உயிரில் மெய்யாக வா 7

உயிரில் மெய்யாக வா 7

ராகவி எதிர்பார்த்ததைப் போன்றே அந்த ஞாயிறுதினம் கழிந்தது. அவ்வப்போது அவள் அறையில் இருக்கிறாளா இல்லையா என நோட்டம் விட்டபடிக்கு இருந்தனர் அவளது வீட்டினர். ரமேஷும் அவர்களுடன் கூட்டு சேர்ந்துவிட்டிருந்தான்.

ஒரே நாளில் அவளது வீட்டினர் அனைவருமே அவளுக்கு எதிராளியாக மாறி விட்டதைப் போன்று நினைத்தாள் ராகவி. இவளைக் கண்டதும் அந்த இடத்தை விட்டு அகன்றுவிடும் தந்தை, இவள் உண்டாளா உறங்கினாளா என சற்றும் கண்டு கொள்ளாமல் நடமாடிய தாய், எப்போதடா மேலே விழுந்து குதறுவோம் என்று கழுகுப் பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கும் பாட்டி என அந்த வீட்டினரின் சுபாவமே தலைகீழாக மாறிப் போனது போலத் தோன்றியது.

“அதே ராகவி தானே நான். வேற மதத்துப் பையனைக் காதலிக்கறேங்கற ஒரே காரணத்துக்காக, என்னை இவளோ ஒதுக்கி வச்சுடுவீங்களா? அதும் ஒரே நாள்ல நான் அந்நியமா போயிடுவேனா? அவளோ பெரிய தப்பா நான் பண்ணிட்டேன்” என்ற எண்ணமே பிரதானமாக ஏற்பட்டது.

குழப்பமாகி மனம் தவிக்கும் பொழுதுகளில், திவாகரின் புகைப்படத்தை எடுத்து பார்த்துக் கொண்டும், அவன் பரிசளித்த ராதா கிருஷ்ணர் சிலையுடன் பேசிக் கொண்டும் இருப்பாள்.

அந்த மதியமும் அவள் அதையே செய்து கொண்டிருக்க, திவாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. “முடிந்தால் கூப்பிடு” என்று அவன் செய்தி அனுப்பியிருக்க, கைப்பேசியுடன் பால்கனிக்கு வந்து அவனுக்கு அழைத்தாள்.

“ராகவி. ஒ.கே வா அங்க? ஆர் யூ ஆல்ரைட்?” என்று அவன் முதல் கேள்வியே அவளது நலத்தைப் பற்றியதாக இருந்தது ஆறுதல் அளித்தது. வற்றிய தொண்டையை நனைக்கும் முதல் சொட்டு நீர் போல, மேனியெல்லாம் சிலிர்த்து அவள் வயிற்றில் நிம்மதியைப் பரப்பின அவனது வார்த்தைகள்.

“ராகவி, நான் இன்னைக்கு நைட் சென்னை போறேன். அந்த ஸ்கூல்ல நாளைக்கு இண்டர்வியூக்கு வரச் சொல்லியிருக்காங்க.”

“ஆல் த பெஸ்ட் திவா.” என்று முணுமுணுப்பாக பதிலளித்த ராகவியின் மனவோட்டம் அவனுக்குப் புரியாமல் இல்லை.

“ராகவி, இந்த ஊர்ல இருந்த வேலையைத் தான் உன் அப்பானால பறிச்சுக்க முடியும். அதுவுமில்லாம, எனக்கு வேலை இல்லாததை ஒரு பிரச்சனையா சொல்லிக் காட்டி உன் அப்பா உன்னை எனக்கு கல்யாணம் பண்ணிக் குடுக்கலைன்னா?” என்று அவன் சற்றே நக்கலாகக் கேட்டான். அவளைச் சிரிக்க வைக்கும் சிறு முயற்சியைப் புரிந்து கொண்டு அவளும் மெல்ல புன்னகைத்தாள்.

“ராகவி, நாளைக்கு கோவிலுக்குப் போறதைப் பத்தி கவலைப்படாத. ரொம்ப கம்பல் பண்ணாங்கன்னா அவங்க கூட போயிட்டு வா. அதனால என்னாகிடப் போகுது?”

“அவங்க கூட போன, அவங்க முடிவுக்கு கட்டுப்படறேன்னு அர்த்தம் ஆகிடும் திவா. நான் போகலை.” என்றாள் ராகவி.

