உறவாக அன்பில் வாழ – 3

சென்னையின் மத்தியப் பகுதியில் அமைந்திருந்த அவ்வில்லத்தின் வாயில் திறந்திருக்க உள்ளிருந்த அந்த வீட்டுப் பெண்களோ தவிப்புடன் மாடியை கவனித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தனர்.

“சித்ரா, அண்ணன் கிளம்பி இருப்பாரா?” என்று கேட்ட தன்னைப் பார்த்து கேள்வி கேட்ட தன்னுடைய அண்ணியை முறைத்தார் சித்ரா.

“அண்ணி நானே ஆபிஸ் விஷயமா ரெண்டு நாளா டென்ஷனா இருக்காரேன்னு பயந்துட்டு இருக்கேன். இதுல கிளம்பிட்டாரான்னு இப்போ மேல போய் பார்த்தேன்னா அதுக்கு என்ன சொல்லுவாரோ? ஏன் என்னை கேட்குற நீங்க, என்னோட அண்ணன் என்ன பண்றாருன்னு போய் பார்க்கலாம்ல?” என்று கேள்வி கேட்ட சித்ராவை இயலாமையோடு நோக்கினார் அந்த வீட்டரசியான முத்துலட்சுமி.

“பதில் உனக்கே நல்லா தெரியுமே சித்ரா, நான் அவரோட பேசியே ரொம்ப நாள் ஆச்சு” என்று கூறி மீண்டும் கண்ணை மாடியை நோக்கித் திரும்பினார்.

“அண்ணி இன்னுமா நீங்க அண்ணன் கிட்ட பேசல. நான் தான் சொன்னேனே அண்ணி அவர் எவ்ளோ கோவப்பட்டாலும் நாம எப்படியாவது சமாதானம் பண்ணியே ஆகணும்னு.” என்று சலித்தக்கொண்ட தன் நாத்தனாரை வெறுமையாக ஒரு பார்வை பார்த்த முத்துலட்சுமியால் ஒரு பெருமூச்சை மட்டுமே வெளியேற்ற முடிந்தது.

முத்துலட்சுமி இந்த வீட்டு மருமகளாக நுழைந்து மாமியார் மெச்சும் மருமகளாக வலம் வர அவருக்கு பத்து ஆண்டுகள் தேவைப்பட்டது. குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்று மாமியாரை அதிகம் சமாளித்து வாழ முயன்ற முத்துலட்சுமி கவனிக்க மறந்தது பல இடங்களில் கணவனின் சொல்லை அவரது அன்னைக்காக தட்ட வேண்டி இருந்ததயே.

ஆனால் முத்துலட்சுமி அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கணவரது அன்னையின் நன்மதிப்பிற்காக தானே செய்கிறோம், அவரது தங்கையின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக தானே செய்கிறோம் அதனை கணவர் புரிந்து கொள்வார் என்று எண்ணிக்கொண்டார்.

அவர் நினைத்தது போல அவரது கணவரான மாணிக்கவிநாயகம் எடுத்துக்கொள்ளவில்லை. மனைவி தன்னை மதிக்கவில்லை, தனக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்று எண்ணிக்கொண்டார்.

மாமியாரின் மறைவுக்குப்பின் நாத்தனார் குடும்பம் தங்களோடே இருந்தாலும் முன்னைப்போல அல்லாது கணவரின் எண்ணப்படி நடக்கவேண்டும் என்று எண்ணியவருக்கு கிட்டியதெல்லாம் ஏமாற்றம் மட்டுமே.

முத்துலட்சுமி விநாயகத்தை நோக்கி முன்னேற அவரோ மனைவியை முற்றிலுமாகத் தவிர்த்து, தொழிலில் முழு கவனத்தையும் செலுத்தினார்.

