அவள் செவ்வரளி

செவ்வரளி -8

” மாறா சும்மா இரு, அம்மாக்கு வேலை இருக்கு ” என்று அதட்டிய படியே கல்லூரி வேலையை பார்த்து கொண்டிருந்தாள் வாசுகி…

நிறைய வருடங்கள் ஆகிவிட்டதால் கொஞ்சம் படிப்பில் கவனம் செலுத்துவது என்பது சிரமமாக தான் இருந்தது..

அதிலும் ஏதேனும் சார்ட் ஒர்க் செய்ய அமர்ந்துவிட்டாள் போதும், அப்போது தான் மாறனின் சேட்டை அதிகமாக இருக்கும்…

அவனிடம் போராடி பார்ப்பவள் முடியாமல், மகன் உறங்கியதும் தான் செய்வாள்…

நாளை முடிக்க வேண்டிய வேலை இருந்ததால் இன்று செய்வதற்கு அமர்ந்திருக்க, அவனோ அவளை நச்சரித்து கொண்டிருந்தான்…

அவள் செய்து கொண்டிருந்த வேலையில் இடையில் மார்க்கர் எடுத்து கிறுக்கிவிட்டான்…

வாசுகிக்கு அப்படியொரு கோபம் வந்தது, ” மாறா அம்மாக்கு கோபம் வருது அடிக்கிறதுக்குள்ள எழுந்து, தாத்தாகிட்ட போய்டு ” என்றாள்…

இதுவரை யாருமே அவனை அடித்ததே இல்லை அதனால் அம்மா விளையாட்டு சொல்கிறாள் என நினைத்து, அப்படியே அமர்ந்திருந்தான்..

” மாமா இவனை உங்க கூட கொஞ்ச நேரம் வச்சுக்கோங்க ” என்று மாமனுக்கு சத்தமிட்டாள்..

” தம்பி வாயா ராசா ” என்று அவரும் எத்தனையோ முறை அழைத்து பார்த்தும் அவன் வரமாட்டேன் என்றுவிட, வெங்கடேசணும் வெளி திண்ணையில் சென்று படுத்துவிட்டார்…

அதன் பின் அமைதியாக தான் இருந்தான் மாறன் வேடிக்கை பார்த்தப்படி..

சிறிது நேரத்தில் அவனுக்கு போர் அடிக்க தொடங்கியது போல ” அம்மா நானு என்றபடி ” வாசுகி சுதரிக்கும் முன் சார்ட் முழுவதும் இரண்டு மூன்று கோடு இழுத்துவிட்டான்…

வாசுகி சயின்ஸ் டிபார்ட்மென்ட் என்பதால் எதில் உடல் பாகங்கள் சிலவற்றை வரைந்து, குறிப்பு எடுத்து வைத்திருந்தாள்..

இதை மீண்டும் செய்து முடிக்க எத்துணை மணி நேரம் ஆகும் என்று நினைக்க கோபத்தில், மகனின் முதுகில் நான்கு அடி போட்டாள்..

” சொல்ற பேச்சு கொஞ்சமாச்சும் கேக்குறியா நீ ” என்றவள் அடித்த அடியில் குழந்தை வீறிட்டு அழுதான்..

வெங்கடேசன் பதறிக்கொண்டு ஓடிவந்தார் “என்ன பாப்பா நீ ” என்றவர் குழந்தையை தூக்கி கொண்டு வெளியில் சென்றார்..

வாசுகிக்கு அடுத்த வேலையும் செய்ய முடியவில்லை, வெளியில் மகன் அழும் சத்தம் குறையவில்லை…

மனம் வலித்தது அப்படியென வாசு உனக்கு கோபம் அவன் குழந்தை தானே என்று நினைத்து தலையில் தன்னை தானே அடித்து கொண்டு அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு வெளியில் சென்றாள் மகனை காண..

அவனோ இப்போது நாதனை கட்டிக்கொண்டு அழுத்து கொண்டிருந்தான்..