“சரி.. நல்லது. ஆனா, ரொம்ப முரண்டு பிடிக்காதன்னு சொல்ல வந்தேன். சரி, உன் தம்பி வந்திருக்கான்னு சொன்னியே. அவனாவது சப்போர்டிவ்வா பேசினானா? என்ன சொல்லறான் என் மச்சான்?”

“ஏன் திவா நீ வேற. உன் பேர் சொல்லிக் கூட அவன் பேச மாட்டேங்கறான். அந்தாளு, அந்தாளுன்னே சொல்லறான். அவனா சப்போர்ட் பண்ணுவான்னு நினைக்கற?” என்றாள் சலிப்புடன். ரமேஷிடமிருந்து எந்த விதமான அனுசரனையான வார்த்தையும் கிட்டாது என்று அவளுக்குத் தெரியும்.

“சரி,சரி விடு. இந்த திரில் எல்லாம் இல்லைன்னா, அப்பறம் என்ன அது காதல் கல்யாணம். கொஞ்சமாச்சும் படபடப்பு இருக்கணும் இல்லையா? நாளைக்கு புள்ள குட்டிக்கு கதை சொல்லலாமே, இப்படி அப்படின்னு” என்று திரும்பவும் அவளைச் சிரிக்க வைக்க முயற்சித்தான்.

“ராகவி, நான் நைட் மெசேஜ் பண்ணறேன். சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கட்டும்.போகணும்னு தோணினா சங்கடப்படாம போயிட்டு வா. பயப்படாத. எல்லாமே சரியாகும். நான் இருக்கேன்” என்று தேறுதல் வார்த்தை கூறி கைப்பேசியை அணைத்தான் திவாகர். அவளுக்கு அவனது முயற்சிகள் நினைத்து பெருமையாகவும் அதே நேரம் கவலையாகவும் இருந்தது.

ஒழுங்காக வேலைக்குச் சென்று, சொந்த ஊரில், நிம்மதியாக சம்பாதித்துக் கொண்டிருந்தவனைத் தன் பொருட்டு இப்படித் தெரியாத ஊருக்கு அலையவிடுவது போலத் தோன்றியது. “திவாவுக்கு இந்த வேலை கிடைச்சிடணும் ஆண்டவா!” என்று மனமுருக வேண்டிக் கொண்டாள்.

மாலை வரையிலும், இதே எண்ணங்கள் தான். மாலைத் தேநீருடன் இவளைத் தேடி வந்த ரமேஷ் “என்ன பண்ணிட்டு இருக்க? போர் அடிக்கலையா? வா, தோப்புல கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம்” என்று அவனாக வலுவில அழைக்க, அவளுக்கும் காலாற வெளிக்காற்றில் நடக்கத் தோன்றியது.

தம்பியுடன் அவ்வப்போது தோப்பில் சிறிது நேரம் நடை பயிலுவாள். மஞ்சள் வெயில் தன் பொன் கதிர்வீச்சால், தென்னங் கீற்றுகளை பச்சையிலிருந்து மஞ்சளாக்க ஆயத்தங்கள் செய்திருக்க, தென்னை மரங்களின் பின்னால் மெதுவாக மறையத் துவங்க ஆதவனும், சில்லென்று வீசிய இளங்காற்றில் மெல்ல நடப்பது அமைதியான ஒரு ஆழ்ந்த நிம்மதியை மனதிற்குக் கொடுத்தது.

சற்று நேரம் வரையும் அமைதியாக உடன் வந்த ரமேஷ், மெல்லமாக அவளிடம் பேச்சு கொடுக்கலானான். “என்ன முடிவு பண்ணியிருக்க நாளைக்கு கோவிலுக்குப் போறதைப் பத்தி?” என்று துவங்கினான்.

“அப்பா கேட்டுப் பார்க்கச் சொன்னாரா?” என்று சற்றே கோபமாக வினவினாள்.

