உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 9
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
மஹாவும் வாணியும் அரட்டை அடித்துக் கொண்டு தொலைக்காட்சியைக் கண்டு களித்துக் கொண்டிருக்க, மஹாவின் மனம் மதியின் முதல் வாழ்த்துக்காக காத்திருந்தது.
சரியாய் பன்னிரெண்டு மணிக்கு மஹாவின் கைபேசி ஒலிர, அந்த அழைப்பெடுத்து அவள் ஹலோ என்றுரைக்கும் முன்னமே அவளை கீழே வருமாறு பணித்திருந்தான் மதி.
மதியின் பேச்சில் அதிர்ந்தவள், “என்ன மதி ஆன்லைன்ல கேக் ஆர்டர் பண்ணிருக்கியா?” என்றிவள் கேட்க,
மறுப்பக்கத்திலிருந்து, “கேள்வி கேட்காம கீழ கேட்டுக்கு வெளில வா” என்றுரைத்தான் மதி.
வாணியிடம் கூறிவிட்டு மஹா கீழே சென்றுப் பார்க்க, அங்கே அவளுக்காக கையில் ஒரு கேக்குடனும் பூங்கொத்துடனும் முகம் நிறைத்த புன்னகையுடன் காத்திருத்தான் மதி.
“ஹேய் மதிஈஈஈஈஈஈ” அவளின் குதூகலமான இந்த அழைப்பிலேயே அவளின் அதிரச்சியில் ஒளிந்திருந்த சந்தோஷம் பூரிப்பு அனைத்தையும் அறிந்துக் கொண்டான்.
“டேய் ஹைதராபாத்ல இருந்து வந்தியாடா இதுக்காக?” அதே அதிர்ச்சியின் விளிம்பில் அவள் கேட்க,
“ம்ப்ச் அதெல்லாம் அப்புறம் பேசலாம். வா கேக் கட் பண்ணு முதல்ல… ஆமா வாணி எங்கே? அவங்களையும் கூப்பிடு” என்றவன் கூற,
அவள் சென்று வாணியை அழைத்து வர, நடுத்தெருவில் சாலையில் ஒரு சிறு நாற்காலி வைத்து அதில் கேக்கை வைத்து வாணியும் மதியும் பிறந்தநாள் வாழ்த்து பாட கேக் வெட்டினாள் மஹா.
அவள் வெட்டிய மறுநொடி கேக்கை சிறிது எடுத்து அவள் வாயில் ஊட்ட சென்றவன் அவள் முகம் முழுவதும் அப்பியிருந்தான்.
மஹா முதலில் திகைத்து விழித்து நடந்ததை கணித்த நொடி அவன் மீது கேக் பூசவென அக்கேக்கை நோக்கி அவள் கை நீட்ட, சட்டென மீதமிருந்த கேக்கை கையிலெடுத்து வாணியிடம் கொடுத்து அவர்களின் அறைக்கு எடுத்துச் செல்லமாறு வாணியை விரட்டினான்.
வாணி அக்கேக்குடன் தங்களின் அறைக்கு செல்ல, “அந்த கேக் இல்லனா என்னடா? அதான் என் முகம் முழுக்க கேக் இருக்கே… இன்னிக்கு உன் ஃபேஸ்ல கேக் பூசாம விடுறதா இல்லையென” சவால் விட்டவளாக அவனை துரத்த தங்களின் தெருவிலேயே குறுக்கும் நெடுக்குமாய் ஓடினர் இருவரும்.
சரியாய் மஹா மதியின் கையை பற்றவிருந்த சமயம் மழை பெரும் துளியாய் முகத்தில் விழ, ஏற்கனவே அவள் முகத்திலிருந்த கேக் மழைத்துளிப்பட்டு கரைந்து அவளின் கவனத்தை திசை திருப்ப முகத்தை துடைத்துக் கொண்டு அவ்விடத்திலேயே அவள் நிற்க,
“என்ன உன் தோல்வியை ஒத்துக்கிறியா மஹா?” என மதி அவளை சீண்ட, அவளும் சீறிக்கொண்டு அவனைத் துரத்துவதற்கு ஓட,
அதற்குள் தெருவில் தேங்கி நின்ற தண்ணீர் அவளின் கால்களை சற்று சறுக்கிவிட, அதில் விழப் பார்த்தவளை,
“ஹே பார்த்து மஹா” என அவளின் அருகில் ஓடி வந்து அவள் கையை இவன் பற்றிக்கொள்ள, அவனின் இரு தோள்களையும் அழுத்தமாய் பற்றி கால்களை அழுத்தி நின்றாள் மஹா.
மறு நிமிடம் எதையும் யோசியாது, “மாட்டுனியா?” என்று குதூகலமாய் துள்ளிக் குதித்து சிரித்தவாறு தன் முகத்தில் மழை நீரால் கரைத்ததுப் போக மீதமிருந்த கேக்கை அவனின் முகத்தில் தடவினாள் மஹா.
தன் தோள்களை பற்றி அவள் குதித்ததில் மீண்டும் அவள் தரையில் வழுக்கிடுவாளோ என்று பயந்தவன்,
“கேர்புல் மஹா… விழுந்துட போற” என்று கூறியவாறு அவளின் இருகைகளையும் தன் கைகளுக்குள் பொதிந்து அழுத்தமாய் பற்றிக்கொண்டான்.
