உறவுகள் எனும் நந்தவனத்தில்… – அத்தியாயம் 5
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
ஆத்விக்கின் கார் கல்லூரி வாயிலில் வந்து நின்ற நேரம், “அஹாரா… உன்ன மேம் கூப்பிடுறாங்க…” என அவளின் தோழி ஒருத்தி வந்து அழைத்தாள்.
“எங்க இருந்தாலும் உங்க நொண்ணனை வர சொல்லுடா…” என இஷானிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்த அஹாரா, “தப்பிச்சிட்டான் உங்க நொண்ணன்… என் கைல மாட்டுற அன்னைக்கு இருக்கு உங்க நொண்ணனுக்கு…” எனப் பழிப்புக் காட்டி விட்டு அங்கிருந்து ஓடவும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான் இஷான்.
தன் போனிடேல் அசைய துள்ளித் துள்ளி ஓடிய பெண்ணின் முதுகில் பார்வையைப் பதித்தவாறே தன் தம்பிய நெருங்கிய ஆத்விக், “இஷான்…” என அழைக்கவும் புன்னகை மாறாமல் சகோதரனின் பக்கம் திரும்பினான் இஷான்.
ஆத்விக்கை அங்கே எதிர்ப்பார்க்காத இஷான், “அண்ணா நீயா? இங்க என்ன பண்ணுற?” எனக் கேட்டான்.
அவனின் கேள்விக்கு பதிலளிக்காது, “யாரு இஷான் அந்தப் பொண்ணு? எதுக்கு அந்தப் பொண்ணைப் பார்த்து இப்படி சிரிச்சிட்டு இருக்க?” எனத் தான் வரும் போது துள்ளித் துள்ளி ஓடிய பெண் சென்ற திசையைக் பார்த்து கேட்டான் ஆத்விக்.
அவனுக்கே புரியவில்லை தான் எதற்காக திடீரென அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்கிறோம் என்று.
சகோதரன் யாரைக் கேட்கிறான் எனப் புரிந்து கொண்ட இஷான், “அது தான்ணா அஹாரா… நான் சொன்னேனே… ஜஸ்ட் மிஸ்ட்… உன்னைத் தான் திட்டிட்டுப் போறா…” என மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.
“என்னை எதுக்கு திட்டணும் அந்த மகராசி?” எனக் கேட்டான் ஆத்விக் புரியாமல்.
இஷான், “நீ அவ பெயரை ஷார்ட்டா கூப்பிட்டதைப் பத்தி சொன்னதும் மேடம் செம்ம காண்டாகிட்டாங்க… அதான்… சரி நீ எதுக்குண்ணா காலேஜ் வரை வந்திருக்க? ஏதாவது முக்கியமான விஷயமா?” எனக் கேட்டான்.
“ஓஹ்… உங்க காலேஜ் சேர்மனை சந்திக்க வந்தேன் இஷான்… பிஸ்னஸ் விஷயமா… சரி நீ க்ளாஸுக்கு போ… நான் சேர்மன் கூட பேசிட்டு ஆஃபீஸ் கிளம்புறேன்…” என்றான் ஆத்விக்.
_____________________________________________________
மருந்தின் வீரியம் குறைந்து மயக்கத்தில் இருந்து மெதுவாக கண் விழித்தான் விஷ்ணு.
அவனைக் கவனிக்கவென்று இருந்த தாதி விஷ்ணு கண் விழித்ததைக் கண்டு அவனிடம் வரவும், “அப்பாவ வர சொல்லுங்க…” என்றான் மெல்லிய குரலில்.
குடும்பத்தினர் அனைவருமே விஷ்ணு கண் விழிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
தாதி வெளியே வந்து விஷ்ணு கூறியதைக் கூறவும் சங்கர் முதல் ஆளாக உள்ளே சென்றார்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
மருத்துவமனைக் கட்டிலில் என்றும் இருக்கும் கம்பீரம் குறைந்து துவண்டு போய் படுத்திருந்த மகனைக் கண்டு அந்த தந்தையின் நெஞ்சம் கதறி அழுதது.
“அப்பா…” என முனகிய விஷ்ணுவின் அருகே அமர்ந்து அவனின் கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்து கண்ணீர் வடித்தார் சங்கர்.
