உயிரில் மெய்யாக வா 10

உயிரில் மெய்யாக வா 10

அன்று ஞாயிறு காலையிலேயே வாயில் மணி சில முறை அடிக்க, தன் நெஞ்சின் மேல் படுத்திருந்த ராகவியை சற்றே பக்கவாட்டில் தள்ளி படுக்க வைத்த திவா, “இந்த நேரத்தில யாரு?” என்ற எண்ணத்துடன் வாயில் கதவினைத் திறந்தான்.

வெளியே, அதே அப்பார்ட்மெண்டில் வசித்த ராகவியின் தோழி அனிதாவின் கணவன் ஆனந்த் நின்றிருந்தான். சற்றே தூக்க கலக்கத்துடன் வாயிலைத் திறந்த திவாகரிடம்,

“ப்ரோ சாரி காலையில டிஸ்டர்ப் பண்ணறேன். ஊர்ல இருந்து அனிதாவோட அப்பா அம்மா, சித்தி, சித்தப்பாலாம் வந்திருக்காங்க. டிஃபன் ஆடர் பண்ணலாம்னு சொன்னா கேட்காம, நானே செய்யறேன் அடம் பிடிக்கறா. அவளோ பாத்தரம் இல்லை. அதான் ராகவி சிஸ்டர்கிட்ட கேட்டு வாங்கிட்டு வர சொன்னா” என்று தலையைச் சொரிந்து கொண்டே வினவினான் ஆனந்த்.

“ராகவி இன்னும் எந்திரிக்கலை. என்ன பாத்திரம் வேணுமோ எடுத்துக்கோங்க ப்ரோ. வாங்க. உள்ள வாங்க” என்று சொல்லியபடிக்கே ஆனந்துடன் சமையலறைக்குள் நுழைந்து அவனுக்குத் தேவையான பாத்திரங்களை எடுத்துக் கொடுத்தான் திவாகர்.

“காலையில டிஃபனுக்கு நம்ம வீட்டு வந்திடுங்க ப்ரோ. சிஸ்டரையும் கூட்டிட்டு வந்துடுங்க” என்று அழைப்பு விடுத்துச் சென்றான் ஆனந்த்.

ஆனந்த் அனிதாவின் வீட்டிற்கு பத்து மணி வாக்கில் சென்றனர் ராகவியும் திவாகரும். வீட்டின் வாயில் முழுக்க செருப்புகள் நிரம்பியிருக்க, வீடே அமர்களமாகக் காட்சியளித்தது. காச் மூச்சென்ற சப்தமும், ஓடிக்கொண்டிருந்த நியூஸ் சேனலும், அதை வெறித்தவண்ணம் அமர்ந்திருந்த அனிதாவின் அப்பாவும், வீட்டினுள் சரசரத்த சேலைகளின் உரசல் ஓசையும்,

“அனி, இந்த சாம்பார் குண்டா எங்கடா?”,

 “அவர் வச்சிருக்கார் சித்தி!”

“அனி, மாப்பிள்ளைக்கு சட்னி வைம்மா”

“நீங்க உட்காருங்க அத்தை, நான் போட்டுக்கறேன்” போன்ற சம்பாஷனைகளும் அனிதா ஆனந்தின் வீட்டை நிறைத்திருந்தன.

சற்றே தயக்கத்துடன் உள்ளே நுழைந்த திவாவையும், ராகவியையும், வரவேற்று உபசரித்த அவ்வீட்டினரைக் கண்களாலேயே நிரப்பிக் கொண்டிருந்தாள் ராகவி.

அனிதாவின் வீட்டிற்கு உள்ளே வரும் வரையிலும் எந்த விதமான யோசனையும் இல்லாமல் இயல்பாக உடன் வந்த ராகவி, அனிதாவின் சொந்தங்களைக் கண்டதும் முக வாட்டம் கொண்டாள்.

எத்தனை முயன்றும் அவளது எண்ணவோட்டத்தை திவாகரிடமிருந்து மறைக்க இயலவில்லை. “என்னாச்சும்மா? ஏன் டல்லாயிட்ட? உடம்புக்கு ஏதாவது முடியலையா?” என்று அவளிடம் வினவினான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை திவா. ஐம் ஆல்ரைட்” என்று முணுமுணுத்த போதும், அதன் பிறகு அனிதாவின் வீட்டில் ராகவியால் சகஜமாக ஒட்ட முடியவில்லை.

