உயிரில் மெய்யாக வா – 4

உயிரில் மெய்யாக வா 4

அடுத்த தினம், காலை எப்போதடா பள்ளி செல்வோம் என்று பரபரப்புடன் இருந்தாள் ராகவி. திவாகர் பிரிந்து சென்றதும், ராகவிக்குப் பயம் தொற்றிக் கொண்டது. “என்ன செஞ்சுட்டு இருக்க ராகவி? அப்பா பத்தியும், உன் வீடு பத்தியும் நல்லா தெரிஞ்சும் நீ இப்படிப் பண்ணறது சரியில்ல. வீட்டில தெரிஞ்சதுன்னா உன்னை வெட்டிப் போடுவாங்க. இல்லைனா திவாவை ஏதாவது செஞ்சிடுவாங்க.” என்று மனம் பதறத் துவங்கியது.

கையிலிருந்த சிலையினை தன் பற்று கோலாக எண்ணி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அன்றைய இரவு திவாகர், தான் பேருந்து ஏறிக் கொண்டேன் என்றும், இவள் என்ன செய்கிறாள் என்றும் தெரிந்து கொள்ள அழைத்திருந்தான்.

“நாங்களும் பஸ் ஏறிட்டோம். நேரா ஹோட்டல் போயி வெகேட் பண்ணிட்டு, சாப்பிட்டுட்டு கிளம்பிடுவாங்கன்னு சொல்லியிருக்காங்க.”

“ராகவி.. என்னாச்சு? ஒரு மாதிரி மெசேஜ் பண்ணற? என்னாச்சும்மா?” என கரிசனத்துடன் கேட்க, ராகவிக்குக் கண்களை முட்டிக் கொண்டு வந்தது. அவள் சுற்றியிருக்கும் மாணவர்கள் மற்றும் பிற ஆசிரியர்களைக் கருத்தில் கொண்டு ,”இல்லை, ஒண்ணுமில்ல,” என்று கூறிச் சமாளிக்க எண்ணினாள். ஆனாலும் அவன் விட்டானில்லை.

“இதப்பாரு, நான் பார்த்துக்கறேன்னு நான் வாய் வார்த்தைக்காக சொல்லலை. சரியா. எல்லா பிரச்சனையையும் நான் ஹேண்டில் பண்ணிக்கறேன். நீ எதைப் பத்தியும் கவலைப்படாத” என்று அவன் சொல்லும் போதே,

“கவலைப்படாம எப்படி திவா?எங்க வீட்டில..” என்று மேலே சொல்ல இயலாமல் திணறினாள் ராகவி.

“உங்க வீட்டில ரொம்ப ஜாதி பார்ப்பாங்க. என்னை நிச்சயமா ஒத்துக்கமாட்டாங்க. அதெல்லாம் எனக்கும் தெரியும் ராகவி. நான் உங்க வீட்டில வந்து பேசி, உங்க அப்பா அம்மா சம்மதத்தோட உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன். சரியா? அப்பா அம்மா பார்த்து வைக்கற எல்லா கல்யாணமும் நல்லபடியா இருக்குதா? இல்லையே!”

“எங்க வீட்டில அப்பா எப்படி ரியாக்ட் பண்ணுவார்னு உங்களுக்குத் தெரியலை திவா”

“ஏன் தெரியாம? உன்னை அடைச்சு வச்சு, உனக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சாலும் ஆச்சர்யப்பட்றதுக்கு இல்லை. உங்க சைட் ஆளுங்க எவளோ ஜாதி பார்ப்பாங்கன்னு எனக்குத் தெரியும் ராகவி. இதெல்லாம் நான் யோசிக்காம உனக்கு ப்ரபோஸ் பண்ணியிருப்பேன்னு நினைக்கறியா?”

“தெரிஞ்சும் நான் இப்படி நடந்துக்கறது, தப்பு தானே திவா. என்னோட ஆசைக்காக எவளோ பேர் கஷ்டப்படணுமான்னு நினைச்சா ரொம்ப வேதனையா இருக்கு.”

