அழகிய அன்னமே 9 & 10

அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் மூன்றாம் தளத்தில் இருக்கும் அவனது வீட்டிற்குள் நுழைந்தான் சுந்தரராஜன்.

சுந்தரராஜன் சுந்தரேஸ்வரனின் சித்தப்பா மகனாக இருப்பினும் ராஜனும் ஈஸ்வரனும் ஒன்றாகவே ஒரே வீட்டில் அன்பான அண்ணன் தம்பிகளாய் தான் வளர்ந்தனர்.

அதே போல் சுந்தரேஸ்வரனின் சொந்த தங்கையாக இருப்பினும் கல்யாணிக்கு ராஜன் மீது அதீத பாசம் உண்டு.

இவர்கள் மூவரும் ஒன்றாக பாசப்பிணைப்புடன் வளர்ந்து பணிக்கு செல்லும் வேளையில், ராஜனின் தாயான செல்வாம்பிகையும் தந்தையான வேங்கட சுந்தரமும் செய்த ஏமாற்று வேலையும், துரோகச் செயலும் குடும்பத்திற்குள் விரிசலை ஏற்படுத்தி பெரியப்பா சித்தப்பா குடும்பம் இரண்டாக பிரிந்து போனது.

ஈஸ்வரன் மீனாட்சியின் திருமணத்திற்கு பிறகு மீனாட்சியின் மூலமாக தான் முறுக்கி திரிந்துக் கொண்டிருந்த ஈஸ்வரனும் ராஜனும் பேச ஆரம்பித்தனர்.

ராஜன் காதலித்து மணம் புரிந்து கொண்ட மதுர நங்கையின் மூலம் பெண்கள் மூவரும் இணக்கமாகி மேலும் இவர்களின் பிணைப்பை அதிகரித்திருந்தனர்.

பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருளாளராய் பணிபுரியும் ராஜன் தனது அலுவலகத்திலிருந்து கிளம்பி  மாலை ஏழு மணியளவில் தனது வீட்டிற்குள் நுழைந்ததும், தனது அறையில் இருந்து வெளி வந்த அவனது மனைவி நங்கை,

“இந்தாங்க முதல்ல உங்க மகளை பிடிங்க! எனக்கு இன்னும் அரை மணி நேரத்துல கிளைண்ட் மீட்டிங் இருக்கு. இன்னும் ஒன்னும் பிரிப்பேர் செய்யலை” என்றவாறு தனது மகளை அவன் கையில் திணித்து விட்டு அறை நோக்கி நங்கை செல்ல,

“ம்ப்ச் நங்கை! நானே இப்ப தானே உள்ளே வந்திருக்கேன். ஏற்கனவே தலை வலி வேற! கொஞ்சம் நேரம் பாப்பாவை வச்சிக்கோ! குளிச்சிட்டு வந்து வாங்கிக்கிறேன்” என்றவன் சொன்னதும்,

“நோ வே! காலைலருந்து உன் பொண்ணு என்னை ஒரு வேலையும் செய்ய விடலை. இல்லனா காலைலயே பிரிசன்டேஷன் ரெடி செஞ்சிருப்பேன். நீ கொஞ்ச நேரம் பார்த்துக்கோடா! மீட்டிங் முடிச்சிட்டு வந்து உனக்கு தலைவலிக்கு டீ போட்டு தரேன் சரியா” என்றவள் தனது அறை கதவை சாற்றி விட்டாள்.

ஹ்ம்ம் என பெருமூச்செறிந்தவனாய் மெத்தையில் அமர்ந்தான்.

“நந்துமா! இப்படியே உட்கார்ந்து விடையாடிட்டு இருப்பீங்களாம். அப்பா டிரஸ் மாத்திட்டு வந்துடேவேனாம் சரியா?” என்று அவளை அவளது பிளே காரில் உட்கார வைத்து விட்டு இவன் நகர, கத்தி அழ ஆரம்பித்தாள் நந்திதா.

“இருடா வந்துடுறேன்! அவசரம் புரியாம அழுறியே” என்றவாறு அவசரமாக கழிவறைக்குள் நுழைந்தான்.

ரிப்ரெஷ் ஆகி ஷார்ட்ஸ் டீ ஷர்ட் அணிந்து கொண்டு வெளியே வந்தவன், தனது மகளை தூக்கி கொண்டான்.

