அவள் செவ்வரளி

அத்தியாயம் -4

” ப்பா ப்பா, அம்மா உங்களை கூப்பிட்டாங்க ” என்றபடி வந்து நின்றான் நெடுமாறன் ஸ்கூல் யூனிபோர்ம் போட்டப்படி…

மகனை நிமிர்ந்து பார்த்தவன், பக்கத்தில் அழைத்து சட்டை மேல் பொத்தனை போட்டுவிட்டு ” அம்மா எங்கே” என்று மகனிடம் கேட்டான் நாதன் …

” அம்மா பாக்ல நோட் வைக்கிறாங்க ” என்றுவிட்டு மீண்டும் தாயிடம் ஓடினான் நான்கு வயது மாறன்..

காலுக்கு பவுடர் போட்டு, அதற்கு மேல் துணியை எடுத்து சுத்தியவன், பிளாஸ்டிக் காலை எடுத்து மாட்டிக்கொண்டு, ஸ்டிகையும் கையில் நன்றாக நுழைத்து கொண்டு உள்ளே சென்றான் மனைவியிடம்…..

அவளோ இப்போது சமையல் அறையில் மகனுக்கு உணவு ஊட்டிக்கொண்டு இருந்தாள்..

தொண்டையை செருமி கொண்டு சமையலறை வாசலில் நின்றான்…

மனைவி அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை, ஏழு மாதமாக இப்படித்தான் நடக்கிறது..

நேரத்திற்கு அவனுக்கான உணவு வந்துவிடும், அதில் அக்கறை டன் கணக்கில் நிறைந்து வழிகிறது, ஆனால் அன்பு சொட்டுதா என்று கூட தெரியவில்லை…

” தம்பி அப்பாக்கு பிளேட் எடுத்து போய் டேபிள்ல வைங்க ” என்றாள் மகனிடம்…

நாதனுக்கு புரிந்தது சாப்பிட்டு போக சொல்லி மகனிடம் சொல்லியிருக்கிறாள், அவனோ அம்மா கூப்பிட்டதாக கூறிவிட்டான் தெரியாமல்…

” ம்மா அப்பாக்கும் ஆஆஆஆ ” என்றான் மகன் நாதனை கை நீட்டி அவன் பக்கத்தில் வந்து அமர சொல்லியப்படி…

அவன் தாய் ஒரு நொடி பதறினாலும் ” கண்ணா அப்பா பெரிய பையன் தானே சோ அவரே சாப்பிடுவாரு, நீங்க மட்டும் ஆஆஆஆ ” என்றாள் கொஞ்சலாக…

மகனுக்கு சாதம் ஊட்டி முடித்து, நாதனுக்கு உணவு எடுத்து கொண்டு அவன் அமரும் டேபிளில் வைத்தாள்..

” பொன்னு இதுக்கு நீ சாப்பாடு போடாமலே இருக்கலாம் ” என்றான் நாதன் வெறுமையாக..

அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஒன்றும் பேசாமல் உணவை கொண்டு வைத்தாள், நீயே போட்டு சாப்பிட்டுக்கோ என்பது போல…

பின் கணவனை கண்டுக் கொள்ளவேயில்லை, மகனை அழைத்து கொண்டு பக்கத்தில் இருக்கும் பள்ளியில் விட்டு வந்தாள்..

அதுவரையுமே நாதன் உணவு உண்ணவில்லை, வாசுகி எடுத்து வைத்து சென்றது அப்படியே இருந்தது…

நாதனை முறைத்து பார்த்தவள், பின் மாமனாருக்கு உணவை, தூக்கு சட்டியில் அடைத்தாள், வயலுக்கு கொண்டு செல்ல…

அவள் வயலுக்கு புறப்பட தயாராகவும் ஒரு ஏக்க பெருமூச்சு விட்டவன், உணவை உண்ணாமல் வெளியில் சென்றுவிட்டான்..

