உயிரில் மெய்யாக வா 9

உயிரில் மெய்யாக வா 9

சென்னை அந்த அதிகாலை வேளையில் பனியுடன் சேர்ந்த புகை மூட்டத்துடன் காணப்பட்டது. முன்தின இரவு பெய்திருந்த சிறு மழையின் தூரல், க்ரில் கம்பிகளை நனைத்திருக்க, பல ஆயிரம் வீடுகளை உள்ளடக்கியிருந்த அந்த அப்பார்ட்மெண்டின் எட்டாம் தளத்தில் அந்த அதிகாலைக் குளிரைப் பொருட்படுத்தாது, ராகவி நின்றிருந்தாள்.

சில்லிட்ட இரும்புப் பிடிமானத்தில் படிந்திருந்த மழைத் துளிகளை ஒவ்வொன்றாக விரலின் மீது படியவிட்டு, பின் அவற்றை கையிலிருந்து கீழே வழிய விட்டவண்ணம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

அவள் கழுத்தில் தொங்கிய மெல்லிய மஞ்சள் சரடும், அதன் முடிவில் கோர்க்கப்பட்டிருந்த பொன் தாலியும் மனதில் ஒரு நிம்மதியைப் படரச்செய்திருந்ததென்னவோ உண்மை.

ஆலங்குடியில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னை இப்படி எங்கோ அடித்துக் கொண்டு வந்து நிறுத்திவிட்டிருந்த தன் விதியை எண்ணி ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு. “வீட்டை விட்டு வெளிய போ” என்று அத்தனை பேர் மத்தியில் அவளை அங்கிருந்து துரத்திய தந்தையின் முகமும், “நீ நாசமா போயிருவ” என்று தூற்றிய பாட்டியின் வன்மமும், செய்வதறியாது தவித்த தாயின் உருவவும் ராகவியைப் பாடாய் படுத்தின.

அவள் முகம் சற்று சுணங்கினாலும், “நான் இருக்கேன்டா. வருத்தப்படாத. சரியாகிடும்.” என்று ஆறுதலுடன் அவள் கரம் கோர்த்துக் கொண்டு தோள் சாய்த்துக் கொள்ளும் திவாகர், இந்த ஆறு மாத காலத்தில் அவளுக்கு எல்லாமுமாக மாறிப் போனான்.

வீட்டை விட்டு வெளியேறிய தினத்தை ராகவி அடிக்கடி நினைவு கூர்ந்து கொள்வாள். தனக்கு அல்லாமல், வேறு யாருக்கோ நடப்பது போலத் தோன்றும் காட்சிப்பிழை கனவு போலவே தோற்றமளிக்கும் அத்தினம் அவளுக்கு.

திவாகருடன் வீட்டைவிட்டு வெளியே வரவும், அவன் நேரே கூட்டிச் சென்றது அவனது வீட்டிற்குத் தான். அங்கேயும், இப்படி அதிகாலையில் ஒரு பெண்ணுடன் வந்து நிற்பான் என அவன் வீட்டினர் எதிர்பார்க்கவில்லை.

“திவா யாருப்பா இது? என்னாச்சு?” என்று அவன் தந்தையும், அன்னையும் கவலையுடன் விசாரித்தனர் தான் எனும் போதும், ராகவியின் தந்தை போல வீட்டின் வாயிலில் நிற்கவைத்தெல்லாம் அசிங்கப்படுத்தவில்லை. ராகவியின் அழுத முகத்தை வைத்தே ஓரளவு விஷயத்தை யூகித்திருந்தவர்கள், மேலும் மேலும் குடைந்து கேள்வி கேட்காமல் நாசூக்காக நடந்து கொண்டனர்.