முத்துலட்சுமியின் சின்னச்சின்ன ஆசைகள் கூட கேட்பாரற்று காணாமல் போனது. அவருக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்த ஒரு உயிரென்றால் அது அவர்களின் செல்வப்புதல்வன் சாய்சரண் மட்டுமே.

ஆனால் அந்த பந்தத்திற்கும் ஊறுவருமென்று முத்துலட்சுமி ஒருநாளும் எண்ணினாரில்லை. அது வந்து சேர்ந்தது விநாயகத்தின் ரூபத்தில். மகனுடன் சண்டை போட்ட விநாயகமும் சித்ராவின் கணவரும் அவரது நபருமான சமரன் உடன் இணைந்து இனி வீட்டினர் யாருமே அவர்களிடம் பேசுவதில்லை என்று கட்டளை பிறப்பித்துவிட நண்பன் பேச்சே வேதம் என்று எண்ணும் சமரன் அவர் பேச்சை தட்டாது சாய்சரணிடமும் தன் மகளான ஷிவானியிடமும் பேசுவதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டார். அதையே தன் மனைவியான சித்ராவுக்கும் பரிந்துரைத்தார்.

முத்துலட்சுமி தன் கணவரிடம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அன்று அவரை அறைக்குள் அழைத்துச் சென்ற விநாயகம் என்ன கூறினாரோ அன்று முதல் முத்துலட்சுமி சாய்சரணிடம் பேசுவதில்லை. அதனுடன் இலவச இணைப்பாக தன் கணவனிடமும் பேசுவதை நிறுத்தி இருந்தார். இதனை கண்டுபிடிக்கவே விநாயகத்துக்கு ஒரு வாரத்திற்கு மேல் தேவைப்பட்டது.

கண்டுகொண்டவர் அவரிடம் காரணம் கேட்காது, அவருடன் பேசுவதை தானும் நிறுத்திக்கொண்டார். இயல்பான பேச்சுக்கள் இல்லையென்றாலும் தேவைக்காகப் பேசிக்கொண்ட சில வார்த்தைகள் கூட இல்லாமல் இருவருக்குள்ளும் மௌனப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இதனிடையில் சில நாட்களாக சித்ரா தன் அண்ணியை அண்ணனுடன் சமாதானமாகப் போகச் சொல்லி கெஞ்சிக்கொண்டிருக்கிறார். இவர்களுள் இருக்கும் பனிப்போர் பற்றி சித்ரா அறிந்திருக்க நியாயமில்லை ஏனெனில் அவரது ஆசைகள் எதுவும் அவரது கணவன் சமரனால் நிராகரிக்கப்பட்டதில்லை. அதே போல மனைவியின் வார்த்தைகளை குறைந்தபட்சம் காது கொடுத்துக் கேட்கும் சமரனை கணவனாக பெற்ற சித்ராவுக்கு முத்துலட்சுமியின் நிலை புரிய வாய்ப்புகள் அதிகமில்லை.

நல்லபடியாக இருந்த சமரனையும் விநாயகத்தின் கோபம் மாற்றி விட்டது அவருக்கு வருத்தம் தான். ஆனால் அனைத்துக்கும் குந்தகம் வைத்த தன் மகளை அவரால் முழுமையாக குறைகூற முடியவில்லை.

ஏனெனில் இன்று அவர் கணவன் அண்ணன் என்று அனைவரையும் சமாளித்து சமாதான உடன்படிக்கைக்கு தயாரிப்பதே தன் மகளுக்காகத் தான். அவளுக்கு எப்படியேனும் வளைகாப்பு நடத்திவிடவேண்டும் என்ற காரணத்திற்காகத் தான். ஆனால் அவரின் வேகம் அவரது அண்ணியான முத்துலட்சுமியிடம் இல்லை என்று அவருக்கு வருத்தமாக இருந்தது.

