உயிரில் மெய்யாக வா 11

உயிரில் மெய்யாக வா 11

சில தினங்களாகவே ராகவி தன் நிலை மறந்து நடமாடத் துவங்குவதும், சரி வர உண்ணாமல் உறங்காமல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வதுமாக இருந்தாள். தான் செய்வது தவறு என்று அவளுக்குமே புரிந்து தானிருந்தது.

“இப்படியே போனா லூசாகிடுவோம் சீக்கரம்” என்று எண்ணம் ஏற்படவும் சற்றே சுதாரித்தாள் ராகவி. அதுவுமில்லாமல் திவாகர் காலையில் சென்றால் விடு வர மாலையாகிவிடும். அதுவரையுலும் ராகவிக்கு தனிமை மிகவும் கொடுமையாக இருந்தது.

அன்று திவா மாலையில் வீடு வந்ததுமே அவளது முடிவை அமலாக்கப்படுத்த துவங்கினாள் ராகவி. “திவா, நம்ம பி-பிளாக் சுகன்யா ஒரு கம்பெனில வேலை பார்க்கறாங்க இல்ல. அங்க இப்போ வேகன்சி இருக்காம் திவா.நான் வேலைக்குப் போகவா?” என அவன் பதில் தெரிந்து கொண்டே கேள்வி கேட்டாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, “எதுக்கும்மா வேலைக்குலாம். நான் சம்பாரிக்கறது போதும். நீ ஏன் கஷ்டப்படணும்?” என்று பதிலளித்தான். அவனைப் பொறுத்தவரையில் ராகவியை வேலைக்கு அனுப்பி துன்பப்படுத்துவது கூடாது என்று எண்ணம் கொண்டிருந்தான். முன்னர் அவன் பள்ளியில் ஏதேணும் வேலை காலி இருக்குமா என அவள் வினவிய போதும் இதே பதிலைத் தான் சொல்லியிருந்தான்.

“உன்னை கஷ்டப்படுத்தாம பார்த்துக்கணும்னு நான் நினைக்கறேன். வேணும்னா நாலு பசங்களுக்கு டியூஷன் சொல்லிக் குடு. டைம் பாஸ் ஆகும். வேலைக்குலாம் வேணாம்டா. ரொம்ப ஸ்டிரெஸ்ஸாகும்” என்று மறுத்துவிட்டிருந்தான். அதே பதிலை இப்போதும் சொல்ல, ராகவி இம்முறை சற்றே திடமாக அவனை எதிர்த்துப் பேசினாள்.

“நீங்க ஈஸியா சொல்லிடரீங்க. நீங்க வேலைக்குப் போனதுக்கு அப்பறம் எனக்கு எவளோ போர் அடிக்குது தெரியுமா திவா. ரொம்ப லோன்லியா இருக்கு திவா.”

“அதான் உன் ஃப்ரெண்ட் அனிதா இருக்காங்களே. அவங்க கூட வெளிய போயிட்டு வா. வேலைக்கு போனா ரொம்ப ஹெக்டிக்கா இருக்கும்டா. புரிஞ்சுக்கோ” என்று மறுப்பாகவே பேச ராகவியின் முகம் பொலிவிழந்து போயிற்று. இவனிடம் எப்படிச் சொல்லி புரிய வைக்க என்ற எண்ணம் கொண்டவள் இரண்டு நாட்கள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே திரிந்தாள்.

அவள் எதிர்பார்த்தது போல, திவாகரின் மனம் மாற்றம் கொண்டது.” சரி, நீ இவளோ தூரம் ஆசைப்படறதுனால நான் ஒ.கே சொல்லறேன். பட், வேலை ஸ்டிரெஸ்ஸா இருந்தா கண்டிப்பா நீயா விட்டுடணும். இழுத்து போட்டு வேலை செய்யக் கூடாது. ஐ.டி வேலை கஷ்டமா இருக்கும் ஸ்டிரெஸ்ஸா இருக்கும்னு நிறைய சொல்லறாங்க” என்று கூறினான்.

“ஐயோ திவா. ஐ.டி வேலைக்கு என்னை யார் வா வான்னு வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடறா. நான் அதே ஐ.டி கம்பெனியில டேட்டா அனாலிஸ்ட் வேலைக்கு தான் போகப் போறேன்.”

“அப்படின்னா? புரியலை. நீ எஞ்சினியரிங் தானே படிச்ச. அப்போ ஐ.டி வேலை தானே கிடைக்கும்.”

