உயிரில் மெய்யாக வா – 5

உயிரில் மெய்யாக வா 5

திவாகர் வீட்டிற்கு வருவான் என்று ராகவி சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனைக் கண்ட படபடப்பில் சட்டென எழுந்து சமையல் அறைக்குள் சென்றுவிட்டவள், ஒரு சொம்புத் தண்ணீரை மடமடவெனக் குடித்து தன் நெஞ்சை ஆசவாசப்படுத்திக் கொண்டாள்.

 அவளுக்கு வெளியே செல்லவே அவ்வளவு பயமாக இருந்தது. ஆனாலும், இப்போது ஹாலிற்குச் செல்லவில்லை என்றால் அது திவாகருக்குத் தான் இழைக்கும் துரோகம் என்று மனசாட்சி துன்புறுத்து, நெஞ்சு நிறைய பயத்துடன், ஹாலிற்குச் சென்றாள்.

“சொல்லுங்க தம்பி?” எனத் தன் அதிகாரக் குரலில் அவள் தந்தை ரத்தினம் வினவ, திவாகர் தன் கரகரக் குரலில் அழுத்தம் திருத்தமாகப் பேசத் துவங்கினான்.

“சார், நான் சொல்லறப் போற விஷயம் உங்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை. ஆனாலும் சொல்ல வேண்டியது என் கடமை. உங்ககிட்ட நான் கேட்டுகறது ஒரு அஞ்சு நிமிஷம் உங்களோட பொறுமையை மட்டும் தான்.” என்று பூதகமாகத் துவங்க, அடுக்களையில் இருந்து புவனாவும், வீட்டின் திண்ணையில் இருந்து அன்னமும், அவன் சொல்லப் போகும் விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஹாலில் வந்து அமர்ந்தனர்.

ரத்தினம் எதுவும் பதில் சொல்லாமல் அவனை ஆழமாகப் பார்த்தபடிக்கு அமர்ந்திருக்க, திவாகர், அவரது மெளனத்தைத் தனக்கான சம்மதமாகக் கருதி மேற்கொண்டு பேசலானான்.

“என் பேர் திவாகர் அந்தோனிராஜ். எம்.எஸ்.சி, பி.எட் மேத்ஸ்ல முடிச்சிருக்கேன். வீடு பாமணில. சொந்த வீடு தான். அப்பா, டெம்போ டிராவலர் வண்டி ஓட்டறார். அம்மா வீட்டில தான் இருக்காங்க. ஒரு அக்கா இருக்காங்க. கல்யாணம் ஆகிருச்சு, ஐஞ்சு வயசுல பொண்ணு இருக்கா.  கொஞ்ச வருஷத்திலேயே மாமா இறந்துட்டதால வீட்டோட இருக்காங்க. மாமா கவர்மெண்டில சுகாதாரத் துறையில வேலை பார்த்ததால அக்காவுக்கு அவர் வேலை கிடைச்சது.” என்று சொல்லி நிறுத்த,

“இதெல்லாம் ஏன் எங்ககிட்ட சொல்லிட்டு இருக்கீங்க?” என்று ரத்தினத்தை முந்திக் கொண்டு புவனா வினவினார். தன் மனைவியின் பேச்சைக் கண்களாலே நிப்பாட்டிய ரத்தினம், “மேலே சொல்லுங்க” என்பது போல திவாகரைப் பார்த்து சைகை செய்ய, திவாகர் தொடர்ந்தான்.

“நான் டெட் பாஸ் பண்ணியிருக்கேன். இன்னும் போஸ்டிங்க் வரலை. எப்படியும் ஒரு வருஷத்தில கவர்மெண்ட் ஜாப் வந்துடும்.” என்று நிறுத்தியவன், கண்களாலேயே சமையல் அறை வாசலில் நின்றிருந்த ராகவியைப் பார்க்க, அவள் தன்னிட்சையாக மெல்ல ஹாலிற்கு வந்து சேர்ந்தாள்.

“நானும்.. நானும், உங்க பொண்ணு ராகவியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம்.” என்று அவன் கூற ரத்தினத்தைக் காட்டிலும் புவனா ஆத்திரத்துடன் படபடத்தார்.

