அழகிய அன்னமே 8

அடுத்து வந்த நாட்களில் சிவா, தனது லட்சிய பாதையை நோக்கிய அவனின் தேடலிலும் பயணத்திலும் மூழ்கி போக, இவளை முற்றிலுமாக மறந்து போனான்.

இரண்டு வாரம் கழித்து அன்னத்தின் அலுவலகத்தில் இருந்த படப்பிடிப்பு தளத்தில் சிவாவை கண்டவள், “ஹாய் சிவா” என்றவாறு அவன் முன் சென்று நின்றாள்.

“ஹாய்” வெள்ளப்புறா என கூற வந்தவன், அன்னம் என்று முடித்தான். அவளை கண்டதில் அத்தனை மகிழ்ச்சி அவனுக்கு. ‘இவளை எப்படி மறந்தோம்’ என்று தான் தோன்றியது அவனுக்கு.

“வாங்க உட்காருங்க” தன்னருகில் இருந்த இருக்கையில் அவளை அமர செய்தவன்,

“வேலைலாம் எப்படி போகுது? இந்த வாரம் பகல் ஷிப்ட்டா?” எனக் கேட்டான்.

“ஆமா சிவா! ஆமா நீங்க இந்த சீரியல்லருந்து விலகப் போறதா நியூஸ் வந்ததே! அப்ப நீங்க இனி இங்க வர மாட்டீங்களா?” என வருத்த பாவனையுடன் கேட்க, அவளின் இந்த கேள்வியே அவனுக்கு மகிழ்வை அளித்தது.

“ஹ்ம்ம் ஆமா அன்னம்! எனக்கு மூவிஸ்ல நடிக்கனும்னு தான் ஆசை. அதுக்கான வாய்ப்பு வரும் போது இதுலருந்து விலகலாம்னு தோணுச்சு” என்றவன் கூற,

“வாவ் படத்துல நடிக்க போறீங்களா! வாழ்த்துகள் சிவா” என்றவன் கையைப் பற்றி குலுக்கியவள்,

“ஆனாலும் இந்த சீரியல் மூலமாக உங்களுக்கு கிடைச்சிருக்க ஃபேன்ஸ்ஸை நீங்க ஏமாத்துற மாதிரி ஆகிடாதா? எங்க ஆச்சிக்கு இந்த சீரியல் பார்த்த பிறகு தான் உங்களை ரொம்ப பிடிக்கும்!” என்றாள்.

“ஆனா இதுவும் நிரந்தரம் இல்லையே அன்னம்! இந்த சீரியல் முடிஞ்ச பிறகு எல்லாரும் என்னை மறந்துடுவாங்க தானே. இதுவே சினிமால ஒரு அழுத்தமான கதாபாத்திரம் வரும் போது அதுல நடிச்சேன்னா அது இந்த ஆயுளுக்கும் பேசும் தானே” என்றான்.

“ஆமா அதுவும் சரி தான். ஆனா ஏன் மறந்துடுவாங்கனு நினைக்கிறேன். அப்பப்ப டிவில வந்துட்டு போற மாதிரி ஏதாவது ஷோ செய்யலாம் தானே. எப்பவும் உங்களை பார்த்துட்டே இருந்தா எப்படி மறக்க முடியும்” என்றாள்.

அவளின் இந்த ஆலோசனை அவனை சற்று யோசிக்க வைத்தது.

“இப்ப நானும் உங்க இன்ஸ்ட ஃபேன் பேஜ்வோட ஒன் ஆஃப் த அட்மின் தெரியுமா! மோகனும் நானும் தான் அந்த பேஜ்ஜை மேனேஜ் செய்றோம். போன வாரம் நான் இரண்டு வீடியோ செஞ்சி போட்டேன். நீங்க பார்த்தீங்களா?” எனக் கேட்டாள்.

“சாரிங்க பார்க்கலை” என்றவன் கூற,

“அட இதுக்கு எதுக்கு சாரிலாம். நானே காண்பிக்கிறேன்‌” என்று பேசியவாறே தனது கைபேசியில் அந்த காணொளியை எடுத்து காண்பித்தாள்.

