ஊனே… உயிரே…
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
ஊனே… உயிரே…
எழிலன்பு
தேடல்!
கண்களும், மனமும் தேடித் தேடி ஓய்ந்து போயின.
வரவில்லை! வரவே இல்லை!
அவளின் தேடலுக்குரியவன் வரவே இல்லை.
தன் கைபேசியின் இணையம் தான் வேலை செய்யவில்லையோ?
நான்கு, ஐந்து முறை கைபேசியை அணைத்து அணைத்து உயிர்ப்பித்து விட்டாள்.
ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது.
அவளின் கைபேசி இணையம் நன்றாகவே வேலை செய்து கொண்டிருந்தது.
ஆனால், அவளின் தேடலுக்கு உரியவன் மட்டும் தொடர்பு எல்லையில் இல்லை என்ற பதிலே அவளுக்குக் கிடைத்தது.
சற்று முன் வரை, கை ஓயாமல் அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன், இப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால்!
எல்லை இணையத் தொடர்புக்கு மட்டுமல்ல. அவனுக்கும், அவளுக்கும் இடையே உள்ள தொடர்பை கூட, எல்லைக்கு அப்பால் வைத்து விட்டான் என்று சத்தம் இல்லாமல் உரக்க சொன்னது அவனின் இந்த விலகல்.
அவனின் விலகலை தாங்கவியலா இதயம் கசிந்துருக, கண்கள் கண்ணீரை கசிந்தன.
அதிலும் அவள் கண்கள் இதுவரை தன்னுடன் உரையாடிய அவன் எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டே கசிய, எழுத்துக்களும் கலங்கி போயிருந்தன அவளின் கண்களின் வழியே!
கூடவே அவளின் நினைவுகள் முதல் முறையாகத் தான் அவனுடன் பேசிய தருணங்களை நினைவு கூர்ந்தன.
முகநூல்! எத்தனையோ நட்பு வட்டத்தை இணைத்திருக்கிறது. புதிய நட்புகளையும் உருவாக்கி தந்திருக்கிறது.
அவளும் தன் பள்ளி கால நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவே முகநூலில் நுழைந்தாள்.
கால ஓட்டத்தில் புதுப் புது நபர்களிடமிருந்து நட்பழைப்பு வந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள அவள் தயங்கியது உண்டு.
இந்த இணைய வழி தொலை தொடர்பு வழியாக நல்ல விஷயங்கள் பல நடந்தாலும், கெட்ட விஷயங்களும் கலந்தே இருந்ததால், பழக்கம் இல்லாத, ஒரு புதிய நட்பு வட்டத்தை அவளால் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதனால், அறியாத நட்பு வட்டத்தை நாடாமல் முகநூலில் வரும், கவிதை பக்கங்கள், நகைசுவை பக்கங்கள், சினிமா பக்கங்கள், பாடல் காணொளி பக்கங்கள் என்று அதை மட்டும் பார்த்து, தன் பொழுது போக்காகப் பயன்படுத்திக் கொள்வாள்.
அப்படி ஒரு நகைசுவை பக்கத்தை அவள் பார்த்துக் கொண்டிருந்த போது தான், அந்தக் கவிதை அவள் கண்ணில் பட்டது.
அந்த வரிகளுக்கு அவள் வைத்த பெயர் கவிதை. ஆனால், அதை எழுதியவனோ அதற்கு ‘உளறல்’ என்று தான் பெயர் வைத்திருந்தான்.
வர்ணம் தீட்டினாள்
தன் வர்ணம் இல்லா
கயல்விழிகளால்!
அந்த எழுத்துக்களுக்குக் கீழ், ஒரு பார்வையில்லா பெண் ஒரு ஓவியம் வரைவது போலிருந்த புகைப்படத்தைப் போட்டிருந்தான் அவன்.
அதற்கு விளக்கமாக, “என்னடா இவன் எப்பவும் மொக்கை ஜோக் தான் ஷேர் பண்ணுவான். இப்ப கவிதைங்கிற பெயரில் புதுசா ஒரு மொக்கையை ஷேர் பண்ணிருக்கானே… இதெல்லாம் கவிதையான்னு நீங்க என்னைக் காறி துப்ப போறீங்கன்னு தெரியும்.
இருந்தாலும், தில்லா இதை ஷேர் செய்த, என்னை நீங்க பாராட்டியே ஆகணும். ஏன்னா, இது நானே எழுதிய மொக்கை கவிதையாக்கும்…” என்று எழுதி, கண்ணாடியை போட்டு ஸ்டைல் காட்டும் ஸ்மைலிகளையும் போட்டு வைத்திருந்தான்.
அதற்குப் பதில் வந்த கமெண்ட்களில் சிலர் அவனைக் கலாய்த்திருக்க, சிலர் கவிஞரே என்று கேலியாக உரைத்திருக்க, அடடே! மொக்கை மன்னன், மொக்கை கவிஞனானே… என்று கிண்டலாகப் பேசியிருந்தனர்.
ஒரு சிலர் நன்றாக இருப்பதாகப் பாராட்டியிருந்தனர்.
அந்த ஒரு சிலரின் அவளும் அடக்கம். ஆனால் அந்த ஒரு சிலரை போல், கமெண்ட்டில் தன் கருத்தை சொல்லாமல், உள்பெட்டியில்(Inbox) தன் கருத்தை தெரிவித்தாள் அவள்.