“நான் திவாவோட அக்கா.” என்ற முகமனுடன், “இந்தா குடி” என்று சூடான காபியைக் கொண்டு வந்து நீட்டிய திவாகரின் அக்கா சூசனை ராகவிக்கு பார்த்த உடனேயே பிடித்தது. இவள் அமர்ந்திருந்த கூடத்து நாற்காலியைச் சுற்றிக் கொண்டு நடந்த திவாவின் அம்மா மேரியையும், வீட்டினுள் இவள் அமர்ந்திருக்க, அவளுக்காக இடத்தைக் கொடுத்துவிட்டு, எழுந்து சென்று வீட்டின் வாயிலில் அமர்ந்து கொண்ட திவாகரின் தந்தை ஆரோக்கியதாஸையும் சற்றே பயத்துடன் தான் ஏறிட்டாள்.

சூசன் கொடுத்த காபி தொண்டைக்கு இதமாக இருக்க, நன்றியுடன் அதை குடித்து முடித்தாள். வெளியே தன் தந்தையிடம் நடந்தவற்றை விளக்கியிருந்த திவாகர், முறையாக வீட்டினுள் வந்து அவன் அன்னையிடமும், சூசனிடமும் விஷயம் எடுத்துரைத்தான்.

அவன் பேசிய விதமே ராகவிக்கு இதமாக இருந்தது. மறந்தும் கூட ராகவியின் வீட்டாரைப் பற்றித் தரக்குறைவாக ஒரு வார்த்தை வெளியே விடவில்லை. “அவங்க வீட்டு ஆளுங்க கோபம் நியாயமானது. எக்காரணம் கொண்டு வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நாங்க உறுதியா தான் இருந்தோம். ஆனா நிலைமை அப்படியில்லன்னு ஆகிடுச்சு.” என்றவன், அடுத்து மேலே என்ன செய்யவெனத் தந்தையுடன் கலந்தாலோசித்தான்.

“அவங்க வீட்டில எதுக்கும் ஒரு முறை பேசிப் பார்க்கலாமா திவா? எடுத்தோம் கவுத்தோம்னு முடிக்கற விஷயம் இல்லப்பா இது. அவங்க பொண்ணை கடத்திட்டோம்னு போலீஸ்ல பொய்ப் புகார் குடுக்கக் கூட வாய்ப்பிருக்கு.” என்று சற்றே தயக்கத்துடன், ராகவியின் மனது புண்பட்டுவிடாத படிக்குப் பக்குவமாகப் பேசிய அவன் தந்தையின் கருத்தை திவாகர் ஏற்றுக் கொள்ளவில்லை.

“அப்பா, அவங்களுக்குத் தெரியாம நாங்க வீட்டை விட்டு ஓடி வரலை. என் கூட தான் வர்றான்னு அவங்க வீட்டில நல்லா தெரியும். அதுவுமில்லாம, ஊரே வேடிக்கை பார்த்துச்சு நாங்க கிளம்பினதை. சோ, கடத்திட்டோம்னு போலீஸ்க்கு போகவாய்ப்பில்லைப்பா. வேணும்னா, ரெண்டு நாள் வெயிட் பண்ணுவோம். அவங்க போலீஸ் ஸ்டேஷன் போறாங்களா, இல்லை கொஞ்சம் மனசிறங்கி பேச வர்றாங்களான்னு பார்ப்போம். அதுவரைக்கும் வெயிட் பண்ணலாம்பா” என்று கூறியவன், ராகவியின் முகம் பார்த்துப் பார்த்து அதற்கேற்றார் போலப் பேசலானான்.

திவாகர் எதிர்பார்த்தது போலவே, அன்றைய மாலையே கோகுலின் உதவியுடன் திவாகரின் வீட்டைத் தேடிக் கொண்டு வந்திருந்தார் ராகவியின் சித்தப்பா. அவருடன் சில ஊர்க்காரர்களும்.  கூட்டத்தில் தன் தந்தையைப் பெருதும் எதிர்பார்த்துக் காத்திருந்த ராகவிக்கு, அவள் சித்தப்பாவைக் கண்டதும் பேச்சே வரவில்லை. ஓடிச் சென்று அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள். அவரும் ஆதுரமாக அவள் தலையைத் தடவிக் கொடுத்துவிட்டு, தான் கொண்டு வந்திருந்த செய்தியை பகிர்ந்து கொண்டார்.

