உயிரில் மெய்யாக வா – 12

உயிரில் மெய்யாக வா 12

அடுத்த இரண்டு தினங்களும் சுகன்யா அலுவலகம் வரவில்லை. அதனால் ராகவி மட்டுமே தனியாகச் செல்லும் படிக்கு நேர்ந்தது. வழக்கமாக பேருந்து நிலையத்தில் சுகன்யாவுடன் கதை பேசிக் கொண்டு நின்றிருக்கும் ராகவி, அன்று சுற்றும் முற்றும் நிற்கும் நபர்களையும், வேகமாகக் கடக்கும் வாகனங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள்.

பேருந்து நிலையத்தின் அருகில் சரக்கென வந்து நின்ற அந்த வெள்ளை வண்ணக்காரினால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராகவியின் கவனம் கலைந்தது. ராகவி கொஞ்சமும் எதிர்பாராத விதமாக, அந்த காரிலிருந்து இறங்கினாள் நேற்று சூப்பர் மார்கெட்டில் பார்த்த பெண்.

அழகிய மங்கிய ஊதா வண்ணத்தில் புடவையும் அதற்கு காண்டிராஸ்டாக அடிக்கும் ஊதா நிறத்தில் ரவிக்கையும், கழுத்தில் தொங்கிய பெரிய டாலர் கொண்ட மணி மாலையும், கையில் விலையுயர்ந்த ஹேண்ட் பேக்கும் என தோரனையுடன் இறங்கிய அந்தப் பெண், “பை.. சீ யூ” எனக் காரினுள் இருந்த நபருக்கு கையசைத்து விடை கொடுத்தாள்.

கார் கிளம்பி விட்டிருக்க, அந்த ஊதாப்பூ பெண் இவள் நின்றிருந்த பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றாள். ராகவிக்கு அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அனைவருமே அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தது போலத் தோன்றியது.

நிஜத்தில் அவளைத் தவிர வேறு எவரும் அப்பெண்ணைச் சட்டை செய்யவில்லை. அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர். இது புரியவும், ஆவெனப் அந்தப் பெண்ணைப் பார்ப்பதை நிறுத்துவிட்டு, தன் அலுவலகப் பேருந்து வருகிறதா என ரோட்டை கவனிக்கலானாள் ராகவி.

சற்று நேரத்தில் இவர்களது பேருந்து வந்துவிட, அதிசயத்திலும் அதிசயமாக அந்தப் பெண்ணும் ராகவியின் அலுவலகப் பேருந்தில் தான் ஏறினாள். ஏறிய ஊதா நிறப் புடவைக்காரி நேரே பேருந்தின் பின் பக்க இருக்கைகளை நோக்கி நகர்ந்து விட்டிருந்தாள்.

“சே, சுகன்யா இருந்திருந்தா, இந்த லேடி யாரு என்னன்னு விசாரிச்சிருக்கலாம். சுகன்யா ரெண்டு மூனு வருஷம் இந்த கம்பெனியில வேலை பார்க்கறதுனால அவளுக்கு கண்டிப்பா இவளைப் பத்தி தெரிஞ்சிருக்கும். ஏறினதும் நேரா பின்னாடி போய் உட்கார்றாளே! கொஞ்ச பேர் இவளைப் பார்த்து கை அசைக்கறாங்க, ஹாய் சொல்லறாங்க. எந்த டீம்ல வேலை பார்க்கறவ?” என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தாள் ராகவி.

ஏனோ அந்த ஊதா புடவைக்காரியின் மேல் ராகவிக்கு ஒரு தனி கவனம் உண்டாயிற்று. அவள் யார், எங்கிருக்கிறாள், அவள் பின்புலம் என்ன என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தோன்றியது.

அலுவலகத்தில் இறங்கியதும், புடவையைச் சரி செய்பவள் போல பாவனை செய்த ராகவி சற்றே நேரம் கடத்த, அந்த ஊதா புடவை யாருடனோ பேசிக் கொண்டே அலுவலகத்தினுள் சென்றுவிட்டாள். அவள் வேலை செய்யும் பகுதிக்குள் செல்ல ராகவிக்கு அனுமதியில்லை என்பதால் தன் பகுதிக்குள் சென்ற ராகவிக்கு அன்று வேலையே ஓடவில்லை.

“7த் ஃப்ளோருக்கு மேலே எல்லாமே டெவலப்மெண்ட் டீம் தான் இருப்பாங்கன்னு சுகன்யா சொல்லியிருக்கா. சோ, இவ இங்க நல்ல போஸ்டில வேலை பார்க்கணும். சே, நான் என்ன இந்த பொண்ணைப் பத்தி இவளோ யோசிக்கறேன்.” என்று பலவாறாக எண்ணம் கொண்டவள் அன்றைய தினத்தைக் கழித்தாள்.