பொது வெளியில் எப்போதும் அவளுக்குக் கருத்துக்கள் சொல்ல பயமுண்டு. அந்தக் கருத்தை பார்த்துவிட்டு, அந்த முகநூல் பக்கத்திலிருந்து சிலரிடமிருந்து புதியதாக நட்பு அழைப்பு நாடிவருவதை ஒரு முறை அனுபவ பூர்வமாகக் கண்ட பிறகு, பொதுப் பக்கங்களில் கருத்துக்கள் போடுவதில்லை அவள்.
அன்றும் அதே போல் தன் மனதை சட்டென்று பாதித்த அந்த வரிகளைப் பற்றி, உள்பெட்டியில் தெரிவித்தாள்.
“ஹாய், இன்னைக்கு நீங்க போட்ட கவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க. அதை நீங்க மொக்கைனு சொல்லியிருக்க வேண்டாம்…” என்று பாராட்டையும், வருத்தத்தையும் சேர்த்தே தெரிவித்திருந்தாள்.
சில நொடிகளிலே அவளுக்குப் பதில் வந்தது.
“அட! உங்களுக்குப் பெரிய மனசுங்க! நான் எழுதியதை கவிதைன்னு சொன்னதே பெரிய விஷயம். அதை மனம் திறந்து பாராட்ட இன்னும் பெரிய மனசு வேணும்ங்க. அந்தப் பெரிய மனதிற்கு ரொம்ப நன்றி!” என்ற பதிலை பார்த்துவிட்டு,
“ஏன் தாழ்வாகச் சொல்றீங்க? நிஜமாகவே நல்லா இருந்தது…” என்று பதிலுக்கு அனுப்பினாள்.
எப்போதும் யாரிடமும் இப்படிப் பதிலுக்குப் பதில் வாதாட மாட்டாள். நன்றி என்று வந்து விட்டால், அத்துடன் பேச்சை முடித்துக் கொள்வாள். ஆனால் இன்று அவனிடம் வாதாட தூண்டியது அவள் மனம்.
“பின்ன என்னங்க? நான் சும்மா, அந்தப் படம் கண்ணில் பட்டதும் கிறுக்கி வச்சேன்…” என்று ஜஸ்ட் லைக் தட் என்பது போல் கையை விரிக்கும் ஸ்மைலி அனுப்பி வைத்தான்.
“உங்களுக்கு அது கிறுக்கலா தெரியுது. ஆனால், எனக்கு அதில் பல அர்த்தம் தெரியுது…” என்றாள் உணர்வு பூர்வமாக!
அவனுக்கு வியப்பு! அவள் இவ்வளவு உணர்ச்சிவசப்பட அதில் ஒன்றுமில்லை என்றே நினைத்தான்.
அதனால், “என்னங்க சொல்றீங்க? பல அர்த்தமா? எழுதிய எனக்கே அப்படி ஒன்னும் தெரியலையே?” என்று தன் வியப்பை மறைக்காமல் வெளியிட்டான்.
“அதைச் சொன்னால் புரியாது. விடுங்க… பை!” என்று அவள் அத்துடன் தன் பேச்சை முடித்துக் கொண்டாள்.
சட்டென்று அவள் தன் பேச்சை முடித்துக் கொண்டதுடன் தான், அவர்களின் முதல் உரையாடல் ஆரம்பித்தது.
அதன் பிறகு அவளும் அவனைத் தொடர்பு கொள்ளவில்லை. அவனும் கண்ணியத்துடன் விலகி கொண்டான்.
ஆனால், அதன் பிறகு வந்த நாட்களில் நகைச்சுவை துணுக்குகளை மட்டும் பகிராமல், அவனே எழுதியது என்று ஒரு படம் போட்டு அதுக்குப் பொருத்தமாக நான்கு வரிகள் எழுத ஆரம்பித்தான்.
அவனின் பக்கத்தில் நகைச்சுவை துணுக்குகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவள், அதன் பின் அவன் போடும் அந்தப் படங்களுக்காகவும், அவனின் வரிகளுக்காக மட்டும் அவனின் பக்கத்தைத் தேடி சென்றாள்.
நடுவில் இரண்டு முறை, அவளைப் பாதித்த வரிகளை உள்பெட்டியில் சென்று பாராட்டினாள். அவனும் பிகு செய்யாமல் நன்றி சொன்னான்.
அப்படியே தொடர்ந்த நிலையில், ஒரு நாள் அவளுக்கு ஒரு புதிய நட்பு அழைப்பு வந்தது.
அந்த அழைப்பில் இருந்தவனின் புகைப்படத்தைப் பார்த்தே அவளுக்கு யார் என்று தெரிந்து போனது. அந்த முகநூல் பக்கத்திற்கு உரியவன் தான். அவன் பக்கத்தில் எப்போதாவது அவன் தன் புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறாள்.
முகநூல் பக்கத்தில் அவன் பெயர் இருக்காது. ஜஸ்ட் பார் ஃபன் என்ற பெயரில் அந்தப் பக்கத்தை வைத்திருந்தான்.
இதில் அவன் புகைப்படத்துடன் அவன் பெயரும் இருக்க, அவனின் பெயரை முதல் முறையாக அறிந்து கொண்ட நாள் அன்று.
சுடர்விழியன்! அவன் பெயரே அவளுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. அவன் கண்களும் அவன் பெயருக்கு ஏற்ற வகையில் சூடர் விட்டு கொண்டிருந்தன.
