ஆட்டம் – 2
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அரை வட்டமாக சுருண்ட கூரைகள் வானளாவ உயர்ந்த கட்டிடங்களின் உயரத்தைக் காட்டிக்கொண்டிருந்தது.அடர் சிவப்பு நிற பின்னணியில் தங்க நிறத்தில் இழையோடியிருந்த வேலைப்பாடுகளுடன் இன்ன பிற நிறக் கலவைகளுடன் பார்ப்பவரை மீண்டும் மீண்டும் கவர்ந்திழுக்கும் சக்தி இந்தக் கட்டிடங்களுக்கு உண்டு.
இந்த ராட்சச கோபுரங்களுக்கு நடு நாயகமாக வீற்றிருந்த கட்டிடத்தில் லீ யுன் யுவான் ( Li yun yuvan ) எனப் பெயரிடப்பட்டிருந்தது.அதன் பொருள் அழகிய இணக்கம் – ஒரு மனிதனின் அறிவையும் திறமையும் நடத்தையையும் செப்பனிடும் இடம்.
அந்தப் பெயரை மீண்டும் கூறிப் பார்த்தேன்.ஒரு வேளை அதற்கு மாற்றமாக இருப்பதால் அப்படி ஒரு பெயரை வைத்திருப்பார்களோ ?
யாருக்குத் தெரியும்.
எனது விழிகள் மீண்டும் அந்த இடத்தை சல்லடையிட ஆரம்பித்தது.நேற்றிரவு பெய்த மழை இன்னும் விடாமல் அங்காங்கே தூறலாக தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது.எத்தனை தடவை பார்த்தாலும் கண்ணுக்கு விருந்தளிக்கும் இந்த இடம் ஏனோ எனக்கு பளபளக்கும் பாம்புகளை நினைவுபடுத்தியது.
இரண்டுமே அழகோடு ஆபத்தையும் கொண்டது.
இங்கு வந்து சுமார் மூன்று மாதங்களாகிறது.இன்னும் இரண்டு மாதங்கள் தான்.அதற்குப்பிறகு எந்தப் பரபரப்பும் இல்லாமல் நான் என் பழைய வாழ்க்கைக்கே திரும்பிவிடலாம். இந்த இடத்தைக்கட்டிகொண்டு அழத் தேவையில்லை.
அரசாணை மட்டும் கழுத்துக்கு மேல் கத்தியாக இல்லாமல் இருந்தால் யார் இங்கு வருவார்கள் ? …
வந்த நாளிலிருந்து நிற்பதிலிருந்து கழிவறைக்குச் செல்வது வரை சட்டங்கள்.விட்டால் அங்கும் எப்படிப்போக வேண்டும் என்றும் எழுதியிருப்பார்கள்.எனது சுதந்திரத்தை முழுதாகத் தொலைத்து விட்டு உறவுகளையும் பிரிந்து இங்கு தங்குவதில் என்ன சந்தோஷம் கிடைக்கப்போகிறது ? … ஆனால் நான் இங்கு இருப்பதால் அங்கு என் முழுக் குடும்பமுமே மகிழ்ச்சியாக இருக்குமே.அதை நினைத்துப் பார்த்துதான் இதையெல்லாம் சகிக்க வேண்டியிருக்கிறது.
இந்த இடம் , அரசரின் பாட்டனார் காலத்தில் பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு உருவாக்கப்பட்டது.இங்கு முறையாகப் பயின்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அரச வேளைகளில் பலர் இணைந்துள்ளார்கள்.அது தலைநகரத்தில் மட்டுமல்லாமல் , சொந்த ஊர்களுக்கும் மாற்றலாகிப் போகும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
இந்தக்கல்லூரியின் ஆட்சேர்ப்பில் எந்தவொரு வரையறையுமில்லை.அரசபரீட்சையில் சித்திபெறும் எல்லா மாணவர்களுக்கும் அரசாங்கமே தனிப் பொறுப்பேற்று உணவு, உடை , தங்குமிட வசதி அளித்து கல்வியையும் போதிக்கும்.இதிலிருந்து வேலை கிடைத்து அதைச் சிறப்பாக செய்தால் பதவி , ஊதிய உயர்வும் சேர்த்து கிடைக்கும்.
திறமையை பொறுத்து அரசரின் மதி மந்திரியாகும் வாய்ப்புக் கூட பெண்களுக்கு கிடைக்கும். எனக்குத் தெரிந்துசில பெண்கள் அரச ஆலோசகராக இருந்திருக்கிறார்கள்.மதி மந்திரியாக ஆனால் யாருமே இருந்ததில்லை.அரண்மனை ஆண் ஆலோசகர்களின் தரத்தை விட அவர்களது தரம் சற்றுக்குறைவானதுதான்.
வெளியிலிருந்து பார்க்கும் போது இது பெண்களைப் போற்றுவது போலவும் தங்கக்கிரீடம் கொடுப்பது போலவும் தானிருக்கும்.எனினும் இவ்வாறு வேலையில் அமரும் பெண்களுக்கு பொதுவாகத் திருமணம் நடப்பதில்லை.அவ்வாறு நடந்தாலும் அது நிலைப்பதில்லை.
சில நேரங்களில் இரண்டாவது அல்லது மூன்றாவது தாரமாகத்தான் மணம் புரிய வேண்டியிருக்கும்.எனவே அழகு , கல்வி , தராதரம் என எல்லாமே இருந்தாலும் இங்கு வருவதால் ஒரு பெண்ணின் வாழ்க்கைத் தரம் குறையக்கூடிய நிலை தான் இருந்தது. ஒரு எழுதப்படாத நியதியாகவே இது கடந்த காலத்தில் இருந்தது.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
துரதிஷ்டவசமாக இங்கு நடக்கும் இறுதிப்பரீட்சையில் ஒரு பெண் சித்தி பெறாவிட்டால், சமூகம் அவளை அதைக் கூறியே வெளியில் தலை காட்ட முடியாமல் செய்துவிடும்.இந்தத் தோல்வியின் விளைவாக திருமணத்திற்குப் பிறகும் நிம்மதியாக இருக்க முடியாது.
நூற்றில் ஒரு வாய்ப்பாக அரண்மனைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் அதிஷ்டசாலிகள் தான்.இங்கு கற்றவற்றை வைத்து அவர்கள் மீதி வாழ்க்கையை மரியாதையாக வாழ்ந்துவிடலாம்.
எனவே இந்தக் கல்வி இலவசமாக இருந்தாலும் அரச குலப் பெண்களோ , அல்லது அரசப்பணிபுரிவோரின் பெண்களோ இங்கு பெரிதாகக் கால் வைப்பதில்லை.அவர்களுக்குப்பதிலாக குடும்பங்களில் அவர்களுக்கு பிடிக்காத அல்லது உதவாத பெண்களை இங்கு குப்பை கொட்டுவது போலத் தான் இதுவரை கொட்டிக்கொண்டிருந்தார்கள்.