“அண்ணனுக்கு அவர் பண்ண தப்பு உறைக்காம இல்லைங்க. அவருக்கு மக மேல கொள்ளை பிரியம். எனக்கும் ரெண்டுமே ஆம்பிளை பசங்க. ராகவிதான் எங்க எல்லார்த்துக்கும் செல்லம். அதனால தான் அண்ணனால உங்களை ஏத்துக்க முடியலை. அதுவுமில்லாம வேற ஜாதின்னாலே கம்பு தூக்கற ஆளுங்க நாங்க, வேற மதத்தை எப்படி சீக்கரம் ஏத்துக்கற முடியும்?” என்று மிகவும் வெளிப்படையாகவே பேசினார் ராகவியின் சித்தப்பா செல்வகணேசன்.

அவர் பேச்சில் தொனித்த உண்மையும், சங்கடமும், அதில் தொக்கி நின்ற கோபமும் திவாகருக்குப் புரியாமல் இல்லை.அவனும் நல்ல விதமாகவே பேசலானான். “சார், நான் உங்க பொண்ணை வற்புறுத்தி என்கூட கூட்டிட்டு வரலை. இப்போவும் அவளுக்கு உங்க கூட வர இஷ்டம்னா நான் கண்டிப்பா பிரச்சனை பண்ண மாட்டேன். எங்களுக்குத் தேவை உங்க ஆசீர்வாதம் மட்டும் தான். வேற ஜாதிங்கற ஒரு விஷயம் மட்டும் தான் நமக்குள்ள முரண்.” என்று அவன் பேசியதை செல்வகணேசன் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது அவர் செயலில் இருந்து புரிந்தது.

சற்றே சங்கடத்துடன் நெழிந்தபடிக்கே பேசிய செல்வகணேசன், “தம்பி, ராகவியே வர்றேன்னு சொன்னாலும் என்னால அவளைக் கூட்டிட்டுப் போக முடியாது. ஊருக்குள்ள, சொந்த பந்தம் நடுவுல, பொண்ணு ஓடிட்டான்னு ஏற்கனவே சொல்லு விழுந்து போச்சு. அதை மாத்தவா முடியும் சொல்லுங்க? நாங்க போலீஸ் கேஸ்னு போனாலும் எங்களுக்கு தான் மேலும் அசிங்கம் வந்து சேரும். மேஜரான பொண்ணுன்னு ஒரே சொல்லுல வாயை அடைச்சுடுவாங்க.” என்றவர்,

“நான் இப்போ எதுக்கு வந்தேன்னா, ராகவிய இதுல கையெழுத்துப் போடச் சொல்லுங்க.” என்று சொல்லி கத்தை காகிதங்களை திவாகரிடம் நீட்டினார்.

“தனக்கும் இனி, ரத்தினம் குடும்பத்தாருக்கும் எந்த ஒட்டு உறவும் இல்லை. அவர்களது சொத்தில் எந்த பங்கும் எனக்கில்லை.” என்ற தினுசில் எழுதப்பட்டிருந்த நோட்டீஸ் பத்திரம்.

இதைக் கொஞ்சமும் ராகவி எதிர்பார்க்கவில்லை என்பது அவளது அடிபட்ட முகத்தில் இருந்தும், கண்ணீரில் இருந்தும் தெளிவாயிற்று. “என் கூட வந்துடும்மா.” என்று அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்லவே சித்தப்பா வந்திருக்கிறார் என்று நினைத்திருந்தவள், அவர் சொத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கத்தான் வந்திருக்கிறார் என்று தெரிந்து அதிர்ந்து தான் போனாள்.

