என்னிதய தாள லயமாய் நீ – 10

அத்தியாயம் – 10

வாழ்வே வெறுத்துப் போனது போல் களத்து மேட்டில் படுத்திருந்தான் அதிவீரன்.

மல்லாந்து படுத்திருந்தவனின் கண்கள், முத்துக்களைச் சிதற விட்டது போல் பூத்துக்கிடந்த நட்சத்திரங்களையும், ஜெக ஜோதியாக ஜொலித்துக் கொண்டிருந்த நிலவைவும் தன்னுள் அடக்கிக் கொண்டிருந்த வானத்தை வெறித்துக் கொண்டிருந்தன.

கண்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவனின் நினைவோ, கண்ணீரும், கம்பலையுமாகக் கதறிய அங்கையைச் சுற்றித் தான் வந்து கொண்டிருந்தது.

அவளின் கதறல் ஒவ்வொன்றும் அவனின் காதில் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

கண்களை மூடினாலும் அவளின் கதறல் அவனைத் துரத்திக் கொண்டே தான் இருந்தது.

குயில் போன்ற அவள் குரல் மறைந்து, அடைத்த தொண்டையுடன் அவள் கதறிய கதறல் தான் இப்போது அவன் மனதை விட்டு அகலாமல் ஆட்சி செய்து கொண்டிருந்தது.

‘ஹய்யோ!’ என்று வாய் விட்டு கத்த வேண்டும் போல் இருந்தது.

உதடுகளைக் கடித்து அடக்கிக் கொண்டவன், கண்களையும் இறுக மூடிக் கொண்டான். கண்களை மூடவும் இன்னும் அதிகமாக அவளின் குரல் அவனைத் துரத்த, மூடிய இமைகளையும் மீறி வழிந்தது சூடான கண்ணீர்.

அப்போது யாரோ அவன் கையை அழுத்துவது போல் இருக்க, இமைகளை மெல்ல விரித்துப் பார்த்தான்.

அவனின் அருகில் அவனைப் போலவே கலங்கிப் போய் அமர்ந்திருந்தான் சுப்பு.

“என்னடா, இந்த நேரம் எதுக்கு இங்கன வந்தவன்?” என்று அதிவீரன் கேட்க,

“தூக்கமே வரலைடா மாப்ள. திரு ரத்த வெள்ளத்துல கிடந்ததே கண்ணு முன்னால நிக்கிது. அவன் சிரிப்பை நாம தானேடா கடைசியா பார்த்தோம். அந்தச் சிரிப்பு அவனுக்கு நிலைக்கலையே…” என்று உதட்டை பிதுக்கி கலக்கத்துடன் சொன்னான்.

அதிவீரனுக்கும் அந்த வலி உண்டு தானே. சுப்புவின் மனநிலை புரிந்தது போல் அமைதியாக இருந்தான்.

“மாப்ள, செத்த நேரத்துக்கு முன்ன ஏ அம்மா ஒரு விஷயம் சொல்லுச்சுடா…” என்று தயக்கத்துடன் இழுத்தான் சுப்பு.

“என்னடா?” அதிவீரன் புரியாமல் நெற்றியைச் சுருக்கி கேட்க,

“நாளைக்கு அந்தப் புள்ளைக்குச் சடங்கு செய்யப் போறாய்ங்களாம்…” என்றான் வேதனையுடன்.

“என்ன சடங்குடா?” சட்டென்று புரியவில்லை அவனுக்கு.

“நாளைக்குத் திருவுக்குக் காரியம்டா. காரித்தன்னைக்கு அவென் பொண்டாட்டிக்கு சடங்கு நடக்கும். இதுவரைக்கும் மங்கலகரமா இருந்த பொண்ணு இனி அமங்கலமா…” என்றவன் அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்தி, வருத்தத்துடன் நண்பனைப் பார்த்தான்.

விருட்டென்று எழுந்து அமர்ந்தான் அதிவீரன். அவன் முகம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது.

மஞ்சள் பூசிய அங்கையின் முகம் நொடியில் மனக்கண்ணில் வந்து போனது. ‘அந்த முகம் இனி மஞ்சளை முற்றிலும் துறக்க போகின்றதா?’ நினைவே கசந்தது.

“சு…சுப்பு…” என்று நடுக்கத்துடன் நண்பனை அழைத்தான்.

