அவள் செவ்வரளி

அத்தியாயம் -1

“மலடி தான் ஆமா நான் மலடித்தான் ” என்று தொண்டை கிழியும் அளவு கத்தியிருந்தாள் வாசுகி…

ஒரு நிமிடம் அந்த இடமே மயான அமைதியாக இருந்தது..

வாசுகிக்கு அதிர்ந்து பேச தெரியுமா என்று நினைத்தவர்களுக்கு, காளி ரூபத்தில் தெரிந்தால் அவள் இப்போது..

“வாசு கூல் ” என்றான் தம்பி துரைபாண்டியன் அவள் தோளை தொட்டு…

“முடியலைடா சுத்தமா முடியலை, அது எப்படிடா அம்மாவே இப்படி சொல்லலாம்”  என்றவளால் நிஜமாய் தாங்க முடியவில்லை…

“நான் என்ன பொய்யா சொன்னேன் ” என்றார் காந்திமதி சேலை முந்தியை இடுப்பில் சொருகி கொண்டு..

ஊரே நின்று வேடிக்கை பார்த்தது, ஆம் ஊரே தான் இன்று வாசுகி தங்கை வளர்மதி வளைகாப்பு விழா..

அங்கு தான் வளையல் போட வந்த தன் மூத்த மகள் வாசுகியை ” மலட்டு பொம்பளை நீ போடாதே பிரசவம் சிக்கல் ஆகும் ” என்றார் காந்திமதி…

அதை கேட்டு துடிக்க வேண்டியவனோ திருப்தியாக வாசுகியின் கண்ணீரை பார்த்து நின்றான்..

அவன் தமிழரசன் வாசுகியின் கணவன்…

தாய் ஆயிரம் முறை இந்த வார்த்தை சொல்லிவிட்டார் தான் ஆனால் இப்படி ஊர் பொதுவில், என்ன முயன்றும் கண்ணீர் நிற்கவில்லை அவளுக்கு ..

அதற்கு மேல் முடியாமல் அவள் வெளியேற   “நில்லுடி ” என்றான் தமிழரசன்…

“உங்க அம்மா என்ன பொய்யா சொல்ராங்க, நீ மலடி தானே டி ” என்றவன் அவளை ஓங்கி அறைந்திருந்தான்…

” என்ன டி ஊருக்கு பொதுவுல சத்தம் ” என்று கேட்டு மீண்டும் அறைந்தான்…

மாமா என்று துரை ஒருவன் மட்டுமே அதை தடுத்தான்…

” நீ சும்மா நகரு மச்சான் ” என்றவன் வாசுகியிடம் திரும்பினான்…

” கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆச்சு இன்னும் புள்ளை பெத்து கொடுக்க முடியலை உனக்கு எதுக்குடி கோபம் ” என்று மேலும் அறைய போக அவன் கையை பிடித்தான் திருமேனிநாதன்…

” என்ன சகலை பொத்தம் பொதுவுல பொம்பள புள்ளைய கை நீட்டி அடிக்கிறவன் ஆம்பளையா ” என்று கேட்டவன் சட்டையை பிடித்திருந்தான் தமிழரசன்..

” யாரடா ஆம்பளையானு கேக்குற ”  என்று எகிறியவனை தூசி போல் தட்டினான் நாதன்..

” உன்னை தான் சகலை ” என்றபடி ” இப்போதான் மருத்துவம் எத்துணையோ வந்துடுச்சே நாளைக்கு ரெண்டு பெரும் போய் டெஸ்ட் எடுங்க ” என்றான் நாதன்..

தமிழரசன் முகம் வெளிரி போனது, உடல் வியர்க்க தொடங்க இப்போது மகனுக்கு துணையாக வந்தார் பாரிஜாதம்…

” என்ன தம்பி பேசுற அவ மலடின்னு தெரிஞ்சு தானே என் மகன் இன்னும் அவளை வச்சு வாழுறான் ” என்றார்…

அதானே ” என் தம்பி சொக்கதங்கம் ” என்றார் காந்திமதி மகளை குறைத்து…

துணைக்கு தாயும், தாமக்கையும் வரவும் திடம் பெற்றவனாக பேச தொடங்கினான் தமிழரசன்…

” என்னடா என் பொண்டாட்டிய நீ வச்சுருக்கியா ” என்றான் உதடு சுழித்து நாதனை பார்த்து …

” ச்சீ என்ன மனுசன்டா நீ ” என்ற நாதன் வாசுகியை திரும்பி பார்த்தான்…

அவளோ உணர்ச்சி துடைத்த முகமாய் நின்றிருந்தாள் கணவனை வெறித்து பார்த்து…

எட்டு வருட வாழ்க்கையின் நம்பிக்கையா இது, கோபமாய் என்றாலும் இப்படி ஒரு வார்த்தை அவனால் எப்படி கேட்க முடிந்தது, உள்ளம் கொதித்தது..