அவனின் தீட்சண்யமான கண்களை அவளையும் மீறி சில நொடிகள் கூர்ந்து பார்த்தாள்.
அந்தக் கண்களில் ஒருவித குறும்பும் கூத்தாடிக் கொண்டிருந்தது. அவன் கண்களுக்குப் போட்டியாக உதட்டிலும் குறும்புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.
நல்ல ஜாலியான ஆளாக இருப்பான் என்று அவளுக்குத் தோன்றியது.
தாடையில் புற்களாய் தாடி. இது எதற்காம்? என்ற கேள்வியும் அவளுக்குத் தோன்றியது.
அடுத்த முறை அவனிடம் பேசினால் கேட்க வேண்டும்… என்று மனதின் ஓரம் குறித்துக் கொண்டாள்.
அவனைப் பற்றி அத்தனை யோசித்தும், அவனின் நட்பு அழைப்பை மட்டும் அவள் ஏற்கவில்லை.
அவனிடம் பேசியிருக்கிறாள் தான். பேசிய வரை அவன் கண்ணியம் மீறவில்லை தான். ஆனாலும், ஏதோ ஒரு தயக்கம்! சட்டென்று அவனைத் தன் நட்பாக இணைத்துக் கொள்ள முடியவில்லை.
அதனால் கிடப்பில் போட்டாள்.
அவள் உடனே நட்பு அழைப்பை ஏற்றுக் கொள்வாள் என்று எதிர்பார்த்திருந்திருப்பான் போலும். இரண்டு நாட்கள் பொறுத்தவன், அதற்கு மேல் முடியாமல், முதல் முறையாக அவனே அவளை உள்பெட்டியில் அழைத்தான்.
“தயக்கம் ஏனோ தாரகையே?” என்று மட்டும் முதலில் அனுப்பி வைத்தான்.
அது எதற்கு என்று உடனே புரிந்து விட்டாலும், அவள் பதில் அனுப்பவில்லை.
“நண்பி நட்பாக மாற இந்த நண்பன் என்ன செய்ய வேண்டுமோ?” என்று அடுத்த முறை அனுப்பினான்.
அதற்கும் மௌனம் சாதித்தாள் அவள்.
நண்பி என்று சொல்லி விட்டு நட்பை கேட்குறான்? என்ன டிசைன் இவன்? என்று மனதில் மட்டும் நினைத்துக் கொண்டாள்.
ஏனோ? ஏனோ?
இந்த மௌனம் ஏனோ?
உந்தன் மனம் தான் என்னவோ?
என்று கைக்கு வந்ததை டைப் செய்து அனுப்பி வைத்தான்.
இவன் தன் எழுத்தை மொக்கை என்று சொல்லிக் கொள்வதில் தவறே இல்லை என்று நினைத்து, தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் அவன் இப்படியே அனுப்பிக் கொண்டிருக்க, மூன்றாவது நாள் போனால் போகிறது என்பது போல் அவனின் நட்பு அழைப்பை ஏற்றுக் கொண்டாள்.
“வாவ்! விடா முயற்சி விஷ்வரூப வெற்றின்னு இதைத் தான் ஊருக்குள் சொல்லுவாங்களோ?” அவள் நட்பில் இணைந்த அடுத்தக் கணம் செய்தி பறந்து வந்தது.
“உங்களுக்கு என்ன வேலையே இல்லையா? வெட்டி ஆபிஷரா? எந்த நேரமும் ஆன்லைனில் சுத்துறீங்க?” என்று கிண்டலாகக் கேட்டுப் பதில் அனுப்பினாள்.
“வாவ்! எப்படிங்க சரியா சொன்னீங்க? நான் வெட்டி ஆபிஷர் தாங்க. அதுவும் வெட்டி வெட்டி பார்க்கிற ஆபிஷர்…” என்றான்.
“வெட்டி வெட்டி பார்க்கிற ஆபிஷரா? அப்படினா?” புரியாமல் வினவினாள்.
“நீங்களே கண்டுபிடிங்களேன்…”
“எனக்குத் தெரியலை…”
“ரொம்ப ஈஸிங்க. அதுவும் பொண்ணுங்க அதிகம் குறை சொல்ற கேட்டகிரியில் தான் என் வேலை வரும்…” என்று பற்களைக் காட்டி சிரிக்கும் ஸ்மைலி வந்தது.
“அப்படிப் பொண்ணுங்க எதைக் குறை சொல்லுவாங்க? எனக்குப் புரியலையே?” குழப்ப ஸ்மைலியை அனுப்பி வைத்தாள்.
“என்னங்க நீங்க இவ்வளவு விவரம் இல்லாமல் இருக்கீங்க? சரி, நானே சொல்லிடுறேன். நான் டெய்லருங்க…” என்று அனுப்பிக் கூடவே கத்திரிகோல் படத்தை அனுப்பி வைத்தான்.
அப்போது தான் அவன் சொன்னதே அவளுக்குப் புரிந்தது.
“இது அநியாயம்! நீங்க இப்படி எந்த நேரமும் போனை பார்த்து துணியை வெட்டி தைச்சுக் குடுத்துட்டு, அது சரியில்லைன்னு சொன்னால் பொண்ணுங்களையே குறை சொல்லுவீங்களா?” என்று போர்க்கொடி தூக்கினாள்.