திவாகரை ஒரு பார்வை பார்க்க, அவனோ, “கையெழுத்து போடு” என்பது போல, கண்களாலேயே ஜாடை சொல்லியிருக்க, கொஞ்சமும் யோசிக்காமல், அவர் நீட்டிய காகிதத்தில் ஒப்பமிட்டாள்.

“இதுல உன்னோட நகைகள் இருக்கு. உன் ராகவி அம்மா குடுக்க சொன்னாங்க” என்று அவர் திவாகரிடம் மஞ்சள் பையை நீட்ட, அவன் கையெடுத்து கும்பிட்டானே ஒழிய, அவரிடம் கை நீட்டவில்லை.

ராகவி கையெழுத்து இட்ட பிறகு, நொடி நேரம் கூட அவர்கள் காத்திருக்கவில்லை. திவாகரிடம் ஒரு சின்ன தலையசைப்பை மட்டும் சிந்திவிட்டு, வேகமாக வெளியேறினர்.

ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து வெளியேறிய தன் சித்தப்பாவையும், அவருடன் வந்திருந்த ஊர்காரர்களையும் நீர்த்திரையிட்ட விழிகளுடன் பார்த்துக் கொண்டு நிற்பதைத் தவிர ராகவியால் வேறெதுவும் செய்ய இயலவில்லை.

அதன் பிறகு திவாகர் மடமடவென செயல்பட்டான். “அந்த பொண்ணு கிருஸ்துவ மதத்துக்கு மாறினா தான் திவா, நம்ம தேவாலயத்தில ரெண்டு பேர்த்துக்கும் கல்யாணம் பண்ண முடியும்.” என்று திவாகரின் சொந்த பந்தம் முடிவெடுக்க, ராகவியே ஆச்சர்யப்படும் வகையில் அவர்களது பேச்சை திவாகர் ஏற்றுக் கொள்ளவில்லை.

“வேணாம். அவளை மதம் மாத்திட்டான்னு அதுக்கும் அவங்க வீட்டு ஆளுங்க கவலைப்படுவாங்க. அதுவுமில்லாம, ராகவியை மதம் மாத்தி, அவளோட பழக்கவழக்கங்களை அழிச்சு, நம்ம மதத்தை அவ மேல திணிச்சு அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் ஒரு நாளும் நினைச்சதில்லை.” என்று தீர்மானமாகக் கூறினான்.

ராகவிக்கு அவள் வீட்டில் ஆதரவு இல்லை என்று தெளிவாகப் புரிந்து போக, புகுந்த வீட்டினரின் ஆதரவாவது கிட்டுமே என்ற ஆசையில், “மதம் மாறித்தான் கல்யாணம் பண்ணிக்க முடியும்னு சொல்லறாங்களே திவா. எனக்கு மதம் மாற சம்மதம் தான்.” என்று திக்கித் திக்கிக் கூற, திவா அவளைக் கண்களாலேயே அடக்கினான்.

“நாங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கறோம்ப்பா. அதான் சரிவரும். யாரும் யார் மதத்துக்கும் மாற வேண்டாம்” என்று சூழ்ந்திருந்த அக்கம் பக்கத்தினர், வேடிக்கை பார்க்க வந்த ஊர்க்காரர்கள் மற்றும் சொந்தங்களிடம் தெளிவாகக் கூறியவன், சொன்னது போலவே ஒரே வாரத்தில் ராகவியைப் பதிவுத் திருமணம் செய்தும் கொண்டான்.