“என்ன சொல்லறீங்க தம்பி? எங்க வந்து என்ன பேசறீங்க?” என்று புவனா பதட்டத்தில் சற்றே சப்தமாக வினவ,

“அம்மா, உங்க பதட்டம் நியாயமானது. இந்த விஷயம் வெளி ஆட்கள் மூலமா உங்க காதுக்குக் வர்றது தப்புன்னு எனக்கு தோணிச்சு. நீங்க ராகவிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கறீங்கன்னு தெரியும். நான் உங்க ஜாதி இல்லைங்கறதைத் தவிர, என்கிட்ட வேற குறைகள் இல்லை. உங்க அளவுக்கு எங்க வீட்டில வசதி வாய்ப்புகள் இல்லை தான். இப்போவே நான் மாசம் முப்பத்தி ஐஞ்சாயிரம் சம்பாரிக்கறேன். வீட்டில டியுஷன் எடுக்கறேன். எங்க வீட்டுலையும் யாரும் என் வருமானத்தை நம்பி இல்லை. அதுவுமில்லாம எனக்கு கவர்மெண்ட் வேலை கிடைச்சுட்டா வசதி ஒரு பெரிய விஷயமில்லை.” என்று கூறி நிறுத்தியவன், ரத்தினம் மேலே பேசும் முன்னர்,

“ஒரு விஷயம் உறுதி படுத்திக்க விரும்பறேன். உங்க விருப்பமில்லாம உங்க பொண்ணைப் பிரிச்சு கூட்டிட்டுப் போறது என் நோக்கமில்லை. நீங்க  பார்த்துக்கற மாதிரியே உங்க பொண்ணை சந்தோஷமா நிம்மதியா கவனிச்சுக்குவேன். பெரியவங்க, நீங்க, நாலும் யோசிச்சு நல்ல பதிலா சொல்லுங்க. இவளோ நேரம் பொறுமையா குறுக்கிடாம என் பேச்சைக் கேட்டதுக்கு ரொம்ப  நன்றி சார்” என்று கை கூப்பியவன், சோஃபாவிலிருந்து எழுந்து கொண்டான்.

ரத்தினம் ஏதேணும் பேசுவாரோ என அவர் முகத்திலேயே கண்களைப் பதித்திருக்க, அவரோ மரியாதைக்குத் திரும்ப அவனுக்கு கை கூப்பியர், எதுவும் பேசாமல் எழுந்து நின்றார்.

திவாகர் பயத்துடன் நின்றிருக்கும் ராகவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பொதுவாக அனைவரிடம் விடை பெற்று மறுவார்த்தை பேசாமல் வீட்டை விட்டு வெளியேறினான். கேட்டின் அருகே வந்து பைக்கை உயிர்பித்து சில நூறு அடிகள் கடந்து மெயின் ரோட்டைப் பிடித்த பின்பு, வண்டியை ஓரமாக நிறுத்தி உடன் வந்த கோகுலை ஏறிட்டான்.

திவாகரின் சட்டை தொப்பலாக நனைந்திருந்தது. தன் கைக்குட்டையால் முகத்தை அழுந்தத் துடைத்தவன், ஆழ்ந்து பெருமூச்சுகள் எடுத்துக் கொண்டான்.

“டே, திவா, ஒ.கே வா? நிஜம்மாவே தைரியம்டா உனக்கு. அவங்க ஆளுங்க பத்தி தெரிஞ்சும் தைரியமா பொண்ணு கேட்டிருக்க போ, ஒரு வழியா பெருசா ராசாபாசம் இல்லாம நல்ல விதமாவே பேசி முடிச்சுட்ட” என்று நண்பனைப் பாராட்டும் விதமாகப் பேசினான் உடன் வந்திருந்த கோகுல்.

“ஏண்டா நீ வேற? என்னத்த நல்ல விதமா முடிச்சுட்டேன். இன்னைக்கு தான் இதெல்லாம் ஆரம்பிச்சிருக்கு. இனி எப்படி வேணா போகலாம். வெயிட் பண்ணிப் பார்ப்போம்”

“அதான் அவர் எதுவும் சொல்லாம அமைதியா விட்டுட்டாரே. அதுவே ஒரு நல்ல சகுனம் தானடா திவா.”