நாதன் விவசாய நிலங்களுக்கு தேவையான பூச்சி மருந்து வியாபாரம் செய்கிறான், கடையில் வேலை செய்ய இரண்டு ஊழியர் இருக்கிறார்கள்..

ஆனால் கணக்கு வழக்கு முழுதும் நாதன் தான்,

பிரசவத்தின் போது மனைவி இறந்து போக, தவித்து போனான் நாதன்..

மூன்று வருடம் முன்பு நடந்த விபத்தில் தான் இவன் காலும் போய்விட்டது…

அவன் தாய் தான் நாதன் மகனையும், தன் மகனையும் தாங்கி பார்த்து கொண்டார்..

ஒரு வருடங்களாக மிகவும் சிரமப்பட்டான் நாதன், அனைத்திற்குமே..

அப்போது நிறையவே மனைவியை நினைத்து அழுவான்..

சில நேரங்களில் சில வேலைகளை பெற்ற தாயே ஆனாலும் கேட்க தயக்கம், அதை நினைக்க நினைக்க அழுகை.

ஆம் ஒரு வயதிற்கு மேல் துணையின் உதவி தானே தேவைப்படும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்..

மகனின் மனம் புரிந்து அவனை குழந்தை போல் தான் சகுந்தலா தாங்கினார்.

ஆனால் தீடீரென ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இரவில் படுத்தவர், விடியலில் எழாமலே போய்விட்டார் இறைவனிடம்…

என்னவோ ஒரு வெறுப்பு இப்போது வாழ்க்கை மீது நாதனுக்கு..

அன்று வாசுகிக்காக மாமனிடம் பேசினானே தவிர, தனக்கு வாசுகி வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு துளியும் இல்லை…

கால் இல்லாதவனை கட்டிக்கொண்டு வரும் பெண் கஷ்டப்படும் அதனால் வேண்டவே வேண்டாம் என்றுவிட்டான், தாய் சகுந்தலாவிடம்..

இன்று வாசுகி அவன் மனைவியாக, இதை அவன் நினைத்தும் பார்த்தது இல்லை..

மாமன் மகள் படும் கஷ்டத்தை கண்டு அவளுக்கு ஒரு நல்வாழ்வு கிடைக்க வேண்டுமென்று தான் நினைத்திருந்தான், ஆனால் அது தன்னாலே பரிப்போய் விட்டதே என்ற வருத்தம் இப்போது நெஞ்சம் முழுதும்…

பசி வேறு வயிற்றை சுரண்ட தன் மீதே எரிச்சல் மேல் ஓங்கியது..

மனைவியாக  அல்ல ஒரு சக மனுஷி ஒரே வீட்டிற்குள் அவனிடம் மட்டும் பேசாமல் வளைய வந்தால், அவனும் என்ன தான் செய்வான்  ..

ஏதோ யோசனையிலே கடையில் அமர்ந்திருக்க, தன் முன்பு நிழலாடுவதை உணர்ந்து, ” என்னங்க வேணும் ” என்றபடி நிமிர்ந்தான் நாதன்..

” ஹ்ம் குருணை மருந்து ” என்றாள் வாசுகி நங்கென்று உணவை தூக்கி மேசையில் வைத்தபடி…

” ச்சு என்ன பொன்னு இப்படி சொல்ற ” என்றவன் ” என்ன இவளோ தூரம் ” என்றான் அவள் பதில் சொல்லமாட்டாள் என்ற நினைப்பில்…

” ஏன் துரைக்கு வீட்ல சாப்பிட்டு கடைக்கு வர முடியாதோ, உங்களுக்கு ஒருத்தர் சாப்பாட்டை தூக்கிகிட்டு பின்னாடியே வரணுமா ” என்றாள் முறைத்து கொண்டு…

தலையை உலுக்கி கொண்டவன் ” ஏன் பொன்னு வெயில அழையிற, மதியம் வந்து சாப்பிட்டுருப்பேனே ” என்றான் மணியை பார்த்தப்படி..

