அவள் செவ்வரளி

செவ்வரளி -5

அன்று ரெத்த வெள்ளத்தில் மருத்துவனையில் சேர்க்கப்பட்ட வாசுகிக்கு உயிர் மட்டும் தான் ஊசல் ஆடி கொண்டிருந்தது…

” என் மகளை இப்படி பார்க்கவா இந்த உசுரு இன்னும் இருக்கு ” என்று நெஞ்சில் அறைந்து கொண்டு அழுதப்படி நின்றார் கோபால்..

அன்று முழுவதுமே ஐசியூவில் தான் வாசுகி வைக்கப்பட்டிருந்தாள்..

இதயத்திற்கு ரெத்தத்தை கடத்தி செல்லும் நரம்பு முழுவதும் அறுபட்டு நூலிழையில் தொங்கிக்கொண்டு இருந்தது…

கோபால் கூடவே இருந்தான் நாதன், இவ்வளவு முட்டாள் தனமா இந்த பெண்ணிற்கு என்று தான் அவன் நினைப்பு முழுதும்…

மாமனை தாங்கி நின்றான் அவரோடு, பெண்கள் துணையென்று யாருமில்லை, அதனால் தன் தங்கை பவித்ராவிற்கு அழைத்து விவரத்தை கூறி வர வைத்தான்…

அவளும் பிள்ளைகள் இரண்டையும் மாமியாரிடம் ஒப்படைத்துவிட்டு, கணவன் மணிகண்டனை அழைத்து கொண்டு வந்துவிட்டாள்..

வாசுகி கண் விழிக்கவே முழுதாக மூன்று நாட்கள் ஆகியது..

அவள் கண் விழித்த நேரம் கூடவே ஒரு செவிலியர் தான் இருந்தார்..

கோபாலும், பவித்ராவும் வெளி இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

ஐசியூ உள்ளே அனுமதிக்கவில்லை, வெளிலே இருப்பதால் பாவி இடையில் வீட்டிற்கு சென்று வந்திருந்தாள்.

நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டால் தானே உதவிக்கு ஆள் வேண்டும் என்பதால் கோபாலே போய் வர சொல்லிவிட்டார்..

அன்று கோபால் மகனிடம் அத்துணை வெறுப்பாக பேசிவிட்டு வைத்தது தான், இன்றுவரை ஒரு போன் போட்டு அக்காவின் நலன் பற்றி விவரம் கேட்கவில்லை..

காந்திமதியோ, வளர்மதியோ வந்து எட்டிபார்கவில்லை அன்று குத்துயிரும் கொலையுயிருமா கொண்டு போனாவளை…

தமிழரசன் ம்ஹும் அஞ்சி நடுங்கி ஒடுங்கி போயிருந்தான், நான் டவுன் ஆசுபத்திரிக்கு போக மாட்டேன்..

போனால் என்னை எதாவது செய்து சிகிச்சை எடுக்க வைத்து விடுவார்கள், அவள் வீட்டுக்கு வரட்டும் கையோடு அழைத்து கொண்டு வந்துவிடுவோம் என்று கனா கண்டு கொண்டிருந்தான்…

மேலும் இரண்டு நாள் கடந்து தான் நார்மல் வார்டுக்கு மாற்றினார்கள், கையை அதிகம் அசைக்க வேண்டாம் என்றும் இன்னும் சில அறிவுரைகளும் கூறப்பட்டு போனார் செவிலியர்..

கண் விழித்ததும் வாசுகி வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் சுற்றும் கற்றாடியை..

” இப்போ எப்படி இருக்கு மதனி ” என்று கேட்ட பவிக்கு தலையை மட்டும் அசைத்தாள்..

கோபால் மகளின் மற்றொரு கையை பற்றி கொண்டு அமர்ந்திருந்தார், ஒன்றுமே பேசவில்லை..

அந்த மனிதனின் ஆயுசு பத்து ஆண்டுகள் குறைந்து விட்டது, மகளின் நிலையை கண்டு..

அன்று நாதன் மகனையும் அழைத்து வந்திருந்தான் வாசுகியை பார்த்துவிட்டு செல்ல…

நெடுமாறனுக்கு விடுமுறை தினம் என்பதால் தனியே வீட்டில் விட்டுவர முடியவில்லை…

உள்ளே வந்ததும் மாறன் வாசுகி அருகில் வந்து அவள் முகத்தை பார்த்து பார்த்து சென்றான்..