“கேட்டதில் இருந்து மனசே ஆறலைடா வீரா. அதுதேன் இங்கிட்டு கிளம்பி வந்துட்டேன்…” என்றான் சுப்பு.

சுப்பு புலம்பிவிட்டான். அதிவீரன் என்னவென்று புலம்புவான்?

அவளின் திருமணம் முடிந்த மறுநாள் அவளைக் கணவனுடன் பூர்ண அழகுடன் பார்த்தது நினைவில் வந்தது.

அன்று அவளின் அந்த அழகை பார்த்து தான் வேதனை பட்டதும் நினைவில் வர, தன்னால், தன்னுடைய அந்த எண்ணத்தில் தான் அவளுக்கு அந்த நிலை வந்ததோ? என்று நினைத்ததும் அந்த ஆண்மகனின் ஆறடி உடம்பும் உணர்ச்சி வேகத்தில் நடுங்கியது.

“சுப்பு, அம்புட்டுக்கும் நான்தேன்டா காரணம். அவளுக்குத் திருக் கூடக் கல்யாணம் நடக்கக் கூடாதுண்டு இடைஞ்சல் செஞ்சேன். அவளுக்குக் கல்யாணம் முடிஞ்ச பொறகும், அவ எனக்குக் கிடைக்கலையேண்டு நினைச்சுப்புட்டேன்டா. என் நினைப்பு தேன் அவளைப் பழி வாங்கியிருச்சோ? ஐயோ!” என்று உடல் உதற கதறினான்.

அவனின் உடல் உதறுவது பார்த்து பயந்து போன சுப்பு, “டேய் வீரா, இல்லைடா… நீ காரணம் இல்லடா. திருவுக்கு விதி முடிஞ்சி போச்சுது. அதுக்கு நீ என்ன பண்ணுவ?” என்று அவனைச் சமாதானம் செய்ய முயன்றான்.

“இல்லடா சுப்பு. திருவை பார்த்து நான் பொறாமை பட்டுட்டேன்டா சுப்பு. அதுதேன்… அதுதேன் அவனுக்கு இப்படி ஆகிருச்சு. அந்தப் புள்ள நல்லா இருக்கணும்ண்டு விலகி வந்துட்டாலும், அவளையே நினைச்சு அவளுக்குப் பாவத்தைச் சேர்த்துப்புட்டேனோ? அதுதேன் அவளுக்கு அப்படி ஆகிருச்சு…” என்று தன் நினைவிலேயே இல்லாமல் புலம்ப ஆரம்பித்தான்.

காதலில் தோற்ற போது கூட இவ்வளவு புலம்பாதவன் இன்று தன் கட்டுப்பாட்டிலேயே இல்லாமல் புலம்ப, சுப்பு பயந்து போனான்.

“வீரா… டேய் வீரா…” என்று அவனைப் பிடித்து உலுக்கிய சுப்பு, “அந்தப் புள்ள நல்லா வாழக் கூடாதுண்டு எப்பவாவது மனசார நினைச்சியா?” என்று குரலை உயர்த்திக் கேட்டான்.

அவனை வேதனையுடன் பார்த்த அதிவீரன், “அது எப்படிடா நினைப்பேன்? அவ என் உசுருடா. அந்த உசுருக்கு எங்க சந்தோஷம் கிடைக்குமோ அங்கனயே இருக்கட்டும் தேன விலகி போனேன். அவ புருஷன் கூடச் சந்தோஷமா வாழணுமுண்டு தேன்டா நினைச்சேன்…” என்றான் தீனமாக.

“அப்புறம் என்னடா? இப்ப இப்படி நடந்ததுக்கு நீ காரணம் இல்லை. அந்தப் புள்ள தலையில் இப்படி நடக்குமுண்டு எழுதியிருக்கு. நடந்திருச்சு. அதுக்கு நீ என்ன பண்ண முடியும்? உன்னையவே குத்தம் சொல்லிக்காதே…” என்று அதட்டினான் சுப்பு.

சுப்பு சொல்வது சரியாக இருப்பது போல் இருந்தாலும், தன் எண்ணம் தான் அவளைப் பாதித்து விட்டதோ என்ற நினைப்பினால் உண்டான குற்றவுணர்வு அவனை விட்டு போகவில்லை.

முகம் இறுக, எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனின் தோளை சுற்றி கையைப் போட்டு அணைத்துக் கொண்ட சுப்பு அமைதியாக இருந்தான்.

