உயிரில் மெய்யாக வா – 13

உயிரில் மெய்யாக வா 13

ராகவி, தன் பெரியப்பா மகள் தர்ஷினியுடன் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சொந்தம் பாராட்டினாள். “என்ன சாப்பிட்ட? என்ன செய்யற?” என நிமிடத்திற்கு நிமிடம் தர்ஷினியுடன் பேசுவதும், தன்னைப் பற்றி பகிர்ந்து கொள்வதுமாக இருந்தாள்.

அதிலும், அனிதாவின் முன்பு தன் வீட்டின் ஒரே சொந்தத்தைப் பற்றி புகழ்வதில் ராகவிக்கு அலாதி பெருமை உண்டாகியிருந்தது. “தர்ஷினி எனக்கு ஒண்ணுவிட்ட பெரியப்பா பொண்ணு தான். ஆனாலும் நானும் அவளும் ரொம்ப க்ளோஸ். சின்ன வயசில இருந்தே என் பின்னாடியே சுத்திட்டு இருப்பா. கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கு அவளுக்கு.” என்று தர்ஷினியைப் பற்றிப் பெருமையாக அனிதாவிடம் தம்பட்டம் அடித்துக் கொள்ளப் பிடித்திருந்தது.

திவாவிடமும் அரசல் புரசலாக தான் தர்ஷினியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று காதில் போட்டு வைத்திருந்தாள். “ஃபேஸ்புக்ல ரிக்வெஸ்ட் குடுத்திருந்தா. நான் ரொம்ப நாள் அக்செப்ட் பண்ணாம தான் இருந்தேன். அப்பறமா தான், தோணுச்சு, ஏன் அக்செப்ட் பண்ணா என்னன்னு. தப்பில்லையே திவா?” என்று திவாவிடம் வினவ, அவனோ ராகவியை ஒரு சந்தேகப் பார்வை பார்த்த பின்பே பதிலளித்தான்.

“நீ பேசறதுனால அவங்க வீட்டில பிரச்சனை ஆகிடாம பார்த்துக்கோ. உன்னால அந்த பொண்ணு அவங்க அப்பாம்மாட்ட திட்டு வாங்கிடப் போகுது” என்று மேம்போக்காக எச்சரிக்கை செய்திருந்தான்.

திவாகரின் எச்சரிக்கை மொழி ராகவிக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும் தன் வீட்டாரைப் பற்றி லேசாகவேணும் தெரிந்து கொள்ளும் ஒரே வாய்ப்பையும் ராகவி இழந்து போக விரும்பவில்லை. தர்ஷினியுடன் பேசும் தருணங்களில் தன் பெற்றோரைப் பற்றி அரசல் புரசலாக விசாரிப்பாள். தர்ஷினி இதற்காகத்தான் அக்கா தன்னிடம் பேசுகிறாளோ என்று தப்பர்த்தம் கண்டுவிடக் கூடாது எனவும் கவனமாக இருப்பாள்.

“ஏன் தர்ஷு, உன் நிட்சயத்துக்கு என் அப்பா அம்மாலாம் வந்திருந்தாங்களா? நிட்சயதார்த்த ஃபோட்டோ இருந்தா செண்ட் பண்ணேன்?” என்று வினவினாள்.

“பெரியப்பா பெரியம்மா வந்திருந்தாங்கக்கா. ரமேஷ் வரலை. ஏதோ என்ஸாம்னு பெரியம்மா சொன்னாங்க” என்று பதிலளித்தாள் தர்ஷினி.

“ஓ அப்படியா?” என்று வினவியவளுக்கு, “என்னைப் பற்றி ஏதேணும் சொன்னார்களா? கடைசிக்கு நான் இல்லையே எனக் கவலைப்படவேணும் செய்தார்களா?” என்று கேட்க ஆவலாக இருந்தது.

 அப்படிக் கேட்பது ரொம்பவும் தவறாக முடியும் என்று உணர்ந்து தன் வாயைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் ராகவி.

தர்ஷினியும் ஒன்றும் அவ்வளவு அம்மாஞ்சி இல்லை. இத்தனை நாட்களும் அவ்வளவாக ஒட்டாத அக்கா, இப்போது திடீரென்று பாசமழை பொழிந்தால் சந்தேகம் வராதா என்ன? அதனால் ராகவியின் மனப்போக்கு பற்றி தர்ஷினியும் அறிந்திருந்தாள்.