திருமணம் நடக்கப்போகும் செய்தியை, ராகவியின் சித்தப்பாவின் மூலம், ராகவியின் வீட்டாருக்குத் தெரியப்படுத்தவும் செய்தான். “இதெல்லாம் எதற்கு? வீணாக அவர்களைச் சீண்டுவானேன்?” என்று வினவியவர்களுக்கு,

“நான் அவங்க வீட்டுப் பொண்ணை கடத்தி கூட்டிப் போய் கட்டாயத்தாலி கட்டலை. என்னோட மனசாட்சிப் படி என்னால முடிஞ்ச வழிகள்ல அவங்ககிட்ட செய்தி பகிர்ந்துட்டேன். வர்றதும் வராததும் அவங்க விருப்பம். இதெல்லாம் செய்யாம இருந்தேன்னா எனக்கு உறுத்தலா இருக்கும். அப்படிப்பட்ட உறுத்தலோட என் கல்யாண வாழ்க்கையைத் துவங்க நான் விரும்பலை.” என்று அவன் சொன்ன போது, அதை மற்றவர்கள் யாரும் தடுக்கவில்லை.

பதிவுத் திருமணம் செய்யும் நாளில் ராகவியின் வீட்டினர் ஒருவரும் வரவில்லை. இதை ராகவியும் எதிர்பார்த்திருந்தாள் என்பதால் பெரிதாக ஏமாற்றம் அடையவில்லை. திவாகரின் குடும்பத்தினர், நண்பர்கள் என வந்திருந்தவர்களின் முன்னிலையில் ராகவி திவாகரின் கரம் பற்றினாள்.

அவன் வழக்கப்படி மோதிரமும், அவள் வழக்கப்படி தாலியும் கட்டினான். அந்த வார இறுதியிலேயே, சென்னையில் வீடு பார்த்து, முக்கியமாக வேண்டிய சாமானங்கள் எல்லாம் வாங்கி ராகவியுடன் குடியேறினான்.

அவளுக்கு எந்த குறையும் இருந்துவிடக் கூடாது என்று அவன் செய்யும் ஏற்பாடுகளில் இருந்து ராகவிக்குப் புலனாயிற்று. அதிலும், முன் தினம் வரையிலும் அவன் கழுத்தில் ஊசலாடிய சிலுவலை டாலர் கோர்த்த சங்கிலி இல்லாததைக் காணவும் அவளுக்கு சங்கடமாகப் போயிற்று.

“உங்க ஒருத்தர் சம்பளத்துக்கு இந்த அப்பார்ட்மெண்ட் வீடு, ஃப்ரிட்ஜ், வாசிங் மெஷின், ஏசியெல்லாம் ரொம்ப அதீத செலவா தெரியுது திவா. கொஞ்ச கொஞ்சமா சாமனெல்லாம் வாங்கலாம். சாதாரணமான வீடே பார்க்கலாம்.” என்று ராகவியின் கேள்விக்கு,

“அப்படியெல்லாம் சிக்கனம் பிடிச்சு நாம ஒண்ணும் 10தலைமுறைக்கு சொத்து சேர்த்த வேண்டாம். உனக்கு எந்த வித கஷ்டமும் இல்லாம பார்த்துக்கறது தான் என்னோட முதல் கடமை. அதை நான் செய்யறேன். நம்மோட வாழ்க்கையை மட்டும் நாம வாழலாம். பிற்கால சந்ததி அவங்க வாழ்க்கையை வாழ்ந்துக்குவாங்க. அவங்களுக்காக சேர்த்து வைக்கறோம்ங்கற பேர்ல நாம கஷ்டப்படணும்னு அவசியமில்லை. நல்ல படிப்பு குடுக்கணும், நல்ல பழக்கங்கள் சொல்லிக் குடுக்கணும்.அதான்  நாம விட்டுப் போற உண்மையான சொத்து ” என்றவன், அவளுக்கு வாக்கு கொடுத்தது போல உள்ளங்கையில் வைத்து தான் பார்த்துக் கொண்டான்.

அவனுடன் இருக்கும் நேரங்களில் வாழ்வின் மீது ஒரு புதிய நம்பிக்கையும், மனம் முழுக்க ஒரு நிறைவும் அவளுக்குத் தோன்றியதில் ஆச்சர்யமில்லை.

