உனதன்பில் உயிர்த்தேன் – 1

அத்தியாயம் – 1

“ராசு… ராசு… எங்கனயா போனீரு? வெரசா வாரும். உமக்குப் பிடிச்ச கறி சோறு பொங்கி வச்சுருக்கேன். வந்து தின்னு போட்டு ஊரு சுத்த போரும்…” என்ற தன் எஜமானியின் குரலில் நான்கு கால் பாய்ச்சலில் ஓடி வந்தது ராசு.

கருப்பு நிறத்தில் நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு ஓடி வந்த ராசு, தட்டில் இருக்கும் சோற்றையும் தாண்டித் தன் எஜமானியின் அருகில் சென்று முன் இரண்டு கால்களையும் தூக்கி அவளின் மீது தாவியது.

“சரிதேன்… சரிதேன்… கொஞ்சினது போதும் ராசு. மொதல உம்ம வயித்தை ரொப்பும்…” என்றவள் ராசுவின் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தாள்.

அவளிடம் செல்லம் கொஞ்சி முடித்த பின் அவள் தனக்காக வைத்திருந்த உணவின் புறம் திரும்பிச் சென்று வேகமாக உண்ண ஆரம்பித்தது.

“அடியே தேனு… நா வரளுது, தண்ணி கொடு…” என்று வீட்டின் உள்ளிருந்து அவளின் அம்மாவின் குரல் கேட்க,

“அம்மா கூப்புடுது ராசு. நா உள்ளார போறேன். நீரு அம்புட்டையும் தின்னு போட்டுத்தேன் போவோணும்…” என்று அன்னையால் தேனு என்றழைக்கப்பட்ட தேன்மலர் சொல்ல, தன் எஜமானியின் அன்பு உத்தரவிற்குச் செவிச் சாய்த்து, உண்ணும் வேலையை விட்டுத் தலையை நிமிர்த்திப் பார்த்துச் சம்மதம் சொல்லும் விதமாக வேகமாக வாலை ஆட்டியது.

“ராசுன்னா ராசுதேன்…” என்று மெச்சிய படி வீட்டிற்குள் நுழைந்தாள் தேன்மலர்.

அன்னைக்கு முதலில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தவள், “சோறு திங்கிறீயாமா? தட்டுல போட்டு எடுத்தாராவா?” என்று அன்னையிடம் கேட்டாள்.

“வேணாம் டி. வாயிக்கு ஒன்னுமே நல்லாயில்ல. நாவும், தொண்டையும் காய்ஞ்சி வறண்டு போவுது. நாக்கெல்லாம் செத்துப் போனது போல இருக்குடி தேனு…” என்று சோர்வாகச் சொன்ன அன்னையைக் கவலையுடன் பார்த்தாள்.

“காத்தாலயிருந்து தண்ணி பாய்ச்சினது சேரலைன்னு நினைக்கேன் மா. அதுக்குத்தேன் நா பாய்ச்சுறேன், நீரு வேற சோலியைப் பாருன்னு சொன்னேன். ஏ சொல்லை கேட்டுருந்தேனா இப்ப இப்படிச் சுணங்கிப் போவியா?” என்று அன்னையைக் கடிந்து கொண்டாள்.

“அடிப்போடி! என்னவோ நா இன்னைக்குத்தேன் தண்ணி பாய்ச்சினது கணக்கா பேச வந்துட்ட. காலங்காலமா செஞ்சி பழகிப் போன சோலி டி. இப்பத்தேன் எமக்குப் புதுசா சேராம போகுதாக்கும்…” என்று நொடித்துக் கொண்டார் தேன்மலரின் அன்னை முத்தரசி.

“காலங்காலமா நீரு பண்ணின சோலி தேன். நா இல்லங்கல. ஆனா இன்னுமா உமக்கு இளமை திரும்பிக்கிட்டு இருக்குது? நாடி நரம்பெல்லாம் ஆட்டங்காங்குற வயசு ஆகிப்போச்சு. இனியாவது நா சொல்றதைக் கேட்டுக் கொஞ்சம் சோலியைக் குறைச்சுக்கோமா…” என்றாள்.

