அவள் செவ்வரளி

செவ்வரளி -12

அரையாண்டு பரீட்சை முடிந்து விடுமுறை விடப்படிருந்தது மாறனுக்கு, அதனால் பவியின் கணவன் வந்து மாறனை அழைத்து சென்றிருந்தான் அவன் வீட்டிற்கு…

மகனும் போகிறேன் என்று சொல்லவும் இருவரும் மறுக்கவில்லை..

வாசுகி கல்லூரி சென்று வந்தால் எரிச்சலாக இருக்கும்..

நாதனும் கடைக்கு சென்றுவிடுவான், வெங்கடேசன் இப்போதெல்லாம் வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை..

வீட்டிற்கு வந்தால் தனியாக இருக்க வேண்டும், சமையல் முடித்துவிட்டு கல்லூரி வேலைகள் ஏதேனும் இருந்தாலும் விரைவிலே முடித்து விடுவாள்..

தொந்தரவு செய்ய தான் மகன் பக்கத்தில் இல்லையே..

மகன் ஊருக்கு சென்று இரண்டு நாள் தான் ஆகியிருந்தது..

அதுவே அவளுக்கு இரண்டு மாதம் போல் தோன்றியது..

போய் அழைத்து வந்துவிடுவோமா என்று கூட நினைத்துவிட்டாள்..

ஆனால் மகன் அங்கு மகிழ்ச்சியாக இருப்பதை கெடுக்க மனமில்லை…

என்னென்னவோ செய்து நேரத்தை நெட்டி தள்ளி கொண்டு இருந்தாள் பெண்…

எட்டு மணிப்போல் நாதன் வந்து விட்டான், வந்தவன் மனைவியிடம் ஒரு கவரை கொடுக்க, என்னவென்று பார்த்தவளை ஊன்றி பார்த்தவன்..

” அதில ரெண்டு பொட்டலம் தனியா இருக்கு , ஒன்னு படத்துக்கு போடு ” என்றான் முதல் மனைவியையும் தாயின் புகைப்படத்தையும் சுட்டிக்காட்டி…

” இன்னோனு உன் தலைல வை ” என்றுவிட்டு சென்றான் முகம் அலம்ப…

இதற்கு முன்பு வாங்கி வந்தபோது அவள் அப்படியே அங்கிருந்த படங்களுக்கு போட்டுவிட்டதால் இப்போது தனியே வாங்கி வந்திருந்தான்..

கணவன் சொல்லி சென்ற விதத்தில் சிரிப்பு தான் வந்தது ஆனாலும் மறுக்காமல் அவன் சொன்னபடியே செய்தாள்…

நாதன் அறைக்கு சென்றதும், சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு அறைக்கு வந்தாள் பெண்..

அவள் வரும் நேரம் படுத்திருந்தான் நாதன், அவன் பொருட்களை ஒதுக்கீயவள் அவன் அருகில் படுத்தவளை திரும்பி அணைத்தான் நாதன்….

அவனை திரும்பி பார்த்தவள் அப்படியே இருந்தாள் ” நாளைக்கு காலேஜ் இருக்கா ” என்றான் மனைவியின் கூந்தலை வாசம் பிடித்து…

” ஏன் இருக்கும்னு தெரியாதா ” என்றாள் பெண் “தெரியும் தான், இருந்தாலும் கேட்டேன் ” என்றவன் மேலும் அவளோடு ஒட்டினான்…

இருவருக்கும் பெரிதாய், நடுக்கம், வெட்கம் படபடப்பு பயமெல்லாம் இல்லை, ஆனால் தடுமாற்றம் இருக்க தான் செய்தது…

கால்கள் இழந்ததால் தன்னால் முடியுமா என்ற சிறு தடுமாற்றம் நாதனிடம், இயல்பாக இணங்க முடியுமா என்ற தடுமாற்றம் வாசுகியிடம், அவ்வளவு தான்…

இருவருக்குமே இப்போது தாம்பத்தியம் மீது பெரிய ஆசை எல்லாம் இல்லை, ஆசை கொட்டிக்கிடந்த காலத்தில் இருவருமே அதை சரியாக வாழ முடியாமல் போயிற்று..

ஆனால் உடலின் தேவை இருக்க தானே செய்யும், தேவையை தாண்டிய ஒரு நிறைவான இன்பம் இருவருக்கும் இருக்க செய்தது..