“எஞ்சினியரிங் படிச்சேன் தான். ஆனா, எனக்கு மூணு வருஷ கேப் இருக்குல. அதுவுமில்லாம, ஒன்னரை வருஷம் ஸ்கூல்ல வேலை பார்த்திருக்கேன். அதனால உடனேலாம் ஐ.டில எடுத்துக்க மாட்டாங்க. அதுக்கு திரும்ப ஏதாவது கோர்ஸ் படிக்கணும். எனக்கு படிக்க இண்டிரெஸ்ட் இல்ல. சோ. இந்த வேலை செட் ஆகும் திவா. சுகன்யாவும் டேட்டா அனாலிஸ்டா தான் இருக்காங்க. சோ, போக வர கம்பெனிக்கு ஆளும் இருக்கும்” என்று படபடவென ராகவி பேச, திவாகர் சம்மதம் தெரிவித்தான்.

இத்தனை நாட்கள் கழித்து ராகவி சற்றே நிம்மதியாக வலம் வருவது போலத் தோன்றியது அவனுக்கு. அவள் மகிழ்ச்சி முக்கியம் என்ற எண்ணத்தில் ராகவியை வேலைக்கு அனுப்பினான்.

ராகவியும், சுகன்யாவுடன் சேர்ந்து அந்த கணினி நிறுவனத்தில் பணிக்குச் செல்லத் துவங்கி ஒரு மாதம் சடுதியில் கழிந்திருந்தது. அவர்கள் வசித்த அப்பார்ட்மெண்டில் இருந்து பேருந்து நிலையம் சென்றால் அங்கே கம்பெனி பேருந்து வந்துவிடும். காலையில் சுகன்யாவின் கணவர் அவளை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுச் செல்வார்.

திவாவிற்குப் பள்ளி சீக்கிரமே துவங்கிவிடும் என்பதால், அவனால் ராகவியை நிறுத்தத்தில் இறக்கி விட இயலாது. அதனால் ராகவி காலையில் தனியாக பேருந்து நிறுத்தம் வரையிலும் நடந்து செல்வாள். மாலையில் சுகன்யாவுடன் பேசிக் கொண்டே, வழியில் விற்கும் காய்கறி பழங்கள் என வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்வாள்.

இந்த வேலையும், சுகன்யாவின் நட்பும் அவளுக்கு மிகுந்த அமைதியைக் கொடுத்திருந்தன. அன்றும் மாலையில் சுகன்யாவுடன் பேசிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருக்க, சுகன்யாவிற்கு அவள் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. “என்னாச்சு? என்ன சொல்லறீங்க? அச்சோ? இப்போ எப்படியிருக்கு? அவருக்கு ஆபீஸ்ல ஆடிட்டிங்க். நான் நைட் கிளம்ப பார்க்கறேன்மா” என்று சுகன்யா படபடப்பாக பேசி முடித்தாள்.

ஒரு பக்க பேச்சு வார்த்தையை வைத்தே சுகன்யாவின் வீட்டில் ஏதோ பிரச்சனை என ராகவியால் யூகிக்க முடிந்தது. கைப்பேசி அணைத்ததுமே, “என்னாச்சு சுகன்யா? எதும் பிராப்ளமா?” என ராகவி கேட்கக் கேட்க, சுகன்யா நடு வீதி என்று கூடப் பாராமல் அழுகத் துவங்கியிருந்தாள்.

“அப்பாவுக்கு, ஹார்ட் அட்டாக் ஆம். ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. கொஞ்சம் மாஸிவ் அட்டாக்கு சொல்லறாங்க. பயமா இருக்கு ராகவி” என்று விஷயத்தை சொல்லும் போதே சுகன்யாவால் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. சுகன்யாவை சமாதானம் செய்து, தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, அவள் வீடு வரையிலும் உடன் சென்று விட்டுவிட்ட பிறகே ராகவி தன் இல்லம் திரும்பினாள்.

வெளியே சுகன்யாவிற்கு ஆறுதலாக பேசிய போதும், ராகவியின் மனதில் அவள் தந்தையின் உருவம் வந்து வந்து போனது. இவள் திவாகரைக் காதலிக்கிறேன் என்று சொன்ன போது, அவர் முகம் கருத்துப் போனதும், படபடப்புடன் சோஃபாவில் அமர்ந்து கொண்டதும் மனக்கண்ணில் வந்து சென்றன.

“என் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தா என்கிட்ட சொல்லக் கூட மாட்டாங்க இல்ல. இப்போ என்ன பண்ணறாங்கன்னு கூட தெரியாது எனக்கு. ஏன் இப்படி ஒரு நிலைமை எனக்கு குடுத்திருக்க ஆண்டவா?” என்று எண்ணி மருகிப் போனவள், விளக்கு கூட போடாமல் இருளிலேயே நெடு நேரம் அமர்ந்திருந்தாள்.