அவனின் இச்செயலில் தன் மீதுள்ள அவனின் அக்கறையில் அவன் முகத்தை நேசமாய் பார்த்தவள், ‘நீயே என் கணவனாய் வந்துடேன் மதி… உன்னை தவிர வேற யாராலயும் என்னைய இவ்ளோ கேரிங்கா பார்த்துக்க முடியாதுடா’
அவளையறியாமல் அவளின் மனதிற்குள்ளேயே இவ்வெண்ணம் தோன்ற,
தன் முகத்தை நோக்கிய அவளின் முகத்தில் தோன்றிய பாசம், ஏக்கம் என்ற பல விதமான உணர்வுகளில்,
“இந்த நிமிஷம் உன் மனசுல நீ என்ன நினைக்கிறியோ அடுத்த வருஷ உன் பிறந்தநாளுக்குள்ள அது நிறைவேற மனசார வாழ்த்துறேன் குட்டிம்மா” என மதி வாழ்த்துரை வழங்க,
அவனின் வாழ்த்தில் வியந்தவளின் மனம் குதூகலிக்க, விழி விரிய அவனை பார்த்திருந்தாள்.
இன்னுமே இருவரும் மற்றவர் கரங்களை கோர்த்தப்படி நேருக்கு நேராய் பார்த்தபடி நின்றிருக்க, மலர் தூரலாய் வானம் மழை பொழிந்து கொண்டிருக்க,
“உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது“
மஹாவின் மைண்ட்வாய்ஸில் இப்பாடல் உலாவர,
“என்ன மஹா… அப்படி பார்க்கிற? கண்டிப்பா அடுத்த வருஷம் உன்னோட விஷ் நடந்துச்சானு சொல்லனும். நடந்துச்சுனா கண்டிப்பா எனக்கு டிரீட் தரணும்… என்ன ஓகே வா?” என மதி அவளை வம்பிழுத்து நடப்புக்கு கொண்டு வர,
‘இவன் நம்ம என்ன நினைச்சோம்னு தெரிஞ்சே வாழ்த்தினானா? இல்ல தெரியாம பேசுறானா? குழப்புறானே’ என்றெண்ணியவாறே,
“பார்ப்போம் பார்ப்போம் அதெல்லாம் நடக்கும் போது பார்ப்போம்” என முகத்தை மழைத்துளி விழும் விதமாய் தூக்கிக் காண்பித்துக் கூறினாள் மஹா.
‘இவ்ளோ நேரம் என்ன செய்றாங்க இவங்க’ என்றெண்ணியவாறே பால்கனி வந்து வாணி வெளியேப் பார்க்க,
தங்களின் வீட்டிலிருந்து சற்று தள்ளி நின்று கைகளை கோர்த்துக் கொண்டு பேசி நின்றவர்களைக் கண்டவள்,
“இவங்களை பார்த்து ஃப்ரண்ட்ஸ்னு சொன்னா எவனாவது நம்புவான்? நானே இப்ப தான் ப்ரண்ட்ஸ் ங்கிற விஷயத்துலயே கொஞ்சம் தெளிஞ்சிருக்கேன். இதுல இவங்களை நான் என்னனு நினைக்கிறது? என் ப்ரண்ட நானே சந்தேகப்படுற மாதிரி ஆகாதா?” எனத் தனக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வந்தவளாய்,
“வாணி, அவங்க ப்ரண்ட்ஸ் தான்… நீ தான் தப்பு தப்பா நினைக்குற” எனக் கூறிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
“போதும் மஹா. ரொம்ப நேரம் மழைல நிக்கற ஏதும் உடும்புக்கு வந்துடப் போகுது… நீ நாளைக்கு ஆபீஸ்க்கு லீவ் போடுற… காலைல ரெடியா இரு… நான் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்… நாளை முழு நாள் என் கூட தான் ஸ்பெண்ட் பண்ற சரியா”
எனக் கூறிக் கொண்டே அவளின் வீட்டினருகே அழைத்து வந்தவன் மீண்டுமொரு முறை வாழ்த்துக் கூறி அவளை உள்ளே செல்லுமாறு சைகை செய்து விடைப்பெற்றான்.
மறுநாள் காலை எட்டு மணியளவில் வேணியின் வீட்டில் அவளெழுந்து அவளறையை விட்டு வெளியே வர, டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தான் இளா.
அவனுக்கு பரிமாறியவாறு அவனிடம் பேசிக் கொண்டிருந்தார் அவளின் அக்கா கயல்விழி. அவரும் முந்தைய நாள் இரவு தன் கணவருடன் சென்னையிலிருந்து வந்திருந்தார் தந்தையை நலம் விசாரிப்பதற்காக.
“மணி என்ன ஆகுது? இப்ப தான் எழறியா? அக்கா கூட நேத்து நைட் தானே வந்தாங்க… லேட்டா தானே தூங்கினாங்க… காலைலேயே எழும்பி சட்னிலாம் செஞ்சி பொறுப்பா இருங்காங்க பாரு… நீயும் இருக்கியே… தூங்கு மூஞ்சு” என இளா வேணியை வம்பிழுக்க,
அவனின் கிண்டலில் கயல் சிரிக்க, வேணி அவனை முறைத்துக் கொண்டு பேச தொடங்குவதற்குள்,
சமையலறையிலிருந்த வேணியின் அம்மா, “இன்னும் ஒரு தோசை கொண்டாரேன் இளங்கோ… அதுக்குள்ள எழுந்திரிச்சுடாதே” எனக் குரல் கொடுத்தார்.