“ஹையோ! நீங்களும் ஒரு பொண்ணு என்பதை மறந்து போய்ச் சொல்லிட்டேன்ங்க…” என்று பயந்தவன் போல் பாவலா காட்ட,
“என்னது?” என்று உக்கிரமாய் இருக்கும் ஸ்மைலியை அனுப்பி வைத்தாள்.
இப்படி நீண்ட அவர்களின் உரையாடல் மெல்ல மெல்ல வளர்ந்தது.
அவ்வப்போது பேசிக் கொள்ள ஆரம்பித்தவர்கள் நாளடைவில், அனுதினமும் பேசிக் கொள்ளும் நிலைக்கு வந்தனர்.
பின் வேலை பளு என்று ஒரு நேரம் குறித்து அந்த நேரத்தில் வழக்கமாகப் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.
இரவு ஒன்பது மணி அவர்களின் உரையாடல் நேரம். அந்த நேரத்தை அவளுமே ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.
அந்த எதிர்பார்ப்பை அவள் நட்பு என்ற கட்டுக்குள் அடக்கி வைத்திருக்க, அதை அவன் உடைத்து காதல் என்ற கட்டுக்குள் கொண்டு வந்தான்.
ஒரு நாள் திடீரெனப் பேசிக் கொண்டிருக்கும் போதே, சட்டென்று ‘ஐ லவ் யூ!’ என்று விட்டான்.
அடுத்த நொடி அவளுக்குக் கைகள் நடுங்க ஆரம்பிக்க, கைபேசியைப் படுக்கையில் தூக்கிப் போட்டு விட்டாள்.
“ஹேய், பதில் சொல்லுமா…”
“நான் லவ் சொன்னது உனக்குப் பிடிக்கலையா?”
“என் மேல் கோபமா?”
“ப்ளீஸ், பேசேன்…”
அவள் கைபேசியைத் தூக்கி போட்டதை அறியாமல், தொடர்ந்து தவிப்புடன் செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தான் சுடர்விழியன்.
ஒரு வாரம் ஆனப் பிறகும் அவன் அனுப்பிய செய்திகளைப் பார்க்காமல் தவிர்த்தாள்.
அதைத் தவிர்த்தவளால் அவள் மனம் அவனைத் தேடியதை மட்டும் அவளால் தவிர்க்க முடியவில்லை.
ஆம்! அவள் மனதிலும் அவன் இடம் பிடித்திருந்தான்.
ஆனால் அதை அவளால் ஒப்புக்கொள்ளத்தான் முடியவில்லை.
எங்கே அவன் அனுப்பிய செய்திகளைப் பார்த்தால் தன் மனம் உடைந்து விடுமோ என்ற பயத்தில் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
ஆனால், ஒரு வாரம் வரை தான் அவள் கட்டுபாடு எல்லாம். அதற்கு மேல் அவள் மனதிற்கு அவளாலேயே கடிவாளம் போட முடியாமல் போக, அவர்களின் வழக்கமான நேரத்தில் அன்று இரவு, கைபேசியை எடுத்து, அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளைத் திறந்து பார்த்தாள்.
ஒரு வாரமாக அவன் அனுப்பின செய்திகளைப் படிக்கப் படிக்க அவள் கண்ணில் இருந்து அருவியாய் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
“இன்பா, டேய் என்கிட்ட பேசுடா தங்கம்…”
“நீ பேசாமல் இருப்பதை என்னால் தாங்க முடியலை…”
“எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு…”
“நான் அப்படி என்ன தப்பு செய்தேன்னு என்னை இப்படித் தண்டிக்கிற?”
“என் மனதில் நீ இருப்பதைச் சொன்னது தப்பா?”
“உன் மனதை தொட்டு சொல்லு! நீயும் என்னை லவ் பண்ற தானே?”
“இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாதே! நான் நம்ப மாட்டேன்…”
“அப்படி என்ன பிடிவாதம் உனக்கு?”
“ஏய், பேசுடி…”
“உன் மௌனம் என்னைக் கொல்லுதுடி…”
“என்னால் சாப்பிடவே முடியலை இன்பா…”
“உன் நினைப்பாவே இருக்கு…”
“ஒரே ஒரு வார்த்தை என்கிட்ட பேசிடேன்…”
“ஐயோ! செத்துப் போயிடலாம் போல இருக்குடி இன்பா…”
கடந்த ஒரு வாரமாக, அவன் பேசிய காதல் பிதற்றல்கள் கொட்டிக்கிடந்தன.
அவன் கடைசியாகச் சொன்னதைக் பார்த்ததும், அவள் உயிர் துடித்துப் போனது.
கண்ணிலிருந்து கடகடவெனக் கண்ணீர் இறங்கி வந்தது.
அதற்குப் பிறகு அவன் வேறு எந்தச் செய்தியும் அனுப்பவில்லை என்றதும், அவளின் உயிர் நாடியின் தாளம் தப்பியது.
நடுங்கிய விரல்களால், “என்ன பேசுறீங்க நீங்க?” என்று அனுப்பி வைத்தாள்.
அடுத்த நொடி உயிர் பெற்று வந்தவன் போல், “இன்பா… இன்பா… வந்துட்டியாடி? என்னை விட்டு எங்கடி போன? அப்படி என்ன கோபம் உனக்கு? இனி மேல் இப்படிப் போய்ப் பார். நிஜமாகவே நான் செத்து போறேன்…” என்று படபடவென்று செய்தியை அனுப்பி வைத்தான்.
