உயிரில் மெய்யாக வா – 3

உயிரில் மெய்யாக வா 3

திவாவுடனான விழி மொழி சம்பாஷனைகள் நடந்தேறியபடிக்கே இருக்க, பள்ளியில் மாணவர்களை கொச்சினுக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்வதாக ஏற்பாடானது.

கொச்சியில் “வண்டர்லா” என்ற விளையாட்டுப் பூங்காவிற்கு ஏழாம், எட்டாம் வகுப்பு மாணவர்களை அழைத்துச் செல்ல அந்தந்த வகுப்பாசிரியர்கள் உடன் செல்ல வேண்டும் என்று முடிவானது.

“எஞ்சாய் பண்ணிட்டு வாங்க. என்னால தான் ஜாயின் பண்ண முடியாது.” என்று திவாகர், அன்று ஆசிரியர்களின் அறையில், சமூகவியல் ஆசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் பேசிய பொழுது கண்கள் மறவாமல் ராகவியின் பால் தொட்டுத் தொட்டு மீண்டது.

“அட, நீங்க ஹையர் செசண்டரி கிளாஸ் டீச்சர். எங்களை மாதிரி பால்வாடி புள்ளைக கூடவா வருவீங்க. நீங்களாம் வேற லெவல் திவாகர்..” என்று சீண்டலாக பதிலளித்தார் சமூகவியல் ஆசிரியர். அவனுமே அவருக்குச் சிரிப்புடன் பதில் மொழி அளித்தாலும், அவன் கண்கள் என்னவோ மீண்டும் மீண்டுமாய் ராகவியின் முகத்தில் படிந்து, அவள் முகத் தோற்றத்தையும், கண்களில் தோன்றிய பதட்டத்தையும், ஏக்கத்தையும் ஆராய்ச்சி செய்தபடிக்கே இருந்தது.

அவளுக்குமே, “ திவா வரமாட்டானா?” என்று ஏக்கமாக இருந்தது. அவன் பேச்சை கவனிக்காமல் இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அவன் வாய்மொழிக்கு ஏற்ப தன் முகபாவனை மாறுகிறதோ என்ற அச்சம் காரணமாக தலையை நிமிர்த்தாமல் புத்தகங்களைத் திருத்திக் கொண்டிருந்தாள்.

இரு தினங்கள், பள்ளி முழுக்க இன்பச் சுற்றுலா பற்றிய பேச்சு தான். மாணவர்கள் படு உற்சாகத்தில் இருந்தனர். ஆசிரியர்கள் பெற்றோரிடம், அனுமதிக்கடிதம் வாங்குவது, பணம் வாங்குவது, அதை பத்திரப்படுத்துவது என அந்த இரு தினங்களும் சடுதியில் கழிந்தது.

சுற்றுலா தினம், அனைவரும் மாலையே பள்ளிக்கு வந்து குழுமியிருக்க, ராகவி தன் தந்தை மற்றும் தம்பியுடன் வந்திருந்தாள். குழந்தைகளை வழியனுப்ப மற்ற ஆசிரியர்களும் பெற்றோரும் என பள்ளி வளாகம் கலகலப்பாகக் காணப்பட்டது. ராகவியின் கண்கள் அவ்வபோது திவாகர் எங்கிருக்கிறான் என்று தேடுவதிலேயே இருந்தது.

அவனும் அவள் விழி வீச்சிற்குக் கட்டுப்பட்டவனாக அவள் கண் பார்வையை விட்டு மறையாமல் நின்றிருந்தான். “அவன் வரவில்லையே” என்ற ஏக்கமும், “கடைசி நேரத்தில் எப்படியாவது அவன் வந்துவிடமாட்டானா?” என்ற பரிதவிப்பும், “இன்னும் இரு தினங்களுக்கு அவனைக் காண மாட்டோமே” என்ற கவலையும் அவள் மனதில் அலைமோதின. இத்தனை நாட்கள் இவனில்லாமல் தான் எப்படி இருந்தோம்? இந்த இரு தினங்களைத் கடத்துவது எப்படி? நான் இல்லையென்று இவன் என்னைத் தேடுவானா? இல்லை நான் தான் மக்கு போல இவனுக்காக ஏங்குகிறேனா?” என்றெல்லாம் பலப்பல எண்ணங்களுடன் ராகவி சுற்றுலாவிற்குப் பயணப்பட்டாள்.

ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஏறிக் கொண்டபின், வண்டிகள் கிளம்பியிருந்தன. பேருந்து ஏறிய சிறிது நேரத்திற்கெல்லாம், ராகவியின் மனதை வெறுமை சூழ்ந்து கொண்டது. வண்டியில் ஏறும் சமயம் வரையும் உடன் நின்றிருந்த தந்தையும், தம்பியும்  மறைந்து போய்விட திவாகரின் பிம்பம் மட்டுமே அவளுள் வியாபித்திருந்தது.

கைப்பேசியை எடுத்து, பள்ளியின் வாட்ஸ்ஸப் குழுவில் இருக்கும் அவன் எண்ணைத் திறந்து, அவன் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டு தன் மனதைச் சாந்தப்படுத்த முனைந்தாள். அவன் ஆன்லைனில் இருப்பது அவளுக்கு பெரிய ஆறுதலாக, ஏதோ அவனே உடனிருப்பது போலத் தோன்றியது.

முதல் தினம் “வண்டர்லா” என்று அழைக்கப்படும் விளையாட்டுப் பூங்காவில் ஆடிக் களைத்து ஹோட்டல் வந்தனர். வீட்டினரிடம் பேசிவிட்டு, அன்றைய தினம் எடுத்த புகைப்படங்கள் ஒன்றிரண்டை வாட்ஸ்ஸப் ஸ்டேட்டஸ்ஸில் வைத்தாள் ராகவி.

அவள் புகைப்படத்தை வைத்த அடுத்த நிமிடம், “நைஸ் பிக்சர்ஸ்.” என்று திவாகரிடமிருந்து செய்தி வரவும் காலை முதல் இருந்த சலிப்பு மனநிலை முற்றிலுமாக விடைபெற்றுப் போயிருந்தது. “அச்சோ, இவனும் என்னை மிஸ் பண்ணறானா? நான் எங்கேன்னு தேடியிருப்பானா? நான் ஃபோட்டோ வச்ச அடுத்த நிமிஷம் மெசேஜ் பண்ணியிருக்கானே” என்று உள்ளூரத் துள்ளிக் குதித்த ராகவி, “தேங்கியூ சார்” என்று பதில் சொடுக்கினாள்.

“சார்?” ஆஹ்” என்று கேட்டு, அதனோடு ஒரு சிறு குழந்தை அழுவதைப் போன்ற பொம்மையும் அனுப்பினான். அதைக் காணவும் ராகவிக்குப் புன்னகை அரும்பியது.

திவாகர் இப்படித் தனிப்பட்ட முறையில் அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவது இதுவே முதல் முறை. அதிலேயே பரவசமடைந்தது அவள் மனம். மேலே என்ன பேசுவது என்று ராகவி யோசித்துக் கொண்டிருக்கையில், “ஆர் யூ எஞ்சாயிங்?” என்று அடுத்த செய்தி வந்தது.

“நாட் மச்” என்று செய்தி தட்டியவள், அதை அவசரமாக அழித்துவிட்டு, “எஸ்” என்று அனுப்பினாள்.

சுற்றுலா வந்துவிட்டு, அது மகிழ்வாக இல்லை, நீ உடன் இல்லாமல் இருப்பதால் எனக்கு உவப்பாக இல்லையோ என்னவோ என்றெல்லாம் அவனிடம் சொல்லிவிட முடியாதே!