“ஏ! இல்ல ராகவி, நானா தான் கேட்கறேன்.ஏன் எல்லாத்தையும் குதர்க்கமாவே யோசிக்கற?” என்றவன் அவள் பதிலை எதிர்பார்த்து அமைதியாக இருந்தான். ராகவி பதிலேதும் சொல்லாமல் போனதால்,

“சொல்லு ராகவி, என்ன தான் நினைக்கற? வீட்டில எல்லாரும் ரொம்ப பயப்படறாங்க தெரியுமா புள்ள. நம்ம ஊர்மிளாக்கா இப்படித்தானே பண்ணா. வீட்டை விட்டு ஓடிப் போனப்போ, ஊர்மிளாக்காவோட அப்பா தூக்குல தொங்கப் பார்த்தார் தெரியும் தானே! எல்லாரும் சேர்ந்து காப்பாத்தினாங்க. இல்லைன்னா என்னாகியிருக்கும்?” என்று அவன் ஆழ்ந்த குரலில் சொன்னது, ஒரு கணம் ராகவியின் மனதில் படமாக ஓடிற்று.

அவள் தந்தை ரத்தினம் தூக்கில் தொங்கியபடிக்கு ஊஞ்சலாடுவதாக கற்பனை செய்து கொண்ட மனம், பதறிப் போனது. கால்கள் தடுமாற, இடறி விழ இருந்தவளை, ரமேஷ் பிடித்து நிறுத்தினான். ஆழ்ந்த மூச்சுகள் பல எடுத்து மனதைச் சமன் செய்த போதும், அந்த நிழல் வடிவம் அவள் நெஞ்சை விட்டு நீங்க மறுத்தது.

“ராகவி, இந்த ஒரு விஷயத்தை மட்டும் அப்பாவுக்காக விட்டுக்குடு. நீ என்ன ஆசைப்பாட்டாலும் அப்பா அதை நிறைவேத்தி வைப்பார். ப்ளீஸ் ராகவி, யாரோ ஒருத்தனுக்காக, நம்ம வீட்டை நீ மீறிப் போக நினைக்கறது நியாமில்லடீ. இவளோ வருஷமும் உன்னை உள்ளங்கையில வச்சு பார்த்துகிட்டவங்க. அவங்களுக்கு உன் தேவைகள் என்னன்னு தெரியாதா?” என்றவனுக்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

அவனது வார்த்தைகள் கொடுத்த தாக்கம் அதிகமாக இருக்க, ராகவி நடைபயில்வதை நிறுத்திக் கொண்டு, திரும்ப வீடு நோக்கி நடக்கத் துவங்கினாள். ரமேஷும் வேறு வழியில்லாமல் பின் தொடர்ந்தான். வீட்டிற்கு வந்து சேரும் வரையிலும் அவள் எதுவுமே பேசவில்லை.

தன் அறைக்குள் செல்லும் சமயம், “நான் வீட்டை விட்டு ஓடிப் போகப் போறதில்லை ரமேஷ். அதை மட்டும் உன் அப்பாகிட்ட தெளிவா சொல்லிடு” என்று கூறிப் பட்டென கதவை சாத்தினாள்.

கட்டிலில் படுத்ததும் ரமேஷ் கூறிய விஷயங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மனதை அழுத்தின. திவாகருக்கு அழைத்துப் பேச வேண்டும் என்றிருந்த உந்துதலை வெகுவாக கட்டுப்படுத்தினாள்.

“அவனே வேலை விஷயமா வெளியூர் போறான். இப்போ அவன்கிட்ட பேசினா கண்டிப்பா நான் அழுதுடுவேன். அப்பறம் அவன் எப்படி நிம்மதியா ஊருக்கு போக முடியும்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு அமைதிபடுத்திக் கொள்ள முயன்றாள்.

அன்றைய இரவு உணவு உண்ணக் கூட அவள் கீழே செல்லவில்லை. ரமேஷ் கொண்டு வந்து வைத்த தட்டையும் திரும்ப எடுத்துப் போகச் சொல்லிவிட்டாள். சுத்தமாக உறக்கம் வராமல், புரண்டு புரண்டு படுத்தவள் ஒருவழியாக உறங்கிப் போக அதிகாலையே ஆகியிருந்தது.

அடுத்த தினம் விடிகாலையிலேயே அம்மா வந்து அவளை எழுப்பி விட, தூக்க கலக்கத்தில் எழுந்தவள், நேரே குளியலறை சென்றாள். முகத்தில் தண்ணீர் அடித்து சற்றே தூக்கம் தெளியவும் தான் இன்று திங்கட்கிழமை என்பதும், குலதெய்வம் கோவிலுக்கு அனைவரும்  தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என்பதும் புரிந்தது.