“சாரிப்பா…” என விஷ்ணு கண்ணீருடன் முணகவும், “அப்பாவ மன்னிச்சிருப்பா… நான் உன் கிட்ட தெளிவா சொல்லி இருந்தா நீ இந்தளவுக்கு கஷ்டப்பட்டு இருக்க வேண்டியதில்ல… எல்லாம் இந்தப் பாவியால வந்தது…” எனத் தலையில் அடித்துக்கொண்டு சங்கர் கதறினார்.
அவரின் கரத்தை அழுத்திப் பிடித்த விஷ்ணு, “உங்க மேல எந்தத் தப்பும் இல்லப்பா… நான் தான் கண்டவங்க பேச்சையும் கேட்டு உங்க கிட்ட ரொம்ப மோசமா நடந்துக்கிட்டேன்… உங்களுக்கே தெரியும் தானே எனக்கு கோவம் வந்தா என்ன பண்ணுவேன்னே தெரியாதுன்னு… லூசுத்தனமா நடந்துக்கிட்டேன்… சாரிப்பா… ரொம்ப கில்டியா இருக்கு… எங்க உங்க கிட்ட மன்னிப்பு கேட்காமலே போய் சேருவேனோன்னு பயமா இருந்தது…” என்றவனுக்கு பேசுவதே சிரமமாக இருந்தது.
அவசரமாக அவனின் வாயை தன் கரத்தால் மூடிய சங்கர், “என்ன பேசுற விஷ்ணு? உன் அப்பன் உசுரோட இருக்கும் வரை உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன்… அந்த எமன் கூட சண்டை போட வேண்டிய சூழ்நிலை வந்தா கூட தயங்க மாட்டேன்…” என்றார் உறுதியாக.
“முடியலப்பா… ரொம்ப வலிக்கிது…” என்ற விஷ்ணுவிற்கு வலி தாங்காது கண்கள் கண்ணீரை சிந்தின.
சங்கரும் மகனின் நிலையைக் கண்டு கதறி அழ, “சார்… பேஷன்ட்டை ஸ்ட்ரெய்ன் பண்ண விடாதீங்க… நீங்க இப்போ வெளிய போங்க… டாக்டர் வருவார்… சீக்கிரமா ட்ரீட்மென்ட்டை ஆரம்பிக்கணும்…” எனத் தாதி வந்து சத்தம் போடவும் மனமேயின்றி அங்கிருந்து வெளியேறினார் சங்கர்.
அன்றே விஷ்ணுவிற்கு கீமாதெரபியை ஆரம்பித்தனர்.
சங்கரும் மகாவும் மருத்துவமனையே கதியெனக் கிடந்தனர்.
குழந்தையையும் வைத்துக்கொண்டு காயத்ரியால் மருத்துவமனையில் அலைய முடியாததால் அவளின் பெற்றோர் இடைக்கிடையே அவளை மருத்துவமனை அழைத்து வந்து விஷ்ணுவைப் பார்த்தனர்.
பிரியாவும் சந்தோஷும் அடிக்கடி வந்து விஷ்ணுவைக் கவனித்து அவனுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தனர்.
சங்கர் இல்லாத சமயம் பார்த்து தான் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்கள் வந்து விஷ்ணுவைப் பார்த்தனர்.
பிரச்சினை வேண்டாம் என ராம் கண்டித்ததால் தான் அவர்கள் இதற்கு சம்மதித்தது.
இல்லையேல் தர்மனும் நடேசனும் அதற்கும் ஏதாவது பிரச்சினையை இழுத்து வைத்திருப்பர்.
பூரணியின் குடும்பத்தினருடன் மாத்திரமே சங்கர் முகம் கொடுத்துப் பேசினார்.
அதுவே மற்றவர்கள் மனதில் மேலும் ஆத்திரத்தை வளர்த்தது.
அவர்கள் தான் அந்த உறவே வேண்டாம் என்று முதலில் உதறி விட்டுப் போனார்கள் என்பதையே மறந்து விட்டனர்.
ஒழுங்காக நடந்த சிகிச்சையினாலும் குடும்பத்தினரின் தொடர் கவனிப்பினாலும் விஷ்ணுவின் உடல்நிலையில் நல்ல மாற்றம் தெரிந்தது.