என்னப்பா தம்பி வார்த்தை தடிக்கிது என்றார் கூட்டத்தில் ஒரு முதியவர்….

வளர்மதிக்கு காதல் திருமணம், ஒரே ஊர் என்பதால் அனைவரும் நல்ல சொந்தம் தான் ஊருக்குள்…

வாசுகி பற்றி அனைவரும் சரி நன்றாக தெரிந்தது தான்….

” என்னயா வார்த்தை தடிக்கிது என்ன தடிக்கிது, என் பொண்டாட்டிய நான் அடிச்சா அவன் ஏன்யா துடிக்கிறான் ” என்றான் தமிழரசன்…

” என்னப்பா நீயி உன் பொண்டாட்டின வீட்டுக்குள்ள வச்சு எதுனாலும் நீ செய்யலாம், வீதிக்கு வந்தா நாலு பேரு கேப்போம் தான் ” என்றார் மற்றொருவர்…

” நான் அடிப்பேன் அவளை கொல்லுவேன் எவனும் என்னை கேட்க கூடாது ” என்றான் அவன் மரியாதை இல்லாமல்…

அனைவரும் இவனிடம் என்ன பேசுவது என்று புரியாமல் நிற்க, வளையல் அணி விழா அப்படியே  நின்றது முன்னேறாமல்..

பின்னே சண்டை ஓயிந்தால் தானே அது நடக்க..

” அவளை பெத்தவங்களே, அவளை மலடின்னு சொல்லும்போது இவனுக்கு ஏன் கோபம் வரணும்”  என்றவன் மீண்டும் விஷத்தை கக்கினான்…

” அப்போ இவன் அவளை வச்சிருக்கான் ” என்றான் மேலும் அழுத்தமாக…

” மாமா வார்த்தை விடாதீங்க ” என்றான் துரை கோபமாக…

” என்னை பெத்தவங்க என்னை அப்படி சொல்லமாட்டாங்க ” என்றாள் வாசுகி காந்திமதியை  பார்த்து…

மேலும் கணவனிடம் ” அவர் என்னை வச்சிட்டு இல்ல , நான் தான் அவரை வச்சிட்டு இருக்கேன்,  ஆமா இப்போ நீ என்ன பண்ணுவ, என்னை வெட்டி விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணுவியா ” என்றாள் வாசுகி இளக்காரமாக…

” ஆமாடி பண்ணுவேன் ” என்று அவனால் வெறும் வார்த்தைக்காக கூட சொல்ல முடியவில்லை…

மொத்தபேரும் அதிர்ந்து தான் பார்த்தனர், வாசுகிக்கு பேசவே தெரியாதே என்று நினைத்தவர்கள் தான் அனைவரும்…

ஆம் அவள் சாந்தமான பெண் மிகவும், கொஞ்சம் சத்தமா தான் பேசேன் வாசுகி என்றுதான் மற்றவர்கள் கேட்பார்கள்…

” என்னடி பேசுற ” என்றபடி காந்திமதி மகளை அடிக்க செல்ல ” விடுங்க அக்கா ” என்று தடுத்தான் தமிழரசன்…

” நீங்க சும்மா இரு தம்பி , எவளோ நெஞ்சழுத்தம் இவளுக்கு, என்ன பேச்சு எல்லாம் பேசுறா ” என்றவர் மகளின் முதுகில் ஒன்று போட்டார்..

” நாளைக்கு என்கூட  ஆசுபத்திரிக்கு இவர் வரணும்” என்றாள் வாசுகி திடமாக..

” வருவான் டி என் பிள்ளை, அப்பறம் உனக்கு இருக்கு ” என்ற பரிஜாதத்தை கலவரமாக பார்த்தான் தமிழரசன்..

