று நிறுத்தினார் கருப்பண்ணன்.

அமைதியாகத் திரும்பி பார்த்தான்.

“எங்க கிளம்பிட்டவன்?”

“ஏன் நான் இந்த நேரம் எங்க போவேண்டு தெரியாது?” கேள்வியையே பதிலாக்கினான்.

“அது தெரியுது. இன்னைக்குச் சிலம்பாட்டம் எல்லாம் அவனுங்களையே பார்த்துக்கச் சொல்லிட்டு நீ வூட்டுல இரு…” என்றார் உத்தரவாக.

புருவத்தைச் சுருக்கியவன், “வூட்டுல உட்கார்ந்து செப்புச் சாமானை வச்சு விளையாடவா?” நக்கலாகக் கேட்டு வைத்தான்.

அவனை உறுத்துப் பார்த்தவர், “நேத்து ஒ ஆத்தா சொன்னதை மறந்துட்டியா? இன்னைக்கு அலங்காநல்லூர் போய்ப் பொண்ணு பார்க்கணும். இன்னும் செத்த நேரத்துல கிளம்பணும்…” என்றார்.

“உம்ம பொஞ்சாதி அது சொன்னதை மட்டுந்தேன் சொல்லுச்சா? நான் என்ன சொன்னே-ண்டு சொல்லலையா? என் முடிவை ஆத்தாக்கிட்ட நேத்தே சொல்லிட்டேன். நேத்தைக்குச் சொல்லலைண்டா இன்னைக்குச் சொல்ல சொல்லி நல்லா கேட்டுக்கோங்க…” கடிந்த பற்களிடையே வார்த்தைகளைத் துப்பினான்.

“அதெல்லாம் உன் ஆத்தாக்காரி நேத்தே சொல்லிட்டா. நீ ஒண்டிக்கட்டையா இருக்கப் போறேண்டு சொன்னதும் கேட்டுட்டு பொத்திக்கிட்டு போவோமுண்டு நினைச்சியோ? இன்னைக்குப் பொண்ணு பார்க்க போறோம். பேசி முடிக்கிறோம். அடுத்து வர்ற முகூர்த்தத்துல நிச்சயம் பண்ணப் போறோம்…” என்று அவர் அடுக்க,

அவரை விட்டுவிட்டு அன்னையின் புறம் திரும்பியவன், “எம்மோவ்! நேத்தைக்கு என்னவோ எம் புருஷன் என்னைய தவிர எவளையும் பார்க்க மாட்டாருண்டு பீத்திக்கிட்டயே, இன்னைக்கே உம் புருஷன் உன்னைய மண்ணைக் கவ்வ வச்சுட்டாரு பாரு. அவருக்குப் பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ண போறாராம். என்னாண்டு கேளு…” என்றான் நக்கலாக.

“டேய், அவரு உனக்குப் பொண்ணு பார்க்க போவணுமுண்டு சொன்னார்டா…” காமாட்சி எரிச்சலுடன் சொல்ல,

“நீ எத்தனை பொண்ணைப் பார்த்தாலும், அத்தனையையும் உம் புருஷன் தேன் காட்டணும். உனக்குச் சக்களத்தி கூட ஒரே வூட்டுல வாழ ஆசைனா எத்தனை பொண்ணை வேணா பாரு, நிச்சயம் பண்ணு, கல்யாணமும் கட்டி வை!” என்று இடக்காகச் சொன்னவன், அடுத்து அவர்கள் பேச இடம் கொடாமல் வெளியேறிவிட்டான்.

நேராகச் சிலம்ப வகுப்பிற்குச் சென்றான்.

மனம் முழுவதும் தீயாய் தகித்துக் கொண்டிருந்தது.

நேற்றைய அங்கையின் நிலையைப் பார்த்த பிறகு, மனதின் தள்ளாட்டம் முன்பை விட அதிகரித்திருந்தது.

மாணவர்கள் கம்பை சுற்றிக் கொண்டிருந்ததில் பார்வை பதித்திருந்தாலும், அவனின் கவனம் அவர்களில் இல்லை.

தன் வீட்டில் பெண் பார்ப்பதும், அங்கை வாழ்க்கை இழந்து நிற்பதும் தராசாக மேலேயும், கீழேயும் அவனின் எண்ணங்களை ஆட வைத்துக் கொண்டிருந்தன.

மனம் நிலைக் கொள்ளாமல் தவிக்க, மனதை ஒருமுகப்படுத்த முடியாமல், அவர்களையே சிலம்ப வகுப்பை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அங்கிருந்தும் கிளம்பிவிட்டான்.