“போடி… போடி, அம்புட்டும் எமக்குத் தெரியும். நின்னு வாயடிக்காம போய்ச் சோலி கழுதையைப் பாரு…”

“ம்க்கும், நா வாயடிக்கலைனா நீரு வாக்கப்பட்டு வந்த இந்த வூருக்குள்ளார பொழைக்க முடியுமா?” என்று நொடித்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.

ஒரு பெருமூச்சு விட்டுச் சுருண்டு படுத்துக் கொண்டார் முத்தரசி.

அடுப்படிக்குச் சென்ற தேன்மலர் ஒரு தட்டில் சோற்றையும், கத்திரிக்காய் புளிக்குழம்பையும் ஊற்றினாள்.

கூடத் தொட்டுக் கொள்ளச் செய்த பாவற்காய் கூட்டையும் வைத்துவிட்டு ஒரு செம்பில் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தாள்.

வீட்டின் இரண்டு பக்கமும் திண்ணை இருக்க, அதில் ஒரு திண்ணையில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டு உணவை உண்ண ஆரம்பித்தாள்.

அந்நேரம் இரவு ஏழு மணி ஆகியிருந்தது.

தேன்மலரின் வீடு ஒரு தோப்பிற்குள் இருந்தது. சிறிய அளவிலான அத்தோப்பு அவர்களுடையது தான்.

அவளின் தந்தையின் வழி வந்தது. தேன்மலரின் தந்தை சில வருடங்களுக்கு முன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்து இறந்திருந்தார்.

அதன் பிறகு அவளின் அன்னை முத்தரசி வயல் வேலை செய்து மகளை வளர்த்து ஆளாக்கியிருந்தார்.

தேன்மலர் பள்ளிப்படிப்பை மட்டும் முடித்துக் கொண்டு அன்னையுடன் வயலில் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.

அது ஆகிற்றுப் பலவருடங்கள். இப்போது அவளுக்கு இருப்பத்தி எட்டு வயதாகிறது.

அவளின் அன்னை முத்தரசிக்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே கவலை மகளுக்கு ஒரு திருமணத்தை முடிக்க வேண்டும் என்பதே.

ஆனால் திருமணமே வேண்டாம் என்று மறுத்து விட்டாள் தேன்மலர்.

அவளின் மனதில் கல்யாண ஆசையும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அவளைப் பெண் பார்த்தவர்கள் எல்லாம் அவளைத் தட்டிக் கழித்து விட்டுச் சென்றனர்.

அவள் அழகான பெண் இல்லை என்று சொல்லிவிட முடியாது. மாநிறமாக இருந்தாலும் களையான முகம் தான். வயல் வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டு செய்வாள் என்பதால் அவள் உடம்பில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் கட்டுப்கோப்பாக இருந்தாள்.

அவளின் தோற்றத்தைக் கண்டு முதலில் பெண் கேட்டு வருபவர்கள் கூட, பின் வேண்டாம் என்று சொல்லியது உண்டு.

அப்படி அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் செல்லவும் காரணம் இருந்தது.

தொடர்ந்து மறுப்பை மட்டுமே கேட்டுப் பழகிப் போன தேன்மலர் ஒரு கட்டத்தில் தானே திருமணம் வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டாள்.

அதில் அவளின் அன்னைக்கு நிறைய வருத்தம் உண்டு.

அந்த ஊரை விட்டுச் சற்றுத் தள்ளியிருந்த வயலின் நடுவே இருந்த அவர்களின் வீடு ஓர் ஓட்டு வீடு.

கூடமும், அடுப்படியும், ஒரு சின்ன அறையுமாக இருந்த சிறிய வீடு. வீட்டின் பின் பக்கம் குளியலறை இருந்தது.

அன்னையும், மகளும் மட்டுமாக இருந்த வீட்டில் ராசுவும் சில வருடங்களாக இடம் பிடித்திருந்தான்.