அவள் எங்கே அதை கவனித்தாள், கற்றாடி எத்துணைமுறை சுழல்கிறது என்றுதானே பார்த்து கொண்டிருந்தாள்..

பின்பு பவியிடம் ” அத்தை இங்க பாருங்களேன் சேம் டூ சேம் என் மூக்குலயும் டாட் இருக்கு, அவங்க மூக்குலயும் டாட் இருக்கு ” என்றான் மச்சத்தை காண்பித்து…

அவன் குரலில் தான் வாசுகி திரும்பி பார்த்தாள், கையை ஆட்டி பவியிடம் பேசி கொண்டு நின்றான்….

” அது பேர் மச்சம்டா ” என்றாள் பவி ” அவங்களை நான் தொட்டு பார்க்கட்டுமா ” என்றான் அடுத்த கேள்வியாக…

” அச்சோ அவங்களுக்கு உடம்பு சரியில்லையே தொட்டா வலிக்குமே ” என்றாள் பவி குழந்தைக்கு புரியும் விதமாக..

” அப்பா சொன்னாங்க வீட்லே, யாரையும் ஹம்ஹ்ம்….. ” அடுத்த வார்த்தை தலையை தட்டி யோசித்தான் வரவில்லை மாறனுக்கு…

நாதன் எடுத்து கொடுத்தான் ” டிஸ்டர்ப் பண்ண கூடாது ” அம் அதான் என்றான் மாறன்…

இப்போது தான் வாசுகி வாய் திறந்தாள் ” இங்க வாங்க ” என்று நெடுமாறனை பார்த்து…

அவன் உடனே அப்பாவை திரும்பி பார்த்தான், நாதன் ” போ ” என்று சொன்னதும் அவள் அருகில் சென்றான்…

அருகில் நின்ற மாறன், வாசுகி கன்னம் தொட்டு ” வலிக்கிதாம்மா ” என்று கேட்டு ஊதினான் எங்கே வலிக்கிறது என்று கேட்க தெரியாமல்..

அந்த குழந்தை அன்று எப்படி யாரும் சொல்லாமல் அம்மா என்று அவளை அழைத்ததோ இன்று அதுவே நிஜமாகி போனது…

” ம்மா ம்மா ” என்ற சத்தத்தில் தான் தன் நிலையிலிருந்து வெளியில் வந்தாள் வாசுகி…

நாதனை சோபாவில் அமர வைத்துவிட்டு சுவரில் சாய்ந்து அப்படியே தரையில் அமர்ந்து கண்களை மூடியவள், நேரம் போனதே தெரியாமல் அமர்ந்துவிட்டாள்…

மகனுக்கு பள்ளி முடியும் நேரம் ஆகிவிட்டதால் நாதனே சென்று மகனை அழைத்து வந்திருந்தான்…

” யாருக்கூட வந்திங்க கண்ணா ” என்று கேட்டபடி மகனின் சட்டையை அவிழ்த்தாள்..

” அப்பா ம்மா ” என்றவன் டிரௌசர் பாக்கெட்டில் இருந்து மிட்டாய் எடுத்து கொடுத்தான்..

” சௌமிக்கு ஹாப்பி பர்த்டேம்மா சாக்கி கொடுத்தா ” என்றான்..

” நீங்களே அப்புறம் சாப்பிடலாம் ” என்றவள், மகனை தூக்கி கொண்டு குளியலறை சென்றாள்…

அதன் பின் மாறன் அவளை பழையதை நினைக்க விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

ஏதேனும் பேசியபடியே அவளோடே ஒட்டிக்கொண்டு திரிந்தான்…

முன்பானால் வீட்டிற்கு அழைத்து வந்ததும் உடை மாற்றி, ஏதேனும் ஸ்னாக்ஸ் கொடுத்து நாதன் தன்னோடு கடைக்கு அழைத்து சென்றிடுவான் மகனை..

இப்போது அப்படியில்லையே, பள்ளியிலிருந்து அழைத்து வந்ததும் மகனை சுத்தம் செய்து, துணி மாற்றி முதல் வேலையாக அவனுக்கு சாதம் தான் ஊட்டுவாள் வாசுகி…..

ஆம் பள்ளியில் மதியம் குழந்தை எப்படியும் சரியாக உன்னாது என்பதால், வந்ததும் அவன் வயிறு நிறையும் அளவு உணவு கொடுத்தபின் தான் அவனை விளையாட விடுவாள்…

இப்போதும் உண்டு முடித்து தனது ரிமோட் காரை எடுத்து கொண்டு வீட்டை ரௌண்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறான்…

” பொன்னு கடைக்கு போய்ட்டு வரேன் ” என்றவனிடம் தலையை மட்டும் அசைத்து வைத்தாள்..

