அவள் செவ்வரளி

செவ்வரளி -17

அந்த மண்டபம் முழுக்க உறவினர்களால் நிறைந்து இருந்தது, இத்துணை விமர்சையாக ஒரு வளைகாப்பு அந்த பக்கம் இப்பொழுது தான் நடக்கிறது…

நாதன் ஒரு வகையில் அசத்தியிருந்தால், கோபால் மறுபக்கம் நிறைவாக அனைத்தும்  செய்து கொண்டு வந்திருந்தார்…

வாசுகி பிறந்த ஊரில் வரவேற்கப்படாமல் மறுக்கப்பட்ட ஒரே குடும்பம் வாசுகி வாழ்ந்த வீடு மட்டும் தான்…

வளர்மதி வீட்டிற்கு கூட பத்திரிகை கொடுத்திருந்தனர், அவளுக்காக அல்ல வளர்மதியின் புகுந்த வீட்டிற்காக, துரைபாண்டியனுக்கு அழைப்பு இல்லை..

விசேஷத்திற்கு என்னென்ன வாங்கவேண்டும் என்பதை கோபால் ஊர் பெண்களிடம் தான் கேட்டு கொண்டார்..

தன் வீட்டில் ஒருத்தி இருக்கிறாள் என்பது போல் கூட அவர் காட்டிக்கொள்ளவில்லை..

தாய்மையின் பூரிப்பில் தங்க நிலவாக ஜொலித்த மனைவிக்கு, அத்துணை மகிழ்ச்சியாக முதலில் வேம்பு காப்பு அணிவித்தான் நாதன்…

மனைவியின் கன்னத்தில் சந்தனம் பூச , முகம் கொள்ளா பூரிப்பில் பூத்திருந்தாள் பெண்..

கண்ணாடி வளையல் இரு கையிலும் அணிவித்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்தான்..

“அப்பா நானும் அம்மாக்கு “என்று ஓடி வந்தான் மாறன், டேய் நீயெல்லாம் இதை செய்ய கூடாதுடா என்று கூட்டத்தில் ஒருவர் கூறிட, மாறனின் முகம் வாடியது…

மகனின் வாட்டம் கண்டால் வாசுகியின் உள்ளம் தாங்குமா, “என் ராஜா நீங்க பூசுங்க அம்மாக்கு” என்று முடிந்த மட்டும் அமர்ந்தபடியே குனிந்து
முகத்தை காண்பித்தாள்…

மகனுக்கு ஏக குஷியாகி போனது, மனைவி இதை தான் செய்யவாள் என்பதை எதிர்பார்த்தவன் போல், மகனுக்கு எப்படி பூச வேண்டும் என்பதை கூறி கையில் சந்தனத்தை கொடுத்ததான்…

தகப்பன் சொல்லாமலே தாய்க்கு வளையலும் சேர்த்து போட்டுவிட்டான் நெடுமாறன்..

பின் எப்போதும் போல் தாயின் வயிற்றின் அருகில் முகத்தை கொண்டு வந்தவன் ” அண்ணா வைட்டிங் குட்டி எப்போ வருவீங்க ” என்றான்..

எவ்வளவு நெகிழ்ச்சியான உணர்விபூர்வமான தருணமிது பெண்ணவளுக்கு…

மகனை அணைத்துக் கொண்டாள், எவ்வளவு முயன்றும் ஆனந்த பொண்ணீரை தடுக்க முடியவில்லை கண்களில் வழிந்தது…..

அனைத்தையும் நாதனின் முதல் மனைவியின் பெற்றோர்களும் பார்த்து இருந்தனர்..

இவர்கள் திருமணம் எல்லாம் அவர்களுக்கு நாதன் தெரியப்படுத்த மறந்திருந்தாலும், சில நாட்களுக்கு பின் சொல்லிவிட்டான்..

முதலில் பெயரணை நினைத்து கவலை கொண்டவர்கள், அவனிடம் தயக்கமாக என்றாலும் சொல்லிவிட்டார்கள் ” எங்க பெயரணை கொடுத்திடுங்க நான் வளர்க்கிறோம் ” என்று..