“அம்மா அவன் இங்க என்னை அசிங்கப்படுத்திட்டு இருக்கான்… நீங்க எக்ஸ்ட்ரா தோசை சுட்டுக் கொடுக்குறீங்க… உங்களுக்கு நான் முக்கியமா அவன் முக்கியமா… இந்த தோசைய என் தட்டுல போட்டா நான் முக்கியம்… அவன் தட்டுல போட்டா அவன் முக்கியம்னு அர்த்தம்… இரண்டுல ஒன்னு எனக்கு இப்ப தெரிஞ்சேயாகனும்” என வேணிக் கோபமாய் வசனம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் தாயின் கையிலிருந்த தோசையை இளா பறிக்க,
“டேய் இதெல்லாம் டூ மச்… பேசிட்டு இருக்கும் போதே புடுங்குற நீ” எனக் கத்திக் கொண்டே அவன் கையிலிருந்த தோசையை அவள் பறிக்க,
பாதி தோசை அவன் தட்டிலும் பாதி இவள் தட்டிலும் வந்து விழுந்தது.
இதைக் கண்டு வேணியின் அன்னை, அக்கா, அக்கா கணவர் என அனைவரும் சிரிக்க,
மாடியிலிருந்து என்ன சத்தம் இங்க எனக் கேட்டுக் கொண்டே வேணியின் தந்தை கீழே இறங்க, அனைவரும் கப்சிப் என அமைதியாய் தங்களின் வேலையை கவனிக்கலாயினர்.
“ஒன்னுமில்லைப்பா சும்மா இளா கிட்ட பேசிக்கிட்டே சாப்டுட்டு இருந்தேன்” எனத் தந்தையை நோக்கி கூறினாள் வேணி.
“என்ன இளங்கோ ஊருக்கு கிளம்பிட்டியாப்பா” என வேணியின் தந்தை கேட்க,
“ஆமா அங்கிள்… திடீர்னு கிளம்பினதால ஊர்ல யாருக்கும் தெரியாது… என்னை பார்த்ததும் அதிர்ச்சியாடுவாங்க தான் எல்லாரும்” எனச் சிரித்துக் கொண்டே கூறினான் இளங்கோ.
“வேலை செஞ்சிட்டிருந்த பிள்ளைய பயமுறுத்தி நீ கூட்டியாந்திருக்க” என வேணியின் தந்தை கேட்க,
“நான் ஒன்னும் அவனை கூப்பிடல… அவனா கூட வரேனு வந்துட்டான்” என்று அவனுக்கு ஒழுங்கு காட்டிக்கொண்டே கூறினாள் வேணி.
“அதான் அம்முமா நல்ல பிள்ளைக்கு அழகு. பொம்பிள பிள்ளைய தனியா விடாம கூட துணைக்கு வந்திருக்கு பாரு. அதுக்கூடப் போய் வம்பிழுத்திட்டு இருக்க நீ. இந்த காலத்துல எங்கென தேடினாலும் இளங்கோ போல நல்ல பிள்ளை கிடைக்கிறது கஷ்டம்மா” என எதையோ கூற வந்தவர் இளாவிடம் திரும்பி பேச்சுக்கொடுக்க,
“யாரு இவன் நல்லவனாமா? இவன் சைட் அடிக்கிற பொண்ணுங்கலாம் எனக்கு தானே தெரியும். சரியான கோவக்காய் புடலங்காய் பாவக்காய்” என வசைபாடிக் கொண்டே இவள் கழுத்தை நொடிக்க,
இதை கண்டு கொண்ட இளா வேணியின் தந்தையிடம் பேசிக் கொண்டே அவரறியாது இவளை பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.
“இளங்கோ நானும் உங்க ஊரு பக்கமா தான்யா போறேன். உன்னை அங்கென இறக்கிவிடுறேன்” எனக் கூறிக் கொண்டு தன்னுடன் காரில் இளங்கோவை அழைத்துச் செல்வதாய் உரைத்தார்.
“சரிங்க அங்கிள்… வேணி எப்பவும் போல் ஞாயிறு இரவு பயணம்… ரெடியா இருங்க மேடம்… என்னைய திட்டினதுக்குலாம் சேர்த்து வச்சு செய்றேன் உன்னை” இளா
அவளுக்கு கேட்கும்படி மட்டும் உரைக்க,
“வெவ்வெவ்வே” என அவனுக்கு ஒழுங்கு காட்டியவள் சிரித்துக் கொண்டே தன் அறையினுள் நுழைந்தாள்.
பெங்களூரில் காலை எட்டு மணியளவில்
“ஆஷிக் எனக்காக பஸ் ஸ்டாண்ட்ல வெய்ட் செஞ்சிட்டு இருப்பான்டி… அம்மு இல்லாதனால அவன் கூட ஆபிஸ் போகலாம்னு வரச் சொல்லி இருந்தேன்… நீ நல்லா என்ஜாய் பண்ணுடி” என மஹாவிடம் கூறிக்கொண்டே பறந்தோடினாள் வாணி.
ஒன்பது மணியளவில் மதி தன் நண்பனின் இரு சக்கர வாகனத்தில் வந்து மஹாவை அழைத்து சென்றான்.
“என்ன ப்ளான் மதி? எங்கே போறோம்?” – மஹா
“அது சப்ரைஸ் மஹா… போனப்பிறகு நீயே தெரிஞ்சிப்ப”
வண்டியில் அமர்ந்துக் கொண்டவளை அவன் முதலில் அழைத்துச் சென்றது ஹோசூரில் புதிதாய் கட்டப்பட்டிருந்த சாய் பாபா கோவிலிற்கு.
கோவிலைக் கண்டவளின் விழி வியப்பில் விரிய,
“ஹே மதி… வாட் எ மிராக்கில்… எதை நினைச்சுடா என்னை இங்க கூட்டிட்டு வந்த?” என கேட்டுக்கொண்டே மஹா வண்டியிலிருந்து இறங்க,
“நீ என்ன நினைச்ச? அதை சொல்லு” எனக் கேட்டான் மதி.