அவன் மனம் போல் உடலும் ஒரே இடத்தில் நிற்க முடியாமல் தவித்தது. ஏதோ நிலையில்லா தன்மை தன்னைச் சூழ்ந்து கொண்டதை உணர்ந்தவன், சுப்புவை பார்க்கச் சென்றான்.

சுப்பு அவன் வயலில் இருக்க, தன்னைத் தேடி வந்த நண்பனை வியந்து பார்த்தான்.

“என்னடே, அதிசயத்திலும் அதிசயமா என்னைய பார்க்க வயலுக்கே வந்திருக்கவன்?” சுப்பு கேட்க,

“டேய் சுப்பு…” என்றவன், அதற்கு மேல் எதுவும் பேச தெரியாதவன் போல் நின்றான்.

சுப்பு அவன் முகத்தைச் சில நொடிகள் கூர்ந்து பார்த்தவன், “என்ன மாப்ள, என்னாச்சு? எதுவும் பிரச்சினையா?” அக்கறையுடன் கேட்டான்.

“ப்ச்ச், எனக்கு என்ன பிரச்சினை இருக்கப் போவுது?” என்றான் சலிப்பாக.

“வேற யாருக்குப் பிரச்சினை? அந்தப் புள்ளைக்கா?” என்று குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

சட்டென்று அதிவீரனின் முகம் வேதனையில் கசங்கியது.

அதுவே சுப்புவிற்குக் காரணம் புரிய போதுமானதாக இருந்தது.

“நானும் கேள்விப்பட்டேன்…” என்று முனகினான் சுப்பு.

நண்பனின் இப்போதைய வேதனையின் காரணம் என்னவாக இருக்கும் என்று தெரிந்தவன் போல் பேசினான்.

மெல்லிய அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தவன், “ஓ! எப்போ தெரியும்?” என்று அதிவீரன் கேட்க,

“கொஞ்ச நாளாவே தெரியும்டா. ஏ அம்மா சொல்லுச்சு…” என்றான்.

“தெரிஞ்சிம் என்கிட்ட சொல்லாம இருந்தியாடா? ஏன்டா சுப்பு?” மறைத்துவிட்டானே என்ற ஆதங்கத்துடன் கேட்டான்.

“உன்கிட்ட சொல்லி என்ன ஆகப் போவுதுடா வீரா?”

“என்னடா இப்படிச் சொல்றவன்?”

“வேற எப்படிச் சொல்ல சொல்றவன்? உன்னால என்ன செய்ய முடியும்? செத்துப் போய்ட்டாலும் இப்பயும் அந்தப் புள்ள திருவோட பொண்டாட்டி தேன். இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஏதாவது ஒன்னுனா அடுத்த வூட்டு ஆம்பள போய் என்னண்டு கேட்க முடியுமா? முடியாதுடா மச்சான்.

என்ன செய்ய? நானும் இதை எதிர்பார்க்கலை. திருவோட இடத்துல அந்தப் புள்ளய வச்சு பார்த்துக்கிடுவாகண்டு நினைச்சேன். ஆனா, அது நடக்காம போயிருச்சு. அந்தப் புள்ள நிலைமையை நினைச்சு, ‘அச்சோ! இப்படி ஆகிருச்சேண்டு’ நாம வருத்தப்பட்டுக்கலாமே தவிர, வேற ஒன்னும் பண்ண முடியாதுடா…” நிதர்சனத்தை எடுத்துரைத்தான் சுப்பு.

“ஒன்னுமே பண்ண முடியாதா?” எங்கோ பார்வை பதித்து முணுமுணுப்பாகக் கேட்டான் அதிவீரன். தான் கையாலாகாத தனத்துடன் நிற்பதில் தன்னை நினைத்தே அருவருத்துப் போனான். கண்ணிமையோரங்கள் வலியில் துடித்தன.

நண்பனின் தோளை தட்டிக் கொடுத்தவன், “முடியாது வீரா!” என்ற சுப்பு ஏதோ நினைத்துக் கொண்டது போல, “அந்தப் புள்ளயோட அப்பன் நினைச்சா முடியும்டா…” என்றான்.

விருட்டென்று திரும்பி நண்பனைப் பார்த்தான் அதிவீரன்.