” அவன் என்னைக்கும் உங்க பேரன் தான், வீட்டுக்கு வாங்க போங்க, அவனை கூப்பிட்டு கூட போங்க, ஆனால் தங்குறது ரெண்டு நாளைக்கு மேல நீடிக்க கூடாது ” என்றவன் மேலும் ” நான் இல்லாமல் கூட அவ இருந்துடுவா, ஆனால் மகன் இல்லாமல் இருக்க மாட்டா ” என்றான் புன்னகையோடு..

இப்போது நேரிலே அவர்களின் பாசத்தை கண்டவர்கள், பெயரனின் கவலை இனி தேவையில்லை என்று நிம்மதி கொண்டனர்..

வளைகாப்பு இனிதே முடிய முன்பே முடிவு செய்தது போல், தாய் வீடாக பவியின் வீட்டிற்கு அழைத்து செல்ல ஏற்ப்பாடகியது…

முறைக்காக மூன்றாம் நாள் வந்து அழைத்து சென்றிடுவேன் என்று சொல்லித்தான் செய்திருந்தான் நாதன்…

அம்மா கூடத்தான் நானும் போவேன் என்ற மகனை நாதனால் முறைக்க மட்டும் தான் முடிந்தது…

” உனக்கு ஸ்கூல் இருக்கு மாறா ரெண்டு நாள் லீவ் ஏற்கனவே லீவ் போட்டாச்சு ” என்ற தகப்பனிடம் ” அம்மாவும் லீவ் தான் போட்டுருக்காங்க ” என்றவன் அடுத்து ஏடாக்கூடமாக கேள்வி கேட்பதற்குள் ” போய்ட்டு வாடா ” என்றுவிட்டான் நாதன்…

இரண்டு நாட்கள் இரண்டு யுகம் போல் சென்றது நாதனுக்கு..

எப்போதடா மூன்றாம் நாள் ஆகும் என்பது போல் இருந்தவன், விடிந்தும் விடியாமலும் மனைவியை அழைக்க சென்றுவிட்டான்..

“அண்ணா ஆனாலும் நீ பண்ற அலும்பு தாங்கலைடா, அண்ணியை நாங்க என்ன பார்த்துக்க மாட்டோமா” என்று மல்லுக்கு நின்ற தங்கையிடம்…

” ஆயிரம் பேர் பார்த்தாலும் அவ அத்தான் பாக்குற போல ஆகுமா ” என்று கூறியபடி முழுக்கை சட்டையை மடித்துவிட்டு கொண்டான் புன்னகைத்தபடி…

” அதெல்லாம் பிரசவம் முடிஞ்சு தான் அனுப்ப போறோம், நீங்க போய் வீட்ல தலைகானிய கட்டிக்கிட்டு தூங்குங்க மச்சான் ” என்று வந்தான் மாதவன்…

“அப்போ எங்களுக்கு சமைச்சுப்போட உங்க வீட்டம்மாவை அனுப்பி வைங்க ” என்றான் நாதனும் தங்கையை காண்பித்து…

” அட இது நல்லா இருக்கே, தரலாமா கூட்டிட்டு போய்டுங்க ” என்றான் கும்பிடு போட்டு…

” என்ன பவி, மச்சான் இவ்வளோ பெரிய கும்புடு போடுறாரு, என்ன பண்ணின அப்படி ” என்றான் நாதன் புன்னகையோடு…

“இதுவரை ஒன்னும் பண்ணலை, ஆனால் இனி எதுவும் நடந்தாலும் நடக்கும், எதுக்கு டவுன் ஆசுபத்திரில ஒரு பேட் புக் பண்ணி வை ” என்றாள் கையை மடக்கி கொண்டு…

அவளை பார்த்து ஆண்கள் இருவரும் வாய்விட்டு சிரிக்க, தயாராகியே வெளியில் வந்துவிட்டாள் வாசுகி…

” ஜாடிக்கேத்த மூடி தான் ” என்றாள் பவி..

