உனதன்பில் உயிர்த்தேன் – 2

அத்தியாயம் – 2

காலை வெயில் சுள்ளென்று முகத்தில் அறைய, கண்கள் கூச, மெல்ல விழித்தெழ முயன்றான் வைரவேல்.

“போனவதேன் போனான்னு பார்த்தா இருக்கிறவனையும் ஒன்னுமில்லாம ஆக்கிபுடுவா போலயே? ராசா கணக்கா சுத்தி வந்த எம் பேரன் இப்ப சாராயமே கதின்னு கிடக்கானே. ஆத்தா, மகமாயி உமக்குக் கண்ணு இல்லையா? இம்புட்டையும் பார்க்கவா நா உசுரோட இருக்கணும்?”

அவனின் அப்பத்தாவின் குரல் காதில் விழுந்தாலும் அவனால் கண் விழிக்க இயலவில்லை.

கண்கள் அனல் போல் தகிக்க, தலை விண்ணென்று தெறித்தது.

தலையை அழுத்தி விட்டுக் கொண்டு புரண்டு படுத்தவன் உடலில் கசகசப்பை உணர்ந்தான்.

“சகதியில கிடந்து உருண்டது கூட ஒசாரு இல்லாம இப்படிக் கிடக்கானே. அவே அப்பன் ஆத்தா இருந்தா இப்படி வுட்டுருக்க மாட்டாகன்னு வூரு சனம் நாக்குல நரம்பு இல்லாம பேசுமே…” அப்பத்தா புலம்பிக் கொண்டே மூக்கை உறிஞ்சி கொள்ளும் சத்தம் கேட்டது.

‘என்னது சகதியில உருண்டனா?’ என்று நினைத்தவன் தலைவலியைப் பொருட்படுத்தாமல் எழுந்து அமர்ந்தவன் குனிந்து தன்னைப் பார்த்தான்.

வேஷ்டி விலகி அவனின் முழங்கால் இரண்டும் தெரிந்தன. வேஷ்டியை நேராக இழுத்து விட்டான்.

சட்டை, வேஷ்டி எல்லாம் மண்ணும், சகதியுமாக ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டவன் ‘ம்ப்ச்’ என்று வருத்தத்துடன் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.

தான் குடித்து விட்டு எங்கே போனோம், எதற்குப் போனோம் என்று யோசித்துப் பார்த்தான்.

ஊருக்கு வெளியே இருக்கும் சாராயக்கடையில் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் வழியில் மனைவி இறந்த இடத்தைப் பற்றி ஞாபகம் வர, தன் வயல் பக்கம் நடக்க ஆரம்பித்தது ஞாபகம் இருந்தது.

அவனின் வயலில் இருக்கும் கிணற்றில் தான் தவறி விழுந்து அவன் மனைவி இறந்தாள் என்பதால் நேராகக் கிணற்றடிக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்து மௌனமாகக் கண்ணீர் வடித்தது வரை நினைவில் வந்தது.

பின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்து நடக்க ஆரம்பித்த பிறகு அவனின் ஞாபகத்தில் எதுவும் இல்லை.

இரவில் விழுந்து கிடந்தவனிடம் வந்து தேன்மலர் பேசியதோ, அவனுக்கு உதவி செய்து வீட்டில் கொண்டு வந்து விட்டதோ எதுவும் அவனின் நினைவில் இல்லை.

அவன் எழுந்து அமர்ந்திருப்பதைப் பார்த்து அவனின் அப்பத்தா வேகமாக அருகில் வந்தார்.

“என்னய்யா, தலைய வலிக்கா? இதுக்குத்தேன் அந்தப் பாழாப் போன சாராயத்தைக் குடிக்காதங்றேன். எம் பேச்ச கேட்டாத்தானே? போன மாசம் வர நல்லாத்தானேயா இருந்த. உமக்கு ஏய்யா இந்த வேண்டாத சோலி?” அப்பத்தா கவலையுடன் கேட்க,

“போன மாசம் வர எம் பொஞ்சாதி உசுரோட இருந்தாளே அப்பத்தா?” என்று உதடுகள் லேசாகத் துடிக்க, பரிதாபமாகக் கேட்டான். அவன் கண்கள் கலங்கி சிவந்திருந்தன.