“இதுக்காகவே இப்படி வீடியோ செய்றதுக்காகவே இந்த சீரியலை நான் தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சேன். சீரியலை ஃபாலோ செய்றதுக்காகவே முன்னாடி நடந்த கதையை என் ஆச்சிக்கிட்ட போன் செஞ்சி வேற கேட்டேன். இப்ப போய் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களேனு தான் வருத்தம்” என்றாள்.

“அப்ப என்னை இங்க பார்க்க முடியாதுனு வருத்தம் இல்லையா” தன்னையும் மீறி கேட்டே விட்டிருந்தான் அவளிடம்.

“ஹான் அதுவும் இருக்கு தான். இப்படி செலிப்ரெட்டி கூட பழகுற வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்குமா என்ன! அதை மிஸ் பண்ணுவேன்” என்றாள்.

‘அவ்ளோ தானா! வேறெதுவும் இல்லையா?’ புஸ்ஸென்று ஆனது அவனுக்கு.

“இப்ப நீங்க ஃப்ரீனா என் ஆச்சிக்கிட்ட பேசுறீங்களா? ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்காங்க” என்றவள், அவன் சம்மதம் தெரிவித்ததும் தனது கைபேசியில் ஆச்சியை அழைத்து அவனிடம் பேச வைத்தாள்.

அவளின் ஆச்சியையும் மிகவும் பிடித்திருந்தது அவனுக்கு. அவளின் குடும்பத்தை பற்றி கேட்டறிந்துக் கொண்டான்.

“உங்க ஸ்மைல் ரொம்ப பிடிக்கும் எனக்கு! எப்பவும் சிரிச்ச முகமாவே இருக்கீங்க. அதுவும் ரொம்ப பிடிக்கும். எப்பவும் இப்படியே இருங்க! சரி எனக்கு டைம் ஆகிடுச்சு நான் கிளம்புறேன்” என்றுரைத்து விட்டு சென்று விட்டாள் அன்னம்.

அவளின் வெள்ளந்தியான வெளிப்படையான பேச்சில் சிவாவின் கால் தான் தரையில் படவில்லை.

செல்லும் அவளையே ஆசையுடன் பார்த்திருந்தான்.

—-

அடுத்த இரண்டு மாதங்கள் வாரத்திற்கு ஒரு ஷிப்ட்டென பிரித்வியிடம் பயின்றவாறு செல்ல, இரண்டாம் மாதத்தின் கடைசியில் தனது பிரசன்டேஷனை செய்து முடித்த அன்னத்திடம்,

“எக்சலண்ட் பிரசன்டேஷன் அன்னம். ரொம்ப விளையாட்டான பொண்ணு, எப்படி வேலை செய்ய போறியோனு நினைச்சேன். உன் மேல பெரிய நல்ல மதிப்பு வர மாதிரி செஞ்சிட்ட! இதே அளவுக்கு டெடிகேட்டடா வேலை செய்யனும் சரியா” என்று பாராட்டினான் இன்பா.

அன்னத்தை இயல்பாக ஒருமையில் பேச பழகியிருந்தனர் அனைவரும்.

—–

அன்று தனது கடைக்கு செல்லாது வீட்டில் இருந்தான் சுந்தரேஸ்வரன்.

அவனது மடியில் மகள் ரஞ்ஜனி படுத்திருக்க, அவளின் தலையை கோதியவாறு இருந்தான்.

“அவளுக்கு உடம்பு முடியலைனா கூட அம்மா வேண்டாம். எல்லாத்துக்கும் அப்பா தான்” என்றவாறு மகளுக்காக தயாரித்த கஞ்சியை ஆற வைத்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

அவளின் கூற்றில் சிரித்தவனாய், “உனக்கு ஏன் பொறாமை?” எனக் கேட்டான்.

“எனக்கென்ன பொறாமை? நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எதுக்காகவும் என்னை அவ தேட மாட்டாளே! எந்த தொந்தரவும் இல்லாம நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கலாமே! நான் ஏன் பொறாமை படப்போறேன்” என்றாள் மீனாட்சி.