மாதவனின் பெற்றோர்கள் கூட பிரசவம் வரை இருக்கட்டும் என்றனர், முடியவே முடியாதென்று மறுத்துவிட்டு, இருவரையும் அழைத்து சென்றான்…

இரவில் மனைவியை அணைத்து கொண்டு படுத்தவன் ” ஹப்பா இந்த வாசனை இல்லாமல் தூக்கமே இல்லைடி பொன்னு ” என்றான் கூந்தலில் முகம் புதைத்து…

“அப்போ இப்போ தூங்குங்க ” என்றாள் பெண் புன்னகையோடு ” தூங்கணுமா…. ” என்று ராகம் போட்டான் கணவன்…

” நீங்க தூங்க வேணாம், நீங்க இல்லாம எனக்குமே தூக்கமில்லை அதுனால இப்போ என்ன தூங்க வைங்க” என்றவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்து திரும்பி படுத்து கொண்டாள் அவனோடு ஒட்டியப்படி…

“பாப்பா அப்பாவை மிஸ் பண்ணிங்களா ” என்றான் வயிற்றை வருடி ” பாப்பாவோட அம்மாதான் ரொம்ப மிஸ் பண்ணினாங்க சொல்லு குட்டி ” என்றாள் அவன் கையை பிடித்து கொண்டு…

மனைவியை இறுக்கி கொண்டவன், அவளையும் உறங்க வைத்து தானும் உறங்கி போனான்…

” வண்டி இப்போ ஓட்ட வேண்டாம் பொன்னு ” என்றுவிட்டு மனைவி கல்லூரி சென்று வர மாத வாடகைக்கு ஆட்டோ வைத்துவிட்டான்….

மாறனை பள்ளிக்கு அழைத்து சென்று அழைத்து வருவது வெங்கடேசனின் வேலையாகி போனது…

நாள் நெருங்க நெருங்க ஒருவித பதற்றம் தொற்றி கொண்டது நாதனுக்கு, அதனால் மனைவியை கல்லூரி அனுப்பவில்லை தானும் அதிக நேரம் கடையில் இருப்பதில்லை…

வீட்டில் தான் மனைவியோடு அதிக நேரம் அவள் கூடவே,, ஆனால் சரியாக பேசுவதில்லை நிரம்பவே அமைதியாகி விட்டான்…

முதல் மனைவியின் நினைவு அதிகம் ஆக்கிரமித்தது…

அவளை அன்று தவறவிட்டது நெஞ்சை அறுத்தது, அவன் மீது அதில் தவறே இல்லாத போதும்..

கணவன் நடவடிக்கை சரியில்லை, ஏதோ நினைத்து கவலை கொள்கிறான் என்று உணர்ந்து கொண்டாள்..

ஆனால் காரணம் என்னவென்று தெரியாமல் இவள் மனமும் தவித்தது, இரண்டு மூன்று நாட்கள் பொறுத்தவள் அவனிடமே கேட்டு விட்டாள் என்னவென்று …

“ஓ, ஒண்ணுமில்ல அதெல்லாம் இல்லை, நான் நல்லாருக்கேன் ” என்றவன் வார்த்தை கோர்வையே அவளுக்கு என்னவோ இருக்கிறதென்று சொல்லிவிட்டது..

“அத்தான் என்ன ஆச்சு சொல்லு ” என்றாள் பெண் பிடிவாதம் போல்…

“அதான் ஒண்ணுமில்லைனு சொல்றேன்ல ” என்றவன் வழகத்திற்கு மாறாக குரல் உயர்த்தி சத்தமிட்டான்…

சொல்லோன்று செயல் ஒன்றுபோல, வார்த்தை மனைவியிடம் சொன்னாலும், கண்கள் வேறு எங்கோ செல்வதை பார்த்தவளுக்கு புரிந்து போனது இன்னதென்று..

” இப்போ எதுக்கு கத்துற, உன் புள்ளை என்னை உதைக்கிது உன் வாய மூட சொல்லி ” என்றவள் அவன் கைகளை பிடித்து அழைத்து சென்று, முதல் மனைவியின் படத்திற்கு விளக்கை ஏற்ற சொன்னாள்…

கண்கள் கலங்கியது அவனுக்கு, மனைவி சொன்னதை தட்டாமல் செய்தவன், அப்படியே அவளை அணைத்து கொண்டான்…

” பொன்னு பயமா இருக்குடா ” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அழுதேவிட்டான்…