அவள் மெளனம் காக்க, “சாப்பிட்டாச்சா?” என்று அடுத்து அனுப்பினான். “எஸ்” என்று மறுமொழி தட்டினாள் ராகவி. “பதிலுக்கு என்னைக் கேட்க மாட்டீங்களா?” என்று அடுத்து அனுப்பினான்.

“சாப்பிட்டாச்சா திவாகர் சார்?” என்று இவள் தட்டிவிட்டு, திரும்ப “சார்” என்பதை அழித்து பின் அவனுக்கு அனுப்பினாள்.

“இல்லை இன்னும் சாப்பிடலை ராகவி.” என்று பதில் வந்தது. அவன் வாய் வார்த்தையில் அவள் பெயரைத் தட்டியிருப்பது படிக்க ராகவிக்கு சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சி உண்டானது.

பள்ளியில் பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், “ராகவி மிஸ்” என்று மரியாதையாகவே அழைத்துப் பழக்கப்பட்டுப் போயிருக்க, வெறும் ராகவி என அவன் அழைத்தது தித்திக்கவே செய்தது. இதை எண்ணிக் கொண்டு அவள் கைப்பேசியை வெறித்தவண்ணம் அமர்ந்திருக்க,

“மணி  பத்தரை ஆகிடுச்சே இன்னும் ஏன் சாப்பிடலைன்னும் கேட்க மாட்டீங்களா? ஒருவேளை என் மெசேஜ் டிஸ்டர்பென்சா இருக்கோ. சாரி ஃபார் டிஸ்டர்பிங் ராகவி மிஸ்” என்று இவளது அமைதிக்கு தவறான அர்த்தம் கற்பித்துக் கொண்டு, இவளுக்குப் பேச பிடித்தமில்லை என்று நினைத்துக் கொண்டான் திவாகர்.

“அய்யோ! இல்லை திவா.. நோ நோ. யு ஆர் மிஸ்டேகன்” என்று படபடப்பில் அவன் பெயரை இவள் மனதில் சுருக்கிக் கூப்பிடுவது போலவே பதில் அனுப்பியிருந்தாள்.

அனுப்பிய பின்னரோ மனதில் பெரும் கலவரம் உண்டாகியது. “அச்சோ, திவான்னு அனுப்பியிருக்கேனே! என்ன நினைப்பான் என்னைப் பத்தி?” என்ற அச்சத்தில் அவன் மறுமொழிக்காக இவள் காத்திருக்க,

அவனோ சிறிது நேரம் இவளைத் தவிக்க விட்டு, சற்றே நேரம் எடுத்துக் கொண்டு “தேங்க்ஸ்” என்று அனுப்பினான்.இவளுக்குக் குழம்பிப் போயிற்று. “எதற்கு நன்றி? சம்பந்தமில்லாமல்” என்று மனம் குறுகுறுக்க,

“எதுக்கு தேங்க்ஸ்?” என்று வினா எழுப்பினாள். அதற்கு விடையாக அவன் ஏதோ எழுதுவதும், அதை அழிப்பதும், பின்பு எழுதுவதுமாகச் சிறிது நேரம் இழுத்தடித்தான்.

பின் அவளது செய்தியையே அவளுக்குத் திருப்பி அனுப்பியவன், “இதுக்குத்தான்”என்று அனுப்ப, அவன் என்ன சொல்ல விளைகிறான் என்று புரிபடாத நிலையில், “புரியலை திவாகர்” என்று அனுப்பினாள்.

அதற்கு அவனிடமிருந்து ஒரு சிரிப்பு பொம்மை மட்டுமே பதிலாக வந்திருந்தது. அதன் பின்னர் அவனும் எதுவும் கேட்டானில்லை. ராகவியும் எதுவும் சொல்லவில்லை.

சிறிது நேரம் மறுமொழி எதிர்பார்த்து கைப்பேசியை நோட்டம் விட, அவனது ஸ்டேட்டஸ்ஸில், “நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை, வானவில்லே.. உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்ததிங்கே” என்ற பாடல் வரிகள் கொண்ட வீடியோ தென்பட்டது. ராகவி அப்பாடலை சராசரியாக பத்து தடவைக்கும் மேலாக அந்நேரம் கேட்டிருப்பாள்.

