அவள் செவ்வரளி

அத்தியாயம் -2

” வாசுகி கிளம்பு வீட்டுக்கு ” என்றபடி இருந்தான் தமிழரசன்..

அவனை நிமிர்ந்து பார்த்தவள்  ” என்னால முடியாது ” என்றாள் அழுத்தமாக..

தமிழரசனுக்கு கோபம் வந்துவிட்டது ” என்னடி திமிரா ” என்று கேட்டப்படி அவள் கையை திருகினான்…

” டேய் தம்பி நீ ஏன் இவளை கெஞ்சுற, உனக்கு ஆயிரம் பொண்ணு கிடைக்கும் ” என்றார் வாசுகியை முறைத்து கொண்டு…

வலி உயிர் போகிறது பல்லை கடித்து பொறுத்து நின்றாள் வாசுகி, அசையவுமில்லை அழுகவுமில்லை…

வாசுகி இத்துணை அழுத்தமாக நடந்ததேயில்லை, அதுவே தமிழரசனுக்கு கோபம் தலைக்கு ஏறி அவளை ஓங்கி அறைந்தான்..

வாசுகி அவன் கையை விட்டு திடுமென கன்னத்தில் அறைவான் என்று எதிர்பார்க்கவில்லை..

அதனால் அவன் அறைந்ததில் பேலன்ஸ் இல்லாமல் சுவற்றில் மோதி நின்றாள், ரெத்தம் வழிந்தது நெற்றியில்…

தலை கிருகிருக்க அப்டியே தலையை பிடித்துக்கொண்டு கீழே அமர்ந்துவிட்டாள் வாசுகி..

” டேய் தம்பி என்னடா இது ” என்று பதறினார் காந்திமதி..

கோபால் வெளியில் சென்றிருந்தார், ரெத்தம் அதிகப்படியாக வெளியேறியது..

” நீ சும்மா இருக்கா, பொட்ட கழுதை என்ன திமிரு” என்றபடி அவளை எட்டி உதைத்துவிட்டு முடியை பிடித்து இழுத்து தூக்கினான் தமிழரசன்…

” என்னடி வர முடியாதா உனக்கு ” என்று கேட்டு அவளை இழுத்து கொண்டு வெளியே செல்ல போக வீட்டிற்குள் நுழைந்தார் கோபால்..

மகளின் ரெத்தம் கண்டு உடல் கொதிக்கிறது, தமிழரசனை நிமிர்ந்து பார்த்தவர் ” கையை எடுடா ” என்றார் ஆக்ரோசமாக…

” நீங்க செத்த சும்மா இருங்க, அவன் பொண்டாட்டிய கூப்பிட்டு போறான் ” என்ற மனைவியை வெறுப்போடு பார்த்தவர்…

” என் மக நிக்கிற கோலத்துல உன்னை அடிச்சு தூக்கி போடவா வீட்டுக்குள்ள” என்றார்…

” நான் என்ன உங்க மக மாதிரி, கண்டவனையும் வச்சுக்கிட்டா இப்படி நடந்துகிறேன் ” என்ற காந்திமதியை காரி உமிழ்ந்தார் கோபால்..

” இப்போ நீ கையை எடுக்கலை, உன் பொணம் தான் இந்த வாசப்படியை தாண்டி போகும் ” என்ற கோபாலை கலக்கமாக பார்த்தான் தமிழரசன்..

இத்துணை வருடம் எதற்கும் வாய் திறக்காதவர், இன்று வாயை திறக்க முதலில் அலட்சியமாக நினைத்தவனுக்கு, இப்போது நடுக்கமாக இருந்தது..

அத்துணை ஆக்ரோசமாக முகத்தை வைத்திருந்தார் கோபால்..

பாதி மயக்க நிலையில் இருந்தாள் வாசுகி, நிற்க முடியவில்லை…

” மாமா என் பொண்டாட்டி எனக்கு வேணும், சும்மா வம்பு பண்ணாத போய்டு ” என்றவன் கூறும் போது அக்கம் பக்கத்தில் சிலர் வந்துவிட்டனர் கோபால் வீட்டிற்கு…

பாவிப்பைய எப்படி அடிச்சிருக்கான் பாரு என்றபடி சில பெண்கள், தமிழமிடமிருந்து வாசுகியை பிரித்து, பக்கத்தில் இருக்கும் ஆசுபத்திரிக்கு அழைத்து சென்றனர், ஊரார் வண்டியை வைத்து…

தகவல் இப்படியே பரவ மக்கள் நிறைய கூடிவிட்டனர் கோபால் வீடு முன்பு..