அவள் கண்கள் அனிதாவின் சிரிப்பிலும், அவள் பெற்றோரின் வாஞ்சையிலும், அங்கே சுற்றியிருந்த மற்ற சொந்தங்களின் ஆர்ப்பரிப்பும் தொக்கிப் போய் நின்றுவிட்டது.

அங்கிருந்து கிளம்பினால் போதும் என்ற மனநிலையில் வேகமாக காலை சிற்றுண்டியை உண்டு முடித்து, “பை அனிதா” என்று விடைபெற்று அவர்கள் ஃப்ளாட்டிற்கு வந்து சேரும் முன்னர் ராகவி திண்டாடிப் போனாள். சிந்திவிடுவேன் என்று மிரட்டிய கண்ணீரை பெரும்பாடு பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு தன் வீடு வந்தவள், திவா கதவைத் திறக்கவும், தன் அறைக்குள் சென்று அழுது தீர்த்தாள்.

அவள் அழுகைக்கான காரணம் ஓரளவிற்கு திவாவிற்குப் புரிந்தது. “அழாத ராகவி! எல்லாமே சரியாகிடும். உன் அப்பா அம்மாவும் கூடிய சீக்கரம் நம்மளை ஏத்துக்குவாங்க. வருத்தப்படாதம்மா” என்று பல்வேறு விதமாக சமாதானம் செய்தான். ராகவியின் அழுகை தான் குறைந்த பாடில்லை.

“என் அப்பா, அம்மா நம்மளை ஏத்துகிட்டு, நம்ம வீட்டுக்கு வந்து போயிட்டு இருந்தா எவளோ சந்தோஷமா இருக்குமில்ல திவா. அனிதா வீட்டைப் பார்க்கறப்போ எனக்கு, எனக்கு ரொம்ப ..பொறாமையா இருக்கு திவா. என்னை வீட்டை வீட்டு அனாதை மாதிரி அனுப்பிச்சு வச்சுட்டாரே என் அப்பா!” என்று அவன் தோளைக் கட்டிக் கொண்டு தேம்பினாள்.

அன்றைய தினம் முழுக்கவே ராகவியின் அழுகை நின்றபாடில்லை. திவாகர் தன்னால் முடிந்த அளவு சாமாதானம் செய்து பார்த்தான். “அவங்க புரிஞ்சுக்க கொஞ்சம் நேரமாகும் ராகவி. அனிதாவுக்கு அரேன்ஞ்சுடு மேரேஜ். அவங்க கூட நம்ம வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்க கூடாதும்மா. இன்னும் சொல்லணும்னா, யாரோட வாழ்க்கையையும் யார் கூடவும் ஒப்பிடமுடியாது.எல்லார் வழித்தடமும் ஒண்ணில்லை. பயணிக்கும் பாதைகளும் ஒன்றில்லை. அவங்க அவங்க வாழ்க்கைக்கு என்ன விதிச்சிருக்கோ அது கிடைக்கும் ராகவி. அழாதடா” என்று ஆறுதல் கூறினான்.

இத்தனைக்கும், சென்னை வந்த புதிதில் திவாவின் பெற்றோர் ஒரு தரமும், திவாவின் அக்கா சூசன் ஒரு முறையும் இவர்களைக் காண வந்திருந்தனர். திவாகரின் வீட்டார் அடிக்கடி சென்னை வந்து சென்றால், ராகவிக்கு தன் பெற்றோரின் நினைவுகள் பலமாக எழும் என்ற காரணத்தினால், தன் பெற்றோரிடம் சென்னை வர வேண்டாம் என்று கூறியிருந்தான்.

“ஏதாவது விஷேஷம்னா நாங்களே ஊருக்கு வர்றோம்ப்பா. எனக்கு புது ஸ்கூல்ல வேலை ஜாஸ்தி.” என்று சொல்விட்டவனுக்கு, அனிதாவின் வீட்டினரைக் கண்ட பின் தேம்பி அழும் ராகவியின் மனதைத் தேற்றும் விதம் தெரியவில்லை. மதியம் சாப்பிடாமல் கிடந்தவளை வற்புறுத்தி மாலையில் வெளியே அழைத்துச் சென்றான்.