இந்தப்போக்கு அரசரின் தந்தையின் காலப்பகுதியில் சற்று மாற்றமடைந்து கல்வி ஒரு அடையாளமாகவே பெண்களுக்கு மாறிவிட்டது.
அரச குலம் சார்ந்த பெண்கள் பல்கலைகளில் தேர்ந்திருப்பதற்கு இந்த இடம் உதவியதால் காலப்போக்கில் ஏனையோரால் மதிக்கப்பட்டும் வருகிறது.முழுதாக இல்லாவிட்டாலும் இந்த நிலை எவ்வளவோ பரவாயில்லை என என் தாயார் அடிக்கடி கூறுவதுண்டு.தற்போதைய அரசியார் கூட இங்கு கல்வி பயின்றவர்கள்தானாம். சில திடீர் மாற்றங்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
உண்மையில் எனக்கு கல்வி கற்பதில் ஆர்வம் தான்.
வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து படித்த எனக்கு , இதற்கு முன் இங்கு வர வேண்டிய எந்தக் கட்டாயமும் இருக்கவில்லை.எந்தவொரு அழுத்தமோ , தலையீடுகளோ இல்லாமல் அமைதியான ஒரு வாழ்க்கை.அருவியில் ஓடும் நீரைப்போல் தங்கு தடையற்று ஓடுவதே எனக்குப் பிடித்தமானது.
ஆனால் இரு மாதங்களுக்கு முன் அரசர் , எல்லா குடும்பத்தில் இருந்தும் பன்னிரண்டு வயது பூர்த்தியான பெண் பிள்ளைகளும் சரிசமமாக இங்கு விண்ணப்பித்து முறையான போட்டிப்பரீட்சையில் கலந்து கொள்ள வேண்டும், எனக் கட்டளைப் பிறப்பித்து விட்டார்.
நுழைவுத்தேர்வை சரிவர எழுதாமல் இருந்தால் இங்கு வர வேண்டிய தேவை இருக்காது தான்.எனினும் கவ்வைக்குதவாத மானம் , கௌரவம் எல்லாம் இதில் அடங்கியிருப்பதாக என் தந்தை நம்புகிறார்.
வீட்டில் இருக்கும் வேறு யாரையாவது அனுப்பலாம் என்று ஆலோசித்தாலும் அது வாத பிரதிவாதங்களாகத் தொடர்வதற்கு நானே இங்கு வந்து விடலாம் என்று முடிவெடுத்து வந்து விட்டேன்.
எந்தவொரு விடயத்தையும் என் வீட்டில் கட்டாயப்படுத்துவதில்லை , இருந்தாலும்
அவர்கள் கேட்கும் போது என்னால் தட்டவும் முடிவதில்லை.எனவே உள்ளூர விருப்பம் இருக்காவிட்டாலும் சரி எனத் தலையசைத்து விட்டேன்.
பரீட்சையில் கலந்து கொண்ட பலர் ஏற்கனவே என்னோடு ஒன்றாக அட்சர அப்பியாசம் பயின்றவர்கள்தான். அதுமட்டுமல்லாமல் லியூ ஸின்னும் ( Liu zin ) இருப்பது எனக்குப் பக்க பலம் தான்.அவள் எனது தாயின் இரண்டாவது மூத்த சகோதரரின் மகள்.நாங்கள் இருவருமே சிறு வயதிலிருந்து ஒன்றாகச் சேர்ந்து வளர்ந்தவர்கள்.சொந்தத்தைத்தாண்டி ஒரு ஆத்மார்த்தமான நட்பு எங்களிடம் வேரூன்றியிருந்தது.
இங்கு வந்த இரண்டு மாதங்களாக அவளுக்கும் எனக்கும் தெரிந்த நட்பு வட்டாரத்தோடு தான் பெருமளவு பேசிவருகின்றேன்.இருப்பினும் அந்தக் கூட்டத்தை மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை.அவர்கள் நல்லவர்களா ?
கெட்டவர்களா ? என்றெல்லாம் எனக்குத்தெரியாது.பிடிக்கவில்லை , அவ்வளவுதான்.
ஆனால் அவர்களின் சேட்டைகளைப்பற்றி கூறுவதானால் ஒரு நாள் முழுக்க கூறிக் கொண்டே போகலாம்..அவர்கள்…அயலின் ( Aylin ) , ஹுவா ( Huva ) ,மஞ்சள் இளவரசி லியான் ( liyaan ) ,ஸியு ( Ziyu ).
இதில் அயலினைத் தவிர மற்ற மூவரும் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளந்தவர்கள்.ஒப்பீட்டளவில் என்னுடைய குடும்ப தராதரத்தை விட சற்றுக் குறைந்தவர்கள் தான்.எனவே ஏனையோரின் கட்டற்ற நடவடிக்கைகளை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.எங்களைப்போல் கட்டுப்பாடுகளும் நேர்த்திகளும் அவர்களுக்கு போதிக்கப்படவில்லை.
இருந்தாலும் இந்த அயலின்….
ஒரு காலத்தில் அவர்கள் குடும்பத்திற்கு இருந்த மதிப்பும் மரியாதையும் எவரையும் ஆட்டிப் பார்க்க வைக்கும்.பின்னாளில் பரவிய வதந்திகள் அவற்றை ஆட்டிப் பார்த்தலும் ஒரு உயர் குலப் பெண் போலவா .. நடந்து கொள்கிறாள்.ஆடவர்களுக்கும் அவளுக்கும் எனக்குத் தெரிந்து பெரிய வித்தியாசமில்லை.
அவள் இருக்கும் தைரியத்தில் மற்ற மூவரும் இணைந்து இந்த இடத்தை என்னவாக மாற்றப் போகிறார்களோ? … அயலினின் செயல்களில் பலருக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் அதை எடுத்துக்கூற யாருக்கும் , முதுகெழும்பு இருக்கவில்லை.என்னிடம் நேரடியாக அவள் எதற்கும் பேசியதில்லை.ஒருவேளை எப்போதாவது என்னிடம் வாலாட்ட நினைத்தால் அவள் வாலை ஓட்ட நறுக்கி விடுவேன்.
இங்கு எல்லாவற்றுக்கும் ஒரு சட்டம் இருந்தால் அதில் எல்லாவற்றையும் மீறுவது தான் அவள் வேளை.எல்லோரும் மேலே செல்லுங்கள் என்று சொல்லப்பட்டால் , அவள் மாத்திரம் கீழே சென்றுவிடுவாள்.
ஒருவித தலைக்கனம் அவளிடம் எப்போதும் இருக்கும்.சில நேரங்களில் அவள் யாரையுமே மதிப்பதில்லை போன்ற உணர்வு எனக்கு அடிக்கடி ஏற்படும்.
