உயிரில் மெய்யாக வா 8

உயிரில் மெய்யாக வா 8

வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும் ராகவிக்கு முதலில் தோன்றிய பயம், சற்றைக்கெல்லாம் பெற்றோர் மீது எரிச்சலாக மாறியிருந்தது.

“அவளோ தூரம் சொல்லறேன். என் பேச்சை ஒரு பொருட்டாவே நினைக்காம, அவங்க போக்கில மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வீட்டுக்கு கூட்டி வந்தா என்ன அர்த்தம்?”என்று புழுங்கினாள். அப்போதைக்கு ரமேஷ் இவளுக்கு கொஞ்சம் ஆறுதலாகப் பேசுவது போலத் தோன்ற அவனிடம் தன் மனக்குமுறலைக் கொட்டினாள்.

“கோவிலுக்கு அவங்களையும் வரச் சொல்லி ஜாதப் பொருத்தம் பார்க்கறது தான் ஏற்பாடாம். அம்மா நேத்தே சொன்னாங்க. அதனால எதார்த்தமா அவங்க வீட்டுக்கு வர்றோம்னு சொல்லியிருக்கலாம். நீ டென்ஷன் ஆகி எதையும் பேசி கெடுத்து வைக்காத. ஜஸ்ட் அமைதியா இரு”

“அமைதியா இருக்கறதா? அப்படிருந்தா பொண்ணு, அமைதியா சொன்ன பேச்சு கேட்கறா, கல்யாணத்துக்கு ஒத்துக்துகிட்டான்னு முத்திரை குத்திடுவாரு உன் அப்பா. இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்” என்று பொருமினாள் ராகவி.

“ராகவி, எதுவா இருந்தாலும், அவங்க வீட்டை விட்டுக் கிளம்பினதும் பேசலாம். அவங்க முன்னாடி பேசி அப்பாவை டென்ஷனாக்கிடாத. ப்ளீஸ்” என்று ரமேஷ் கூறியிருந்தான். ஆனால் ராகவி எதிர்பார்த்தது போல ஹாலில் அவளது திருமணப் பேச்சுகள் தான் ஓடின.

“எங்களுக்கு உங்க வீட்டுக்குப் பொண்ணைக் குடுக்க கசக்குதா என்ன? உங்க அப்பாரு(பாட்டன்) காலத்தில இருந்து பழக்கப்பட்டவங்க” என்று ஆதி பெருமைகளைப் பேசிக் கொண்டு அமர்ந்திருந்த பெரியவர்களைப் பார்க்க பார்க்க ஆத்திரமாக வந்தது. ராகவி தன் அறையை விட்டு வெளியே வரப்போவதில்லை என்ற முடிவுடன் இருந்தாள்.

ரமேஷ் வந்து பலமுறை “கீழ கூப்பிடறாங்க. சும்மா வந்து நின்னுட்டு வந்துடு.. ப்ளீஸ்க்கா” என்று அழைத்துப் பார்த்தான். புவனாவும், அன்னமும் மாறி மாறி வந்து அறைக்குள் எட்டிப்பார்த்துவிட்டுச் சென்றனர். எத்தனை முறை வந்து கூப்பிட்ட போதும் ராகவி அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை.

“அவளுக்கு நேத்திருந்தே ரொம்ப ஜுரம். மாத்தரை போட்டுட்டு நல்லா தூங்கறா. திடீர்னு தானே நீங்க வர்றதா ஏற்பாடானது. மன்னிக்கணும்” என்று சால்ஜாப்பு காட்டி, வந்திருந்தவர்களை நன்றாக உபசரித்து அனுப்பி வைத்தனர்.

அவர்கள் சென்றதும் நேரே ராகவியின் அறைக்கு வந்து சேர்ந்தார் ரத்தினம். “என்னை அவமானப்படுத்தணும்னே இதெல்லாம் பண்ணறியா நீ?கீழ வந்து ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போறதில உனக்கு என்ன குறைஞ்சிடும்? வந்தவங்க என்ன நினைப்பாங்க? நாலு பேர்த்துகிட்ட வெளிய நம்மளைப் பத்தி என்ன சொல்லுவாங்க?” என்று ஆத்திரத்துடன் கத்தினார்.