நாதனுக்கு சரியாக மகனை தூக்கி கொள்ள முடியவில்லை, ஆனால் அழும் மகனை கண்டு துடித்தான்…

நாதன் வரும் நேரம் தான் இது, உள்ளே நுழையும் போதே மகனின் அழுகை சத்தம் கேட்டு பயந்துவிட்டான்…

தந்தை சொல்லும் வரையிலுமே வாசுகி அடித்திருப்பாள் என்று நாதன் நினைக்கவில்லை..

ஹையோ இவர் வந்துட்டாரே எதுவும் சொல்லுவாரோ என்ற பயமெல்லாம் வாசுகிக்கு இல்லை, மாறாக என் மகன் தவறு செய்தான் நான் அடித்தேன் அவ்வளவு தான் அவளுக்கு…

நாதன் மாறனை தூக்கி வைத்திருக்க சிரமப்படுவதை பார்த்தவள், அருகில் சென்று மகனிடம் கைநீட்ட…

” ம்மா, ம்மா ” என்று விசும்பி கொண்டே அவளிடம் தாவி கொண்டான்…

” சேரி சேரி அம்மா சாரி ” என்றவள் தூக்கி கொண்டு சில நிமிடம் நடந்தாள்…

” ம்மா, ம்மா ” என்றானே தவிர விசும்பல் நிற்கவில்லை, ” என்னடா தங்கம் ” என்றவள் மேலும் சில நிமிடங்களில் மகனை சமாதானம் செய்துவிட்டாள்…

அனைத்தையும் பார்த்தப்படி அமர்ந்திருந்தனர் மற்ற இருவரும்…

அம்மாவே அடித்திருந்தாலும் அழும் குழந்தை அம்மாவை தானே தேடும்…

அப்படித்தான் மாறனும் சில நிமிடங்களில் சரியாகிவிட்டான், அம்மாவுக்கு தன் மேல் கோபம் என்பது வரையிலும் புரிந்தது அவனுக்கு….

அதனால் வாசுகி கன்னத்தை எச்சில் செய்து கொண்டே இருந்தான், முத்தம் வைத்து, ” டேய் போதும்டா, கொஞ்சம் நேரம் முன்ன என்ன அழுகை அழுத, இப்போ உன் அம்மா கூட இப்படி ஒட்டிக்கிட்டு இருக்க ” என்றார் வெங்கடேசன்…

” என் அம்மா ” என்றவன் மீண்டும் கழுத்தோடு கட்டிக்கொள்ள, அப்படியொரு சந்தோசம் வாசுகிக்கு…

இப்போது நாதனை தான் பார்த்தாள், மகனை அப்போது தூக்கி வைத்திருந்த நாதன் வாசுகியை ” எதற்கு அடித்தாய் என் மகனை” என்ற பார்வை தான் பார்த்து நின்றான், அதை பெண்ணவளும் உணர்ந்து கொண்டாள்…

இரவு உணவு முடித்து மகனை உறங்க வைத்துவிட்டு கணவன் அருகில் வந்தாள்…

நாதன் கட்டிலில் அமர்ந்து காலை கழட்ட கையை வைத்தான்…

இதுவரை இருவருமே பேசிக்கொள்ளவில்லை, நாதனுக்கு கோபம் மகனை அடித்துவிட்டாளே என்று…

அதனால் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவன் ஒன்றும் கேட்காமல், மீண்டும் தன் வேலையை தொடர போனான்..

அவன் காலருகில் அமர்ந்து அவன் கையை தட்டிவிட்டு வாசுகியே அந்த வேலையை தொடர்ந்தாள்…

” ஏய் பொன்னு கைய எடுடி, காலுல போய் கை வச்சுக்கிட்டு ” என்று காலை நகர்த்தினான்…

அவனை பார்த்து புன்னகைத்தவள் ” ஹம்ஹ்ம் ” என்றுவிட்டு மீண்டும் செய்த வேலையை செய்தாள்…

” பொன்னு விடுடா கஷ்டமா இருக்கு ” என்றான், நிஜமாக கஷ்டமாக தான் இருந்தது, உரிமையோடு அவள் செய்தாள் ஒன்றும் தெரியாதோ என்னவோ, இது கடமைக்கு என்பது போல தானே, அதனால் அவனால் ஏற்கமுடியவில்லை…

குனிந்து கொண்டு காலை கழட்ட, அந்த கட்டை காலில் தெறித்த கண்ணீர் துளியை நாதன் உணராமல் போனான்…

வாசுகியின் நினைவு பின்னோக்கி சென்றது..