என்னைப் பொறுத்தவரையில் அவள் ஒரு பெரும் தலையிடி.அவளோடு சேர்ந்தாலும் சரி முறைத்தாலும் சரி அந்த தலையிடி எமக்கும் வந்து விடும்.என்றைக்காவது ஒரு நாள் பெரிதாக எதையாவது ஒன்றைச் செய்துவிடுவாள் .அப்போது நான் ஏன் இவளை வெறுக்கிறேன் என்பது இவர்களுக்குப் புரியும்.
நேற்றிரவு கூட அவர்கள் என்ன செய்தார்கள் என எனக்குத் தெரியாதா அவள் என்ன இங்கிருக்கும் எல்லாரும் குருடர்களாகவும் செவிடர்களாகவும் இருப்பார்கள் என எண்ணிவிட்டாள் போலும் .
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
இன்னும் சில நாட்கள் தான் இதையெல்லாம் நான் சகித்துக் கொள்ள வேண்டும்.தந்தை கூறிய படி இன்னும் இரு மாதங்களில் எதையாவது காரணம் காட்டி என்னை இங்கு வருவதை விட்டுத் தடுத்து நிறுத்திவிடுவார்.அதுவரை தாக்குப்பிடித்தால் போதும்.
” என்ன இன்றும் புத்தகங்களை அடுக்கி குறியீடுகளை வைத்தாயிற்றா ? ” எண்ணங்களில் கரைந்து கொண்டிருந்த என்னை லியூ ஸினின் வார்த்தைகள் உலகுக்கு மீட்டன.
” ஆ , ஆம் இப்போதுதான் முடித்தேன்.நீயும் இன்று நேரத்தோடு வந்து விட்டாயே ? நாம் இப்போதே வகுப்புக்கு சென்றுவிடுவோம்.பாடங்களை மீட்டுவதற்கு வசதியாக இருக்கும்.”
” ம்ம்.அதுவும் சரிதான் .நேரத்தோடு வராமல் போனால் நீ தான் என்னையும் விட்டு விட்டுப் போகிறாயே என்று குறைபட்டுக் கொண்டாள்,மீண்டும் அவளே தொடர்ந்தாள்.
” பார் .. இங்கு இருக்கும் யாருமே எங்களைப்போல் நேரத்தோடு வரப்போவதில்லை.உன்னைப் போல் அவர்கள் கூறியதை அப்படியே கடைப்பிடிப்பதுமில்லை.எழுத்தில் இருக்கும் சட்டங்கள் எப்போதும் எழுத்தில்தான் இருக்கும்.அமுலுக்கு வரப்போவதில்லை
ஸங் லான் ( Zhang laan ) .”
அவளை நான் நேராகப் பார்த்தேன் , ” அது உண்மையாக இருக்கலாம். எனினும் இவ்வாறு சட்டங்கள் இயற்றப்படுவதே எமது நன்மைக்காகத் தான் அல்லவா ? அது எழுத்தில் மட்டுமே இருந்தாலும் சரிதான்.
நான் ஒருவள் செய்வதைப் பார்த்து அடுத்தவர்களும் செய்ய ஆரம்பிக்கலாம் அல்லவா ? … ” லியூ ஸினுக்கு நான் அவளை விட்டு விட்டு எதையாவது செய்தால் பிடிக்காது.அதற்காகத்தான் இவ்வளவும்.
” ம்ம் .. செய்தால் சரிதான்….” என்று அவள் கூற பேசிக்கொண்டே நடந்ததில்
நடைபாதையைக் கடந்து வகுப்பறையை நெருங்கிக்கொண்டிருந்தேன்.அதன் கதவுகள் அகலத் திறந்திருந்தன.
இவ்வளவு நேரத்தோடு நாங்கள் வந்திருக்கும் போது யாராக இருக்கும் ? என் மனதில் எழுந்த கேள்வி லியூ ஸினுடைய வார்த்தைகளாக உத்தித்தன.
” எனக்கும் தெரியவில்லை , வா .. உள்ளே சென்று பார்ப்போம்.”
உள்ளே இரண்டடி வைத்ததும் வெண்மையில் இளநீல நிற கைவேலைப்பாடுகள் அமைந்த ஒரு காலணி பின் மேசையோடு கேட்பாரற்றுக் கிடந்தது.அதைப் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றால் வகுப்பறை புத்தகங்கள் வைக்கும் மேசையில் இரு கால்கள் மட்டும் தெரிந்தன.தலையைக் காணவில்லை.நன்றாக உற்றுப் பார்த்தால் , தலை கதிரையில் உட்காரும் இடத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.அந்த பெண்ணின் முகத்தை ஒரு துணி மூடியிருந்தது.
” யார் இப்படி இருப்பது ? ” …
” யாரது ? ” என்று அழைத்தவாறே அருகில் செல்ல காற்றில் அந்தத் துணி அசைந்து கீழே விழுந்தது.நான் நினைத்தேன்.எந்தத் தலையிடியை நெருங்கக்கூடாது என்று எண்ணினேனோ அந்தத் தலையிடியின் அருகில் சென்றால் தான் இப்படி எல்லாம் நடக்கும்.எனக்கு இது தேவைதான்.
சற்று தைரியமாக சென்றதால் நான் எந்த முக மாறுதலையும் காட்டவில்லை , ஆனால் லியூ ஸினுக்கோ கை, கால்கள் உதறல் எடுத்தது.
அவள் அயலினைக் கண்டு பயப்படவில்லை.சென்ற வாரம் இந்தக் வானரக்கூட்டம் பரப்பிவிட்ட பேய்க் கதையை கேட்டதிலிருந்து இவளுக்கு உள்ளூர உதைப்புத்தான்.எங்கு போனாலும் முன்னாலும் பின்னாலும் என்னோடு பசை போட்டது போல் ஒட்டிக்கொண்டிருப்பதன் காரணங்களுள் இதுவும் ஒன்று .அயலினின் முன்னால் இவள் இப்படி இருக்கக் கூடாது.
பார்வையாலேயே அந்தத் தலையிடியை ஒரு வெட்டு வெட்டி விட்டு அவள் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வேக வேகமாக முன்னிருக்கைகளுக்கு அழைத்துச் சென்றேன்.
லியூ ஸின் பற்களை நறநற வென கடித்தாள்.அவள் கோபத்தை அயலினிடம் காட்ட முடியாமல் உள்ளடக்கிக் கொண்டு வருவதும் புரிந்தது.வெளிறிப் போன முகத்தோடு தலை கீழேயும் கால்களையும் மேலே வைத்து பேயைப்போல காட்சியளிக்கும் போது , அவள் பயத்தில் ஓடாமல் இருப்பது அதிசயம் தான். இவளுக்கும் அயலினைக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.அதை எப்படிக் வெளிப்படுத்தினாலும் அவளை அது பாதித்தது போலவும் தெரியவில்லை.இப்போதைக்கு ஒதுங்கிப் போவதே நல்லது.