“வந்தவங்க என்ன நினைப்பாங்கன்னு மட்டும் தான் உங்க கவலை. நான் என்ன நினைக்கறேன்னு கொஞ்சமும் அக்கறையில்ல. நாலு பேர் வெளிய உங்களைப் பத்தி தப்பா பேசிடக் கூடாது. ஆனா முகம் தெரியாத அந்த நாலு பேர்த்துக்காக நான் என்ன கஷ்டம் வேணும்னாலும் அனுபவிக்கலாம். அப்படித்தானே?” என்றெல்லாம் அவளுக்கு வெடுக்கெனக் கேட்கத் தோன்றியது.

ஆனால் மேலே பேசப் பேச ரத்தினத்தின் ஆத்திரம் வளரும் என்று கருதி, ராகவி எதுவும் பேசாமல் தலையைக் கவிழ்ந்து கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.

ராகவியின் மெளனம் ரத்தினத்தின் கோபத்தைப் பன்மடங்கு தூண்டியது. “நான் பாட்டில கத்திகிட்டு கிடக்கறேன். எனக்கென்ன வந்ததுன்னு எப்படி கல்லு மாதிரி நிக்கறா பாரு. எங்க இருந்துடீ உனக்கு இவளோ தைரியம் வந்தது. சொல்லு. அவன் குடுக்கற தைரியத்தில இந்த ஆட்டம் ஆடறியா நீ? இப்போ சொல்லறேன் கேளு. உன் மனசுபடியெல்லாம் இருக்கணும்னா நீ இந்த வீட்டில வாழ முடியாது. என் வீட்டில இருக்கற வரைக்கும் என் முடிவு படிதான் நடக்கணும். இஷ்டம் இருந்தா இரு. இல்லைன்னா வெளிய போ”

“என்ன நீங்க?” என்று ஏதோ பேச வாயெடுத்த புவனாவை பார்வையாலேயே அடக்கினார் ரத்தினம்.

“நீ என்ன அழுது, அடம் பிடிச்சாலும் அந்த பையனை உனக்கு கல்யாணம் கட்டி வைக்க மாட்டேன். எவளோ வருஷம் ஆனாலும் சரி. கல்யாணமே பண்ணிக்காம வீட்டோடவே வச்சிருப்பனே தவிர, அவனுக்கு குடுக்க மாட்டேன்.” என்று தீர்க்கமாகப் பேசிய ரத்தினம்,

“கடைசியா கேட்கறேன். அவனை தலைமுழுகிட்டு நான் சொல்லற மாப்பிள்ளையைக் கட்டிகறதுன்னா இந்த வீட்டில இரு. இல்லைன்னா கிளம்பிடு. என்ன சொல்லற?” என்று மூர்க்கமாக வினவினார். ரத்தினத்தின் கோபம் அந்த வீட்டினர் அறிந்தது என்பதால், எவருமே இடையில் வரவில்லை.

ராகவி, கன்னத்தில் வழிந்த கண்ணீருடன் அன்னையை, பாட்டியைத் தம்பியை என மாறி மாறிப் பார்த்தாள். எவரும் உதவிக்கு வரப்போவதில்லை என்பது திட்டமாகத் தெரிய, செய்வதறியாமல் தந்தையை ஏறிட்டாள்.

“சொல்லு, என்ன சொல்லற? நான் சொல்லற பையனைக் கட்டிக்கறியா?” என்று மீண்டுமாய் அவர் வினவ, உப்புக் தண்ணீர் உதட்டில் வழிய, “திவா, திவா நல்லவன் ப்பா” என்று திக்கித் திக்கி அவள் சொல்லி நிறுத்தும் முன்னர், அவள் கன்னத்தில் ரத்தினத்தின் கைகள் பதிந்திருந்தது.