“சென்னை பஸ் இந்த வழியா தாண்டா போகும். எவ்ரி வீக்கெண்ட் இந்த வழியா போகும்போதெல்லாம இந்த கோயிலுக்கு ஒரு நேரம் வரணும்னு நினைச்சிருக்கேன்… இப்ப அங்கேயே என்னை கொண்டு வந்து நிறுத்திருக்கியே… எப்படிடா உனக்கு தெரிஞ்சுது?” என ஆச்சரியமாய் கேட்டாள் மஹா.
“ஜஸ்ட் தோணுச்சு… அவ்ளோ தான்ப்பா”
பேசிக்கொண்டே கோயிலின் உள்ளே நுழைந்திருந்தனர் இருவரும்.
“சரி நான் உன்ன இங்க கூட்டிட்டு வந்ததுக்கு நான் சொல்றதை இப்ப நீ செய்யனும்” என்றவனை கேள்வியாய் அவள் நோக்க,
“இன்னிக்கு வியாழக்கிழமை. சாய் பாபாக்கு நீ ஃபாஸ்டிங்க் இருப்பனு தெரியும். இன்னிக்கு நீ ஃபாஸ்டிங்க் இருக்க வேண்டாம்… இன்னிக்கு விரதம் இருக்கலைனு பாபாக்கிட்ட சொல்லிட்டு வா போதும்” என்றவனை வியப்பாய் அவள் பார்க்க,
“போ போ சீக்கிரம் கும்பிட்டு வா.. நமக்கு நிறைய ப்ளான் இருக்கு” என அவளை அனுப்பி வைத்தவன், சற்று தள்ளி அமரந்துக்கொண்டான்.
அவன் கூறியதைச் சொல்லி பாபாவிடம் பேசிக் கொண்டவளின் மனம்,
“இதேப் போல நானும் மதியும் ஒன்னா சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே லைபை என்ஜாய் செஞ்சி வாழனும்” என அவளையறியாமல் அவளின் மனம் சாய் பாபாவிடம் பேசிக்கொண்டிருக்க,
தன் எண்ணம் போக்கும் போக்கை எண்ணி திடுக்கிட்டு விழித்தவள், திரும்பி மதி அமர்ந்திருந்த இடத்தைப் பார்க்க, அவன் கண் மூடி பெரும் வேண்டுதலை வைத்துக் கொண்டிருந்தான் கடவுளிடம்.
அவனருகில் அமைதியாய் வந்து அமர்ந்துக் கொண்டவள், கண் மூடிய அவன் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எப்போதிருந்து எனக்கு உன்னை இவ்ளோ பிடிக்க ஆரம்பிச்சிது மதிப்பா”
மதிப்பா என்ற விளிப்பே மஹாவின் மனதை இன்ப அலையாய் ஆர்ப்பரிக்க செய்ய, மதி தன் விழி திறக்க சட்டென்று தன் தலையை உலுக்கி நிகழுலகிற்கு வந்தாள் மஹா.
“இப்ப நாம சாப்பிட போகலாம்… ஃபாஸ்டிங்க்னு காலைல சாப்பிட்டிருக்க மாட்டல” எனக் கூறியவன் ஹோசூரிலேயே ஓர் உணவகத்திற்கு அழைத்துச் சென்று உண்ண வைத்தான் அவளை.
மதிய வேலை ஹோசூரிலேயே சந்து சந்தாய் அவளை அழைத்து செல்ல,
“எங்கடா போறோம்? சந்து சந்தா போற… ரோடு வேற ரொம்ப மோசமா இருக்கு” என அவனின் தோள்களை அழுத்தமாய் பற்றிக் கொண்டு அவள் வினவ,
“பார்க்கத்தான போற… கொஞ்சம் நேரம் பொறுமையா இரு” எனக் கூறியவன், திடீரென்று பைக்கை ஓரமாய் நிறுத்தி, தன் கைக்குட்டையால் அவளின் கண்களை கட்டினான்.
“ஒன்னும் பயமில்லைடா… நான் கூடவே இருக்கேன்… என் கைய பிடிச்சிக்கிட்டு பொறுமையா வா” எனக் கூறி அவளின் கைகளைப் பற்றி அந்த பெரிய நுழைவாயிலிற்குள் அவளை அழைத்து வந்தவன் அவ்விடத்திற்கு மத்தியமாய் அவளை நிற்க வைத்து கண் கட்டை அவிழ்த்த நேரம்,
“ஹேப்பி பர்த்டே மஹாக்கா” என கோரஸாய் சிறுவர் சிறுமியர்களின் குரல் அவள் காதில் கேட்க, அவளின் முன் கிட்டதட்ட ஐம்பது சிறுவர் சிறுமியர்கள் கையில் பூங்கொத்துடன் நின்றிருந்தனர்.
அவர்களைக் கண்டதும் அறிந்துக்கொண்டாளவள் தான் எங்கிருக்கிரோமென.
ஆம் அவளை அவன் அழைத்து வந்தது குழந்தைகள் காப்பகத்திற்கு. இவளின் பிறந்தநாளை முன்னிட்டு அன்று மதிய உணவை அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தானவன்.
ஒவ்வொரு சிறுவராய் வந்து அவளின் கையில் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவிக்க அவளின் கண்களில் நீர் தேங்கி நின்றது.
அவர்கள் அனைவரையும் உணவுக் கூடத்துக்கு அழைத்துச் செல்ல,
அதற்குமேல் தாங்க மாட்டாதவளாய் சற்று தள்ளி வந்தவள், குலுங்கி குலுங்கி அழவாரம்பித்தாள்.