அன்னையும், மகளும் காலை எழுந்ததும் காலை, மதியத்திற்கான உணவை தயார் செய்துவிட்டு வயலில் இறங்கி வேலை பார்க்க ஆரம்பித்து விடுவர்.

பெரும்பாலான வேலையை இருவருமே பார்த்துவிடுவர். சில நேரங்களில் மட்டும் கூலிக்கு ஆட்கள் வந்து செல்வர்.

இன்றும் வழக்கம் போல வயல் வேலையை முடித்துவிட்டு இரவு உணவையும் திண்ணையில் அமர்ந்து உண்டு முடித்தாள் தேன்மலர்.

சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு வீட்டின் பின் பக்கம் சென்றாள். அங்கே பாத்திரம் கழுவும் இடத்தில் கையையும், தட்டையும் கழுவி கொண்டிருந்த போது, வயலை சுற்றி வந்து கொண்டிருந்த ராசு அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தது.

“என்ன ராசு, என்னாத்துக்கு நீரு இப்படித் தலைதெறிக்க ஓடி வர்ரீரு?” என்று யோசனையுடன் கேட்டாள்.

‘வவ்… வவ்…’ என்று அவளைப் பார்த்துக் குறைத்த ராசு, அருகில் வந்து அவளின் சேலையைப் பிடித்து இழுத்தது.

“என்னய்யா ராசு. எதுக்கு என்னைய கூப்பிடுறீரு?” என்று கேட்டாள்.

ராசுவோ தொடர்ந்து அவளின் சேலையைப் பிடித்து இழுக்க, “சரிதேன், விடும். என்னத்தையோ கண்டுபோட்டீராக்கும். முன்ன போரும். நா வாறேன்…” என்றதும் அவளின் சேலையை விட்டுவிட்டு வயலுக்குள் இறங்கி ஓடியது.

“அப்படி என்னத்தைக் கண்டானோ?” என்று புலம்பிக் கொண்டே துவைக்கும் கல்லில் பாத்திரத்தை வைத்து விட்டு, வீட்டு ஜன்னலில் வைத்திருந்த டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு அதன் வெளிச்சத்தில் வயலுக்குள் இறங்கி நடந்தாள்.

அவள் வருகிறாளா என்று பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடியது ராசு.

அது சென்ற பாதையில் சென்றவள், ராசு ஓர் இடத்தில் இன்று குறைக்கவும், “அங்கின என்ன?” என்றவள் டார்ச் லைட்டை அந்தப் பக்கம் திருப்பிப் பார்த்தாள்.

அந்த வரப்பில் ஓர் உருவம் குப்புற விழுந்து கிடப்பதை லைட் வெளிச்சத்தில் கண்டவள் “எவன் அவன், இங்கன வந்து கிடக்கான்?” என்று கேட்டுக் கொண்டே அருகில் சென்றாள்.

வாட்டசாட்டமாக இருந்த அந்த ஆணின் உருவத்தைச் சுற்றிலும் லைட்டை அடித்துப் பார்த்தாள். முகம் அந்தப் பக்கமாகத் திரும்பியிருக்க, அவளால் அவனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

உடலை சுற்றிலும் பார்த்தாள். வேஷ்டி, சட்டை அணிந்திருந்தான். அவனின் வேஷ்டியும் விலகிக் கோணல்மாணலாகக் கிடந்தது.

“கருமம் புடுச்சவன், எவன்டா நீ?” என்று கேட்டுக் கொண்டே சுற்றி வந்து அவனின் முகத்தில் லைட்டை அடித்துப் பார்த்தாள்.

அவனின் பாதி முகம் மண்ணில் அழுந்தி கிடக்க, பாதி முகத்தை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது.

பார்த்ததுமே, ‘இவனாக்கும்?’ என்று நினைத்துக் கொண்டாள்.

“ஏ யாரது? தூங்கும் போது லைட்டை அடிக்கிறது? போ, அங்கிட்டு…” என்று தன் முகத்தில் லைட் வெளிச்சம் பட்டதும் கண்களைச் சுருக்கிக் கொண்டு குழறலாகச் சொன்னான் அந்த ஆடவன்.