அதை வெளிப்படையாக அவரிடம் கூற, “சித்ரா சொல்றேன்னு தப்பா நினைக்காத, உன் அண்ணானோட கோபத்தை பத்தியோ, பிடிவாதத்தை பத்தியோ உனக்கு முழுசா தெரியல. நீ இப்படி யோசிக்கிறது தெரிஞ்சாலே வீட்டை ரெண்டாக்கிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பாரு. முடிஞ்சா சமர் அண்ணனை சமாதானம் பண்ணி, இவர் பேச்சை கேட்காம உங்க பொண்ணை பார்க்க போனீங்கன்னா தான் உண்டு.” என்று கூற,

“அண்ணி அண்ணன் மேல உங்களுக்கு இவ்ளோ நல்லா எண்ணம் இருக்கும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. நான் ஒன்னும் என் பொண்ணுக்காக மட்டும் அங்க போணும்னு சொல்லல அண்ணி. உங்க பையன், என் மருமகனுக்காகவும் தான் சொல்றேன்.” என்று சற்றே கடினமாக உரைத்தார் சித்ரா.

“எனக்கு புரியாம இல்ல சித்ரா. ஆனா உங்க அண்ணனுக்கு சாய் மேல இருக்கிறது இப்போ நடந்ததுக்கான கோவம் மட்டும் இல்ல மா. அது பல வருஷமா இருக்கு. இப்போ உடனே அதை போக வைக்கவோ, இல்ல நீ நினைக்கிறது போல வளைகாப்பு பண்ண விடுற அளவுக்கு குறையவோ வாய்ப்பில்லைன்றது தான் உண்மை.” என்று சொன்ன முத்துலட்சுமியின் குரலில் அத்தனை திடம்.

“அண்ணி மறுபடி சொல்றேன் நான் வளைகாப்பு பண்ண போறது என் பொண்ணுக்கும் எனக்கு வரப்போற பேரப்பிள்ளைக்கும் மட்டும் இல்ல. உங்க பையனுக்கும் பேரப்பிள்ளைக்கும் சேர்த்து தான். நீங்க என்னோட சேர்ந்து அண்ணன் கிட்ட பேசுவிங்கன்னு பார்த்தா, நீங்களே பலநேரம் அதை நடக்க விடமாட்டேங்கறீங்க.” என்று வருத்தமும் கோபமுமாகக் கூறிய தன் நாத்தனாரைக் கண்டு விரக்தியான ஒரு சிரிப்பை உதிர்த்தார்,

“அன்னைக்கு சூப்பர் மார்கெட்ல ஷிவானியை பார்த்தும் உன்னை பேச விடாம நான் கூட்டிட்டு வந்ததை பத்தி தானே சொல்ற? இங்க பாரு சித்ரா உண்மையிலேயே உன் பொண்ணு நல்லா இருக்கணும்ன்னு உனக்கு ஆசை இருந்தா சும்மா சும்மா அவ பேரையும் சாய் பேரையும் உங்க அண்ணன் முன்னாடி சொல்லாம இரு அதுவே போதும். அவங்க எங்க இருந்தாலும் நல்லா இருப்பாங்க.” என்று கூறிவிட்டு,