அவனின் ஒவ்வொரு எழுத்திலும் தெரிந்த காதலில், அவளின் ஊனும், உயிரும் துடித்தது.
“ப்ளீஸ், இப்படிப் பேசாதீங்க…” என்று கண்ணீர் நிறைந்த கண்களுடன் எழுதி அனுப்பி வைத்தாள்.
“அப்படித்தான் பேசுவேன். என்னை விட்டுப் போனால் நான் அப்படித்தான் பேசுவேன். அந்த அளவுக்கு நான் உன் மேல் உயிரே வச்சுருக்கேன்டி இன்பா…” என்று உருகினான்.
அவளின் இதயமும் உருகி அவனைத் தேடி ஓடியது.
பெரும் தவிப்புடன் உதட்டை கடித்துக் கொண்டாள்.
“இனி நீங்க இப்படிப் பேசினால் நான் உங்ககிட்ட பேசவே மாட்டேன்…” அவன் வார்த்தைகளைத் தாங்க முடியாமல் சொன்னாள்.
“நீ என்கிட்ட பேசாமல் போனால் தான் இப்படிப் பேசுவேன். நீ என்கிட்ட பேசு. அப்பத்தான் இப்படிப் பேச மாட்டேன்…” என்று பேரம் பேசினான்.
அவளால் மட்டும் அவனிடம் பேசாமல் எப்படி இருக்க முடியும்? இந்த ஒரு வாரமாக அவனிடம் பேசாமல் அவள் தவித்த தவிப்பும், துடித்த துடிப்பும் அவளுக்கு மட்டும் தானே தெரியும்.
அதனால் அவனிடம் அவள் பேச ஆரம்பித்தாள். ஆனால், ‘நானும் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று அவள் சொல்லவில்லை.
அவள் சொல்லாமலே அவள் தன்னிடம் பேச ஆரம்பித்ததை வைத்து அவனே புரிந்து கொண்டான்.
அதன் பிறகு வந்த நாட்களில் அவன் காதலுடன் பேச ஆரம்பிக்க, அவள் தான் இருதலைக்கொல்லி எறும்பாகத் தவித்துப் போனாள்.
அவளால் அவன் பேச்சுடன் ஒன்றவும் முடியவில்லை. விலகவும் முடியவில்லை. தான் உண்மையை மறைத்துத் தவறு செய்கிறோம் என்று அவளுக்கு உறுத்த ஆரம்பித்தது.
இப்படி நாட்கள் செல்ல ஆரம்பிக்க, ஒரு நாள் அவளைப் பார்க்க வேண்டும் என்று செய்தி அனுப்பினான் அவன்.
அடுத்த நொடி அவளின் உடலே நடுங்கி போனது.
இதுவரை அவள் தன் புகைப்படத்தைக் கூட அவனிடம் காட்டவில்லை. முகநூலிலும் பதிவேற்றியது இல்லை.
இத்தனை நாட்களும் அவளைப் பார்க்காமலே பழகி காதல் வரை சென்றவன், இப்போது பார்க்க ஆசையாக இருப்பதாகச் சொல்ல, என்ன செய்வது என்று அறியாமல் தவித்துப் போனாள்.
“ஏன் இன்பா, இவ்வளவு தயக்கம்? நான் உன்னைப் பார்க்க கூடாதா? உன் முகத்தைப் பார்க்க எனக்கும் ஆசை இருக்காதா? ஒரே ஒரு போட்டோ தானே கேட்டேன். அனுப்பேன்…” என்று ஆசையுடன் கேட்டான்.
“நான்… நான் ஒன்னும் அவ்வளவு அழகா இருக்க மாட்டேன் விழியன்…” என்றாள் தடுமாற்றத்துடன்.
“ஆமா, நான் மட்டும் ஆணழகன் போட்டியில் அவார்ட் வாங்கிட்டு வந்துருக்கேன் பார். சும்மா பிகு செய்யாமல், அனுப்புங்க மேடம்…” என்று சீண்டலாகவே கேட்டான்.
“அது இல்லை விழியன், நான் உங்க கிட்ட என்னைப் பற்றிய ஒரு உண்மையை மறைச்சிட்டேன்…” என்றாள் தயக்கத்துடன்.
“உன்னைப் பற்றிய உண்மையா? அப்படி என்ன மறைத்திருக்க முடியும். நீ தான் உன்னைப் பற்றி நீ எல்லா விவரமும் என்கிட்ட சொல்லியிருக்கயே… உன் முழுப் பெயர் இன்பவல்லி. ஸ்கூல் படிப்போட உன் படிப்பை நிறுத்திட்ட. இப்ப நீ ஒரு செராக்ஸ் கடையில் வேலை செய்ற. உன்னோட அப்பா ஒரு டீ கடை வச்சிருக்கார்.
அம்மா உங்க அப்பாவுக்கு உதவியா கடையைப் பார்த்துக்கிறாங்க. உனக்கு ஒரு தம்பி இருக்கான். இப்ப அவன் படிச்சிட்டு இருக்கான்… இப்படி எல்லாமே நீ என்கிட்ட சொல்லிட்ட இன்பா. அதே மாதிரி நானும் என்னைப் பற்றி எல்லாம் உன்கிட்ட சொல்லியிருக்கேன். இதுக்கு மேல் நீ என்கிட்ட மறைக்க என்ன இருக்கு?” என்று இலகுவாகவே கேட்டான்.