அத்தோடு நில்லாமல், ராகவியைத் தரதரவென மாடிப்படிகளில் இழுத்துச் சென்ற ரத்தினம், வீட்டின் வாயிலின் முன் தள்ளினார். “போயிடு. இங்கிருந்து போயிடு. இனி ஒரு நிமிஷம் இங்க நிக்காத” என்று கத்தியவர், வீட்டின் நிலைக்கதவை அறைந்து மூடினார்.

புவனாவும், ரமேஷும் பதட்டத்துடன் வெளியே செல்ல முயல, “அவளைப் பார்க்கப் போறதுன்னா, அவ கூடவே போயிடுங்க“என்று கண்டிப்பாக ரத்தினம் சொல்லிவிட, அவர்கள் ராகவியின் அருகே கூடச் செல்லவில்லை.

வாயில் கதவின் முன்னே நின்று நீண்ட நேரம் கண்ணீர் சிந்திக் கொண்டே செய்வதறியாது நின்றிருந்தாளே தவிர, ராகவி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தந்தை இழுத்துக் கொண்டு வந்ததன் காரணமாக தோள்பட்டை வலி எடுத்தது. கதவுகள் திறக்கப்படப் போவதில்லை என்று புரியவும், வெளியே திண்ணையிலேயே அமர்ந்தாள்.

நல்லவேளையாக சுற்றுச்சுவருடன் கூடிய வீடு என்பதால், அக்கம் பக்கமென எவரும் எட்டிப் பார்க்கவில்லை என்பதே பெரும் ஆறுதலாக இருந்தது. அவள் மனம் பலதரப்பட்ட விஷயங்களை ஒருங்கே யோசனை செய்து கொண்டிருந்தது. அழுததால் ஏற்பட்ட தலைவலியும், அடுத்து என்ன செய்யவென்ற குழப்பமும் மேலோங்கியது.

இதையெல்லாம் விட, திவாவிடம் எப்படித் தொடர்பு கொள்வது என்ற பெரும் அச்சம் தோன்றியது. கைப்பேசி அவள் அறையிலேயே இருந்த படியால், திவாகருக்குச் செய்தி சொல்வது கூட இயலாமல் போக, அந்த வேதனையை எண்ணி ராகவி இன்னமும் மருண்டாள்.

“ஃபோன்ல சார்ஜ் இல்ல. அதனால கண்டிப்பா கொஞ்ச நேரத்தில ஸ்விட்ச் ஆஃப் ஆகிடும். திவா என் ஃபோனுக்கு ட்ரை பண்ணிப் பார்ப்பான். லைன் கிடைக்காது. சோ, கண்டிப்பா கவலைப்பட்டு என்னைத் தேடி இங்க வருவான். வந்துடுவான்” என்று திரும்பத் திரும்ப அதையே மனதில் உருவேற்றிக் கொண்டாள்.

ஜன்னல் வழியாக புவனாவும், ரமேஷும் அவ்வப்போது எட்டிப் பார்த்தனர். “இவளோ பிடிவாதம் பிடிக்காதடீ. அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்லுவார். மன்னிச்சிடுங்கப்பா. இனி தப்பு பண்ண மாட்டேன். உங்க சொல் பேச்சு கேட்கறேன்னு ஒரு வார்த்தை சொல்லுடி. அவர் அதைத் தானே எதிர்பார்க்கறார்” என்று புவனா மெல்லிய குரலில் அவளிடம் ஜன்னல் வழியாக அறிவுறுத்தினார்.

வெளியே சென்று ராகவியுடன் திண்ணையில் அமர்ந்து கொள்ளலாம் என்று நினைத்த ரமேஷையும் புவனா தடுத்துவிட்டார். “டேய், வேண்டாம்டா. இந்த மட்டில திண்ணையில உட்கார விட்டிருக்கார். நீ உதவிக்கு போய் அவ கூட நின்னா, அங்க இருந்தும் துரத்திவிட்டுட்டா, ராத்திரி நேரம் எங்கடா போவா அவ? திண்ணையில பாதுகாப்பாத் தானே இருக்கா. இருக்கட்டும்” என்று ரமேஷையும் தடுத்திருந்தார்.