ஊர் பஞ்சாயத்து தலைவரும் வந்துவிட ” ஐயா பஞ்சாயத்து கூட்ட முடியுங்களா ” என்றார் கோபால்…

” எதுக்கு கோபாலு பஞ்சாயத்து வரை, ரெண்டு குடும்பமும் உறவு தானே, வீட்ல வச்சு பேசிபாப்போமே ” என்றார் தலைவர்..

” இல்லைங்க என் பொண்ணு அனுபவிச்சது போதுமென்றார் ” கையெடுத்து கும்பிட்டு…

” மாமா சின்ன விஷயத்தை பெருசு பண்ணாதீங்க, ஏதோ கோபத்துல கூட கொறச்சு நடந்து போய்ட்டு ” என்றான் தமிழ்..

” அதானே இப்போ என்ன என் தம்பி இவளை வச்சு வாழ முடியாதுனா சொல்றான் ” என்றவர் சேலை முந்தியை எடுத்து சொருகி கொண்டார் இடுப்பில்…

” அந்த எடுப்பட்ட சிறுக்கி கண்டவனையும் சேர்த்து வச்சுக்கிட்டு இருக்கேன்னு சொல்லியும், என் தம்பி போன போகுதுனு அவ கூட வாழுறேன் சொல்றான் ” என்றவரை ஓங்கி அறைந்திருந்தார் கோபால்…

” வாய தொறந்த இன்னையோட உன்னை வெட்டிவிட்டுடுவேன், பாவி சிறுக்கி  உன்னால தான்டி என் மக வாழ்க்கையே சின்னா பின்னமா போச்சு ” என்றபடி வீட்டு திண்ணையில் அமர்ந்துவிட்டார்…

வளர்மதி வந்து தான் காந்திமதியை பிடித்து கொண்டாள், விடும்மா இனி பேசாதே அடிய தாங்குற வயசா இது என்ற கேள்வியோடு ..

” நீங்க ஆளு ஆளுக்கு ஒன்னும் பேசவேண்டாம், வாசுகி வந்து சொன்னா பஞ்சாயத்து கூட்டலாம் ” என்று தலைவர் கூறிட, அனைவரும் கலைந்து சென்றனர்…

கோபால் தனது எக்ஸ்ல் வண்டியை எடுத்துக்கொண்டு மகள் எந்த கிளினிக்கில் இருக்கிறாள் என்று கேட்டு சென்றார்…

நெற்றியில் அடி என்பதால் மயங்கிருந்தாள், மூன்று தையல் போடப்பட்டிருந்தது, ட்ரிப்ஸ் ஏறிகொண்டிருந்தது, முடிந்ததும் அழைத்து செல்லலாம் என்றார் மருத்துவர்…

அப்படியே அமர்ந்துவிட்டார் கோபால் போன் அடித்து கொண்டே இருந்தது…

விசேஷம் முடிந்து நான்கு நாட்கள் ஆனா பின்பு தான் இந்த களோபரம்…

தமிழரசன் வரவே முடியாதென்று அடமாய் இருக்கிறான், வாசுகி வீட்டிற்கு எப்படியும் வந்துவிடுவாள் என்று நினைத்திருந்தான்…

ஆனால் அவளோ என்ன நடந்தாலும், மருத்துவமனை செல்ல வேண்டுமென்ற முடிவில் இருக்கிறாள்…

தமிழரசனை விட்டு பிரிய நினைக்கவில்லை இப்பொழுது வரை, எத்தனையோ முறை அவனிடம் கெஞ்சிவிட்டாள், ஒரே ஒரு டெஸ்ட் எடுப்போமென்று..

அறவே மறுக்கிறான் அவன், இம்முறை பிடிவாதமாக வர வைக்க நினைக்க அவனோ எப்போதும் போல் வன்முறையில் தான் இறங்குகிறான்…

கோபால் அலைபேசி மீண்டும் அழைக்க இம்முறை ஏற்று காதுக்கு கொடுத்தார் ” அக்கா எப்படிப்பா இருக்கு ” என்ற மகனிடம் ” என் மக சாக கிடைக்குறாப்பா உன் அக்கா வீட்ல நல்லா இருக்கா ” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்…

அவர் மனம் துடித்தது மகனுக்கு இருபத்து ஐந்து வயது ஆகிவிட்டது, அவன் இன்னும் பொறுப்பாக எடுத்து கேட்க, செய்ய மாட்டேன்றானே என்று வேதனையாக இருக்கவும் இப்படி சொல்லிவிட்டார்…

வாசுகியை தமிழ் அடிப்பதுவும், துன்புருத்துவதும் அனைவர்க்கும் தெரியும் தான்…

நான் தான் இப்படி ஊமையாக இத்துணை காலம் இருந்துட்டேன், மகனாவது சரியாக இருக்கலாம் இல்லையா என்ற வேதனை மனிதனை அறுத்தது…

இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என்றுதான், மனிதன் தானே மகளுக்காக இறங்கிவிட்டார்…

மீண்டும் துரை தகப்பனுக்கு அழைக்க, கோபால் அழைப்பை எடுக்கவே இல்லை…

இதுவே வளர்மதிக்கு இப்படி ஒரு பிரெச்சனை என்றால் பார்த்து நிற்பானா சும்மா….