சில நேரம் ஆறுதல், தேறுதல் வார்த்தைகளை விட, உன் வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன் என்று ஒருவர் உடன் இருப்பதே பெரிய ஆறுதலாக இருக்கும்.

அந்த ஆறுதலை நண்பனுக்குக் கொடுக்க முயன்றான் சுப்பு.

மறுநாள் திருநாவுக்கரசுவின் வீடு. திருவிற்குப் படையல் போட்டுக் காரியம் முடிந்ததும், மூலையில் சுருண்டு கிடந்த அங்கையை எழுப்பிய சில பெண்கள், அவளைக் குளிக்க வைத்து, மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய குங்குமம் வைத்து அழைத்து வந்தனர்.

பொம்மை போல் உயிரற்று அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தவளை உட்கார வைத்து, கை நிறையக் கண்ணாடி வளையல்களைப் பூட்டினர்.

தலை நிறையப் பூவை சூட்டிவிட்டனர். அவளின் தாலியை மறைவிற்குள் இருந்து வெளியே எடுத்துப் போட்டனர்.

தாயை இழந்து நின்றவளை, தன் குழந்தையாய் மடியேந்தி பார்த்து பார்த்து வளர்த்த மகளை இன்று ஒரு நாள் தான் மங்கலகரமாகப் பார்க்க முடியும் என்று கதறிய படி மகளை அணைத்துக் கொண்டு அழுதார் சிவகாமி.

அன்னையாய் வளர்த்த சித்தியின் அணைப்பிற்குள் இருந்தாலும், சலனமே இல்லாமல் வெறித்திருந்தாள் அங்கை. அவளுக்கு அழுகை கூட வரவில்லை. வாழ்வே சூனியமாகிப் போய்விட, உணர்வுகள் மரத்துப் போய் அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரத்தில் அங்கையின் மாங்கல்யம் அறுக்கப்பட்டுப் பாலில் போடப்பட்டது. அவளின் இரண்டு கைகளையும் ஒன்றுடன் ஒன்று அடித்து வளையல்கள் அனைத்தும் உடைக்கப்பட்டன.

அவளின் நெற்றி குங்குமம் அளிக்கப்பட்டது. தலையில் சூடியிருந்த பூவை எடுத்தனர்.

அடுத்தடுத்துச் சடங்குகள் நடக்க, எதுவும், எதுவுமே நினைவில்லாமல் உணர்வுகளற்று இருந்த அங்கை தன்னிடம் இருந்த மங்கலரமான அனைத்தும் அபகரிக்கப்பட்டதும் சட்டென்று உடைந்து அழுதாள்.

முகத்தில் அறைந்து கொண்டு அவள் அழுத அழுகை முற்றுப் பெறாமல் தொடர்ந்தது.

தனக்கு இனி கண்ணீர் மட்டுமே துணை என்பது போல் அதை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டாள் பெண்.

ஆகிற்று! எல்லாம் ஆகிற்று!

அங்கையின் கலகலப்பு, புன்னகை, மகிழ்ச்சி, நிம்மதி எல்லாம் அவளை விட்டுச் சென்றுவிட்டது.

அன்றிலிருந்து மூலையில் முடங்கிப் போனாள் அவள்.

அமைதியையும், கண்ணீரையும் மட்டுமே தன்னுடைய சொந்தமாக்கிக் கொண்டாள்.

அவள் வீட்டிற்குள் முடங்க, அதிவீரனோ வீட்டிலேயே தங்காமல் வேதனையையும், வருத்தத்தையும் மூட்டை போல் சுமந்து கொண்டு அலைந்தான்.

வாழ்க்கை மனிதர்களுக்கு வஞ்சனை இல்லாமல் வாரி வழங்குவது உண்டு.

சிலருக்கு அதிகச் சந்தோஷத்தை, சிலருக்கு அதிக வருத்தத்தை, சிலருக்கு இரண்டையும் சரிவிகிதத்தில் தருவது உண்டு.

இங்கே இரு உள்ளங்கள் உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த வருத்தத்தையும் சுமந்து கொண்டிருந்தன.

அன்று அதிவீரன் தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

“இந்தப் போனு ஸ்க்ரீன் போயிருச்சு. டவுனுக்குப் போய்த் தேன் சரி பண்ண முடியுமாண்டு பார்க்கணும்…” என்று வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அப்போது சுப்பு கடைக்குள் வந்தான். அவன் முகத்தைப் பார்த்ததுமே தெரிந்தது ஏதோ வருத்தத்தில் இருக்கிறான் என்று.

