உயிரில் மெய்யாக வா 2

உயிரில் மெய்யாக வா 2

“என்னைச் சந்திகாமலேயே இருந்திருக்கலாம் நீ

என்னுடன் பேசாமலேயே போயிருக்கலாம் நீ

கைக்கெட்டும் தொலைவில் நீ இருந்தும்

என்னை யாரோ போல் கடந்து செல்வதற்கு!”

திவாகருக்கு அன்று காலையில் மார்னிங் க்ளாஸ் இருந்தது. ஒரு பத்தாம் வகுப்பிற்கு அவனும், இன்னொரு பத்தாம் வகுப்பிற்கு பயாலஜி எடுக்கும் பவித்ரா டீச்சரும் வந்திருந்தனர். பவித்ரா டீச்சருக்கு திவாகரின் மேல் ஒரு பார்வை இருந்தது திவாகர் உட்பட அனைவருக்குமே தெரியும்.

“உன்னைத் திரும்பிக் கூட பார்க்காம போற அந்த ராகவி பொண்ணுக்கு பதிலா இந்த பவி டீச்சரை நீ காதலிச்சிருந்தா இந்நேரம் உனக்கு கல்யாணமே ஆகியிருக்கும்” என்று திவாகரின் நண்பணும், அந்தப் பள்ளியின் பி.டி வாத்தியாருமான கோகுல் அடிக்கடி கூறுவான்.

திவாகருக்கு பவித்ராவின் மேல் எந்த விதமான ஈர்ப்பும், ஆவலும் உண்டாகவில்லை. ராகவியைக் கண்டதும் மனதில் பூத்த ஆசைகளும், கண்கள் கண்ட சொப்பனங்களும் வேறு எந்த பெண்ணிடமும் அவனுக்கு ஏற்பட்டதில்லை. அதனால் பவித்ராவிடம் பேசும் பொழுது எந்த வித தயக்கமும் இன்றி, “என் மனதில் கள்ளமில்லை” என்ற நிலைபாட்டுடன் பேசுவான்.

காலை வகுப்பு முடித்து, மாணவர்கள் காலை உணவு அருந்தும் உணவு இடைவேளையில் ஆசிரியர்களும் தங்களது காலை உணவை முடித்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் அறையில் இவன் தன் உணவை எடுத்து மேஜை மீது வைத்து உண்ணத் துவங்கினான்.

பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த பவித்ரா, தன் காலை உணவை உண்ணாமல் தேர்வுத் தாளைத் திருத்திக் கொண்டிருந்தாள். “பவித்ரா மிஸ். காலையில டிஃபன் சாப்பிடலையா? ப்ரேயர் போக நேரமாகிடும். சாப்பிட்டுட்டு பேப்பர் கரென்சன் பாருங்க” என்று சொல்லிக் கொண்டே தன் உணவை உண்டான்.

“இல்லை திவாகர் சார். காலையில வர்ற அவசரத்தில டிஃபன் பாக்ஸை மறந்து வச்சுட்டு வந்துட்டேன். அப்பா வேலைக்கு போறப்போ கொண்டு வந்து குடுப்பாங்க. நீ சாப்பிடுங்க. நான் மத்தியானம் சாப்பிட்டுக்கறேன்” என்று அவன் இட்லியை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் விடைத் தாளைத் திருத்தத் துவங்கினாள் பவித்ரா.

அவளது பதிலை மட்டுமே கேட்டிருந்தால் திவாகர் எந்த சலனமும் பட்டிருக்க மாட்டான். ஆனால், ஏக்கமாக அவன் உணவின் மீது பார்வையை ஓட்டியது திவாகரின் கவனத்தில் பதிய, தன் டிஃபன் பாக்ஸ் தட்டில் இரு இட்லியையும், தக்காளி குருமாவையும் வைத்து பவித்ராவின் மேஜைக்கு எடுத்து வந்தான்.

“எதுக்கு திவாகர் சார்? பரவாயில்ல நீங்க சாப்பிடுங்க” என்று மேம்போக்காக பவித்ரா பதிலளித்தாள்.

“மத்தியானம் வரைக்கும் கிளாஸ்ல கத்தறதுக்கு தெம்பு வேண்டாமா? சாப்பிடுங்க.” என்று சொன்னவன், அவள் மேஜைக்கு அருகில் தன் நாற்காலியை நகர்த்தி வைத்து தன் மீதி உணவை உண்ண ஆரம்பித்தான்.