தமிழ் குடிப்பான் என்பது வாசுகிக்கு தெரியும், ஆனால் அன்று அவனது செயல்கள் அத்துமீறி சென்று கொண்டிருந்தது…

மூர்க்கத்தனமாக தான் எப்போதும் அவளிடம் நடந்து கொள்வான், ஆனால் இன்று அதையும் மீறி அவளை குதறி எடுத்து வைத்திருந்தான்…

உடல் எல்லாம் அத்துணை வலிக்க, கண்ணீர் வழிந்தது பெண்ணுக்கு, கத்தி அழுது கரைய வேண்டுமென தோன்றியது…

அடக்கி கொண்டு படுத்திருந்தவளை, காலால் தட்டினான் தமிழ்..

எழுந்து அங்க உக்காரு என்றான் நடு சாமத்தில், எதற்கென்று கேட்டால் அதற்கு அடிப்பான் என்பதால், அமைதியாக அவன் காலடியில் அமர்ந்தாள்…

அவள் மடி மீது காலை தூக்கி போட்டவன், “அமுக்கிவிடு “என்றுவிட்டு கண்களை மூடிக்கொண்டான்…

கணவனுக்கோ, மனைவிக்கோ கால் பிடிப்பதும் சுகம் தான் ஆனால் அதை விருப்பப்பட்டு செய்கையில் மட்டும்…

இப்போது என்னவோ அவனுக்கு தான் மனைவியாக வரவில்லை ஏதோ அடிமையாக வந்திருக்கிறோம் என்று தோன்றியது…

அமுக்கி விடவில்லை என்றால் அதற்கும் எதாவது செய்வான் என்பதால், அவன் சொன்னதை செய்தாள் வாசுகி…

நடு சாமம் என்பதால் உறக்கம் தழுவ அப்டியே அமர்ந்த வாக்கில் உறங்கிருந்தாள் பெண்…

கால் பிடித்த இதம் குறையவும் விழித்து பார்த்தவன், அவள் உறங்குவதை கண்டு, காலால் அவள் கன்னத்தில் உதைத்திருந்தான்…

பாதி உறக்கத்தில் கன்னம் வலிக்க, மலங்க மலங்க விழித்தவளை, “இங்க வா ” என்றவன் மீண்டும் அதே கன்னத்தில் உதைத்தான்…

” புருஷன் நாள் முழுக்க உழைச்சிட்டு வரான், அதுனால அசந்து தூங்குறான், உனக்கு என்ன பொழுதனைக்கும் சும்மா தானே இருக்க ” என்றுவிட்டு காலால் அவளது கையை எடுத்து மற்றொரு கால் மீது போட்டான்..

” இது விடியிற வரை எடுக்க கூடாது ” என்றுவிட்டு உறக்கத்தை தொடர்ந்தான்…

” பொன்னு என்னாச்சு ” என்று அவள் தோளை தட்டவும் தான் பெண் சுயம் பெற்றாள், ஆனால் அதில் திடுக்கிட்டாள்..

தமிழ் தான் உதைக்கிறானோ என்று, அவளது அத்துணை பயத்தை பார்த்தவன் ” என்னாச்சுடா என்றான் ” கனிவாகவே…

இடையிலே அவன் காலையும் அவளிடமிருந்து உருவியிருந்தான், பக்கத்தில் இருப்பது நாதன் என்பது புரியவே அவளுக்கு சில நிமிடம் ஆனது..

” என்னாச்சுடி ” என்றான் இம்முறை கொஞ்சம் சத்தமாக ” ஹ்ம் ஒண்ணுமில்லை ” என்றவள் எழுந்து சென்று தண்ணீர் குடித்து வந்தாள்…

இப்போது கொஞ்சம் தெளிந்திருந்தாள் வாசுகி, மீண்டும் அவன் அருகில் வந்தவள், பக்கத்திலிருந்த அனைத்தையும் எடுத்து வைத்தாள்..