வகுப்பறையை முழுதாகக் கலைத்துப்போட்டிருந்தாள்.உடல் பலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இதில் காட்டினாள் போலும்.ஆசிரியர் மேசையையும் விட்டு வைக்க வில்லை.அவற்றை உடைக்காமல் விட்டதே போதும் என்று நினைக்க வேண்டுமோ.அப்போதுதான் திடீரென அந்தக்கேள்வி உதித்தது.அயலின் வகுப்பறைக்கு நேரத்தோடு வருபவள் அல்ல.அப்படியானால் ஏன் இன்று அவள் இங்கு
இருக்கிறாள் ?அவள் என்ன செய்தால் எனக்கென்ன வந்தது மனம் அப்படிக் கூறினாலும் எனது ஆராய்ச்சிப்பார்வை மட்டும் அவளைத் தொடர்ந்தது.
நேரத்தை அவளிடம் வீணாக்கவும் மனமில்லாததால் கதிரை மேசைகளை ஒழுங்குபடுத்தி பாடங்களுக்கு தயாராகிக் கொண்டிருந்தேன்.
பாதி வகுப்பறையை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தும் போது ஒரு பயங்கர அலறல் ..
” ஆஹ்…………….”
அந்த முழுப்பிரதேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது.சிறு சலசலப்போடு தொடங்கிய காலைப்பொழுது அந்த சப்தத்தில் முழு அமைதியைத் தன் வசப்படுத்திக்கொண்டது.
ஒரு வேளை இந்த அயலினின் கைங்கர்யமோ என திரும்பிப் பார்த்தால், அவள் வகுப்பறை வாயலில் நின்று அலறல் வந்த திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் கண்களிலும் கலவரம் தேங்கி நின்றது.மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.ஆனால் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
சில கணங்களில் அலறல் வந்த திசையை நோக்கி மாணவர்களும் சில ஆசிரியர்களும் சென்று கொண்டிருந்தார்கள்.
” ஏதாவது முக்கியமான விடயம் என்றால் எப்படியும் கூப்பிடுவார்கள் எனவே இப்போதைக்கு இங்கேயே இருப்போம் ” என லியூ ஸின்னிடம் கூற அவளும் அதையே ஆமோதித்தாள்.
நேரம் செல்லச் செல்ல மாணவர்கள் கலவர முகத்தோடு விடுதிப்பக்கம் அதிகமாக செல்ல ஆரம்பித்தார்கள்.யாரும் யாரிடமும் எதையும் சொல்லவுமில்லை, பேசவுமில்லை.அயலின் சிறிது நேரத்திற்கு பார்த்துவிட்டு கடந்து சென்ற ஒரு மாணவியைப் பார்த்துக் கேட்டாள்.
” என்ன நடந்தது ? “
” அங்கு அங்கு ஹுவா , ஹுவா உ , இல்லை ஏதோ நடந்து விட்டதாம்.”
” ஓஹ் .. ” என்ற ஒற்றை வார்த்தை தவிர அவள் வாயில் இருந்து முத்து உதிரவில்லை. நெற்றியை சுருக்கி சற்று யோசித்துவிட்டு அவளும் நடக்க ஆரம்பித்தாள்.
‘ ஹுவா ‘ என்று கூறியதால் எனது மனமும் சற்றே துணுக்குற்றது.அவள் இந்தக் கூட்டத்தோடு இருந்தாலும் இப்படியெல்லாம் உரத்துக் கத்த மாட்டாளே .. அவளோடு நான் பழகியிருக்காவிட்டாலும் என்னைக் காணும் போதெல்லாம் சிரித்து விட்டுத் தான் போவாள்.சேர்க்கை சரியில்லை என்றாலும் என்னைப் பொறுத்த மட்டில் அவள் நல்ல பெண் தான்.பாவம், எந்தப் பிரச்சினையிலும் மாட்டாமல் இருக்க வேண்டும்.
உள்ளிருந்து ஆழ்ந்த பெருமூச்சை வெளியேற்றியபடி நானும் என்னையறியாமல் அந்தப் பக்கம் நடக்க ஆரம்பித்தேன்.எனக்கு முன் அயலின் சாவகாசமாக சென்று கொண்டிருந்தாள்.
மாணவர்கள் அயலினைக்கண்டதும் ஒருவரை ஒருவர் கலவர முகங்களோடு பார்த்துக்கொண்டார்கள்.
அவளிடமிருந்து ஒரு கேள்வியானப் பார்வையைத் தவிர வேறெதுவும் பிறக்கவில்லை.ஆனால் ஏதோ ஒரு உணர்வு என் அடிவயிற்றைப் பிசைந்தது.
அயலினின் நெற்றியில் விழுந்த முடிச்சு விடை தெரியாமலே அவிழ்ந்தது.எனக்குள் ஏற்பட்ட உதறல் கூட அவளிக்கிருக்கவில்லை.
விடுதியறைகளை நெருங்கும் போது தெளிவற்ற அழுகுரல்களும் , ஆறுதல்களும் காற்றில் கலந்து காதுகளை வந்தடைந்தன.அயலினைக்கண்டதும் அங்கு சூழ்ந்திருந்த கூட்டம் விலகியது.வழமையான முகமன்களோ , தலையசைப்புகளோ ,புன்னகைகளோ இல்லாமல் அவர்களது கண்கள் எங்களை சந்திக்காமல் அலைபாய்ந்து கொண்டிருந்தன.
அவற்றைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே சென்ற அயலின் வாயிலிலே மரமாக வேரூன்றி நின்றாள்.இப்படி வாயிலை அடைத்துக் கொண்டு நின்றால் , என்னால் போக முடியாதா ?
அவளை விலக்கிக்கொண்டு முன்னே இரண்டு அடிகள் வைத்தேன்.எனது விழிகள் ஹுவாவின் மீதே நிலைத்து நின்றது.
அவள் மீண்டும் எழ முடியாத ஆழ்ந்த தூக்கத்திற்கு போயிருந்தாள்.லியான் கதறித்துடிக்க ஸாவோ அவளை ஆறுதல் கூறி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
இந்தப் பகுதியில் வனப் பாம்புகளின் நடமாட்டம் இருந்தாலும் இன்று வரை அதனால் யாரும் மரணித்ததில்லை.கொஞ்சம் கவனித்திருந்தால் கூட ஹுவா இன்று இருந்திருப்பலோ, என்னவோ .எனக்குள் இனம் புரியாத கவலை மனதை சூழ்ந்துகொண்டது.நேற்றுவரை அவர்கள் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து சிரிப்பது என் மனக்கண்ணில் ஒரு முறைத் தோன்றி மறைந்தது.இப்போது ஹுவா படுக்கையிலும் அவளருகே மற்ற இருவரும் நிற்க , அயலின் வாயிலோடு நின்றாள்.