அன்று விடைத்தாள் திருத்தும் வேலை கொஞ்சம் பாக்கி இருந்ததால் சற்றே முன்னர் வந்து மீத வேலையை முடித்து விட எண்ணி, அரை மணித்திலாயம் முன்னதாக பள்ளிக்கு வந்திருந்தாள் ராகவி. ஆசிரியர்களின் அறைக்குள் அவள் நுழையவுமே, அங்கே ஒரே மேஜையில் அருகருகே அமர்ந்து, ஒரே டிஃபன் பாக்ஸில் இருந்து உணவை பரிமாறிக்கொண்டு உணவருந்திக் கொண்டிருந்த இருவரையும் கண்டு பரிதவித்தது.

“என்ன சீக்கிரம் வந்துட்டீங்க ராகவி மிஸ்!” என்று கேட்டுக் கொண்டே எழுந்த பவித்ரா, திவாகரின் டிஃபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு கழுவுவதற்காக வெளியே சென்றாள்.

உரிமையாக அவனது டிஃபன் பாக்ஸுடன் சென்றவளை ஒரு பார்வையும், கை கழுவ எழுந்த திவாகரை ஒரு பார்வையும் பார்த்த ராகவியின் முகம் சுருங்கிப் போயிற்று. திவாகரின் முகத்தில் ஒரு நொடிக்கு மேல் ராகவியின் விழிகள் நிலைக்கவில்லை. அவ்வொரு நொடிப்பொழுதில் அவளது குற்றம் சாட்டும் பார்வையை திவாகர் உணர்ந்து கொண்டான். பவித்ராவின் பின்னால் கை கழுவ எழுந்து சென்ற திவாகரின் கால்கள், இவள் மேஜையின் அருகே ஒரு சில நொடி தயக்கத்துடன் நின்றன. ராகவி அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் தலையைக் கவிழ்த்துக் கொண்டு தன் வேலையில் ஈடுபட்டாள்.

அன்றைய தினம் முழுக்க அவள் முகம் சோபை இழந்தே காணப்பட்டது. எதையோ பரிகொடுத்த தவிப்பு அவள் நடவடிக்கையில் தென்பட்டது. இதை திவாகர் மட்டுமன்றி அருகில் இருப்போரும் கவனித்திருந்தனர்.

“என்ன ராகவி மிஸ்! உடம்பு சரியில்லையா? முகமே சோர்ந்திருக்கே?” என்று சமூக அறிவியல் வாத்தியார் வினவ, ராகவி “இல்லை சார். அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல” என்று சமாளிப்பாக பதில் கூறினாலும், மறவாமல் அவள் கண்கள் திவாகரின் மேல் ஒரு கணம் படர்ந்து மீண்டது. இதையெல்லாம் கண்டுகளித்த திவாகருக்கு உள்ளத்தில் உவப்பாக இருந்தது.

“தன் மீது எந்த பிரியமும் இல்லையென்றால், இவன் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? நான் பவித்ராவுடன் பேசியதும் சிரித்ததும், ஒன்றாக அமர்ந்து உணவு உண்டதும் பிடிக்காமல் தானே அவள் முகம் சோர்ந்து போய் விட்டது?” என்று புரிந்து கொண்ட திவாகர் குதுகலமானான்.

அவளை வேண்டுமென்றே சீண்ட எண்ணம் கொண்டு, மாலையில் கிளம்பும் சமயம்,”பை பவித்ரா மிஸ்!” என்று ராகவியின் காதுகளின் விழும்படிக்கு சொல்லி விடைபெற்றுச் சென்றான். ஆசிரியர்களின் அறை வாயில் வரையில் சென்றவன், அங்கிருந்து திரும்பிப் பார்த்தால், கதவின் நேரே அமர்ந்திருக்கும் ராகவி புலப்படுவாள்.

அன்றும் கதவு வரை சென்றவன், திரும்பி ராகவியைக் காண, அவளும் வாயிலைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களைச் சிமிட்டி, இதழைப் பிரிக்காமல், உதடுகளை ஒரு பக்கம் இழுத்து, நமுட்டுச் சிரிப்பு ஒன்றை ராகவியை நோக்கி மறவாமல் வீசிவிட்டே சென்றான் திவாகர்.