“நான் இதெல்லாம் நிறைய யோசிச்சேன் ராகவி. ஆனா, காதல், ஜாதி பார்த்தும், மதம் பார்த்தும் செய்யற விஷயமில்லை. ஒரு நாள்ல உன்னைப் பத்தி நான் நினைக்காத நிமிஷங்கள் ரொம்ப குறைவு. உனக்கும் அப்படி தோணியிருக்குன்னு தெரிஞ்சுகிட்டு தான் நான் தைரியமா பேசினதே! நான் தான் சொல்லறேன்ல, உங்க அப்பா அம்மாகிட்ட நான் வந்து பேசி புரிய வைப்பேன். அவங்களை சம்மதிக்க வேண்டியது என் கடமையும் கூட.” என்ற திவாகரின் மீது காதலைத் தாண்டி ஒரு நன்மதிப்பு உண்டாகியது ராகவியின் மனதில்.

அன்றைய நாள் இரவு முழுக்கவே, அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டே வந்தான். அவனுடன் பேசும் போது தோன்றும் தைரியம், அவன் குறுஞ்செய்தி அனுப்பாத நிமிடத்தில் கரையத் துவங்கும். திரும்பச் சலிக்காமல் அவளுக்கு தேருதல் சொல்லுவான்.

அடுத்த தினம், பேருந்து பள்ளி வாயிலைத் தொடும் முன்னரே ஓரத்தில் நின்றிருந்த அவளது தந்தையின் கார் கண்ணில் படவும் ராகவியின் கவலை பன்மடங்கு உயிர்ந்திருந்தது. அத்தோடு பள்ளியில், மாணவர்களின் பெற்றோர், இன்பச் சுற்றுலா முடித்து வரும் பிள்ளைகளை அழைத்து வரக் காத்திருக்க, அவர்களுடன் திவாகரும் நின்றிருந்தான்.

அவனைக் கண்டதும் அவளுக்குப் பெரிய தெம்பு தோன்றியது. கண்களாலேயே அவனிடம் முக மலர்ச்சியைக் காட்டி, விடை பெற்று, தன் தந்தையுடன் காரில் ஏறிச் சென்றாள் ராகவி.

திவாவுடனான நட்பும் காதலும், புரிதலும் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் இருக்க, இருவரும் பேசிப் பழகி ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகியிருந்தது. இந்த ஆறு மாத காலமும் புன்சிரிப்புகளாலும், பார்வை பரிமாற்றங்களாலும், மற்றவர் அறியா வண்ணம் நோட்டமிடும் கள்ளப் பார்வைகளாலும் அந்தி நேர தென்றாலாய் மனதை லயிக்கச் செய்திருந்தது இருவரது காதல். பள்ளியில், பி.டி மாஸ்டர் கோகுலைத் தவிர, வேறு யாருக்கும் விஷயம் தெரியாது.அதனால் மற்றவருக்கு சந்தேகம் வந்துவிடாத படிக்கு நடந்து கொண்டனர்.

“ஹாய் ராகவி மிஸ், குட் மார்னிங். பாய் மிஸ்.” என்பன போன சம்பிரதாய வார்த்தையாடல்கள் மட்டுமே இருவருக்குள்ளும் நடந்தேறும்.

“ராகவி, நார்மலா இரு ப்ளீஸ். நாம இங்க பொறுப்பான பதவில இருக்கோம். நிறைய பேருக்கு நாம ரோல் மாடல். சோ, ஸ்கூல்ல எந்த விதமான டிஸ்டர்பென்சும் இல்லாம, நார்மலா கேசுவலா இரு. நான் உன்னை எந்த விதத்திலேயும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்று முன்னரே அறிவுறுத்தியிருந்தான் திவாகர். சொன்ன சொல் மாறாமல், அதே போன்று நடந்தும் கொண்டான்.

“அதுவுமில்லாம, உனக்கு இந்த வேலைக்குப் போறது அத்தியாவசியம் இல்லை ராகவி. ஆனா, எனக்கு அப்படீல்லை தானே!இந்த வேலை ரொம்ப முக்கியம். அதனால, அதுக்கு பிரச்சனை வர்ற மாதிரி நாம நடந்துக்க வேணாம். நாம வெளியில ஊர் சுத்தாத வரைக்கும் வீட்டில மாட்டிக்க மாட்டோம். தினமும் ஸ்கூல்ல பார்த்துக்கறோம், எப்பவும் ஃபோன்ல மெசேஜ்ல ஒண்ணாவே கூட இருக்கோம். சோ, இது எதையும் நாம கெடுத்துக்க வேணாம்.” என்று திட்டமாகக் கூறியிருந்தான்.