முழுவதுமாக தனக்குப் பிரச்சனைகள் வராதபடிக்கு ராகவிக்குப் பதில் சொல்லிப் பழகியிருந்தாள் தர்ஷினி. ராகவி ரொம்பவும் கவலைப்படுவது போலத் தோன்றினால், “அக்கா நான் கல்யாணம் முடிஞ்சு சென்னை தான் வரப்போறேன். உங்க வீட்டுக்குப் பக்கமே வீடு பார்த்து வந்துடறேன். நீங்க சொன்ன மாதிரி நாம ஜாலியா வெளிய போலாம். சரியாக்கா?” என்று மேம்போக்காகப் பேசி ராகவியைச் சமாளிக்க தர்ஷனிக்குத் தெரிந்திருந்தது.

தன் நிட்சயதார்த்த புகைப்பட ஆல்பத்தில் இருந்து ராகவியின் பெற்றோர் நின்றிருந்த புகைப்படத்தை மட்டுமாக வாட்ஸ்ஸப்பில் அனுப்பியிருந்தாள் தர்ஷினி. அதைக்காணவும் ராகவியின் ஏக்கம் பன்மடங்காக அதிகமானதே தவிர, குன்றின்மணி அளவு கூடக் குறையவில்லை.

புகைப்படத்தில் சற்றே தளர்ந்த போய், தோள்கள் இறங்கிப் போய் காணப்பட்ட அவள் தந்தையும். வெறுமனே புன்னகைக்க வேண்டும் என்ற கடமைக்காக இதழ் பிரிக்காமல் சிரித்திருந்த தாயையும் காண ராகவிக்கு மனதில் குற்ற உணர்வு ஊற்றெடுத்திருந்தது.

அதிலும், அவர்களின் இருபுறமும் நின்றிருந்த தர்ஷினியின் பெற்றோர் முகத்தின் தென்பட்ட தேஜசும், முகத்தில் பரவியிருந்த நிம்மதியும் ராகவிக்கு அப்பட்டமாக விளங்கியது.

“இப்படி கிராண்டா எனக்கு கல்யாணம் செஞ்சு பார்க்கணும்னு கனவு கண்டிருப்பீங்கள இல்லையாப்பா? ச்சே! என் பொண்ணுக்கு இப்படியெல்லாம் நடத்திப் பார்க்க முடியாம பண்ணிட்டாளேன்னு நினைச்சிருப்பாங்க இல்ல. சாரிம்மா.. ரொம்ப சாரிப்பா” என்று ஏகத்துக்கும் கவலைப்பட்ட ராகவி, அந்த புகைப்படத்தையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். திவாவிடம் இந்த புகைப்படத்தைக் காட்டும் தைரியம் உண்டாகவில்லை.

ஆனாலும், ஒரு முறை, கைப்பேசியைப் பார்த்துப் பார்த்து இவள் அழுவதை திவா கண்டு கொண்டான். “என்ன இருக்கு மொபைல்ல, அதைப் பார்த்து ஏன் இவளோ அப்செட் ஆகற?” என்று கேட்டுக் கொண்டே இவளிடமிருந்து கைப்பேசியைப் பிடிங்கிப் பார்த்திருந்தான்.

அதில் இருந்த புகைப்படத்தைக்  கண்டவனுக்கு ராகவியின் அழுகைக்கான காரணம் நொடியில் புரிந்தது. திட்டுவானோ, கத்திவிடுவானோ என்று அச்சத்துடன் ராகவி அவனை ஏறிட, அவனோ செல்லமாக ராகவியின் தலையைக் குலுக்கியவன்,

“தர்ஷினி செண்ட் பண்ணாளா?” என்று வினவினான். ராகவி தலையை மட்டும் அசைத்தாள்.

“நம்மாளால அந்த பொண்ணுக்கு எதுவும் தொந்தரவு வந்துடப் போகுதும்மா. கேர்ஃபுல்லா இரு.” என்று மட்டும் எச்சரித்துவிட்டுச் சென்றான்.

