அவள் செவ்வரளி

அத்தியாயம் -3

” வாசுகி முடிவா நீ என்னாமா சொல்ற ” என்ற பஞ்சாயத்து தலைவரின் கேள்விக்கு, கணவனை உணர்வற்று பார்த்தாள்..

வாசுகிக்கு நெற்றியில் தையல் பிரிக்கப்பட்டு இருந்தது, காயம் முழுதாக  சரியாகவில்லை …

அங்கு அமர்ந்து இருந்தவர்களை நிமிர்ந்து பார்த்தவள் ” நான் அவர் கூட சேர்ந்து வாழ தயார்” என்றிட தமிழரசன் முகத்தில் பல்பு எரிந்தது..

மாமனாரை திரும்பி பார்த்து நக்கலாக சிரித்தான் தமிழரசன் , மனைவியின் பதிலில்…

ஆனால் என்றாள் வாசுகி மீண்டும், இப்போது என்னவென்று மனைவியை நிமிர்ந்து பார்த்தான்..

” இன்னைக்கே டவுன் ஆசுபத்திரிக்கு அவர் என் கூட வரணும், கூடவே ரெண்டு ஊர் பக்கமிருந்தும் ரெண்டு ஆளுங்க வரணும் ” என்றாள்…

உடல் உதறியது தமிழுக்கு ” அதெல்லாம் வேண்டாம் வாசுகி, எனக்கு நீ போதுமென்றான் ” அவசரமாக…

” அட என்னப்பா நீ இம்புட்டு நடந்தும் அந்த புள்ள இம்புட்டு தூரம் இறங்கி வருது, நீ என்னவோ உன் இடத்துல இருந்து கொஞ்சம் கூட விட்டு கொடுக்க மாட்டேன்ற ” என்றார் ஒருவர்…

இரு ஊர் பக்க ஆட்களும் இருந்ததால் விவாதம் காரசாரமாக நடந்து இப்போது தான், அமைதியான பேச்சு வார்த்தைக்கு வந்திருந்தது…

” அப்படி முடியாதுனா இப்போவே வெட்டி விட்டுடுங்க ஐயா ” என்றார் கோபால் கையை தூக்கி கூட்டத்தை பார்த்து கும்புடு போட்டு..

” யோவ் மாமா நீ சும்மா இரு, என் பொண்டாட்டிக்கும் எனக்கும் தான் பேச்சு வார்த்தை ” என்றான் தமிழரசன்…

” அதானே இது என்ன ஊர் உலகத்துல நடக்காததா, என் தம்பி ஆம்பளை அவனே இம்புட்டு தூரம் இறங்கி வந்து வாழ சொல்றான் ” என்ற காந்திமதி வாசுகி முதுகில் ஒன்று போடப்படி ” பொட்ட சிறுக்கி என்ன அழுசாட்டியம் பண்ணிக்கிட்டு சுத்துறா ” என்றவர் அதனோடு நிறுத்தவில்லை..

” ஊர் முன்னாடி தானே அன்னைக்கு சொன்னா, அந்த நொண்டி பையலை வச்சிருக்கேனு, அதுனால தான் இந்த ஆட்டம் ஆடுறாள் ” என்றார்…

” காந்திமதி நாவடக்கி பேசு ” என்றார் கூட்டத்தில் ஒருத்தர்…

பஞ்சாயத்து என்றால் ஆலமரம், அரசமரம் மரத்தடியில் நடக்கவில்லை, இரு ஊர் ஆட்களும் பேசி பொதுவான ஒரு இடத்தில் வைத்து தான் பேச்சு வார்த்தை நடக்கிறது, சில முக்கியஸ்தர்களை வைத்து….

” ஏன்யா தமிழு அந்த புள்ள ஆசுபத்திரிக்கு தானே கூப்பிடுது, நீ கூட தான் போனா என்ன? ” என்றார் ஒருவர்…

” நீ இப்படி பம்முறத கண்டா பிரெச்சனை உனக்குதான் இருக்கு போல ” என்றார் மற்றொருவர்…

” என்ற மவன் காச்சல் வந்தா கூட ஆசுபத்திரிக்கு போகமாட்டான், அவனுக்கு பயம் ” என்றார் பாரிஜாதம்…

” இது என்ன சின்ன புள்ளை விளையாட்டா ” என்றார் ஒருவர் கடுப்பாகி…

பின்னே காலையில் தொடங்கிய பேச்சு வார்த்தை உச்சி வெயில் கடந்தும், ஒரு முடிவுக்கு வரமால் நீண்டு கொண்டே செல்கிறது…