“எய்யா, ராசா வேணாம்யா. அவதேன் போயி சேர்ந்துட்டா. அதுக்காக நீரும் இப்படிக் குடிச்சே அழியணுமா ராசா? மனச தேத்திக்கோ ராசா. போனவ வரப்போறது இல்ல. எமக்கும் உம்மை விட்டா யாரு இருக்கா? குடிக்காதய்யா…” என்றார் கண்ணீருடன்.

“ராவுக்குப் படுத்தா கண்ணை மூட முடியல அப்பத்தா. அதைக் குடிக்கிறதாலத்தேன் கொஞ்சமாவது கண்ணை மூட முடியுது…” என்று இயலாமையுடன் சொன்னான்.

“எய்யா வேலு, விசனப்படாதய்யா. காலம் போனா மனசுக்கு மாத்தம் வரும். மேலு அம்புட்டும் சேரும், மண்ணுமா இருக்குய்யா. போய்க் குளிச்சுப் போட்டு வா. டீ தண்ணி போட்டு வச்சுருக்கேன். வந்து குடி. போய்யா…” என்றதும் எழுந்து வீட்டின் பின் பக்கம் சென்றான்.

பின்பக்கம் ஒரு கிணறு இருக்க, அதில் தண்ணீர் இறைத்து வாளியில் ஊற்றியவன், அதைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்த குளியலறைக்குள் சென்று மறைந்தான்.

குளித்து விட்டு, வெளியே வரும் போது கையோடு தான் உடுத்தியிருந்த உடையையும் துவைத்து எடுத்து வந்தவன், கிணற்றடி பக்கத்தில் இருந்த கயிற்றில் விரித்து விட்டான்.

“நீரு ஏய்யா அலசுன? நா அலசியிருப்பேன்ல?” என்று கேட்டார் அப்பத்தா.

“நீரும் எம்புட்டு சோலிதேன் பார்ப்பீரு அப்பத்தா? சுளுவான சோலி தானே. நானே பாத்துப்புட்டேன்…” என்றவன் வீட்டிற்குள் சென்றான்.

அப்பத்தா கொடுத்த தேநீரை வாங்கி அருந்தியவனுக்குத் தலைவலி மட்டுப்படுவது போல் இருந்தது.

“ஏய்யா, அந்தத் தோப்புக்காரி வயலுக்கு எதுக்குய்யா போனீரு?” என்று மெல்ல கேட்டார் அப்பத்தா.

“தோப்புக்காரி வயலுக்கா? நா ஏன் அப்பத்தா அங்கன போகப் போறேன்? நா போகலையே…” என்றான் யோசனையுடன்.

“அப்ப அந்தச் சிறுக்கி ஏன் அப்படிச் சொல்லிப் போட்டு போனா?”

“யாரு அப்பத்தா?” புரியாமல் கேட்டான்.

“அவதேன் தோப்புக்காரி மவ. அவ வயலுல தேன் நேத்து ராவு விழுந்து கிடந்தயாம். அவதேன் உம்மைக் கொண்டு வந்து வூட்டுல வுட்டுப்போட்டு போனா…” என்றார்.

“அவளா?” என்று கேட்டவனின் முகத்தில் லேசான அதிர்ச்சி இருந்தது.

“ஆமா, உம்மால நடக்கக் கூட முடியலை. அவதேன் அவ தோளுல உம்ம கையைப் போட்டு இழுத்துட்டு வர்றது போலக் கொண்டாந்து விட்டுப்புட்டு போனா…” என்று அவர் சொல்லவும் அவனின் முகம் லேசாக மாறியது.

“நா நம்ம வயலுக்குத்தேன் போனேன் அப்பத்தா. கிணத்து மேட்டுல உட்கார்ந்து இருந்துட்டு திரும்பி வரும் போது என்ன நடந்துச்சுனே தெரியல…” என்றவன் லேசாகத் தலையைக் குலுக்கி விட்டுக் கொண்டான்.

அதில் தேன்மலர் அவனைக் கொண்டு வந்து விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்புத் தெரிந்தது.

“இதுக்குத்தேன் அந்தச் சாராயத்தைக் குடியாதன்னு சொல்லுதேன். உம்மை அந்தத் தோப்புக்காரி கொண்டாந்து வுட்டதை வூருக்காரவக பார்த்தா என்ன சொல்லுவாக?” என்று கேட்டார்.

“சரி அப்பத்தா. நா பார்த்து இருந்துக்கறேன். நீரு சோத்தை போடும். நா வயலுக்குக் கிளம்புறேன்…” என்றான்.