“ஹேய் மஹா” என மதி அவள் தோளைப் பற்ற,
“இந்த பிள்ளைகளாம் என்ன பாவம் பண்ணுச்சுங்க மதி” என அவள் கேட்கும் போதே அவளின் கண்ணில் நீர் நிற்காமல் வழிய,
“சியர் அப் டா… நம்மள மாதிரி ஆளுங்க வந்துப் போன தான் அந்த பசங்களுக்கு ஹேப்பியா இருக்கும்… அவங்க பார்த்தாங்கனா என்ன நினைப்பாங்க… வா… நீ தான் அவங்களுக்கு பரிமாறனும் மஹா… அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க வாடா குட்டிம்மா” என அவளைத் தேற்றி அழைத்துச் சென்றான்.
அனைவருக்கும் பரிசுப்பொருள் வாங்கி வைத்திருந்தான் மதி. அதை அவள் அனைவருக்கும் வழங்கினாள்.
அங்கிருந்து மாலை வேளையில் கிளம்பி பெங்களுர் நோக்கி அவன் வண்டியை செலுத்த,
“நான் ரொம்ப சென்சிட்டிவ் இப்படி பார்க்க கூட மனசு வலிக்கும்னு தெரியும்ல மதி… அப்புறம் ஏன் என்னை இங்க கூட்டிட்டு வந்த மதி” என அவனின் எண்ணத்தை அறியும் பொருட்டு அவள் கேள்விக் கேட்க,
“அதையும் தாண்டி உனக்கு உதவி செய்றதுமே ரொம்ப பிடிக்குமே மஹா. நீ மாசாமாசம் ஆர்பனேஜ்க்கு பணம் கொடுக்குறது எனக்கு தெரியும். அதை நேர்ல செய்யும் போது, அந்த பிள்ளைகளோட சந்தோஷத்தை நீ நேர்ல பார்க்கணும்னு தான் இந்த ஏற்பாடு பண்ணேன்” என்றவன் உரைக்க,
“தேங்க்ஸ் அ லாட் மதி…. மனசு நிறைவா இருக்குடா” என வண்டியின் கண்ணாடியில் அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு உரைத்தாள்.
இவனும் சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டான்.
“அடுத்து எங்கடா போறோம்? காலைலருந்து சுத்திட்டு இருக்கோம். ரூம்கு போய்ட்டு ரிப்ரெஷ் ஆகிட்டு போகலாம்டா” என மஹாக் கூற,
சரியென்றுரைத்தவன் அவளின் வீட்டினருகே அவளை இறக்கிவிட்டு அவளின் கையில் ஒரு கவரை வழங்கினான்.
“ரூம்க்கு போய் பாரு. இததான் நீ போட்டுட்டு வரணும்” என்றுரைத்தவன்,
பைக்கை ஸ்டார்ட் செய்து, “ஒன் ஹவர் தான் டைம். பிக் அப் பண்ண வந்திடுவேன். சீக்கிரம் ரெடியாகு” என கூறிக் கொண்டே சென்றான்.
தன் அறைக்கு வந்தவள் அக்கவரை பிரித்துப் பார்க்க, அதிலிருந்தது பிங்க் நிறத்தில் அழகிய பூ வேலைப்பாடுகள் நிறைந்த குர்தி.
ஜீன்ஸ் அந்த குர்தி அணிந்து அவள் தயாராகி வர, இவன் அவளை அழைக்க வர சரியாக இருந்தது.
அடுத்து அவளை அவன் அழைத்து சென்றது, கோரமங்களா ஃபோரம் மாலிற்கு.
இருவரும் மாலின் உள்ளே செல்ல,
ஏதும் பேசாது மஹா அமைதியா வரவும்,
“என்ன சைலண்ட் ஆகிட்ட? இந்நேரத்துக்குள்ள என்ன சப்ரைஸ்?எதுக்காக இங்க வந்திருக்கோம்னு கேள்வி மேல கேள்வி கேட்டிருப்பியே… என்னாச்சு திடீர்னு?” என புருவம் உயர்த்தி அவன் கேட்க,
அவனை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் ‘அழகன்டா நீ’ என மனதிற்குள் அவனைக் கொஞ்ச,
தன்னையே நோக்கும் அவளின் கண்களின் பாஷையில் அவளின் முகம் கூறிய செய்தியில் மெலிதாய் புன்னகைத்தவன்,
“இன்னிக்கு நான் அவ்ளோ அழகாவா இருக்கேன் மஹா” என மதி கேட்க,
சட்டென தன்னிலை அடைந்தவள், “நான் உன் மேல கோபமா இருக்கேன்” என்றாள்
“கோபமா?எதுக்கு??” என்றவன் கேட்க,
“அதெல்லாம் சொல்ல முடியாது. நீ தான் பெஸ்ட் ப்ரண்ட் ஆச்சே… நீயே கண்டுபிடி” என அவள் கூற,
அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன்,
“அழகா இருக்கு இந்த குர்தி உனக்கு மஹா… இதை நான் சொல்லலைனு தானே கோபம்?” என மதி கேட்க,
“நான் கேட்டு ஒன்னும் நீ சொல்ல வேண்டாம்” மஹா முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,
“நான் அங்கேயே நீ ரூம்ல இருந்து வண்டில ஏறும் போதே சொல்லலாம்னு நினைச்சேன்…. ஆனா…” என்று கூறியவன் சிறிது தள்ளி நின்று,
“இன்னிக்கு ஷெர்லேக் வுட் பாலிஷிங் ரொம்ப அதிகமாயிடுச்சு… அதான் சொல்லலை” என அவளின் மேக்ப்பை அவன் கிண்டல் செய்ய,
“உனக்காக கொஞ்சம் லைட்டா மேக் அப் போட்டேன் பாரு என்னைய சொல்லனும்” என்று அவன் முதுகில் மொத்த ஆரம்பித்தாள்.