” ஐயா என்ற மவளை கண்ணாலம் கட்டிக்கொடுத்து எட்டு வருஷம் ஆகுதுங்க, இன்னவரை சண்டை சச்சரவு தான், போதா குறைக்கு அவளுக்கு மலடி பட்டம் வேற, அடிபட்டு, மிதிப்பட்டு நெதமும் செத்து பொழைக்கிறா ” என்றவர்,

மேலும் ” அன்னைக்கும் வீட்டுக்கு வந்து மண்டைய ஒடச்சு போட்டுட்டாரு, என்ற வூட்ல வச்சே இம்புட்டு நடக்குது, அவரு வூட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டா என் புள்ளை பொணமா தான் கடக்கும் ” என்றவர் வாயில் துண்டை வைத்து தன்னை நிதான படுத்தினார்..

” அன்னைக்கு ஆசுபத்திரில சேர்த்து நான் வைத்தியம் பார்த்து கூட்டியார வரை ஒரு எட்டு வந்து என் மவளை இவரு பாத்துட்டு போவலை ” என்றவரால் மகளின் நிலையை நினைக்க நினைக்க கண்ணீர் கொட்டியது…

” என் மவ மலடி பட்டதோடு வாழ்ந்தாலும் சரி, வாழவெட்டியா இருந்தாலும் சரி உசுரோட இருக்கனும்ங்க ” என்ற கோபால் வெடித்து அழுதுவிட்டார்…

அங்கிருப்பவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, பஞ்சாயத்து தலைவர் தான் பேசினார்…

” உன் மக தமிழு கூட வாழுறேன்,  ஆனால் என் புருஷன் ஆசுபத்திரிக்கு வரணும் சொல்லுது, அதுனால ஒருவாரம் பார்ப்போம் தமிழு அந்த புள்ள சொன்னதை கேட்டா, மேற்கொண்டு சமாதானம் பேசுவோம், இல்லையா ரெண்டு பக்கமும் வக்கீல் வச்சு  பத்திரத்துல எழுதி வாங்கி முறிச்சிடலாம் ” என்றார்…

கோபாலுக்கு திருப்தி இல்லை, இருந்தாலும் வேறு வழி இல்லை அவருக்கு, பொறுமையாக தான் இருந்தாக வேண்டும்..

தமிழ் மேலும் எவ்வளவோ பேசியும் வந்தவர்கள் இதற்கு வேறு வழியில்லை என்றுவிட்டனர்…

இரண்டு தினம் கடந்திருந்தது தமிழ் வருவது போல் தெரியவில்லை, மனம் முழுதும் வேதனை மட்டும் தான் வாசுகிக்கு…

எங்களுக்கு ஒரு குழந்தை இருந்திருக்கலாமே, எத்துணை கஷ்டம் வந்திருந்தாலும் அவரோடு போராடிருப்பேனே, என்று நினைத்தபடி அமர்ந்திருக்க கண்ணீர் வழிந்தது தானாக…

” ஏய் வாசு, ஏய் உன்னைத்தான் ” என்றாள் வளர்மதி சத்தமாக குரல் உயர்த்தி..

கண்ணை துடைத்து தங்கையை நிமிர்ந்து பார்த்தாள், இவளா எனக்கு தங்கையென்று கூட இப்போதெல்லாம் நினைக்க தோன்றிவிட்டது…

எனக்காக யாரிடமும் சண்டையிட வேண்டாம் ஆனால் ஒரு ஆறுதல் வார்த்தை பேசலாமே என்று நினைக்க நினைக்க வலித்தது…

எப்போதும் தங்கை அழைத்தாள் உடனே ஓடி செல்பவள் இன்று அமர்ந்த இடத்திலிருந்து ” என்ன மதி? ” என்றாள் சோர்வாக…

” என்ன வாசு வந்து என்னனு கேட்க முடியாதோ? அம்மா வந்தா அடி விழும் நியாபங்கம் வச்சிக்கோ ” என்றாள் நக்கலாக…

எப்போதும் அப்படித்தான் வளர்மதி அழைத்தாள் வாசுகி உடனே செல்ல வேண்டும் இல்லையென்றால் காந்திமதி அடி வெளுத்துவிடுவார்…

ஏற்கனவே மனஉளைச்சலில் இருந்த வாசுகியாள்
தங்கையின் பேச்சை கேட்டு கோபம் தலைக்கேறியது, ஆனாலும் கருவை சுமந்து நிற்பவளிடம் மல்லுக்கு நிற்க தோன்றவில்லை, அதனால் அமைதியாக இருந்தாள்…

