உயிரில் மெய்யாக வா – 6

உயிரில் மெய்யாக வா 6


ராகவியின் அழைப்பை எதிர்பார்த்து கைப்பேசியை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்த திவாகர், கைப்பேசித் திரையில் அவள் எண் மிளிரவும், பதறிக் கொண்டு எடுத்தான்.


“ஹலோ.. ராகவி.. ஹலோ” என குரலில் சற்றே நடுக்கத்துடன் கைப்பேசியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு பேசினான் திவாகர். மறுமுனையில் நீண்ட நேரம் நிசப்தமாகவே இருந்தது. ராகவியின் கைப்பேசியில் இருந்து அவள் வீட்டினர் அழைக்கின்றனரோ? ராகவிக்கு ஏதேணும் ஆகிவிட்டதோ? வீட்டில் அடைத்து வைத்துவிட்டனரா? எனச் சில நொடி பயந்து போனான்.
மூச்சு விடும் சப்தம் மட்டுமே கேட்க, “ஹலோ, ராகவி? ஹலோ?” எனத் திரும்பத் திரும்ப பிதற்றிய திவாகருக்கு நிம்மதியளிக்கும் விதமாக, “திவா, நான் தான்” எனக் கம்மிய குரலில் ராகவி பதிலளித்தாள்.


“அப்பாடா!” என்று பெரும் அமைதி அப்போது தான் அவனைச் சூழ்ந்தது. “ராகவி, அங்க ஒண்ணும் பிரச்சனையில்லையே! நீ ஒ.கே தானே” என்ற அவன் கேள்விக்கு அவளிடமிருந்து “ம்ம்ம்” மட்டுமே பதிலாக வந்து விழுந்தது.


“ராகவி, உன்கிட்ட கேட்காம, கலந்துக்காம உங்க வீட்டுக்கு வந்தது நினைச்சு கோவப்படாதம்மா. உன்கிட்ட கேட்டு, நீ வேணாம்னு சொல்லி, நாள் கடத்திட்டே போக வேணாம்னு நினைச்சேன். உனக்கு பிரச்சனை குடுக்கணும்னு இல்லை ராகவி.” என்று தவிப்பாகப் பேசினான். அவன் எண்ணத்தை அவளுக்குப் புரிய வைத்துவிடும் பெரும் முயற்சியில் இருந்தான் திவாகர்.


இதற்கும் மறுமுனையில் “ம்ம்ம்” மட்டுமே பதிலாகக் கிட்டவும்,
“ராகவி! என்னாச்சு? ஏன் எதுவுமே பேச மாட்டேங்கற? அடிச்சாங்களா வீட்டில? என்ன நடந்துச்சு? நான் வேணா நைட் அங்க வரவா?” என அவன் வினவ, ராகவி, “வேணாம், வேணாம்” என்று அவசரமாக மறுத்தாள்.


“அப்பறம் என்ன தான் ஆச்சு ராகவி? நீ சொன்னா தானே எனக்குத் தெரியும்? ரொம்ப கவலையா இருக்கு. என்ன நடந்துச்சு. எதுவா இருந்தாலும் சொல்லு” என்று அவன் தைரியப்படுத்த ராகவி வீட்டினரின் செய்கைகளைத் திவாவிடம் சொல்லி முடித்தாள்.


“என் அப்பா எப்பவும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார் திவா. என்னால வீட்டை விட்டு அவங்களை ஏமாத்திட்டு ஓடி வந்து வாழ முடியாது. எனக்கு அப்படி பயந்து பயந்து வாழறதுல இஷ்டம் இல்ல.”


“நீ என்ன சொல்ல வர்ற? நாம பிரிஞ்சிடலாம்னு சொல்லறியா?” என்று அவன் கேட்கும் போதே நா தழுதழுத்தது.


“சே, அப்படி சொல்லலை. கொஞ்சம் டைம் வேணும். அவங்க மனசை மாத்த, நீங்க நல்லவர்னு அவங்க புரிஞ்சுக்க டைம் வேணும்.”


“இதெல்லாம் கேட்கணுமா என்ன? நீ சொன்னதை கேட்டதும், இந்த காதல்லாம் வேணாம். நாம பிரிஞ்சிடலாம்னு சொல்லிடுவியோன்னு பயந்தேன். டைம் தானே! அது நிறைய இருக்கு.”