ஆறேழு மாதங்கள், இப்படியே கழிந்திருக்க, ராகவியின் வீட்டில் திரும்ப அவளது திருமணப் பேச்சுகள் துவங்கியிருந்தன. இம்முறை சற்றே தீவிரத்துடன் பேசிக் கொள்வது போலப்பட்டது.

“குலதெய்வம் கோவில்ல போய் ஜாதகம் வச்சு கும்பிட்டுட்டு, ஜாதகம் வெளிய விடலாம் புவனா. வர்ற வெள்ளிகிழமை போற மாதிரி ஏற்பாடு செஞ்சிடு.” என்று தந்தை அன்று இரவு உணவருந்தும் வேளையில் சொல்லியிருந்தார். ராகவியும் அவர்களுடன் தான் அமர்ந்திருந்தாள். தந்தையின் இந்த வார்த்தையைக் கேட்ட பின்னர், அவள் தொண்டையில் ஒரு கவளம் அடுத்து மேலே இறங்கவில்லை.

“ஐயோ ஐயோ” என்று நெஞ்சு அடித்துக் கொண்டது. அதே படபடப்பில், தன் அறைக்குள் சென்றதும், முதல் வேலையாக திவாகருக்குச் செய்தி தெரிவித்தாள். அவனோ, “ஹே, ரிலாக்ஸ்.. நான் பார்த்துக்கறேன்” என்று மட்டும் பதிலனுப்பினான்.

ராகவியின் மனம் பதைபதைக்கத் துவங்கியது. “அதற்குள்ளாகவா பார்க்கத் துவங்குவார்கள்?” என்ற கேள்வியும், “அவர்கள் மீது தவறென்ன?ஆறேழு மாதத்திற்கு முன்பாகவே எழுந்த பேச்சு தானே. அவர்கள் கடமையைச் செய்ய அவர்கள் நினைக்கிறார்கள்.” என்று சொல்லி தன் பதட்டத்தைத் தணிக்க முற்பட்டாள்.

திவாகரி நிறைய முறை அழைத்தான். ஆனால் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்தில் கைப்பேசியை எடுக்கவேயில்லை ராகவி. உறக்கம் கொஞ்சமும் வராமல் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்திருக்க, இவள் அறையின் ஜன்னலை சுரண்டும் சத்தம் கேட்டு எழுந்து அமர்ந்தாள். சுற்றுலும் தென்னை மரங்கள்  சூழ்ந்திருக்கும் தனி வீடு என்பதால், சிற்சில வேளையில் திருடர்கள் நடமாட்டம் இருக்கும் தான். அதனால் கதவு, ஜன்னல் என அனைத்திற்கும் கிரில்லுடன் கூடிய இரட்டைப் பாதுகாப்பு உண்டு.

கண்ணாடி ஜன்னலின் கதவு சுரண்டப்பட, அதே நேரம் இவளது கைப்பேசியும் அழைத்தது. திவாகர் தான் அழைத்திருந்தான். இவள் அறையில் இரண்டு கதவுகள் உண்டு. ஒன்று வீட்டிற்குள் அழைத்துச் செல்லும், மற்றொன்று பால்கனி கதவு.

“என்னாச்சு திவா, இந்த நேரத்தில?” என கைப்பேசி அழைப்பை ஏற்றவள் வினவ, “பால்கனி கதவைத் திற” என்று பதில் வந்தது. ராகவி குழப்பத்துடன் பால்கனியின் கதவுகளைத் திறக்க, வராண்டாவின் கைப்பிடியின் மூலம் கீழிருந்து ஏறி மேலே வந்தான் திவாகர். அவனைக் கண்டதும் ஆச்சர்யத்தில் பேச்சு வரவில்லை அவளுக்கு. யாரும் பார்த்துவிடும் முன்னர், அவனை உள்ளே அறைக்குள் அனுமதித்து, கதவை சாத்தினாள்.

அவள் அறையில் அவன் நுழையவுமே, அவளுக்கு அப்போது வரையிருந்த படபடப்பு வெகுவாகக் குறைந்து ஒரு வித தெம்பு படர்ந்தது. “இந்த நேரத்தில எப்படி வந்தீங்க? மணி ராத்திரி ஒண்ணாகப் போகுது” என்று வினவியவள், அவன் அருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினாள்.