இப்போது நாதன் பழகியிருந்தான், இரவில் அவனது பொருட்களை வாசுகி அவன் பக்கத்தில் வைப்பதில்லை…

ஆனால் அவன் எழும் நேரம் அவனாக கேட்கும்பாடி இல்லாமல் பக்கத்தில் எடுத்து வைத்துவிடுவாள்..

அவளது முந்தைய முகத்தையும், இப்போது உடனே மாற்றி கொண்டு முகத்தையும், வியப்பாக பார்த்து கொண்டிருந்தான்..

” எதுக்கு அப்போ அப்படி பார்த்தீங்க ” என்று கேட்டாள் அவனிடம் தீடீரென , நிஜமாக அவனுக்கு என்னவென்று தெரியவில்லை அதனால் “எப்போடி ” என்றான்…

” ஆஹ் அப்போ தம்பிய தூக்கி வச்சிருக்கும் போது ” என்றாள் வார்த்தையை இழுத்து…

இப்போது நாதனுக்கு கோபம் நியாபகம் வந்துவிட்டது போல ” எதுக்கு அவனை அடிச்ச நீ, இதுவரை யாரும் அவனை அடிச்சதில்லை ” என்றான் ஏதோ அடி இவன் வாங்கியது போல் முகத்தை சுருக்கி…

அவன் முகத்தை நேராக பார்த்தவள், “இப்படியொரு வார்த்தை இனி உங்க வாயில இருந்து வர கூடாது” என்றவள் அவனை முறைத்து பார்த்தாள்…

” நீ இன்னும் பதில் சொல்லலை ” என்றான் நாதன் அவளுக்கு நினைவு படுத்துவது போல்…

” இதுதான் முதலும் கடைசியும், அவன் என் பையன் தப்பு செஞ்சா அடிக்க தான் செய்வேன், இனிமே ஏன் அடிக்கிற, எதுக்கு அடிக்கிற கேட்டீங்க, அப்பறம் உங்களுக்கும் அடி விழும் ” என்றவள் எழுந்து சென்று விளக்கனைத்து வந்தாள்..

” அம்மாடியோ ” என்று பார்த்தான் அவளை ” என்ன பார்வை என்றவள் அந்த பக்கம் சென்று மகனின் பக்கத்தில் படுக்க செல்ல, நாதனின் குரல் அவளை நிறுத்தியது…

” பொன்னு இங்க வந்து படுக்குறியா, எனக்கு எழுந்து வர முடியாது ” என்றான் நாதன்….

இது என்ன குரல், வேண்டுதலா, ஆணையா, இல்லை கெஞ்சலா, கொஞ்சலா இன்னதென்று பிரிக்க முடியவில்லை…

கிட்டத்தட்ட இருவரும் ஒரு வருடமாக ஒரே அறையில் இருக்கிறார்கள், இன்றுதான் இந்த அளவுக்கு வந்துருக்கிறான் நாதன்…

மகன் நடுவில் உறங்க, அவனுக்கு இருப்பக்கமும் தான் இருவரின் உறக்கமும்…

வாசுகிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, அப்படியே நின்றாள்….

அவள் அப்படியே நிற்கவும், ” புடிக்கலைனா வேண்டாம் பொன்னு, அங்கே படுத்துக்கோ என்றுவிட்டு கண்களை மூடிக்கொண்டான்…

என்னவோ அவனுக்கு அவளை அணைத்துக்கொண்டு இல்லையென்றாலும், உரசி கொண்டாவது உறங்க வேண்டும் போல் இருந்தது…

இப்படியெல்லாம் அவளிடம் இதற்கு முன் தமிழ் கேட்டதில்லையே, எனக்கு வேண்டும் என் தேவை என்றுதான் இருப்பான்…

நாதன் அழைக்கவும் அவளுக்கு நிஜமாய் மறுக்க தோன்றவில்லை, ஆனால் தாம்பத்தியம் இப்போது ஏற்கவும் முடியாது,..