ராகவி அவர் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. திண்ணையின் ஓரத்தில் ஒருக்களித்துப் படுத்தவளின் உடல் ஊதல் காற்றில் மெல்லமாக வெடவெடுத்தது. “இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி வீட்டு வாசல்ல உட்கார வச்சுட்டாங்களே. என்ன தப்பு பண்ணிட்டேன் நான். நியாயமா பெத்தவங்ககிட்ட சொல்லி, அவங்க சம்மதத்தை எதிர்பார்க்கறது தப்பா?” என்று பட்சாதாபம் கொண்டு ஏங்கியது அவள் உள்ளம்.

அவளை நினைத்தும், திவாவை நினைத்தும் கண்ணீர் சிந்தினாள். “திவா சீக்கரம் வந்துடு திவா. வந்து கூட்டிட்டுப் போயிடு திவா.” என்று மட்டும் மனதளவில் வேண்டிக் கொண்டே படுத்துறங்கிப் போனாள்.

அதிகாலை, கோலமிடுவதற்குக் கூட அந்த வீட்டின் வாயில் திறக்கப்படவில்லை. காலையில் எழுந்ததும் வீட்டின் வெளியே இருந்த பாத்ரூமில் முகம் கை கால் கழுவிக் கொண்டு மீண்டும் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்ட ராகவி, எப்படியும் திவா வந்துவிடுவான் என்னும் பெரும் நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.

சூரியன் கொஞ்சம் மேலே ஏறியதும் தோப்பில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கியிருந்தனர். வாயிலில் அழுத முகத்துடன் அமர்ந்திருந்த ராகவியைக் கண்டு துணுக்குற்றவர்கள், “பாப்பா, என்னாச்சு பாப்பா? ஏன் அழுட்டே உட்கார்ந்திருக்க. ஐயா எங்க, அன்னத்தம்மா எங்க?” என்று பலவாறாக வினவத் துவங்கியிருக்க, ராகவி எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் அமைதியாக வாயில் கேட்டை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

வேலை செய்பவர்களின் பேச்சைக் கேட்டு வெளிய வந்த ரத்தினம், திண்ணையில் ராகவி அமர்ந்திருப்பதைக் கண்டு “புவனா, அடிச்சுத் துரத்தலையா இந்த நாயை? இன்னும் ஏன் இங்கையே உட்கார்ந்திருக்கா?” என அவள் காது படவும்,சுற்றி வேடிக்கைப் பார்த்தவர்களின் காதுகளில் விழும்படியாகவும் சத்தமாக வினவினார்.

நின்றிருந்தவர்கள், அவர்களுக்குள் ரகசியமாக பேசிக் கொண்டு வேடிக்கை பார்க்கத் துவங்க, ராகவிக்கு அவமானத்தில் உடல் கூனிக்குறுகியது. தலையைக் கூடத் தூக்காமல் செவிகளை மட்டும் கூர்மையாகத் தீட்டியபடிக்கு திவாவின் வருகைக்காக காத்திருந்தாள்.

******

திவாகர் அன்றைய தினம் அதிகாலையிலேயே நாமக்கல் வந்தடைந்திருந்தான். முந்தினம் சென்னையில் இருந்து கிளம்பும் போதும், அதன் பிறகுமாக நிறைய தடவை ராகவியின் எண்ணிற்கு அழைத்துப் பார்த்து சோர்ந்து போயிருந்தான்.

இந்த பிரச்சனை ஆரம்பித்த நாட்களில் இருந்து ஒரு நாளும் அவள் கைப்பேசி அணைத்து வைக்கப்படவில்லை. அதிலும், காலையில் கோவிலுக்குப் பெற்றோர் சென்றிருக்கின்றனர் என்று அவள் கூறியது நெருடலாக இருந்தது.