இரவு நெடுநேரம் வரையிலும் தூங்காமல் இருந்தவளைத் தன் கை இடுக்கில் படுக்க வைத்துக் கொண்டு தைரியமூட்டினான். “எல்லாமே கொஞ்ச நாள்ல சரியாகும். நான் இருக்கேன்ல. நான் உன்னை நல்லா தானே பார்த்துக்கறேன் ராகவி. நீ அழுகறது எனக்கு ரொம்ப கில்டியா இருக்குடா. உன்னை உன் வீட்டு ஆளுங்க கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்துட்டேனோன்னு தோணுது” என்று திவாகர் வருத்தப்படவும், ராகவி கொஞ்சமே கொஞ்சம் தன் அழுகையை நிறுத்தினாள்.

அடுத்த தினம் பள்ளி செல்லவே திவாகருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் முக்கியமான வகுப்புகள் இருந்த படியால் சென்றே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு.

ராகவி காலையில் வெகு நேரம் உறங்கினாள். அவளைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல் தானே காலைக்கும் மதியத்திற்கும் உணவு தயார் செய்தான்.

பள்ளிக்குக் கிளம்பும் சமயம், “ராகவிம்மா, சின்ன ஹாட் பாக்ஸ்ல இட்லி இருக்கு. சட்னி டேபிள் மேல இருக்கு. பெரிய ஹாட் பாக்ஸ்ல தக்காளி சாதம் இருக்கு. ஃப்ரிட்ஜுல தயிர் இருக்கு. மதியம் மறக்காம சாப்பிடு. நான் லன்ச் பிரேக்ல கால் பண்ணறேன்” என்று படுத்திருந்தவளை எழுப்பி சொல்லிவிட்டு, அவள் நெற்றியில் முத்தம் பதித்துச் சென்றான்.

அவன் சென்று நீண்ட நேரத்திற்குப் பின்னரே ராகவி எழுந்து கொண்டாள். முன் தினம் முழுக்க அழுதிருந்த காரணத்தினால் தலை வலிக்கத் துவங்கியிருக்க, சூடாக ஒரு கப் காபியைப் போட்டுக் கொண்டு வந்து பால்கனியில் நின்றாள்.

“எந்திரிச்சுட்டியா? முகம் கழுவிட்டு சாப்பிடு” என்று திவாகரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருக்க, அதற்கு பதிலளிக்கப் பிடிக்காமல் வெறுமனே கைபேசியை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அவள் எண்ணம் திவாகரை விடுத்து, அவள் சென்னை வாழ்க்கையினை விடுத்து, நேற்றே ஆலங்குடிக்குப் பறந்திருந்தது. இதே தந்தையின் சொல் பேச்சுப்படி திருமணம் செய்திருந்தால், தன் வாழ்க்கை எப்படியிருக்கும் என்ற கற்பனையில் ஆழ்ந்து போனாள்.

“அப்பாவும் அம்மாவும் என்னை வீட்டை விட்டு அனுப்பறப்போ அழுதிருப்பாங்க. பாட்டி கூட புலம்பியிருக்கும். இந்த ரமேஷ் தடியன் என் கூட மாப்பிள்ளை வீட்டுக்கு கார் ஓட்டிகிட்டு வந்திருப்பான். நானும் அப்பாவை பிடிச்சுகிட்டு கதறி அழுது “போயிட்டு வர்றேன்பா”ன்னு சொல்லிட்டு கார்ல ஏறியிருப்பேன். அதை ரமேஷ் கிண்டல் பண்ணியிருப்பான்.” என்று நடந்தேறாத விஷயத்தின் பின்னூடே அவள் மனம் சுற்றித் திறிந்தது.

கையில் பிடித்திருந்த காபி கோப்பையோ, காலை உணவோ, இரு முறை மின்சாரம் சென்று வந்ததோ, வாயில் மணியை அடித்த அனிதாவோ, எதுவுமே ராகவியின் புலனில் பதியவில்லை.

மதியம் திவாகர் அழைக்கும் வரையிலும் எந்த சலனமும் இல்லாமல், தன் நினைவுகளில் மூழ்கியிருந்த ராகவிக்கு நேரம் போனதே தெரியவில்லை. மீண்டும் மீண்டுமாய் ஒலித்த கைப்பேசி ஓசை அவள் சுயநினைவை மீட்டெடுக்க, “அதுகுள்ள மணி ஒண்ணாகிடுச்சா?” என்ற யோசனையுடன் கைபேசியை எடுத்தாள்.