சில நிமிடம் மனதோடு போராடி தடுமாறியவள் பின் மகனை இடம் மாற்றிவிட்டு அப்படியே இருவருக்கும் நடுவில் படுத்தாள்…

அவன் அருகில் படுப்பதை உணர்ந்தவன் அப்படியே அவள் மீது கை போட்டு கொண்டான்…

அப்படியே உடல் விரைத்தது வாசிகிக்கு சொல்ல முடியா பயத்தில், அதை உணர்ந்தவனுக்கு என்னமோ போல் ஆகியது, அவளுக்கு பிடிக்கவில்லையோ என்று…

” பொன்னு ஒன்னும் பண்ணலைடா, சும்மா இப்படி கைய தான் போட்டுக்கிறேன், வேண்டாம்னா எடுத்துடுறேன், என்னவோ இப்படி கூட படுக்கணும் தோணுச்சு ” அவ்வளோதான் என்றவன் கையை எடுக்க ” இருக்கட்டும் ” என்றாள் அவன் கையை பிடித்து…

அவள் உறங்கவில்லை என்பது நாதனுக்கும் புரிந்தது, அதனால் பேச்சு கொடுத்தான்…

” ஏண்டி என்னை நீ அடிப்பியா ” என்று கேட்டான் ” என் பையனை கண்டிக்கும் போது நீங்க தலையிட்டா விழும் தான் ” என்றாள் அவளும் சகஜமாக…

” நான் அவனுக்கு அம்மா மாதிரி இருக்கணும்னு நெனச்சு தான் என்கூட வாழுறிங்களா, இல்லை அம்மாவா இருக்கணும்னு நினைக்கிறிங்களா ” என்றாள் அவன் முகத்தை திரும்பி பார்த்து…

இப்படியெல்லாம் நாதன் யோசித்தது இல்லை, மகனை இதுவரை அடித்தது இல்லை என்பதால் தான் சிறு ஆதங்கம், இப்போது மனைவியின் கேள்வியில் தான் புரிந்தது…

” இப்படி அவனை அடிச்சா திட்டினா, ஏன் எதுக்குன்னு மல்லுக்கு நிக்காதீங்க, என் பையனை சில விடயத்துல கண்டிப்பா தான் நான் வளர்ப்பேன்” என்றவள் இடைவெளிவிட்டு தொண்டையை செருமி கொண்டாள்…

” இல்லை எனக்கு அந்த உரிமை இல்லைனு நெனச்சா… ” என்றவள் வார்த்தை அவன் சொன்ன ” உனக்கு மட்டும் தான்டி அந்த உரிமை ” என்றவன் வார்த்தையிலும், கொடுத்த முத்தத்திலும் அப்படியே தொண்டைக்குள் நின்றுவிட்டது…

அவன் கொடுத்த நெற்றி முத்தத்திற்கு அப்படியொரு அழுகை பொங்கியது பெண்ணவளுக்கு…

எப்போதும் அழுகையை மறைப்பவள் இப்போது, அப்படியே திரும்பி அவன் நெஞ்சில் தலை வைத்து பனியனை இறுக்கி பிடித்து கொண்டு அழுதாள், மகனின் உறக்கம் கலைந்துவிட கூடாதேன்று உதட்டை கடித்து கொண்டு…..

கொண்டவனுக்கு என்னவென்று தெரியாமல் அவள் தலையை தடவி கொடுத்து கொண்டிருந்தான் ஒன்றும் கேட்காமல், என்னவோ அடிக்கடி உணர்ச்சிவசப் படுகிறாள் என்பது வரை நாதனுக்கு புரிந்தது…

” ஷு போதும் தூங்கு ” என்றவன் மார்போடு இறுக்கி அணைத்து கொண்டான்…

மகனை உறங்க வைத்துவிட்டு, கல்லூரி வேலையை முடிக்க நினைத்தவள், சில பல வருடங்களுக்கு பின் நிம்மதியாக நாதனின் மார்பில் சுகமாய் உறங்கி போனாள், உலகம் மறந்து…

அவள் செவ்வரளி.