மாலையில் இருந்து ராகவி எந்த குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை. அதிலும் அவனுக்கு வேலை கிடைத்ததா இல்லையா என்று கூட அவள் கேட்கவில்லை.

“எதாவது பிரச்சனையா இருக்குமோ?” என்று பயந்தவன், அவன் நண்பனான கோகுலை அடுத்த நாள் காலை அவள் வீட்டின் அருகே சென்று யாருக்கும் சந்தேகம் வராதபடிக்கு நோட்டம் விடச் சொல்லியிருந்தான்.

காலையிலேயே கோகுல் திவாகருக்கு அழைத்திருந்தான். “டே மச்சி நீ நினைச்ச மாதிரி என்னமோ பிரச்சனை தான். வேலைக்காரங்க கூடிக் கூடி நின்னு பேசிக்கிட்டு இருக்காங்க. ராகவி திண்னையில உட்காந்திருந்த மாதிரி தெரிஞ்சது. நான் ரொம்ப பக்கத்தில போய் பார்க்கலை.” என்று செய்தி சொல்லியிருக்கவுமே திவாகருக்கு இருப்பு கொள்ளவில்லை.

பேருந்திலிருந்து இறங்கிய அடுத்த நிமிடம் ஆட்டோ பிடித்து நேரே தன் வீட்டிற்குச் சென்றவன், அசுர வேகத்தில் உடை மாற்றிக் கொண்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டு ராகவியின் வீட்டை நோக்கி விரட்டினான்.

                   ********

திவாகரின் பைக் சப்தம் கேட்கிறதா என வாயிலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருவள், திவாகர் பைக்கை நிறுத்திவிட்டு தயக்கத்துடன் கேட்டின் அருகே நிற்கவும், “திவா” என்று ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டாள்.

சுற்றி நின்றிருந்தவர்கள், அக்கம் பக்கம் என எவரைப் பற்றியும் அக்கறை காட்டாமல் ராகவி நடந்து ஓடி வந்தது கண்டு, என்னவோ ஏதோவெனப் பதறிய திவாகர், அவளை ஆறுதல் படுத்தி, சற்றே தள்ளி நிறுத்தினான்.”என்னாச்சு? என்ன நடந்துச்சு?” என மாறி மாறி அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, வீட்டினுள் இருந்து ரத்தினம் வெளியே வந்தார். அவர் பின்னாலேயே புவனாவும் அன்னமும் பின் தொடர்ந்தனர். திவாவுடன் நின்றிருந்த மகளையும், வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த சிறிய கூட்டத்தையும் கண்டவருக்கு அப்படி ஒரு அசூசை முகத்தில் உண்டாயிற்று.

“போயிரு, அதான் வந்துட்டான்ல போயிரு. அப்படியே போயிரு. இனி எங்க முகத்தில முழிக்காத. அப்பா அம்மா தம்பி எல்லாரும் செத்துட்டாங்க. யாரும் இல்லாத அனாதைன்னு நினைச்சுக்கோ” என்று கத்தியவர், ஆத்திரம் அடங்காமல், திவாவிடம் திரும்பினார்.

“ஊரைக் கூட்டி வச்சு என் மானத்தை வாங்கிட்டல நாயே! உங்க புத்தியே இதான்னு தெரியும்டா.” என்று என்ன பேசுகிறோம் என்றே மறந்து போய் வார்த்தைகளை வெளியிட்டார்.

“நான் உங்க வீட்டுக்குள்ள வந்து தான் உங்கிட்ட நாசூக்கா பேசினேன். நீங்க தான் வீட்டு விஷயத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்திருக்கீங்க.”என்று திவாகர் மறுமொழி கொடுப்பான் என ரத்தினம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“கேடுகெட்ட நாயே! எங்க வந்து யாரைப் பார்த்து பேசறன்னு தெரிஞ்சு தான் பேசறியா?” என்று சொல்லடிபட்ட கோபத்தில் ரத்தினத்தின் வார்த்தைகள் தாறுமாறாக வந்து விழுந்தன.