எதிர்பாராத இந்த மரணம் சூழ்ந்திருந்த எல்லா மாணவர்களையும் ஆழமாகப் பாதித்திருந்தது.அழுதுத் துடித்த லியானைக் கட்டுப்படுத்த அங்கிருந்த மாணவர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.ஸாவோ அந்த இடத்தில் இருந்த எல்லோரையும் கவனித்துக்கொள்ள முயன்றாள்.அவள் கண்களிலும் ம் .. என்றால் கண்ணீர் வழிந்தோடும் நிலை தான்.அயலின் மாத்திரம் இன்னும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.முகம் உணர்ச்சிகளைத் தொலைத்திருந்தது.ஹுவாவைத் தவிர அவள் பார்வை வட்டம் யாரிடமும் பதிவதாக இல்லை , லியான் ஸாவோவிடமும் கூட.
ஸாவோவை யாரோ அழைக்க லியான் ஆற்றுவோர் , தேற்றுவோர் இல்லாமல் அழுது கொண்டிருந்தாள்.அவளருகில் சென்று முழுதாக அணைத்துக்கொண்டேன்.
ஏன் ? எதற்கு என்றெல்லாம் ஆராய என்னால் முடியவில்லை.தொடர்ந்த அழுகையின் காரணமாக அவள் குரல் உடைந்து விம்ம ஆரம்பித்தாள்.சூழ்ந்திருந்த மாணவர்களின் பேச்சுக்குரல் இடையிடையே அபஸ்வரமாக ஒலிக்க ஆரம்பித்தது.
” யார் முதலில் அவளைக் கண்டது ? எப்போது நடந்தது ? ஆசிரியர்களுக்கு சொல்லியாயிற்றா ? இதுவரை நான் இங்கு இப்படி மரணத்தை கேள்விப்படவில்லையே ? … நேற்று வரை துள்ளி ஆடித் திரிந்து கொண்டிருந்தாள்.இன்று பார் நிலையை .. ஆமாம் , ஆமாம். ” கூட்டத்தின் நடுவில் முதலில் கிசுகிசுப்பாக இருந்து பின் ஒன்றின் பின் ஒன்றாக கேள்விகளும் பதில்களும் அலை அலையாகப் பாய்ந்து கொண்டிருந்தன.ஹுவாவின் இறப்புக்கு கூட மதிப்புக்கொடுக்கத் தெரியவில்லை இவர்களுக்கு.
என்ன செய்வது என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே கணீரென்ற குரலில் அயலினிடமிருந்து வெளிப்பட்டது.
“ எல்லோரும் இந்த இடத்தில் இருந்து போய் விடுங்கள்.வகுப்பாசிரியரையும் இவர்களையும் தவிர்த்து யாரும் இந்த அறைக்குள் நுழையக்கூடாது “ என லியானும் நானும் இருந்த பக்கத்தைக் காட்டி ,தெளிவாக எல்லோரையும் ஒரு முறைப் பார்த்து விட்டு நிதானமாக உதிர்த்த வார்த்தைகளைக் கேட்டு விதிர் விதிர்த்துப் போனது அந்த கூட்டம்.
சில நிமிடங்கள் மழையின் தூறல்களில் சொட்டிக்கொண்டிருந்த நீர்த்துளிகளின் சப்தங்கள் கூட அங்கு கேட்க ஆரம்பித்தது.
” ஹுவா உனக்கு மட்டும் நண்பி இல்லை அயலின் , எங்களுக்கும் தான் ஏதோ ஒரு விதத்தில் தெரிந்தவள் .நாங்கள் இங்கு நிற்கக் கூடாது என்று கூற உனக்கும் இங்கு உரிமை இல்லை ” , என்று ஒரு வித இளக்காரமான குரல் …. அந்த கூட்டத்தில் இருந்த மிங் யுனானிடமிருந்து ( Ming yunaan ) வெளிப்பட்டது.
இந்த வம்பளப்பவளிடமிருந்தா இந்தக்கேள்வி வர வேண்டும் ? இந்த கலாசாலையில் கடைசி வருடத்தில் படிக்கும் மாணவி தான் , அதாவது எங்களுக்கு மூத்த மாணவி , இவர்களது கூற்றுக்கு நாம் விரும்பியோ விரும்பாமலோ தலையசைக்கத் தான் வேண்டும்.ஆனால் எங்கு என்ன நடந்தாலும் முதலில் இந்த மிங் யுனானுக்கு எல்லாத் தகவலும் தெரிந்திருக்க வேண்டும் என்கிற ஆர்வம்.அந்தப் பட்டியல் கலாசாலையின் முதல்வரிலிருந்து விடுதியில் உள்ள சமையற்காரர் வரை நீளும்.இதுவரை அதை யாரும் கண்டித்ததுமில்லை .
அது ஒருவரது இறப்பிலுமா , நீள வேண்டும்.அயலின் மட்டுமல்லாமல் இங்கிருக்கும் எல்லோருமே ஹுவாவோடு தொடர்புப்பட்டவர்கள்தாம் .எனவே யாரும் யாரையும் போக சொல்ல முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை , அதுவும் ஒரு மூத்த சகோதரியை சொல்லவே முடியாது , அப்படிக்கூறினால் அதன் பின்விளைவுகளையும் ருசி பார்க்க வேண்டியது தான்.இப்போது சூழ்ந்திருந்த கூட்டம் இவர்களின் பிரச்சினையைப் பார்க்க ஆரம்பித்தது.
” நீங்களும் இங்கு சூழ்ந்திருப்போரும் அவளுக்கு நண்பி என்பதால் தான் உங்களை வெளியில் போகச் சொல்கிறேன். …
அவள் சடலத்தை இப்படியே நின்று வேடிக்கைப் பார்ப்பது தான் சரி எனக் கூற வருகிறீர்களா ? அல்லது நான் கூறியது போல் நீங்கள் வெளியில் சென்றால் அவளை , … அவளை யாரும் தொந்தரவு செய்யாமல் மரியாதை கொடுப்பது சரியா ? இல்லாவிட்டால் இப்போதே ஆசிரியர் லியான் க்ஷியிடம் சென்று எது சரி, எது தவறு என்று கேட்டுத் தெரிந்து வருவோமா ” அயலினின் வார்த்தைகளில் முதலில் இருந்த கடினமும் தெளிவும் இப்போது இல்லை.இருந்தாலும் யுனானுக்கு ஆசிரியர் லியான் க்ஷியிடமிருந்த பயம் மறு வார்த்தை பேச வைக்காது.
