அவள் செவ்வரளி

செவ்வரளி -15

” அடியே வளரு, அந்த சிறுக்கி முழுகாம இருக்காளாம்டி ” என்று மகளின் கதை கடித்தார் காந்திமதி..

” யாரமா சொல்ற ” என்ற வளர்மதியிடம் ” இந்த வீட்ல ஒருத்தி இப்போ ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடினாளே அவதான் ” என்றார்….

” அப்போ குறை வாசுகிட்ட இல்லை,  மாமா கிட்ட தான் இருந்துருக்கும் போலாமா ” என்ற மகளின் மொவயில் இடித்தார் காந்திமதி…

” ப்ச் என்னமா நீ, எதுக்கு அடிச்ச ” என்றாள் தாடையை தடவி ” பின்ன குறை என் தம்பிக்கு தான்னு தெரிஞ்சா எம்புட்டு அசிங்கம் ” என்றார்..

தாயை மேலும் கீழும் பார்த்தவள் ” ம்ம்மா ஊரு உலகத்துக்கு அது இந்நேரம் தெரிஞ்சுருக்கும் ” என்றாள்…

“ஆமா வளரு, வயிறு தெரியவும் தான் எல்லாருக்கும் தெரியுதாம், இன்னைக்கு எங்கேயோ ஆசுபத்திரில நம்ம பக்கத்து வீட்டு சாந்தி பார்த்துட்டு வந்து சொன்னா, முன்னாடியே தெரிஞ்சுருந்த எதுவும் பண்ணிருக்கலாம் ” என்றார்…

தாயை அதிர்ச்சியுடன் பார்த்தாள் வளர்மதி ” என்னமா செஞ்சுருப்ப ” என்ற கேள்வியுடன்…

” ஆமாடி வயிறு நல்ல தெரியுதுன்னா எப்படியும்  அஞ்சு ஆறு மாசம் இருக்கும்,, முன்னவே தெரிஞ்சிருந்தா கருவை கலட்சிவிட்டுருக்கலாம் ” என்ற தாயை வெறுப்பாக பார்த்தாள் வளர்மதி..

” இங்கரே உனக்கு இதுதான் கடைசி, எனக்கு அவளை புடிக்காது தான், அதுக்காக அவ வாழவே கூடாதுனு நினைக்கிற அளவுக்கு என் மனசுல வக்கிரம் இல்ல, நீயும் அப்படி இருக்காத ” என்றாள்  கோபமாக…

” என்னடி புதுசா அக்கா பாசமா ” என்ற தாயை முறைத்தவள் ” பாசமும் இல்ல, பாயசமும் இல்லை, அவளும் ஒரு மனுஷி, விட்டுடும்மா அவ அவ வாழ்க்கையை வாழ்ந்துட்டு போகட்டும், இன்னும் என்னதான் உனக்கு வெறுப்பு அவ மேல ” என்றாள் ஆதங்கமாக, ஒரு கருவையே அழிப்பேன் என்று சொல்லும் அளவுக்கு தன் தாய் கீழ் இறங்குவாள் என்பதை நம்பவே முடியவில்லை அவளால்…

மகளை வித்தியாசமாக பார்த்தவர், ” உன் மாமேன் இப்போ ஜெயில கிடக்குறான், உனக்கு அதைப்பத்தி ஒன்னும் கவலையில்லை அப்படித்தானே ” என்றார் மகளை முறைத்தபடி..

” அது கஞ்சா அடிச்சும், திருட்டு தனமா வித்தும் ஜெயிலுக்கு போனதுக்கு, யார் பொறுப்பாக முடியும் ” என்றாள் வளர்மதி கோபமாக..

” இவ அவன் கூடவே இருந்திருந்தா, என் தம்பி ஏன் இப்படியெல்லாம் பண்ணிருக்க போறான் ” என்றார் விடாமல் தம்பியின் செயலுக்கு துணை போவது போல்…

” ம்ம்மா பிள்ளை தூங்குறான்னு பாக்குறேன், இல்லை கத்துற கத்துல, இனி வீட்டு பக்கம் வரமாட்ட ” என்ற மகளை மிரட்சியாக பார்த்தார் காந்திமதி…

” செத்து பொழச்சு இப்போதான் வாழுறா, அவளை விட்டுடு அவ நமக்கு யாருனு நெனச்சுக்கிட்டு, உன் பொழப்ப பாரு, அவ குழந்தைக்கு எதாவது ஆச்சு, நானே உன்ன போலீஸ்ல புடுச்சு கொடுத்திடுவேன் ” என்றாள் மிரட்டலாக..