சரியாக இரண்டு மாதத்தில் மருத்துவர்கள் விஷ்ணுவை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்றும் மாதம் ஒருமுறை மட்டும் சிகிச்சைக்காக வந்தால் போதுமானது என்றும் கூறினர்.
அன்றே விஷ்ணுவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர்.
காயத்ரியின் பெற்றோர் அவனைத் தம் வீட்டு அழைக்க, விஷ்ணுவோ தன் வீட்டிற்கே செல்வதாக மறுத்து விட்டான்.
அதில் சங்கருக்கு தான் மட்டற்ற மகிழ்ச்சி.
வீட்டுக்கு வந்தவனை மகா பார்த்துப் பார்த்து கவனிக்க, தாயிடமும் மன்னிப்புப் படலம் நடத்தினான் விஷ்ணு.
குழந்தை விஷாகாவோ இரண்டு மாதங்கள் கழித்து கிடைத்த தந்தையின் அருகாமையில் அவனை விட்டு நகராமல் இருந்தாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
யாரிடமும் செல்லாமல் விஷ்ணுவின் மடியிலேயே இருந்தவள், “பா… பா…” என மழலை மொழியில் அப்பா என விஷ்ணுவை அழைக்க முயன்றாள்.
விஷ்ணு, “பாப்பா என்ன சொன்னீங்க? என்ன சொன்னீங்க? அப்பா சொன்னீங்களா? எங்க திரும்ப சொல்லுங்க…” என்றான் ஆர்வமாக.
குழந்தை மீண்டும் “பா… ப்பா…” என மழலைக் குரலில் பேச முயல, “காயு… இங்க பாரு காயு… பாப்பா அப்பா சொல்றா…” எனத் தன் உடல்நிலையையும் மறந்து சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான் விஷ்ணு.
“ஆமா விஷ்ணு… பாப்பா அம்மா சொல்லுங்க… அம்மா அம்மா…” என காயத்ரி சொல்லிக் கொடுக்க, குழந்தை மீண்டும் மீண்டும் அப்பா என்றே அழைத்தது.
“பார்த்தியா காயு? என் பாப்பா அப்பா மட்டும் தான் சொல்றா… என்னோட ப்ரின்சஸ் இவ…” எனப் புன்னகையுடன் கூறியவன் குழந்தையை தன்னுடன் அணைத்து முத்தமிட்டான்.
காயத்ரி, “ஹா ஹா… போதும் அப்பா பொண்ணு கொஞ்சம் எல்லாம்… பொண்டாட்டியையும் கொஞ்சம் கவனிங்க…” என சிலுப்பிக் கொள்ள,
“உனக்கு பொறாமை…” என்றான் விஷ்ணு நக்கலாக.
“சரி சரி பொறாமை தான்… ஒத்துக்குறேன்… விஷ்ணு… நாம ரெண்டு பேர் மட்டும் எங்கயாவது வெளிய போய்ட்டு வரலாமா? உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணி ரொம்ப நாளாச்சு…” எனக் கண் கலங்கினாள் காயத்ரி.
விஷ்ணுவிற்கும் மருத்துவமனையிலேயே இருந்தது அலுப்பைத் தந்திருக்க, காதல் மனைவியின் கண்ணீரும் அவனின் மனதை வாட்டி காயத்ரியின் ஆசைக்கு மறுப்புக் கூற விடவில்லை.
குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தவன் அவர்கள் எவ்வளவோ கூறியும் கேட்காது தன்னவளை அழைத்துக்கொண்டு பைக்கில் ஊர் சுற்றக் கிளம்பினான்.
இருவரும் காதலிக்கும் போது இருந்தது போலவே உயர் வேகத்தில் பைக்கில் பறந்து தம் ஆசை தீர ஊர் சுற்றினர்.
காதல் மயக்கத்தில் விஷ்ணுவின் உடல்நிலை கூட அவர்களின் கருத்தில் பதியவில்லை.
நன்றாக இருட்டியதும் வீட்டுக்கு வந்தவர்களை சங்கரும் மகாவும் கடிந்து கொண்டனர்.
“நான் என் புருஷன் கூட கொஞ்சம் தனியா சுத்தினா இவங்களுக்கு பொறுக்காதே…” எனக் கோபத்தில் முணுமுணுத்து விட்டு தன் அறைக்குச் சென்று பூட்டிக்கொண்டாள் காயத்ரி.