“அதென்னமோ உண்மை தான். என் மனசில இருக்கற பெரிய பாரத்தை இறக்கியாச்சு. இனி ஆகறதை பார்த்துக்கலாம். என் கவலை முழுக்க இப்போ ராகவி பத்தி தான். அவங்க அவளை என்ன பண்ணக் காத்திருக்காங்களோ? எப்படியும் அவ மனசைக் கரைக்க பலவிதமா பேசுவாங்க. ஒரு கட்டத்தில அப்பா அம்மா தான் முக்கியம்னு சொல்லிட்டா நான் அவளோ தான்! அவ எவ்வளவு ஸ்டாராங்கா இருப்பளோன்னு தான் பயமே” என்றவனுக்கு, ராகவியை பற்றிய நினைப்பு வந்ததுமே மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

வியர்வைகள் திரும்ப அரும்ப, ஒரு கணம் திரும்பச் சென்று அங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டு விடலாமா என்ற எண்ணமே பிரதானமாகத் தோன்றியது. இதை கவனித்த கோகுல்,

“என்ன திரும்ப போலாம்னு யோசிக்கறியா? கொன்னு போட்டிருவாங்க. ஏதோ ஒரு நல்ல நேரம் அந்த மனுஷம் எதுவும் பேசாம அனுப்பி வச்சுட்டாருன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுக்கோ.” என்று தேறுதல் கூறினான். கோகுலுக்கு ராகவியின் வீட்டின் அருகாமையில் தான் வீடு என்பதால், ஆலங்குடியின் பழக்க வழக்கங்களும், மனிதர்களும் அவனுக்கு அதிக பரிட்சயம் உண்டு.

கோகுல் சொன்னதை அசைபோட்ட திவாகர், “ம்ம்ம், சரி, பார்ப்போம். அவங்க என்ன முடிவுக்கு வர்றாங்கன்னு” என்று வண்டியை கிளப்பிக் கொண்டு வீடு சென்றாலும் அவன் மனம் என்னவோ இன்னமும் ராகவியின் வீட்டில் தான் சிக்கியிருந்தது. அவன் நினைவுகள் முழுக்கவே அங்கே ராகவி என்னவானாள், என்ன செய்கிறாள் என்று தெரிந்து கொள்வதிலேயே குறியாக இருக்க, கைப்பேசியின் வாட்ஸ்ஸைப்பை உயிர்பித்து ராகவியின் குறுஞ்செய்திக்காக காத்திருந்தான்.

அங்கே ராகவியின் வீட்டில், திவாகர் வெளியேறிய அடுத்த நொடி, புவனா தன் மகள் மீது பாய்ந்திருந்தார். “என்ன டீ வந்து சொல்லிட்டு போறான். பதில் சொல்லுடி. கண்டவனும் வந்து வீட்டுப் படியேறி பொண்ணு கேட்கற அளவுக்கு அவளோ இளப்பமா போயிட்டமா நாம? சொல்லுடி, எப்படி அசையாம நிக்கறா பாருங்க. உன் சம்மதம் இல்லாமயா அவனுக்கு இவளோ தைரியம் வந்திருக்கும்?” என்று ராகவியை நோக்கி கையை ஓங்க,

“ஏ, என்ன பழக்கம் இது? வயசுக்கு வந்த புள்ளைய கையை ஓங்கிக்கிட்டு” என்று மனைவியைத் தடுத்த ரத்தினம், எதுவும் பேசாமல் ராகவியைப் பார்க்க, ராகவி தலையைக் கவிழ்ந்து கொண்டு நின்றாள்.

“இதுக்குத்தான் வேலைக்கு அனுப்ப வேணாம்னு அப்போவே சொன்னேன். என் பேச்சை யாரு கேட்டா. படிச்சமா, வீட்டோட நாலு மாசம் வச்சிருந்தோமா, கட்டிக் குடுத்தோமான்னு இருக்கணும். மக ஆசைப்படறா, வீட்டில சும்மா இருக்கறதுக்கு கொஞ்ச நாள் வேலைக்குப் போட்டுமே இப்ப என்னன்னு கேட்டியே? என்ன ஆச்சு பார்த்தியா இப்போ? கண்ட கண்ட ஊர் பேர் தெரியாத பயல்லாம் தைரியமா வீட்டுப் படியேறி வந்து பேசற அளவுக்கு ஆகிப்போச்சு.” என்று புலம்புத் துவங்கினார் ரத்தினத்தின் அம்மா அன்னம்.

