அவள் செவ்வரளி

செவ்வரளி -11

” தாத்தா எங்க போறோம், எங்க போறோமேன்று ” கத்திக்கொண்டே வந்தான் மாறன், கோவிலுக்கு செல்ல எடுத்திருந்த வேனில் அமர்ந்து…

வாசுகி அமைதியாக அமர்ந்திருந்தாள், என்னவோ பயமாகவே இருந்தது…

அவள் பயத்திற்கு காரணம் இருக்கிறது, அவர்கள் செல்லும் கோவில் தமிழ் ஊருக்கு பக்கத்து ஊர் தான்…

இவர்கள் ஊரை சுற்றியுள்ள சிறப்பு மிக்க கோவில் தளம் அது ஒன்று தான், அதனால் தான் அங்கு செல்கின்றனர்…

பெரிதாக யாரும் இல்லை இவர்கள் குடும்பத்தில் உள்ள நால்வர், கூடவே கோபால், நாதனின் தங்கை குடும்பம் அவ்வளவு மட்டுமே…

பவியின் முதல் மகனுக்கு ஏழு வயது, அவன் தான் டேய் மாற ” உங்க மம்மி, டாடிக்கு இன்னைக்கி மேரேஜ்டா ” என்றான் எல்லாம் தெரிந்த பெரிய மனித தோரணையில்…

“அம்மா ” என்று எழுந்த மகனை பிடித்து கொண்டாள் பவி…

என்னவோ அண்ணி சரியில்லையென்று தோன்றியது அவளுக்கும்…

” தீபக் ” சும்மா இரு என்று மகனையும் அதட்டினாள், ” ம்மா அவனுக்கு தெரியலை சொன்னேன் ” என்றவன் முகத்தை சுழித்தான்…

சாதாரண நேரமாக இருந்தால் மகன் முதுகில் பவி நாலு அடி போட்டிருப்பாள்..

தீபக் அப்படித்தான் இந்த ஏழு வயதிலே பத்து வயது குழந்தைக்கான மெச்சிரிட்டியில் நடந்து கொள்வான்..

அதற்காவே பவியிடம் நன்றாக வாங்கிகொள்வான்..

கோவில் வந்து இறங்கியதுமே வாசுகி மனம் படபடத்தது, என்னவோ தவறாக நடக்க போகிறது என்ற எண்ணம் அவளுள்…

தானே சென்று நாதனின் கரங்களை பற்றி கொண்டாள் ” என்ன ஆச்சு பொன்னு ” என்றவனின் கேள்விக்கு, பதிலே பேசாமல் நின்றாள்..

அவளது மனம் புரிந்ததோ என்னவோ, அமைதியாக கரங்களை அழுத்தி கொடுத்தான்..

அந்த அழுத்தம் முதல் முறை அவன் கொடுத்த அதே நம்பிக்கையை இப்போதும் தந்தது…

வாசுகி தமிழ் திருமணம் முறிகப்பட்டு, இரண்டு வாரம் கடந்திருக்கும்..

இந்த இடைப்பட்ட நாட்களில் காந்திமதி பேசும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது…

அன்றும் கோபால் வெளியில் சென்றிருக்க தனது பொன் வாயை திறந்துவிட்டார் காந்திமதி…

” புருஷன் தேடி அலையிரவனு முன்னமே தெரியாம போச்சே, நானே என் தம்பி வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேனே ” என்றவர் சொன்ன வார்த்தையில் வாசுகி என்னும் சிலைக்கு உயிர் வந்தது…

உடலும், மனமும் இப்போது தான் தேறிவர, ஆறுதலாக இல்லையென்றாலும், இப்படி கொடுக்காக கொத்தாமல் இருந்தால் பரவாயில்லையே என்று தோன்றியது…

அதனோடு அவர் மேலும் ” எத்துணை புருஷன் தேடி போனாலும், இவ வயித்துல ஒரு புழு பூச்சியும் வைக்காது ” என்றார் ஆவேசமாக…

மனம் இயலாமையில் தாங்க முடியா வலியை கொடுத்தது, இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாதவள், எழுந்து காந்திமதி முன்பு சென்று நின்றாள்…

வாசுகி இப்படி எழுந்து வந்தது காந்திமதி வாயை மேலும் பேச தூண்டியது…

இன்னும் என்னவெல்லாம் பேசினாரோ ” நீ பொம்பளை தானே ” என்றாள் வாசுகி நிதானமாக…

” யாரைடி என்னடி பேசுற ” என்று அடிக்க வந்தவரை ” கை மேல பட்டுச்சு, பதிலுக்கு என் கையும் பேசும் ” என்றாள் அதே நிதானமாக…