“நான் சமைக்க மாட்டேனா? எதுக்கு காலையில நீங்க எந்திரிச்சு செய்யறீங்க?” என்று ராகவி சங்கடப்படும் நேரங்களில் சிரிப்புடன் சமாளிப்பான். அவளாக காலையில் எழுந்து கொள்ளும் வரையிலும், அவளைத் தொந்தரவு செய்ய மாட்டான்.

“எனக்கு காலையில நேரமா எந்திரிச்சு பழக்கம் இருக்குங்க மேடம். ஆனா உனக்கு இல்லைன்னு எனக்கு தெரியும். சோ, என்னால முடியறதை நான் செய்யறேன். மதியம் லன்ச் அன்ட் டின்னர் உன் பொறுப்பு. சரியா? காய் கறி வெட்ட, பாத்திரம் கழுவ நான் முடியறப் போலாம் ஹெல்ப் பண்ணுவேன். நம்ம வீட்டில, இது உன் வேலை, இது என் வேலைன்னு எந்த பிரிவினையும் இல்லை. இது, நம்ம வீடு. இங்க எல்லாமே நம்ம வேலை தான்” என்று பதிலளிப்பான்.

பார்பவர் யாருமே பொறாமை கொள்ளும் படிக்கு, ஒரு மகாராணியைப் போல ராகவியை நடத்தினான். இந்த ஆறு மாதத்தில் எதிர் வீட்டில் வசிக்கும் அனிதா – ஆனந்த் தம்பதி, மற்றும் பக்கத்து ஃப்ளாட்டில் வசிக்கும் சுகன்யா – விஷ்ணு தம்பதி என இரு குடும்பங்களும் ராகவிக்கு நட்பாயினர்.

“உங்க சார் செம சூப்பர். அவர் உங்களை கவனிச்சுகறதைப் பார்க்கவே அவளோ அழகா இருக்கு. காலையில நான் ஒரு நாள் லேட்டா எந்திரிச்சாலே என் வீட்டுக்காரர் அவங்க அம்மாவுக்கு ஃபோன் பண்ணி வத்தி வச்சுடுவார். அந்தம்மா, நான் என்னமோ அவங்க பையனை பட்டினி போட்டு கொல்லற மாதிரி பேசுவாங்க.” என்று அனிதா வெளிப்படையாகவே ராகவியிடம் சொல்லுவாள்.

“உண்மை தான் ராகவி! என் வீட்டில, விஷ்ணு அப்பப்போ ஹெல்ப் பண்ணுவார். ஆனா ஒரு நாள் வேலை செஞ்சா அதை பத்து நாள் சொல்லிக் காமிச்சு வேற எதுவும் செய்யாம தப்பிச்சுக்குவார். ஆனா உங்க சார் பரவாயில்லை. காய்கறி வாங்க உங்க கூட வர்றார், நைட் வாக்கிங் வர்றார், வீடு கூட்டறார், பாத்திரம் கழுவ ஹெல்ப் பண்ணறார். முக்கியமா இதையெல்லாம் முகம் சுழிக்காம, நம்ம வேலை தானே இதெல்லாமும்னு செய்யறார். நீங்க ரொம்ப லக்கி ராகவி.” என்று கூறுவாள் சுகன்யா.

அந்த அளவிற்கு திவாகர் தன் மனைவியின் தேவைகளை உணர்ந்து, அவள் மனமறிந்து நடந்து கொண்டான்.

எதிர் வீட்டு ஆட்களுக்கும், பக்கத்து வீட்டு நண்பருக்கு புரிவது தன் வீட்டினருக்குப் புரிந்து, தனக்குக் கிடைத்திருக்கும் கணவனின் தன்மையைப் பற்றி தன் வீட்டினர் உணர்ந்து கொண்டு, அவர்களை ஏற்றுக் கொண்டால் எப்படியிருக்கும் என்று அவ்வப்போது ராகவிக்குத் தோன்றும். தன் அன்னை தந்தையுடன் எந்த பேச்சு வார்த்தையும் இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர வேறு எந்த சலனமும் இல்லாமல் அவள் வாழ்வு நடந்தேறியது.