“ஷு என்னத்தான் நீ, எனக்கு நீ தையிரியம் சொல்லுவன்னு பார்த்தா, நீயே இப்படி அழற ” என்றவள் அவன் முதுகை தடவி கொடுத்தாள்…

நிறை மாதத்தில் இருக்கிறாள், எப்படியும் இரு வாரங்களுக்குள் குழந்தை பிறந்துவிடும், இதுவரை அனுபவித்த சுகமான நாட்கள் மறைந்து, பழைய நாட்கள் கண்முன் வர தொடங்கியது…

நாதனின் முதல் மனைவி பூர்ணிமா, நாதன் என்றால் அத்துணை பிடித்தம் அவளுக்கு..

கோபமென்றால் என்னவென்று தெரியாத கணவன் பின்னே பிடிக்காமல் போகுமா என்ன…

அவள் கருவுற்றது தெரிந்த பின் நிரம்பவே தாங்கினான், சிறு வேலை கூட கொடுக்க மாட்டான்…

பூர்ணிமாவிற்கு இயல்புலே கோபம் வராது எப்போதும் சிரித்த முகம் தான்…

பிரசவத்திற்கு இன்னும் பத்து நாட்கள் இருக்கிறது என்பதால், வேலையை கவனிக்க சென்றுவிட்டான் நாதன்…

” எதாவதுனா போன் பண்ணுமா, ” என்று அத்துணை முறை சொல்லிவிட்டு தான் சென்றான்…

எல்லாம் நன்றாக தான் சென்றது, அன்று அவனது தாய் தான் அழைத்தார் ” பூர்ணிமாக்கு பிரசவ வலி போல ஒரு வண்டி புடுச்சு வா ” என்றார்…

மருத்துவமனையில் சேர்த்தாயிற்று, பூர்ணிமா பெற்றோர்களுக்கும் தகவல் சொல்லியாச்சு..

எல்லாரும் பரபரப்பாக காத்து கொண்டு இருக்க, மருத்துவர்கள் வந்தார்கள், “குழந்தை மட்டும் தான் காப்பற்ற முடிந்தது “என்றுவிட்டார்கள்…

எப்படி நடந்தது, எதனால் நடந்தது ஒன்றுமே இன்றுவரை தெரியவில்லை…

எல்லாம் முடிந்தது என்னவென்று யோசிப்பதற்குள்ளே…

மனம் முழுக்க பயம் நாதனை சுற்றி, குழந்தை வரம் எங்களுக்கு இல்லாமலே இருந்திருக்கலாமோ என்ற அளவு பயம் அவன் நெஞ்சை ஆக்கிரமித்துவிட்டது…

“அத்தான் என்னங்க குழந்தை போல, அதெல்லாம் ஒன்னும் ஆகாது ” என்றவள் கணவன் முகத்தை புடவை தலைப்பாள் துடைத்தாள்..

” என்னை விட்டு நீயும் போயிடாத பொன்னு ” என்றவன் அப்படியே சோபாவில் படுத்துவிட்டான்…

கனமான சூழல் ” வார்த்தையின் ஆறுதல் இருவருக்குமே போதாத தருணம் ” கடந்து தான் வரவேண்டும்…

மாலை மாறன் வந்ததும் தாயை கட்டி கொண்டவன், தன் உடன் பிறப்போடு உறவாட தொடங்கிவிட்டான்…

” ம்மா பாப்பா வெளில வந்ததும் முதல என்னை தானே தேடும் ” என்றான் தாயின் வயிற்றில் முகத்தை புதைத்து கொண்டான்…

” ம்மா பாப்பா வந்துட்டா, நீங்க என்னை வீட்ட விட்டு போக சொல்லிடுவீங்களா ” என்றான் தாயை பிரியாமல்…

இதயம் நின்று துடித்தது பெண்ணவளுக்கு, மகன் பதில் சொல்ல வேண்டும் என்பது கூட மறந்து போனது…

சோபாவில் படுத்திருந்த நாதன் தான் ” யாருடா உனக்கு இப்படியெல்லாம் பேச கத்து கொடுக்கிறது ” என்று கேட்டு மகன் முதுகில் பலம் கொண்டு அடித்து விட்டான்…

வீறிட்டு மகன் அழும் சத்தத்தில் தெளிந்தவள் கணவனிடமிருந்து பிரிப்பதற்குள் மேலும் இரண்டு மூன்று அடி விழுந்துவிட்டது மகனுக்கு…

வெங்கடேசணும் வீட்டுக்குள் ஓடி வந்தவர் பெயரணை தூக்கி கொள்ள பார்க்க அவனோ வாசுகியின் பின்னால் சென்று காலை கட்டி கொண்டான்…

” அத்தான் இதுக்குமேல என் பையன் மேல கைய வச்ச, இங்க என்ன நடக்கும் தெரியாது “.