எதிர்பாராத இந்த நிகழ்வில் எல்லோருமே அவரவர் சோகத்தில் உழன்று கொண்டிருக்கும் போது யார் எதை செய்வது ? எனப் புரியாமல் இருப்பது என்னவோ உண்மைதான்.ஆனால் அதை சற்றே பொறுமையாகக் கூறினால் அந்த வம்பு வளர்ப்பவளின் வாய்க்கும் தீனியாகத் தேவையிருக்காது.இப்போதைய நிலைமையில் இவர்களையும் பகைத்து என்ன நடக்கப்போகிறதோ …
இந்தக்கேள்விக்கு அங்கிருந்த யாராலும் நேரடிப் பதிலைக் கூற முடியவில்லை. யுனானின் முகமும் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் கருத்துப் போக கோபத்தைக் காட்டவும் முடியாமல் அடக்கவும் முடியாமல் வெளியேற ஆரம்பித்தாள்.அவளோடு சிலர் ஒன்றாக வெளியேறினர்..யுனானுக்கு இருக்கும் குறுக்குப் புத்தியில் எந்தக் குட்டையையும் குழப்பாமல் போனதே மேல் என்று தான் நினைக்கத் தோன்றியது.இப்படி இலகுவாக அவள் தோல்வியை ஒத்துக்கொள்ள மாட்டாள்.சரி எதுவானாலும் பிறகு பார்த்துக்கொள்வோம்.
பழகி சில நாட்களாக இருந்தாலும் ஹுவாவின் குணம் தெரிந்த சிலர் அவளுக்காக அங்கு இருக்க வேண்டும் என்று எண்ணி அயலினின் முகத்தைப் பார்த்தனர்.அவளோ அங்கிருந்த யாரையும் மருந்துக்காகக் கூடப் பார்க்கவில்லை.ஏன் எங்களை மட்டும் விட்டு வைத்தாள் ? என்னைப்போகச் சொல்லியிருந்தாலும் நான் போகமாட்டேன், அது வேறு விடயம்.இந்தக் காலநிலை போல நிலையில்லாத அவள் மனதை என்னாலும் அறிந்து கொள்ள முடியாது.
வேரூன்றியிருந்த அவள் கால்களை விடுவித்து ஹுவாவை நோக்கி நகர ஆரம்பித்தாள் அயலின்.லியானின் அழுகுரல் முழுமையாக நின்றது.விழியோரம் வழிந்தோடிய நீர் , அவளை அணைத்திருந்த என் உடையை நனைய வைத்தது.அவள் உடலோ குளிரில் நடுங்குவது போல் நடுங்கிக் கொண்டிருந்தது.ஹுவாவின் கலைந்திருந்த சிகையை கைகளால் அமர்த்திவிட்டாள்.இறுதி நேரத்தில் அவள் வலியில் மடக்கியிருந்த கைகளை மென்மையாக நீவி விட்டாள்.நேர்த்தியற்ற உடையை இழுத்து விட்டு அவள் உடலை முழுமையாக மூடினாள்.மேலே நிலைகுத்தி நின்ற கண்களை லேசாக தளர்த்தி அவள் கைகளால் மடலை மூடினாள். அவள் கைகளின் நடுக்கத்தைப் பார்த்ததும் என்னையறியாமல் அவளருகில் சென்று உதவ ஆரம்பித்தேன்.
கடுமையான ஊதாவும் சிவப்பும் கலந்து ஒரு நிறம் அவளை பாம்பு தீண்டியிருந்த இடத்தில் காயமாகி இருந்தது .அந்த இடத்தில் இருந்து நீண்ட நரம்புகள் கடும் பச்சை நிறத்தில் சருமத்திலிருந்து மேலெழும்பி இருந்தன.அந்த காயத்தில் இருந்த ஏதோ ஒன்று நெருடலாக இருந்தது.சரியாக கணிக்க முடிவில்லை,ஆனால் ஏதோவொன்று இருக்கிறது.
ஒரு புறம் சரிந்து கிடந்த ஹுவாவின் தலையை மெல்ல உயர்த்திப் பிடித்து தலையணையை இழுக்க அது வராமல் அடம்பிடித்தது.அவள் இழுத்த வேகத்தில் ஹுவாவின் தலை அவள் கையிலிருந்து நழுவி எதிர்ப் பக்கமாகச் சரிய ஆரம்பித்தது.
ஹுவாவை நான் தாங்கிப்பிடிக்க அவளை மூடியிருந்த உடை சற்றே விலகி அவள் கழுத்தைக் காட்டியது.அவள் தோற்பட்டைக்கும் கழுத்தின் அடிப்பகத்துக்கும் இடையில் சிவப்பு நிறமேறியிருந்தது.ஆனால் அது பாம்புக் கடித்தால் ஏற்படுவது அல்ல.யாரோ ஹுவாவைத் தாக்கியிருக்கிறார்கள்.தவிர்க்க முடியாத ஒரு மர்மம் ஹுவாவின் மரணத்தில் உள்ளது.
சூழ்ந்திருந்த அழுகுரல்கள் , பார்வைகள் , கேள்விகள் எதுவும் எனக்குப் புலப்படவில்லை.திடீரென அந்த முழு அறையின் வெளிச்சமும் மங்கித் தெரிந்தது.ஏதோ ஒன்று உள்ளே அழுத்த , என் கைப்பிடியில் இருந்த ஹுவா சரிய ஆரம்பித்தாள்.அதற்குள் தலையணை , போர்வையை சரிப்படுத்திய அயலின் அவளை மெல்ல படுக்கையில் சரித்து வைத்தாள்.அவளது கண்களும் அந்த காயத்தில் சில கணங்கள் படிந்து மீண்டது.அவள் கண்டுகொண்டாளா ? இல்லையா ? அவளது உணர்ச்சியற்ற முகத்தில் இருந்து என்னால் எதையும் உறுதியாகக் கூற முடியவில்லை.ஹுவாவுக்கு கெடுதியான ஒன்றை அவள் எள்ளளவும் சகித்துக்கொள்ள மாட்டாள் என்பது நான் இதுனாலும் கண்டறிந்த உண்மைகளுள் ஒன்று.
அவளிடமே இதைப்பற்றி சொல்லிவிடுவதுதான் உசிதம்.அயலின் நான் நினைப்பதை ஊகித்திருந்தால் இவ்வளவு அமைதியாக இருக்க மாட்டாள்.அவளிடம் தெரிந்த வேறுபாடு , அங்கிருந்த எல்லோரையும் அவளிடம் இருந்து விலகச் செய்தது.இதை அப்படியே விட்டு விடுவதா ? ஹுவாவின் விடயத்தில் என்னால் அப்படி எண்ண முடியவில்லை.இங்கு அவளைத்தவிர வேறு யாரவது இருந்தால் இந்த எண்ணங்களை எப்போதே மூட்டை கட்டி விட்டு என் வேலையைப் பார்க்க சென்றிருப்பேன்.மதில் மேல் பூனையாகத் தவிப்பு அதிகரித்தது.