இதையெல்லாம் எண்ணிக் கொண்டு பால்கனியில் நின்றிருந்த ராகவியின் இடையைச் சுற்றி திவாகரின் கைகள் படற, அவன் முகம் அவள் கழுத்தில் இதமாகப் பதிய, தன் நினைவுகளில் இருந்து விடுபட்டாள் ராகவி.

அவன் போர்வைக்குள் அவளையும் சேர்த்து அணைத்துக் கொண்டவன், “மணி இன்னும் ஆறு கூட ஆகலை. காலையில குளுருக்கு இதமா உன்னைத் தேடினா பெட்ல உன்னைக் காணோம். இங்க என்ன பண்ணற?” என்று கொஞ்சலாக மொழிந்தபடிக்கே அவள் கைகளில் மெல்ல கோலமிட்டான்.

அவன் தொட்ட இடங்கள் புல்லரிக்க, குளிருக்கு இதமாக போர்வையின் மென் வெதுவெதுப்பில் ராகவி சற்றே இளகினாள். அவள் அணிந்திருந்த நைட் டிரஸ்ஸின் மீது சிறிய கோலங்கள் இட்டவனின் கைகள், அவள் இடையைத் தேடிக் கண்டுபிடித்து விட, அவன் கைவிரல் பட்டு சூடாகியிருந்த அவள் இடையைத் தன் இரும்புக் கரத்தினால் இன்னமும் அழுத்தினான் திவாகர்.

“தூக்கம் கலைஞ்சிடுச்சு. அதான் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன் திவா.” என்று ராகவி கூச்சத்துடன் அவன் தோளில் இலகுவாக சாய்ந்து கொண்டாள்.

“எந்திரிச்சா என்னை எழுப்ப வேண்டியது தானே!”

“நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. டிஸ்டர்ப் பண்ணத் தோணலை” என்றபடிக்கே ராகவி முணுமுணுக்க,

“ஆனா எனக்கு உன்னை டிஸ்டர்ப் பண்ணத் தோணுதே! ரொம்ப குளிருது. உள்ள போலாமா” என்று கூறிய திவாகர், அவள் இடையை இறுக்கிக் கொண்டே, ராகவியின் காதோரத்தை தன் மூக்கால் உரசலானான். அவன் மூச்சுக் காற்றுப் பட்டு, அவள் கையில் ரோமங்கள் சிலிர்த்தன. அவன் எண்ணம் புரிந்து அவளும், அதிகம் சப்திக்காமல் நாணத்தில் பேச்சற்றுப் போய், “ம்ம்ம்” என்று மட்டும் உரைத்தாள்.

ராகவியின் வெட்கத்தைக் கண்டவனுக்கு, நரம்பில் புது ரத்தம் பாய்ந்தோடியது. அவளை ஒரே எக்கில் ஏந்தியவன், பால்கனியில் இருந்து படுக்கை அறைக்குத் தூக்கிக் கொண்டு நடந்தான். அவன் குறுகுறு பார்வையும், உதட்டின் ஓரம் நெழிந்த சின்னச் சிரிப்பும் அவளை கிறங்கடிக்க, அவன் கண்கள் ஆழமாக அவளைப் பார்ப்பதைக் கண்டு நாணிய ராகவி, அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டாள்.

படுக்கை அறை வரையிலும் தூக்கிச் செல்ல பொறுமை இல்லாத திவாகர், ராகவியை ஹாலின் சோஃபாவில் கிடத்தி அவள் மீது படர்ந்தான். துவண்டு போன கொடி இடையைப் பற்றிக் கொண்டு திவாகர் ராகவியின் உதடு நோக்கிக் குனிய, ராகவி அவன் அணைப்பில் தன்னை மறக்கலானாள். இப்படியாக அன்றைய காலைப் பொழுதும், அதன் பின்னான நாட்களும் அழகாகவே புலர்ந்தது இருவருக்கும்.