“என்னடா சொல்றவன் ?” சுப்புவிடம் கேட்க,

“ஆமா மாப்ள, வூருக்கே அந்தப் புள்ள அவ மாமியாக்காரிக்கிட்ட பேச்சு வாங்குறது தெரியும் போது, அவ அப்பனுக்கு மட்டும் தெரியாம இருக்குமா என்ன? தெரிஞ்சிம் அந்த ஆளு ஏன் பேசாம இருக்காரு? அவரோட தங்கச்சி தானே அது? ஏன் என் பொண்ணை இப்படிக் கரிச்சு கொட்டுறண்டு போய் நியாயம் கேட்க வேண்டியது தானே? அந்த ஆளு போய்க் கேட்டா திருவோட அம்மா கொஞ்சம் வாயை மூடும் மாப்ள. அந்தப் புள்ளக்கும் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்…” என்றான் சுப்பு.

அதிவீரனுக்கும் அப்போது தான் தோன்றியது. முத்துப்பாண்டி ஏன் மகளைக் கண்டுகொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறார் என்று.

அவனுக்குத் தோன்றிய அதே கேள்வி தான், மாமியாரிடம் அனுதினமும் சுடுச்சொல் வாங்கிக் கொண்டு, அனலில் இட்ட புழுவாகத் துடித்துக் கொண்டிருந்த அங்கையற்கரசிக்கும் தோன்றியது.

தந்தை ஏன் தன்னை இப்படி விட்டுவிட்டார்? என்று அவள் நினைக்காத நாள் நிலை.

அப்படி நினைக்கும் படி தான் இருந்தது வள்ளியின் ஒவ்வொரு சொல்லும்.

“எம் மருமவ சமத்து. கருப்பா இருந்தாலும் கலையானவ. அமைதியானவ. அவளைப் போல் உண்டா…” என்று பேசிய அதே வாய் இப்போது, “பீடை, அவ நிறத்தை போலவே எம் மவன் வாழ்வையும் இருட்டாக்கிட்டா. ஊமையா இருந்தே எம் மவனைக் கொன்னுட்டா…” என்று இன்னும் விதவிதமாக அனுதினமும் அவளைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்.

அவர் அவளை எது பேசினாலும் தாங்கிக் கொள்வாள் போல். ஆனால், அவளின் கணவன் இறப்பிற்கு அவள் தான் காரணம் என்பதைத் தான் அவளால் தாங்கவே முடியவில்லை.

தன் கணவன் இறக்க வேண்டும் என்று எந்த மனைவியாவது நினைப்பாளா? அல்லது அவன் இறந்ததில் மகிழத்தான் செய்வாளா?

கொடூரமான கணவனாக இருந்தாலும் அவள் அப்படி நினைக்கக் காரணம் இருக்கலாம்.

ஆனால், திருநாவுக்கரசு கொடூரமானவன் இல்லையே…

பாசக்காரன்! அதிலும் அவள் மேல் நேசம் கொண்ட நேசக்காரன்!

பெற்றவர்கள் சிறுவயதில் இருந்து போட்ட முடிச்சுத்தான் என்றாலும், அவர்களுக்காகவே திருமணத்திற்குச் சம்மதம் சொல்லியிருந்தாலும், அங்கை மீது திருவிற்கும், திரு மீது அங்கைக்கும் ஈர்ப்பு இருக்கவே செய்தது.

அதனால் தான் இருவரும் திருமணப் பந்தத்தில் சந்தோஷமாகவே இணைந்தனர்.

திருமணம் முடிந்த பிறகு அங்கையை அரசியாகத் தாங்கினான். ஆராதித்தான்.

திருமணம் முடிந்த ஒரு வாரமும் அவளை விட்டு சிறிதும் அகலாமல், தாம்பத்திய வாழ்க்கையின் இனிமையான பக்கங்களை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். தித்திப்பாகக் கணவன் அறிமுகச் செய்து வைத்த பக்கங்களைப் ரசித்துப் படித்தாள்.

கணவனின் அண்மையில் இனிமை கண்டிருந்தவளுக்கு இடியாக விழுந்தது அந்தச் செய்தி.

திருவிற்குக் குடிப்பழக்கத்தைத் தவிர வேற எந்தப் பழக்கமும் இல்லை என்று அவளுக்குத் தெரிந்து தான் இருந்தது.

திருமணத்திற்குப் பிறகு அவன் குடிக்காமல் இருக்கவும் மகிழ்ந்து தான் போயிருந்தாள்.

ஆனால், அன்று சற்று நேரம் வெளியே சென்றுவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனவன் குடிக்கப் போவான் என்று அவள் அறிந்திருக்கவில்லை.