பயந்தவர், உன் வீட்டுக்கு வந்தேன் பாரு என்னை சொல்லணும் என்று நினைத்தபடி நடையை தன் வீட்டுக்கு கட்டினார்…

வளர்மதிக்கு பெரிதாக வாசுகியை பிடிக்காது தான், அதற்காக அவள் வாழவே கூடாதென்ற எண்ணமெல்லாம் கிடையாது..

அவளுக்கு தெரிந்தவரை வாசுகி வாயில்லா பூச்சி, அதனால் அவளை வைத்து சில வேலைகள் செய்து கொள்வாள், அவ்வளவே..

இப்போதும் பாசமல்லாம் இல்லை, ஆனால் அவள் இனியாவது நிம்மதியாக வாழட்டுமே என்று நினைத்து கொண்டாள்…

” ம்மா தீபக் வச்சிருந்த குட்டி பாப்பா போல நமக்கும் வர போகுதா ” என்று கேட்டான் மாறன் வாசுகியிடம்…

பவியின் மகள் ரிதன்யாவை தான் கேட்கிறான் அவளுக்கு இப்போது மூன்று வயது..

” ஆமா என் ராஜா போல அழகா வர போகுது ” என்றாள் மகனை கொஞ்சி கொண்டு..

” இங்க தான் இப்போ இருக்குதாம்மா குட்டி பாப்பா ” என்றவன் தாயின் வயிற்றில் கையை வைத்து தொட்டு பார்த்தான்…

” ம்ம்மா பாப்பா கிக் பண்ணுது ” என்று கையை அங்கு அங்கு தொட்டு பார்த்தான் மறுமுறை உதைக்கவில்லை…

வாசுகி ஆறாம் மாதத்தில் இருந்தாள், அவளும் இதுவரை உணரவில்லை குழந்தை ஏன் இன்னும் உதைக்கவில்லை என்று போன முறை மருத்துவரிடம் கூட கேட்டிருந்தாள்..

முதல் பிரசம் என்பதால் சிலருக்கு உணர முடியாது, ஆனால் குழந்தை நல்லா இருக்கு போக போக உங்களால உணர முடியும் என்று சொல்லி அனுப்பி வைத்திருந்தார்…

இப்போதும் மகன் உணர்ந்ததை வாசுகி உணரவில்லை…

” ம்மா ம்மா திரும்ப என் கைய தொட சொல்லுமா ” என்றவனை கொஞ்சி தீர்த்தாள் வாசுகி..

” பாப்பா இப்போ தூங்கிருக்கும், இப்போ நீங்களும் சாப்பிட்டு தூங்குங்க வாங்க ” என்று மகனுக்கு உணவு ஊட்டி உறங்க வைத்தாள்…

வெங்கடேசன் இப்போது வீடு வயல், சில நேரம் கடையும் அவர்தான் பார்த்து கொள்கிறார்….

மாறன் விடுமுறை நாட்கள் என்றால், நாதனை வீட்டில் இருக்க சொல்லிவிடுவார் குடும்பமாக…

ஆர் எக்ஸ் 100 சத்தம் கேட்டதும் புன்னகையோடு எழுந்து சென்றாள் வாசுகி..

ஆம் நாதன் பேலன்ஸ் செய்து தனது வண்டியை பயமின்றி ஓட்டி பழகிருந்தான், ஆனால் மகனை வைத்து கூட ஓட்ட மாட்டான்..

நன்றாக அழுத்தமா பேலென்ஸ் செய்ய முடியுறப்ப வண்டில ஏத்திட்டு போறேன் என்றுவிட்டான்…

இப்போது கடைக்கு வண்டியில் தான் சென்று வருகிறான் பக்கம் தான் என்பதால்…

வாசலுக்கு வந்த மனைவியை பார்வையால் வருடியவன் முகம் அத்துணை சாந்தமாக இருந்தது….

முகம் முழுக்க இப்போது தாடி வைத்திருந்தான், அதுவும் அவனுக்கு நன்றாக தான் இருந்தது…

” அப்பா சாப்பிட்டீங்களா ” என்றான் திண்ணையில் அமர்ந்திருந்த தந்தையிடம்..

” நான் சாப்பிட்டேன் திரு, நீங்க போய் சாப்பிடுங்க” என்றவர் மகனின் வண்டியை உரிய இடத்தில் வைக்க சென்றார்..