“உன் பேச்சை  கேட்டா அப்படி தெரியலையே” என்று சிரித்த ஈஸ்வரனை பார்த்து முறைத்தாள் மீனாட்சி.

அவளின் முறைப்பிலும் சிரித்தவனாய்,  தனது அறையில் இருந்த தொலைகாட்சியில் கடையின் கேமரா மூலம் அங்கிருக்கும் பணியாளர்களை கண்காணித்தவாறு  அமர்ந்திருந்த ஈஸ்வரன் இயல்பாய் திரும்பி தொலைக்காட்சியை பார்த்தான்.

அவனின் பார்வையின் திசை நோக்கி இவளும் தொலைக்காட்சியை பார்த்தாள்.

“என்னங்க இது! கஸ்டமர் வந்து நிக்கிறாங்க! இவங்க இரண்டு பேரும் கஸ்டமர் கேட்டதை கொடுக்காம சண்டை போட்டுட்டு இருக்காங்க! நீங்க முதல்ல ஃபோன் பண்ணுங்க” என்றாள் மீனாட்சி.

“இரு என்ன தான்‌ செய்றானுங்கனு பார்ப்போம்” என்று தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான் ஈஸ்வரன்.

அந்த வாடிக்கையாளர் இவர்களின் சண்டையினை பார்த்து விட்டு எதுவும் வாங்காமல் சென்று விட, அத்தனை கோபம் மீனாட்சிக்கு.

“இதுக்கு தான் அனுபவம் இல்லாதவங்களை வேலைக்கு எடுக்காதீங்கனு சொன்னேன். அப்ரன்டீஸ்ஸா வச்சிக்கலாம்னு இப்ப பாருங்க” என்றாள்.

மடியில் இருந்த மகளை மெத்தையில் படுக்க வைத்தவனாய், “நான் என்னனு பார்த்துட்டு வரேன்” என்றாள்.

மகளோ இவனது சட்டையை பிடித்து சிணுங்க ஆரம்பிக்க, “இதோ அப்பா வந்துடுவேன்மா. தூங்குடா செல்லம்” என்று முத்தமிட்டு தட்டிக்கொடுக்க மீண்டும் உறக்கத்திற்குள் ஆழ்ந்தாள்.

—–

“முதல் முதல்ல புதுசா வேலைக்கு சேரும் போது எந்த வேலையா இருந்தாலும் அங்க உங்க வேலைக்கான ஊதியம் கிடைக்காது.

அங்க வேலையை கத்துக்கிற ஆர்வம் தான் உங்களுக்கு இருக்கனும். ஊதியம் கம்மியாவே இருந்தாலும் என்னை நம்பி கொடுக்கிற வேலையை திருப்திகரமாக நான் செஞ்சி முடிக்கனும்ன்ற எண்ணம் தான் உங்களுக்கு இருக்கனும். அப்படி இருக்கிறவங்க தான் வாழ்க்கைல முன்னேறி போய்ட்டே இருப்பாங்க.

முதலாளியை எப்படி ஏமாத்தலாம், வேலை செய்யாம எப்படி டிமிக்கி கொடுக்கலாம்னு யோசிச்சா வாழ்க்கைல நீங்க அதே பத்தாயிரம் வேலைல தான் இருப்பீங்க. என்னைக்கும் முதலாளியாக முடியாது. அப்படியே முதலாளி ஆனாலும் பெரிய சம்பளம் கொடுத்தாலும் இதே மாதிரியான வேலையாள் தான் உங்களுக்கு கிடைப்பாங்க.

இப்படியான வேலையாட்கள் எனக்கு தேவையே இல்லை” என்றவன்,

மீனாட்சி கைபேசிக்கு அழைத்து, “இந்த பசங்க இரண்டு பேருக்கும் சாயந்திரம் சம்பளம் கொடுத்து செட்டில் செஞ்சி அனுப்பிடு மீனு” என்றான்.