வெளியே சென்ற கணவனின் வருகைக்காகக் குளித்து, பாங்காய் புடவை கட்டி, கண்ணிற்கு மையிட்டு, நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் வைத்து, தலை நிறைய மல்லிகையைச் சூடி காத்திருக்க, வந்தது என்னவோ கணவனுக்கு விபத்து என்ற செய்தி மட்டுமே.

அழுது, கதறி அவனைக் காண சென்றால், அவனே காணாமல் போயிருந்தான்.

ஒரு வாரம் வானத்தில் பறந்தவளை பூமிக்குள் புதைத்தது போல் அவளின் வாழ்வும் புதைந்து போனது.

கணவனின் இழப்பை இன்னும் அவளால் நம்ப முடியவில்லை.

கண்ணீர் அவளின் கட்டுப்பாட்டில் இல்லாமலே எந்நேரமும் வடிந்து கொண்டே இருந்தது.

இப்போதும் கண்ணீர் ஒருபுறம் வழிந்து கொண்டிருக்க, கை அதன் போக்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தது.

குழம்பு வைக்கத் தாளித்துக் கொண்டிருந்தவளின் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருக்க, அதைத் துடைத்துக் கொண்டே வேலையைப் பார்த்தாள்.

தரையில் அமர்ந்து கீரையை ஆய்ந்து கொண்டிருந்த வள்ளி, “சும்மா ஒப்பாரி வைக்காதடி. நீ கண்ணீரை ஊத்தியதும் எம் மவன் திரும்ப வந்திரப் போறானா? உன்னைய எம் மவனுக்கு நிச்சயம் பண்ணியதுமே அவனுக்கு நேரம் சரியில்லைண்டு குறி சொல்றவ சொன்னா. நான் ஒரு கூறுகெட்ட சிறுக்கி. விளக்கு ஏத்தினா சரியா போயிடும் நினைச்சுப் போட்டேன்.

எம் மவன் நேரத்தை மாத்த வந்தவளே நீ தேன்னு எனக்குத் தெரியாம போயிருச்சு. தெரிஞ்சிருந்தா உன்னைய அப்பவே தலையை முழுகிட்டு அவனுக்கு வேற ஒருத்தியை கட்டி வச்சுருப்பேன். எம் மவனும் உசுரோட இருந்திருப்பான். எம் மவன் உசுரை எடுக்க வந்த மூதேவி. உன்னைய போய் அவனுக்குக் கட்டி வச்சுப் போட்டேனே…” என்று ஆத்திரத்துடன் கத்தினார்.

அவர் பேச பேச ஏற்கெனவே உடைந்திருந்தவள் இன்னும் சுக்கல் சுக்கலாக உடைந்து கொண்டிருந்தாள்.

அப்படியே உயிரோடு பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என்றிருந்தது.

கடந்த ஒரு மாதமாகக் கேட்கும் கடுஞ்சொற்கள் தான். ஆனால், அதன் வீரியம் சற்றும் குறையாமல், ஒவ்வொரு முறையும் அவளைத் தாக்கி ரம்பமாக அறுத்துப் போட்டது.

வாய் விட்டு கதற வேண்டும் போல் இருந்தது.

ஆனால், அதைச் செய்யவும் முடியவில்லை. கதறினால் இன்னும் அதிகமாகத் தான் பேச்சு விழுமே தவிர, குறையாது என்று அனுபவப்பட்டிருந்தாள்.

“திரு மச்சான், என்னால இந்தப் பேச்சை தாங்க முடியலை மச்சான். என்னைய மட்டும் ஏன் உசுரோட விட்டுப்புட்டு போனீங்க. என்னையவும் உங்க கூடக் கூட்டிட்டு போயிருந்தா இப்படி நான் தெனம் தெனம் சாக வேண்டியது இருக்காதே!” என்று அவளால் மனதிற்குள்ளே தான் கதற முடிந்தது.

“இந்தா இந்தக் கீரையைக் கடைஞ்சு வை! அழுது ஒப்பாரி வச்சு நேரத்தை போக்கலாமுண்டு கனவு காணாத!” என்றவர் எழுந்து அடுப்பங்கரையை விட்டு வெளியே சென்றார்.

தனிமை கிடைக்கவும் அப்படியே சுவரில் தரையில் அமர்ந்தவள், இரண்டு கையாலும் வாயை இறுக மூடிக் கொண்டு, சிறு சத்தமும் வெளியே வராமல் குமுறி அழுதாள் அங்கையற்கரசி.