ராகவி நடப்பவற்றை காதில் போட்டுக் கொண்டு தந்தையிடமிருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தாள்.

“இங்க வா!” என்று அழுத்தமானக் குரலில் ராகவியை முன்னே அழைத்தார். ராகவியின் கால் தன் செயல்பாட்டை இழந்து விட்டது போல நின்ற இடத்திலேயே வேரூன்றிப் போயிற்று. நிறைய தயக்கத்துடன் தந்தையின் எதிரே சென்று நின்றாள் ராகவி.

அவளை அளவெடுக்கும் பார்வை பார்த்த ரத்தினம், “என் பதில் என்னன்னு உனக்கே நல்லாத் தெரியும். என்னால கண்ட சாதிப் பையனையெல்லாம் மாப்பிள்ளையா ஏத்துகிட முடியாது. நம்ம சொந்தக்காரங்க, சாதி சனம், ஊருக்குள்ள இருக்கற மரியாதை இதையெல்லாம் என்னால விட்டுக்குடுக்க முடியாது. உனக்கு ரெண்டு நாள் அவகாசம் தர்றேன். உன் முடிவை நீயே எடுத்துக்க, உன் ஃபோனைப் புடிங்கி வச்சு, உன்னை ரூம்ல பூட்டி வச்சு, அடிச்சு, உனக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க என்னால முடியும். அதுக்கு குறுக்க எவன் நின்னாலும் சும்மா விட மாட்டேன்.” என்று ரத்தினம் கூறி நிறுத்த, ராகவி வெளிரிப் போன முகத்துடன் தந்தையை ஏறிட்டாள்.

அவள் தந்தை தான் சொல்வதை அட்சரம் பிசகாமல் செய்ய வல்லவர் என்று ராகவி அறிந்திருந்தாள். தன்னால் திவாகருக்கு துன்பம் நேர்ந்துவிடுமோ என அவள் மனம் அச்சப்பட்டது. அவள் பயம் கண்களில் அருவியாக வழியத் துவங்க,

“திவாகர், திவாகர் ரொம்ப நல்லவன்ப்பா” என்ற வார்த்தைகள் திக்கித் திக்கி வெளிவந்தன. அவள் சொன்ன பதில் கேட்டு குரோதமாக அவளைப் பார்த்தவரின் கண்களைக் கண்டு தன் வாயை மூடிக் கொண்டாள் ராகவி.

“நிர்பந்தப்படுத்தி வேற கல்யாணம் செஞ்சு வச்சு நீ அங்க போய் வாழாமத் திரும்ப வர்றது எனக்குத் தோதுபடாது. இன்னைக்கு வியாழன். ஞாயிறு வரைக்கும் நல்லா யோசி. நாம யாரு?எப்படிபட்ட வாக்ழ்கை நீ வாழற இதெல்லாம் நல்லா யோசி. திங்கள் காலையில எங்க கூட குலதெய்வக் கோவிலுக்கு அவனை மறந்துட்டு முழு மனசோட வந்தியானா, என் பொண்ணு ராகவிக்கு சீரும் சிறப்புமா ஊரே மெச்சற வாழ்க்கையை நான் அமைச்சு குடுப்பேன். இல்லைன்னா, எனக்கு பொண்ணு கிடையாது. ஒரே ஒரு பையன் மட்டும் தான்னு உன்னை தலை முழுகிடுவேன். முடிவை நீயே எடுத்துக்க” என்று தீர்க்கமான குரலில் கூறிய ரத்தினம், அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியேறினார்.