வாசுகியின் உடல் அன்றுபோல், இன்று இறுகவில்லை, மாறாக கணவன் முடியலை என்றபோது தாங்கி கொண்டாள்…

” பொன்னு ” என்று அவள் நெற்றியில் இதழ் ஒற்ற தானும் அவன் கேசத்தை ஒதுக்கி நெற்றியில் இதழ் பதித்தாள்..

விடியும்வரை ஒருவர் அணைப்புக்குள் மற்றவர் உறங்கி இருந்தனர்..

வாசுகி எப்போதும் போல் எழுந்து கொண்டாள், வேலையெல்லாம் முடித்துவிட்டு கல்லூரிக்கு நேரமாகவும் கிளம்பிவிட்டாள்..

இன்னும் நாதன் எழவில்லை, அறைக்குள் நுழைந்தவள் அவனுக்கு தேவையானதை எடுத்து பக்கத்தில் சேர் போட்டு வைத்துவிட்டு, அவனை தட்டி எழுப்பினாள்…

” என்ன ஆச்சு பொன்னு ” என்று கண் கசக்கியவனை ” நேரமாச்சு எழுந்து கடைக்கு கிளம்புங்க, நான் காலேஜ் கிளம்புறேன், சாப்பிட்டு போங்க ” என்று விட்டு நகர்ந்தாள்…

” நீ சாப்டியாடி ” என்றவன் குரலுக்கு ” ஹம்ஹ்ம் ” என்று சிரித்துவிட்டு சென்றாள்…

மாலை மனைவியை அழைக்க தானே சென்றுவிட்டான் கல்லூரிக்கு..

வாசுகி வண்டியில் தான் கல்லூரி செல்வதால் இவன் பஸ்சில் சென்றிருந்தான்…

கல்லூரி நேரம் முடிந்ததும், மனைவிக்கு அழைத்தும் சொல்லிவிட்டான், நான் வெளியில் நிற்கிறேன் என்று…

முதலில் பயந்தவள்,” என்னாச்சு ” என்று படபடத்தாள் ” பொன்னு ஒண்ணுமில்லைடா சும்மா பாக்கணும் தோணுச்சு ” என்றான்…

” பயந்துட்டேத்தான், சரி இதோ வண்டி எடுத்துட்டேன் வரேன் ” என்றுவிட்டு வைத்தாள்…

” நான் வண்டில தான வந்திருக்கேன், நீங்க வீட்ல ரெஸ்ட் எடுத்திருக்கலாம்ல ” என்ற மனைவியிடம் ” இருந்திருக்கலாம் ஆனால் இப்படி பொண்டாட்டி கூட வண்டில வந்திருக்க முடியாதே ” என்றுவிட்டு சிரித்தான்…

” ரொம்பத்தான் ஏதோ நேத்து தான் கல்யாணம் ஆனாமாதிரி ” என்றாள் முகத்தை சுழித்து..

கண்ணாடி வழியே அதை பார்த்தவன் ” ஏண்டி நேத்து கல்யாணம் முடிஞ்சுருந்தா, தான் பொண்டாட்டிய பார்க்க தோணனுமா ” என்றான் பதிலுக்கு..

இவன் புதிய நாதன், கண்ணாடி வழியே அவனை பார்த்தவள், ஒன்றும் சொல்லவில்லை..

வீட்டிற்கு வந்ததும் கணவனுக்கு டீ போட்டு கொடுத்தவள், அடுத்தடுத்த வேலையில் இறங்கிவிட்டாள் …

இவளை பார்க்க வந்தா இவ நம்மளை தவிர எல்லாம் பார்க்கிறா என்று நினைத்தபடி சோபாவில் படுத்து உறங்கிவிட்டான் நாதன்…

வாசுகி உணவு கொண்டு வந்து வைக்கும் சத்தத்திற்கு தான் கண் விழித்தான்…

உணவோடு அவனிடம் பேச்சு கொடுத்தாள், ” அத்தான் உங்க வண்டிய ஓட்டி பார்க்கலாம் தானே ” என்று அவன் முகத்தை பார்த்து தான் கேட்டாள்…

அவள் முகத்தை பார்த்தவன் ” என்னால முடியாது பொன்னு ” என்றான் வேதனையாக…

” உடனே ஓட்ட சொல்லலை, சும்மா வண்டிய தள்ளி பார்க்கலாம்ல பேலன்ஸ் செய்ய முடியுமா, முடியாதானு தெரியும்ல, முயற்சி செய்யாம, முடியாதுனு ஏன் முடிவு செய்யணும் ” என்றாள்…