சொல்ல வேண்டிய முக்கியமானதை மட்டும் நான் உங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டேன் என்று நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன் விழியன்?
நீங்க வேணும்னா என்கிட்ட ஒளிவு மறைவு இல்லாமல் பழகியிருக்கலாம். ஆனால், நான் அப்படி இல்லையே… என்று கலங்கி போனாள் பெண்ணவள்.
என்னிடம் உருகி உருகி காதல் சொன்னவன், தான் உண்மையைச் சொன்ன பிறகு என்ன செய்வான்?
என்ன செய்வான்? என்னை ஏமாற்றிவிட்டாய் என்பான். அருவருப்பாகப் பார்ப்பான். உன்னைப் போய்க் காதலித்தேனே என்று காறி உமிழ்வான். வேற என்ன செய்வான்? என்று நினைத்து மருகினாள்.
“என்ன இன்பா, பதிலே காணோம்?” அவள் வெகுநேர அமைதியைப் பார்த்து கேட்டான்.
அவனுக்கு என்ன பதில் அனுப்புவது என்று அவளுக்குப் புரியவே இல்லை. குழம்பி போய் இருந்தாள்.
ஊனே… உயிரே…
உன் பூமுகம் காணாமல்
ஊண் உறக்கம்
துறந்தேனடி நானே!
என்று உளற ஆரம்பித்தான்.
அதற்கும் அவள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை.
எப்போதும் அவன் இப்படி உளறி வைத்தால், ‘ஒரே ஒரு முறை தெரியாத்தனமா உங்க உளறலை கவிதைன்னு சொல்லி பாராட்டிட்டேன். அதுக்குத் தண்டனையா எப்பவும் இப்படியா விழியன் மொக்கை போடுவீங்க? தாங்கலை…’ என்று அவனைக் கேலி செய்பவள், இன்று அமைதியாக இருந்தது அவனுக்கு உறுத்தலை உருவாக்கியிருந்தது.
“என்ன இன்பா?” என்று அவன் கேட்டுக் கொண்டிருந்த போதே, “அம்மா சத்தம் போடுறாங்க. நான் அப்புறம் பேசுறேன் விழியன்…” என்று சொல்லி அப்போதைக்குத் தப்பித்துக் கொண்டாள்.
அதன் பிறகும் அவன் பேசிய போதெல்லாம், ஏதாவது ஒரு காரணம் சொல்லி புகைப்படம் அனுப்பாமல் தள்ளி போட்டாள்.
எவ்வளவு நாட்கள் தான் அவனும் பொறுப்பான்?
ஒரு நாள் ‘நீ இன்னைக்குப் போட்டோ அனுப்பியே ஆகவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தான்.
அவளுக்கும் அவனிடம் உண்மையை மறைக்க மறைக்கக் குற்றவுணர்வு கூடிக் கொண்டே போக, உண்மையைச் சொல்லி விடலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
“நீங்க கேட்ட என் போட்டோ நான் அனுப்புறேன் விழியன். ஆனால், அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…” என்று தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.
“என்ன இன்பா, என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்? சொல்லுடா…” என்று அவன் பாசமாகக் கேட்டு வைக்க, அவளுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.
“விழியன், நான் உங்களை ஏமாத்த நினைக்கலை. உங்ககிட்ட நான் உண்மையாத் தான் பழகினேன்…” என்று அவள் ஆரம்பிக்க,
“அதை நீ சொல்லித் தான் எனக்குத் தெரியணுமா? என் இன்பா பற்றி எனக்குத் தெரியாதா?” என்று அவன் கேட்க, உடைந்து அழ ஆரம்பித்தாள்.
கண்ணில் இருந்து விடாமல் கண்ணீர் கசிய, மனம் நிலையில்லாமல் துடித்தது.
இந்தக் காதலுக்குத் தான் தகுதியானவள் தானா? தன்னையே கேட்டுக் கொண்டாள்.
அதற்குள் அவளிடமிருந்து பதில் வராமல், “இன்பா, எங்கடா போய்ட்ட? ஏதோ சொல்ல வந்தியே, சொல்லுடா?” என்று அவன் உருக, இங்கே அவளின் உள்ளமும் உருகியது.
இவனின் இந்த அன்பை இனியும் தான் ஏமாற்றினால் தன்னை விட இழிவானவள் யாரும் இருக்க முடியாது என்று நினைத்தவள், கண்களை வேகமாகத் துடைத்துக் கொண்டாள்.
அடுத்த நொடி யோசிக்காமல் அவளின் முழுப் புகைப்படத்தை அனுப்பி வைத்துவிட்டு, அவன் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
மாநிறத்தில் அவள் முகம் லட்சணமாகவே இருந்தது. ஆனால், அவளின் இரண்டு கைகளிலும் ஊன்றுகோல் இருக்க, அப்படியே பார்வையைக் கீழே இறக்கினால், சேலை மறைத்த கால் பகுதியில் ஒரு கால் மட்டும் வெளியே தெரிய, இல்லாத இன்னொரு காலுக்குப் பதிலாக அங்கே ஊன்றுகோல் தான் இருந்தது. அதுவே அவளின் ஒரு கால் இல்லாத குறையை அவனுக்கு இந்நேரம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும். இதோ, இப்போது என்னை விட்டு போய் விடப் போகிறான்.