அன்று ஆயிரம் பேர் முன்பு அடிக்கும் பொழுது சட்டையை பிடித்திருக்க வேண்டுமல்லவா..

இரு வயிற்று பிள்ளை தானே அதனால் அவர்களும் ஒதுங்கியே செல்கிறார்கள் என்ற உண்மை சுட்டது தகப்பனுக்கு..

துரைக்கு வாசுகியை பிடிக்கும் தான், ஆனால் தாயின் சொல் தாண்டி அக்காவிற்கு எல்லாம் செய்யும் அளவுக்கு இல்லையென்று தான் சொல்லவேண்டும்…

வாசுகி கண் திறக்கவே மதியம் இரண்டு மணி ஆனது, அதுவரை வீட்டிலிருந்தும் யாரும் வரவில்லை, என் மனைவி எனக்கு வேண்டுமென்று வந்த தமிழும் அவளை காண வரவில்லை…

மகளை வீட்டுக்கு அழைத்து செல்ல அங்கு மீன் குழம்பு வைத்து அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர்..

தமிழரசன் தாய் பாரிஜாதமும் இருந்தார், மகளை அறையில் சென்று படுக்க சொன்னார்..

” ஏய் இந்தருடி, குழம்பு கொறஞ்சிருக்கு போய் சட்டிலிருந்து ஊத்திட்டு வா ” என்றார் காந்திமதி வாசுகியை பார்த்து..

வாசுகிக்கு நிஜமாய் இப்போது எங்கேனும் ஓடிவிடுவோமா என்று இருந்தது..

” நீ உள்ள போய் படுமா, அப்பா சாப்பாடு எடுத்து வரேன் ” என்ற கோபால் மனைவியை முறைத்து கொண்டு சமையலறைக்கு சென்றார்…

உள்ளே சென்று குழம்பு சட்டியை தூக்கி வந்தவர், அந்த மண் சட்டியை அப்படியே அவர்கள் சாப்பிடுமிடத்தில் போட்டு உடைத்தார்…

” எல்லாத்தையும் நாள் வழிச்சு நக்கி தின்னுங்க ” என்றுவிட்டு மகளுக்கு கஞ்சி வைக்க சென்றார்…

கோபாலிடம் இதை யாருமே எதிர்பார்க்கவில்லை, உணவை கொஞ்சம் கூட வீணாக்குவது அவருக்கு பிடிக்காது…

அப்படிப்பட்டவரின் செயல் பயத்தை உண்டு செய்தது, அதனோடு குழம்பு சில மற்றவர்கள் கண்களிலும் தெறித்துவிட்டது…

தமிழரசன் எட்டு வருடத்தில் கோடி முறை வாசுகியை அடித்திருப்பான் கோபால் கண் முன்பே, ஆனால் அதற்கு எல்லாம் அவர் இதுவரை பிரதிபலித்ததே இல்லை..

இம்முறையும் அப்படித்தான் ஏதோ சும்மா பாவளா செய்கிறார், மாலை பேசி அழைத்து சென்றிடுவோம் என்று நினைத்து விருந்தை ஒரு பிடி பிடித்தான்…

இப்போது தான் கோபாலின் தீவீரம் புரிந்தது…

மகளுக்கு கஞ்சி சாதம் கொண்டு அறையில் கொடுத்தவர், அவள் உண்ணும்வரை கூடவே இருந்தார்…

பின் மாத்திரை கொடுத்து உறங்க சொல்ல, அவளோ தந்தையே பார்த்திருந்தாள்..

அந்த கண்கள் என்ன சொல்லுது ” இந்த தையிரியம் என் கல்யாணத்தை தடுப்பதில் இருந்திருக்கலாம் ” என்று சொல்லுதா?

கோபாலின் மனம் துடிக்கிறது ” அம்மாடி அப்படி பார்க்காதடா அப்பாவை ” என்றவர் கட்டிலில் மகளின் கால் மேல் அப்படியே தலையை வைத்து குனிந்துவிட்டார் …

இருவருக்கும் கண்ணீர் நிற்காமல், தந்தையை விலக்க கூட தோன்றவில்லை வாசுகிக்கு, அவரின் கண்ணீர் காலை நனைக்கவும் தான், “போய் சாப்புடுப்பா “என்றாள்..

