உனதன்பில் உயிர்த்தேன் – முன்னோட்டம்

பதட்டமாக ஓடி வந்தவளுடன் பட்டையைப் போட்டவனும் சேர்ந்து தடுமாறி வயலில் விழுந்து கிடந்தனர்.

தான் விழுந்து விடாமல் இருக்க, அவளைப் பிடிக்கிறேன் என்ற பெயரில் அவளின் இடையே அழுத்தமாகப் பற்றியிருந்தான் வைரவேல்.

உடல்கள் இரண்டும் ஒட்டி உரசி கொண்டிருக்க, சட்டென்று சுதாரித்தாள் தேன்மலர்.

“யோவ், குடிகாரப் பயலே… எம்மை விடும்…” என்றவள் தன் இடையிலிருந்த அவனின் கையை விடுவிக்க முயல,

அவனோ, “ஏ கைய எடுக்காத விழுந்துடுவ…” தாங்கள் விழுந்ததைக் கூட உணராமல் பிதற்றிக் கொண்டிருந்தான்.

“ஏற்கனவே விழுந்தாச்சு. இனி எங்கன விழ? விடும்யா…” என்றாள்.

“அச்சோ! விழுந்து போட்டியா? அடிப்பட்டுருச்சா? எங்கன அடிப்பட்டுச்சு? என்னைய பிடிச்சுக்கிட்டு நிலையா நின்னுருக்கலாம்ல…” அவன் தான் அவளையும் விழ வைத்தவன் என்று புரியாத நிலையில் அக்கறை பட்டுக்கொண்டான்.

“உம்ம அக்கறைல தீய வைக்க. மூச்சு முட்ட குடிச்சுப் போட்டு வந்து அலும்பு பண்ணாதேயா. அந்தப் பன்னாடை வேற தொரத்திக்கிட்டு வந்தான். விட்டு தொலையும். நா வூருக்குள்ளார போய்த்தேன் தப்பிக்க முடியும்…” என்று பதட்டத்துடன் புலம்பிக் கொண்டே தன் இடையிலிருந்த அவனின் கையை விலக்க முயன்றாள்.

அவனோ இன்னும் அழுத்தமாக அவளின் இடையைப் பற்றிக் கொண்டவன், “என்னது? தொரத்திட்டு வந்தானா? எவன் அவன்? அவனை நா ஒரு கை பார்த்து போடுறேன். நீ இங்கனயே இரு…” என்று அவளை விட்டு எழுந்து கொள்ள முயன்றான்.

ஆனால் எழுந்து கொள்ள முடியாமல் கால்கள் தள்ளாடின.

அதோடு அவளின் சேலையில் அவனின் கால்கள் சிக்கியிருந்தன.

“யோவ், இருய்யா சேலையை அவுத்துப் போடாத!” என்று அதட்டி அலறினாள்.

“ச்சே, ச்சே தப்பு. சேலையை எல்லாம் அவுக்க மாட்டேன். நா நல்லவன். நா அவனை அடிக்கப் போறேன் இரு…” என்று அவளின் சேலையில் சிக்கிய தன் கால்களை விலக்க முயன்றான்.

ஆனால் இருட்டிலும், அவனின் போதையிலும் கால் எங்கே சிக்கியிருக்கிறது என்பதையே கண்டறிய முடியவில்லை. குனிந்து கால் எங்கே மாட்டியிருக்கிறது என்று பார்க்க முயன்றவன் போதையில் தடுமாறி மீண்டும் அவளின் மீதே விழுந்து வைத்தான்.

“அடப்பாவி! ஏ இடுப்பை உடைச்சுப் போடாதே!” என்று தேன்மலர் வலியில் கத்த, அந்த நேரம் சரியாக அவர்களின் மீது விளக்கு ஒளி பாய்ந்து அவர்கள் படுத்திருக்கும் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

See More  🌊 அலை 19 🌊