அவனுக்குப் பள்ளியில் சற்றே வேலை அதிகமாக இருந்த காரணத்தினால் ராகவியின் பால் அவனது கவனம் சற்றே குறைந்திருந்தது. அவனது அன்பான அரவணைப்பில் எந்த குறைவும் இல்லை தான். ஆனாலும் முழு நேரமும் அவன் கவனம் வீட்டைச் சுற்றியும், ராகவியைப் பற்றியும் நிறைய கவலைப்பட்டுக் கொண்டிருக்கும். ராகவி வேலைக்குச் செல்லத் துவங்கிய பின்னர், அவனது கவலை பன்மடங்கு குறைவுற்றிருந்தது.

அதிலும் சமீபகாலமாக தர்ஷினியுடன் ராகவி அவ்வப்போது பேசுவது கேட்கும் போது,”சரி, ஏதோ ஒரு சின்ன சொந்தமாவது அவளுக்கு வாச்சிருக்கே.” என்று உள்ளுக்குள் மகிழ்ந்து தான் போனான். இதனால் தர்ஷினிக்கு வேறெதுவும் சங்கடம் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் இருந்த போதும், ராகவியின் மகிழ்ச்சிக்கு என்றுமே திவாகர் தடையாக நின்றதில்லை.

இப்போதும் அவள் தர்ஷினி அனுப்பியிருந்த புகைப்படத்தை கண்டு கவலையுடன் அமர்ந்திருந்த போது, சின்ன குழந்தை, வேலை விட்டு வரும் தன் தாய் வாங்கிக் கொண்டு வரும் தின்பண்டகளுக்காகக் காத்திருப்பது போல, முகத்தில் ஏக்கத்துடன் அவன் முகத்தையே ஏறிட்டவளைப் பார்க்கப் பாவமாகத் தோன்றியது.

அதிலும் எங்கே அவன் திட்டிவிடுவானோ என்று அச்சத்துடன் அவன் முகம் பார்த்தபடிக்கு நின்றிருந்த ராகவியைக் காண அவனுக்கு சிரிப்பே மிஞ்சியது.

“அப்பாடா. திவா திட்டுவான்னு நினைச்சேன். நல்லவேளை எதுவும் சொல்லலை” என்று நிம்மதியுற்ற ராகவி, திருட்டுத்தனமாக அப்புகைப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து, துணிச்சலுடன் திவாவின் முன்னாலேயே அதை அவ்வப்போது பார்வையிடுட்டு வந்தாள்.

ராகவியின் அலுவலக வேலைகள் நல்ல படியே சென்று கொண்டிருக்க, மனதின் மூலையில் அந்த ஊதாப் புடவைக்காரியின் நினைப்பும் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். அதிலும் திவாவுடன் அந்த பல்பொருள் அங்காடிக்குச் செல்லும் சமயங்களில் அவளையும் அறியாமல் அவள் கண்கள் அலைபாயும்.

“இதே நேரத்துக்குத் தானே அன்னைக்கும் பார்த்தேன்! இன்னைக்கும் வருவாளோ?” என்று ஊதாப் புடவைக்காரி எங்கேணும் தென்படுகிறாளா என்று தேடலானாள். அன்றைக்கும் அவள் தந்தையுடன் வரமாட்டாளா என்று ஏக்கம் உண்டாயிற்று.

அவள் மனக்குறையைப் பற்றி அந்த ஊதாப் புடவைத் தெரிந்து கொண்டாளோ என்னவோ, அன்று ராகவிக்கு அவள் காட்சியளித்தாள். அன்றும் தன் தந்தையுடன் அவள் வந்திருக்க, ராகவியோ திவாகருடன் வாராமல் அவள் மட்டுமாகத் தனியாக வந்திருந்தாள்.

அன்று அந்த ஊதாப் புடவையின் முகத்தில் என்னவோ மாற்றம் இருப்பதாக ராகவிக்குத் தெரிந்தது. அவள் பொருட்களை எடுத்துப் போடும் பொழுது பின்னூடே மெல்ல நடைபோட்ட வண்ணம், தந்தையும் மகளும் பேசுவதை ஒட்டு கேட்டுக் கொண்டே நடக்கலானாள்.