பார்த்தாலும் எதுவும் கேட்காமல் வரவேற்பாகத் தலையை அசைத்துவிட்டு, வாடிக்கையாளரிடம் பேசி அனுப்பி வைத்து விட்டு சுப்புவின் அருகில் வந்தான் அதிவீரன்.

“வாடே! என்ன சொங்கிப் போய் வந்திருக்கவன்?” என்று விசாரித்தான்.

“சும்மா உன்னைய பார்த்துப்புட்டு போவலாமுண்டு வந்தேன் மாப்ள…” என்று சோர்வுடன் சொன்னான்.

“விசயம் இல்லாம சோலி நேரத்தில் வந்தியாக்கும்?” என்று அவனை நம்பாமல் இடக்காகக் கேட்டான்.

“ஏன்டா, நான் உன்னைய சோலி நேரத்தில் பார்க்க வரக்கூடாதா? இல்ல, இதுக்கு முன்ன நான் அப்படி வந்தது இல்லையா?” என்று சுப்பு கடுப்புடன் கேட்க,

அவனின் தோளில் தட்டிய அதிவீரன், கடையில் இருந்த மாறனை அழைத்துத் தேநீர் வாங்கி வரச் சொன்னான்.

மாறன் வெளியே சென்றதும், “இப்ப சொல்லு என்னா சோலியா வந்தவன்?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

அவனைச் சில நொடிகள் அமைதியாகப் பார்த்த சுப்பு, “ஒ அப்பா என்னைய பார்க்க வந்தாருடா…” என்றான்.

“ஓ! என்னவாம்?” என்று அலட்சியமாகவே கேட்டான்.

“வேற என்ன? எல்லாம் உன்னைய பத்தி புகார் படிக்கத்தேன். நீ வூட்டுக்கே வர மாட்டிங்கிறயாம். ஒ ஆத்தா அவரைப் புடுச்சி புலம்புதாம். அதுதேன் உன் கூட்டாளிக்கு புத்திமதி சொல்லுடாண்டு என்கிட்ட வந்து சொல்லிட்டு போறார்…” என்றான்.

“சரிதேன். அப்ப புத்திமதி சொல்லிட்டு கிளம்பு…” என்றான் அசட்டையாக.

“என்னடா இப்படி அசால்டா சொல்றவன்? உன் அப்பா சொல்வதும் நியாயம் தானேடா. ஒரு புள்ளைய வச்சிருக்காக. அவனும் வூட்டுக்கு வரலைண்டா கவலை இருக்கத் தானே செய்யும். நீயும் இப்படிப் பிடிவாதம் பிடிக்கக் கூடாதுடா. வூட்டுக்கு போவுறதுக்கு என்னாத்துக்கு இப்படி அடம்பிடிக்கிறவன்?” என்று கேட்டான்.

“ப்ச்ச், உனக்குச் சொன்னா புரியாதுடா. விடு!” என்று கையை வீசினான்.

“நீ மொதல சொல்லு. எனக்குப் புரியுதா, இல்லையாண்டு பார்ப்போம்…” என்றான்.

“உனக்குப் புரிஞ்சி நீ என்னா புடுங்கவா போற?” என்று எரிச்சலுடன் கேட்க,

“டேய் வெண்ணை, ரொம்பத் தேன் அலப்பறைய கூட்டாதடா. நீ செய்றது வர வர சரியே இல்லை. இப்ப எல்லாம் பொட்டல் காட்டு குடிசையிலேயே இருக்கிறவன், சிலம்பம் முடிஞ்தும் கடைய தொறக்க வந்துடுறவன், ராவு படுக்கக் களத்து மேட்டுக்கு போயிடுறவன். வூடுண்டு ஒன்னு இருக்கிறது உனக்கு மறந்து போச்சுதா என்ன?

செத்த நாளா என்னன்னவோ நடந்து போச்சு தேன். அதுல மனசுக்குள்ளார அம்புட்டுத் துக்கம் இருக்கும் தேன். அதுக்காக வூட்டுப்பக்கம் போகாமல் இருந்து என்னடே சாதிக்கப் போறவன்? அப்படி என்ன உனக்கு வீம்பு?” என்று கேட்டான் சுப்பு.