” ம்மா அதெல்லாம் வேண்டாம், சும்மா விடு அவ ஏதோ கோபத்துல பேசிட்டா, எங்களுக்கு பிள்ளையே வேண்டாம் ” என்றான் அவன் நல்லவனாக…

” சும்மா இருடா தமிழு நீயி, பொட்ட கழுதை எவனையோ வச்சுக்கிட்டு இருக்கேனு சொல்றா, அவளை வேணும்னு சொல்ற ” என்றவர் மேலும் நிறுத்தவில்லை…

” அவ மலட்டு சிறுக்கினு டாக்டரும் சொல்லட்டும், அப்புறம் இவளை சாணியை கரைச்சு ஊத்தி, அடிச்சு விரட்டுவோம் ” என்றார் அவர் மகனுக்கு நல்லது செய்வதாக நினைத்து…

” அதான் சின்னம்மாவே சொல்லிடுச்சே தம்பி டவுன் ஆசுபத்திரிக்கு நாளைக்கு போங்க, அப்புறம் நீ வேற கல்யாணம் கூட பண்ணிக்கோ “என்றார் காந்திமதி..

” ஐயோ அதெல்லாம் வேண்டாக்கா என் பொண்டாட்டி எனக்கு போதும் ” என்றான் தமிழரசன்…

” அதெல்லாம் சரிப்பட்டு வராது தம்பி ” என்றார் இதுவரை ஊமையாக நடப்பதை வேடிக்கை பார்த்த கோபால்..

” என் மகளை இம்புட்டு அசிங்கப்படுத்திட்டு, இப்போ என் பொண்டாட்டி போதும்னு சொல்றிங்க” வேண்டாம் ஆசுபத்திரிக்கு போகலாம்…

” மாமா இப்போ என்ன நடந்து போச்சு ” என்றவன் ” சொல்லுக்கா ” என்றான் காந்திமதியிடம்…

துரைப்பாண்டியனும் அதான் சரி என்றிட பதறினான் தமிழரசன்…

கோபால் மகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு நடையை கட்ட, போகும் அவளை தடுக்க முடியாமல் நின்றான் தமிழரசன்…

இந்த எட்டு வருட வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களை தாங்கி கடந்துவிட்டேன்..

இன்று ஏன் என்னால் முடியவில்லை, செத்துவிட்டால் கூட நலம் தான்..

என் மணிவயிற்றில் ஒரு உயிர் உருவாகாதா என்று வயிற்றை தடவியப்படி வீட்டில் அமர்ந்திருந்தாள் வாசுகி…

வாசுகி இருபத்து எட்டு வயது மங்கை, கொட்டிக்கிடக்கும் பேரழகி என்றெல்லாம் இல்லை…

சாதாரண பெண், நல்ல கலையான திருத்தமான முகம்..

இருபது வயதில் தமிழரசனுக்கு மணம் முடித்து கொடுத்தார்கள்..

காந்திமதியின் சித்தப்பா மகன் தான் தமிழரசன், தற்போது அவனின் வயது நாற்பது..

கண்ணீர் ஆறாக ஓடியது, என்ன முயன்றும் முடியவில்லை அவளுக்கு..

மகள் கண்ணீரை காண காண கணத்து போனது கோபலின் மனது….

குறை மகளிடமே இருந்தாலும் பரவாயில்லை, இனி என்னோடு என் மகள் இருக்கட்டும், நான் இருக்க வரை பார்த்துக்கிறேன் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்…..

எத்துணை ஏச்சு பேச்சு தான் அவளும் தாங்குவாள், நிம்மதியா ஒருநாள் சாப்புடுறாளா இல்லையே..

எத்துணை அடி உதை, இத்துணை வருடம் கடந்து தான் அவருக்கு மனைவியை தாண்டி ஒன்று செய்ய யோசித்திருக்கிறார்…..

“மாமா உள்ள வரலாமா ” என்று வெளியில் நின்று அழைத்தான் நாதன்…

” வாயா மாப்பிளை கதவு திறந்து தானே இருக்கு ” என்றார் கோபால்…

அவன் உள்ளே வரவும் எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள் வாசுகி…

பெருமூச்சோடு அவளை பார்த்துவிட்டு கையிலிருந்த ஸ்டிக்கை கழட்டி வைத்துவிட்டு சேரில் அமர்ந்தான் திருமேனிநாதன்…

ஒரு விபத்தில் கால் போய்விட்டது, என்னதான் மாற்றுகால் வைத்தும் அவனால் ஸ்டிக் இல்லாமல் நடக்க இயலவில்லை…

கோபாலின் தங்கை மங்களத்தின் மகன் தான் திருமேனிநாதன்…

” மாமா நம்ம பொன்னுக்கு அந்த வாழ்க்கை வேண்டாமே மாமா ” என்றான் அவரிடம் எங்கோ பார்த்து கொண்டு..