“சாப்பிட்டியா ராகவி? என்ன பண்ணிட்டு இருக்க? மூணு தடவை நடுவுல கூப்பிட்டேன். எங்க போயிட்ட? ஃபோன் ஏன் எடுக்கலை?”” என்று சற்றே பதட்டத்துடன் வினவினான் திவாகர்.

“சாப்பிட்டேங்க” என்று கூசாமல் பொய் சொல்ல சற்றே சங்கடமாக இருந்தது. சாப்பிடவில்லை என்று கூறினால் திவாகர் திட்டுவான் என்ற பயத்தில் மாற்றிப் பேசினாள்.

“ஃபோன் ஏன் எடுக்கலை? என்ன பண்ண?”

“சைலண்டில போட்டிருந்தேன். கவனிக்கலை. நீங்க சாப்பிட்டீங்களா?”

“ம்ம் சாப்பிட்டேன் ராகவி. இப்போ தலைவலி ஒ.கேவாடா? இன்னும் வலி இருக்கா?” என அக்கறையுடன் சில நிமிடம் விசாரித்துவிட்டு கைப்பேசியை அணைத்தான்.

திவாவுடன் பேசிய பின்பு ராகவிக்கு கொஞ்சம் அல்ல, நிறையவே தெம்பு தோன்றியிருந்தது. அவனிடம் சொன்ன பொய்யை மெய்பிக்க எண்ணி, அவன் செய்து வைத்துச் சென்றிருந்த உணவை உண்டு முடிக்கவும், அவள் தோழி அனிதா காலிங் பெல்லை அழுத்தவும் சரியாக இருந்தது.

“தூங்கிட்டு இருந்தியா ராகவி? நான் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வந்தேன். காலிங் பெல் அடிச்சேன். நீ திறக்கவேயில்ல” என்று வினவ, வாயில் அழைப்பு மணி அடிக்கவேயில்லையே என்ற எண்ணத்துடன் அனிதாவிற்கு பதிலளித்தாள் ராகவி.

“குளிச்சுட்டு இருந்திருப்பேன். கவனிக்கலை அனிதா. வாங்க உள்ள வாங்க. வீட்டில எல்லாரும் இருக்காங்களா போயாச்சா?” என்று அனிதாவை உள்ளே அழைத்தாள் ராகவி.

“அவங்க நேத்து நைட்டே போய்ட்டாங்க. செம வேலை ராகவி ரெண்டு நாளா. சமைச்சே பெண்டு கழண்டுடுச்சு. ஸ்விக்கில ஆடர் பண்ணலாம்னு ஆனந்த் சொன்னாரு. ஆனா, ஆடர் பண்ணி வரவழைச்சா என் அப்பாவுக்கு கோவம் வரும். “வீட்டில சமைக்கறதே இல்லையான்னு?” என் அம்மா தோதா போட்டு குடுப்பாங்க. அதான் கஷ்டம் பார்க்காம நானே சமைச்சேன்” என்று ஆயாசமாக சோஃபாவில் சாய்ந்தாள் அனிதா.

“நீங்க சாப்பிட்டாச்சா ராகவி? என்ன சமையல் இன்னைக்கு?”

“இப்போதான் சாப்பிட்டேன் அனிதா. தக்காளி சாதம். அவர் செஞ்சார்.”

“ஓ, இன்னைக்கு சார் சமையலா? குடுத்து வச்சவ நீ. ஒரு பிக்கல் பிடுங்கலும் இல்லை. உங்க வீட்டு ஆளுங்களும் வர்றதில்லை, சார் வீட்டு ஆளுங்களும் வர்றதில்லை. நிம்மதியா இருக்கலாம். எனக்கு பாரு, இந்த வாரம் என் அப்பாம்மா வந்துட்டு போனாங்களா. இதை நேத்து ஆனந்த் அவர் வீட்டில சொல்லியிருப்பார். அடுத்த வாரமே ஆனந்தோட அப்பா அம்மா வருவாங்க. மாத்தி மாத்தி யாராவது இருந்துட்டே இருக்க மாதிரி இருக்கு” என்று அங்கலாப்புடன் அனிதா சொல்லிக் கொண்டே செல்ல, ராகவியின் முகம் இன்னமும் சிறுத்துப் போனது.