” என்னடி என் மக எம்புட்டு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கா, நீ என்னவோ மகாராணி கணக்கா உக்காந்திருக்க ” என்றபடி சேலையை சொருகி கொண்டு வந்தார் காந்திமதி…

எந்த நாட்டு மகாராணி, அழுக்கு புடவையும், அழுது வடியும் முககுமாக, பசியும் பட்டினியுமாக, இப்படி பரிதாபமாய், வீட்டில் சேர் இருந்தும் வெறும் தரையில் காலை நீட்டி அமர்ந்து இருந்துருப்பார் என்று யோசித்தவளுக்கு தன்னையறியாமல் கசப்பான புன்னகை வந்து போனது…

அங்கிருந்து வந்தவர் வாசுகி சிரிப்பதை பார்த்ததும், கையில் அகப்பட்ட பொருளை எடுத்து அவளை நோக்கி வீசினார், இதை வாசுகி எதிர்பார்க்கவில்லை சுதாரித்து விலகுவதற்குள், பட்ட காலிலே படும் என்பது போல், பழைய நெற்றி காயத்தை மீண்டும் பதம் பார்த்திருந்தது, அவர் வீசிய பவுடர் டப்பா..

” அம்மா ” என்று அலறியிருந்தாள் வாசுகி, கோபத்தில் செய்ததை உணராமல் போனார் காந்திமதி, இந்த கோபம் எதற்கு வாசுகி சிரித்ததர்க்கா இல்லை அவர் தம்பியை பிரிய நினைப்பதற்க்கா, விடை அவருக்கே வெளிட்சம்….

ரெத்தம் வழிந்தது சிறு கோடாக, ஊசிப்போல் குத்தியது, தழும்பாக மாறி கொண்டு வந்த இடமல்லவா அதனால் வலி அதிகமாக தான் இருந்தது…

” மாமா, மாமா ” என்று சத்தமிட்டப்படி உள்ளே நுழைந்தான் நாதன்…

வளர்மதி ஹாலில் தான் இருந்தாள் ஆனாலும் வந்தவனை அழைக்கவில்லை..

உள்ளே நுழைந்தவன் சுற்றி நோட்டாமிட்டான் எங்கே வாசுகியென்று, இதோ அவன் கண்களில் தென்பட்டுவிட்டாள், ஆனால் மனம் துடித்தது அவளை பார்த்ததும்…

தனது கைபிடிக்கு அழுத்தம் கொடுத்து நடந்து அவளிடம் சென்றவன், தனது கைக்குட்டை எடுத்து அவள் நெற்றியில் வைத்து துடைத்தான்…

” ஒண்ணுமில்லை விடுங்க ” என்றவள் எழுந்து உள்ளே சென்று வெள்ளை துணி ஒன்றால் துடைத்துவிட்டு, ஏற்கனவே இருந்த மருந்தை பூசிக்கொண்டு வெளியில் வந்தாள்..

காந்திமதி கண்டுகொள்ளாமல் ஏதோ புலம்பிக்கொண்டு மகளுக்கு என்ன வேண்டுமென்று கேட்டப்படி சென்றுவிட்டார்…

” சொல்லுங்க என்ன விஷயமென்றாள் ” எங்கோ பார்த்துக்கொண்டு, என்னவோ அவன் முகத்தை பார்த்து பேச சங்கடமாக இருந்தது அன்று அப்படி பேசியதால்…

” இல்லை பொன்னு மாமாவை பார்க்க தான் வந்தேன், அன்னைக்கு பஞ்சாயத்து பத்தி ” என்றான் தடுமாற்றமாக…

” ஹ்ம்ம் ” என்றவள் ஒன்றும் சொல்லவில்லை  “அப்பாக்கு போன் செய்றேன் ” என்றுவிட்டு போனை எடுக்க செல்ல, நாதன் வேண்டாமென்றப்படி சேரிலிருந்து எழும் வேலையில் சரியான பேலன்ஸ் இல்லாமல் தடுமாறிவிட, அவனை தாங்கிபிடித்தாள் வாசுகி…

” தேங்க்ஸ் பொன்னு ” என்றவன் சரியாக நிற்க முற்பட, கைத்தட்டல் ஒன்று பலமாக கேட்டது…

தமிழரசன் சத்தமாக சிரித்தபடி கையை தட்டிக்கொண்டு வந்தான்..

” அட அட அட என்ன சீன் இல்லை, சூப்பர் ” என்றபடி மனைவியை மேலிருந்து கீழ்வரை பார்த்தான்..