அதை வாங்கி கடகடவெனக் குடித்தவன், “தேங்க்ஸ்” என்று பாட்டிலை நீட்டிவிட்டு, அவளது அறையை நோட்டம் விட்டான். அழகான பெரிய கட்டில், அதன் பக்கம் சிறிய மேஜை. அதில் சிற்சில புத்தகம், இவன் கொடுத்த சிலை, பேனா பென்சில் கொண்ட கப், அறையின் மற்றொரு பக்கம், மர வார்ட்ரோப், முழு நீளக் கண்ணாடி என அந்தப் பெரிய அறை விசாலமாகவே இருந்தது. மெல்லமாக ஓடிக் கொண்டிருந்த குளிரூட்டியின் ஒலியும், ஒரு நீல வண்ண விடிவிளக்கின் ஒளியும் அந்த அறையை வியாபித்திருக்க,

“உன் ரூம், என் வீட்டோட பாதி அளவுக்கு இருக்கு” என்று சொல்லிக் கொண்டே நடை பயின்றான் திவாகர்.

“தோட்டத்து நடுவுல கட்டினதுனால அப்படி பெருசா கட்டியிருக்காங்க. உட்காருங்க. நடந்துட்டே இருக்கீங்க. பைக் எங்க?” என்று வினவினாள். அவன் வசதி பற்றி பேசும் போதெல்லாம் என்ன காரணத்தினாலோ அந்தப் பேச்சைத் தவிர்த்து வேறு பேசவைப்பாள். இப்போதும் அதையே செய்தாள்.

“உங்க வீட்டுக்கு பின்னாடி கொஞ்ச தூரம் தள்ளி நிறுத்தியிருக்கேன். அதான் நிறைய மரமா இருக்கே. இருட்டுல தெரியாது பைக் நிக்கறது” என்றவன் தாவி ஏறி அவள் கட்டிலில் அமர்ந்து அருகே தட்டி,”இங்க வா” என்று அழைத்தான். அவனைப் பார்க்கும் வரையிலும் அவள் மனதில் இருந்த படபடப்பு விடைபெற்றுச் சென்றிருக்க, ஒரு வித மயக்கத்துடன் அவன் அருகே கட்டிலில் கால் நீட்டி அவன் அருகே அமர்ந்து கொண்டாள். அவன் தோளில் தலையை வாகாச் சாய்த்துக் கொள்ள, ஒரு கையால் அவள் கைகளைப் பிடித்துக் கொண்ட திவாகர், மறு கையால் அவளைத் தோளுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவன் அருகாமை அவளுக்கு நிறைய பாதுகாப்பு உணர்வைத் தோற்றுவித்தது. “என்ன பயம் உனக்கு? ஏன் ஒரு மெசேஜ்க்கு கூட ரிப்ளை பண்ணலை. நான் கொஞ்ச நேரத்தில பயந்து போயிட்டேன் தெரியுமா?” என மெல்லிய குரலில் கிசுகிசுத்தான்.

“வெள்ளிகிழமை கோவில்ல போய் ஜாதகம் வச்சு சாமி கும்பிடப் போறாங்க. நம்மளைப் பத்தி என்னாகும்னு யோசிச்சாலே பயமா இருக்கு திவா.”என்று இன்னமும் அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டாள். திவாகரின் கைகள் ராகவியைத் தன்பால் இன்னமும் பத்திரமாக இறுக்கிக் கொண்டன.

“இதெல்லாம் எதிர்பார்த்தது தானே ராகவி. நாம ஃபேஸ் பண்ணித் தானே ஆகணும். நான் பார்த்துக்கறேன் ராகவி. சரியா.”

“எப்படி பார்த்துக்குவீங்க. வீட்டை விட்டு ஓடிப் போய்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டேன் திவா. இது உங்களுக்கே நல்லா தெரியும். என்னை அப்படி வரச் சொல்லி எப்பவும் கூப்பிடாதீங்க. நான் நிச்சயமா வரமாட்டேன்” என்று மெல்லிய குரலில் அவள் சொன்னாலும், அவள் குரல் உறுதியாக ஒலித்தது.