மனைவி சொல்வது நியாயம் தான் இருந்தும் அவனுக்குள் பயம் இருக்க தான் செய்தது, அவன் பொன்னு ஆசையாக ஒன்று கேட்கிறாள் செய்து பார்ப்போமேன்று நினைத்து கொண்டான், ஆனால் அவளிடம் சொல்லிக் கொள்ளவில்லை…

இருவரும் நிறைய மனம் விட்டு பேசினார்கள், வீட்டில் யாருமில்லை இருவர் மட்டுமே அதனால் பேச்சு நன்றாகவே வளர்ந்தது…

சிறு சிறு அனைப்பும், முத்தமும் சாதாரணமாகவே கொடுக்க பழகிருந்தான் நாதன்…

அதை ஏற்க பழகி கொண்டவளால் திரும்ப கொடுக்க இன்னும் பழக முடியவில்லை..

அவன் செயலுக்கு புன்னகைக்க கற்றுக்கொண்டாள்..

விடுமுறை முடிந்து மகனும் வந்துவிட இப்போது தான் வாசுகி முகத்தில் உயிரோட்டமான புன்னகையை காண முடிந்தது…

” ம்மா ” என்று தொடங்கிய மாறன் கதை கதையாக சொல்லி கொண்டே சென்றான்…

அனைத்திற்கும் புன்னகைத்து கேட்டு கொண்டு, மகனுக்கு முத்தம் கொடுத்தும், அவன் கொடுப்பதை பெற்றும் கொண்டும் இருந்தவளை ரசித்து கொண்டு இருந்தான் திருமேனிநாதன்…

சிறிது நேரம் பொறுத்தவன் பின் எழுந்து வந்து மனைவியின் தோளில் கைபோட்டு அமர்ந்தான்..

அவனை திரும்பி பார்த்து முறைத்தவள்,” பையன் இருக்கான் ” என்றாள்..

” அடியே சும்மா இப்படி பக்கத்துல தான உக்காந்தேன் ” என்றவனை ” எழுந்து போய் அங்க உக்காருங்க ” என்றாள்…

ஏண்டி பையனுக்கு கொடுத்ததை பங்கு கேட்டா வந்தேன் ” என்றான் முகத்தை கோபமாக வைத்து கொண்டு..

தான் பேசுவதை தாய் கவனிக்கவில்லை என்றதும் , வாசுகி இரு கன்னத்தை பிடித்து தன்னை நோக்கி திரும்பியவன் ” ப்பா நீங்க போய் தூங்குங்க ” என்றான் மாறன் தகப்பனிடம்….

” டேய் ” என்று பல்லை கடித்தான் நாதன், மகன் சொல்லிய விதத்தில் அப்படியொரு சிரிப்பு வந்தது வாசுகிக்கு….

” ஏன்டா அம்மா மட்டும் போதுமா அப்பா வேண்டாமா ” என்றான் மகனிடம்,..

” வேணா, வேணா இப்போ வேணா, அப்பறம் தான் வேணும் ” என்றான் தாயை தோளோடு அணைத்து கொண்டு….

” ஏன் அப்பறம் மட்டும், போடா உனக்கு வேண்டாம் அப்பா ” என்றுவிட்டு எழுந்து அறைக்கு சென்றான்…

என்னவோ இருவருக்குள்ளும் தான் இணையவே முடியவில்லை என்ற ஏக்கம் அவனுக்குள்…

மகன் வாசுகியிடம் ஒட்டிக்கொண்டது மகிழிச்சி என்றாலும், அதில் தன்னை வேண்டாமென சொல்வது என்னவோ செய்கிறது…

” கண்ணா அப்பா எப்போதும் நமக்கு வேணும் தானே, ஏன் இப்போ வேண்டாம் சொன்னிங்க ” என்றாள் வாசுகி…

” ம்மா நான் பேசினேன்ல உங்ககூட ” என்றான் மகன்…

” அப்பாக்கும் உங்க கூட பேசணும் தானே ” என்றாள் வாசுகி…

என்னவோ மகனுக்கு அழுகை வந்துவிட்டது, தவறு செய்துவிட்டோமோ என்று….. ” ஷு என் ராஜா அழலாமா, வாங்க அப்பாட்ட போவோம் ” என்று மகனை தூக்கி கொண்டு அறைக்கு சென்றாள்…

நாதன் கட்டிலில் கண் மூடி அமர்ந்திருந்தான், சின்ன விடயத்திற்கு கணவன் சிறுபிள்ளை தனமாக செய்வதுபோல் தோன்றியது வாசுகிக்கு …

அவனின் ஏக்கங்கள் அவளாலும் முழுதாக உள் வாங்க முடியவில்லை..