மணி பதினோன்றுக்கு மேல் ஆகியிருந்தது , ” ஆமா ஆமா உழைக்கிறவங்க பட்டினி கிடக்கணும், வீட்ட சும்மா தேய்கிறவங்க நல்ல சாப்பிடணும் ” என்றவளுக்கு அழுகையாக வந்தது…

ஒரு வேலை உணவு தமிழுக்கு தாமதமாகினாலும் அன்று முழுவதும் அவன் செய்யும் கொடுமைகளையும், பேச்சையும் தாங்கிக்கொள்ளவே முடியாது…

ஆனால் இவனோ உணவை உண்ணாமல், இப்படி நான் ஏன் வெயிலில் அழைகிறேன் என்று வருந்துகிறானே, என்று நினைக்க கண்ணீர் வெளியில் வந்து விழுந்தது…

நாதன் அதை கவனிக்கவில்லை, கடையில் வேலை செய்யும் நபரில் ஒருவரை அழைத்து, ஆட்டோ ஒன்று பிடித்து வர சொன்னான்…

அதெல்லாம் ” ஒன்னும் வேண்டாம் அண்ணா ”  என்றவள் நாதனுக்கு நேர் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்…..

இங்கே எதற்கு என்று நாதன் நினைத்தாலும் அவளிடம் கேட்கவில்லை..

” ப்ளீஸ் போய் சாப்பிடுங்களே ” என்றாள் அவனிடம், அவள் குரலின் பேதத்தை இப்போதுதான் உணர்ந்தான் நாதன்..

” பொன்னு அழுகுறியா நீ ” என்றான் குனிந்து அமர்ந்திருந்தவளிடம்…

இல்லையென்பது போல் தலையை ஆட்டியவள், ” உள்ள ரூம்ல போய் சாப்பிடுங்க இங்க ஒரே டஸ்ட்”  என்றாள்…

அதற்கு மேல் வாதம் செய்யாமல் எழுந்து கொண்டான் நாதன் உணவு கொண்டு வந்த கூடையை எடுத்து கொண்டு..

இரண்டடி நாகர்ந்தவன் ” நீ சாப்பிட்டியா பொன்னு ” என்றான் அவளை பார்த்து…

” ஹ்ம் வயல மாமா கூட சாப்பிட்டு தான் வந்தேன் ” என்றாள் அவன் முகம் பாராமல்…

” சரி இந்த நாற்காலில வந்து உக்காரு, யாரும் வந்தா பில் போட்டு கொடு ” என்றுவிட்டு உள்ளே அறைக்கு சென்றான்…

இப்போதும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது, தமிழரசனை நினைக்காமல் இருக்க முடியவில்லை…

இதுவரை ஒருநாளில் கூட அவள் கைகளில் இந்த பத்து ரூபாய் பணம், ஏதேனும் வேண்டுமென்றால் வாங்கிக்கோ என்று கொடுத்ததில்லை…

தமிழ் சொந்தமாக டிராக்டர் வைத்திருந்தான், அவன் தொழில் அது தான்..

அதனோடு சோளம், உளுந்து இப்படி தனியங்கள் அடிக்கும் மெஷின் கூட வைத்திருந்தான்…

சுற்று வட்டாரத்தில் அவனிடம் மட்டுமே இது போன்று உள்ளன, அதனால் அவன் கேட்கும் தொகை கொடுக்கப்படும்..

எத்துணை ஆயிரம் கிடைத்தாலும் மனையிடம் சொன்னது இல்லை, பணத்தை அவள் கைகளில் கொடுத்ததும் இல்லை..

ஆனால் இங்கு வந்த சில நாட்களிலே, நாதன் வாசுகியிடம் பணத்தை கொடுத்துவிட்டான், வரவு செலவு நீயே பாரென்று..