அவர் சாப்பாட்டை எடுத்து வைக்கச் செல்ல, வைரவேல் தன் அறைக்குள் சென்று லுங்கியிலிருந்து வேஷ்டி சட்டைக்கு மாறினான்.

தலையை லேசாக வாரிக் கொண்டவன், அங்கிருந்து மனைவியின் புகைப்படம் அருகே சென்றான்.

சுவற்றில் இருந்த புகைப்படம் அவர்களின் திருமணத்தின் போது எடுத்தது. அவளை மட்டும் தனியாக வைத்து எடுத்திருந்த புகைப்படம்.

அதில் பதுமையெனச் சிரித்துக் கொண்டிருந்தாள் அவனின் மனைவி குமுதா.

“நீ இம்புட்டுச் சீக்கிரம் எம்மை விட்டு போவேன்னு நினைக்கலமா. ஒருமாசம், ஒரு மாசம் எங்கூட வாழ்ந்தது போதும்னு நினைச்சுட்டியா? இந்த மச்சுக்குள்ள, நீயும், நானும் எம்புட்டு நெருக்கமா வாழ்ந்தோம்.

அந்த வாழ்க்கை எனக்கு நிலைக்கவே இல்லையேமா? நீ இல்லாம இந்த மச்சுக்குள்ள வரவே எமக்குப் பிடிக்கலை தாயி. உம்மூச்சு காத்து இன்னமும் இந்த மச்சுக்குள்ள சுத்தி வர கணக்காவே இருக்கு.

அதுதேன் பொழுது செண்டா மூச்சு முட்ட சாராயத்தைக் குடிச்சுப் போட்டு வாசலிலேயே படுத்துக்கிடுதேன். ஏன் தாயி என்னைய விட்டுப்போட்டு இம்புட்டு வெரசா போனவ?” என்று கேட்டவன் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

“எய்யா வேலு, சோறு கேட்ட. தட்டுல போட்டு ஆறுது, வாய்யா…” வெளியே இருந்து அப்பத்தாவின் குரல் கேட்க, தன் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

அவனைப் பார்த்ததுமே அவன் அழுதிருக்கிறான் என்பதைக் கண்டுகொண்டார் அப்பத்தா.

ஆனாலும் ஒன்றும் கேட்காமல் சாப்பாட்டை வைத்தார்.

சாப்பிட்டு முடித்ததும் வயலுக்குக் கிளம்பி சென்றான் வைரவேல்.

“ம்மா, நீரு கம்முன்னு படுத்துக்கிட. கசாயம் வைச்சுருக்கேன். குடிச்சுப் போட்டு தூங்கு…” என்றாள் தேன்மலர்.

“கம்முன்னு கிடக்க நா என்ன சீக்கு வந்த கோழியா? எம்புட்டு நேரந்தேன் படுக்கையிலேயே இருக்குறது? கசாயத்த குடிச்சுப் போட்டு நானும் பூ பறிக்க வாறேன்…” என்று அடம்பிடித்தார் முத்தரசி.

“ம்ம்மா… ஒடம்பு தீயா காயுது. இந்த லட்சணத்துல பூ பறிக்க வாறீயாக்கும்? ராவெல்லாம் சீக்கு வந்த கோழி கணக்காத்தேன் சுருண்டு கிடந்த. அதை மறந்து போட்டு பேசாத…” என்று கடுப்பாகக் கத்தினாள்.

“ராவு தாண்டி தலையைத் தூக்க முடியாம இருந்துச்சு. இப்ப நா நல்லாத்தேன் இருக்கேன். எதையாவது சொல்லாம கஞ்சியைக் குடிச்சுப்போட்டுப் போய் பூவை பறிக்கிற சோலியைப் பாரு. ஆளுக ரெண்டு பேரு சோலிக்கு சொல்லிருந்தோமே அவுக வந்துட்டாகளான்னு பாரு…” என்றார்.

“நீரு அடங்க மாட்டியே?” என்று புலம்பிக் கொண்டே காலை உணவாக வைத்த ராகிக் கஞ்சியைக் குடித்து விட்டு வேலையைப் பார்க்க கிளம்பினாள்.

“ராசு, அங்கிட்டு போகாதீரும். ஆளுக சோலி பார்ப்பாக. அம்மா காய்ச்ச வந்து கிடக்கு. அது கூடவே இரும்…” என்று ராசுவிற்கு வேலை சொல்லி விட்டுச் செல்ல, அதுவும் வாசலிலேயே முத்தரசிக்கு காவலாகப் படுத்துக் கொண்டது.