அவன் வரும் வரை அழுது கரைந்தவளின் கண்களை துடைத்தவன், “எதுக்குடா இந்த அழுகை? நந்துக்குட்டிக்கு பசிக்குதா? அப்பா ஏதாவது செஞ்சி தரவா?” எனக் கேட்டவாறு சமையலறைக்கு சென்றவன், அடுப்பில் ஏற்கனவே காய்த்து வைத்திருந்த பாலை சூடு‌ படுத்தினான்.

“ப்பாஆ ம்மாஆஆ திட்டா.. பாப்பா அலுதாஆஆ” என்று மழலைக்குரலில் அவள் கூற,

“அச்சோ அம்மா திட்டினாளா பாப்பாவை.. பாப்பா அழுதீங்களா? ஏன் அம்மா பாப்பாவை திட்டினா? நீங்க என்ன செஞ்சீங்க” என்றவன் கேட்க,

ம்ம் ம்ம் என தலையசைத்தவள், “ம்மாஆஆ பொம்ம கொட்தா .. பாப்பா பொம்ம குளிச்சிட்டா” என்றதும் சிரித்தவனாய்,

“பொம்மையை குளிப்பாட்டினீங்களா பாப்பா”

ம்ம்ம் ம்ம்ம் என தலையசைத்தவள் அவன் இடுப்பில் அமர்ந்து கொண்டாள்.

அவளிடம் பேசியவாறே அவன் டம்பளரில் சக்கரையை போட்டு வைத்திருக்க, “பொங்கோ பொங்ங பொங்கோ பொங்ங” என்று கத்தினாள் குட்டிப்பெண்.

இவன் புரியாமல், “நந்துமா என்ன சொல்றீங்க! அப்பாக்கு புரியலையே” என்றவாறு பொங்கிய பாலை அணைக்க,

“பொங்கோ பொங்ங பொங்கோ பொங்ங” என்று மீண்டும் கத்தினாள் நந்துக்குட்டி.

“ஓ பால் பொங்கிச்சா” என்று சிரித்தவன், சமையல் மேடையிலேயே வைத்து பாலை ஆற்றி குழந்தை அருந்தும் பாட்டிலில் ஊற்றி கொடுத்தான்.

அதை வாங்கி அவள் அருந்த, அவளை மெத்தையில் அமர வைத்து, தொலைகாட்சியில் அவளுக்கு பிடித்த தமிழ் மழலைப் பாடல்களை ஓட விட்டவன், தனக்கும் மனைவிக்குமாக காபியை கலந்தான்.

அறையை தட்டியவாறு உள்ளே சென்று வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் அருகில் காபி கோப்பையை வைத்தவன், முகப்பறை மெத்தையில் ஹப்பாடா என்று வந்தமர்ந்தான்‌. தந்தை அமர்ந்ததும் அவனின் மடியில் ஏறி அமர்ந்து பால் அருந்திக் கொண்டிருந்தாள் நந்திதா.

அரை மணி நேரம் கழித்து அறையில் இருந்து வெளியே வந்த நங்கை, மெத்தையில் ராஜன் படுத்திருக்க, அவன் மேலே மகள் படுத்திருக்க, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இருவரையும் தான் கண்டாள்.

மெல்லிய புன்னகை இதழில் இழையோடியது.

“சரியான அப்பா கோந்து! தூங்காம ஆட்டம் போட்டு என்னை என்ன பாடு படுத்தினா! குளிக்க மாட்டேன், சாப்பிட மாட்டேன், தூங்க மாட்டேன்னு அவ்ளோ ஆட்டம். இப்ப அப்பாவை பார்த்ததும் சமத்தா பாலை குடிச்சிட்டு தூங்கிட்டு இருக்கா” என வாய் விட்டு புலம்பியவாறே சமையலறையில் அவன் பால் காய்த்து விட்டு போட்டிருந்த பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்தாள்.

இரவு நேர சமையலை செய்ய தொடங்கியவள், அனைத்தையும் தயார் செய்து எடுத்து வைத்துவிட்டு இருவரையும் எழுப்பலாம் என வரும் பொழுது அவர்களின் வீட்டு அழைப்பொலி அலறியது.

அந்த சத்தத்திலேயே முழித்து விட்ட ராஜன், குழந்தையை தூக்கி மடியில் படுக்க வைத்தவாறு எழுந்தவன் தட்டிக் கொடுத்தான்.