“சரிதேன். குடிகாரப்பயலே. நீரு தூங்க ஏ வயலு வரப்பு தேன் உமக்குக் கிடைச்சதோ? எழுந்திருச்சு வூடு போயி சேரும்…” இன்னும் லைட்டை அவன் முகத்தில் நன்றாக அடித்துச் சத்தம் போட்டாள்.

“ஹாக், வரப்பா? அதுதேன் நம்ம கயித்துக் கட்டிலுல எவன்டா மண்ணு அள்ளி போட்டான்னு நெனச்சுப்புட்டேன் போல…” அந்தப் போதையிலும் குழறிக் கொண்டே கேட்டான்.

“ஆமாய்யா, இது உம்ம வீட்டுக் கயித்துக் கட்டுலுன்னு நெனச்சீராக்கும்? இன்னும் செத்த நேரம் இங்கின கிடந்தா பாம்பு கடிச்சுத்தேன் சாவ போறீரு…” என்றாள்.

“பாம்பா? ஏ பாம்பு… எங்கன இருக்க? வா, என்னைய கடியும்…” என்று பாம்பை அழைத்துக் கொண்டே புரண்டு படுத்தான். அவன் புரண்டதும், வேஷ்டி இன்னும் விலகியது. தலையும் வரப்பை விட்டுக் கீழே இறங்கியது.

வரப்பில் பாதியும், வயலில் மீதியுமாகக் கிடந்தான். அது கூட அவனின் உணர்வில் இல்லை. தன் உணர்வே இல்லாமல் குடித்திருக்கின்றான் என்று நினைத்த தேன்மலர் அவனை முகத்தைச் சுளித்துப் பார்த்தாள்.

“சரிதேன், பாம்பு கடிச்சு சாவணும்னா உம்ம வயலில் போயி விழுந்து கிடக்க வேண்டியது தானே? இங்கன ஏன் வந்தீரு?” என்ற தேன்மலரின் பேச்சைக் கேட்டதும் புரண்டு கொண்டிருந்தவன் மெல்ல எழுந்து கொள்ள முயற்சி செய்தான்.

“இது ஏ வயலு இல்லையா? நா ஏ வயலுன்னுல நினைச்சுப்புட்டேன்…” என்றான்.

“நெனப்பீரு, நெனப்பீரு… ஏ ஆத்தால கட்டின பாவத்துக்கு ஏ அய்யன் வுட்டுப்போட்டுப் போனது இந்த வயலு ஒன்னுதேன். அதையும் சொந்தம் கொண்டாட வந்துட்டீரு. இப்ப எழுந்திருச்சு போறீரா? தண்ணியைக் கொண்டு வந்து உம்ம மூஞ்சில ஊத்தட்டுமா?” கடுப்பாகக் கேட்டாள்.

“எவ அவ? இந்தக் கத்து கத்துறா? போடி, உம்ம வயல நீயே வச்சுக்கோ. நா ஏ வயலுக்குப் போறேன்…” என்றவன் மெல்ல எழுந்து நிற்க முயற்சி செய்தான்.

அவன் நிற்க முயற்சி செய்ய, அவனின் வேஷ்டியோ அவன் இடுப்பில் நிற்காமல் நழுவி விழுந்தது.

சட்டையும், பட்டாப்பட்டி டவுசருமாக நிற்க முயன்றவனைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டு திரும்பி நின்றாள்.

“யோவ், குடிகாரப்பயலே, உம்ம வேட்டியை எடுத்து கட்டும். அரையும் குறையுமா நின்னுக்கிட்டு, பாக்க சகிக்கலை…” என்று எரிச்சலுடன் கத்தினாள்.

“வேட்டியா? நா வேட்டி கட்டிக்கிட்டா வந்தேன்?” என்று கண்கள் சிவந்து சொருகியிருக்க, சட்டையெல்லாம் மண்ணாகி கசங்கியிருக்க, முகம், கை கால் எல்லாம் மண் ஒட்டியிருக்க, அவள் அடித்துக் கொண்டிருந்த லைட் வெளிச்சத்தில் காலின் அருகிலேயே கிடந்த வேஷ்டியை எங்கெங்கோ தேடிக் கொண்டிருந்தான்.