திவாகர் வீடு வந்து சேர, இருளில் மூழ்கியிருந்த வீட்டைக் கண்டு துணுக்குற்றான். ஹாலில் கல்லென அமர்ந்திருந்த ராகவியைக் காண அவனுக்கு பயம் ஏற்பட்டது.

“ராகவி, ராகவிம்மா..  என்னாச்சு? ஏன் லைட் கூட போடாம உட்கார்ந்திருக்க?” என்று  அவன் உருக்கத்துடன் வினவ, அவன் தோளைக் கட்டிக் கொண்டு ஒரு பாடு அழுது தீர்த்தாள்.

“சுகன்யா, சுகன்யா அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்” என்று அவள் சொல்லி முடிக்கும் வரையில் திவாகர் பதறித்தான் போனான். அவனுக்கு முதலில் ராகவியின் எண்ணவோட்டமே புரிபடவில்லை. “அவங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்னா இவ ஏன் அழுகறா? அவளோ பூஞ்சை மனசில்லையே ராகவிக்கு” என்றே முதலில் எண்ணம் கொண்டான். அவள் கொஞ்சமும் நிறுத்தாமல் மீண்டும் அழுகத் துவங்க, அதன் பின்னரே அவள் சுகன்யாவின் தந்தைக்காக அழுகவில்லை, அவள் தந்தை ரத்தினத்தை எண்ணிக் கொண்டு வருத்தப்படுகிறாள் என்ற விஷயமே புரிந்தது.

இச்செய்தி திவாகரின் மூளைக்குச் சென்று சேர அவனுக்கு முதல் முறையாக ஆத்திரம் எழுந்தது. “யாருக்கோ ஹார்ட் அட்டாக்னா நீ உன் அப்பாவை நினைச்சு கவலைப்படணும்னு ஏதாச்சும் இருக்கா ராகவி? ரொம்ப சில்லியா இருக்கு உன் பேச்சு”என்று பட்டென பதில் சொன்னவன், அவள் அழுவதைப் பொருட்படுத்தாமல் எழுந்து அறைக்குள் சென்றிருந்தான்.

அவன் மனதில் ராகவியின் செய்கைக்கு எந்த விதமாக அர்த்தம் கற்பித்துப் பார்த்தாலும் அது தப்பாகவே தோன்றியது. “இவ வீட்டு ஆளுங்க மட்டுமே தான் முக்கியமா? இவளோ தூரம் இவளுக்காக நான் பார்த்து பார்த்து ஒவ்வொண்ணும் செய்யறேன். அது பெருசா தெரியலையா?” என்ற கோபம் ஏற்பட, இந்த கோபம் தணியும் முன்னர் எதுவும் பேசிவிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்தான் திவாகர்.

ஹாலில் அமர்ந்திருந்தவளிடம் எதுவும் பேசாமல், குளித்து முடித்து, தனக்கு மட்டும் ஒரு காபியைப் போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தான். பள்ளியில் இருந்து கொணர்ந்திருந்த விடைத்தாள்களிடம் கவனம் பதித்தான்.

ராகவி, திவாகர் சமாதானப்படுத்துவான் என்ற எதிர்பார்ப்பில் சோஃபாவிலேயே அமர்ந்திருந்தாள். அவன் வேலைகளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்துவிட, இன்னும் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள். முகத்தை உம்மென வைத்துக் கொண்டு அவனையும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ராகவியைக் காண திவாகருக்கு பாவமாகத் தான் இருந்தது. ஆனாலும் அவள் செய்கைக்கான புரிதல் அவளுக்கு ஏற்படட்டும் என்ற எண்ணத்தில் அமைதி காத்தான்.

எட்டு மணி வாக்கில் திவாகர் எழுந்து இரவு உணவுக்கு ஏற்பாடு செய்ய ஆயத்தம் ஆனான். எப்பொழுதும் ராகவி, சுகன்யாவுடன் வரும் சமயம், அடுத்த தினத்திற்கான காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்துவிடுவாள். இன்று வாங்கிவரவில்லை.

“காய் ஒண்ணும் இல்லை. நான் கீழ போய் வாங்கிட்டு வர்றேன்” என்று பொதுவாக அவளிடம் சொல்லிவிட்டு திவாகர் புறப்பட, “நானும் வர்றேன்” என்று அவனுடன் ஒட்டிக் கொண்டவளைக் கண்டு சிரிப்பே எழுந்தது அவனுக்கு. ஆனால் சிரித்து விடக் கூடாது என்ற எண்ணத்துடன் இறுக்கமாகவே முகத்தை வைத்துக் கொண்டான் திவா.