“தேங்கஸ் திவா. அப்பறம், நாளைல இருந்து என்னை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க. ஃபோன் எவளோ நாள் வச்சிருக்க விடுவாங்கன்னு தெரியலை. இப்போ வரைக்கும் ஃபோனைப் பிடிங்கி வைக்க நினைக்கலை. ஆனா அப்படி செஞ்சாலும் செய்யலாம்.”


“நாளையில இருந்து ஸ்கூலுக்கு வரமாட்டன்னு தெரியும். உன்னை அடிச்சு, ரூம்ல பூட்டி வக்காம இருக்காங்களே. அதுவே பெரிய விஷயம். நீ மேனேஜ் பண்ணிக்குவல்ல ராகவிம்மா. என்னால உனக்கு நிறைய கஷ்டம்லடா.?” என்று கரிசனமாக வினவினான் திவாகர்.


“இந்த கஷ்டத்துக்கு எல்லாம் பரிகாரமா, கல்யாணத்துக்கு அப்பறம் என்னை நல்லா பார்த்துக்கோங்க. சரியா?” என அவள் கேட்க,


“என் ஆயுசு இருக்கற வரைக்கும் உன்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவேன். என் மேல சத்தியம்” என்று அவன் உணர்வாகக் கூற, ராகவியின் கண்கள் தாமாகக் கலங்கிப் போயின. அவன் வார்த்தையில் துளி அளவும் பொய்யில்லை. அவளை நன்றாக கவனித்துக் கொள்ள அவன் மெனக்கெடுவான் என்று அவளுக்குத் தெரியும்.


“நான் சொல்லற மாதிரி நடந்துக்க ராகவி. அடிக்கடி ஃபோனை யூஸ் பண்ணாத. வீட்டில நார்மலா வேலைகள் பாரு. பாட்டி கூட, அம்மாகூட நிறைய நேரம் செலவு பண்ணு. வீட்டை விட்டு ஓடிப் போகப் போறதில்லைன்னு தெளிவா அவங்க மனசில பதியவச்சிடு. அப்போ தான் உன்னை நம்புவாங்க. அவங்க பெரிய பயமே, வீட்டை வீட்டு பொண்ணு ஓடிட்டான்னு பேர் வந்துடுமோன்னு தான் இருக்கும். அது இல்லைன்னு நீ ஸ்டார்ங்கா ப்ரூவ் பண்ணிட்டா போதும்.”


“ம்ம்ம். நாளைக்கு குல தெய்வம் கோவிலுக்குப் போற ப்ளான் கேன்சல். திங்கட்கிழமை போறாங்க.அவங்க கூட நான் வந்தா, உன்னை மறந்துட்டேன்னு அர்த்தமாம்.”


“வரலைன்னா? அவங்க ஒத்துக்குவாங்களா? என்னை? நம்மளை?”


“அதெல்லாம் மாட்டாங்க திவா. எனக்கு என்ன பயம்னா, அப்பா என்ன செய்ய காத்திருக்காரோன்னு தான். நீ.. நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கியா? வண்டில போறப்போ வர்றப்போலாம் கவனம் திவா” என்றாள் ராகவி. அவள் குரலில் நிறைய பயம் தெரிந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாகவே பேச முனைகிறாள் என்பதும் திவாகருக்குப் புரிந்தது.


“கண்டிப்பா பார்த்து கவனமா போவேன். நீ ஜாக்கிரதையா இரு. சுத்தி என்ன நடக்குது? என்ன பேசிக்கறாங்கன்னு கொஞ்சம் கருத்தா கவனி.” என அவன் பூதமாகக் கூறினான். அவன் கவலை எல்லாம், முன்னால் புலியை விட்டு, பின்னால் வாலைப் பிடிக்கும் கதையாக இருக்கலாமோ என்பது தான். வெளிப்படையாக எதுவும் செய்துவிடாமல், அதே நேரம் வீட்டில் திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடத்திவிடுவரோ என்ற கவலை. அதைச் சொன்னால் ராகவியின் தைரியம் குலையக் கூடும் என்ற காரணத்தினால் வெளிப்படையாகப் பேசாமல் சுற்றி வளைத்துப் பேசினான்.


இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு, மனதில்லாமல் கைப்பேசியை அணைத்தாள் ராகவி. அன்றைய தினம், இரவு உணவு உண்ணக் கூட யாரும் இவளை அழைக்கவில்லை. சில தடவை பாட்டியும், அன்னையும் இவள் அறையை எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றனர்.
ராகவிக்கும் திவாகரின் பேச்சிற்கான அர்த்தம் முழுவதுமாக விளங்காமல் இல்லை. அவளுக்குமே அவள் தந்தையின் இந்த அமைதியான போக்கு பயத்தையே கொடுத்தது. “காச் மூச்”சென்று கத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி, இவளை அடித்து நிமிர்த்திவிடுவார் என்றெல்லாம் எண்ணியிருந்தவளுக்கு தந்தையின் இந்த அமைதியான போக்கு நிம்மதிக்குப் பதில் பயத்தையே அள்ளிக் கொடுத்தது.