மாலையில் அந்தப் பெண்ணைக் காணும் ஆர்வம் இன்னமும் மேலோங்கியது ராகவிக்கு. ”நம்ம அப்பார்மெண்ட் பக்கத்தில தான் வீடு இருக்கணும். அதனால தானே அந்த சூப்பர் மார்கெட்டுக்கு வந்திருக்கா. ஈவினிங் எந்த வழியா போறான்னு நோட் பண்ணனும்.” என்ற ஆர்வத்துடன் மாலைப் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் ராகவி. ஆனால் வண்டி புறப்படும் சமயம் வரையிலும் அந்த ஊதா புடவை வரவேயில்லை.

சுற்றும் முற்றும் பார்வையைச் சுழட்ட, அலுவலகத்தின் வாயில் ஓரமாக நின்றிருந்த வெள்ளை வண்ணக் காரில் ஊதாப் புடவைக்காரி ஏறுவதைக் கடைசி நிமிடத்தில் காண முடிந்தது.

மாலையில் அவள் கணவன் வந்து அழைத்துச் செல்வான் போலும் என்று எண்ணியவள், அந்த வெள்ளை வண்டி கண்ணில் இருந்து மறையும் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாலையில் திவாவிடம் அந்தப் பெண்ணைப் பற்றி சொல்லிவிட பெரிதும் ஆவல் கொண்டாள். ஆனால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. “இந்த மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்தேன். நேத்தும் சூப்பர் மார்கெட்டில அவங்க அப்பா கூட பார்த்தேன்.” என்று சொன்னால் திவா என்ன நினைப்பான் என்ற எண்ணம் தோன்றியது.

அதை விடவும், “இதில் பிரமாதமாக அவனிடம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு என்ன விஷயம் இருக்கிறது? அதுவுமில்லாமல், அந்தப் பெண்ணைப் பார்த்தால் எனக்கு, நானும் என் தந்தையும் நடந்து கொள்வதைப் போல ஒரு தோற்றம் உண்டாகிறது. அவள் மீது காரணமில்லாமல் ஒரு பிரேமையும், ஒரு உரிமையும் தோன்றுகிறது. இவளை எனக்கு நன்றாகத் தெரியும் என்பதாக ஒரு நட்புணர்வு ஏற்பட்டுவிட்டது” என்றெல்லாம் திவாவிடம் கூறினால் அவன் என்ன விதமாக நினைப்பான் என ராகவியால் அனுமானிக்க இயலவில்லை.

“அந்த பொண்ணு, யாரு எவருன்னே உனக்கு தெரியாது. பேர் என்ன, எங்க இருக்கா, அவ எப்படிப்பட்டவன்னு எதுவும் தெரியாது. தூரத்தில இருந்து ரெண்டு தடவை பார்த்திருக்க, அதுக்கே உனக்கு ஒரு ஃப்ரெண்ட்ஷிப் தோணிருச்சா. மாடர்ன் பிசிராந்தையார் மாதிரியா இது!” என்று நக்கல் செய்யக் கூடும். அதுவுமில்லாமல், அவளுக்குமே அவள் செய்கை சிரிப்பை வரவழைத்திருந்தது.

அதனால் திவாவிடம் அந்தப் பெண்ணைப் பற்றி இப்போதைக்குச் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்தாள்.

அடுத்த தினமும், அந்தப் பெண்ணைக் காணும் ஆவலுடன் ராகவி தயாரானாள். அன்றும் பேருந்து நிறுத்தத்திற்குத் தன் கணவனுடன் காரில் வந்து இறங்கினாள் அந்த ஊதாப் புடவை பெண். இன்று, முழுவதுமாக மெல்லிய சந்தன வண்ணத்தில் அழகான குர்த்தியும் அதற்குத் தோதாக காதணி, செருப்பு என அணிந்திருந்தாள்.

அவளைப் பற்றி எண்ணும் போதே, “ஊதா புடவை” என்று ராகவியின் மனதில் அந்த வண்ணம் படர்ந்து விடும். பேருந்து ஏறியதும் பின் இருக்கைக்குச் சென்று விட்டாள். மாலை, கணவன் வந்து காரில் அழைத்துச் சென்றுவிட்டான். அதனால், அந்தப் பெண்ணைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ராகவியால் இயலவில்லை.

இரண்டொரு நாட்களில் சுகன்யா திரும்ப வந்துவிட, அன்று அவளிடம் அந்த ”ஊதா புடவை”யைக் காட்டி அவள் யார் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் உண்டாயிற்று.

ராகவியின் நேரமோ என்னவோ, காலையில் பேருந்து நிறுத்தத்தில் சுகன்யாவுடன் அவள் நின்றிருக்க, அந்த “ஊதா புடவை” அன்று வரவில்லை. பேருந்து வந்த பின்பும் கூட, அந்தப் பெண் வருகிறாளா என எதிர்பார்த்து பேருந்து ஏற சற்றே தயங்கம் காட்டினாள் ராகவி.