ராகவி, தான் மனதில் முடிவெடுத்திருந்ததைப் போல, குளித்து முடித்து தலைவாரிக் கொண்டாள். இவள் தயாராவதை வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போன புவனாவிற்கு நிம்மதியான மூச்சே அப்போது தான் கிட்டியது. “கிளம்பறா, கிளம்பறா” என்று மாமியார் அன்னத்திடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள்.

ராகவி, ஒரு நல்ல காட்டன் புடவை கட்டிக் கொண்டு, அன்னை தொடுத்து வைத்திருந்த மல்லிச் சரத்தை தலையில் சூடிக் கொண்டாள்.அவள் அறையிலிருந்து இறங்கி ஹாலிற்கு வர, அங்கே அமர்ந்திருந்த ரத்தினம் இரு தினங்கள் கழித்து அன்று தான் மகளின் முகத்தில் கண் பதித்தார். அவர் முகத்தில் நிம்மதி படருவதையும், சிரிப்பு மலர்வதையும் கண்ட ராகவிக்கு எரிச்சலே மண்டியது.

“இவங்க சொல் பேச்சைக் கேட்டா நான் நல்லவ. இல்லைன்னா கெட்டவ” என்று முணுமுணுத்தவள், நேரே பூஜையறைக்குச் சென்று சாமி படத்தின் முன் விழுந்து கும்பிட்டாள். அதன் பின்னர் வந்து சோஃபாவில் அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

ரத்தினம், புவனா, ரமேஷ், அன்னம் என அனைவரும் தயாராகிக் காத்திருக்க, ராகவி சோஃபாவை விட்டு இம்மி நகரவில்லை. “வா ராகவிகண்ணு, கிளம்பலாம். நேரமாகுதுல்ல” என்று அழைத்த புவனாவையோ, “வாடீ போலாம். எந்திரி எந்திரி நேரமாச்சு” என்று அதட்டிய பாட்டி அன்னத்தையோ ராகவி கண்டு கொள்ளவேயில்லை.

காரில் ஏறியிருந்த ரத்தினம், ராகவி இடத்தை விட்டு நகராமல் அமர்ந்திருப்பதைக் கண்டு, “இப்போ கிளம்பினாத்தான சீக்கிரம் போக முடியும்.” என்று சுவரிடம் பேசுவது போல இவள் காதுகளில் செய்தியைச் சேர்ப்பித்தார்.

வீட்டினர் மாறி மாறி அழைக்க, ராகவி அமர்ந்திருந்த இடத்தை விட்டு அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். ரத்தினத்தின் எரிச்சல் எல்லை மீறுவதை உணர்ந்த ரமேஷ் தந்தையை வெளியே அழைத்துச் சென்றுவிட,

“டீ? என்ன தான் நினைச்சுட்டு இதெல்லாம் பண்ணற நீ? கிளம்பற மாதிரி ஜாலக்கு காட்டிட்டு, இப்படி கல்லு மாதிரி உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்? எங்களைப் பார்த்தா எப்படிடீ தெரியுது?” என்று புவனா கத்தினார்.

கூச்சலிடும் அன்னையை கண் இமைக்காமல் பார்த்த ராகவி, “எனக்கு இஷ்டமில்லாம, உங்க இஷ்டம் போல என்னை நடத்தப் பார்த்தா இப்படி தான் நடந்துக்க முடியும். வேற எப்படி நடந்துக்க முடியும்?” என்றவள் மேலே எதுவும் பேசாமல் தன் அறைக்குள் சென்று விட்டாள்.

கீழே ரத்தினம் கொதி நிலையில் கத்துவதும், புவனாவை அதட்டுவதுமாக இருக்க, சற்று நேரத்தில் அன்னம் தன் மகனையும் மருமகளையும் சமாதானப் படுத்தி கோவிலுக்கு கிளப்பியிருந்தார்.

“நானும் ரமேசும் வீட்டுல இருக்கோம். நீங்க புருஷன் பொஞ்சாதி போயிட்டு வாங்க. கிளம்பிட்டு தடங்கலா நின்னுட்டா நல்லதில்ல ரத்தினம். அம்மா சொல்லறதைக் கேளு” என்று ராகவியின் தாய் தந்தையை அனுப்பியிருந்தார்.