“சரிதேன், நீரு விட்டா அம்மணமா கூட வருவீரு. கட்டினவ கட்டைல போனா கள்ளச்சாராயமே கதின்னு கிடைக்கணும்னு எந்தக் களவாணிபய கத்துக் கொடுத்தானோ கட்டைல போறவன்…” என்று நொடித்துக் கொண்டாள் தேன்மலர்.

“ஏய், நீ ஏ பொஞ்சாதியவா சொல்ற? உமக்குத் தெரியுமா? ஏ பொஞ்சாதி என்னைய வுட்டுப்போட்டுப் போயிட்டா. போயே போயிட்டா. ஆமா அவ ஏன் என்னைய வுட்டுப் போனா? உமக்குத் தெரியுமா? தெரிஞ்சா சொல்லு…” என்று தடுமாறி அவளின் அருகில் வந்து அவள் தோளில் கை வைத்துக் கேட்டான்.

“யோவ், இந்த மேல கை வைக்கிற சோலியை எல்லாம் வேற எவகிட்டயாவது வச்சுக்கோ. கைய எடுயா…” என்று அவனின் கையைத் தட்டி விட்டாள்.

“ஹா, நானும் ஏகபத்தினி விரதனாக்கும். எம்ம பொஞ்சாதியைத் தவிர எவளையும் தொட மாட்டேன். ச்சே, ச்சே… உம்மைப் போய்த் தொட்டுப்புட்டேனே…” என்று வேகமாகத் தன் கையைத் தன் சட்டையில் துடைத்துக் கொண்டான்.

“இந்தா, உம்ம பகுமானம் போதும்! போய்த் தொலையும். போவும் போது வேட்டியை எடுத்து கட்டிட்டு போரும்…” என்றவள், “ராசு, குடிகாரப்பய போயிருவான், நீரு வாரும், நாம போவலாம்…” என்ற தேன்மலர், அவனைக் கண்டு கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தாள்.

அவள் நடந்து கொண்டிருக்கும் போதே தொப்பென்று ஏதோ சப்தம் கேட்க, திரும்பிப் பார்த்தாள்.

அவன் தான் வரப்பில் இருந்து வயலில் விழுந்து கிடந்தான்.

“அட! கருமம் புடுச்சவனே! இன்னைக்கு நீரு வூடு போயி சேர்ந்த மாறித்தேன்…” என்று தலையில் அடித்துக் கொண்டவள் அவனை நோக்கி சென்றாள்.

“என்னைய விட்டுப் போயிட்டா. போயே போய்டா. ஏன்டி போன? என்னையவும் கூட்டிட்டுப் போ…” என்று புலம்பிக் கொண்டே சகதிக்குள் உருண்டு கிடந்தான்.

“யோவ், உம்ம பொஞ்சாதி கூடப் போயி தொலையணும்னா ஏதாவது மருந்தை குடிச்சுப் போட்டுச் சாவு. இல்லையா, இருக்கவே இருக்கு ஒரு முழ கயிறு. நாண்டுக்கிட்டு சாவானா… அதை வுட்டுப்போட்டு ஏ வயலில உருண்டு புரள வந்துட்டிரு…” என்று அவனைப் பார்த்துக் கத்தினாள்.

“ம்கூம், நா சாவ மாட்டேன். நா ஏன் சாவணும்? ஏ பொஞ்சாதி செத்துப் போனதை நினைச்சு, நா அழுவணும். கதறணும், அவ நினைப்புல ஏ மனசு இந்த நெஞ்சுலயே சுருக்கு சுருக்குன்னு குத்தணும். வலிக்கோணும். எமக்கு வலிக்கோணும். வலிச்சு… வலிச்சு, துடிதுடிச்சு அப்புறமேட்டுக்குத்தேன் நா சாவணும்…” என்று முகம் வேதனையில் சுருங்க, குழறலாகப் புலம்பித் தள்ளினான் அவன்.