கதவிலிருந்த கண்ணாடி வில்லை வழியாக வெளியே நின்றிருந்தவர்களை பார்த்த நங்கை,

“சுந்தர், அன்னமும் ருத்ரன் சித்தப்பாவும் வந்திருக்காங்க” என்றாள்.

“ஓ இன்னிக்கு வரேன்னு சொல்லிருந்தாங்கல! மறந்தே போய்ட்டேன்” என்றான்.

“ஆமா! நான் மறக்கலை! அவங்களுக்கும் சேர்ந்து இட்லி சாம்பார் செஞ்சிட்டேன்” என்றாள் நங்கை.

“சமத்து பொண்டாட்டி” என்று அவளின் கன்னத்தை கிள்ளியவன்,

“நீ அவங்ககிட்ட பேசிட்டு இரு. நான் பாப்பாவை உள்ளே படுக்க வச்சிட்டு வரேன்” என்றவாறு நந்துக்குட்டியை தூக்கி கொண்டு தங்களது படுக்கையறைக்கு சென்றான்.

இவள் கதவை திறந்து இருவரையும் வரவேற்று முகப்பறையில் அமர செய்தாள்‌.

இருவருக்கும் குடிக்க நீர் அளித்து விட்டு, “எத்தனை மணிக்கு பஸ் சித்தப்பா?” எனக் கேட்டாள்.

“பத்து மணிக்கு தான்மா! நாளைக்கு மீனுவோட அவார்ட் ஃபங்ஷன் காலைல பத்து மணிக்கு மேல தான். அதான் கொஞ்சம் லேட்டாவே டிக்கெட் போட்டேன். அங்கிருந்து அப்படியே காசி ராமேஸ்வரம்னு போறேன். உங்கப்பா கூடவே போய்ருக்கலாம். கடை வேலை இருந்தனால இப்ப தனி டிரிப்பா போக வேண்டியதாகிடுச்சு‌” என்ற ருத்ரன்,

“இப்ப சுரேந்தர் எந்த ஊருல இருக்காங்களாம்? எப்ப இங்க வருவாங்களாம்?” எனக் கேட்டார்.

“அப்பா நேத்து காசில இருக்கிறதா சொன்னாங்க சித்தப்பா! மதுரா நேபால்னு எல்லாமே கவர் செய்ற பேக்கேஜ் தான் அப்பா அந்த டூரிஸ்ட்ல எடுத்திருந்தாங்க ! அதனால வரதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகும் சித்தப்பா” என்று இவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, படுக்கையறையில் இருந்து வெளியே வந்த ராஜன்,

“வாங்க மாமா! வா அன்னம்! எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டவாறு அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்தான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க, உணவு மேஜையில் உணவினை எடுத்து வைத்தவள் மூவரையும் உண்ண அழைத்தாள்.

உணவுண்ணும் மேஜையில் அமர்ந்து மூவரும் உண்டு முடித்ததும், “நந்துக்குட்டி முழிச்சிட்டாளானு பார்க்கிறியா நங்கை? பார்த்துட்டு போறேன்” என்று ருத்ரன் கேட்க,

தூங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கி கொண்டு வந்தாள் நங்கை.

“அச்சோ தூங்கிட்டு இருந்தாளா? முழிச்சிருந்தா தானே தூக்கிட்டு வர சொன்னேன்” என்றவாறு குழந்தைக்கு முத்தமிட்டவர், “படுக்க வச்சிடும்மா! நல்ல தூக்கம் போல” என்றார்.

குழந்தையை தூங்க வைத்து விட்டு அவள் வர, “நான் போய் மாமாவை பஸ் ஏத்திட்டு வரேன். நீ கதவை பூட்டிக்கோ” என்ற ராஜன், ருத்ரனை அழைத்துக் கொண்டு கோயம்பேட்டை நோக்கி மகிழுந்தில் சென்றான்.

குழந்தைக்கு உணவளிக்க சென்ற நங்கை நந்துக்குட்டியிடம் போராடி பார்த்து விட்டு, அன்னத்திடம் வந்தவள் அவளின் உடுப்புகளை எல்லாம் விருந்தினர் அறையில் வைக்க சொல்லியவளாய் அங்கேயே அவளுடன் அமர்ந்து பேசலானாள்.