” அப்படி சட்டுனு முடிவு எடுக்க முடியாதேயா ” என்றவர் துண்டை வாயில் வைத்து அழுத்தி கொண்டார்..

” அதுக்கு இல்லை மாமா, நம்ம பொண்ணு ரொம்ப கஷ்டம் அனுபவிக்குதே ” என்றான் மேலும் எப்படி சொல்வதென்று தெரியாமல்….

” பாப்போம்யா அந்த ஆண்டவன் இருக்கான், என் புள்ளைக்கு ஒரு நல்ல வழி காட்டுவான் ” என்றவர் கண்ணில் கண்ணீர்..

” ஒரு புழு பூச்சிக்கு கூட கெடுதல் நினைக்காத என் மக, இப்படி புழுங்கி, புழுங்கி நெதமும் சாகுது ” என்றபடி நாதனை பார்த்தார்…

எத்தனையோ முறை நாதன் கேட்டான், மாமா நான் பொன்னு வை கட்டிக்கிறன் கொஞ்ச நாள் பொறுக்கோ, அவனுக்கு கட்டி கொடுக்காதே என்றான் மன்றாடி…

கேட்டாளா அந்த பாவி பலிகாரி, என் மக வாழ்க்கையை நாசம் பண்ணிட்டாளே என்று மனைவியை நினைத்து கொதித்தார் மனதுக்குள்..

இருவரும் பேசுவது உள்ளே நன்றாக கேட்டது வாசுகிக்கு…

” மாமா இப்போல்லாம் பொண்ணுகளுக்கு ரெண்டாம் கல்யாணம் பண்றது சாதாரணம்” என்றான் அவரிடம்…

அதை கேட்டு வெளியே வந்துவிட்டாள் வாசுகி..

அவனை பார்த்து கையெடுத்து கும்பிடு போட்டாள், ” என்னை மன்னிச்சிடுங்க ஏதோ கோபத்துல அங்க அப்படி பேசிட்டேன் ” என்றவளால் அவன் முகத்தை பார்க்க முடியவில்லை…

ஆனாலும் சொல்ல வந்ததை சொல்லி முடிக்க வேண்டுமே என்பதால் ” அங்க நான் கோபத்தில பேசினது ஊருக்கு உண்மை ஆகிட விட்டுராதீங்க ” என்றவள் வாசலை கைகாட்டினாள்..

நாதனுக்கு புரிந்தது வெளியே போ என்று சொல்கிறாள் என்று..

” வரேன் மாமா பொன்னு வை பார்த்துக்கோங்க ” என்றுவிட்டு மெதுவாய் ஸ்டிகை மாட்டிக்கொண்டு கிளம்பினான்..

நாதனுக்கு அவள் பொன்னு தான் அவனின் பொன்வண்டு அவள்..

சிறு வயது முதல் அவள் மீது கொள்ளை பிரியம் தான் நாதனுக்கு, இருவருக்கும் இரண்டு வருட வித்தியாசம் தான்…..

அதனால் தான் அவள் திருமண பேச்சு எடுக்கும் போது மாமனிடம் கேட்டான், ஒரு மூணு வருஷம் பொறுத்துக்கோ மாமா..

நானே பொன்னுவை கட்டிக்கிறேன், இப்போ எனக்கு வயசில தங்கச்சிக்கு வேற கல்யாணம் செய்யணும் என்றான்..

ம்ஹும் இதை எத்துணையோ முறை காந்திமதியிடம் கோபால் சொன்னார், அவர் காதிலே வாங்கவில்லை..

என் தம்பிக்கு பொண்ணு ஒன்னும் கிடைக்கலை, இவளை தான் கட்டபோறேன் என்றுவிட்டார்..

காந்திமதி வாசுகிக்கு அம்மா தான், ஆனால் அவருக்கோ அவள் கணவனின் மகள் தான்..

ஆம் வாசுகியின் அன்னை பிரசவத்தில் தவறிப்போக, கோபால் இரண்டாம் மணம் முடித்தவர் தான் காந்திமதி..

விவரம் தெரிவதற்கு முன்னே திருமணம் முடிந்ததால் காந்திமதியை அம்மா என்றுதான் அழைப்பாள் வாசுகி..

வாழ்க்கை வெறுத்து போனது வாசுகிக்கு, சாவு என்னை தேடி வராதா என்ற மன நிலைக்கு வந்துவிட்டாள் அவள்..

அவள் செவ்வரளி!