மதிய உணவு இருவருமே உண்ணவில்லை என்பது மறந்து போய்விட்டது…

” எதுவும் வாங்கிட்டு வரணுமா பொன்னு ” என்றவனிடம் ” மாறனுக்கு ஸ்னாக்ஸ் வாங்கிக்கோ ” என்று மட்டும் சொல்லிவிட்டு மகனுக்கு என்னென்ன ஹோம் ஒர்க் இருக்கிறது என்று பார்த்தாள்…

” ம்மா சுவையிங், சுவைங் ” என்று வந்தவன் வாசுகி மடியில் படுத்து கொண்டான்….

” மாறா எழுந்துக்கோ ஹோம் ஒர்க் செய்யணும் ” என்ற தாயின் குரல் அவனுக்கு எட்டவே இல்லை..

விளையாண்ட கலைப்பில் அழ்ந்து உறங்கிவிட்டான்…

” அம்மாடி கொஞ்சம் காபி தண்ணி போடேன் ” என்று குரல் கொடுத்தார் வெங்கடேசன்..

” இதோ வரேன் மாமா ” என்றவள் மகனை தூக்கி சென்று கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வந்து காபி கலந்து இருவருக்கும் வெளியில் எடுத்து சென்றாள்..

வெங்கடேசன் வெளி திண்ணையில் தான் அமர்ந்திருந்தார்..

அவருக்கு கொடுத்துவிட்டு தானும் அவருக்கு சற்று தள்ளி அமர்ந்து குடித்தாள்..

” மச்சான் இன்னைக்கு வரேன்னு சொன்னாரேம்மா, வந்தாரா ” என்றார் மருமகளிடம்..

கோபாலை தான் கேட்டார் ” இல்லை மாமா, இனியா வரப்போறாரு நாளைக்கு வருவாரு ” என்றவள் ரோட்டை ரோட்டை பார்த்தாள்..

” என்னம்மா யாரும் வராங்களா ” என்று கேட்டவரிடம் ” இல்லை மாமா அவங்க மதியம் சாப்பிடல, அதான் வராங்களா பார்த்தேன் ” என்றாள்..

வெங்கடேசன் உடனே மகனுக்கு போன் போட்டு விட்டார் ” தம்பி சாப்பிடலையா மதியம், வீட்டுக்குவா, பாப்பாவும் சாப்பிடலை போல ” என்றார் யூகமாக…

இப்போது தான் நாதனுக்கும் நினைவு வந்தது, இருவருமே மதிய உணவு உண்ண வில்லையென்று…

” இதோ கடையை சாத்திட்டு வரேப்பா ” என்றவன் எப்போதும் எட்டு மணிக்கு மூடும் கடையை ஆறு மணிக்கு முன்பே சாற்றிவிட்டு கிளம்பிவிட்டான்…

மகனுக்கு ஸ்னாக்ஸ் மற்றும் பழங்கள் வாங்கி கொண்டு, தந்தை வெற்றிலை பாக்கு வாங்கி கொண்டு, முதன் முறையாக மனைவிக்கு பூ வாங்கி வந்திருந்தான்…

கொண்டு வந்து வாசுகியிடம் கொடுத்தவன் ” ஏன் பொன்னு சாப்பிடாம இருக்குற ” என்றுவிட்டு குளிக்க சென்றான், அவள் பதிலை எதிர்பார்க்காமல்…

” அதை இவரு கேக்குறாரு பாரு ” என்று மனதோடு நினைத்தவள் அவன் கொடுத்த பொருளை அங்கங்கு வைப்பதற்கு பிரித்து எடுத்தாள்…

பூவை எடுத்து தனியே வைத்தவள், வெற்றிலை பொட்டலத்தை எடுத்து மாமனிடம் கொடுத்தாள்..

குளித்து முடித்து வந்தவனிடம், பூவை எடுத்து கொடுத்து ” உங்க மனைவி போட்டோக்கு போட்டுடுங்க ” என்றாள்…

ஹ்ம் நிஜத்தை விடுத்து, நிழலை தேடி போக சொல்கிறாள் அவனை…

ஒரு பெரு மூச்சோடு வாங்கியவன், நிழற்படமாக மாட்டியிருந்த, தாய்க்கும் தாரத்துக்கும் பிரித்து போட்டுவிட்டு விளக்கேற்றி வைத்துவிட்டு வந்தான்…

ஒரு வாரம் கடந்து, மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தவன், வாசுகியிடம் ஒரு பேப்பரை கொடுத்து ” பிரித்து பாரு ” என்றான்…

கேள்வியோடு அவனை நோக்கிவிட்டு, கையிலிருப்பதை பிரித்து பார்த்தவள், முடியாது முடியாது என்றவளை அவன் கண்டு கொள்ளவே இல்லை..