இத்துணைக்கும் நாதனுடன் வாசுகி பேசமாட்டாள், அவள் கையில் வாங்காத போதும், ” ஆம்பளைக்கு சம்பாரிக்க தான் தெரியும் பொன்னு, பக்குவமா சேமிக்க பொண்ணுகளுக்கு தான் தெரியும், என்றான்..

அப்போதும் அவள் கையில் வாங்கவில்லை ” உனக்கு பிடிக்குதோ இல்லையோ இனி இதுதான் உன் குடும்பம்னு ஆகிடுச்சு பொன்னு, அதனால தட்டிவிட்டு போக முடியாது ” என்றவன் அவள் பக்கத்தில் வைத்துவிட்டு வெளியில் வந்துவிட்டான்..

வெங்கடேசன் கூட வயலில் வரும் பணத்தை கொண்டு வந்து மொத்தமாக மருமகளிடம் தான் கொடுப்பார்…

” வீட்டுக்கு வந்த ரெண்டு மகராசியும், பாதியிலே போய்ட்டாங்க, இனி நீதான் வாசுகி இந்த குடும்பத்துக்கு ஆணிவேரா இருக்கனும் ” என்றுவிட்டு கண்கலங்கி வெங்கடேசன் நின்றது இப்போதும் வாசுகி கண்களில் தெரிந்தது…

கடை வைத்திருக்கிறான் என்பது சில வருடங்களுக்கு முன்பே வாசுகி கேள்விப்பட்டது தான், ஆனால் இன்றுதான் நேரில் பார்க்கிறாள்…

விசாலமான பெரிய கடைத்தான், மருந்துகள் எல்லாமே கண்ணாடி தடுப்புக்குள் தான் இருந்தது
, அது போக வெளியில் ஆடு மாடுகளுக்கு தேவையான கயிறு விற்பனைக்கு தொங்கியது..

மேலும் பக்கத்திலே குடன் போன்று இருந்தது, அங்கு சிமெண்ட், பிவிசி பைப் விற்பனைக்கு இருந்தது, ஆக நல்ல வருமானம் வரும்படியான கடைத்தான்…

” நானே கொண்டு வந்து விடவா பொன்னு”  என்றபடி வந்தான் நாதன்…

வாசுகி அவன் போகும் போது எங்கு அமர்ந்திருந்தாலோ அங்குதான் இப்போதும் இருந்தாள்…

” இல்லை நானே போய்க்கிறேன் ” என்றவள் காலியான உணவு கூடையை எடுத்து கொண்டாள்…

” இனி இப்படி வெயில அலையாத பொன்னு ” என்றான் கண்டிப்பாக  ” ஏன் வீட்ல சும்மா தான இருக்கேன் ” என்றாள் வாசுகி..

ஆம் சும்மாதான் இருக்கிறாள் இப்போது, வெங்கடேசன் காலையில் மாடு தொழுவத்தை சுத்தம் செய்துவிட்டு தான் வயலுக்கு செல்வார்..

வாசுகிக்கு வேலையென்றால் சமைப்பது மட்டும் தான், சில நேரம் அதற்கும் காய்கறிகள் வெட்டி இருக்கும், நாதன் வேலையாக இருக்கும் என்பது புரியும்…

மகனும் அதிகம் அடமில்லை, பிறந்ததிலிருந்து தாயின் வாசம் உணராமல் வாழ்ந்தவன், விவரம் தெரிவதற்குள் வளர்த்த ஆயாவும் தவறிப்போய்விட, இப்போது தனக்கு தாயாக வந்த வாசுகியிடம் அதிகம் செல்லம் தான்..

சிறு வயதிலிருந்தே எதற்கும் அட கிடையாது நெடுமாறன், வாசுகி எது சொன்னாலும் சரிம்மா என்பது தான் அவனுக்கு பதிலாக இருக்கும்…

” ஹ்ம் சும்மா இனி இருக்க வேண்டாம் பி.எஸ்சி முடிச்சுருக்க தான, அடுத்து பி . எட் பண்ணலாமா இல்லை எம். எஸ்சி பண்ணலாம்னு யோசி அட்மிஷன் ஓபன் ஆகுது நெஸ்ட் வீக் ” என்றான்..