“ஏ ஏறு ராகவி!” என்று சுகன்யா உந்திய பின்பே பேருந்தில் ஏறினாள். ராகவிக்கு அந்தப் பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள பெரும் ஆவல் எழுந்தது.

“சுகன்யா, நம்ம ஸ்டாப்ல ரெண்டு நாளா ஒரு லேடி ஏறினாங்க. கொஞ்சம் ஹை கிளாஸா, நல்ல ரிச் லுக்கா இருந்தாங்க பார்க்க. அவங்க யாருன்னு தெரியுமா?”

“நம்ம ஸ்டாப்பிங்லையா? தெரியலையே. இன்னைக்கு வந்திருக்காங்களா?” என சுகன்யாவும் ஆர்வமாக வினவினாள்.

“இல்ல, சுகன்யா. இன்னைக்கு வரலை அவங்க. அதான் வர்றாங்களான்னு பார்த்தேன்.”

“அது, சில நேரம் ப்ராஜெக்டுக்காக நம்ம வேற பிரான்ச் ஆபீஸ்ல இருந்து சிலர் இப்படி கொஞ்ச நாள் வருவாங்க. அப்படி வந்திருப்பாங்களா இருக்கும். ஒரு வாரம், நாலு நாள் இப்படி வருவாங்க. நம்ம ஸ்டாப்பிங்னா எனக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். மொத்தமே நம்ம ஸ்டாப்ல ஒரு ஐஞ்சாறு பேர் தானே ஏறுவாங்க.” என்று சுகன்யா கூறியதை ராகவி ஏற்றுக் கொண்டாள்.

அன்றைய தினம் மாலை, பேருந்து ஏறும் போது, மறக்காமல் அந்த ஊதா புடவை தென்படுகிறாளா என்று கவனித்து வண்ணம் தான் இருந்தாள். ஆனால் அவளைக் காணவில்லை.

சுகன்யா தான் ஊருக்கு சென்று வந்த நிகழ்வைப் பற்றி பேசத் துவங்கிவிட்டிருந்தாள். “உன் அப்பாவுக்கு எப்படியிருக்கு சுகன்யா? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று விசாரிக்கத் துவங்கினாள் ராகவி. அதன் பிறகு அந்தப் பெண்ணைப் பற்றி அவ்வளவாக எண்ணம் ஏற்படவில்லை. சுகன்யாவின் புலம்பலில் ராகவியின் கவனம் குவிந்து போய்விட மற்ற எண்ணங்கள் பின்னுக்குப் போய்விட்டன.

சுகன்யா தன் தந்தையின் உடல் நிலை குறித்தும், இங்கே சென்னை அழைத்து வந்து மேலே பரிசோதிக்க வேண்டும் என்பது குறித்தும் பேசிக் கொண்டே வர, ராகவிக்கு அவள் தந்தை ரத்தினத்தைப் பற்றிய எண்ணம் அதிகமாக எழுந்தது.

“அப்பாவுக்கு கால் பண்ணி பார்க்கலாமா? பேசுவாறா? நான் கால் பண்ணா எடுப்பாறோ என்னவோ? பேசாம கட் பண்ணிட்டா அதை என்னால தாங்க முடியுமா? ரமேஷுக்காவது பேசிப் பார்க்கலாமா? அவன் என்னை இன்னமும் அன்பிலாக் கூட பண்ணலை. மெசஞ்சர், ஃபேஸ்புக்னு ஒரு இடம் விடாம ப்ளாக் பண்ணி வச்சிருக்கான்.””

“அம்மாவுக்கு கூப்பிடலாமா? ஆனா அந்த கிழவி கூடவே இருக்குமே. அம்மா பேசணும்னு நினைச்சாலும், அந்த கிழவி விடாதே!” என்றெல்லாம் எண்ணம் கொண்டாள் ராகவி. திருமணம் முடிவடைந்த இந்த ஏழெட்டு மாதத்தில் அவளுக்கு இது போல் தன் வீட்டினரைத் தானாகத் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்ற யோசனையோ, அதற்கான தைரியமோ எழுந்ததில்லை.

அவ்வப்போது, திவாகரின் நண்பன் கோகுலின் மூலமாக, அங்கே நடக்கு விஷயங்களைப் பற்றி தகவல் தெரிந்து கொள்வாள். கோகுலிடம் திவாகர் அடிக்கடி விசாரித்துக் கொள்கிறான் என்று ராகவிக்குத் தெரியும். ஆனால், திவா முழுவதுமாக ராகவியிடம் பகிர்ந்து கொள்ள மாட்டான்.