“அது வீம்பு இல்லைடே… தவிப்பு!” என்றான் வலியுடன்.

“வீரா…”

“என்னால முடியலைடா… முடியவே இல்லைடா சுப்பு…” என்று குரல் கரகரக்கச் சொன்னான்.

“டேய், என்னடா?” சுப்புப் பரிதவித்துக் கேட்க,

“நெஞ்சு பாரமா கனத்துப் போய்க் கிடக்குடா மச்சான். வூட்டுப் பக்கம் போனாலே அவளோட முகம் தேன் மாப்ள கண்ணு முன்னாடி வந்து நிக்கிது. அவ தங்கச்சி கூட அவ கலகலத்து பேசியது அம்புட்டும் திரும்பக் கேட்க மாட்டோமாண்டு மனசு கிடந்து தவிக்குது மாப்ள. எனக்குத் தெரியுது, நான் இப்படி நினைக்கிறது தப்புண்டு. ஆனா, அவ இப்ப எப்படி இருக்காண்டு தெரியாம ஒரு மாதிரியா இருக்குடா. அதுதேன் எனக்கு அந்தப் பக்கம் போகவே புடிக்கலை…” என்றான் வேதனையுடன்.

“வீரா, அந்தப் புள்ள திரு வூட்டுல தானேடா இருக்கு. ஓ வூட்டுக்கு போறதுக்கும் அதுக்கும் என்னா சம்பந்தம்?” சுப்புப் புரியாமல் கேட்க,

“அது தெரியுதுடா. ஆனா, அந்தப் புள்ளைய தேடி எங்கண்ணு அவ வூட்டுப் பக்கம் பார்த்துத் தவியா தவிக்குதே… நான் என்னா பண்ணுவேன்?” என்று சிறு குழந்தை போல் அவன் ஏக்கத்துடன் கேட்க, விக்கித்து அவனைப் பார்த்தான் சுப்பு.

“என்ன வீரா இது? என்ன இருந்தாலும் அந்தப் புள்ள இன்னொருத்தனுக்குப் பொண்டாட்டி ஆனவடா. அவளைப் பத்தி நீ இப்படி நினைக்கிறதே தப்பு…” என்று கண்டித்தான்.

“நான் ஒன்னும் தப்பா நினைக்கலைடா. அந்தப் புள்ள சவுக்கியத்தைத் தெரிஞ்சிக்க நினைக்கிறேன். அம்புட்டுத்தேன்…” என்றான்.

“புருஷனை இழந்தவ எப்படி இருப்பாண்டு தெரியாதாடா? அதைத் தனியா வேற தெரிஞ்சிக்கணுமா என்ன?” என்று சுப்பு வருத்தத்துடன் கேட்க, அதிவீரனின் முகம் வாடியது.

என்னவோ அவனுக்குச் சொல்ல தெரியவில்லை. கணவனை இழந்ததையும் தாண்டி அவளுக்கு ஏதோ துன்பம் நடந்து கொண்டிருப்பது போல் உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

அவன் நினைப்பது சரியா தவறா என்று தெரியவில்லை.

ஆனால், அவனின் மனதில் சில நாட்களாகத் தோன்றும் அந்த எண்ணத்தை அவனால் ஒதுக்கித் தள்ள முடியவில்லை.

அவளுக்கு என்னவோ நேர்ந்து கொண்டிருக்கிறது. அவள் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்று யாரோ அவன் காதிற்குள் வந்து சொல்வது போல் தோன்றிக் கொண்டே இருந்தது.

அதை என்னவென்று நண்பனுக்குப் புரிய வைக்க என்று அவனுக்குத் தெரியவில்லை.

ஒரு அளவுக்கு மேல் அங்கையைப் பற்றித் தான் பேசினால் எங்கே தவறாக நினைக்கத் தோன்றிவிடுமோ என்று வேற பயமாக இருந்தது.

அவன் யோசனையுடன் அப்படியே அமர்ந்து விட, “ரொம்பப் போட்டு மனசை குழப்பிக்காதேடா வீரா. அந்தப் புள்ள வாழ்க்கை இப்படி ஆனாலும் அவ அத்தை வூட்டுல தேன் இருக்குது. புள்ளைய இழந்தவக, மருமவளை மகளா பார்த்துக்கிடுவாக. அந்தப் புள்ளக்கு எந்தக் குறையும் வராது. நீ வூட்டுக்கு போற வழிய பாரு. நம்ம மனசை மட்டும் பார்க்காம, அப்பன் ஆத்தாளையும் பார்க்கத் தேன் வேணும்டா…” என்றான் சுப்பு.