” என்னக்கா அம்மாட்ட இப்படி பேசுற ” என்று அறையிலிருந்து வெளியில் வந்தான் துரைப்பாண்டியன்…

” அடடா வாங்க துரை, நீங்க இவளோ நேரம் இங்கதான் இருந்திங்களா ” என்றாள் நக்கலாக…

” அதை விடுக்கா அம்மா இப்படித்தான் எதாவது பேசும்னு தெரியாதா, நீயும் ஏன் கூட பேசுற, விட்டு வேற வேலைய பாரு ” என்றான் பெரிய மனிதன் போல…

” இப்போ துரை என்ன சொல்றிங்க, உங்க அம்மா என்னை எது பேசினாலும் நான் வாங்கிக்கணும் சொல்றிங்களா ” என்றாள்…

மனிதர்களின் சுயங்கள் வெளி வரும் நேரம் சரியான சூழ்நிலை தானே, இப்போது துரையின் சுயம் வெளிச்சமானது..

” இத்துணை வருஷம் அப்படித்தானே இருந்த, இப்போமட்டும் என்ன குரல் உயத்துற ” என்றான்…

” நீங்க குட்ட குட்ட, என்னை குனிய சொல்றிங்களா இல்லை அப்படியே உங்க கால் அடில விழ சொல்றிங்களா ” என்றாள் மனதின் வலியை தாங்க முடியாமல் கண்ணீரோடு…

” உன்னை யாரும் இங்க குனிய சொல்லலை, அமைதியா போ அம்மா என்ன பேசினாலும், இனி இந்த வீட்ல நாங்க தான் உன்னை பார்க்கணும் ” என்றான் முகத்தை சுழித்து…

இவனா அன்று எனக்காக பேசியவன் என்று தோன்றியது வாசுகிக்கு…

அன்று பேசினான் தான் துரை வாசுகிக்காக, ஆனால் இப்போதெல்லாம் காந்திமதி போன் செய்து “அவளை இந்த வீட்டிலே வச்சிட்டா, உனக்கு சொத்தை உங்க அப்பன் முழுசா கொடுக்கமாட்டான் ” என்று சொல்லி சொல்லி துரையிடம் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருந்த பாசத்தையும் இல்லாமல் செய்திருந்தார் காந்திமதி…

” என் பொண்ணை இந்த வீட்ல எந்த நாயும் பார்க்க வேண்டிய அவசியமில்லை ” என்ற குரலில் அனைவரும் திரும்பி பார்க்க, அங்கு கோபால் அமைதியாக சேரில அமர்ந்து கொண்டிருந்தார்…

கடைசியாக மகன் பேசியது மட்டும் தான் அவர் காதில் விழுந்தது, பதில் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார்…

” சும்மா நாய்ன்னு எல்லாம் சொல்லாதப்பா, கடைசிவரை உன் பொண்ணை மட்டுமில்லை, உன்னையும் நான் தான் பார்க்கணும் ” என்றான் துரை நெஞ்சை நிமிர்த்தி..

” அடி செருப்பால நாயே, சோத்துக்கு வழி இல்லைன்னா செத்தாலும் சாவேனே தவிர, உன் கையை எதிர்பார்க்கமாட்டேன்டா, உன் ஆத்தா கொடுக்கிற தையிரியம், அதான் இந்த ஆட்டம் போடுற ” என்றவர் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தார்…

” அம்மாடி நீ உள்ள போ” என்றவர் ” அப்பா எது செய்தாலும் உன் நல்லதுக்கு தான்னு நீ நம்பணும் ” என்றும் சொல்லிட, வாசுகிக்கு இன்னதென்று புரியவில்லை, இருந்தும் தலையை அசைத்து கொண்டாள்…

இரண்டு மணி நேரம் கடந்து, வெங்கடேசணும் திருமேனிநாதானும் கோபால் வீட்டில் இருந்தனர்…

பேச்சு வார்த்தை தொடர்ந்தது, ஒன்றல்ல இரண்டல்ல, மதிய வேளையில் தொடர்ந்தது மாலை ஆனபின் தான் நின்றது…

நாதன் எத்துணை மறுத்தும், வெங்கடேசன் பிடிவாதமாக என் மருமகளை வீட்டுக்கு கூப்பிட்டு வா என்றுவிட்டார்…

அவருக்கும் இத்துணை வருட பாரம், மகன் இப்படி தனித்தே இருந்துவிடுவானோ என்று அவர் கண்ணீர் சிந்தாத நாட்கள் தான் உண்டா..