துடிக்கும் மனதுடன், அவனுக்கு அனுப்பி வைத்த தன் புகைப்படத்தைத் தானே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள் இன்பவல்லி.
அவள் எதிர்பார்த்தது போலவே, அவள் புகைப்படத்தை அனுப்பி வைத்த சில நொடிகளில் ஆப்லைன் போயிருந்தான் சுடர்விழியன்.
போய்விட்டான்! இதோ போயே விட்டான்! இனி என் பக்கமே திரும்பி பார்க்க மாட்டான்.
அவ்வளவு தான்! அவனின் உருகலும் அவ்வளவுதான்! அவனின் காதலும் அவ்வளவு தான்! இனி என்ன செய்யப் போகிறேன் நான்? என்று துடித்தவள், அந்த மெத்தை இல்லாத இரும்பு கட்டிலில் விழுந்து கதறி அழ ஆரம்பித்தாள் இன்பவல்லி.
பின் ஏதோ நினைத்துக் கொண்டது போல், வேகமாக எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு, தன் கைபேசியை அணைத்து, உயிர்ப்பித்துப் பார்த்து, உண்மையாகவே அவன் விலகி போய் விட்டானா? என்று தவிப்புடன் தேடிப் பார்த்தாள்.
அவன் ஆன்லைனில் இல்லவே இல்லை. தொடர்புக்கு அப்பால் சென்று விட்டான் என்று தெரிந்ததும் இதுவரை நடந்ததை எல்லாம் நினைத்து நினைத்து அழுதாள்.
இரண்டு நாட்கள் சென்றிருந்தன.
கண்களில் ஜீவனைத் தொலைத்து தான் வேலை பார்க்கும் ஜெராக்ஸ் கடையில் அமர்ந்திருந்தாள் இன்பவல்லி.
கடையின் முதலாளி மதிய உணவு உண்ண அவரின் வீட்டிற்குச் சென்றிருக்க, தான் கொண்டு வந்த உணவை உண்ண பிடிக்காமல், மேஜையில் தலையைச் சாய்த்து அமர்ந்திருநாள்.
ஜீவனைத் தொலைத்த கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் கட்டுபாடு இல்லாமல் பெருகி கொண்டே இருந்தது.
வேலைக்கு வந்த இடத்தில் அழக் கூடாது என்று அடக்கி வைத்ததில் கண்களில் வலி எடுத்தது தான் மிச்சம்.
கண்களின் வலியை விட, மனதின் வலி பெரிதாக இருந்தது.
இதயத்தை யாரோ கசக்கி பிழிவது போல் வலி எடுக்க, அந்த வலியின் அளவை அவளால் தாளவே முடியவில்லை.
இந்த வலியிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று அவளுக்குப் புரியவே இல்லை.
எப்படிக் காதல் சொன்னான்? எப்படி உருகினான்? தான் பேசாமல் இருந்தாலே தவித்துப் போனானே? இப்போது என்னை மொத்தமாகத் தவிக்க வைத்து விட்டானே… என்று அவள் உள்ளம் துடியாய்த் துடித்தது.
அந்த மதிய வேளையில் கடைக்கு யாரும் வராததால், தன்னிலே மூழ்கி போய் மேஜை மீது சாய்ந்திருந்தவளை, “ம்க்கும்…” என்ற கனைப்புச் சத்தம் கலைத்தது.
யாரோ வாடிக்கையாளர் என்று வேகமாகத் தலையைத் தூக்கிப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
“ஹலோ, நான் யாருன்னு தெரியுதா?” என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கிய படி கேட்டான் அவன்.
அவனைத் தெரியாமல் இருக்குமா? இந்த நொடி முதல் அவனை நினைத்து தானே உருகி கொண்டிருந்தாள்.
“வி…விழியன்…” என்று திணறலுடன் அழைத்தவள், தடுமாறி மேஜையைப் பிடித்தபடி எழுந்து நிற்க முயன்றாள்.
“உட்கார். எனக்கு மரியாதை எல்லாம் வேண்டாம்…” என்று இலகுவாகச் சொன்னவன், சற்று தள்ளி இருந்த ஒரு பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்து அவளின் எதிரே போட்டு அமர்ந்தான்.
அவனை நேரில் பார்த்ததும், அவளின் கண்கள் கலங்கின. அதை மறைக்க முயலாமல், “நீ… நீங்க எ…எப்படி இங்க?” என்று தவிப்புடன் கேட்டாள்.
அவளுக்குப் பதில் சொல்லாமல் அவள் முகத்தையே சில நொடிகள் பார்த்தான்.
அவன் பார்வையின் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை.
“உருகி, உருகி லவ் சொன்னவன், விட்டுட்டு போயிட்டான்னு நினைச்சியோ?” என்று நிதானமாகக் கேட்டான்.
“வி…விழியன்…” என்றவளால் வேறு பேச முடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.
அவள் அப்படித் தானே நினைத்தாள்… அதை எப்படி மறுக்க முடியும்?
“உன்னோட இந்தக் கண்ணீர் அதைத் தான் சொல்லுது…” என்று தானே பதிலை சொன்னான்.
என்ன பேசுவாள் அவள்? என்ன பேச முடியும்? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு! தலையைக் குனிந்து கொண்டாள்.
“இன்பா, என்னைப் பார்!” அழுத்தமாக அழைத்தான்.