“சரி விடு. ரம்பம் போடாத! நான் வூட்டுக்கு போறேன்…” என்று அதிவீரன் அவன் வாயை அடைத்தான்.

மாறன் தேநீர் வாங்கி வந்து கொடுத்ததைக் குடித்துக் கொண்டே, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினான் சுப்பு.

அன்று இரவு கடையை அடைத்தவுடன், நேராக வீட்டிற்குத் தான் சென்றான் அதிவீரன்.

செல்லும் போதே அவன் பார்வை அவனின் கட்டுப்பாட்டையும் மீறி அங்கையின் வீட்டை நோக்கி சென்றது.

அவள் அங்கே இல்லை என்று தெரிந்தாலுமே தவிப்புடன் அவளைத் தேடுவதை அவன் கண்கள் நிறுத்தவில்லை.

தன் வேதனையைத் தனக்குள் போட்டு மறைத்துக் கொண்டு தன் வீட்டின் முன் வண்டியை நிறுத்த, திண்ணையில் அமர்ந்திருந்த பேச்சியம்மாள், “எய்யா ராசா… வந்துட்டியாய்யா…” என்று ஏக்கத்துடன் வரவேற்றார்.

அவரின் ஏக்கம் சட்டென்று அவனைத் தாக்கியது.

எந்த நேரமும் தெனாவட்டாகத் திரிபவன் தான். ஆனால், இப்போது ஏற்கெனவே பலவீனமாக இருந்த மனதிற்கு அந்த ஏக்க வரவேற்பும் சென்று தாக்கத்தான் செய்தது.

“என்னா கிழவி சோறு தின்னுட்டியா? இன்னும் தூங்காம என்னாத்துக்கு உட்கார்ந்துருக்க?” என்று சிறிது அக்கறை தொனிக்கவே கேட்டான்.

“அதெல்லாம் ஒ ஆத்தா நேரா நேரத்துக்கு ஆக்கிப் போட்டுருவாய்யா. தூக்கம் வரலைய்யா. உனக்கு இன்னைக்காவது வூடு வந்து சேர தோணுச்சே. ஒ ஆத்தா தேன் இப்ப கூடப் புலம்பிட்டே இருந்தா. உள்ளார போயி பாருய்யா…” என்றார் வாஞ்சையாக.

அதிவீரன் உள்ளே செல்ல, காமாட்சியும் மகனிடம் பாசமாகப் பேசினார். அவனும் இரண்டொரு வார்த்தைகள் அவர் மனம் கோணாமல் பேசினான்.

கருப்பண்ணன் மகனிடம் பேசவில்லை என்றாலும் அவரின் பார்வை என்னவோ அக்கறையுடன் மகனை தழுவியது.

அதை அதிவீரனும் காணவே செய்தான்.

தன்னை மட்டுமே நினைத்துக் கொண்டு தன் குடும்பத்தினரை வருத்திவிட்டது புரிந்தது.

அவர்களுக்காக அன்று களத்து மேட்டுக்குச் செல்லாமல் தனது அறைக்குச் சென்றான்.

அறைக்குள் சென்றதும் நேராக ஜன்னல் அருகில் தான் சென்றான். ஜன்னலை திறந்து எதிர்வீட்டைப் பார்த்தான்.

அன்று கணவனுடன் பூரிப்புடன் நின்றிருந்த அங்கை நினைவில் வந்தாள்.

அவள் இன்று எப்படி இருப்பாளோ? என்று வேதனையுடன் நினைத்துக் கொண்டான்.

அவள் இப்போது எப்படி இருப்பாள் என்று விரைவிலேயே அவன் அறிந்து கொள்ளும் நிலை வந்தது.

அவளின் நிலையைப் பார்த்து தான் இன்னும் அதிக வேதனையில் உழல போகிறோம் என்று அப்போது அவன் அறியவில்லை.

உங்களோடு சில வார்த்தைகள்… சற்று பெரிய போஸ்ட் தான். ஆனால், நிறைய பேரின் ஆதங்கத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால், பொறுமையுடன் படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

போன எபிக்கு கமெண்ட் செய்த அனைவருக்கும் முதலில் நன்றிகள் மக்களே…

உங்களை எல்லாம் ரொம்ப பீல் பண்ண வச்சுட்டேன், ஸாரி.