“என்ன அன்னம்? வேலைலாம் எப்படி போகுது? இன்னிக்கு முதல் நாள் மார்னிங் ஷிப்ட்ல! எப்படி போச்சு?” எனக் கேட்டாள்.

“அதை ஏன் கேட்குறீங்க அண்ணி! நடு ராத்திரி அஞ்சு மணிக்கு கேப் அனுப்பி வைக்கிறாங்க தெரியுமா?” என்று இல்லாத கண்ணீரை துடைத்தவாறு அன்னம் கூற,

“அடியேய் விடியற்காலை அஞ்சு மணி உனக்கு நடுராத்திரியா?” என்று நங்கை அவளின் தலையில் கொட்ட,

“அட போங்க அண்ணி! நான்லாம் ஏழு மணிக்கு முன்னாடி எழுந்திருக்காத ஆளு தெரியுமா! காலேஜ் படிக்கும் போது கொஞ்ச நஞ்சமா ஆட்டம் போட்ட நீனு கடவுள் எனக்கு இந்த பிராஜக்ட் கொடுத்து வச்சி செய்ற ஃபீல்” என்றாள்‌.

அவளின் பேச்சில் வாய்விட்டு சிரித்தவள், “வி மிஸ் யூ இன் அவர் க்ரூப் சேட்‌! உன்னோட இந்த பேச்சுலாம் கேட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு. மேடம் பிராஜெக்ட்டுக்கு போனதும் பிசியாகிடுட்டீங்க! வாட்ஸ் அப்னு ஒன்னு இருக்கிறதையே மறந்துட்டீங்க” என்று நங்கை உரைக்கவும்,

“என்ன அண்ணி இப்படி சொல்றீங்க! அதெல்லாம் ஒன்னும் இல்லை! எந்த நேரத்துல நான் முழிச்சிட்டு இருக்கேன் தூங்கிட்டு இருக்கேன்னு எனக்கே தெரியாம போய்ட்டு இருக்கு. எப்படி அண்ணி விடாம இத்தனை வருஷமா வேலை பார்த்துட்டு இருக்கீங்க. எனக்கு இப்பவே எரிச்சலாகுது அண்ணி! ஒன்னுமே புரிய மாட்டேங்குது அண்ணி” என்றாள்.

“ஹா ஹா ஹா.. அது அப்படி தான் எரிச்சலா இருக்கும். மாசமான வர்ற சம்பளத்தை நினைச்சு பாரு. ஈடுபாடு வந்துடும்” என்று நங்கை சிரித்தவாறு கூறவும்,

“கிண்டல் செய்யாதீங்க அண்ணி! நிஜமா கேட்குறேன்” என்று அன்னம் தீவிரமாய் கேட்கவும்,

“முதல்ல புரியாத மாதிரி தான் இருக்கும் அன்னம். சம் டைம்ஸ் ஒரே வேலை செய்ற ‌மாதிரி கூட தோணும். ஆனா அடுத்து வேற பிராஜெக்ட் போகும் போது எவ்ளோ விஷயங்களை நீ கத்துக்கிட்டு இருந்திருக்கனு நீயே ரியலைஸ் செய்வ!

வாழ்க்கையே அப்படி தான் அன்னம். ஏதாவது கத்துக்கொடுத்துட்டே தான் இருக்கும். ஆனா நமக்கு கத்துக்கிட்ட மாதிரியே இருக்காது. அதுக்கு தான் அனுபவம்னு பேரு” என்று சிரித்தாள்.

“என்‌ன அண்ணி தத்துவம்லாம் சொல்றீங்க” என்று அன்னம் சிரிக்க,

நங்கையும் சிரித்தவளாய், “சரி சொல்லு உன்னோட குறிக்கோள் என்ன?” எனக் கேட்டாள்.

“குறிக்கோளனா.. ஐடிலயே மேனேஜர் லெவல்க்கு வளரனும் அண்ணி! ஆனா ஆரம்பமே கடுப்பாகுதே! என்னால இதெல்லாம் முடியுமானு பயமாவும் இருக்கு அண்ணி” என்றாள் அன்னம்.