அவள் மெல்ல நிமிர்ந்து பார்க்க, “நான் சும்மா பொழுது போக்குக்காக உன்கிட்ட என் காதலை சொல்லலை. நீ எப்படி இருப்பன்னு தெரியாத போதே, உன்னை நான் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். உருகி உருகி காதலிச்சிட்டு நான் எப்படி உன்னை விட்டுட்டு போவன்னு நினைச்ச?” என்று தீர்க்கமாகக் கேட்டான்.
“நீ…நீங்க… என் போட்டோ பார்த்ததும் ஆப்லைன் போயிட்டீங்க…” என்றவள் கண்ணிலிருந்து சட்டென்று ஒரு துளி நீர் இறங்கி கன்னத்தில் விழுந்தது.
அவள் சற்றும் எதிர்பாராமல் அவள் கன்னத்தில் விழுந்த கண்ணீரை கையை நீட்டி துடைத்து விட்டான் சுடர்விழியன்.
அவள் விழிகளை விரித்துப் பார்க்க, “இந்தக் கண்ணீர் தேவையே இல்லை…” என்றவன், “அன்னைக்கு நானா போகலை. என் நெட் தான் என்னைப் போக வச்சிருச்சு…” என்று சொல்லி தோளை குலுக்கியவனை, நம்ப முடியாமல் பார்த்தாள்.
“எனக்குத் தெரியும், இந்த நேரத்தில் என்னை ஒரு ஏமாற்றுக்காரனா? சுயநலவாதியா நினைச்சிருப்பன்னு. என் இன்பாவை ஏமாற்றினால் அது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம் தானே?” என்று கேட்டான்.
‘இப்போது இப்படி உருகுபவர், அன்று ஏன் அப்படி ஒன்றே சொல்லாமல் விட்டுவிட்டு போனாராம்?’ என்று அவளின் மனம் சுணங்கவே செய்தது.
“அன்னைக்குத் தான் ஆன்லைனில் ஒரு படம் பார்த்தேன். அதிலேயே என் நெட் காலியாகிருச்சு. இருந்த கொஞ்ச நெட்டும், உன் போட்டோவை பார்த்துட்டு இருக்கும் போதே மொத்தமாகக் கட் ஆகிருச்சு. உன்கிட்ட சொல்லியிருக்கேன் தானே? எங்க ஊர் சின்னக் கிராம். அங்கே ரீசார்ச் எல்லாம் பண்ண முடியாது. பக்கத்து டவுனுக்கு வந்து தான் பண்ண முடியும். அதான் உடனே ரிசார்ச் பண்ணிட்டு உன்கிட்ட பேச முடியலை…” என்று அவள் கேட்காமலே விளக்கம் சொன்னான்.
அப்படியே இருந்தாலும், மறுநாள் ரீசார்ச் செய்துவிட்டு பேசியிருக்கலாமே? இரண்டு நாட்களாக ஏன் பேசவில்லை? என்ற கேள்வி அவளின் மனதில் ஓடியது.
அவள் கேள்வி புரிந்தது போல் அவனே சொன்னான்.
“மறுநாள் ரீசார்ச் செய்யக் கிளம்பிய போது தான் எங்க நெருங்கிய சொந்ததில் ஒருவர் இறந்துட்டாங்கன்னு தகவல் வந்தது. அதுக்குப் போயே ஆக வேண்டிய கட்டாயம். அதில் எனக்கு ரீசார்ச் பண்ண எல்லாம் நேரமே இல்லை. இரண்டு நாள் அங்கே தான் இருந்தேன். உன்னைப் போட்டோவில் அப்படிப் பார்த்த பிறகு, என்னால் அதுக்கு மேல ஷாட்டில்(chat) பேசிக்கலாம்னு பொறுமையா இருக்க முடியலை. உன்கிட்ட நேரில் பேசினால் தான் சரியா வரும்னு உடனே கிளம்பி வந்துட்டேன்…” என்று சொல்லி முடித்தான்.
“எ… எனக்கு ஒரு கால் இல்லை…” என்று தடுமாற்றத்துடன் முனங்கினாள்.
“அதைத் தான் நான் நீ அனுப்பிய போட்டோவிலேயே பார்த்தேனே…” என்று அவன் இலகுவாகச் சொல்ல, அவள் விழிகளை விரித்தாள்.
“நான் உன்னை இப்பவும் ஊனும் உயிருமாகக் காதலிக்கிறேன் இன்பா. உன்னால் நம்ப முடியாமல் போனாலும் இதுதான் நிஜம். உன் உடல் ஊனத்தைப் பார்த்ததும், என் காதலில் ஊனம் வந்தால் நான் உன் ஊனை(உடலை) மட்டுமே காதலிக்கிறேன்னு அர்த்தமாகிடும்.
உன் ஊன், உயிர், உள்ளம், உன் எல்லாமும் எனக்கு வேணும் இன்பா…” என்றவன், தன் கையை அவளை நோக்கி நீட்டினான்.
அவனின் கை மேல் தன் கையை வைத்தவள், கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் பெருகியது.
அது ஆனந்த கண்ணீர்!
ஊனே… உயிரே…
உன்னில் நானே!
என்னில் நீயே!
நம்மில் நாமே!
சில நொடிகளில் அவனின் முகநூல் பக்கத்தில் இவ்வரிகள் இடம் பிடித்தன.