அவனின் குழறலை கேட்டவள், சட்டென்று சமைந்து நின்றாள்.

அவன் தன் மனைவி மேல் வைத்திருந்த அன்பை அவளும் கண்டிருக்கிறாள் தான்.

ஆனால் இப்போது அவள் இறந்த பிறகும் அவளை நினைத்து உருகி இப்படிக் குடிகாரனாக மாறி, வலியுடன் சாக வேண்டும் என்று புலம்பும் அளவுக்கு மாறியதை கண்டவளுக்கு அவனின் மீது இரக்கம் சுரந்தது.

அவனின் வயலும் அவள் வயல் அருகில் தான் என்பதால் அவன் தன் மனைவியுடன் வயலுக்கு வரும் போது கண்டிருக்கிறாள்.

அவனின் மனைவி அழகும், அம்சமும் நிறைந்தவள். அவளைப் பார்க்கும் போதேல்லாம் அவனிடம் மென்மையும், காதலும் பிரதிபலிக்கும்.

அவன் முன்பு குடித்ததாக அவள் கேள்வி கூடப் பட்டது இல்லை.

போன மாதம் அவன் மனைவி இறந்த பிறகு தான் குடிக்க ஆரம்பித்திருக்கின்றான்.

புதிதாகப் பழகிய குடி, அதீத போதை என்று இந்த ஒரு மாதமாக ஆளே முற்றிலும் மாறியிருந்தான்.

தன் உணர்வே இல்லாமல் கிடந்தவனை அப்படியே விட்டுவிட்டுப் போக இப்போது அவளுக்கு மனமில்லாமல் போனது.

இந்த நேரம் யாரும் இந்தப் பக்கம் வரவும் மாட்டார்கள் என்பதால் யாரிடமும் உதவியும் கேட்க முடியாது.

அவன் காணவில்லை என்று தேடி வர அவனின் வீட்டில் அவன் அப்பத்தாவை தவிர யாருமில்லை.

அவனின் அப்பத்தாவும் வாசலில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருப்பாரே தவிர, இருட்டில் இவ்வளவு தூரம் அவரால் வர முடியாது என்று நினைத்தவள் வேறு வழியில்லாமல் அவன் அருகில் சென்றாள்.

தனியாகக் கிடந்த அவன் வேஷ்டியை எடுத்துக் கொண்டாள்.

“யோவ், இந்தா… எழுந்திரி. உம்ம வூட்டுக்குப் போவோம். நல்லா இருட்டிப் போயிருச்சுயா. பாம்பு கீம்பு வந்து கடிச்சுட போவுது…” என்று அவன் தோளில் கை வைத்து உலுக்கினாள்.

“ஏ பொட்டப்புள்ளயா நீ? என்னைய தொடாத. ஏ பொஞ்சாதி தவிர என்னைய யாரும் தொடக்கூடாது. போ… போ…” என்று போதையிலும் தெளிவாக அவள் கையைத் தட்டிவிட்டான்.

“சரிதேன். பாவமேன்னு இரக்கப்பட்டா நீரு இதுவும் சொல்லுவீரு. இன்னமும் சொல்வீரு. ஏ செடியை எல்லாம் போட்டு நசுக்கிட்டு இருக்கீரு. எழுந்திரிச்சு தொலையா. உம்ம அப்பத்தா உம்மைத் தேடப் போவுது…” என்று அவனின் கையைப் பிடித்துத் தூக்கினாள்.

“ஹாக்… ஆமா அப்பத்தா தேடும். நா வூட்டுக்குப் போறேன்…” என்று அவனும் தட்டுத் தடுமாறி எழுந்தான்.

ஆனால் அவனால் நிலையாக நிற்க கூட முடியவில்லை. அவன் கால்கள் பின்னி தள்ளாடி கொண்டிருந்தன.

வேஷ்டியை கையில் திணித்தாள்.

அதை வாங்கி இடுப்பைச் சுற்றி அரையும் குறையுமாகக் கட்டிக் கொண்டான்.