நிரம்ப நாட்களாகவே மனைவியிடம் இதைப்பற்றி பேச யோசித்தான் தான், அவள் பேசினால் தானே எல்லாம் பேச நினைவிற்கு வருவதற்கு…

இப்போது அவள் இப்படி சொல்லவும் அவளிடம் சொல்லிவிட்டான், அவனை நிமிர்ந்து பார்த்த வாசுகி ” இல்லை நான் படிக்கலை ” என்றுவிட்டு நிற்காமல் கண்ணீரோடு கிளம்பிவிட்டாள்…

போகும் அவளை கனமான மனதோடு பார்த்து நின்றான் நாதன்..

சிலபல வருடங்களுக்கு முன்பு, வாசுகி துள்ளி திரியவில்லை என்றாலும், முகத்தில் புன்னகை இல்லாமல் பார்த்ததே கிடையாது…

ஆனால் இப்போது அவளுக்கு புன்னகைக்க தெரியுமா என்பதே தெரியாமல் போயிற்று..

வீட்டிற்கு வந்தவளுக்கு அழுகையாக வந்தது, நாதனின் முதல் மனைவியின் போட்டோ அங்குதான் மாட்டப்பட்டிருந்தது, மணிகனக்காக நின்று பார்த்துக்கொண்டு இருந்தாள் அவள் முகத்தை…

திருமணத்தில் பார்த்தது, பின்பு எப்போதாவது சில விழாக்களில் பார்க்க நேரிடும், ஆனால் தமிழ் நின்று பேச விடமாட்டான்…

இப்போது முகம் மறந்து போயிற்று , ஆனால் அவள் முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பை கண்டிருக்கிறாள் வாசுகி…

ஒருத்திக்கு நல்ல வாழ்க்கை கிடைத்து வாழநாள் கிடைக்கவில்லை , எனக்கு வாழ்நாள் கிடைத்து வாழ பிடிக்கவில்லை…

கையை அறுத்து கொண்ட என்னை ஏன் இவர்கள் காப்பாற்றினார்கள்..

அதனோடு விட்டார்களா, இன்று அவரோடே திருமணமும் முடித்து, தமிழரசன் தன்னை தாழ்த்தி பேசியது சரி என்பது போல் ஆகிவிட்டதே, நினைக்க நினைக்க கண்ணீர் முட்டியது…

நாதன் வந்து அவள் தோளை தொடவும் தான் நிகழுக்கு வந்திருந்தாள்…

அழுது கொண்டு சென்றாலே என்றுதான், நாதன் கடையில் இருக்க முடியாமல் சில மணி நேரங்களுக்கு பின் வீட்டுக்கு வந்திருந்தான்…

திரும்பியவள் அவனின் சட்டையை பிடித்து உளுக்கினாள்” ஏன் என்னை காப்பாத்துனீங்க, என்னை சாக விட்டுருக்கலாமே ” என்றவள் அவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதை உணரவில்லை…

நிமிடங்கள் பொறுமையாக நின்றவன் ” பொன்னு கால் வலிக்கிதுடா ” என்றான் அதற்கு மேல் முடியாமல்…

” சாரி சாரி ” என்றவள் அவன் சோபாவில் அமருவதற்கு உதவி செய்தாள்…

இங்கு வந்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டது, இதுவரை அவனிடம் ஒன்றும் பேசாதவள், இன்று ஏன் இப்படியென்று அவளுக்கே தெரியவில்லை…

” நீ போ பொன்னு நான் பார்த்துக்கிறேன் ” என்றவன் பிளாஸ்டிக் காலை கழட்டிவிட்டு, முட்டியை அழுத்தி கொடுத்தான்….

வலியின் சாயல் அவன் முகத்தில் அப்படியே தெரிந்தது…