“பேரிச்சம்பழம் வாங்கலைம்மா. ஒரு கிலோ எடுத்து வை. அப்பறம் அந்த ஹார்லிக்ஸ் விளம்பரம் காட்டறானே டி.வில, அது நல்லாதான்னு பார்த்து, அதையும் வாங்கு.” என்று அந்த முதியவர் மொழிவது ராகவியின் காதுகளில் விழுந்தது. அதிலும் அந்த முதியவரின் கவனம் முழுக்க முழுக்க அவர் பெண்ணின் மீதே குவிந்திருந்தது.

எதிரில் நிறுத்தியிருந்த ஒரு கைப்பிடி தள்ளும் வண்டியை ஊதாப்புடவை கடக்கையில், அந்த முதியவர், பத்திரமாக அந்த வண்டியின் கைப்பிடியை பக்கவாட்டில் நகர்த்துவதும், அதைக் கடைக் கண்ணால் நோட்டம் விட்டபடிக்கே சின்னச் சிரிப்புடன் தந்தையின் பாதுகாப்பை ஏற்றுக் கொண்ட அந்த ஊதா புடவை நடப்பதும் ராகவியினுள் ஒரு பிரளயத்தையே தோற்றுவித்திருந்தனர்.

அதிலும் ஊதா புடவை அவ்வப்போது அவள் வயிற்றின் மீது கையைக் கொண்டு தடவியபடிக்கே நடக்க, ராகவிக்கு அவள் முகத்தில் என்ன புதிய வித்தியாசம் என்பது சட்டெனப் புரிந்தது. “ஓ, ப்ரெக்னென்டா இருக்காளா? அதனால தான் அவ அப்பா இவளோ கவனமா அவளைக் கூட்டிப் போறாரா?” என்று எண்ணியவள் அவளையும் அறியாமல் இருவரையும் அந்த சூப்பர் மார்கெட்டினுள்  பின் தொடர்ந்தாள்.

ஊதா புடவையின் தந்தை ஷெல்ஃபில் இருந்து எதையோ எடுத்து கூடைக்குள் வைக்க, “அப்பா, அவர் முந்தா நேத்து தான் நட்ஸ்ஸும் டேட்ஸும் நிறைய வாங்கிட்டு வந்தார். அது தீரட்டும். அடுத்த வாரம் வாங்கிக்கலாம். சத்தா சாப்பிட்டாலே போதும் பா, தேவையில்லாம கண்டதையும் எடுக்காதீங்க” என்று செல்லமாகத் தன் தந்தையிடம் கோபித்துக் கொண்டவள், அவர் எடுத்த பாக்கெட்டை திரும்ப ஷெல்பில் வைத்துவிட்டாள்.

மகள் முன்னே சென்றதும் பின்னூடே வந்து அதே “ஹார்லிக்ஸ்” டப்பாவை திரும்ப எடுத்துச் சென்று மகள் அறியாமல் திரும்ப கூடையில் போட்டு வந்தார் அந்தப் பெரியவர்.

இருவரின் பேச்சும் செய்கையும் காணக் காண ராகவிக்கு மனதைப் பிசைந்தது. ஒரு வேளைத் தான் கருவுற்றால் ரத்தினம் இப்படியெல்லாம் நடந்து கொள்வாரோ என்ற எண்ணமும், அத்தோடு காத்திருந்தது போல, அவர் முகம் பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டதே என்ற நிதர்சனமும் புரிபட, தொண்டையிலிருந்து ஒரு கேவல் எழுந்தது.

சுற்றம் உணர்ந்து தன் கண்களின் கரிப்பை கட்டுப்படுத்தியவள், எடுத்திருந்த பொருட்களை பில் போட கவுண்டரின் மீது பரப்பினாள். அவளுக்கு முன்னரே ஊதா புடவையும், அவள் தந்தையும் அங்காடியின் வாயிலை நோக்கி நகர்ந்திருந்தனர்.

அவர்கள் இந்த ஏரியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகத் தெரிய, அவர்களைப் பற்றி அந்த பில் கவுண்டரில் விசாரித்தாள். “இப்போ வெளியே போனாங்களே! அவங்க இங்க அடிக்கடி வருவாங்களா?” என்று சம்பந்தமில்லாமல் கடை ஊழியரிடம் வினவினாள்.