அழகிய அன்னமே 10 :

“பயம் எதுக்கு? உனக்கு கொடுக்கிற வேலையை உன்னால முடிஞ்ச வரைக்கும் சரியா செய்யனும்னு மட்டும் நினைச்சிக்கோ அனன்ம். அது உன்னை வளர்த்துட்டே போய்டும் . என்ன கொஞ்சம் பொறுமை வேணும்! அது வந்துடும். மாசா மாசம் பேங்க் அக்கவுண்ட்க்கு வர்ற சம்பளத்தை பார்த்ததும் வந்துடும்” என்று சிரித்தவள் மேலும் தொடர்ந்தாள்,

“நான் இப்ப சொல்ல போறது தான் ரியாலிட்டி அன்னம்! வாழ்க்கை நிலையில்லாதது மாதிரி இப்ப நாம செய்ற எந்த வேலையும் நிலையில்லாதது தான் அன்னம். எத்தனை வருஷம் இந்த பிராஜக்ட் இருக்கும், போகும்னு ஒன்னும் நாம சொல்ல முடியாது. பிராஜக்ட் மாறிட்டே இருக்கும்‌. சப்போஸ் அது மாறலைனா பிடிக்காத இடத்துல ரொம்ப நாள் இருக்கிறதுக்கு பதிலா நாம மாறிடலாம்னு மாறிடனும்.

கண்டிப்பாக இங்கே முக்கால்வாசி பேர் பிடிக்காம தான் ஐடி வேலை செய்றாங்க தெரியுமா. அதிலும் கல்யாணமான பொண்ணுங்க பெரும்பான்மை பேருக்கு வேலை செய்ய பிடிக்கிறது இல்லை. எல்லாரும் குறிக்கோளோட வேலைக்கு சேர்ந்தவங்க தான். அவங்க புகுந்த வீட்டுல வர்க் லைஃப் பேலன்ஸ் செய்ய அவங்களுக்கான சப்போர்ட் கிடைக்காம போகும் போது, குறிக்கோளாவது மண்ணாவதுனு முதல்ல வேலையை விட தான் தோணும்.

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகனும்னு தோணும். அப்ப குழந்தை வந்துட்டா வேலைல இருந்து ரிலாக்ஸ் ஆனாலும் குழந்தைக்காகனு நிறைய வேலை வந்துட்டு இருக்கும்.

சோ ரிலாக்ஸ்ங்கிறது எந்தவிதமான வேலை செஞ்சாலும் நாமளா எடுத்துக்கிறது தானே. அதனால் அப்படி மனசும் உடம்பும் ரிலாக்ஸ்ஸை கேட்கும் போது வேலையை விட்டுடாம பிரேக் எடுத்துக்கலாம்” என்றாள்.

“என்னமோ வேலைக்கு போக ஆரம்பிச்சதுலருந்து ஓடிட்டே இருக்க மாதிரி இருக்கு! நிம்மதியான நேரம்னு இல்லவே இல்லை” என்றாள் அன்னம்.

“இரண்டு மாசத்துக்கே இப்படியா?” என்று சிரித்த நங்கை,  “இந்த காலத்து பிள்ளைங்களுக்குலாம் எல்லாம் ஈசியா சூப்பர் பாஸ்ட்டா நடந்துடனும். அப்படி தானே!” என்று அவளின் தலையை பிடித்து ஆட்டினாள்‌.

“எதுலயுமே நிரந்தரமான நிம்மதினு ஒன்னு கிடையவே கிடையாதுடா. நம்ம மனசுல எதை நிம்மதினு நாம் எடுத்து வைக்கிறோமோ அது தான் நமக்கு நிம்மதி. சோ நமக்கு பிடிச்சதை செஞ்சி நாம தான்‌ நம்ம மனசை அப்பப்ப திசை திருப்பி நிம்மதியா வச்சிக்கனும்.

நமக்கான நிம்மதியை தேடிக்க என்ன வழினா, நமக்கு பிடிச்ச மாதிரியான விஷயத்தை பார்ட் டைம்மா இல்லைனா வீக்கெண்ட்ல செய்ற மாதிரி பழகுறது தான். இந்த பார்ட் டைம் வீக்கெண்ட் வேலை மன நிம்மதியை தரும். இந்த ஐடி வேலை பொருள் நிம்மதியை தரும்” தனது அனுபவங்களை வைத்து நங்கை கூறிக் கொண்டே போக,

“பிடிச்ச மாதிரி விஷயம்னா எதை சொல்றீங்க அண்ணி?” எனக் கேட்டாள் அன்னம்.