” மாறன் கூடவே சாப்பிட்டு இருக்கலாம் தானே பொன்னு ” என்றவன் மனைவியோடு சென்றான்..

தினமும் நாதன் கேட்கும் கேள்வி இது, தினமும் அவனுக்கு புன்னகை மட்டும் பதிலாக தரும் வாசுகி…

இப்போது மனைவி நைட்டி அணிவதில் நாதனுக்கு கொஞ்சம் கூட பிடித்தமில்லை, அதை மனைவியிடம் சொல்லும் அளவுக்கு அவன் வரவில்லை..

” நைட்டி அணியாதே ” என்று சொல்லிவிட்டால் அவளும் அவனுக்காக செய்யாமல் இருப்பாள் தான், ஆனால் அப்படி சொல்லாமல் அவளையே பார்த்திருப்பான்..

இரவில் அவளது மேடிட்ட வயிறை தொட்டு கொண்டு உறுங்குவதில் அத்துணை சுகம் அவனுக்கு, ஆனால் நிதமும் கிடைப்பதில்லை..

உணவு உண்டு முடித்து சோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தவன் ” எவன்டா இந்த நைட்டிய கண்டுபிடுச்சான் ” என்று முனுமுனுத்தான் மனைவி வந்து பக்கத்தில் அமரவும்…

” என்ன சொன்னிங்க ” என்று கணவனை பார்த்து கேட்டால் பெண், தன்னிடம் தான் எதுவும் சொன்னானோ என்று அவளுக்கு சரியாக புரியவில்லை.

” ம்ஹும் ஒண்ணுமில்லை ” என்றவன் டிவியை பார்த்தான்..

மாலை மாறன் பேசியதையும் அவனது செயலையும் கணவனிடம் சொல்லியவள், மகன் புராணம் பாடத் தொடங்கிவிட்டாள் அப்படியே…

மனைவி பேசிய அனைத்தையும் விட்டவன் “இந்த சாக்கு பையில எப்படிடி அவனுக்கு பீல் ஆச்சு” என்றான்..

” என்ன சாக்குப்பை புரியலையே ” என்றாள் கணவனிடம் கேள்வியாக…

மனைவியின் கேள்வியில் திருத்திறுத்தவன், அவள் தன் முகத்தையே பார்த்திருக்கவும் “இல்லை இந்த நைட்டில எப்படி அவனுக்கு பாப்பா உதைச்சது பீல் ஆச்சுன்னு கேட்டேன் ” என்றான் அசடு வழிய சிரித்து கொண்டு…

“உங்களை, இது என்ன சாக்கு பையா உங்களுக்கு” என்றாள் கண்கள் சுருக்கி…

” ஹாஹாஹா, இல்லையா பின்ன ” என்றவன் பேச்சு வாக்கில் தன் தேவையையும் சொல்லிவிட்டான் மனைவியிடம்..

” எனக்கு இதுல பீல் பண்ண முடியலை, உனக்கு நைட்டி தான் வசதியா இருக்கும் தெரியும், ஆனாலும்…. “என்று இழுத்தவன் அதை விடுத்து “நைட்ல என் சட்டை எதாவது எடுத்து போட்டுக்கோயேன் ” என்றான்….

“ம்ஹும் தம்பி தூங்குவான், இடைல முழிச்சு பார்த்துட்டா, என்கிட்ட கேள்வி கேப்பான் ” என்றாள் கணவனை ஒட்டி கொண்டு…

” அவனை இனி அப்பா கூட தூங்க வச்சிடலாம் ” என்ற கணவனை பெண்ணவள் முறைத்து வைத்தாள்…

” அடியே பொன்னு, இதுக்கு ஏன் முறைக்கிற ” என்றவன் விளக்கம் சொன்னான் ” குழந்தை பொறந்திட்டா, பசிக்கும் இந்நேரம்னு இல்லாம அழும், பசியாத்தணும், லைட் எரிஞ்சுட்டே இருக்கும், தம்பிக்கு தூக்கம் கெடும், இதெல்லாம் யோசனை செஞ்சு தான் சொன்னேன் ” என்றான்..

அவனது விளக்கத்தில் புன்னகைத்தவள் சரியென்பது போல் தலையை ஆட்டி வைத்தாள்..