இருவரும், அந்த அப்பார்ட்மெண்டின் கீழே இருந்த பல்பொருள் அங்காடியில் காய்கறி வாங்கச் செல்ல, திவாகர், காய்கறி பொறுக்குவதில் கவனமானான். ராகவி அங்கிருந்த பொருட்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க, முதல் முறையாக, அந்த பல்பொருள் அங்காடியில் நின்றிருந்த அவ்விருவரையும் ராகவி கவனித்தாள்.

அந்த பெரியவருக்கு ஏறத்தாழ ராகவியின் தந்தை வயதிருக்கும். ஒரு கட்டைப் பையை பிடித்துக் கொண்டு, அவர் மகளுடன் நின்றிருந்தார். அந்த பெண்ணிற்கும் ராகவியின் வயது தானிருக்கும்.

அவள் அணிந்திருந்த உடையும் செருப்பும், நின்றிருந்த விதவும், தந்தையுடன் பேசிக் கொண்ட காய்கறி எடுத்துப் போட்டபடிக்கு அவள் வளைய வந்த அழகும், பார்க்கப் பார்க்க ராகவிக்கு ஒரு விதமான ஆனந்தத்தைக் கொடுத்தது.

அந்தப் பெரியவர் சற்றே பிரமிப்புடன் மகளின் பின்னால் நடக்க, அவள் லாவகமாக ஒரு தைரியத்துடன் நடமாடியது போலத் தோன்றியது. இருவரும் இவளைக் கடக்கும் போது “இல்லைப்பா, நாளைக்கே ஏன் போறீங்க. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு டிக்கெட் போடறேன். என்ன அவசரமான வேலை அதுக்குள்ள?” என்று உரிமையுடன் கண்டித்துக் கொண்டே அவள் நடக்க, அந்த முதியவரும் அசட்டுச் சிரிப்புடன் அவளுடன் நடந்தார்.

இருவரையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே நின்றிருந்த ராகவிக்கு, தன் தந்தை இங்கே இருந்திருந்தால் இப்படித் தானே நடந்து கொள்வார் என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை. அவளைக் கடந்து சென்ற இருவரையும் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருக்க, இவளின் தோள் தட்டி அழைத்தான் திவாகர்.

“வாழைத் தண்டு வாங்கவான்னு எத்தனை தடவை கேட்கறேன். கூப்பிடறது காதில விழாம அப்படி என்ன பார்த்துட்டே இருக்க?” என்று திவாகர் வினவ, “ம்ம் வாங்குங்க” என்று அவனுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தவள் இன்னமும் வாயிலிலேயே கண் பதித்திருந்தாள்.

வீடு வந்து சேர்ந்த பின்பும் கூட நீண்ட நேரம் அந்த பெண்ணின் நினைவும், அந்தப் பெரியவரின் உடல் மொழியும் அவள் மனதில் வந்து வந்து போயின. இதைப் பற்றி திவாரிடம் சொல்லலாமா என்று நினைத்தாள். ஆனால் அவன் இயல்பாக இல்லாத போலத் தோன்றியது.

“ஏற்கனவே கோவமா இருக்கான். இதை வேற ஏன் சொல்லிகிட்டு” என்ற எண்ணம் கொண்டவள் அவனிடம் சொல்லத் துணியவில்லை.

இவள் அவனுக்கு உதவியாக சட்னி அறைக்க உள்ளே செல்ல எத்தனிக்க, “நான் செஞ்சுக்கறேன். நீ போய் உட்கார” என்று முடித்துக் கொண்டான். சொன்னது போலவே, சுடச் சுட கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் தட்டில் வைத்து நீட்டினான். ராகவி எதுவும் பதில் சொல்லாமல் உண்டு முடிக்கவும், தானும் உணவை முடித்துக் கொண்டவன், “தூக்கம் வந்தா நீ போய் படு. எனக்கு கரெக்ஷன்ஸ் இருக்கு. லேட் ஆகும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் விடைத்தாள் திருத்துவதில் கவனமானான்.

ராகவியும் வேறு வழியில்லாமல், அறைக்குள் சென்று படுத்தவள், சுகன்யாவின் அப்பா பற்றி வாட்ஸ்ஸப்பில் விசாரித்துவிட்டு, சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.

கனவில் அந்த சூப்பர்மார்கெட் பெண்ணும், அவள் தந்தையும் உலா வந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் மறைந்து போய், அங்கே ராகவியும், அவள் தந்தை ரத்தினமும் இடம் பிடித்திருந்தனர். திவா ஒரு ஓரமாக தோசை தின்று கொண்டிருந்தான். இவர்கள் கடக்கவும், “கரெக்ஷன் இருக்கு எனக்கு.” என்று சம்பந்தமில்லாமல் மொழிந்தான். இவ்வாறான கலவையான கலப்படக் கனவுகளுடன் ராகவி உறங்கிப் போனாள்.