அந்த இளைஞன், யார் சென்றார்கள் என்று நோட்டம் விட, அவர்கள் வாயிலைக் கடந்திருந்தனர். அந்த இளைஞன் ராகவியின் மீது ஒரு விசித்திரமான பார்வை செலுத்திவிட்டு, “தெரியலை மேம். நான் வேலைக்குப் புதுசு” என்று பொத்தம் பொதுவாக பதிலளித்தான். “கடைக்கு வர்ற எல்லாரோட வீட்டு அட்ரெஸ்ஸும் தெரிஞ்சு வச்சுட்டு இருக்க முடியுமா?” என்ற எண்ணத்துடன் அவன் கண்களைக் குறுக்கிக் கொண்டு அவளைப் பார்ப்பது போலத் தோன்ற, ராகவிக்குச் சங்கடமாக இருந்தது.

“இல்ல, அவங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருந்துச்சு. அதான் கேட்டேன்.” என்று சமாளிப்பாக ஏதோ உளறினாள்.

“தெரியலை மேம்” என்று அந்த அங்காடி இளைஞன் சொல்லிவிட்டு, பில் போடும் வேலையில் கவனமானான். கண்ணாடித் தடுப்புகளின் முன்னால் காரில் ஏறிச் சென்ற ஊதா புடவையையும், அவள் தந்தையையும் கண்களால் விழுங்கிக் கொண்டே நின்றிருந்தாள் ராகவி.

அந்தப் பெரியவர், முதலில் ஊதாப் புடவையைப் பாங்காகக் கைபிடித்து காரினுள் அமரவைத்து விட்டு, ஓடிச் சென்று ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தார்.

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அவளை “மேம்.. மேம்” என்று சத்தமாக அழைத்த கடை ஊழியன், “உங்க பில்” என்று அவள் கையில் காகிதத்தைத் திணித்துவிட்டு அடுத்த வேலையில் ஈடுபட்டான்.

“கண்ணைத் திறந்துட்டே கனவு காண்றாங்க” என்று அவன் தெளிவாக முணுமுணுப்பது கேட்கவும் ராகவிக்குக் கூச்சமாகப் போயிற்று. வேகமாக அங்கிருந்து வீடு நோக்கி எட்டு வைத்தாள். என்ன காரணத்திலானோ அவளுக்கு மேலும் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

“இந்நேரம் திவா வீட்டுக்கு வந்திருப்பான்.” என்ற எண்ணமும், அவன் முன்னால் அழுதால் அவன் மேலும் கவலை கொள்ளக் கூடும் என்று உணர்ந்தவள், தன்னை வெகுவாக ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

இவள் மெது மெதுவாக அவர்களது அப்பார்ட்மெண்ட்டை நோக்கி நடந்து கொண்டிருக்க, அவள் யோசனை முழுவதையும் அந்த ஊதா புடவையும், அவள் தந்தையின் வாஞ்சையும் நிறைத்திருந்தது. தூரத்திலிருந்து அவர்களைக் காண தன்னையே காண்பது போலவும், அவள் மனதில் தோன்றும் மகிழ்ச்சியும் தன்னுடையாதவே பாவிக்கத் துவங்கினாள்.

அவள் எண்ணம் தவறானது என்று திடமாகத் தெரிந்த போதும் அதைக் கட்டுப்படுத்தும் வழிவகை தான் ராகவிக்குப் பிடிபடவில்லை. எப்படித் தன் பெற்றோருடன் நல்லுறவு ஏற்படுத்துவது என்று யோசித்துக் கொண்டே வீட்டிற்குச் சென்றவளுக்கு,

“அக்கா, என் கல்யாணப் பத்திரிக்கை பிரிண்ட் போட்டு வந்திருச்சு. சொந்த காரங்களுக்கு ஒரு டிசைன். ஃப்ரெண்ட்ஸ்க்கு குடுக்க ஒரு டிசைன். நல்லா இருக்கா?””என்று கேட்டு, இரு பத்திரிக்கைகளை அவள் கைப்பேசிக்கு அனுப்பியிருந்தாள் தர்ஷினி.

தர்ஷினியின் செய்தியைக் காணவும் ராகவியின் மனதில் அந்த விபரீத யோசனைத் தோன்றியிருந்தது.