அவன் தனக்காக அப்பாடலை வைத்திருக்கிறான் என்னும் அளவிற்கு அவளுக்குப் புரிந்தது. அதை சோதிக்க நினைத்தவள், தன் ஸ்டேட்டஸ்ஸில்,

“உறக்கம் இல்லா முன் இரவில்

என் உள் மனதில் ஒரு மாறுதலா?

இறக்கம் இல்லா இரவுகளில்

இது எவனோ அனுப்பும் ஆறுதலா?” என்று தன் வாட்ஸ்ஸப்பில் அலைபாயுதே படத்தின் பாடலை ஸ்டேட்டஸ்ஸாக வைத்தாள்.

அவள் பாடல் வைத்த அடுத்த நிமிடம் திவாகர் அதைப் பார்த்திருந்தான். அவன் அதற்கு பதில் பாட்டாக,

“உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல

இதம் சேர்க்கும்  கனாக் கூட சுகமல்ல

நீ இல்லாமல் நான் இல்லையே” என்று விஷ்வரூபம் படப்பாடலை ஸ்டேட்டஸில் வைத்தான். ராகவிக்கு திவாகரின் இந்த குறும்பு மிகவும் பிடித்தது. வாய்மொழியாகச் சொன்னால் மட்டும் தான் காதல் உணர்வுகள் புரிபடுமா என்ன? திவா எதுவுமே சொல்லாவிடினும் அவன் மனது ராகவிக்கு தெளிந்த நீரின் அடியில் இருக்கும் கூழாங்கல்லாய் மிளிர்வுடன் தென்படுகின்றதே!

ராகவி அவன் பாட்டிற்கு பதில் பாடலாக,

“கண்ணன் வரும் வேளை அந்தி மாலை நான் காத்திருந்தேன்.

சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்” என்று ஸ்டேட்டஸ் வைத்தாள்.

அதைப் பார்த்த திவாகர், “தேங்க்ஸ்” என்ற மறுமொயும், ஒரு சிரிக்கும் ஸ்மைலி பொம்மையும் அனுப்பியிருந்தான்.

அவனுக்காக வைத்ததை அவன் கண்டும் காணாமல் கடந்துவிடுவான் என்றும், இப்படி தைரியமாக “நன்றி”யெல்லாம் உரைக்க மாட்டான் என்றும் நினைத்திருந்த ராகவிக்கு, அவன் “தேங்க்ஸ்” என்று அனுப்பியது மிகவும் கண்ணியமாகத் தோன்றியது.

சிரிப்புடன் உறங்கியவள், அடுத்த தினத்தை ஒரு வித நிறைவான மனதுடன் கழித்தாள். இன்று சுற்றுலாவின் அடுத்த தினம், நாளை பள்ளி செல்லலாம், திவாவைக் காணலாம் என்ற ஆர்வத்துடன் காத்திருந்தாள்.

அடுத்த தினம், போட்டிங் மற்றும், “லூலூ மால்” என்னும் இடத்தைச் சுற்றிப் பார்ப்பதுடன் சுற்றுலா முடிவடைந்து திரும்பிவிடுவர். காலையில் போட்டிங் முடித்து, மதிய உணவை உண்டு, பின், “லூலூ மால்” என்னும் இடத்தில் இறங்கினர். ஆயிரக்கணக்கான கடைகளைக் கொண்ட பெரிய அளவிலான வணிக வளாகம் அது. உடன் வந்திருந்த ஆசிரியர்கள் ஒருவருக்கு பத்து குழந்தைகள் வீதம் பொறுப்பில் ஒப்படைத்துவிட, ராகவி தன் பொறுப்பிலிருந்த எட்டாம் வகுப்பு மாணவர்களுடன் அந்த லூலூ மாலினைச் சுற்றி வந்தாள்.