மாலையில் தன் தந்தையுடன் வீடு வந்திருந்த ராகவிக்கு தன் சோர்வு காற்றில் கரைந்து விட்டதைப் போன்ற உணர்வு. திவாகரின் ஒற்றைச் சிரிப்பு அவள் சோர்வையும், சோகமான மனநிலையையும் போக்கிவிடும் வல்லமை கொண்டதா என்று குழம்பினாள். “பின்ன, அவனால தானே எனக்கு மனசு சங்கடப்பட்டுச்சு. அதனால அவன் தான் பொறுப்பு” என்று சிறுபிள்ளைத் தனமாக யோசிக்கவும் செய்தாள்.

“ஆவன் யாரோட பேசினா உனக்கென்ன? அவங்க சேர்ந்து ஒரே டிஃபன்ல சாப்பிட்டா உனக்கென்ன? நீ ஏன் ரியாக்ட் பண்ணற?” என்று சற்றே ஒழுங்குமுறைகளை அடுக்கிய மனதை நொடியில் அடக்கினாள் ராகவி.

“அதெப்படி அவங்க ரெண்டு பேரும் ஒரே டிஃபன்ல சாப்பிடலாம்? டீச்சர்ஸே இப்படி நடந்துகிட்டா, இதைப் பார்க்கற பிள்ளைக கெட்டுப் போயிட மாட்டாங்களா? அதனால எனக்கு கோபம் வந்துச்சு?”என்று லாஜிக்கலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று குதர்க்கமாக எண்ணினாள்.

“சரி, கோபம் வந்துச்சு, ஆனா, சாயந்தரம் அவன் சிரிக்கவும் உன் மனசு லேசா ஃபீல் ஆச்சுல.அதுக்கு என்ன அர்த்தம்?” என்று இதயம் கேள்விக்கனைகளைத் தொடுக்க, ராகவி, கண்களை மூடி திவாகரின் சிரிப்பை மனதினுள் கொண்டு வந்தாள்.

கள்ளத்தனமாக கண்களில் குறும்பு முன்ன, யாரும் அறியா வண்ணம், ஆனால் இவளுக்கு மட்டும் புரியும்படிக்கு, இதழ் பிரிக்காமல் அவன் சிந்திய சிரிப்பை நினைக்கும் போதே மனம் பூரித்துப் போனது. உதட்டின் மேலிருந்த மீசையும், மூன்று நாள் தாடியும், இடது கண்ணத்தில் அழகாய் விழும் குழியும் என அவன் நொடி நேர முகபாவனையை, நூறு தடவை மனதினுள் ஓட்டிப் பார்த்துக் கொண்டாள்.

மாலையில் பள்ளி வாயிலில் தனக்காக காத்திருந்த தந்தையின் காரில் அவள் ஏறிக் கொள்ள, வழக்கம் போல, அவனது பைக் சிறிது தூரம் அவர்களைப் பின் தொடர்ந்தது. பக்கவாட்டுக் கண்ணாடியில் அவனை அவ்வப்போது பார்த்துக் கொண்டவள், எதார்த்தமாகத் திரும்பி தந்தையைக் காண, அவரும் அக்கணம் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஐயோ, திவாவைப் பார்க்கறதை அப்பா கவனிச்சிருப்பாரோ?” என்ற கவலை தொற்றிக் கொள்ள, நேராக ரோட்டை கவனிக்கலானாள். அவன் வண்டியும் வடக்காரவயல் பிரிவு வரையில் வந்து, பாமணி செல்லும் சாலையில் பிரிந்து சென்றது. காரைக் கடந்து சென்ற வண்டியைக் கண்ட ரத்தினம், “இந்த தம்பி எந்த க்ளாஸ் எடுக்கறாப்ல?” என்று திடுமென திவாகரைப் பற்றி வினவினார்.

“அவர் பெரிய க்ளாஸ் எடுக்கறார்பா. 10த், 11த், 12த் மேத்ஸ் டீச்சர்” என்று ராகவி பதிலளித்த போது அவள் குரலில் ஒரு பெருமிதம் தானாக வந்து ஒட்டிக் கொண்டது. அவளுள் தோன்றிய பெருமிதத்திற்கான காரணம் அவளுக்குப் புரிந்திருந்த போதும், தந்தைக்கு அதை வெளிக்காட்டிவிடாமல் கவனமாக இருந்தாள்.