“எனக்கு மட்டும் ஆசையில்லையா சித்ரா? ஷிவானியை நீ வளர்த்ததை விட நான் தான் அதிகமா வளர்த்தேன். அவளே எனக்கு மருமகளா வந்து, இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசு வருதுன்னா அதை பார்த்து சந்தோஷப்படுற முதல் ஆள் நான் தான் மா. ஆனா ஒண்ணே ஒண்ணை நினைவுல வச்சுக்கோ. இந்த உலகத்துலயே ஒரு ஆணோட உண்மையான முகம் தெரிஞ்ச ஒரு உறவு இருக்கும்ன்னா அது அவங்க மனைவி தான். உனக்கு உன் அண்ணனை எவ்வளவு தெரியுமோ எனக்கு அது பத்தி தெரியாது. ஆனா அவரை முழுசா எனக்கு தெரியும். எங்க முப்பத்தி ரெண்டு வருஷ வாழ்க்கையில உங்க அண்ணன் என்கிட்ட காட்டாத முகமே இல்ல. அதுல சிலதை நீ பார்க்கவே கூடாதுன்னு நான் விரும்பறேன் சித்ரா. ஏன்னா அதைப் பார்த்தா கண்டிப்பா உன் அண்ணனை நீ வெறுத்துடுவ. அது மட்டும் இல்ல நீ அடிக்கடி சாய், ஷிவானி பத்தி பேசுறது உன்னை அங்க தான் கொண்டு போய் விடும். உனக்கு என் மேல நம்பிக்கை இல்லன்னாலும் பரவாயில்ல. கொஞ்சம் மரியாதை இருந்தா கூட இனிமே அவர் கிட்ட இதைப்பத்தி பேசாத.” என்று கூறிவிட்டு உணவு மேசையை சரிபார்க்க எழுந்து சென்றார்.

காலையே வீட்டு வேலைகள் முடித்திருக்க, ஷிவானியின் தம்பியான ஷியாமும் கல்லூரிக்குக் கிளம்பிச் சென்றிருந்தான்.

மாணிக்க விநாயகமும் சமரனும் கட்டுமானத்தொழிலில் கொடிகட்டிப் பறந்து வருபவர்கள். விசாலாட்சி ப்ரோமோட்டர்ஸ் என்று கூறினால் தெரியாதவர் யாருமில்லை எனும்படி பல தொலைகாட்சிகளில் நாளுக்கு ஐம்பதுக்கும் மேலான விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் செழுமையான நிறுவனம் அது.

இப்பொழுது புதியதாக விசாலாட்சி கிரானைட் அண்ட் மார்பிள்ஸ் என்று புதிய நிறுவனம் வேறு அவர்கள் திறந்திருக்க விநாயகமோ, சமரனோ வீட்டில் இருக்கும் நேரமே குறைவு. அவர்கள் இருக்கும் நாட்களில் பேசி தன் மகளை மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வந்து விடவேண்டும் என்ற துடிப்பு சித்ராவுக்கு.

ஆனால் விநாயகத்தை உள்ளும் புறமும் அறிந்த முத்துலட்சுமி அதை பலவாறாக தடுத்துக்கொண்டிருந்தார். அதையும் மீறி இதோ மாடிப்படிகளில் சமரனுடன் பேசியபடி அடர்நீல நிற முழு சூட்டில் இறங்கிகொண்டிருக்கும் விநாயகத்தை நோக்கி சித்ரா சென்று நின்றார்.

தங்கையைக் கண்டதும் உதட்டில் சிறிய புன்னகை மலர, “என்ன படியிலேயே வரவேற்பு பலமா இருக்கு. என்ன வேணும்? தங்கமா வைரமா? நெக்லஸா வளையலா?” என்று கேட்டவர்,

“என்ன சமரா அவளுக்கு ஒன்னும் நீ வாங்கி தரலையா?” என்று தன் மாப்பிள்ளையும் நண்பனுமான சமரனின் தோளில் வலு குறைவானதொரு அடியை பரிசளித்தார்.

“அதெல்லாம் வாங்கி கொடுத்தாச்சு விநாயகம். எவ்ளோ வாங்கித் தந்தாலும் அவளுக்கு பத்துறது இல்லையே!” என்று அவரிடம் கேலியாக பேசியவரை சித்ரா விசித்திரமாகப் பார்த்தார்.

இரண்டு நாட்களாக அலுவலகப் பளுவில் இருந்தவர்கள் இன்று இலகுவாக பேசியதும், தான் நினைத்து வந்த காரியத்தை பேசி முடித்துவிட முடிவெடுத்தார். கணவரை நோக்கி அவர் பார்வை செல்ல முதலில் இன்முகமாக கவனியது வந்த சமரன் அதன் பின்னே தான் மனைவியிடம் தெரியும் பதற்றத்தையும், சற்று தள்ளி உணவு மேசையில் எடுத்து வைத்தபடி இங்கே கவனித்துக்கொண்டிருந்த முத்துலட்சுமியின் முகத்தில் பயத்தையும் கவனித்தார்.