“புடிச்சு கேட்டுக்கு வெளிய தள்ளுங்க இந்த நாய.” என்று அவர் உரும, வேலையாட்கள் சற்றே அவனை நெருங்கி வந்திருந்தனர். “ மேல கீது கை பட்டுது உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன். வீட்டுப் பிரச்சனையை ஜாதிப் பிரச்சனையாக்கப் பார்க்காதீங்க. முன்ன மாதிரி இப்போ கவர்மெண்ட் இல்ல. புடிச்சு உள்ள வச்சு கஞ்சி காச்சிருவாங்க” என்று திவாகரும் அதே அழுத்தமான குரலில் பதில் சொல்ல, வேலையாட்கள் பின்வாங்கினர்.

“ராகவி, உன் செயின் கம்மல்லாம் கழட்டி வச்சுட்டு,உன் காலேஜ் சர்டிஃபிகேட்ஸ் மட்டும் எடுத்துட்டு வா.” என்று அவன் கூற, ராகவி தயக்கத்துடன் தந்தையை தாண்டி வீட்டிற்குள் சென்று மடமடவெனத் தன் காதணி, கொலுசு, கழுத்துச் சங்கிலி, பிரேஸ்லெட், மோதிரம் என அனைத்தையும் கழற்றி சாமி படத்தின் முன் வைத்தாள்.

தன் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களை ஒரு கவரில் போட்டுக் கொண்டு திரும்ப வீட்டின் வாயிலுக்கு வந்தாள். அவள் அன்னை சேலைத் தலைப்பில் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுக, பாட்டி அன்னமோ, “நீ நல்லா இருப்பியா? நாசமா போயிருவ? பொத்திப் பொத்தி வளர்த்த என் பையனை இப்படிச் சந்தி சிரிக்க வச்சுட்டு போறியே! நல்லாவே இருக்க மட்டடீ.” என்று சபிக்கத் துவங்கியிருந்தார்.

“பாட்டி அமைதியா இருங்க.” என்று ரமேஷ் அன்னத்தின் வாயை அடக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான். அவனுக்கு யார்பக்கம் நின்று பேசுவது என்ற பெரும் குழப்பம். ராகவியை முன் தினம் முழுக்க திண்ணையில் அமர வைத்திருந்தது தந்தை செய்த தவறு என்றும், திவாகர் அப்படியொன்றும் கெட்டவன் இல்லை என்ற எண்ணமும், அதே நேரம் அக்கா வீட்டை விட்டு வெளியேறினால் வீட்டின் மானம் கெளரவம் காற்றில் பறந்துவிடும் என்ற விஷயமும் என ரமேஷ் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தான்.

ராகவி வீட்டை விட்டு வெளியேறி, வாயிலில் நின்றிருந்த அன்னையை ஒரு தரம் கட்டிப் பிடிக்க முயல, அவர் கால்கள் தன்னிட்சையாகப் பின்வாங்கியது. அவரது ஒதுக்கம் ராகவியின் மனதைக் குத்திக் கிழிக்க, அழுதபடிக்கே வீட்டிலிருந்து திவாவுடன் வெளியேறினாள்.

கேட்டின் அருகே நின்றிருந்த ரத்தினம், இவளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தூரத்தில் கண்களைப் பதித்தபடிக்கு நின்றிருந்தார். திவாவும், ராகவியும், மெல்ல நடந்து மெயின் ரோட்டை எட்டியிருந்தனர். கோகுல் திவாவின் பைக்கை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தான்.

“நைட் முழுக்க வெளியவே உட்கார்ந்திருந்தியா?” என்று திவா கேட்க, ராகவி ஆமாம் என்று தலையை மட்டும் அசைத்தாள். அவள் தோள் மீது கை போட்டு, அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்தபடிக்கு நடந்த திவாகர், “என் கடைசி மூச்சு இருக்கற வரைக்கும் உன்னைக் கண்கலங்காம பார்த்துக்குவேன்” என்று மனதில் உறுதியேற்றுக் கொண்டான்.