“வரையுறது, பாடுறது, ஆடுறது, ஸ்விம்மிங் கத்துக்கிறது, எழுதுறது, படம் பார்க்கிறது, ரிவ்யூ சொல்றது, சமைக்கிறது! இப்படி நிறைய இருக்கே! உனக்கு எது விருப்பமோ அதை செய்! மனசு ரிலாக்ஸ் ஆகி ரிஃபெரஷிங்கா ஃபீல் ஆகும்” என்றவள் மேலும் சில மணி நேரங்கள் அவளுடன் பேசிக் கொண்டிருக்க ராஜன் வீட்டின் அழைப்பொலியை அழுத்தினான்.

“சரி நீ தூங்கு! நாளைக்கும் மார்னிங் ஷிப்ட் தானே! குளிக்க  போகும் போது என்னை எழுப்பு! டீ காபி ஏதாவது போட்டு தரேன்” என்றாள் நங்கை.

“நீங்க எதுக்கு எழுந்துக்கிட்டு! நான் ஆபிஸ்ல போய் குடிச்சிக்கிறேன் அண்ணி! பாப்பாவை வச்சிக்கிட்டு லேட்டா தானே தூங்குவீங்க” என்றாள் அன்னம்.

“சரி காலைல பார்ப்போம்! குட் நைட்” என்றவாறு அறையை விட்டு வெளியே வந்தவள் வாசல் கதவை திறந்தாள்.

அவனுடன் பேசியவாறே படுக்கையறைக்கு வந்தவள் குழந்தை இன்னும் சாப்பிடாமல் உறங்குவதை அவனிடம் கூற, குழந்தையிடம் பேசியவாறே எழுப்பி அமர வைத்தவன், நங்கை கலக்கி வைத்திருந்த பாலை அவளுக்கு வழங்கினான். கண்களை திறவாமலேயே பால் முழுவதையும் குடித்தவள், படுத்துக் கொள்ள போக, “நந்துமா பால் குடிச்சதும் தூங்க கூடாதுமா” என்றவாறு முதுகை தடவி விட, உட்கார்ந்துக் கொண்டே உறங்கினாள் நந்துக்குட்டி, சில நிமிடங்களுக்கு பிறகு படுக்க வைத்தான்.

“நான் எழுப்பும் போது எப்படி அழுது சிணுங்கினா தெரியுமா! பால் பாட்டிலை வாயில வச்சாலே தட்டி விட்டுட்டு அப்படி ஒரு தூக்கம். உன் குரல் கேட்டதும் தூக்கத்துலயும் எழுந்து குடிச்சிட்டு தூங்குறா! சரியான அப்பா கோந்து” என்று இவள் அவனை முறைக்க,

“உனக்கு ஏன்டா பப்ளிமாஸ் பொறாமை” என்று சிரித்தவாறு அவளை தன்னருகே இழுத்தான் ராஜன்.

ராஜனின் மார்பினில் சாய்ந்திருந்தாள் நங்கை. அவளின் தலையை கோதிக் கொண்டிருந்தான் அவன்‌.

“சுந்தர், நான் வேலையை விட்டுடவா! சம் டைம்ஸ் ரொம்ப ஹெக்ட்டிக்கா ஃபீல் ஆகுது” என்றாள் நங்கை.

“சரி விட்டுடு” என்றவன் சொன்னதும்,

“அதெப்படி விடுறது! எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த மேனேஜர் பொசிஷன்க்கு வந்திருக்கேன். விட்டுட்டா இவ்ளோ நாள் உழைப்பும் கஷ்டமும் வீணான மாதிரி ஆகிடாதா?” எனக் கேட்டாள்.

“சரி‌ விடாத!” என்றான் ராஜன்.

“டேய்” என்று எழுந்து அமர்ந்தவள், “நானே குழப்பத்துல கேள்வி கேட்டா நீயும் அதையே சொல்ற! ஏதாவது ஒன்னு சொல்லுடா” என்றவாறு அவனை முறைத்தாள்.

“எனக்கு தூக்கம் வருது! அப்புறம் பேசுவோமா” என்றவன் கேட்க,

“தூங்கி தொலை” என்றவள் குழந்தையின் மறுபுறம் சென்று படுத்துக் கொள்ள, குழந்தை இவனின் விரலை பிடித்துக்கொண்டு படுத்திருந்தாள்.