ரத்தினம் வெளியே சென்றதும், புவனாவும், அன்னமும் அவளைச் சூழ்ந்து கொண்டனர். “சொன்ன பேச்சு கேளுடி ராகவி? உன்னை முழுசுமா நம்பித் தானே வேலைக்கு அனுப்புனோம். அதுக்கு நீ செய்யற கைமாறா இது? ஊருக்குள்ள நம்ம வீட்டுக்குன்னு ஒரு நல்ல பேரு இருக்கு. மரியாதை இருக்கு. மத்த வீட்டு பஞ்சாயத்துக்கு உன் அப்பாவை கூப்பிடறாங்க. அப்படிபட்டவர் வீட்டில ஒரு பிரச்சனையை இழுத்துட்டு வராதடீ.” என்றூ புவனா கேவலுடன் ராகவியின் மனதைக் கரைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்.

“அம்மா, நான் சொல்லறதை ஒரு நிமிஷம் காது குடுத்து கேளுங்கம்மா. திவாகர், ரொம்ப நல்லவன்ம்மா, அவன் கூட இருந்தா என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்மா..” என்று ராகவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பளீர் என்று அவள் கன்னத்தில் புவனாவின் கைகள் பதிந்திருந்தன. கன்னத்தைக் கைகளால் தாங்கிப் பிடித்த ராகவி, ஸ்தம்பித்துப் போய் அமர்ந்து கொண்டாள். அவள் கண்ணீர் கன்னத்தை கோடு போட்டுக் கொண்டிருக்க,

“ஐய்யோ, ஐய்யோ, என்ன வசியம் வச்சானோ?பணக்கார வீட்டுப் பொண்ணைப் பார்த்து வளைச்சுப் போட பார்க்கறான். அது புரிய மாட்டேங்குது இவளுக்கு. ஏண்டி என் வயத்தில வந்து பொறந்த? ஏன் இந்த வீட்டில பொறந்த?” என்று தன் வயிற்றில் அடித்துக் கொண்டு அழும் அன்னைய எப்படிச் சமாதானம் செய்வது என்று தெரியாமல் அழுதபடிக்கே அமர்ந்திருந்தாள் ராகவி.

“என் மகன் ராஜா மாதிரி ஊருக்குள்ள தலை நிமிர்ந்து நடப்பானே! ரத்தினம் ஐயா சொன்னா சரியா இருக்கும்னு ஊரு பயலுகளும் சாதி சனமும் மரியாதையா நடத்துமே, இந்த பாவி மகளால என் மகன் தலைகுனியனுமா? பொம்பள புள்ளைய எதுக்கு வேலைக்கு அனுப்பறன்னு கேட்டதுக்கு என்கிட்ட சண்டை வந்திக. இன்னைக்குப் பாரு நெஞ்சில நெருஞ்சியா குத்திக் கிழிக்கறா உன் மக! ஒத்த புள்ளைய ஒழுங்கா வளர்க்கத் துப்பில்லாதவ நீ” என்று தன் ஆதங்கத்தை புவனாவின் மேல் திருப்பியிருந்த அன்னம், இது தான் சாக்கென்று மருமகளை வசைபாடத் துவங்கியிருக்க, ராகவி செய்வதறியாது தவித்துப் போனாள்.

தந்தை சொன்ன சொல்லிற்கு மற்றாக நடந்து கொள்ள மாட்டார் என்று தெரிந்திருந்த போதிலும், எப்படியேனும் பெற்றோரின் மனதை மாற்றி, அவர்களைச் சம்மதிக்க வைக்க இயலுமா என்ற நப்பாசை அவள் மனதின் ஓரத்தில் இருந்தது. ஆனால், அது சாத்தியம் இல்லை என்ற உண்மையும் அவளுக்குப் புரியத்தான் செய்தது. இரண்டில் ஒன்று மட்டுமே கிடைக்கும் என்பது தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்ட ராகவி, ஒரு முடிவை எட்டியிருந்தாள்.

நீண்ட நேரத்திற்குப் பின், அன்னையும், பாட்டியும் எழுந்து அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட, ராகவி மெல்லத் தன் அறைக்கு வந்து சேர்ந்தாள். அது வரையிலும் சார்ஜில் சொருகியிருந்த கைப்பேசியை எடுத்தவள், திவாவிடமிருந்து வந்த இருபதிற்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளை படிக்காமல், ஆழ்ந்த பெருமூச்சை எடுத்துக் கொண்டு தெளிந்த மனதுடன் நேரே அவனுக்கு அழைத்தாள்.