காந்திமதியும், துரையும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து கொண்டனர் நடப்பதை நம்ப முடியாமல்…

” சரி மாமா, கொஞ்ச நாள் போகட்டும் நான் பொன்னு கிட்ட பேசிட்டு ஒரு முடிவுக்கு வரேன் ” என்று இறங்கி வந்தான் நாதன்..

இடையில் கடை பையனுக்கு அழைத்து மகனை பள்ளியிலிருந்து அழைத்து வந்து கடையில் வைத்துக்கொள்ள சொல்லியிருந்தான்..

” ஐயா திரு, மச்சான் இவளோ சொன்ன பிறகும் பேச்சு வார்த்தை என்ன நீ நடத்த போற, போய் பாப்பாவை கூட்டி வா கிளம்புவோம் ” என்றார் வெங்கடேசன்…

நாதனுக்கு தூக்கி போட்டது ” ப்பா அப்படியெல்லாம் செய்ய முடியாது ” என்ற மகனை வாஞ்சையாக பார்த்தவர்…

” ரெண்டு பேரும் முறையா கல்யாணம் பண்ணிக்கனும்னு, எனக்கும் ஆசைதான், ஆனால் அதைவிட பாப்பா உயிர் முக்கியம் திரு, இங்கிருந்தா இன்னும் அவளை பேசியே கொன்னுடுவாங்க ” என்றார்…

” ப்பா அதெல்லாம் ஒன்னும் ஆகாது ” என்ற நாதனின் முன் கைகள் கூப்பி எழுந்து நின்றார் கோபால்…

” ஐயா நீ அன்னைக்கு கேட்ட போதே என் மகளை உனக்கு நான் கட்டி கொடுத்திருக்கணும், அதுக்காக இப்போ என் மகளுக்கு வாழ்க்கை கொடுக்க மாட்டேன்னு சொல்லதையா ” என்றார்..

அவர் கையை விலக்கியவன் ” என்ன மாமா வாழ்க்கை கொடுக்குறேன், அது இதுனு சொல்லப்போன்னா, என்னை கட்டிக்கிட்டா பொன்னு தான் எனக்கு வாழ்க்கை கொடுக்கணும் ” என்றவன் வாசுகி அறையை எட்டி பார்த்தான்…

” நான் பொன்னு கிட்ட பேசிட்டு வரேன் ” என்று பொதுவாக சொல்லிவிட்டு அவள் அறைக்குள் சென்றான்…

கீழே தரையில் அமர்ந்து அப்படியே தூங்கியிருந்தாள் பெண்..

அவள் பக்கத்தில் சென்றவன், அறைக்குள் கிடந்த சேரை எடுத்து போட்டு அமர, அந்த சத்தத்தில் கண் விழித்தாள் வாசுகி…

அவள் முகத்தை பார்த்தவன் தொண்டையை செருமினான்..

அவனிடம் வாயே திறக்கவில்லை பெண், இரு கால்களையும் கட்டிக்கொண்டு அதில் முகத்தை புதைத்து தன் முன்பு இருந்தவனை பார்த்து கொண்டிருந்தாள்..

” மாமா என்கூட உன்னை கூப்பிட்டு போக சொல்லறாரு ” என்றான் அவள் முகத்தை பார்த்து..

பெண்ணிடம் எந்த உணர்ச்சியும் இல்லை, நாதன் மேலும் தொடர்ந்தான்…..

” எனக்கு இது சரியா தப்பான்னு யோசிக்க தோணலை, காலம் நிறைய இருக்கு யோசிக்கலாம், உனக்கு விருப்பம் இருக்காதுன்னு எனக்கு தெரியும், அதுனால நீ சும்மா மன மாறுதளுக்காக வந்து அங்கு இரு ” என்றான்…

இவர்கள் வெளியில் பேசி கொண்டது வாசுகிக்கு தெரியவில்லை இடையிலே பெண் தூங்கிருந்தாள் அதனால், என்ன சொல்கிறான் என்று கவனித்தாள்…

அவளுக்கு புரியவில்லை என்பதை உணர்ந்தவன், தெளிவாகவே உறைத்தான் “நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்ய நினைக்கிறாங்க “என்றான்

விரக்தியான சிரிப்பு வந்தது பெண்ணிற்கு, என் மேல் விழுந்த கரையை அழிக்க முடியாமல் மேலும் மேலும் அழுத்தி எழுத நினைக்கிறார்களா, என்று நினைத்தவளுக்கு எல்லாம் தன் கழுத்தை நெரிப்பது போன்ற பிரேம்மை தோன்றியது…

தந்தை சொல்லிய ” அப்பா உன் நல்லதுக்கு தான் செய்வேன் ” என்ற வார்த்தையின் அர்த்தம் இதுவென புரிந்தது..