” அதை பில் பண்ணிடு நாளைக்கு போய் அட்மிஷன் போட்டுடலாம் ” என்றான் மனைவியிடம்..

தானே சென்று பி. எட் சேர்வதற்கான அப்ப்ளிகேஷன் வாங்கி வந்திருந்தான் நாதன்…

” என்னால இத்துணை வருசத்துக்கு அப்புறம் படிக்க முடியாது பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க ” என்று தேய்ந்து போன ரெகார்ட் போல கத்தியவளின் கத்தலை காதில் வாங்காதவன் போல இருந்தான் நாதன்….

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவன் ” அப்போ அந்த பணம் வீணா போகாத மாதிரி படி, சும்மா சொன்னதே சொல்லாத ” என்றவன் கடைக்கு கிளம்பினான்..

” என்னால முடியது என்றவள் ” அப்படியே நிற்க, ” மாறனை கூட சமாளிச்சுடலாம் பொன்னு உன்னை தான் முடியலை ” என்றவன்..

” ப்ளீஸ்டா வீட்லே இருக்க உனக்கும் கஷ்டம் தானே படி ” என்றவன் இடைவெளிவிட்டு ” காலேஜ் போ உன்னால படிக்க முடியாதுனு அப்போவும் தோணினா போக வேண்டாம் ” என்றான் பொறுமையாக…

இதற்கு அவள் தலை தன்னால் சரியென்று ஆடிவிட்டது…

நாதன் கடைக்கு சென்றுவிட, அந்த அப்ளிகேஷனை கையில் எடுத்தவளுக்கு நினைவுகள் பின் நோக்கி சென்றது..

தமிழுடன் திருமணம் முடிந்து இரண்டு மாதம் கடந்து ” மாமா பி. எட் அட்மிஷன் வருது, காலேஜ் சேர்த்து விடுங்களே ” என்றாள்..

அவளை புருவம் உயர்த்தி பார்த்தவன் ” படிச்சு என்னத்த இப்போ கிழிக்கப்போற ” என்றான்…

வாசுகிக்கு மனம் சுணங்கியது, இருந்தும் படிக்கும் ஆசையில் அவனுக்கு சொல்லி புரியவைக்க நினைத்து மீண்டும் பேசினாள்…

” படிக்கணும்னு ஆசை மாமா ப்ளீஸ் ” என்றவள் கன்னம் தாங்கி நின்றாள்..

ஆம் அன்று முதல் தான் வாசுகியிடம் கை ஓங்க தொடங்கியிருந்தான் தமிழ்..

” ஒரு தடவை முடியாதுனு சொன்னேனா, அந்த விடயத்தை பத்தி திரும்ப என்கிட்ட பேசவே கூடாது ” சரியா என்றான் விரல் நீட்டி எச்சரித்து..

வாசுகிக்கு உடல் கிறு கிறுத்து போனது அவனின் ஒற்றை அறையில்..

அத்துணை பலமாக அடித்திருந்தான் அவளை..

” பொட்ட கழுதை புருசனுக்கு சமைச்சு போட்டோமா, அவன் மிச்சம் வச்சத்தை சாப்பிட்டோமான்னு தான் இருக்கனும்”….

” அதை விட்டுடு அவனுக்கு புடிக்காத எதையும் செய்யுறேன்னு முன்னத்தில வந்து நிக்க கூடாது ” என்றவன் ” போ போய் சாப்பாடு எடுத்து வை ” என்றான் விரலை நீட்டி எச்சரித்து…

கன்னம் எரிந்தது அவளுக்கு, என் வாழ்க்கை இவ்வளவு தான என்று நினைத்தவளுக்கு கண்ணீர் பொங்கியது…

அன்று தான் படிப்பதற்கு இவள் ஒருவனிடம் கெஞ்சி கேட்டு நின்றிருக்க..

இன்று இவள் படிப்பதற்கு ஒருவன் இவளிடம் கெஞ்சி கொண்டு நிற்கிறான்…

விசித்திரமான வாழ்க்கையை நினைத்து விரக்தியான சிரிப்பு வந்தது பெண்ணிற்கு..

அவள் செவ்வரளி