இல்லை.அவளிடம் பேச வேண்டும் . அதுவும் ஹுவாவின் உடலை அடக்கும் முன் இதை தெரிவித்தாக வேண்டும்.அவளிடம் கூறுவதற்கு நேரடியாக ஆசிரியர்களிடமே போய்விடலாம் என்றும் மனம் முரண்டியது.எதுவென்று பிரித்தறிய முடியாமல் ஏதோவொன்று ஊடுபாவாக உள்ளிருந்து உறுத்தியது.
அதைத் தொடர முடியாமல் லியானின் அங்கலாய்ப்பு என் கவனத்தை கலைத்தது.
” நான் நேற்று… அவள் அறைக்கு போகத் தயாரானேன். ஆனால் அரைவாசியாக தொங்கியிருந்த விளக்கைப் பார்த்ததும் தான் போகவில்லை . ஒரு வேளை அதை பொருட்படுத்தாமல் சென்றிருந்தால் அவளைக் காப்பாற்றியிருப்பேனோ ” …
அவள் கூறி முடிப்பதற்குள் ,
” நீ மட்டுமில்லை நானும்.. தான்.இல்லாவிட்டால் இல்லா…” என ஸாவோவும் அரற்ற எல்லோரின் முகமும் அயலினின் பக்கம் திரும்பியது.
“ ஏன் திடீரென ஹுவா யாரையும் வர வேண்டாம் என சமிஞ்சை செய்தாள்? அயலின் நீ அவளோடுதானே இருந்தாய் என்ன நடந்தது??…” லியான் அயலினைப் பார்த்துக் கேட்டாள்.
“அவளுக்கு மழையில் நனைந்ததால் தலைவலி வந்துவிட்டது. போனதும் தூங்க வேண்டும் எனக் கூறினாள் “ அயலின் யாரையும் பார்க்காமல் மரத்த குரலில் பதில் கூறிகொண்டிருந்தாள்.
அப்படியானால் நீ அவளை மீண்டும் இரவு வந்து பார்க்கவில்லையா??? நீ பார்த்திருந்தால் என லியான் கேட்க
“ இல்லை, அவளை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டுத்தான் போனாள். எனவே நான் மீண்டும் போகவில்லை” . அவளது உணர்ச்சியைத் துடைத்த குரல் தாழ்ந்து ஒழித்தது.
எனினும் அவள் கூறிய பதிலில் முதல் அதிர்ச்சி எனக்குத்தான். அதிகாலையா இல்லாவிட்டால் நடுச் சாமமா எது என சரியாகத் தெரியவில்லை யாரோ ஹவாவின் அறையில் இருந்து வருதைக் கண்டேன். அப்படியானல் அது யார்??? .
லியான் பெருமூச்செறிய , ஸாவோ இப்போது கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டாள்.அந்த கோபத்தில் …
” அதெப்படி ? நீ அவளைத் தனியாக விடலாம்??? “ என ஸாவோ குரலை உயர்த்திக் கேட்டாள்.
” ஆஹ் … நான் எனக்கும் வேறு வேலை இருந்தது.எனவே ஹுவாவிடம் சொல்லிவிட்டு போய்விட்டேன்.மீண்டும் நான் அவளைச் சந்திக்கவில்லை..” அயலின் பிசிறு தட்டாமல் கூறிக்கொண்டிருந்தாள்.
எனக்குத்தான் யாரோ தலையில் ஓங்கி அடித்தது போலிருந்தது.கண்ணிமைக்காமல் இவள் கூறும் மெய்யயும் பொய்யையும் நான் எப்படி ஆராய்ந்து அறிவது? ? ஏதோ புரிந்தும் புரியாததுமாக இருந்தது.
லியானும் சவோவும் ஒருவர் மாற்றி ஒருவரை சாடிக் கொண்டிருந்தார்கள். நீ வந்திருக்கலாமே நீ பார்த்திருக்கலாமே என முடிவற்ற கேள்விகள் நீண்டு கொண்டே போனது.
இவர்களிடையே மாட்டிக்கொண்டு என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை.அந்த சங்கடமான உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அயலின் எல்லோரையும் பார்த்து பேச ஆரம்பித்தாள்.
” ஸாவோ நீ இருந்திருந்தால் உன்னால் இந்த மரணத்தை தடுத்திருக்க முடியுமா ? இல்லாவிட்டால் நான் , அல்லது லியான் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று எண்ணுகிறாயா ? ” என ஸாவோவை ஆழ்ந்த பார்வை பார்த்தாள்.
தொடர்ந்து …
” யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விதியை எங்களால் மாற்ற முடியாதல்லவா ? கவலையில் ஒருவரை ஒருவர் குத்திக் குதறுவது யாருக்கும் எந்த சுகத்தையும் தரப் போவதில்லை.ஹுவாவின்மீது உனக்கிருக்கும் அன்பை அமைதியாக அவள் இறந்த உடலுக்கு மரியாதை செய்து காட்டு. ” என ஒரு வித குற்றம் சாட்டும் தொனியிலேயே முடித்தாள்.லியானும் ஸாவோவும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு தலையைத் தாழ்த்திக் கொண்டனர்.
ஆசிரியர்களிடம் கூறுவது இப்போதைக்கு சரி.அவர்களே இதைப்பற்றி பார்த்துக் கொள்வார்கள்.இந்த கலங்கிய குட்டையில் என்னால் இறங்க முடியாது.தேவைப்பட்டால் லியூ ஸின்னிடம் விடயத்தைக் கூறி ஒன்றாக செல்வோம்.இந்த முடிவெடுத்த பிறகு இவர்களின் நாடகத்தில் அங்கமாக இருக்க எனக்குப் பிடிக்கவில்லை.அந்த அறையிலிருந்து யாரும் கவனிக்கத் தவறிய நேரத்தில் வெளியேற ஆரம்பித்தேன்.
ஆசிரியர் லின்க்ஷி முன்னின்று அவளது ஈமக்கிரியைகளுக்கு தேவையானவற்றை ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்.எப்போதும் இங்கு காற்றோடு கலந்திருக்கும் சிரிப்பும் கேலிக் கிண்டலும் இன்று இங்கு இல்லை.
மேகமற்ற ஆகாயத்தைப் போல் வெறுமை கலந்திருந்தது.எல்லாவற்றையும் ஹுவா ஒட்டு மொத்தமாக அவளோடு கொண்டு சென்று விட்டாள்.அவளது மறுபிறப்பிலும் இங்கு இருப்பதைப்போலவே அவள் எப்போதும் சிரித்துக்கொண்டிருக்க வேண்டும் என மனதில் வேண்டிக்கொண்டேன்.
அவளது பெற்றோரின் வருகைக்காக எல்லோரும் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
ஹுவாவின் உடைமைகளை அடுக்கிக் கொண்டிருந்தேன்.அவளது உடைகளும் , அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்திய பொருட்களும் ஒரு பழைய மரப்பெட்டிக்குள் அடங்கின.