நங்கையை பார்த்து சிரித்தவனாய் படுத்துக் கொள்ள, சிறிது நேரம் கழித்து மறுபுறம் வந்தவள் அவனை அணைத்தவாறு படுத்து அவனோடு ஒட்டிக்கொள்ள, கண்களை மூடியவாறே, “அதான் தனியா படுத்தா தூக்கம் வராதே உனக்கு! அப்புறம் எதுக்கு இந்த வீண் ஜம்பம்” என்றவன், “விழுந்து வச்சிடாத”  என்றவனாய் சற்று உள்ளே தள்ளிப்படுத்து ஒரு கையால் அவளையும் மறு கையால் குழந்தையையும் தன்னோடு இறுக்கி கொண்டான்.

“என்னோட நிம்மதியே நீ தான்டா” என்றவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்து மார்பில் முகம் புதைத்தாள். குறுநகை அவனிதழில்!

—-

இங்கே விருந்தினர் அறையில் படுத்திருந்த அன்னம், அன்றைய நாளின் அலுவலக நிகழ்வுகளை மோகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் இருந்தாள்.

இந்த இரண்டு மாதத்தில் மோகன் அவளுக்கு உற்றத்தோழனாய் மாறியிருந்தான். பிரித்வி சொல்லிக் கொடுத்ததை தாண்டி மோகன் மூலம் நிறைய கற்றுக் கொண்டாள்.

அலுவலகத்தில் இருவரும் வெவ்வேறு ஷிப்ட்டில் வரும் பொழுது, அங்கு நடந்த அனைத்தையும் அவனிடம் பகிர்ந்துக் கொள்வாள்.

இன்று அவன் மதிய ஷிப்டில் வந்திருக்க, இவள் காலை ஷிப்ட் முடித்து கிளம்பி வந்திருந்ததால் தற்பொழுது அவனின் ஷிப்ட் முடிந்ததும் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள்.

“இன்னும் தூங்கலையா நீ? காலைல எழுந்திருக்கனும்ல! ஒழுங்கா தூங்கு. காலைல பேசிக்கலாம்” என்று அவன் குறுஞ்செய்தி அனுப்ப, இவள் சில நிமிடங்கள் குறுஞ்செய்தி மூலம் பேசிவிட்டே உறங்கி போனாள்.

மறுநாள் மதியம் அவளின் பணியிடத்தில் அனைவரும் டீம் லன்ச் பற்றி பேச, இவள் புரியாமல் விழிக்க, “நம்ம ரொம்ப உழைச்சு களைச்சு போய்ருப்போம்னு மூனு மாசத்துக்கு ஒரு தடவை டீம் பிராஜக்ட் பார்ட்டிக்குனு கொஞ்ச அமௌண்ட் கிளையண்ட் பட்ஜட்ல ஒதுக்குவாங்க. பொதுவாக ஒருத்தருக்கு இருநூறு ரூபானு கொடுப்பாங்க” என்று மோகன் சொன்னதும்,

“என்னாது இருநூறு ரூபா தானா?” முகத்தை அஷ்டகோணலாக்கி அவள் கேட்க, “ஆமா அவ்ளோ தான் தருவாங்க. நாங்க என்ன செய்வோம்னா, அதுல கூட கொஞ்சம் காசு போட்டு நல்ல பெரிய ஹோட்டலா போய் சாப்பிடுவோம், இல்லனா தியேட்டர் போய் படம் பார்ப்போம். இல்லனா ஒன் டே ரிசார்ட் டிரிப் இல்லனா டூ டேஸ் வெளியூர் டிரிப்னு போவோம். இந்த தடவை லன்ச் போகலாம்னு பிளான். யூஸ்வலி லன்ச் போனா இன்பாவே எக்ஸ்ட்ரா காசு போட்டுடுவாரு” என்றான்.

“ஓ சூப்பர்! எந்த ஹோட்டல் போக போறோம். என்னிக்கு போக போறோம்?” என ஆர்வமாய் கேட்டாள் அன்னம்.