“பாமணி பக்கம் வண்டி திரும்புது. அந்தூர்கார பையலா?” என்று மீண்டும் விசாரித்தார் ரத்தினம்.

“தெரியலைப்பா” என்று பதிலளித்த ராகவிக்கு உண்மையிலேயே அவனைப் பற்றிய விவரங்கள் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவள் அவனைத் தவிர, அவன் பின்புலம்,அவன் யார் என்னவென்றெல்லாம் பெரிதும் யோசித்ததில்லை. அவள் குரலில் இருந்த உண்மைத்தன்மையைக் கண்ட ரத்தினம்,

“அந்தூர்ல பாதி பேர் கிறிஸ்டியன் ஆளுங்க.” என்று பொதுவாகக் கூறினார்.

“அவரும் கிறிஸ்டியன் தான்பா. பேரு திவாகர் ஆண்டனிராஜ்” என்று அவன் பற்றி தனக்குத் தெரித ஒரே விஷயத்தை தந்தையிடம் கூறினாள்.ரத்தினம் வேறெதுவும் பேசவில்லை. மெளனமாக இருவரும் ஆலங்குடி நோக்கிப் பயணித்தனர்.

ஆலங்குடி டவுனிற்குள் போகும் முன்னரே, இடது பக்கமாகப் பிரிந்த இட்டேரி ரோட்டில் ஒரு கிலோ மீட்டரில் தென்னை மரங்களுக்கு இடையே அமையப் பெற்றிருந்தது ராகவியின் வீடு. தோப்பின் நடுவே ஒன்னரை கிரவுண்டில் சுற்றுச் சுவரின் மத்தில் எழும்பியிருந்த ஓரடுக்கு மாடி. சுற்றிலும் தென்னை மரங்களின் குளிர்ச்சி நிறைந்திருக்க, பத்து மாடுகள் கட்டப்பட்டிருந்த தொழுவமும், அதன் முன்னே டிராக்டரும், வைக்கோல் பண்டில்களும் என சுயசார்பாக தனித்து வாழத் தகுதியான தோதான வீடு அது.

கார் சத்தம் கேட்கவுமே வீட்டினுள் இருந்து வெளிபட்டார் புவனா. மகளிடம் சாப்பாட்டுப் பையை வாங்கியவர், “என்ன ராகவி? மதியம் ஒழுங்கா சாப்பிடலையா? டிஃபன் பாக்ஸ் வெயிட்டா இருக்கு!” என்று கேட்டுக் கொண்டே வீட்டினுள் சென்றார்.

“வேலை இருந்துச்சும்மா. முழுசா சாப்பிட டைம் பத்தலை” என்று பதில் சொல்லிக் கொண்டே திண்ணையில் அமர்ந்தார்.

வாசல் திண்ணையில் அமர்ந்து, வேலையாட்களிடம் பேசிக் கொண்டிருந்த பாட்டி அன்னம், “ஏண்டி சாப்பிடாம கொள்ளாம அப்படி என்ன வேலை வேண்டிக்கிடக்கு. நீ சம்பாரிச்சு கொண்டு வந்து தான் நம்ம வீட்டை நிறைக்கப் போறியா?” என்று சத்தமாக தந்தையின் காதுகளில் விழும் அளவிற்குக் கத்தினார்.

“ஏ, கிழவி.. எதுக்கு இப்படி கத்தற? உனக்கு தான் காது கேட்காது. எங்களுக்கு நல்லாவே கேட்கும். மெதுவா பேசு” என்று அவர் கேள்விக்கு பதிலளிக்காமல், ராகவி எழுந்து உள்ளே செல்ல எத்தனிக்க,

“ஏண்டி கேட்கறேன்ல.. பதில் சொன்னா குறைஞ்சா போயிருவ?”