“தெரியும். அப்படி உன்னை வரச்சொல்லி நானும் எப்பவும் வற்புறுத்த மாட்டேன். இன்னைய தேதியில, நிறைய அரேஞ்சுடு மேரேஜஸ் ஃபெயில்யரா ஆகுது. ரொம்ப லேவிஷா கோடி கணக்குல செலவு பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கறாங்க. ஆனா, பொண்ணு அட்ஜஸ்ட் பண்ணிக்காம, ரெண்டு மூனு மாசத்தில வீட்டுக்கு வந்திடுது. சோ, உன்னை நான் நல்லா பார்த்துக்குவேன்னு நம்பிக்கை உங்க அப்பாவுக்கு வந்துட்டா போதும். நிச்சயமா அவர் நம்மளை ஏத்துக்குவார்.”

“எங்க அப்பா அப்படியெல்லாம் ஏத்துக்கக் கூடிய ஆளில்லை திவா. ஊர்ல மரியாதை போயிடும். சொந்தகாரங்க ஏளனமா பார்ப்பாங்கன்னு யோசிக்கறவர். அவர் எப்படி சம்மதிப்பார் திவா?”

“எல்லாம் பேசற விதமா பேசினா யோசிப்பாங்க ராகவி. உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே. உன் வீடு மாதிரி ரொம்ப வசதி வாய்ப்புகள் இல்லாட்டியும், நான் உன்னை நல்லாவே பார்த்துக்குவேன். அது கியாரண்டி. இந்த மனசு திருப்தியோட நம்ம வாழ்க்கை அழகா இருக்கும் பாரேன்” என்று அவன் கரகரகுரலில் அவளுக்கு ஆறுதல் கூற, ராகவி இன்னமும் அவன் தோளில் ஒண்டிக் கொண்டாள். அவள் தலையில் ஆதுரமாக முத்தம் வைத்தன், அவள் மேலே திரும்பி, அவன் முகத்தைப் பார்க்க, அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

அவன் ஸ்பரிசமும், சில்லிட்டிருந்த அவன் உதடுகள் அவள் நெற்றியில் அழுந்தப் பதிந்த விதமும் ராகவிக்கு சிலிர்ப்பைத் தந்தது. எம்பி, அவன் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தவள்,”ஐ லவ் யூ திவா. லவ் யூ சோ மச்” என்று ஆத்மார்த்தமாகக் கூறினாள்.

அவள் முத்தத்திற்குப் பரிசாக, அவளை இன்னமும் தன்னுடன் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். அந்த நேரத் தனிமையை உபயோகித்து, அவளது இளவான மனநிலையைத் தனக்குச் சாதமாகப் பயன்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லாமல், அவன் கண்ணியமாக நடந்து கொண்டது ராகவிக்கு பெருவியப்பாக இருந்தது.

“ஜாதி, மதத்தை விடவும் மனிதம் முக்கியம் என்று நினைக்கும் ஆட்களில் என் திவாவும் ஒருவன்” என்ற எண்ணம் அவளுக்கு பெருமிதத்தைக் கொடுத்தது. மூன்று மணி வரையிலும் அப்படியே கட்டிக் கொண்டு அமர்ந்திருந்து, பல கதைகள் பேசி, அவளைச் சமாதானம் செய்து தேற்றினான்.

மனமில்லாமல் அவளை விட்டுப் பிரிந்த திவாகர், வந்த வழியே அதிகம் சப்திக்காமல் திரும்பச் சென்றிருந்தான். அந்த தினம், விடிந்தால் வியாழக்கிழமை. அடுத்த நாள் குல தெய்வம் கோவிலுக்குச் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பள்ளியில் அன்றைய தினத்தை திவாகரின் நீங்காத நினைவுகளுடனும், அவனின் கனிவான பார்வைகளுடனும், சின்னச் சிரிப்புகளுடனும் கழித்தாள் ராகவி. வியாழன் மாலை, வழக்கம் போலத் தந்தையுடன் வீட்டிற்கு வந்தவள், காபி அருந்திக் கொண்டு ஹாலில் அமர்ந்திருக்க, அவளே சற்றும் எதிர்பாரா வண்ணம், தன் நண்பன் கோகுலுடன் அவள் வீட்டிற்கு வந்திருந்தான் திவாகர்.

திவாகரைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே சோஃபாவில் அமர்ந்தார் ராகவியின் தந்தை.

“என்ன விஷயம் தம்பி?” என எடுத்த மாத்திரத்திலேயே சற்றே கறார் குரலில் வினவியவரிடம், தொண்டையைக் கணைத்துக் கொண்டு பேசத் துவங்கினான் திவாகர்.