அனிதா அதைப் பற்றி பெரியதாக கண்டு கொண்டது போலத் தெரியவில்லை. அவள் வீட்டினரைப் பற்றியும், அவள் மாமனார் இங்கே வரும் பொழுதுகளில் அவருக்குத் தேவையாவற்றை எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றியும் புலம்பிக் கொண்டிருந்தாள்.

“என் மாமனார் இருக்காரே. தெய்வ பிறவி. பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை காபி குடிப்பாரு. அதும் நிறைய இல்ல, ரெண்டே ரெண்டு மடக்கு. காலையில இருந்து நைட் வரைக்கும் காபி போட்டு காபி போட்டே என் பொழுது போயிறும். என் வீட்டில நான் ஒரு வேலை செஞ்சதில்ல தெரியுமா?” என்று சலித்துக் கொண்டாள் அனிதா.

“என் அப்பாவுக்கு நான்னா ரொம்ப பிரியம். என் ஆசைப்படி, எனக்கு பிடிச்ச மாதிரி கேட்டு கேட்டு தான் எல்லாமே செய்வார். என் ரசனைக்குப் பிடிச்ச மாதிரி தான் எங்க வீட்டைக் கட்டினார். என் அம்மாவும் எனக்கு என்ன வேணும்னு கேட்டு தான் தினமும் சமையல் செய்வாங்க. அவளோ செல்லமா வளர்த்தாங்க.” என்றெல்லாம் ராகவிக்கும் அனிதாவிடம் சொல்லத் தோன்றியது.

சற்றே அமிழ்ந்து போயிருந்த ராகவியின் ஏக்கம் அனிதாவின் வருகையால் பலமடங்கு கூடிப் போயிற்று. சற்று நேரத்தில் அனிதா விடை பெற்றுச் செல்ல, ராகவி மீண்டும் தன் கனவு லோகத்தில் சஞ்சரிக்கத் துவங்கினாள். அவளது இந்த கற்பனை உலகம் சஞ்சரிப்பு அவளுக்கு ஒரு பெரும் ஆறுதலாக அமைந்தது. அவள் வீட்டினரைப் பற்றி அனிதாவிடம் சொல்வது போலக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளப் பிடித்தமாயிருந்தது.

ஒரு சினிமாவில், கூட்டுக் குடும்பத்தை விரும்பி திருமணம் செய்து கொள்ளும் சினேகா, தனிமையில் சித்த பிரம்மை பிடித்தவள் போல் நடந்து கொள்வாரே அது போல சிற்சில சமயங்களில் நடந்து கொண்டாள் ராகவி.

தன் செய்கை குறித்த யோசனை கதாநாயகி சினேகாவிற்குத் தெரியாமல் இருக்கும். ஆனால் இங்கே ராகவிக்கு தன் நடந்தை குறித்து தெளிவான சித்தம் இருந்தது.

அனிதாவிடம் “இதைச் சொல்லியிருக்கலாம். அதைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். இத்தனைக்கும் அனிதாவிற்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. நான் என் தம்பி ரமேஷின் சேட்டைகள் பற்றிச் சொல்லியிருக்கலாம். அவனுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டியது, மாடு துரத்த, இருவரும் மரத்தின் மீது தாவி ஏறிக் கொண்டது பற்றிச் சொல்லலாம்” என ராகவி மனதிற்குள் தான் விட்டு வந்த வாழ்க்கையை எண்ணி மிகவும் ஏக்கம் கொள்ளத் துவங்கினாள்.

தினமும் திவாகர் பள்ளி செல்லும் வரையிலும் அவளுக்கு எந்த விதமான குதர்க்கமான எண்ணங்களும் உற்பத்தியாகாது. அவன் பள்ளி சென்றதுமே, வாயிலில் காத்திருந்த அவளைக் கவ்விக் கொள்ளும் அவள் பெற்றோரின் நினைவுகள்.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக இதுவே தொடர ராகவிக்கே தன் மனதை நினைத்து பயம் ஏற்படத் துவங்கியது. திவாகர் சென்றதுமே தான் சற்றே பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறோம் என்ற அச்சம் ஏற்படவும் ராகவி ஒரு முடிவை எட்டியிருந்தாள்.