சித்ரா ஏதோ பேச வாய்திறக்க, “சித்ரா மேல நம்ம ரூம்ல ஒரு பச்சை கலர் ஃபையில் இருக்கும் போய் எடுத்துட்டு வா. சாப்பிட்டுட்டே பேசிவோம்.” என்று சித்ராவிடன் கூற, முத்துலட்சுமி அவரை நன்றியோடு நோக்கினார்.

அவர் கண்களில் தென்பட்ட நிம்மதியை சமரன் கவனிதத்தைப் போலவே விநாயகமும் கவனித்திருந்தார். ஆனால் அவர் மூளையோ, மனைவி தனக்கு பரிமாறி சமாதான நடவடிக்கையில் ஈடுபட தன் தங்கையை அவள் கணவன் மூலமாகவே பிரித்து அனுப்புவதாக எண்ணிக்கொண்டார்.

அவர் சித்ராவை தடுக்க நினைக்க, அதற்குள் சித்ரா படிகளில் ஏறி இருந்தார்.

“அவ கிட்ட பையில் கலர் மட்டும் தான் சொன்னேன் எந்த லாக்கர்ன்னு சொல்லவே இல்ல. இரு விநாயகம் நானே போயிட்டு வந்துடறேன்.” என்று மனைவிக்கு பின்னோடு மாடியேறிய நண்பனைக் கண்டவர் கண்கள் சினத்துடன் மனைவியை உறுத்து விழித்தது.

“என்ன இத்தனை வருஷத்துக்கு அப்பறம் தனிக்குடித்தனம் போக பிளான் போடுறியா? ஐயோ பாவம்ன்னு ஒரு தடவை நீ கேட்டதுக்காக உன் முகத்துக்காக சமரன் என்னை விட்டுட்டு சித்ராவை கூட்டிட்டு மாடிக்கு போயிருக்கலாம். ஆனா என்னைக்கும் என்னை விட்டுட்டு போக மாட்டான். கனவு காணாத.” என்று வார்த்தைகளை வாள் போல வீசினார்.

மேசையில் ஏற்கனவே உணவு எடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், உண்பவரே எடுத்துக்கொள்ளும்படி அதனை மேலும் எளிமைப்படுத்திய முத்துலட்சுமி கணவருக்கு எந்த பதிலும் கூறாமல் அவ்விடம் விட்டு அகன்று சென்றார்.

மாடியறையில் கணவன் கூறிய கோப்பு எது என்று தெரியாமல் தேடிக்கொண்டிருந்த சித்ராவிடம் நெருங்கமாக வந்து நின்றார் சமரன்.

அவரது திடீர் வரவில் சித்ரா சற்றே மிரண்டவர், பின் ஆசுவாசமாகி, “எங்க இருக்கு அந்த ஃபைல்?” என்று கேட்க,

“எந்த பைல்? நீ உங்க அண்ணன் கிட்ட எதையோ கேட்க வந்து நின்ன. கண்டிப்பா ஏதோ பெருசா இருக்கும் போல. அதான் உன் அண்ணன் உன்னை கடிச்சு வைக்கிறதுக்கு முன்னே இங்க கடத்தி விட்டேன்.” என்று கூறி தன் கருப்பு நிற சூட்டில் இருந்த பட்டனை கழற்றியவர் மெத்தையில் அமர்ந்தார்.

“நான் அண்ணன் கிட்ட என்ன பேசப்போறேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? அதுக்கு அண்ணன் என்னை திட்டுவார்ன்னு நீங்களே எப்படி சொல்றீங்க? இன்னிக்கு வரைக்கும் எதுகாவது அண்ணன் என்னை திட்டி இருக்காரா?” என்று வேகமாக கேள்வி எழுப்பிய மனைவியை நோக்கினார் சமரன்.