இருவரும் உள்ளே வந்தது தெரிந்தும் அப்படியே இருந்த நாதனை ரெண்டு அடி போட்டால் என்ன என்று தோன்றியது..

பின்னே மகன் அழுகை சத்தம் கேட்டும் அப்படியே இருப்பவனை வேறு என்ன செய்வது…

மாறனை கணவன் மடியில் அமர்த்திவிட்டு அப்படியே அவன் பக்கத்தில் அமர்ந்தாள்…

” அப்பா வேண்டாம் சொன்ன இப்போ மட்டும் என்னடா ” என்றான் மகனை அணைத்து கொண்டு…

” அப்பா வேணும், தம்பி பாவம் தானே ” என்றான் மாறன்…

” அத்தான் அவன் சின்ன பையன், அவன்கூட போய் இப்படியா ” என்றாள் வாசுகி கணவனை முறைத்து…

” போடி, உனக்கு மட்டும் என்ன, பையன் வேணும் அவன் அப்பா வேண்டாம் ” என்றான் அவளிடமும் வம்பு பேசி…

” அப்பா வேண்டாம்னு நான் எப்போ சொன்னேன் ” என்றாள் இடுப்பில் கைவைத்து…

” பின்ன பக்கத்துல உக்காந்ததுக்கு எழுந்து போக சொன்ன ” என்றவன் மகனுக்கு தட்டி கொடுத்தான்…

அழுகையோடு உறங்கி போயிருந்தான் மாறன், ” பையன் பக்கத்துல இருக்கும் போது ஒட்டி ஒரசிக்கிட்டா இருக்க முடியும் ” என்றாள்…

அவளை திரும்பி முறைத்தவன் ” அப்படியே நீ ஒட்டிக்கிட்டாலும், போடி எதாவது சொல்லிட போறேன் ” என்றுவிட்டு மகனை கட்டிலில் படுக்கவைத்தான்…

” போங்க உங்க ரெண்டு பேருக்குமே நான் வேண்டாம் தான், உனக்கு அவன் போதும், அவனுக்கு நீ போதும் ” என்றவனை அமர்ந்தவாக்கில் அப்படியே அணைத்து கொண்டாள் வாசுகி…

” எங்க ரெண்டு பேருக்குமே நீங்க வேணும், சும்மா இப்படியெல்லாம் நினைக்க கூடாது, நம்ம ஒன்னும் இப்போதான் பருவ வயசுல இல்லை, சின்ன விஷயம் கூட புரியாம நடந்துகிறதுக்கு ” என்ற மனைவியை இறுக்கி கொண்டான் நாதன்..

” எனக்கு தெரியுது பொன்னு ஆனால் என்னவோ என்னை நீங்க தள்ளி வைக்கிற போல தோணுதுடி ” என்றான்..

” ஆமா ஆமா உங்களை தள்ளி வச்சிட்டு, நாங்க வேடிக்கை பாக்குறோம், மாறன் கூட பரவாயில்லை, உங்கள சமாளிக்கிறது தான் பெரிய போராட்டமா இருக்கு ” என்றவளை மேலும் ஒட்டிக்கொண்டான்…

” உங்களால பையன் சாப்பிடாம தூங்கிட்டான் ” என்றாள் வாசுகி கணவனை குறையாக..

” சாக்லேட் இருக்குனு சொல்லு உடனே எழுந்துடுவான் ” என்றான் மனைவியிடம் நக்கலாக..

உங்களை என்றவள் ” போங்க போய் சாப்பாடு எடுங்க நான், தம்பிய தூக்கிட்டு வரேன் ” என்றாள்…

உணர்வு போராட்டம் என்பது பெண்களுக்கு மட்டும் தான் என்றெல்லாம் இல்லை, ஆண்களுக்கும் நிறையவே இருக்கும், அதுவும் இதுபோன்ற விடயத்தில் நிறையவே இருக்கும், அதை கையாளும் பக்குவம் தான் சரியாக இருக்காது..

மனம் விட்டு பேசினாலே தம்பதிகளின் நிறைய பிரெச்சனைக்கான வழிகள் தெரிந்துவிடும்…