“டயர்டா இருக்கு பாட்டி. ஒரு காபி குடிச்சுட்டு தெம்பா வந்து பதில் சொல்லறேன். அதுவரைக்கும் நீ நம்ம மாரியக்காவ மிரட்டிட்டு இரு. வெயிட்டீஸ்.” என்று மிளகாய் உலர்த்திக் கொண்டிருந்த மாரி அக்காவை வம்பிழுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

இதற்குள், இவளுக்குப் பிடித்தம் போல, துளி தண்ணீர் சேர்க்காமல் அடர்த்தியான பாலில், அப்போதிறக்கிய டிகாஷன் சேர்த்து, சற்றே சக்கரை குறைவான சூடான காபியுடன் புவனா வெளிப்பட்டார்.

“மதியம் சாப்பிடாம கொள்ளாம அப்படி என்னத்துக்கு வேலை பார்க்கற ராகவிம்மா. நான் வேணா அப்பாவை வந்து நாளைக்கு பிரின்சிபல்கிட்ட பேசச் சொல்லவா?” என்று வினவ, ராகவி அன்னையை முறைத்தாள்.

“ம்மா? ஏன்மா? சின்ன பிள்ள மாதிரி அப்பாவ கூட்டிட்டு போய் நிக்க சொல்லறீங்க.?” என்று சடைந்து கொண்டாள்

“பின்ன என்னடீ? நீ சாப்பிட டைமில்லன்னு சொல்லற? அப்போ சாப்பாட்டு நேரத்தில கூட நிறைய வேலை குடுக்கறாங்கன்னு தானே அர்த்தம்!” என்று புவனா கேட்க ராகவிக்குக்கு சற்றே எரிச்சல் மண்டியது. இன்று உண்மையில் அவளுக்குச் சாப்பிட நேரமில்லாமல் போய்விடவில்லை. திவாகரின் காரணமாக அவளுக்கு ஏனோ இன்று சாதம் தொண்டையில் இறங்கவில்லை. அவன் பவித்ராவுடன் சேர்த்து ஒரே டிஃபனில் சாப்பிட்ட காட்சி திரும்பத்திரும்ப நினைவில் படிந்து அவள் மனதைப் புண்படுத்தியிருந்தது. அதனால் மேலே சாப்பிடப் பிடிக்காமல் பாதியில் எழுந்து கொண்டாள்.

இதை அன்னையிடம் சொல்லவா முடியும். அதனால் சமாளிப்பாக பதிலளித்தாள். “கொஞ்சம் வேலைம்மா. அதனால தான்” என்று தணிந்து போய் பதிலளிக்க, இது தான் சாக்கென்று அதையே பிடித்துக் கொண்டால் எப்படி? அவளது பாட்டி அன்னம் அப்படித் தான் நடந்து கொண்டார்.

“ஏடா ரத்தினம். உன் மக சொல்லறதைக் கேட்டியா? சாப்பிடக் கூட நேரமில்லாம வேலை குடுக்கானாம் அந்த ஸ்கூல்ல. அப்படி இவ வேலைக்குப் போய் தான் சம்பாரிச்சுக் கொட்டணும்னு என்ன கிடக்கு?” என்று தூரத்தில் நின்றிருந்த அவள் தந்தையிடம் சத்தமாகக் கேட்க,

“கிழவி! சும்மாவே இருக்க மாட்டியா நீ? எதுக்கு இப்படி கூப்பாடு போட்டு ஊருக்கெல்லாம் சேதி சொல்லற?” என்று கோபப்பட்டாள் ராகவி.

“என்கிட்ட கத்தாதடீ!”என்று ஏசிய அன்னம், “புவனா உன் சிவராமன் அண்ணன் பையனுக்கு ராகவியைக் கேட்டாங்கன்னு சொல்லிட்டு இருந்தியே. மேற்கொண்டு பேசலாமான்னு கேளு” என்று இவளைச் சீண்டுவதற்காகவே வினவினார்.

“ஏ கிழவி! உன் காதை கடிச்சு துப்பிருவேன் பார்த்துக்கோ! எனக்கு அந்த பையனை பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல! அப்பறம் என்னை ஏன் டென்ஷனாக்குற?”