அதுவும் சில நொடிகள் தான். வள்ளி அந்தப் பக்கம் வருவது போல் இருக்க, பட்டென்று அழுகையை அடக்கிக் கொண்டு, பதறி எழுந்தவள், அவர் தன் முகம் பார்க்காத வண்ணம் திரும்பி நின்று கொண்டாள்.

அழுகையின் பிரதிபலிப்பு அவள் உடல் நடுக்கத்தில் தெரிந்தது. அதையும் கூட முயன்று சில நொடிகளில் அடக்கிக் கொண்டாள்.

தன் உணர்வுகளைக் கூட அவளால் வெளிப்படையாக வெளிப்படுத்த முடியவில்லை.

தன் வேதனையைச் சொல்லி அழ, தன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளத் தாயின் மடி தேடியது மனது.

தனக்கு அதற்குக் கூடக் கொடுப்பனை இல்லையே என்று நினைத்துக் கழிவிரக்கம் தான் வந்தது.

தன் உணர்வுகளை எல்லாம் தனக்குள்ளே வைத்து நடமாடுவது அவளின் மனதின் பாரத்தை அதிகமாக்கியிருந்தது.

சொல்வதைச் செய்யும் கிளி பிள்ளை போல் வள்ளி சொன்ன வேலைகளை எல்லாம் முடித்தாள் அங்கை.

அன்று மாலை அக்காவை பார்க்க வந்தாள் தாமரை.

முன்பு இருந்த துறுதுறுப்பு குறைந்து, அக்காவை பார்க்க வர, தங்கையைப் பார்த்ததும் அங்கைக்கு இன்னும் அழுகை பீறிட்டு வந்தது.

ஆனால், அடக்கிக் கொண்டு அமைதியாகத் தலையை அசைத்து வரவேற்றாள்.

“வாடியம்மா, என்ன சோலியா இங்கிட்டு வந்திருக்கவ?” என்று வரவேற்றார் வள்ளி.

“சும்மா தேன் அத்தை, அக்காவை பார்க்கலாமுண்டு வந்தேன்…” தாமரை சொல்ல,

“ம்க்கும்… அவளைப் பார்த்துட்டாலும்…” என்று நொடித்துக் கொண்டார் வள்ளி.

தாமரையின் முகம் மாறிச் சுருங்கியது. அங்கையின் அருகில் வந்து நின்று கொண்டாள்.

அவரின் பேச்சிற்குப் பழகி போன அங்கை முகத்தில் எந்தப் பாவனையும் காட்டாமல் நின்றாள்.

“இந்தா பாருடி. எங்களைப் பிடிச்ச ஒ அக்காவோட பீடை எங்களோட போவட்டும். நீயாவது புருஷன், புள்ளண்டு வாழணும். ஒ அக்காக்காரி முகத்துல முழிக்காம இருக்கப் பாரு…” என்று வள்ளி சொல்ல, அதிர்ந்து அக்காவின் முகம் பார்த்தாள் தாமரை.

வேதனையில் கசங்கிப் போன முகத்துடன், தன் வேதனையை அடக்க முயன்றதால் அங்கையின் தொண்டை அவஸ்தையுடன் துடித்தது.

கூடவே தன்னை நெருங்கி நின்றிருந்த தங்கையை விட்டும் அவள் தள்ளி நிற்க, துடித்துப் போனாள் தாமரை.

வேகமாக அங்கையை நெருங்கி நின்றவள், அவள் கையையும் பிடித்துக் கொண்டாள்.

கையைப் பிடித்த பிறகு தான் உணர முடிந்தது. அங்கையின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

அத்தை, அக்காவை பேசுவதைக் கேள்விப்பட்டாள் தான். ஆனால், இப்படித் தன் அக்கா ஒடுங்கி போகும் அளவிற்கு அவர் பேசுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அங்கையிடம் தனியாகப் பேச வேண்டும் போல் இருந்தது. வள்ளியை அருகில் வைத்துக் கொண்டு எப்படிப் பேசுவது என்று யோசித்தாள்.

அங்கையின் உள்ளங்கையை வலுவாக பற்றிக் கொண்டு, “அத்தை, நானும் அக்காவும் கோவிலுக்குப் போயிட்டு வர்றோம்…” என்றாள் வள்ளியிடம்.

“கோவிலுக்கா…?” என்று இழுத்தவர் அக்கா, தங்கை இருவரையும் மாறி மாறி பார்த்தார்.