அப்போது தான் நான் ஒன்றைக் கவனித்தேன்.எப்போதுமே ஒரு சிறு ரோஜாப்பூ பின்னலிட்ட கைப்பை ஒன்று அவள் இடையில் தவழும்.மாணவர்களுக்கு அது ஹுவாவின் பொக்கிஷப் பெட்டி.யாரையும் அதைத் தொட விட மாட்டாள் , ஏன் அயலின் கூட அதை வைத்து சில சமயங்களில் அவளைக் கேலி செய்வதுண்டு.அறை முழுக்க சல்லடைப் போட்டுத் தேடியாயிற்று, அதைக் காணவில்லை , அவள் உடைகளை நானும் அயலினும் சரி செய்த போது கூட அது இருக்கவில்லை.சரி அவளே இல்லை என்னும் போது அதை வைத்து என்ன இலாபம் ? அந்தப்பெட்டியை அறையின் வாசலில் வைத்து விட்டு அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.
மாணவர்கள் ஒரே நேரத்தில் குழுமியிருந்ததால் அறையிலிருந்த பொருட்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு அலங்கோலமாக இருந்தது.எனக்குத் தெரிந்த ஹுவா, எப்போதுமே அவளது பொருட்களை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பாள்.ஒரே இரவில் என்னவெல்லாம் நடந்து விட்டது.கைகள் செய்த பழக்கத்தில் வேலையை செய்து கொண்டிருக்க அவளது மேசையின் அருகில் குவிந்து கிடந்த புத்தகங்களை எடுத்து அடுக்க ஆரம்பித்தேன்.
ஹுவாவின் மென்மையான குணத்திற்கு ஏற்றார்போல கவிதையும் இசையும் சார்ந்த புத்தகங்கள் இடத்தை அடைத்திருந்தன.அவற்றை ஒழுங்குபடுத்தும் போது ஒரு புத்தகத்தின் இடையில் இருந்து எதுவோ விழுந்தது.சிகையலங்கார குச்சிகளில் ஒன்று.வெள்ளிநிறத்தில் சிவப்பு நிற கற்கள் பதிக்கப்பட்டிருந்தது.ஓரங்கள் கூர்மை தீட்டப்பட்டு அதன் அசாதாரணத் தன்மையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது..இது ஹுவாவினுடையது அல்ல.ஆனால் நான் இதை எங்கோ கண்டிருக்கிறேன்.
இது இது …. சென் ஜியாயினுக்கு ( Sen Jia Yin ) சொந்தமானது.ஆம் , இது அவளுடையது தான், இது போன்ற இரு பக்க வேலைப்பாடுடைய சிகையலங்கார பொருட்கள் அவளது குடும்பத்தினரால் மட்டுமே செய்ய முடியும். சில சமயங்களில் இதைக்காட்டி அவள் பெருமைப்படுவதுண்டு.ஹுவாவும் அவளும் ஒரு விதத்தில் சொந்தக்காரர்கள் தாம்,ஆனால் ஜியா யின் ஹுவாவுடன் ஒருபோதும் நட்பு பாராட்டியதில்லை.அப்படியானால் அவளது பொருள் ஏன் இங்கிருக்க வேண்டும் ?
ஏதோ ஒன்று உள்ளே உடைந்து கொண்டிருந்தது.தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒன்றில் நான் உள்வாங்கப்பட்டுவிட்டேன்.எப்படி ஆசிரியர்களிடம் கூறுவது என மனதில் ஒத்திகை நடத்திக்கொண்டிருந்த போது மாணவர்களை ஒன்று கூட வைக்கும் கழகத்தின் மணி என்றைக்குமில்லாமல் இன்று முறையற்று ஒலித்தது.
முதன் முதலாக இங்கு கால் வைத்தபோது அடிக்கப்பட்டது.அதற்குப் பிறகு இன்றுதான் அதன் சப்தம் கேட்கிறது.கழகத்தின் முக்கிய நிகழ்வுகளை வெளி உலகுக்கு அறிவிக்க இது பயன்படும்.அத்தோடு மாணவர்களை தலைமை மண்டபத்திற்கு ஒன்று சேர்க்கும் சமிஞ்சையாகவும் பயன்படுகிறது.
அடுத்த சில கணங்களில் அங்கு மாணவர்கள் ஒன்றின்பின் ஒன்றாக வந்து சேர்ந்துகொண்டிருந்தார்கள்.ஹுவாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அவளுக்கான கிரியைகளை அவர்களே பொறுப்பெடுத்து செய்வார்களோ? .. இருக்கலாம்.என்ன இருந்தாலும் அவள் கல்வி பயின்றது மட்டுமல்லாமல் இங்கு தான் உயிர் துறந்திருக்கிறாள் அது நியாயமான ஒன்று தானே …
மூன்று தலைமை ஆசிரியர்கள் முதலிலேயே மேடையில் நின்று கொண்டிருந்தார்கள்.எனவே பெரிதாக எந்த சலசலப்பும் மாணவர்களிடம் இருக்கவில்லை.முதலில் ஆசிரியர் லின்க்ஷி பேசத்தொடங்கினார்.
” மாணவர்களே ! இன்று எமது மாணவிகளுள் ஒருவரான ஐ ஹுவா இயற்கை எய்திவிட்டார்.இது எமது கலைக்கழகத்திற்கும் அவரது வீட்டிற்கும் ஏற்பட்டதோர் பாரிய இழப்பாகும். எனவே நாளை அவரது ஈமக்கிரிகைகளில் மாணவிகள் பங்குபற்றலாம்.
அவளது மரணத்தை எமது கலாசாலை ஓர் உதாரணமாகக் கருத்துகிறது.இன்னுமோர் உயிர் இவ்வாறு பலியாகாமல் தடுக்க அடுத்த இரண்டு நாட்கள் சிரமதானப் பணிகள் நாடாத்தப்பாடவுள்ளது.
இதற்காக ஆசிரியர்களும் மாணவர்களும் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டு தலைமை ஆசிரியர்களால் மேற்பார்வையிட திட்டமிட்டுள்ளோம்.
அது மட்டுமல்லாமல் ஐ ஹுவாவின் மரணம் தொடர்பான எந்த விடயத்தையும் மாணவர்கள் பேசுவது இன்றோடு தடை செய்யப்படுகிறது.அவளது பெற்றறோரின் மன நிலையை கருத்தில் கொண்டும், இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.இதை மீறுபவர்களுக்கு குற்றம் ஊர்ஜிதமானால் இருபது கசையடிகள் வழங்கப்படும்…………..”
அவர் பேசிக்கொண்டே போனதில் ஒன்று மட்டும் தான் எனக்குப் புரிந்தது.என்னால் இப்போது இதை ஆசிரியர்களிடமும் கூற முடியாது…