அவள் அமைதியாகவே இருக்கவும் ” நீ என்னை கல்யாணம் எல்லாம் செஞ்சுக்க வேணாம் பொன்னு, இப்போ நீ சும்மா ஒரு விருந்தாளியா வீட்டுக்கு வா, உன் மனசு கொஞ்சம் தெளிந்ததும், அப்பறம் உனக்கு வேற கல்யாணம் பண்ணிக்க விருப்பமிருந்தா, நானே பார்க்கிறேன் ” என்றுவிட்டு வெளியில் சென்றான்..

நாதன் வெளியில் வந்ததும், கோபால் உள்ளே சென்றார், மகள் அமர்ந்திருந்த கோலம் நெஞ்சை உலுக்கியது…

“அம்மாடி நீ போயிடுடா, இந்த வயசுல இதுக்கு மேல, அவளை அடிச்சு என்னால விரட்ட முடியாது” என்றார் கண்ணீர் மல்க..

” அவங்களை அடிச்சு விரட்ட முடியாதுனு, என்கிட்ட அன்பை காட்டி விரட்டுறியாப்பா ” என்றாள் எங்கோ பார்த்து கொண்டு…

கோபாலுக்கு வார்த்தைகள் வலிக்கிறது, ஆனால் மகளின் எதிர்காலம் முக்கியம் அல்லவா, நாளையே நான் இறந்து போனாள் என் மகளின் நிலை, அதனால் தன்னை கல்லாக்கி கொண்டு கலங்காமல் நின்றார்…

” அப்பா உனக்காக இதுவரை எதுவும் செஞ்சத்தில கண்ணு, இப்போ செய்றது சரியா செய்றேன்னு என் மனசு சொல்லுது ” என்றவர் மகளின் சில துணிகளை மட்டும் எடுத்து ஒரு பையில் அடுக்கினார்…

” எழுந்து போய் முகத்தை கழுவிட்டு வா ” என்றார் என்னவோ சொன்னதை செய் என்ற கட்டளை தோனியில்…

என் வாழ்க்கை என்னால் முடிவு செய்ய முடியாத நிலையில் உள்ளதா என்று உள்ளுக்குள் அழுது புலம்ப மட்டுமே முடிந்தவள் எழுந்து சென்றாள்..

வெங்கடேசன் தான் இருவரையும் சாமி படத்திற்கு முன் நிறுத்தியவர், மகன் கழுத்திலிருந்த சங்கிலியை கழட்டி வாசுகிக்கு போட சொன்னார்…

இருவருமே இதை எதிர் பார்க்கவில்லை, நாதன் தந்தையை திரும்பி பார்க்க ” உன்னை நான் அறிவேன் ” என்று சொன்னது அவர் பார்வை..

வாசுகி வேண்டாமென்று தலையசைக்க, நாதன் என்ன நினைத்தனோ அதன்பின் நொடியும் அவன் மனம் எதையும் யோசிக்க விடவில்லை, காரணம் அவனே அறியாத வாலிபபருவத்தில் தோன்றிய காதலாக கூட இருக்கலாம், சரியான விடையில்லா ஒரு கணம் அது…

சங்கிலியை கழட்டி போட்டவன், சாமி படத்திற்கு முன் இருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டு அவள் கரங்களை பிடித்து அழுத்தி கொடுத்தான்…

அன்று கற்சிலை போல் மாறியவள், அதன் பின் அப்படியே தான் இருந்தாள், இந்த சில மாதங்களாக தான் நன்றாக பேச தொடங்கியிருக்கிறாள்…

அன்று அவன் கொடுத்த அதே அழுத்தம் இன்றும் பசுமையாக நினைவில் அவளுக்கு, ஆனால் பயம் நெஞ்சம் முழுக்க..

அன்றைய நாள் மட்டுமல்ல, அதன் பின்னும் ஊர் முழுக்க காந்திமதி வாசுகியை சாடாத வார்த்தைகளே இல்லை, அது ஒரு தனி தொடர்கதை இன்றுவரை…

கோவிலுக்குள் நுழைந்ததும் எல்லாம் முன்பே ஏற்பாடு செய்துவிட்டதால் தயாராக தான் இருந்தது…

நாதன் கரங்களை இப்போது வாசுகி அழுத்தினாள், உடல் வியர்க்க தொடங்கியது, கைகள் நடுங்கியது காரணம் அவள் முன் வந்து நின்றிருந்தான் தமிழரசன்….

அவள் செவ்வரளி