அந்நேரம் மதியின் கைப்பேசி அலற,
“சரி வா வா… கீழே போவோம்” என்றவளை அழைத்துக் கொண்டு அந்த ஃபோரம் மாலின் நுழைவாயிலிற்கு அவளை அழைத்து வர அங்கிருந்தவர்களை கண்டதும் அவளின் கண்கள் விரிந்தது வியப்பினால்.
அவள் பேட்ஜ் மேட்ஸ் இருபது பேர் நின்றிருந்தனர் அங்கே. அவர்களின் மத்தியமாய் கையில் கேக்குடன் நின்றிருந்தாள் வாணி. அவளருகில் ஆஷிக் இருந்தான்.
“ஹே இட் சீம்ஸ் லைக் அ பார்ட்டி மதி” என அவள் கூற,
“இந்த ஏற்பாடு நான் செய்யல… வாணி அண்ட் வேணியின் சப்ரைஸ்” என்றவன் கூற,
வாணியினருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டாள் மஹா.
அனைவரும் சேர்ந்து கோரஸாய் பிறந்தநாள் வாழ்த்துப் பாட கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்தாள் மஹா.
மதியை ஆஷிக்கிற்கு அறிமுகப் படுத்தி வைத்தாள் வாணி.
“ரொம்ப தேங்க்ஸ் எல்லாருக்கும். என் பர்த்டே செலிபரேஷன்ல கலந்துக்கிட்டதுக்கு” என மஹா நன்றி நவிழ,
“ஆமா ப்ரண்ட்ஸ் நானும் வேணியும் ஜஸ்ட் அனுப்பின ஒரு மெயிலை மதிச்சு வந்ததற்கு பெரிய தேங்க்ஸ்… வேணியால தான் வர முடியாம போச்சு… அவளுக்கும் சேர்த்து நான் நன்றி சொல்லிக்கிறேன்” என வாணிக் கூற,
“ஹே வாணி நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ்லாம்…. டிரீட் கொடுங்க போதும்” என சிரித்துக்கொண்டே அவர்களின் பேட்ஜ் நண்பன் கேட்க,
அவனை ஆதரித்து அனைவரும் டிரீட் வேணுமென கத்தவாரம்பித்தனர்.
மதி மஹாவிடம், “டின்னர் எல்லாரும் ஒன்னா போகலாம் மஹா. நானே ஸ்பான்சர் செய்றேன்” என்றான்.
“ஹே ஏற்கனவே நீ எனக்காக செஞ்ச செலவுலாம் போதாதா… நிறைய காசு இருக்கா என்ன? அப்படி இருந்தா அப்பா அம்மாக்கு இப்படி நிறைய செய். இல்லை சேர்த்துவை… ரொம்ப செலவு பண்ணாத மதி… என்னோட சந்தோஷத்துக்காகனாலும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசு தேவைக்கு கரக்ட்டா தான் செலவு செய்யனும்” என மஹா மதிக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்க,
“நாங்க இங்க கத்திக்கிட்டு இருக்கோம். அங்கென்ன பேசிட்டு இருக்கீங்க?” என ஆஷிக் மஹாவைப் பார்த்து கேட்க,
“ஓ கே ப்ரண்ட்ஸ் இன்னிக்கு நைட் டின்னர் என்னோட ட்ரீட். எங்க ரூம் பக்கத்துல இருக்க தமிழ்நாடு ஹோட்டலுக்குப் போகலாம்” என மஹா உரைக்க,
“சரி நடந்தே போய்டலாமா? ஒரு கிலோ மீட்டருக்குள்ள தான் வரும்” என ஆஷிக் கேட்க,
அனைவரும் ஒத்துக் கொண்டு சம்மதிக்க,
“சரி நானும் மதியும் முன்னாடி போய் ஹோட்டல்ல சொல்லி வைக்கிறோம்… சீக்கிரம் வந்து சேருங்க” எனக்கூறி மஹா மதியுடன் பைக்கில் முன்பு செல்ல,
வாணி, ஆஷிக் மற்றும் பிற பேட்ஜ்மேட்ஸ் அனைவரும் தங்களது நடைப்பயணத்தை தொடங்கினர்.
வாணிக்கு இவ்வாறு பின் மாலைப் பொழுது தோழமைகளுடன் அரட்டை அடித்துக்கொண்டே நடந்துச் செல்வது மிகவும் பிடித்தமான விஷயம்.
அதற்காக தான் ஆஷிக் இவ்வாறொரு ஏற்பாட்டை செய்தான்.
வாணி ஆஷிக்கிடம் பேசிக்கொண்டே நடக்க, “கேபி, மஹா மதி லவ் பண்றாங்களா?” என திடீரென்று ஆஷிக் வினவ,
ஙே என விழித்தாள் வாணி.
“ஏன் அப்படி கேட்குற ஆஷிக்”
“அவங்க பழகுற விதத்தைப் பார்த்தா ப்ரண்ட்ஸ் மாதிரி தெரியலையே”
“அப்படி என்ன அவங்க பழகுறதுல குத்தமா தெரியுது உனக்கு” என கோபமாய் வாணிக் கேட்க,
“அட கேபி, ப்ரண்ட்ஸ் தான் இப்படி நாள் பூரா சப்ரைஸ் தரேனு கூடவே கூட்டிக்கிட்டு சுத்துவாங்களா? நீ மதிய பர்ஸ்ட் டைம் பார்த்ததை சொன்னியே, இப்படி ப்ரண்ட்ஸ்க்கு தான் சுற்றம் லாம் மறந்து செஞ்ச வேலைய விட்டுட்டு போய் கையப்பிடிச்சி மிஸ் யூ னு சொல்லுவாங்களா?” என ஆஷிக் கேள்வியாய் கேட்க,
“நீ என்ன சொன்னாலும் நான் அப்படி நினைச்சாலே அது நான் மஹா ப்ரண்ட்ஷிப்பை சந்தேகப்படுற மாதிரி அர்த்தம்… அவங்களுக்குள்ள லவ் இல்லனா அது ப்ரண்ட்ஷிப்பை கொச்சை படுத்துறதுக்கு சமம். சோ நான் அப்படிலாம் நினைக்க மாட்டேன்.” என்றாள் வாணி.