பெற்றோர் சென்ற பின்னர், கோபமாக ராகவியைத் தேடி வந்த ரமேஷ், “ஏ, உனக்கு வர இஷ்டம் இல்லைன்னா எதுக்குடீ கிளம்பற? எல்லாருக்கும் நம்பிக்கை குடுக்கற மாதிரி நேரமா எந்திரிச்சு கிளம்பிட்டு, கடைசி நேரத்தில அடம் பிடிச்சா என்னடீ அர்த்தம்” என்று வினவினான்.

“எனக்கு வரப் பிடிக்கலைன்னு அர்த்தம். நான் வர்றேன்னு நினைச்சு, என் மனசு மாறிடிச்சுன்னு நினைச்சு, நிமிஷத்தில எல்லாரும் எப்படி மாறினாங்க பார்த்தியா? அப்போ அவங்களுக்கு பொண்ணு மேல பாசம் அக்கறையெல்லாம் இல்ல. அவங்க சொல்லற படிக்கு நான் கேட்டா நல்லவன்னு என்னைத் தாங்குவாங்க. இல்லைன்னா பீடைன்னு திட்டுவாங்க. இதை அவங்க உணர்ந்தாங்களோ இல்லையோ, நான் நல்லா உணர்ந்தேன். இந்த வீட்டை விட்டு ஓடிப் போகணும்னு எண்ணம் எனக்குக் கொஞ்சம் கூட இல்லை. ஆனா, இவங்க நடந்துக்கற விதத்தைப் பார்க்கறப்போ ஏன் போகக் கூடாதுன்னு தோணுது.”

“ஏய், என்ன பேசற நீ? எங்களை எல்லாம் விட்டுப் போயி நீ நல்லா இருந்துருவியா? எல்லார்த்தையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு ராகவி. ஊர்மிளா என்ன அந்தாள் கூட நல்லாவா வாழறா? தினமும் குடிச்சுட்டு வந்து அடிச்சு நொருக்குறானாம். தெரியுமா?” என்ற போது ரமேஷின் குரல் வெகுவாகத் தாழ்ந்திருந்தது.

“டேய், சும்மா சும்மா, ஊர்மிளாவும் நானும் ஒண்ணுன்னு பேசாத. நான் என்ன காதலிச்சதை வீட்டில மறைச்சு, அவனை இழுத்துட்டு ஓடிட்டேனா சொல்லு. எதுக்கெடுத்தாலும் ஊர்மிளா ஓடிட்டா, அவங்க அப்பா தூக்குல தொங்கப் போனார்னு சொல்லி பயமுறுத்தற. ஊர்மிளா லவ் பண்ணான்னு அவங்க வீட்டில யாருக்காச்சும் தெரியுமா? தெரியுமா சொல்லு? தெரியாதில்ல. வீட்டில சொல்ல பயந்துகிட்டு, முகம் தெரியாத ஒருத்தன் கூட ஓடிப் போனவளும் நானும் எப்படிடா ஒண்ணாவோம்?”

“அதில்ல.. ஆனா உன் உன்,, அந்தாளு, அவன் வேற மதம்..”என்று ரமேஷ் மேலே பேசத் துவங்க,

“வேற மதம்னா என்ன இப்போ? திவா ஒண்ணும் முகம் காட்ட பயப்படற கோழையில்ல. வீட்டில கல்யாணப்பேச்சு எடுக்கறாங்கன்னு சொன்னதுமே, தைரியமா வந்து அப்பாகிட்ட நேருக்கு நேரா பேசினான். அந்த தைரியம் ஊர்மிளா லவருக்கு இருந்துச்சாடா? சொல்லு?” என ராகவி கேட்க, ரமேஷ் இல்லையென்று தலையசைத்தான்.