அன்று இரவு உறங்கியவனுக்கு ஏதோ அசௌகரியமாக இருக்க, காயத்ரியை மெதுவாக தட்டினான்.
“தூக்கம் வருது விஷ்ணு… அமைதியா படுங்க…” என்று விட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தாள் காயத்ரி.
நள்ளிரவில் எழுந்தமர்ந்த விஷ்ணுவிற்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
நெஞ்சை நீவி விட்டபடி, “கா…காயு…” என மனைவியை எழுப்ப முயல, அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
வெகு சிரமப்பட்டு மூச்சு விட்டவன் கட்டிலை விட்டு இறங்க முயற்சிக்க, மேசையில் இருந்த நைட் லாம்ப் அவனின் கை பட்டு கீழே விழுந்து உடைந்தது.
அச் சத்தத்தில் பதறி எழுந்த காயத்ரி கண்டது கீழே விழுந்து கிடந்த விஷ்ணுவைத் தான்.
“விஷ்ணு…” என அதிர்ந்து கத்தியவள் அவனை எழுப்ப முயல, சத்தம் கேட்டு சங்கரும் மகாவும் ஓடி வந்தனர்.
ஒரு வாரமாக வீட்டில் நன்றாக இருந்தவன் திடீரென மீண்டும் பழைய நிலையில் காணவும் பதறியவர் உடனே அவனை மருத்துவமனையில் சேர்த்தார்.
காயத்ரி அனைவருக்கும் தகவல் கூறவும் நள்ளிரவு என்பதால் அனைவராலும் வர இயலவில்லை.
பிரியா சந்தோஷிடம் அடம் பிடித்து இரவே வந்து சேர்ந்தாள்.
அவசர சிகிச்சைப் பிரிவில் விஷ்ணு சேர்க்கப்பட்டு அவனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர், “நல்லா தானே இருந்தார்… திடீர்னு என்னாச்சு?” எனக் கேட்டார்.
சங்கர் மருத்துவரிடம் நடந்ததைத் கூற, “கொஞ்சமாவது அறிவிருக்கா உங்களுக்கு? நீங்க அவர் பொண்டாட்டி தானே… படிச்சி இருக்கீங்கல்ல… அவருக்கு இருக்கிறது ப்ளட் கேன்சர்… இப்போ தான் ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு… கொஞ்சம் ரிகவர் ஆகி வரதுக்குள்ள திரும்ப இப்படி தேடிக்கிட்டீங்க… இந்த நிலமைல வெளிய சுத்துறது நல்லதா? அவருக்கு ஈஸியா இன்ஃபேக்ஷன் ஆக சான்ஸ் இருக்குன்னு சொன்னேன் தானே… அப்படி இருந்தும் ஒழுங்கா பார்த்துக்க மாட்டீங்களா? அவருக்கு இன்ஃபேக்ஷன் ஆகி இருக்கு… ரொம்ப சீரியஸான நிலைல இருக்கார்…” என சங்கரையும் காயத்ரியையும் திட்டித் தீர்த்தார் மருத்துவர்.
காயத்ரி அழுதழுது இருக்க, பிரியா தான் அவளை சமாதானம் செய்தாள்.
தன் மகனை தான் ஒழுங்காக கவனிக்கவில்லையோ என ஒரு பக்கம் சங்கர் உடைந்து அமர்ந்தார்.
சில மணி நேர சிகிச்சைக்கு பின் வெளியே வந்த மருத்துவர் சந்தோஷைத் தனியே சந்திக்க வேண்டும் என்கவும் மருத்துவரைப் பின் தொடர்ந்தான் சந்தோஷ்.
சந்தோஷ், “என்னாச்சு டாக்டர்? விஷ்ணு நல்லா இருக்கான்ல…” எனக் கேட்டான் பதட்டமாக.
“சாரி மிஸ்டர்… ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்குற சமயத்துல இன்ஃபேக்ஷன் ஆகி இருக்கு… எங்களால முடிஞ்ச எல்லாத்தையும் பண்ணிட்டோம்… ரொம்ப க்ரிட்டிக்கலான ஸ்டேஜ்ல இருக்கார்…” என மருத்துவர் கூறவும், “டாக்டர்…” என அதிர்ச்சியில் எழுந்து நின்றான் சந்தோஷ்.