“அவளைப் பார்த்துப் போட்டு போவலாமுண்டு தானே வந்தவ. இப்ப என்ன கோவிலுக்குப் போறோம்ங்கிறவ?”

“அக்கா வூட்டுக்குள்ளாரயே தானே இருக்கா அத்தை. வெளியே போய்ட்டு வந்தா கொஞ்சம் அவளுக்கு மாத்தமா இருக்கும். கோவிலுக்குப் போய்ட்டு சாமி கும்பிட்டுட்டு செத்த நேரத்தில் வந்துடுறோம்…” என்றாள்.

“நீ போறதுல ஒரு நியாயம் இருக்கு. ஒ அக்கா எந்தப் புருஷனை காப்பாத்த சாமி கும்பிட போறாளாம்?” என்று வள்ளி வெடுக்கென்று கேட்க, துடித்துப் போனாள் அங்கை. வெடித்து வந்த அழுகையை வாயை இறுக மூடி அடக்கினாள்.

“அத்தை…” என்று தாமரை அதட்டலாக அழைக்க,

“இந்தாடி, இந்த அதட்டல், உருட்டலை எல்லாம் ஒனக்கு வரப் போற மாமியாக்கிட்ட வச்சுக்க. நாக்கு நீளுச்சு இழுத்து வச்சு நறுக்கிப் போடுவேன்…” என்றார்.

தாமரை பதிலுக்குப் பேச போக, தங்கையின் கையை இறுக பிடித்து மறுப்பாகத் தலையை அசைத்தாள் அங்கை.

பதில் பேசினால் இன்னும் அவர் தன்னைத் தான் துடிக்க வைப்பார் என்று அறிந்தவள் தானே அவள்.

“என்னடி, ஒரே சத்தமா கிடக்கு?” என்று கேட்டுக் கொண்டே வெளியே சென்றிருந்த முத்துவேல் வீட்டிற்குள் வந்தார்.

“ஆமா, போடுறாங்க சத்தம்…” என்று வள்ளி நொடித்துக் கொள்ள,

“வாம்மா…” என்று தாமரையை வரவேற்றார் முத்துவேல்.

“அக்காவை கோவிலுக்குக் கூட்டிட்டு போறேண்டு கேட்டேன் மாமா. அத்தை சத்தம் போடுது…” என்று வள்ளியை முறைத்துக் கொண்டே மாமனிடம் புகார் சொன்னாள் தாமரை.

அங்கையை ஒரு பார்வை பார்த்தவர், “அவளுக்குப் புள்ள போய்ச் சேர்ந்ததில் இருந்து புத்தி பிசகி போயிருச்சு புள்ள. அவ அப்படித்தேன் கத்திக்கிட்டு கிடப்பா. நீ மருமவளை கூட்டிட்டு போயிட்டு வா. அப்பவாவது அந்தப் புள்ள மனசு கொஞ்சம் ஆறுதா-ண்டு பார்ப்போம்…” என்றார் பெருமூச்சுடன்.

மனைவி மருமகளைப் பேசுவது அதிகபடி என்று அவருக்கே தெரியும். அதனால் வீட்டில் இருந்தால் மனைவியைச் சற்று அடக்கி வைப்பார். ஆனால், அதை எல்லாம் வள்ளி காதில் வாங்குவதே இல்லை. அவர் பேசுவதைப் பேசிக் கொண்டே தான் இருந்தார்.

பிள்ளையை இழந்த ஆற்றாமையை அப்படி ஆற்றி கொள்கிறாள் என்று நினைத்துக் கொண்டு அவராலும் மனைவியை ஓரளவிற்கு மேல் அடக்க முடியவில்லை.

முத்துவேல் சம்மதித்தும், வர மாட்டேன் என்ற அங்கையை வம்படியாக அழைத்துக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பினாள் தாமரை.

அக்கா, தங்கை இருவரும் மௌனமாகக் கோவிலை நோக்கி நடக்க, கோவில் அருகில் நெருங்கிய போது எதிரே வந்தான் அதிவீரன்.

ஒரு வேலையாக அந்தப் பக்கம் வந்தவன் அங்கையை அங்கே பார்ப்போம் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

எதிர்பாராமல் பார்த்தவனுக்குச் சந்தோஷம் கொள்ள முடியவில்லை.

அந்த அளவுக்கு அங்கையின் அப்படிப்பட்ட தோற்றத்தை பார்க்க முடியாமல் துடித்து, அடங்கி, சிலையாக உறைந்து போனான் அதிவீரன்.