“அவனைப் பிடிக்காட்டி போகுது. நம்ம குமுதா பையனுக்கு கூட கேட்டாக. பாப்பா தான் படிப்பு முடிச்சிருச்சே! நல்ல விஷேஷம் எதும் வைக்கலியான்னு. அவனைப் பார்ப்போமா?” என்று வீம்பாக வினவினார் அன்னம். ராகவி சூடாவதைப் பார்த்துவிட்டு, மகளைக் காப்பாற்ற அருகே வந்த ரத்தினம்,

“விடும்மா, அவளை வம்பிழுத்துகிட்டு. அவ தான் நீங்க மாப்பிள்ளை பார்க்கற வரைக்கும் வீட்டில வெட்டியா இருக்கறதுக்கு பதிலா வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டாளே! அவளே களைச்சு போய் வந்திருக்கா. வந்தவளை நொய் நொய்னு கேள்வி கேட்டு சூடாக்கிட்டு இருக்க” என்று தன் தாய் அன்னத்தை அடக்கியவர்,

“நீ உள்ள போய் ரெஸ்ட் எடுடா ராகவிகுட்டி! கிழவி கிடக்குது ஒருபக்கம்.” என்று ராகவியை உள்ளே அனுப்பிவிட்டு மகள் சென்றுவிட்டாளா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, மனைவியை அங்கேயே இருக்கச் சொன்னார்.

“நானே சொல்லணும்னு இருந்தேன். நம்ம வடக்காரவயல் சட்டநாதன் பையன், சென்னையில பெரிய ஐ.டி கம்பெனியில நல்ல பதவியில இருக்கானாம். மாசம் லட்ச ரூவாய்க்கு மேல சம்பாத்தியம். நம்ம சாதி, நம்ம ஊர்காரனும் கூட.”

“சின்ன அய்யாக்கண்ணு பையன் சட்டநாதனா?”

“ஆமா! அவங்க தான். நம்மள விட பலமடங்கு அதிகமா நிலம் நீச்சுள்ள குடும்பம். அவங்களா தான் தேடி வர்றாங்க. ஜாதகப் பொருத்தமும் இருக்கு. அதனால நான் ஆடி முடிஞ்சா பாப்பாளுக்கு குருபலன் ஆரம்பிக்குது. அப்பறமா பேச வரசொல்லியிருக்கேன். சரி தானே!” என்று தாயிடன் காதுகளில் விழவேண்டுமே என சற்றே உறக்கப் பேசியிருந்தார்.

தந்தையின் இந்தப் பேச்சு ஹாலில் டி.வியின் முன்னால் அமர்ந்திருந்த ராகவியின் காதுகளிலும் தெளிவாகக் கேட்டது. குடித்துக் கொண்டிருந்த காபி தொண்டையில் அடைக்க ஆரம்பிக்கவும், பெற்றோர் வீட்டினர் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று மாடிப்படியேறி தன் அறைக்குள் சென்றுவிட்டாள். தந்தை ரத்தினம் சொன்னது போல, படித்து முடித்து ஒரு சில மாதம் வீட்டில் வெட்டியாக பொழுதைப் போக்கிவந்தாள்.

தம்பி ரமேஷும் கல்லூரிக்காக திருச்சியில் தங்கிவிட, இவளுக்கு வீட்டில் நேரம் தள்ளுவது மிகவும் சிரமமாக இருந்தது. அப்போது தான் மன்னார்குடியில் அந்தப் பள்ளியின் “ஆசிரியர் தேவை” விளம்பரம் கண்களில் பட, அங்கே சென்று சேர்ந்தது.

வேலைக்குப் போகட்டுமா?” என்ற பேச்சு வீட்டில் எழவுமே, பாட்டி ஒரு பக்கம், அம்மா ஒருபக்கம் என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவள் பேசிப் பேசி சமாளித்து, “நீங்க பாட்டுக்கு மாப்பிள்ளை பாருங்க. நான் வேலைக்குப் போறேன். எப்போ கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணறீங்களோ அப்போ வேலையை விட்டுடறேன்” என்று திட்டமாகச் சொல்லிய பின்னரே வேலைக்கு அனுப்பியிருந்தனர்.

இன்று தந்தை திருமணப் பேச்சு எடுத்த போது, அவளுக்கு பயமாகவும், அருவருப்பாகவும், ஏதோ திவாகருக்கு பெரிய துரோகம் இழைத்துவிட்டதைப் போலும் தோன்றியது, அவள் மனம் போன போக்கை எண்ணித் துவண்டு போனவள், காலையில் அவன் சிந்திச் சென்ற சிரிப்பை மீண்டும் மீண்டுமாக மனதில் அசைபோட்டு ஆறுதல் தேடிக் கொண்டாள்.