“இன்னும் கொஞ்சம் நேரம் தான்… இப்பவே ரொம்ப கஷ்டப்படுறார்… எந்த நேரத்துல உயிர் போகும்னு தெரியாது… இனிமே கடவுள் விட்ட வழி தான்… ஏதாவது பேசுறதா இருந்தா பேசிக்கோங்க... சாரி…” எனக் கையை விரித்து விட்டார் மருத்துவர்.
மருத்துவர் கூறிய செய்தியை ஏற்க முடியாமலே வெளிய வந்த சந்தோஷை பிடித்துக்கொண்ட பிரியா, “என்னாச்சுங்க? டாக்டர் என்ன சொன்னார்? என் தம்பிக்கு ஒன்னும் இல்லல்ல…” எனக் கேட்டாள் கண்ணீருடன்.
சிறு வயதில் இருந்தே தன் கை பிடித்து வளர்ந்தவனுக்கு ஒன்று என்றதும் அவளால் தாங்க இயலவில்லை.
மனைவிக்கு பதிலளிக்காதவன் சங்கரை நெருங்கி, “விஷ்ணு கூட போய் பேசிட்டு வாங்க மாமா…” என்றான் தன் துக்கத்தை விழுங்கிய படி.
தலையை உயர்த்தி சந்தோஷைப் பார்த்தவரின் விழிகளில் ஏகப்பட்ட கேள்விகள்.
சந்தோஷின் உணர்ச்சி துடைத்த முகமும் கலங்கியிருந்த கண்களுமே அவருக்கு வேண்டிய பதிலைக் கூற, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இருக்கையில் சாய்ந்தார் சங்கர்.
“என்னங்க…” என மகா பதறி கணவனைப் பிடிக்க, அவரின் கரத்தை விலக்கி விட்டு ஐ.சி.யு.இனுள் நுழைந்தார் சங்கர்.
அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் உள்ளே சென்றனர்.
மெதுவாக இமைகளைத் திறந்து தன் குடும்பத்தினரைப் பார்த்த விஷ்ணு லேசாகப் புன்னகைத்தான்.
சந்தோஷின் வாயிலாக மருத்துவர் கூறியதை அறிந்த அனைவரும் கண்ணீருடன் அவனைச் சுற்றி நின்றிருந்தனர்.
காயத்ரி ஒரு பக்கம் குழந்தையை ஏந்திக்கொண்டு அழ, ஆக்சிஜன் மாஸ்க்கை கழற்றி விட்டு, “அப்பா…” என்றான் மென் குரலில்.
“விஷ்ணு…” என மகாவும் சங்கரும் கதற, “நீ..நீங்க ரெண்டு பேரும்… எ…எனக்காக நிறை…ய பண்ணி…ட்டீங்க… நான்… நான் தான் உங்கள சரியா புரிஞ்…சிக்கல… ரெ… ரெண்டு பேரும் என்…னை மன்னிச்சிடுங்க…” எனக் கடினப்பட்டு வார்த்தைகளை உதிர்த்தான் விஷ்ணு.
முந்தானையால் வாயைப் பொத்தி அழுது கொண்டிருந்த பிரியாவை கண்களாலே தன் அருகே அழைத்தவன், “நீ… நீ எனக்கு… இன்னொரு அம்மா க்கா… நான்… என்னைப் பெத்த… அம்மாவையும் வளர்…த்த அம்மாவையும் ரொம்ப கஷ்…டப்படுத்திட்டேன்… சாரி கா… சாரி மாமா… எ…என்னை விட நீ தான்… அப்பா அம்மா… மேல பாசம் வெச்..சிருக்க… அவங்கள நல்லா… பார்த்துக்கோ…” எனும் போதே விஷ்ணுவின் விழிகள் கண்ணீரை சிந்தின.
“இப்படி பேசாதே டா விஷ்ணு…” எனக் கதறினாள் பிரியா.
மனைவியைத் தன்னுடன் அணைத்து சமாதானம் செய்தான் சந்தோஷ்.