சீரும் பாம்பைக் கண்டால் தோன்றும் பயத்தைக் காட்டிலும், பதுங்கிக் கொண்டிருக்கும் புலியின் வேகவும், நோக்கமும் பீதியைக் கிளப்பக் கூடியது என்று ராகவிக்கு அன்று புரிந்தது.


ராகவி தன் அறையின் கதவைக் கூட மூடாமல் கட்டிலில் நீண்ட நேரம் படுத்திருந்தவள், அப்படியே உறங்கிப் போனாள். அடுத்த நாள் காலையும், இவள் எழுந்து கொள்ளும் போதே தந்தை வீட்டிலிருந்து சென்றுவிட்டிருந்தார். இவளைக் கண்டதும் புவனா முகத்தை திருப்பிக் கொள்ள, அன்னம் இவளை முறைத்தபடிக்கே திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டார்.


ராகவி இதைப் பெரிதும் எதிர்பார்த்தாள் என்பதால் வீட்டினரின் செய்கையால் மனம் சோர்வடையவில்லை. ஒரு காபியைக் கலக்கிக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தாள். திருச்சி கல்லூரியில் படிக்கும் அவளது தம்பி ரமேஷிடம் அன்னை பேசுவது தெளிவாகக் கேட்டது. இவளைப் பற்றிய விவாதம் தான் ஓடிக் கொண்டிருந்தது.
“இருக்கா இருக்கா.! ஸ்கூலுக்குப் போகலை. அப்பா காலையிலையே வெளிய போயிட்டார். சரி, சரி. நீ வா, பேசிக்கலாம்” என்று அன்னையின் ஒரு பக்க பதில்களைக் காதில் வாங்கிக் கொண்டாள்.


சற்றைக்கெல்லாம், இவளது கைப்பேசிக்கு ரமேஷிடமிருந்து அழைப்பு வரவும், ராகவி அழைப்பை ஏற்காமல் அமைதி காத்தாள். அவளுக்கு அந்த நிமிடம் யாருடனும் எதுவும் பேசத் தோன்றவில்லை. எப்படியும் தம்பி இன்று வீட்டிற்கு வந்துவிடுவான். அவன் அறிவுரைகளை அப்போது கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தாள். எழுந்து தன் அறைக்குள் செல்லத் தோன்றினாலும், திவாகரின் சொல்லை ஏற்று, ஹாலிலேயே அமர்ந்திருந்தாள்.
மதிய உணவு வேலை முடித்ததும், யாரும் சொல்லாமலேயே, ராகவி தனக்கான உணவை தட்டில் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்தார் தந்தை ரத்தினம். ராகவி தலை நிமிராமல் தட்டிலேயே கவனமாக இருந்தாள்.


“புவனா, இதைக் குடுத்துரு” என்று தந்தை ஒரு வெள்ளைக் கவரை நீட்ட, அதை புவனா வாங்கி வந்து ராகவியின் அருகே டேபிளில் வைத்துச் சென்றாள். ரத்தினம் மேலே எதுவும் பேசாமல் அமர்ந்துவிட, ராகவி, சாப்பிட்டு முடித்து கவரை எடுத்துக் கொண்டு தன்னறைக்குள் சென்றாள்.


கவரின் உள்ளே பள்ளியில் அவள் சமர்பித்திருந்த சான்றிதழ்கள் இருந்தன. “அப்பா, ஸ்கூலுக்குப் போய் சர்டிஃபிகேட்ஸ் வாங்கிட்டு வந்திருக்காரா? திவாவைப் பார்த்திருப்பாரோ? எதாவது பிரச்சனை ஆகியிருக்குமோ?” என்றெல்லாம் ராகவி எண்ணிக் கொண்டு, கைப்பேசியில் திவாகரை அழைத்தாள்.


நீண்ட அழைப்புக்குப் பிறகும் கைப்பேசி எடுக்கப்படவில்லை. அவன் அழைப்பை ஏற்கவில்லை என்றதுமே, ராகவிக்கு பயம் தொற்றிக் கொண்டது. “திவா, ஆர் யூ ஆல்ரைட்? க்ளாஸ்ல இருக்கியா? கால் மீ வென் ஃப்ரீ” என்றெல்லாம் குறுஞ்செய்திகளை அடுத்தடுத்து அனுப்பினாள்.


ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும், திவாவிடமிருந்து மறுமொழி இல்லை. இப்படி அவள் குறுஞ்செய்திக்குப் பதிலளிக்காமல் அவன் இருந்ததே இல்லையே! நெஞ்சு பதை பதைக்க, ராகவி மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைப்ப்பு விடுத்தாள். ஆனால் ஒரு முறை கூட அழைப்பு எடுக்கப்படவில்லை.
மாலை வரை அவ்வப்போது கைப்பேசியை எடுத்து அவன் பதில் வந்திருக்கிறதா என்று பார்வையிட்ட வண்ணம் இருந்தாள். மாலையில் கல்லூரியில் இருந்து வீடு வந்து சேர்ந்திருந்தான் ராகவியின் தம்பி ரமேஷ். வந்ததுமே, “எங்க அவ?” என்று கேட்டுக் கொண்டே அவளைத் தேடிக் கொண்டு வந்தான்.


அறைக்குள் வேகமாக வந்தவன், பால்கனியில் அமர்ந்திருந்த ராகவியின் அருகே அமர்ந்தான். “ஏ, ஏன் புள்ள இப்படியெல்லாம் பண்ணற? என்னாச்சுடீ உனக்கு? நம்ம வீட்டைப் பத்தி, அப்பா அம்மாவைப் பத்தியெல்லாம் கொஞ்சமாச்சும் யோசிச்சியா நீ?” என்று வினவியவனை சில நொடி கண்ணிமைக்காமல் பார்த்த ராகவி, அமைதியாக தலை கவிழ்ந்தாள்.


“எதாவது சொல்லுடீ. எதுவும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்? உன் மனசில என்ன தான் நினைக்கற?” என்று கேட்டான்.


“திவாகர் நல்லவன் ரமேஷ்” என்று மட்டுமே அவளால் பதில் சொல்ல முடிந்தது. “ராகவி. அந்த ஆள் நல்லவனாவே இருக்கட்டும். நம்ம வீட்டைப் பத்தி தெரிஞ்சும் நீ லவ் பண்ணறேன்னு சொல்லறது நியாயமேயில்லை. அப்பா வேற ஜாதி பையனுக்கே ஒத்துக்க மாட்டார். இதுல அந்த பையன் வேற மதம். எப்படி ஏத்துக்குவாங்க. நீ என்ன பண்ணப் போறன்னு தெரியாம வீட்டில எல்லாரும் மரண பீதியில இருக்காங்க தெரியுமா? அவன் கூட ஓடிப் போகப் போறியா? சொல்லு?” என்று ரமேஷ் வினவ,


அவனது பதட்டத்தைக் கண்டவளுக்கு சற்றே சிரிப்பு எழுந்தது. வீட்டினரின் நடவடிக்கை என்னவாக இருக்குமோ என்று இவள் அச்சப்பட்டுக் கொண்டிருக்க, இவள் ஓடி விடுவாளோ என்று அவர்கள் பயந்து கொண்டிருக்கின்றனர்.


“நான் ஓடியெல்லாம் போக மாட்டேன்டா. உன் அப்பாகிட்ட சொல்லிடு. அவர் சம்மதத்தோட திவாகரை கல்யாணம் பண்ணிக்குவேன். திவா நல்லவன்னு அவருக்கு புரிய வச்சு அவர் மனசு மாற காத்திருப்பேன். அவளோ தான். நான் எதுக்கு ஓடணும்? எங்க ஓடணும்? அதெல்லாம் எங்கையும் நான் போயிட மாட்டேன்” என்று தீர்க்கமாகக் கூறினாள்.


“அப்பா ஒத்துக்க மாட்டார். அப்போ என்ன பண்ணுவ?” என்று ரமேஷ் குதர்க்கமாகக் கேட்க, அவனை அழுத்தமாகப் பார்த்த ராகவி, “அவர் ஒத்துக்கற வரைக்கும் வெயிட் பண்ணுவேன்” என்று அதே அழுத்தமான குரலுடன் அவளும் பதில் கூறினாள்.


சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த ரமேஷ், ராகவி மேலே எதுவும் சொல்லாதது கண்டு எழுந்து சென்றுவிட்டான். திவா ஏன் பதில் மொழி அனுப்பவில்லை என்று சிந்திக் கொண்டு ராகவி அமர்ந்திருக்க,
“எனக்கு வேலை போயிடுச்சு.” என்று திவாவிடமிருந்து கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது. அவசர அவசரமாக அவனுக்கு அழைத்த ராகவி, பேசுவதற்கு முன்னர்,


“காலையில உன் அப்பா ஸ்கூலுக்கு வந்திருந்தார். கரஸ்பாண்டட்ட மீட் பண்ணி, நான் உன்னை லவ் பண்ணுன்னு சொல்லி ஹராஸ் பண்ணறதுனால உனக்கு ஸ்கூலுக்கு வர இஷ்டம் இல்லைன்னும், என்னை வேலையை விட்டு தூக்கலைன்னா, போலீஸ் கம்பிளைண்ட் பண்ணி, ஸ்கூல் பேரை கெடுத்திருவேன்னு சொல்லியிருக்கார்.”


“அய்யோ, திவா! என்ன சொல்லரீங்க?? அபாண்டமா அப்படி எப்படி சொல்லலாம்? நான் வேணா கரஸ்பாண்டண்ட் கிட்ட பேசறேன்.”


“அதெல்லாம் வேணாம் ராகவி. நான் பேசிட்டேன். சிட்யூவேஷனை நான் அவருக்குச் சொல்லிட்டேன். நாலு வருஷம் வேலை பார்க்கறேன் இங்க. அவருக்கு என்னைப் பத்தி தெரியும். அதனால அவர் இந்தப் பொய் புகாரை எல்லாம் நம்பலை”


“ஆனா வேலை போயிருச்சுன்னு சொன்னியே?”


“போகலை, நானா விட்டுட்டேன். எப்படியும் உங்க அப்பா நிம்மதியா இந்த ஸ்கூல்ல என்னை வேலை பார்க்கவிடமாட்டார்னு புரியுது. இங்கையே இருந்து பிரச்சனையை வளர்த்துகிட்டு இருக்கறதுக்கு வேற ஊர்ல வேலை தேடலாம்னு தோணுச்சு. கோகுலோட ஃப்ரெண்ட் சென்னையில ஒரு ஸ்கூல்ல பி.டியா இருக்கான். பெரிய ஸ்கூல். நல்ல சம்பளம். அங்க வேகன்சி இருக்கான்னு கேட்டுச் சொல்லறேன்னு இருக்கான்”.


“திவா, என் அப்பானால வேலை போகலையே. எனக்கு பயமா இருக்கு திவா. நீ இங்க வந்து பேசினப்போ, உன் வேலை,படிப்பு சம்பளம் இதெல்லாம் பத்தி கொஞ்சம் பெருமையா சொன்னேல, அதனால அவர் இப்படி பண்ணிடாரோ திவா?”


“ராகவி, அவர் என்ன வேணா பண்ணட்டும். நீயும் நானும் தெளிவா ஸ்டாராங்கா இருக்கற வரைக்கும் நமக்கு எதுவும் ஆகாது. பயப்படாத. சரியா? ரொம்ப நேரம் ஃபோன் பேசாத, நான் நைட் மெசேஜ் பண்ணறேன்.எனக்கு சில கால்ஸ் பண்ணனும். வேற சில பக்கமும் வேலை சம்பந்தமா பேசணும்.” என்று கூறிய திவாகர், கைப்பேசியை அணைத்தான்.


ராகவிக்கு இருந்த படபடப்பு அடங்க நிறைய நேரம் ஆயிற்று. தந்தையிடம் சென்று ஏன் இப்படியெல்லாம் பொய் புகார் கொடுக்கிறார் என்று கேட்க வேண்டும் எனத் தோன்றிய எண்ணத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். இவளாக இதைப் பற்றிப் பேச வேண்டும் என்பதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் அவருக்குத் தோதான வாய்ப்பளிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.


இரவு வரையிலும் இதே எண்ணமாக அமர்ந்திருக்க, இரவு உணவு உண்ணக் கீழே சென்ற சமயம் எதையோ சாதித்துவிட்ட உணர்வில் அமர்ந்திருந்த அவள் தந்தை ரத்தினத்தைக் காண வெறுப்பாக இருந்தது அவளுக்கு. “வீட்டை விட்டு ஓடிப் போய் இவங்க முகத்தில கரி பூசினா தான் என்ன?” என்ற குதர்க்கமான எண்ணம் அவளுக்கு உண்டானது அப்போது தான். தந்தையின் முகத்தில் படிந்திருந்த அந்த கோரமான புன்னகையைக் கண்ட நொடி ராகவியின் எண்ணம் இன்னமும் வலுபெற்றது.