சிறுவர்கள் விளையாட்டுத் தளம் அமையப்பட்டிருந்த இடத்திற்குச் செல்லவும், இவள் பொறுப்பு மாணவர்கள் அங்கே விளையாட ஆர்வம் கொண்டனர். “சரி, பார்த்து கவனமா இருங்க. நான் இங்க உட்காந்திருக்கேன்” என்ற ராகவி, அங்கிருந்த பென்ச்சில் அமர்ந்து கொண்டு, கூட்டத்தில் சற்றே பொறுப்பான ஒரு மாணவனிடம், “சரவணா! டேக் கேர் ஆஃப் தெம். வேற எங்கையும் என்னைக் கேட்காம போகக் கூடாது. எங்க போகணும்னாலும் நான் கூட்டிப் போறேன். பி கேர்ஃபுல்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு ஆயாசமாக அமர்ந்தாள்.

சுற்றுலாவிற்கு வந்திருக்கிறோம் என்ற உற்சாகம் கொஞ்சமும் அவளிடத்தில் காணவில்லை. கைப்பேசியை எடுத்து முன்தின சம்பாஷனைகளை மீண்டும் மீண்டும் படித்தபடிக்கு சிறுவர்கள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க, அவள் அருகே தலையில் கேப் கண்ணாடி சகிதம் அமர்ந்த மனிதனை உணர்ந்து தன்னிட்சையாக சற்றே நகர்ந்து அமர்ந்தாள்.

அவன் மீண்டும் இவள் அருகே உரசியபடிக்கு உட்கார முற்பட, “ஏ, வாட்?” என்று எரிச்சலுடன் அவன் முகத்தில் அப்போது கண் பதித்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சியாக திவாகர், தான் அணிந்திருந்த கருப்புக் கண்ணாடியை பாதி கழற்றி அவளைப் பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தான்.

“திவா” என்று ஆச்சர்யத்தில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து கொள்ள முற்பட, “ஷ் ஷ.. ரிலாக்ஸ்” என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டே அவளை அமரச் சொன்னவன், சுற்றியிருப்பவருக்குச் சந்தேகம் வராதபடிக்குத் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு சற்றே தள்ளி அமர்ந்து அவளுக்கு அழைத்தான். அவனைப் பார்த்துக் கொண்டே அவன் அழைப்பை ஏற்றவள்,

“நீங்க இங்க என்ன பண்ணறீங்க?” என்று ஆச்சர்யத்தை அடக்க முடியாமல் கேட்டாள்.

“ம்ம்.. கண்ணனுக்காக ராதையை ரொம்ப நேரம் காக்க வைக்கக் கூடாது இல்லையா. அதான் ராதையைப் பார்க்க வந்தேன்” என்று கொஞ்சமும் பதட்டப்படாமல் பதிலளிக்க, ராகவி பதில் சொல்வது அறியாமல் தவித்துப் போனாள்.

“நான், நான் வந்து .. நேத்து ஸ்டேட்டஸ்…”

“சும்மா வச்சேன்னு சொல்லுவ! அதானே ராகவி?” என்று அவன் குறும்பு மாறாமல் வினவ, ராகவி தலையைக் குனிந்து கொண்டாள்.

“மன்னார்குடில இருந்து 10 மணி நேரம் பஸ் பஸ்ஸா மாறி, இங்க வந்த எனக்கு, நீ இப்படி தான் பதில் சொல்லி மழுப்புவன்னு தெரியாதா?”

“இல்லை, வந்து, நான் சும்மா, “

“ரிலாக்ஸ்.. எதுக்கு பதட்டப்படற! நான் ஜஸ்ட் உன்னைப் பார்க்க நினைச்சேன். அதுக்காக வந்தேன். அவளோ தான்.”