“அதான் பேசிட்டு இருக்கோம். மோஸ்ட்லி வீக்கெண்ட் சனிக்கிழமை மதியம் டைம்ல தான் இருக்கும். அப்ப தான் எல்லா ஷிப்ட்  ஆளுங்களும் இருப்பாங்க. ஆனா சில பேர் வாரயிறுதில தான்‌ சொந்த ஊருக்கு போவாங்க. அதையும் பார்க்கனும். எல்லாரும் இருக்கிற மாதிரி ஒரு நாள் ஃபிக்ஸ் செய்வாங்க” என்றான்.

“ஓ ஓகே! ஆமா எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்! ஏன் இன்பாவே டி எல் அண்ட் மேனேஜராக இருக்காங்க” எனக் கேட்டாள்.

“அது பழைய மேனேஜர் போனதும் அந்த இடத்துக்கு வேற ஆளை எடுக்கலை. இன்பாவையே பார்த்துக்க சொல்லிட்டாங்க. இன்பா இல்லாதப்போ பாலாஜி தான் எல்லாமே. இன்பா மேனேஜர் பிரோமோஷன்காக வெயிட்டிங்‌. அடுத்து பாலாஜி டி எல் ஆகிடுவாரு” என்றான் மோகன்.

அடுத்து வந்த வாரயிறுதி நாளில் மொத்த குழுவும் பெரிய உணவகத்திற்கு சென்று மதிய உணவை உண்டு விட்டு திரையரங்கிற்கு சென்று திரைப்படமும் பார்த்து விட்டு வந்தனர்.

அத்திரைப்படத்தில் சிவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவனின் நடிப்பும் பலரால் புகழப்பட்டு நிறைய நேர்காணலில் அவனை காண முடிந்தது.

மோகன் மூலம் ஏற்கனவே சிவாவின் கைபேசி எண்ணை வைத்திருந்தவள், அவ்வப்போது அவனது இன்ஸ்டா பக்கத்திற்காக தயாரிக்கப்படும் காணொளியை அவனுக்கு அனுப்பி வைப்பாள். இதன் மூலம் சிவாவும் அவளிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுவான்.

இன்று இத்திரைப்படத்தில் அவனின் கதாபாத்திரத்தில் கவர்ந்தவளாய், அவனுக்கு பாராட்டி குறுஞ்செய்தி அனுப்பினாள். அவனும் மகிழ்ந்து பதிலளித்து அவளுக்கு அழைத்தே பேசியிருந்தான்.

அன்று இரவு அன்றைய நாள் முழுவதும் நடந்த நிகழ்வுகளை நங்கையிடம் அன்னம் பகிர்ந்துக் கொள்ள, “டீம்ல எல்லாருமே கேரிங் பசங்களா தான் இருக்காங்க. ஸ்டில் நீ கொஞ்சம் ஒதுங்கியே பழகுடா அன்னம்!” என்றாள்.

“ஏன் அப்படி சொல்றீங்க அண்ணி?” என்று அன்னம் கேட்க,

“லைஃப்ல எல்லாருமே பாசிங் கிளைவுட்ஸ் (கடந்து போறவங்க) தான். நீ ரொம்ப அவங்க அன்பை எதிர்பார்த்து பழகி பின்னாடி அவங்க உன்னை அவாய்ட் செய்யும் போது ஹர்ட் ஆகும். அதுக்கு தான் சொல்றேன்” என்றாள் நங்கை.

“ஹ்ம்ம் புரியுது அண்ணி! ஆனா என் மேனேஜரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு ரோல் மாடல் மாதிரி! பிற்காலத்துல நான் மேனேஜர் ஆனாலும் இவர மாதிரி தான் இருக்கனும்னுலாம் நினைச்சிருக்கேன். மோகன் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் மாதிரி ஆகிட்டான் தெரியுமா. இவங்க இரண்டு பேரையும் தவிர மத்தவங்ககிட்டலாம் நான் ஒதுங்கி தான் பழகுறேன் அண்ணி” என்றாள்.

ஆனால் இவ்விருவரும் தான் இவளை கவலைக்குள்ளாக்க போகிறார்கள் என்பதை அறியாமல் போனாள் அன்னம்!

அன்னத்தின் தலையை தடவியவளாய், “இதே போல் நீ எப்பவும் சந்தோஷமா இருக்கனும் அன்னம்! எனக்கு அது போதும்” என்று அணைத்துக் கொண்ட நங்கை, அவளை உறங்க சொல்லி விட்டு தனது அறைக்கு சென்று விட்டாள்.

— தொடரும்