இதுவரை மகளுக்காக எதுவும் செய்ததில்லை கோபால், எதுவுமே செய்யவிட்டதில்லை காந்திமதி…

அப்போது எதுனாலும் மகளுக்கு நேரத்துக்கு உணவு கொடுக்கிறாளே என்று நினைத்து, எதையும் பெரிது படுத்தவில்லை கோபால்…

இன்னொன்று வாசுகி எதையும் பெரிதாக குறையாக இதுவரையுமே கூறியதில்லை..

தமிழரசன் செய்யும் கொடுமைகள் உட்பட, என்னைப்போல ஊமையாவே என் புள்ளையும் இருந்துட்டாளே, நினைக்க நினைக்க சுத்தமாக முடியவில்லை அவரால் ..

” அம்மாடி தூங்குடா, எழுந்ததும் மூஞ்சில தண்ணிய அள்ளி தெளிச்சுடாத, தண்ணி படக்கூடாது தையல் பிரிக்கிறவரை ” என்றவர் வெளியில் சென்றார்…

வெளியில் வந்தவரை காந்திமதி பிடித்துக்கொண்டார் ” என்ன நெனச்சுட்டு இருக்கீங்க இப்படி சமைச்சதெல்லாம் தூக்கி கொட்டிட்டா என்ன அர்த்தம் ” என்றார் கணவனிடம்….

” இதுக்கு மேல நீ எதுவும் பேசினா, தரைல போட்டு உடைஞ்ச சட்டி, இனி உன் தலைல போட்டு உடையும்னு அர்த்தம் ” என்றுவிட்டு தமிழரசனிடம் வந்தார்…

” கட்டி கொடுக்கும் போதே நீ அயோக்கியன்னு தெரியும், இருந்தாலும் நீ திருந்திடுவ, என் மகள இன்னைக்கு இல்லைனாலும் நாளைக்கு நல்லா வச்சுக்குவன்னு தப்பா நெனச்சுட்டேன் ” என்றார் கண்களை துடைத்தபடி…

” பஞ்சாயத்து கண்டிப்பா கூட்ட தான் போறேன் அதில இந்த வாழ்க்கையை வெட்டிவிட தான் சொல்ல போறேன் ” என்றவரை இடைநிறுத்தி ” மாமா இனி இப்படி நடக்காது ” என்றான்…

” இதை நீ ஆசுபத்திரிக்கு வந்து சொல்லிருந்தா நம்பிருப்பேனோ என்னவோ, நீ இங்க விருந்து தின்னுட்டு இருக்குறதுலே தெரிஞ்சுடுச்சு, என் மக உன் வீட்ல என்ன லெட்சணத்துல வாழ்ந்துந்திருப்பானு ” என்றார்…

தமிழரசனுக்கு வியர்த்தது, வாசுகி நிரந்தரமாக பிரிந்துவிட்டாள், அவனின் இன்னும் பிறந்தநாள் செயல்களும் வெளியில் தெரிந்துவிடுமேன்ற பயம் கூடியது..

” மாமா நான் வாசுகிகிட்ட மன்னிப்பு கேக்குறேன், அவளை என்கூட அனுப்பி வைங்க ” என்றான் முகத்தை புறங்கையால் துடைத்தபடி..

” என் மகளே உன்கூட வரேன்னு சொன்னாலும், நான் விடமாட்டேன் ” என்றவர் ” இனி பஞ்சாயத்துல பேசிக்கலாம், அதுவரை உன் கால் இந்த வாசப்படியை மிதிக்க கூடாது ” என்றபடி
மனைவியை பார்த்தார்..

” அப்படி உன் வீட்டு ஆளுங்க வாசப்படியை மிதிச்சா, உன் கால் அப்பறம் வாசப்படியை மிதிக்க முடியாது” என்றவர் ” வெட்டிபோட்டு வீல் ஷேர்ல உக்காரவச்சிடுவேன் ” என்றார்…

” என்ன தம்பி வார்த்தை அளவுக்கு மீறிதான் போகுது ” என்றார் பாரிஜாதம்..

” இந்தரும்மா உன் வயசுக்கு மரியாதை கொடுத்து இவ்வளவு நேரம் உன்னை ஒன்னும் சொல்லலை, என்னை பேச வச்சா மரியாதை கிடைக்காது” என்றவர் எந்த தயவு தாட்சிணையும் பார்க்கவில்லை…

“வீட்டை விட்டு வெளிய போங்க ” என்றார்..

காந்திமதி வாயை திறக்க ” உன் வாய் திறந்தா நீயும் இவங்க கூட கிளம்பிடு ” என்றார்…

தந்தையும், மகளும் எடுத்திருக்கும் அவதாரம் மற்றவர்களை, ஒருவொரு விடயத்தில் பயம் கொள்ள வைத்தது…

அவள் செவ்வரளி…