முதலில் வீட்டுப் பின் பக்கம் இருந்த வயலுக்குச் சென்றாள் தேன்மலர்.

பின்பக்க வயலில் மல்லிகை பூ போட்டிருந்தார்கள். அதைப் பறிக்கப் போவதால் இரண்டு பேரை நேற்றே வேலைக்குச் சொல்லி வைத்திருந்தாள். அவள் சென்ற போது அவர்களும் வந்துவிட, மூவருமாக வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.

அவர்கள் வேலையை ஆரம்பித்த சிறிது நேரத்தில் முத்தரசியும் வந்தார். அவரின் பின்னால் ராசுவும் ஓடி வந்து வரப்பில் படுத்துக் கொண்டது.

“எம்மா, சொன்னா கேக்க மாட்டியா? ஒடம்பு சுகமாகட்டும். வூட்டுக்குப் போ…” என்றாள் தேன்மலர்.

“கம்முன்னு கிடடி…” என்று அவளின் பேச்சை பொருட்படுத்தாமல் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார் முத்தரசி.

பொருமிக்கொண்டே தானும் வேலையைத் தொடர்ந்தாள் தேன்மலர்.

“போதும்டி. வாயி சுளுக்கு விழுந்துக்கப் போவுது. நீ போயி அந்த மோட்டாரை போட்டு விடு…” என்று அன்னை சொல்லவும், மோட்டார் அறை பக்கம் நடக்க ஆரம்பித்தாள்.

அவள் வரப்பில் நடக்க ஆரம்பிக்கும் போது எதிரே வந்தான் வைரவேல்.

அவளைக் கண்டதும் அப்பத்தா சொன்னது ஞாபகத்தில் வர, கூர்மையுடன் அவளின் மீது அவனின் பார்வை படிந்து மீண்டது.

ஆனால் அவனைப் பார்த்ததும் இரவு தான் அவனுக்கு உதவி செய்ததையே மறைந்தது போல் அவனின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் விலகிச் சென்றாள் தேன்மலர்.

அவளின் பின்னால் சென்று கொண்டிருந்த ராசு ஒரு நொடி நின்று அவனைப் பார்த்து, ‘வவ், வவ்…’ என்று குறைத்து விட்டுச் சென்றது.

“ராசு கம்முன்னு வாரும். அப்புறமேட்டுக்கு ஏகப்பத்தினி விரதன் கற்பு போச்சுன்னு கத்தி கூப்பாடு போட்டுற போறாரு…” என்று நக்கலாகச் சொன்னவளின் குரல் வைரவேலை தீண்டியது.

‘என்ன சொல்றா இவ?’ என்பது போலத் தன் முதுகிற்குப் பின்னால் சென்றவளைத் திரும்பி பார்த்தான்.

ஆனால் அவள் திரும்பாமல் நடந்து கொண்டிருந்தாள்.

அவள் சொன்னது அவனுக்குப் புரியவே இல்லை.

அவனுக்குத்தான் இரவு நடந்தது, அவன் பேசியது எதுவுமே ஞாபகத்தில் இல்லையே?

ஒன்றும் புரியாமல் தோளை குலுக்கி விட்டுக் கொண்டான்.

தன் வயலுக்குள் இறங்கியவன் பாத்தி கட்டும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

பகலெல்லாம் வயல் வேலையை இழுத்துப் போட்டுச் செய்வதும் பொழுது சாய்ந்ததும் சாராயம் குடிப்பதும் தான் ஒரு மாதமாக அவனின் வழக்கமாக ஆகியிருந்தது.

திருமணத்திற்கு முன் வயல் வேலையைப் பார்த்து விட்டு வீடு சென்று சேர்ந்து விடுவான். அப்போது அவனுக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இருந்திருக்கவில்லை.

திருமணம் முடிந்த பிறகு மனைவியின் மதிமுகம் அவனை நோக்கி ஈர்க்க, வேலைக்கு நடுவில் கூடச் சில முறைகள் வீட்டிற்குச் சென்று வருவான். மாலை எப்போது வரும் என்று காத்திருந்து வீட்டிற்குத் தவிப்புடன் ஓடியிருக்கிறான்.

சில நேரம் மனைவியையும் தன்னுடன் வயலுக்கு அழைத்து வருவான்.