“நா போறேன். நீ கிணத்துப் பக்கம் போவாம வூடு போய்ச் சேரு…” என்று அந்த நிலையும் சொன்னவனைப் பார்த்து அவனின் மீதான அவளின் பரிதாபம் கூடியது.

வாய் தான் பேசினானே தவிர, அவனின் உடல் அவன் நடக்க ஒத்துழைக்க மறுப்பதைக் கண்டவள், அதற்கு மேல் யோசிக்காமல் சட்டென்று அவன் அருகில் சென்று அவனின் கையை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டாள்.

“ஏ, பொட்டப்புள்ள என்னைய தொடக்கூடாது…” என்று வேகமாக அவளை விட்டு விலக முயன்றான்.

“யோவ், போதும்! சும்மா அலும்பல் பண்ணாத. உம்ம பொஞ்சாதிகிட்ட போன ஒ கற்பை நா கடிச்சு முழுங்கிட மாட்டேன். பாவமேன்னு பார்த்து வந்தா ரொம்பத்தேன் லந்து பண்ற. கம்முன்னு வரணும். இல்லனா நானே உம்மைப் பிடிச்சு கிணத்துல தள்ளி விட்டுருவேன்…” என்று அவள் கடுப்பாகக் கத்த, கப்பென்று தன் வாயை மூடிக் கொண்டு வந்தான்.

அவனும் தள்ளாடி, அவளையும் தள்ளாட வைத்து அவன் நடக்க, தன் வலுவை காட்டி இருவரும் விழுந்து விடாமல் நடந்தாள் தேன்மலர்.

ராசுவும் அவர்களுடன் வாலை ஆட்டிக் கொண்டு நடந்தது.

“ஆமா, நீ யாரு?” என்று பாதித் தூரம் நடந்த பிறகு கேட்டான்.

“க்கும்… இப்ப சொன்னாலும் நா யாருன்னு உமக்குத் தெரிஞ்ச மாதிரி தேன். கம்முன்னு வாய்யா. நல்லா மாடு கணக்கா வளர்ந்து வச்சுருக்கீரு. உம்மைத் தாங்குறேன்னு எமக்குத்தேன் நோவுது…” என்று அவள் கடுப்படித்ததும் மீண்டும் வாயை மூடிக் கொண்டு வந்தான்.

ஊர் ஆரம்பிக்கும் இடத்தில் தான் அவன் வீடு இருந்தது. அவன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அவள் நினைத்தது போல் அவனின் அப்பத்தா பேரனை காணவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

தூரத்தில் பேரனை கண்டதும் வேகமாக எழுந்து வாசலில் வந்து நின்று அவனுடன் வருவது யார் என்று கண்களைச் சுருக்கிப் பார்த்தார்.

தேன்மலரை பார்த்த அவரின் முகம் சுருங்கியது.

“இவளா?” என்று அவர் முனங்கிக் கொண்டிருந்த போதே அவனுடன் வந்த தேன்மலர் அவரின் முகத்தில் இருந்த யோசனையைக் கண்டு கொண்டாள்.

அவளை அப்படி மற்றவர்கள் பார்ப்பது புதிது இல்லை என்பதால் கண்டுகொள்ளாமல் வீட்டின் அருகில் சென்றாள்.

வாசலில் இருந்த கயிற்றுக் கட்டிலில் அவனை விட்டவள், “இதுதேன் உம்ம கயித்துக் கட்டிலு. இப்ப இங்கன நல்லா படுத்து உருளும்…” என்று அவனிடம் சொன்னவள்,

“ஏ வயலு சகதில படுத்து உருண்டுகிட்டு கிடந்தாப்புல. அதுதேன் கொண்டாந்து வுட்டேன்…” என்று அவனின் அப்பத்தாவிடம் சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்காமல் தன் வீட்டை நோக்கி ராசுவுடன் நடக்க ஆரம்பித்தாள் தேன்மலர்.

தான் வீடு வந்து சேர்ந்ததைக் கூட உணராமல் கயிற்றுக் கட்டிலில் உருண்டு கொண்டிருந்தான் அவன்.