“இங்க பாரு சித்ரா. நீ என்ன பேச வந்தியோ எனக்கு தெரியாது. ஆனா அதை செய்ய வேண்டாம்ன்னு உன் அண்ணி உன்கிட்ட சொல்லி இருப்பாங்க. உண்மையா?” என்று கேட்ட கணவரை. ஆச்சரியமாக விழி விரித்து நோக்கினார் சித்ரா.

“எப்படிங்க உங்களுக்கு தெரியும்?” என்று புரியாமல் கேள்வி எழுப்பிய மனைவியிடம்,

“அவங்க முகமே சொல்லிச்சு. அது மட்டும் இல்லாம என் நண்பனை பத்தி எனக்கு தெரியாதா? ஒருத்தனை பத்தி முழுசா தெரிஞ்சுக்கறது அவனோட உண்மையான நண்பன் தான். மனைவி, குடும்பம் கூட ஒரு ஆணை முழுசா புரிஞ்சுக்காது” என்று கூற,

“அண்ணியும் அதே மாதிரி தான் சொன்னாங்க. என்ன.. நீங்க பிரெண்ட்னு சொல்றீங்க அவங்க மனைவின்னு சொல்றாங்க அவளோ தான்” என்று கூறினார் சித்ரா.

சமரன் மனைவியின் முகம் நோக்கியவர், “நீ ஷிவானி, சரண் பத்தியா உன் அண்ணன் கிட்ட பேச வந்த?”என்று அழுத்தமாகக் கேட்டார்.

ஆமென்று தலையசைத்த மனைவியை முறைத்தவர், “அவன் ஒரு தடவை சொல்லிட்டா அவ்ளோ தான். சும்மா கேட்டுட்டே இருந்தா, இப்போ இல்ல பத்து வருஷமானாலும் நாம நம்ம பொண்ணு, மாப்பிள்ளை, பேரக்குழந்தையெல்லாம் பார்க்கவோ, கூட வச்சுக்கவோ முடியாது. அதுக்கு தான் உங்க அண்ணி அப்படி பார்த்துட்டு இருந்தாங்களா? நல்ல வேளை நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்துட்டேன். இல்லன்னா உன் அண்ணனோட கோவத்தை சமாளிக்க வேண்டி இருந்திருக்கும்.” என்று கூறிய கணவனை முறைத்த சித்ரா,

“இங்க பாருங்க எனக்கு இப்போ யாரைப் பத்தியும் கவலை இல்ல. எனக்கு என் பொண்ணை கூட்டிட்டு வந்து வளைகாப்பு செஞ்சு கூட வச்சு பிரசவம் பார்கணும்ன்னு ஆசையா இருக்கு. உங்க வார்த்தைக்கும் கோவத்துக்கும் மதிப்பு கொடுத்து இத்தனை நாளா பேசாம இருந்ததே பெரிய தப்பு.” என்று சொன்னவர் கோபத்துடன் எழுந்துகொள்ள,

“இங்க பாரு சித்ரா, இனிமே நீ இதைப்பத்தி ஒருவார்த்தை கூட பேசக்கூடாது. என்கிட்ட மட்டும் இல்ல உன் அண்ணன் கிட்டயும் தான்” என்று கூறியவர் மனைவியை தன்னுடன் சேர்த்து அழைத்துக்கொண்டு சென்றார்.

மனைவியை முத்துலட்சுமியின் முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிட்டதாக நினைத்து நிம்மதியான அவருக்குத் தெரியவில்லை விநாயகத்திடம் சித்ரா இதே கேள்வியைக் கேட்டு சீக்கிரமாக அவரின் கோபத்தை உயர்த்திவிடப்போகிறார் என்று.