கை வேலை செய்து கொண்டிருந்தாலும் அந்த நினைவுகள் அவனை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

அவனின் மனைவி குமுதா அவன் மனம் முழுவதும் ஆக்கிரமித்து அவனை ஆட்சி செய்ய ஆரம்பிக்க, மம்பட்டியை பிடித்திருந்த அவனின் கைகள் நடுங்க ஆரம்பித்தன.

அதற்கு மேல் முடியாமல் மம்பட்டியைப் போட்டுவிட்டு கிணற்றுப் பக்கம் சென்றான்.

கிணற்றுச் சுவரில் ஏறியவன் அப்படியே உள்ளே குதித்தான்.

தண்ணீர் அவனை உள்வாங்கிக் கொண்டது. தன் தவிப்பை, துடிப்பை, வலியை, அழுகையை அனைத்தையும் அந்தக் கிணற்றுத் தண்ணீரில் கரைக்க முயன்றவனுக்குக் கிடைத்தது என்னவோ தோல்வி தான்.

‘அதோ அந்த இடத்தில தேன் எம் பொஞ்சாதி மிதந்து கிடந்தா’ என்று நினைத்தவன் வேகமாக அங்கே நீந்தி சென்றான்.

அவ்விடத்திற்குச் சென்றதும் அவனின் கண்ணீர் கட்டுக்கடங்காமல் பெருகியது.

“ஏன்டி ராசாத்தி என்னைய தவிக்க விட்டுப் போன? கிணத்துப் பக்கம் வந்தவக் கொஞ்சம் சூதானமா இருந்திருக்கலாம்ல? பாரு நீ இல்லாம உம்ம புருசன் தவியா தவிச்சுப் போய்க் கிடக்கேன்.

அம்புட்டும் ஏ தப்புத்தேன். உன்னைய வயலுக்கே நா கூட்டிட்டு வந்திருக்கக் கூடாது. உம்ம முகத்தைப் பார்த்துட்டே இருக்கோணும்னு கூட்டிட்டு வந்துப்போட்டு பூ லோடு ஏத்த போவணும்னு உன்னைய நா இங்கனயே விட்டுப்போட்டுப் போயிருக்கக் கூடாது.

நீ வூட்டுக்குப் போயிருவன்னு நினைச்சுப்புட்டு நேரஞ்செண்டு வந்திருக்கக் கூடாது. தப்புப் பண்ணிட்டேன். உமக்குத்தேன் நீச்சல் தெரியாதுல. அப்புறமும் ஏன்டி ராசாத்தி கிணத்துப் பக்கம் எட்டிப் பார்த்த?”

மனைவி இறந்து மிதந்த இடத்தில் இன்னும் அவள் இருப்பது போல் கண்ணீருடன் கேள்வி கேட்டான்.

அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தான்.

மனைவியைத் தன்னுடன் வயலுக்கு அழைத்து வந்தவன் சற்றுநேரத்திலேயே பூ லோடு ஏற்ற சென்று விட்டான். அந்த நேரத்தில் அவள் வீட்டிற்குச் சென்றிருப்பாள் என்று முதலில் வீட்டிற்குத் தான் சென்றான்.

அவள் இன்னும் வரவில்லை என்று அப்பத்தா சொல்லவும் வயலுக்குச் சென்றான். அங்கே சென்று தேடிய போது அவள் வயலில் எங்கேயும் காண கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் வீட்டிற்குத் தேடி வந்தான்.

அவள் அங்கே வரவே இல்லை என்றதும் தான் அவனின் தவிப்புக் கூடியது. அவனின் தேடல் சில நொடிகளாக ஆரம்பித்துப் பல மணிநேரமாக நீட்டித்து அந்தப் பல மணிநேரம் தேடலின் முடிவில் கிணற்றில் பிணமாக மிதந்த மனைவி தான் அவனுக்குக் கிடைத்தாள்.

மொத்தமாக நொறுங்கியே போனான். கிணற்றுப் பக்கம் வந்தவள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றே ஊர் மக்களால் பேசப்பட்டது.

மனைவியின் பிணத்தை அடக்கம் செய்தவன் உயிரோடு இருந்தும் நடைப்பிணம் போல் ஆகிப்போனான்.

கிணற்றுக்குள் சிறிது நேரம் மனைவியிடம் பேசுவது போல் பேசிப் புலம்பியவன் துக்கம் ஏறிய மனதுடன் மேலே ஏறி வந்தான்.