“இதோ, நேத்து உங்க அப்பானால திவாவுக்கு ஸ்கூல்ல வேலை போயிடுச்சு. அதுக்கா அவன் என்ன கோவிச்சுகிட்டானா? உன்னால தான் எல்லாம்னு என்கூட சண்டை போட்டானா? இல்லை, இதான் சாக்கு வா, உங்கப்பா நம்மளை சேர விடமாட்டார். நாம ஓடிடலாம்னு என்னைக் கூட்டிப் போயிட்டானா? வேற வேலை தேட கிளம்பிட்டான். அவனும் வேலை வெட்டியில்லாத ஊர்மிளா வீட்டுக்காரனும் ஒண்ணுன்னு பேசினா, நா சும்மா இருக்க மாட்டேன் பார்த்துக்க. “என்று பேசி முடித்த ராகவி,

“ரமேஷ். நான் உன் அக்காங்கறதை ஒரு நிமிஷம் மறந்துடு. உன் கூட காலேஜ்ல எவளோ பேர் படிக்கறாங்க. அதில எவளோ ஃப்ரெண்ட்ஸ் லவ் பண்ணறாங்க. அப்படி ஒரு ஃப்ரெண்டா என்னையும் திவாவையும் நினைச்சு, நான் லவ் பண்ணற ஆள் யோக்கியமா, என்னை பார்த்துக்குவானா, நம்பிக்கையானவனா நல்லவனான்னு மட்டும் மனசுல வச்சு முடிவெடு. திவாவை நான் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஒரு காரணம் சொல்லேன் பார்க்கலாம்” என ராகவி கேட்க, ரமேஷ் பதிலேதும் சொல்லாமல் தலை கவிழ்த்தான்.

அவனது மெளனமே அவன் பதிலாகிப் போக, மெல்லச் சிரித்துக் கொண்ட ராகவி, “திவாகர் நல்லவன் ரமேஷ். முடிஞ்சா அவங்களுக்கு புரிய வை.” என்று கூறிவிட்டு அமைதியானாள். ரமேஷும் வேறெதுவும் பேசாமல் அவன் வேலைகளைக் கவனிக்கலானான்.

ராகவி மதியம் போல, திவாகருக்கு அழைத்துப் பேசினாள். வீட்டில் நடந்தவற்றைக் கூறாமல் பெற்றோர் மட்டும் கோவிலுக்குச் சென்றுவிட்டதைத் தெரிவித்தாள். அவனும் அங்கே பள்ளியில் நடக்கும் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டான்.

“பெரிய ஸ்கூல் தான் ராகவி. ஈ.சி.ஆர் ரோட்ல இருக்கு. சென்னைக்கு மிக அருகில்னு வச்சுக்கோயேன். இண்டர்வியூ அடெண்ட் பண்ணியிருக்கேன். பிரின்சிபல் பார்க்கறதுக்காக உட்கார வச்சிருக்காங்க.”

“நல்ல விதமா அடெண்ட் பண்ணியிருக்கீங்களா இண்டர்வியூ?”

“சப்ஜெட்ல கேட்ட கேள்விக எல்லாத்துக்குமே பர்ஃபெக்டா ஆன்சர் சொல்லியிருக்கேன். டெமோ க்ளாஸ் எடுத்ததும் சூப்பர் தான். ஆனா என்னோட இங்கிலீஷ் பத்தி தான் உனக்குத் தெரியுமே. அதான் செலக்ட் பண்ணுவாங்களோ இல்லையோன்னு கொஞ்சம் பயமா இருக்கு.” என்றவன் குரலில் சுரத்தே இல்லை. அவன் தெம்பில்லாத குரலைக் கேட்க ராகவிக்கு என்னவோ போலாகிவிட்டது.

“கண்டிப்பா செலக்ட் பண்ணுவாங்க பாருங்க. மேத்ஸ்ஸுக்கு இங்கிலீஷ் பேசறது ஒண்ணும் பெரிய தேவையில்ல. கான்செப்டை புரியற மாதிரி சொல்லித் தர்றீங்களான்னு தான் பார்ப்பாங்க. நீங்க கவலைப்படாதீங்க.” என்று தைரியப்படுத்தி கைப்பேசியை அணைத்தாள்.

காலையில் கோவிலுக்குச் சென்ற அவளது பெற்றோர் மதியம் போல வீட்டிற்கு வந்தனர். ஆனால், ராகவி சற்றும் எதிர்பாரா வண்ணம், மற்றொரு தம்பதியுடனும், அவர்களது மகனுடம் வந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் ராகவிக்குத் தூக்கி வாரிப் போட்டது. வந்திருந்தவர்கள் முன்னர் ராகவியைப் பெண் கேட்டிருந்த அன்னையின் ஒன்றுவிட்ட அண்ணன் குடும்பத்தினர்.