“நீ என்னவேனா சொல்லு கேபி. மதி மஹாவோட ஆளு தான்” என்றான் ஆஷிக்.
“இந்தப் பேச்சை நிறுத்திறியா?” என ஆஷிக்கை முறைத்துக் கொண்டு வாணி உரைக்க,
“ரைட் விடு… இளா வேணி ப்ரண்ட் தானா? எனக்கென்னமோ இளாவோட ஆளு தான் வேணினு தோணுது” என சீரியஸாய் ஆஷிக் கூற,
“டேய் அடி வாங்க போற நீ… உன் கண்ல தான் கோளாறு… எல்லாரையும் தப்பு தப்பா பேசிக்கிட்டு… சரி லவ் பண்றாங்கனு டீசண்ட்டாவாவது சொல்லலாம்ல… அதென்ன ஆளு கீளுன்னுட்டு” என கோபமாய் கேபி கேட்க,
“யம்மா தாயே நீ ஒரு அம்பிங்கிறதை மறந்துட்டு சொல்லிட்டேன்… உன் ப்ரண்ட்ஸ் தங்க கட்டிகள் வைர ரொட்டிகள் தான்… நான் எதுவும் சொல்லலை… நீ மலையிறங்கி வாம்மா” என பயந்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு அவன் கூற, முறைப்பை சிரிப்பாய் மாற்றினாளவள்.
“இது தான்டா எனக்கு உன்கிட்ட பிடிச்சது. எந்த மூட்ல இருந்தாலும் சிரிக்க வச்சிடுவ”
இவ்வாறாக இவர்களின் உரையாடல் தொடர்ந்து நடக்க அந்த ஹோட்டலை வந்தடைந்தனர் அனைவரும்.
அனைவரும் தமிழக உணவை ஆசை ஆசையாய் சாப்பிட்டு முடிக்க, பில் வந்ததும் அனைவரும் பங்கிட்டு கொடுக்க,
“ஹே இது என்னோட ட்ரீட். நீங்க யாரும் காசு தர வேண்டாமென” மஹா கூற,
“இருபது பேருக்கு காசு கொடுக்குறது சின்ன விஷயம் இல்ல மஹா… நாங்க சும்மா விளையாட்டுக்கு அப்படி சொன்னோம். எல்லாரும் கஷ்டப்பட்டு தானே சம்பாதிக்கிறோம்” என்று கூறிய பேட்ஜ் மக்கள்,
வந்த பில் தொகையைப் பங்கிட்டு பகிர்ந்தளித்தனர் அனைவரும்.
பின் அனைவரும் விடைப்பெற்று கிளம்ப, தான் மஹாவுடன் தங்கள் அறைக்கு சென்று விடுவதாய் ஆஷிக்கிடம் உரைத்தவள் அவனை வழியனுப்பி வைத்தாள்.
அந்த ஹோட்டலின் அருகிலேயே இவர்களின் வீடு இருக்க, மஹா மற்றும் வாணியுடன் தன் பைக்கை தள்ளிக்கொண்டே நடந்து வந்தான் மதி.
வீடு வந்ததும் தங்களின் அறைக்கு வாணி செல்ல, பேசிக்கொள்ளவென ஒதுங்கி நின்றனர் மதியும் மஹாவும்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வாணி கிப்ட் ராப் செய்யப்பட்ட பெரிய பெட்டியை எடுத்து வந்து மதியிடம் வழங்க,
“ஹே வாணி என்னதிது?” என ஆச்சரியமாய் மஹா கேட்க,
வாணியின் மனது அக்கேள்விக்கு, “அதை உன் ஆளுக்கிட்டேயே கேட்டுக்கோ” என பதிலளிக்க,
“இந்த மூளையும் ஆஷிக்கோட ப்ர்ண்ட் ஆகி அவனை மாதிரியே பேசுது” என மனதில் எண்ணிக்கொண்டே தன் மண்டையிலேயே தட்டிக்கொண்டவள்,
“மதி கிட்டயே கேளுடி. நேத்து நைட் என்கிட்ட கொடுத்துட்டு போனாங்க. உனக்கு தெரியாம வச்சிக்க சொன்னாங்க” வாணி உரைக்க,
“ஹோ அதான் என்னை நீ அந்த ஸ்டோர் ரூம்குள்ள போக விடலையா?” என மஹா கேட்க,
ஆமென கூறிவிட்டு சென்றாள் வாணி.
மதி அப்பரிசுப் பொருளை மஹாவிடம் வழங்க, ஆர்வமாய் பிரித்துப் பார்த்தாள்.
அதனுள் அவளின் பாதி உயரமுள்ள பிங்க் நிற அழகிய டெட்டி பேர் இருந்தது.
அதைக் கண்டதும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தாள்.