ஒரு ஓரமாக நின்று தன்னையே ஏக்கமாகப் பார்த்து அழுது கொண்டிருந்த மனைவியை நோக்கி விஷ்ணு கை நீட்டவும் ஓடி வந்து அவனின் நெஞ்சில் முகம் புதைத்து அழுதாள் காயத்ரி.
குழந்தை கூட தாயின் அழுகையை கண்டு உறக்கம் கலைந்து வீறிட்டு அழுதது.
தான் காதலித்து கரம் பிடித்தவளை பாதியிலே விட்டுச் செல்லப் போகிறோம் என்ற எண்ணமே விஷ்ணுவை இன்னும் வதைத்தது.
காயத்ரியின் தலையை மெதுவாக வருடி விட்டவன், “ஐ… ஐ லவ் யூ சோ மச் காயு… காதலிக்கும் போது… தந்த எந்த வாக்கையும் நிறை…வேத்தாம பாதியிலயே போறேன்… சாரி டி… என்னால உனக்கு எந்…த சந்தோஷத்தையும் கொ…டுக்க முடியல… க…கடைசியில விதவை… பட்..டத்தை கொடுத்து…ட்டு போக போறேன்… உ…உனக்கு என் அ…அப்பா அம்மாவ பி..டிக்காதுன்னு எனக்கு தெரி…யும்… ஆனா… வயசானவங்க… இ..துக்கு மேல கஷ்டப்படுத்தாதே… நா..நான் இல்லன்னாலும் அவ…அவங்க பொண்ணா இருந்து நீ… நீ தான் பார்த்…துக்கணும்… உன்ன நிறைய… காதலிக்கணும்னு ஆசையா இருக்கு… ஆ..ஆனா எனக்கு தான் அந்…த கொடுப்பினை இல்ல…” என்றான் கடினப்பட்டு.
“வேணாம் விஷ்ணு… எனக்கு நீங்க வேணும்… போகாதீங்க ப்ளீஸ்… இனிமே உங்க அப்பா அம்மா கூட சண்டை போட மாட்டேன்… என்னையும் பாப்பாவையும் தனியா விட்டுட்டு போயிடாதீங்க விஷ்ணு…” என காயத்ரி கதறவும் விஷ்ணுவின் உதடுகளில் கசந்த புன்னகை.
“பாப்பாவை என்… நெஞ்சில வை…” என விஷ்ணு கூறவும் அழும் குழந்தையை விஷ்ணுவின் நெஞ்சில் வைத்தாள்.
தந்தையின் உடல் சூட்டில் குழந்தையின் அழுகை நிற்க, தன் குட்டிக் கரங்களால் விஷ்ணுவின் முகத்தை வருடி, “பா…ப்பா…” என்றது.
அனைவருமே வாயை மூடி அழுதனர்.
“பாப்பா… அப்பாக்கு உன்ன… ரொம்…ப பிடிக்கும் டா… நீ தான்… அப்பாவோட குட்டி ப்ரின்சஸ்… உன்ன எப்படி… எல்…லாமோ வளர்க்கணும்னு… ஆசைப்பட்டேன்… எதுவும் நடக்…கலடா… அம்..மாவ தொந்தரவு பண்ணாதே... எ…என் ப்ரின்சஸ் குட் கேர்ள் தானே… லவ் யூ பாப்பா…” என நீண்ட மூச்சுகளுடன் கண்ணீருடன் கடினப்பட்டு வார்த்தைகளை உதிர்த்தான் விஷ்ணு.
தந்தை கூறியதைப் புரிந்து கொண்டாளோ என்னவோ குழந்தை மீண்டும் வீறிட்டு அழத் தொடங்கியது.
விஷ்ணுவிற்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
நெஞ்சங்கூடு ஏறி இறங்க கடினப்பட்டு ஆழ்ந்த மூச்சுகளை வெளி விட்டவன் ஒரு தடவை சுற்றியும் பார்வையை சுழற்றி மொத்தக் குடும்பத்தையும் தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டவனின் கண்கள் சொருகி ஒரே விக்கலுடன் விஷ்ணுவின் உயிர் அடங்கிப் போனது.
“விஷ்ணு…” என்ற கதறலும் குழந்தையின் அழு குரலும் நள்ளிரவில் அமைதியாக இருந்த மருத்துவமனை எங்கும் எதிரொலித்தது.
உறவுகள் மலரும்…