அப்போதும் கிணற்றை விட்டு செல்ல முடியாமல் கிணற்றின் வெளி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து விட்டான்.

அவன் உடை எல்லாம் தொப்பல் தொப்பலாக நனைந்திருந்தது.

அதை எதையும் வைரவேல் பொருட்படுத்தவே இல்லை.

தவம் செய்யும் முனிவன் போல் அப்படியே சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

மூடிய இமைகளுக்குள் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கை, அவளிடம் ஊடலும், கூடலுமாக இருந்த நினைவுகள் அனைத்தும் வந்து போக, அந்த நினைவுகள் ஏற்படுத்திய தகிப்பில் மூடிய இமைகளைத் தாண்டி கண்ணீர் கசிந்து வலிய ஆரம்பித்தது.

அவன் அமர்ந்திருந்த நிலையைச் சற்று தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மலர்.

ஒருமணி நேரம் மோட்டாரை ஓட விட்டிருந்தவள் அதை அமர்த்த வந்திருந்தாள்.

அங்கிருந்து பார்த்தால் வைரவேலுவின் மோட்டார் அறையும், கிணறும் தெரியும்.

“இந்த ஆளுக்கு என்ன கிறுக்கா பிடுச்சு போச்சு? கிணத்துல குளிச்சுட்டு வந்து இப்படியா ஈரமா உட்காருவாக?” என்று புலம்பிக் கொண்டவள் சில நொடிகள் நின்று பார்த்தாள்.

அவன் அசைவது போல் தெரியவில்லை என்றதும் ‘சரிதேன்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டு தன் வேலையைப் பார்க்க சென்றாள்.

மனைவியின் நினைவுகள் ஏற்படுத்திய தகிப்பில் அன்று வழக்கத்தை விட அதிகமாகக் குடித்தான் வைரவேல்.

அதன் விளைவு அன்றும் தேன்மலரின் வயலின் பக்கம் விழுந்து கிடந்தான்.

“என்ன ராசு, இந்த ஆளு இப்படியே பண்ணிட்டு இருக்காரு. பேசாம கிடக்கட்டும்னு வுட்டு போட்டு போயிருவோமா?” என்று கேட்டாள்.

“வவ்… வவ்…” என்று குறைந்த ராசு, கீழே கிடந்தவனைச் சுற்றி வந்தது. பின் அவனின் வீடு இருக்கும் திசையைப் பார்த்து விடாமல் குறைக்க ஆரம்பித்தது.

“நீரு அப்படிச் சொல்றீரா? சரிதேன். பாக்கவும் பாவமாத்தேன் இருக்கு. நல்லா வாழ்ந்த மனுசன். அவருக்கு இப்படி நிலைமையா வரணும்?” என்று அவனுக்காக இரக்கப்பட்டவள் நேற்று போல் அவனை எழுப்பி அழைத்துப் போனாள்.

இன்றும் ஏதேதோ புலம்பினான். அவன் புலம்பலில் முழுவதுமாக இடம் பெற்றவள் அவனின் மனைவியாகிப் போனாள்.

“பொஞ்சாதினா இந்த ஆளுக்கு உசுரு போலருக்கு. இம்புட்டு ஆசை வச்சுருக்குற புருசனை வுட்டுப்போட்டு அந்த மவராசி இம்புட்டு வெரசாவா போய்ச் சேரணும்?” என்று பரிதாபப்பட்டபடி அழைத்துப் போனாள்.

அன்று அவன் வீட்டின் அருகில் சென்ற போது வெளியே அவனின் அப்பத்தாவை காணவில்லை.

அப்பத்தா அவ்வளவு நேரம் புலம்பிக் கொண்டிருந்து விட்டு அப்போது தான் இயற்கை உபாதைக்காகப் பின் பக்கம் சென்றிருந்தார் என்பதால் இன்றும் அவள் தான் தன் பேரனை அழைத்து வந்தாள் என்பதைப் பார்க்கவில்லை.

வெளியே கிடந்த கட்டிலில் அவனை விட்டவள் வீடு வந்து சேர்ந்து விட்டாள்.

சாதாரணமாக அவனுக்கு உதவி செய்யும் நோக்கில் அவள் சென்று வீட்டில் விட, அதனால் எழ போகும் பிரச்சனைகளைப் பற்றிக் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை தேன்மலர்.