“ஆனா, அதுக்காக 10 மணி நேரம் ட்ராவல் கொஞ்சம் டூ மச் தான்” என்றாள் ராகவி சற்றே சங்கடத்துடன். இவன் இப்படி வந்து நிற்பான் என்று அவள் எதிர்பாத்தாளில்லை. இப்படி ஏதேணும் செய்துவிடுவான் என்று தெரிந்திருந்தால் ராகவி அவனைச் சீண்டி அந்தப் பாடலை ஸ்டேட்டஸ் வைத்திருக்க மாட்டாள்.

“டூமச் தான் இல்ல! தெரியுது. ஆனா பாரு, அவனவன், லவ்வரைத் தேடி அமெரிக்கா போற காலத்தில, நான் இங்கிருக்க மன்னார்குடியில இருந்து வராம இருந்தா நல்லாவா இருக்கும்? வரலாறு திவாகரை தவறா நினைக்குமே” என்று அவன் சொன்னது கேட்டு அவள் கலகலவென நகைத்தாள்.

 அவன் சொன்ன விஷயத்தின் தாக்கம் அவளுள் இன்னமும் முழுவதுமாக இறங்கியிருக்கவில்லை. பேச்சு வழக்கில் தன் காதலை வெளிபடுத்திவிட்டான் என்பதை மூளை உணர்த்தியது. ஆனால் அதை விடவும் நேரில் அவனுடன் செலவிடும் நிமிடங்களே முக்கியமானதாகத் தோன்றிவிட்டது.

“நீ எந்திரிச்சு, இந்த ஃப்ளோர் கடைசில ஒரு கிஃப்ட் ஷாப் இருக்கும் அங்க வா.” என்று சொல்லியபடிக்கு அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான். ராகவி அவன் செய்கை எண்ணி தடுமாற்றம் கொண்டாள்.

“இல்ல, பசங்க இங்க உள்ள விளையாடிட்டு இருக்காங்க. விட்டுட்டு எப்படி?” என்று தவிப்பாக எழ,

“பி.டி தடியன் பார்த்துக்குவான்!! நீ வா” என்று தைரியமூட்டிய திவாகர் கண்ணசைத்த திசையில், அந்தப் பள்ளியின் பி.டி. வாத்தியார் கோகுல் சிரிப்புடன் நின்றிருந்தான். கோகுல் மாணவர்களுடன் சுற்றுலா வந்திருந்தவர் தான். கோகுலும், திவாகரும் உற்ற நண்பர்கள் என்று ராகவிக்குத் தெரியும்.  அப்படியென்றால் கோகுல் தகவல்கள் கொடுத்து தான் திவாகர் சரியாக இங்கே வந்து சேர்ந்திருக்கிறானா என்ற கேள்வியுடன் திவாகரை பத்தடி இடைவெளியில் தொடர்ந்தாள் ராகவி.

திவாகர் அந்த கடையின் உள்ளே நன்றாக நோட்டம் விட்ட பின்னரே நுழைந்தான். உள்ளே சென்றவன், தன் கண்ணாடியையும், தொப்பியையும் கழற்றி விட்டு, பின்னால் அவனைத் தொடர்ந்து வந்த ராகவியை ஏறிட்டான்.

அவனது பார்வை வீச்சைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தலை கவிழ்த்த ராகவி, கடையின் உள்ளே பார்வையைச் சுழற்றி திடும் திடுமென வேகமாகத் துடித்த மனதை கட்டுப்படுத்தினாள்.

இதற்குள், திவாகர், கடைச் சிப்பந்தியின் உதவியுடன் ஒரு அழகிய, அரை அடிஉயரத்தில் அம்சமாக மோன நிலையில் லயித்திருந்த கிருஷ்ணர் ராதா சிலையினை வாங்கியிருந்தான். அதை ராகவியிடம் கொடுத்தவன், “நானே உனக்கு ஒரு கிஃப்ட் தான். இருந்தாலும் இது என்னோட  ஃபர்ஸ்ட் கிஃப்ட் உனக்கு.” என்று சொல்லி, அவள் கைகளை அழுத்தமாகப் பிடித்து அச்சிலையினைச் சேர்ப்பித்தான்.