“இனி இந்த டெட்டி பியர் பார்க்கும் போதெல்லாம் உனக்கு என் நியாபகம் தான் வரணும்” என கண் சிமிட்டி அவனுரைக்க,
“வாவ் செம்மடா… எவ்ளோ அழகாயிருக்கு… போடா இனி நீ எனக்கு பெஸ்ட் பிரண்ட் இல்ல… என் பட்டுக்குட்டி தான் பெஸ்ட் ப்ரண்ட்” என அவள் அந்த டெட்டி பியரை கொஞ்ச,
“அடிப்பாவி, டெட்டி பியரை பார்த்ததும் ஃப்ரண்டை கழட்டி விட்டுட்ட நீ” என பாவமாய் முகத்தை வைத்து கேட்க,
அவள் வாய்விட்டு சிரித்தாள்.
“என் லைப்ல மறக்க முடியாத பர்த்டே இது. பெஸ்ட் பர்த்டே இன் மை லைப். இன்னிக்கு உன் கூட செலவழிச்ச ஒவ்வொரு நிமிஷமும் மறக்க முடியாது மதி” எனக் கண்கள் மின்ன முகம் நிறைந்த சந்தோஷத்தில் மஹாக் கூற,
அமைதியாய் புன்னகைத்தானவன்.
“சரி நீ எப்ப ஹைத்ராபாத் போற… நாளைக்கு ஃப்ரைடேவும் சேர்த்து லீவ் எடுத்திட்டியா?” என மஹாக் கேட்க, “அண்ட் தட்ஸ் தி ஃபைனல் சப்ரைஸ்” என்றான் மதி.
“என்னது சப்ரைஸா?” இன்னும் என்ன வச்சிருக்கான் இவன் என்று தான் தோன்றியது மஹாவுக்கு.
“ஆமா இனி இந்த மதி மஹாக் கூட தான் இருப்பான்” என்றான்.
“டேய் புரியுற மாதிரி சொல்லுடா… டென்ஷன் படுத்திக்கிட்டு” என மஹா கேட்க,
“ஐ காட் டிரான்ஸ்பர்ட் டூ பெங்களூர் டியர்… நீ பெங்களுர் வந்ததும் நான் கேட்க ஆரம்பிச்ச டிரான்ஸ்பர் நியர்லி ஒன் இயர் ஆகப்போகுது இப்ப தான் கொடுத்தாங்க” என மதி உரைக்க,
அவனின் பணியிடமாற்ற சந்தோஷத்தில் அவன் கைகுலுக்கி துள்ளிக்குதித்தாளவள்.
“வாவ் சூப்பர்டா மதி… நாளைக்கு ரிப்போட் செய்றியா இந்த ஆபிஸ்ல”
ஆமென தலையை அவனசைக்க,
“உன்னை பிரியனுமேனு கொஞ்ச கஷ்டமா இருந்துச்சுடா. இப்ப ஐம் வெரி மச் ஹேப்பி. சரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு… நீ கிளம்பு… நம்ம வீக்கெண்ட் மீட் செய்வோம்” என்றவனை அனுப்பி வைத்தாள்.
அவளின் அறைக்கு சென்று ரிபெரெஷ் ஆனவள், அந்த டெட்டி பியரை அணைத்துக் கொண்டு அன்றைய நாளின் இனிமையான தருணங்களை எண்ணிக் கொண்டே உறங்கிப்போனாள்.
ஞாயிறு இரவு சேலத்திலிருந்து பெங்களுர் செல்லும் பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர் வேணியும் இளாவும்.
பேருந்து ஏறியதிலிருந்து இளா அமைதியாகவே அமர்ந்திருக்க,
“என்னடா இளா, அன்னிக்கு என்னமோ என்னைய வச்சி செய்றேன் பெரிசா கதை விட்டே… இப்ப என்னடானா சிட்டிங்ல சோக கீதம் வாசிச்சுட்டு இருக்க” என வேணி அவனை வம்பிழுக்க,
“என்ன பிரச்சனை உனக்கு இப்ப? நான் பேசினாலும் சண்டை போடுற… அமைதியா வந்தாலும் வம்பிழுத்து கடுப்பேத்துற… என்ன தான் வேணும் உனக்கு… கொஞ்சம் நேரம் அமைதியா வர முடியாதா? இனி தனியா ட்ராவல் செய்னு உன்னை விட்டுறனும்… கூட வந்தா.. மனுஷனை பாடாய் படுத்துறது” என இளா கடுமையாய் பேசி அவளை பொறித்தெடுக்க,
“என்னாச்சுடா இளா? ஏன் இவ்ளோ கோபம்? நீ இப்படி என் கிட்ட பேச மாட்டியே? இது நம்ம எப்பவுமே வம்பிழுத்து விளையாட்டுக்கு பேசுறது தானடா… உனக்கு எதுவும் உடம்புக்கு முடியலையா?” என அவன் திட்டியதையும் பொருட்படுத்தாது அவனின் நலனை எண்ணி வருந்தி அவள் கேட்க,
“நான் தூங்க போறேன் அம்ஸ்… என்னை டிஸ்டர்ப் செய்யாதே” என்றுரைத்து சீட்டை பின் சாய்த்து கண் மூடி தலை சாய்த்துக்கொண்டான்.
அதன் பிறகு திங்கள் காலை வேணியின் அறையினில் அவளை விட்டு தனது அறைக்கு செல்லவென திரும்ப,
“என் மேல எதும் கோபமா கோவக்கா? நீ என் கிட்ட சரியா பேசவே இல்ல இளா? இத்தனை வருஷத்துல நீ இப்படி என் கிட்ட நடந்துக்கிட்டதே இல்லையே? சரி உனக்கு மூட் அவுட்னு தெரியுது… சரியானதும் என் கிட்ட கண்டிப்பா பேசனும் சரியா” என வேணி கூற,
அவளிடம் ஏதும் பேசாது தலையசைத்து விடைபெற்றான் இளா.
— தொடரும்