“கோகுல் எதாவது சொன்னாரா? அப்பா, அம்மா எப்படியிருக்காங்கன்னு விசாரிங்களேன்” என்று ராகவியாக கேட்டால் கூட,

“எதாவது விஷயம்னா கோகுலே சொல்லுவான். வாரா வாரம் விசாரிச்சுட்டு இருக்க முடியுமா ராகவி? அவனுக்கும் வேற வேலை வெட்டியெல்லாம் இருக்கும்ல” என்று சிரிப்புடன் தான் சொல்வான் எனும் போதும், அவன் பேச்சும் தோரனையில், “இதற்கு மேல் கேட்காதே” என்ற பாவனை வெளிபடும். ராகவி அமைதியாகிவிடுவாள்.

அதிலும் சமீபமாக, சுகன்யாவின் தந்தையின் உடல் நிலை குறித்த செய்தியும், முக்கியமாக, அந்த ஊதா நிற புடவைப் பெண்ணும் அவள் தந்தையும் பேசிச் சென்ற விதமும் கண்ட பின்னர், ராகவியின் மனதில் தன் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற பேராவல் உண்டானது.

முடிந்த மட்டில் தன் எண்ணங்களை திவாவிடம் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றவள், இரண்டு நாட்கள் யோசனைக்குப் பிறகு, தன் சித்தப்பா செல்வகணேசனைத் தொடர்பு கொண்டு பேசலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

“சித்தப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.  ராகவிம்மா, ராகவி குட்டின்னு என் மேல ரொம்ப பிரியமா இருப்பார். அன்னைக்கு திவாகர் வீட்டுக்கு வந்தப்போ கூட என்கிட்ட கோவமா பேசலை. ஓரளவு நல்ல விதமா தான் பேசினார்.” என்று தானாவே ஒரு முடிவை எட்டியவள், திவாகர் வெளியே சென்றிருந்த சமயம், தன் கைப்பேசியில் இருந்து சித்தப்பா செல்வகணேசனின் எண்ணிற்கு அழைத்தாள்.

இரண்டு முறை அழைப்பு விடுத்துமே அழைப்பு எடுக்கப்படவில்லை. ராகவிக்கு சப்பென்றாகிப் போனது. அழைப்பை தன் சித்தப்பா எடுக்கவில்லை என்றதுமே மனம் துவண்டு போனது அவளுக்கு. தன் வீட்டினரில் கொஞ்சம் தன் மீது கரிசனம் கொண்டவர் என்று ராகவி எண்ணியிருந்த ஒரே மனிதரும் கைப்பேசி அழைப்பை ஏற்காமல் போக, ராகவியின் நெஞ்சம் சொல்லொன்னா துக்கத்தில் ஆழ்ந்தது.

பொங்கி வந்த கண்ணீரை அடக்காமல் சோஃபாவில் தேற்றுவார் இன்றி அழத் துவங்கினாள். தான் இழந்துவிட்ட அன்பும், கரிசனமும் பன்மடங்காக திவாவிடமிருந்து அவளுக்குக் கிட்டியது என்ற போதும், இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவது தானே மனித மனம். அந்த குரங்கு மனதின் தூபத்தால், ராகவி, அன்றிலிருந்து தன் வீட்டு ஆட்களிடம் ஏதாவது ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு விட வேண்டும் என்ற ஆவல் கொண்டாள்.

மூத்த தலை முறையினர், இவளிடம் பாகுபாடுகாட்டுவர் என்பது புரிய, அவள் வயதை ஒத்த அவள் தம்பி, தங்கைகள், சிற்றப்பா மகன்கள், ஒன்றுவிட்ட பெரியப்பா பெண்கள் என ஃபேஸ்புக், டிவிட்டர் என்று தன் வலைவீச்சைத் தொடர்ந்தாள்.

அன்பு தேடலுக்கான வலையில் அவளுக்கு வாகாகச் சிக்கியது, ராகவியின் ஒன்றுவிட்ட பெரியப்பாவின் இளைய மகள், தர்ஷினி. தன் ஃபேஸ்புக் ரிக்வெஸ்டை தர்ஷினி ஏற்றுக் கொண்டதுமே ராகவி, ஒரு பெரும் உறவுப் பாலத்தை உருவாக்கித் துவங்கியிருந்தாள்.

“எப்படி இருக்கீங்க அக்கா?” என்ற தர்ஷினி கேள்விக்கு, பத்தி பத்தியாக பதில் அனுப்புவதும், “ஹாய், வாட் டூயிங்?” என்று காலை, மாலை என நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளிடம் பேச்சு கொடுப்பதும், அங்கே நடக்கும் விஷயங்களைப் பற்றி கேள்வி கேட்டுக் குடைவதுமாக இருந்தாள் ராகவி. இதையெல்லாம் திவாவிடம் மறந்தும் சொல்லிவிடவில்லை.