பிடித்திருந்த கைகளை சில நொடி அழுந்த இறுக்கியவன், ராகவியின் முகத்தில் கண் பதிக்க, ராகவி அங்கே உணர்ச்சிக் குவியலாக நின்றிருந்தாள். அவன் பிடித்திருந்த கைகளை தன் பங்கிற்கு அழுந்தப் பிடித்தவளின் கண்களில் கண்ணீரைக் கண்ட திவாகர் பதட்டப்பட்டான்.

“ராகவி.. ராகவி.. ப்ளீஸ்ம்மா. அழாத. ப்ளீஸ்.. பிடிக்கலைன்னா வேணாம். சிலையை, என்னை, எல்லாமே திருப்பிக் குடுத்திடலாம்.” என்றவன், ஆழமாக அவள் கண்களைப் பார்க்க, அவள் விழியில் இருந்து வடிந்த கண்ணீர், ராதா கிருஷ்ணரை அபிஷேகம் செய்யத் துவங்கியது.

“பிடிக்கலையா? வேணாம்னா குடுத்திரு” எனச் சிலையைத் திரும்ப பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் அவன் கைகளை நீட்ட, அவள் சிலையைத் தன்பால் இறுக்கமாகச் சேர்த்துக் கொண்டாள். அவள் செய்கையைக் கண்டு பரவசமடைந்தவன், “அப்போ பிடிச்சிருக்கா?” என ஒற்றை வார்த்தையாய் வினவ,

“எங்க வீட்டில.. வீட்டில ஒத்துக்குமாட்டாங்க” என்று சிரிய கேவலுடன் பதில் வந்தது ராகவியிடமிருந்து.

“ஏ, இப்போவே என்ன? எல்லாமே நாம அப்பறமா நிதானமா பேசி முடிவெடுக்கலாம். டிரஸ்ட் மீ. நான் எல்லாமே சார்ட் அவுட் பண்ணுவேன். சரியா. ப்ளீஸ். அழாத. எதைப் பத்தியும் நீ கவலைப்பட வேண்டாம். நான் எல்லாமே பார்த்துக்கறேன்” என்றவன், அவளைத் தோளுடன் சேர்த்து அணைத்துக் கொள்ள, ராகவி எங்கே நிற்கிறோம் என்பது மறந்து அவனுடன் சேர்ந்து சில நொடித் தன்னைப் பொருத்திக் கொண்டாள்.

திவாகரின் கைப்பேசி அழைக்க எடுத்துப் பேசியவன், “சரி, ராகவி, பசங்க விளையாண்டு முடிச்சுட்டு திரும்ப வந்துட்டாங்களாம். நீ போய் ஜாயின் பண்ணிக்க. எல்லாமே நான் பார்த்துக்கறேன். ஐம் தேர்.” என்றான்.

ராகவியின் முகம் இன்னமும் தெளிவில்லாமல் கண்ணீரில் தோய்ந்திருக்க, “ராகவி இப்படி உம்முனு இருந்தா நான் உன்னை பசங்க கூட போக விடாம இப்போவே என் கூடவே கூட்டிட்டுப் போயிடுவேன். “என்று அவன் ஆசையுடன் கூற, ராகவி தன்னை மீறி மெல்லப் புன்னகைத்தாள்.

 “சரி, நான் கிளம்பவா? இப்போ பஸ் பிடிச்சா தான் நாளைக்கு காலையில மன்னார்குடிய ரீச் பண்ண முடியும்.” என்று விடை பெற்றவன், கூட்டத்தில் கலந்து காணாமல் போனான்.

ராகவி, அவன் சென்ற திசையை ஏறிட்டபடிக்கு, ராதா கிருஷ்ணரின் சிலையை இறுக்கப் பற்றிக் கொண்டு, சிலையை விடவும் கனமான மனதுடன் அன்றைய மீதிப் பொழுதைக் கழித்தாள்.