போன எபியை படிச்சிட்டு என்கிட்ட மூன்று கேள்விகள் வைக்கப்பட்டன. அதற்கு பதில் சொல்ல விரும்புறேன்.

இந்தக் கதையோட கருவை ஒன் லைனில் சொல்ல வேண்டும் என்றால், “அதிவீரனின் காதல்!”

ஆண், பெண் இருவரும் இணைந்து செய்தால் தான் காதல்னு சொல்ல முடியாது இல்லையா? ஒருவர் மட்டும் விரும்பினாலும் அது காதல் தான். அதிவீரன் என்ற ஆண்மகனின் ஒரு தலை காதல் தான் கதை களம். அதனால் இந்தக் கதையை அதிவீரன் பார்வையில் மட்டும் பாருங்க.

என்கிட்ட கேட்கப்பட்ட முதல் கேள்வி! “திருநாவுக்கரசுவை சாக வைக்க எதுக்கு அங்கைக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க?”

அதிவீரன் பார்வையில் பதில், அவளை ஒரு தலையாகத் தான் காதலிக்கிறான். அவள் ஏற்றுக் கொள்ளாத போதும் கடத்திக் கூட கல்யாணம் பண்ண நினைக்கிறான். காரணம் அவள் விருப்பம் இல்லாமல் வீட்டில் சொன்னதால் கல்யாணம் பண்ணிக்க போகிறாள் என்று நினைத்ததால்…

ஆனால், அங்கை விரும்பி தான் திருமணம் செய்கிறாள் என்று தெரிந்த அடுத்த நொடி அவளைக் கடத்தும் திட்டத்தை கைவிட்டு விலகி நிற்கிறான். அதுதான் அதிவீரனின் காதல்!

வேற யாரையும் பிடிச்சிருந்தாலும் என்னைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு அதிவீரன் நினைச்சிருந்தால் அவன் காதல் தோற்று போயிருக்கும். இப்போது அவன் தோற்று அவன் காதலை ஜெயிக்க வைத்திருக்கிறான்.

அதைச் சொல்ல எனக்கு திரு, அங்கை கல்யாணத்தை காட்ட வேண்டியது ஆகியது. கல்யாணம் முடிந்த பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி வாழணும்னு அவங்க தான் முடிவு பண்ண முடியும். திரு குடிச்சது தப்புன்னு காட்ட நினைத்தேன். ஒரு பெக் குடித்தால் என்ன ஆகிட போகுதுங்கன்னு பொண்ணுங்களே கேட்கும் காலத்தில் இருக்கோம். ஆனால், அந்தக் குடியினால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ…

கருத்துன்னு நான் பக்கம் பக்கமா எழுதினால் கட்டுரைன்னு சொல்லிட்டு போய் விடுவீர்கள். எனது ஆரம்ப கால கதைகளுக்கு அந்தப் பெயர் வாங்கினேன். அதனால் இப்போதெல்லாம் போகிற போக்கில் ஏதாவது எழுதிவிடுவேன். சோ அதில் ஒன்னு தான் திரு இறந்தது.

இறப்பு காட்சி ஏன் விரிவா எழுதினீங்க?

அதை ஏன் எழுதினேன்னு அந்த இடத்தில் இருந்த அதிவீரனை பார்த்தால் புரிந்திருக்கும். தான் உயிராக விரும்பும் பெண் படும் துன்பத்தை அதிவீரன் பார்வையில் சொல்ல அந்தக் காட்சி தேவைப்பட்டது.

அடுத்த கேள்வி, “ஏன் திருவை இறக்க வைக்காமல் அதிவீரனுக்கு வேறு பெண்ணை கல்யாணம் செய்யவில்லை?”

இதுக்கு காரணம் மேலே சொன்ன படி அதிவீரன் காதல் தான். தான் நேசிக்கும் பெண்ணின் இன்பம், துன்பம் எல்லாவற்றையும் கண் முன்னால் பார்க்கும் ஒரு காதலன் என்ன செய்வான்? அந்தக் காதல் இனி என்னவெல்லாம் செய்ய போகிறது என்பது தான் கதை. அதற்கு இன்னொரு பொண்ணை கொண்டு வந்து நிறுத்த முடியாது.

இது ஒரு காதல் கிறுக்கனின் வாழ்க்கை பயணம்!