” ஹ்ம் சும்மா சொல்ல கூடாதுடி, உடம்பு இன்னும் கிண்ணுனு தான் இருக்கு, அதான் சகலை உரசி பாக்குறான், நீ ரசிச்சு நிக்கிற ” என்றான் தமிழ்..

வாசுகி காதை மூடிக்கொண்டாள் ” மாமா இப்படியெல்லாம் பேசாதீங்க ” என்றவள் இப்போதே தான் செத்துவிட்டாள் என்ன என்று நினைத்தபடி கண்ணீர்விட்டாள்…

” டேய் என்னடா பேசுற ” என்றபடி ஒரு கையால் தமிழரசன் சட்டையை பிடித்தான் நாதன்..

அவன் கையை விலக்கியவன் ” ஹ்ம்ம் கைகால் சரி இல்லைனா கூட மத்தது எல்லாம் நல்லாத்தான் இருக்கு போல ” என்றவன் மனைவியின் அருகில் வந்தான்..

சத்தம் கேட்டு உள்ளே சென்ற தாயும் மகளும் வெளியில் வந்து நடப்பதை வேடிக்கை பார்த்தனர்..

” என்னடி என்கிட்ட கிடைக்காத சுகம் இங்கதான் கிடைக்கும்னு என்னை வேண்டாம் சொல்றியோ ” என்றவன் இன்னும் என்னென்ன பேசினானோ கன்னத்தில் கைவைத்து நின்றான் தமிழ் சில நிமிடத்தில்…

” வெளில போடா ” என்று கர்ஜனையாக நின்றார் கோபால் ” அடடா வாயா வாயா நீதானா என்ற மாமனாரு ” என்றவன் ” இலையில்லை இனி நீ மாமா தான் ” என்றான் மூவரையும் பார்த்தப்படி கேவலமாக ..

” டேய் ” என்றனர் நாதனும், கோபாலும் ஒன்று போல ” என்ன சத்தம், பொண்ணுகளை…. ” என்று இழுத்தவன் முடிக்கவில்லை..

அதற்குள் ” ஹயோ போதும் போதும், இதுக்கு என் மேல பெட்ரோல் ஊத்தி கொழுத்திருக்கலாம், இனி நான் உயிரோட இருக்கத்துல அர்த்தமே இல்லை ” என்றபடி அறைக்குள் ஓடிச்சென்று தாள்பாழ் போட்டிருந்தாள் வாசுகி…

கோபாலும், நாதணும் அறைக்கு வெளியில் நின்று கதவை திறக்க சொல்லி போராட உள்ளிருந்து சத்தமேயில்லை..

மற்ற மூவரும் நடப்பதை ஏதோ நாடகம் பார்க்க வந்தவர்கள் போல் வேடிக்கை பார்த்து நின்றனர், அதிலும் தமிழரசன் மனைவி செத்தால் சாகட்டும் என்பது போல் நின்றிருந்தான்…

எந்த சத்தமும் இல்லாமல் போகவே, நாதன் வெளியில் சென்று ஆட்களை அழைத்து வர, கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்றனர்.

அங்கே ரெத்த வெள்ளத்தில் கிடந்தாள் வாசுகி, கண்ணாடியை உடைத்து அதில் உள்ள உடைந்த பாகத்தை வைத்து இடது கை மணிக்கட்டு அறுபட்டு அந்த அறையில் சில தூரம் ரெத்தம் பரவி இருந்தது…

ஆம்புலன்ஸ் எதிர்பார்க்காமல் கிடைத்த வண்டியில் டவுன் ஆசுபத்திரிக்கு கிளம்பி இருந்தனர் கோபாலும், நாதனும் கூடவே ஊரில் ஒரு சில நபர்களும்…

இப்பொழுதும் அவர்களோடு கோபால் கிளம்பவே இல்லை, அவனது எண்ணமெல்லாம் இப்போது வாசுகி உயிரோடு திரும்பி வர கூடாது என்பது மட்டுமே…

அவனுக்கு அவன் ஆண்மையற்றவன் என்ற பெயர் வந்துவிட கூடாது ஊரில், அதற்கு இனி வாசுகி உயிரோடு இருக்கவேக்கூடாது..

அப்படி இருந்தால் நிச்சயம் கோபால் அவளுக்கு வேறு திருமணம் செய்து வைப்பார் என்பதில் தமிழுக்கு சந்தேகமில்லை…

அவள் மீண்டு வருவாளா?
அவள் செவ்வரளி..