” அப்படியென்ன ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு உனக்கு இவளோ கோபம், அவன் கேட்டா, அப்படியில்லைன்னு சொல்லி புரிய வைக்கணும், இப்படி அடிச்சா குழந்தை பொறந்தா நம்ம இங்க முக்கியமில்லைனு தான் தோணும், உன்னால முடியலையா யாரு இப்படி சொன்னான்னு பொறுமையா கேட்கணும்,உன் வயசுக்கு நீயே ஒரு விஷயத்தை மறக்க முடியாம இருக்கிற, சின்ன பையன் யாரும் சொல்லிருந்த வந்து வீட்ல கேட்க தான் செய்வான், நிதானம் தப்பி போற அளவுக்கு, உனக்கு என்ன கஷ்டம், நான் செத்து போய்டுவேனா, போன போய்ட்டு போறேன் போ, இதுவரை பிள்ளையை கை நீட்டதவன் இப்போ நீட்டுறான, என்னால தான, நான் இல்லாமலே போயிடுறேன் ” என்றவள் மகனை இழுத்து கொண்டு வெளி திண்ணைக்கு சென்றுவிட்டாள்…

மகனை மடியில் படுக்க வைத்து தடவி கொடுத்தவள், சில நிமிடங்களில் நடந்ததை அவன் மூலமாகவும், வெங்கடேசன் மூலமாகவும் கேட்டு தெரிந்து கொண்டாள்…

மாமா ஒரு ஆட்டோ புடிச்சுட்டு வாங்க என்ற மனைவியின் குரலுக்கு தான் வெளியில் வந்தான் நாதன்…

“பொன்னு வேணாடா விடு ” என்றான் மற்றவர்கள் வெளியில் பேசியது இவன் காதுக்கும் விழ தான் செய்தது…

” உன்னை நான் கேட்டேனா, நான் கேட்டேனா இப்போ என்ன செய்யணும்னு, என் பையனை என்ன அடி அடிச்சிருக்க பாரு, எதாவது இப்போ நீ பேசின, என் கோபத்தை இங்கே கொட்டிடுவேன், அமைதியா போய்டு ” என்றவள் மகனை ஆட்டோவில் ஏற்றி தானும் அமர்ந்து கொண்டாள்..

மனைவியின் இத்துணை ஆக்ரோசத்தை எதிர்பார்க்கதவன், அதிர்ச்சியோடு அவனும் ஏறி அமர்ந்து கொண்டான்…

மகன் பள்ளி சீருடை கூட மாற்றவில்லை, தேவையில்லாமல் அவனை அடித்ததை நினைத்து வலித்தது…

ஏதோ ஒரு இயலாமையில் தவித்தவன் மகனின் கேள்வியில் தேவையில்லாமல் கோபம் கொண்டுவிட்டான்…

தவறென்று தெரிகிறது ஆனால் அந்த நேரம் யோசிக்க தோன்றவில்லை…

ஆட்டோ சென்று இறங்கியது காந்திமதி வீட்டின் முன்பு தான், ஆனால் காந்திமதி வீட்டில் இல்லை, அவரது வருகைக்காக எதிர் வீட்டு திண்ணையில் மகனோடு அமர்ந்தாள்..

நாதன் மாமனுக்கு அழைத்து மேலோட்டமாக விடயத்தை கூறியிருக்க அவரும் வந்துவிட்டார்….

மகளை நெருங்கவே அத்துணை பயமாக இருந்தது, முகத்தில் இத்துணை கடுமை காட்ட முடியுமா என்பது போல் இருந்தாள் அவள்…

அவள் செவ்வரளி…