காலையில் வெங்கடேசனிடம் சொல்லிவிட்டான் “அப்பா தம்பிய இனி உங்க கூட தூங்க வச்சிக்கோங்கனு ” அவரும் ” சரி தம்பி ” என்றுவிட்டார்…

அடுத்த நாள் முதல் படுக்கை கட்டிலுக்கு மாறியது இருவருக்கும், முக்கியமாக கணவனின் விருப்பப்படி இரவில் அவன் சட்டையை அணிய பழகி கொண்டாள்…

“அப்பா மாமாவை நாளைக்கு வர சொல்லுங்க வளைகாப்பு, எப்படி செய்யலாம்னு கலந்து பேசிடுவோம் ” என்றான்..

“இதுக்கு எதுக்கு திரு வர சொல்லணும், எப்போதும் ஊர்ல செய்ற போல வீட்ல தானே, என்னென்ன செய்ய போறோம்னு போன்ல தகவல் சொல்லிடலாம், ஏன் மச்சானை அலையவிடணும் ” என்றார் மகனிடம்…

” இல்லைப்பா மண்டபத்தில வைக்கலாம், பெருசா ” என்றான் ” ஏன்யா ” என்றார் புரியாமல்..

“பெருசா செய்யலாம்ப்பா ஒரு ஐநூறு பத்திரிகை அடிக்கலாம், சொந்தம் எல்லாருக்கும் சொல்லி பெருசா பண்ணலாம் ” என்றான்..

ஒரு திருமணம் செய்வது போல் மகன் செய்ய ஆசைப்படுகிறான் போல என்று நினைத்து கொண்டவர், அதற்குமேல் அவனை ஒன்றும் கேட்காமல் ” சரிப்பா ”  என்றுவிட்டார்..

மாலை நேரமே கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான் நாதன், மனைவி கல்லூரி விட்டு வரும் நேரத்திலே….

” மாறன் தாயின் வயிற்றை தடவி கொண்டு இருந்தான் ” குழந்தையின் அசைவை உணர ஆர்வமாக…

அன்று வெங்கடேசன் தன்னுடன் படுக்க சொல்லி அழைக்கவும், வரமாட்டேன் என்று சொன்னவன் பின் என்ன நினைத்தனோ ” எனக்கு டெய்லி முட்டாய் வாங்கி கொடுக்கணுமேன்ற நிபந்தனையோடு அவரோடு சென்றான்…

நாதன் வரவும் ” ப்பா இங்க வா வா ” என்றவன் ” பாப்பா டச் பண்ணுது பாரு ” என்றான் அதிக சத்தமில்லாமல்…

மாறன் உணர்ந்த அளவு ” வாசுகியும், நாதணும் இன்னும் குழந்தையின் அசைவை தெளிவாக உணரவில்லை…

இப்போது ஆறாம் மாதம் கடைசியில் இருந்ததால் நன்றாகவே கை கால்களை அசைத்தது…

வாசுகிக்கும் உதைப்பதை உணர முடியும் ஆனால் கைகளால் தொட்டு உணர முடியவில்லை…

“அட போட உனக்கும் நான் வேணாம், பாப்பாக்கும் அப்பா வேண்டாம் போல, அண்ணன் நீ தொட்ட தான் தொடுது ” என்றான் விளையாட்டாய் மகனிடம்..

கைத்தட்டி சிரித்தான் மாறன் ” ஐ ஜாலி பாப்பாக்கு நான் தான் பிரஸ்ட் ” என்று சொல்லியப்படி…

ஆனால் கணவன் சொன்னதை கேட்டு சாதாரணமாக வாசுகியாள் எடுக்க முடியவில்லை..

என்ன வார்த்தை சொல்லிவிட்டான் என்று நினைத்தவள் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள் கண்கள் கலங்க…

மனைவி அப்படி எழுந்து செல்வதால் நாதன் முகம் சுருங்கியது, ஆனால் ஏன் கண் கலங்கினால் என்று யோசித்தவன், மகனை விளையாட சொல்லிவிட்டு தானும் உள்ளே சென்றான்…

அப்படியொரு அழுகை வாசுகி கேவி கேவி அழுது கொண்டிருந்தாள், பார்த்தவனுக்கு பதறியது…

” பொன்னு என்னடா, ஏன் இப்படி அழற ” என்று தோளை தொட்டவன் கைகளை வேகமா தட்டிவிட்டாள்…

நன்றாக தானே இருந்தாள் என்ன ஆச்சு என்று நினைத்தைவனுக்கு புரியவில்லை ஒன்றும்…