இருவரும், “அண்ணா அண்ணா இனி இப்படியாகாம பார்த்துக்கிறோம்ண்ணா. வேலையை விட்டு தூக்கிடாதீங்கண்ணா” எனக் கெஞ்சும் சத்தம் மீனாட்சியின் செவியையும் தீண்ட,

“மன்னிச்சு விட்டுடலாம்ப்பா! திரும்பவும் இப்படி செஞ்சா ஆக்ஷன் எடுக்கலாம் ஈஸூப்பா” என்றாள் மீனாட்சி.

முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அவர்கள் இருவரையும் முறைத்து பார்த்தவன், “நான் என் முடிவை சொல்லிட்டேன். சாயங்காலம் நீயே அவங்ககிட்ட பேசிக்கோ” என்றவன் உரைத்ததும், தான் கூறியதற்கு ஒப்புக்கொண்டான் ஆனால் அதை தன்னையே அவர்களிடம் கூற சொல்கிறான் என புரிந்தது மீனாட்சிக்கு.

“என்ன இன்னும் என் வாயையே பார்த்துட்டு இருக்கீங்க! போங்க போய் வேலையை பாருங்க. இன்னிக்கும் சேர்த்து தானே சம்பளம் செட்டில் செய்றேன். இன்னிக்கான வேலையை போய் பாருங்க போங்க” என்று அவர்களை அனுப்பி வைத்தான்.

அவர்கள் இருவரும் தங்களுக்குள் புலம்பியவாறு சென்றதும், “ரஞ்சுக்குட்டி இப்ப எப்படி இருக்கா? ஜூரம் குறைஞ்சிடுச்சா?” எனக் கேட்டான்.

“ஹ்ம்ம் இன்னும் கஞ்சி கூட குடிக்காம தூங்கிட்டு இருக்கா!”

“இன்னும் சாப்பிடலையா? மாத்திரை போடனும்ல! நீ எழுப்பிருக்க வேண்டியது தானே” சற்று சத்தமாகவே அவன் கேட்க,

“ஹான் அவ்ளோ அக்கறை உள்ளவரு நீங்களே வந்து உங்க பொண்ணுக்கு ஊட்டி விடுங்க” என்றவாறு இணைப்பை துண்டித்து விட்டாள் மீனாட்சி.

“மீனு” எனக் கூப்பிட்டவன் இணைப்பு துண்டிக்கப்பட்டதை பார்த்து விட்டு,

“கொஞ்சம் குரலை உசத்திட கூடாதே! பொங்கிட்டு வந்துடும் இவளுக்கு” என்று எண்ணியவாறு அவ்விருவரையும் கண்காணிக்கும் பொறுப்பை ஒருவரிடம் அளித்து விட்டு வீட்டிற்கு கிளம்பி சென்றான்.

அவர்களது அறைக்குள் அவன் நுழைந்த நொடி, அவனை தாவி அணைத்துக் கொண்டாள் மீனாட்சி.

“என்னடா சண்டை போடுவனு பார்த்தா, கட்டிப்பிடிக்கிற” என அவளை இறுக்கி அணைத்தவாறு கேட்டான்‌.

“ஈஸூப்பா நான் செம்ம ஹேப்பியா இருக்கேன்‌! எனக்கு சிறந்த வளரும் பெண் தொழிலதிபர் விருது கிடைச்சிருக்கு. பெண்மை நாளிதழ் விருதுல செலக்ட் செஞ்சிருக்காங்க” என்றாள்.

“எல்லாம் உங்க வேலை தானே! இதுக்கு நீங்க அப்ளை செஞ்சதே எனக்கு தெரியாது! அவங்க ஃபோன் செஞ்சி சொல்லும் போது அவ்ளோ ஷாக்! எல்லாம் உங்களால தான்! தேங்க்யூ சோ மச் ஈஸூப்பா” என அவன் கன்னத்தில் முத்தமிட்டு மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“இதுல என்ன இருக்கு! என் பொண்டாட்டி ஜெயிச்சா நான்‌ ஜெயிச்ச மாதிரி தானே! நீ வேற நான்‌ வேற இல்லையே! இன்னும் நிறைய வெற்றியை பார்க்கனும்டா பச்சக்கிளி” என்றவாறு அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

“இப்ப நாம ஆரம்பிச்சிருக்க உன்னோட யூ டியூப் சேனலை பெரிசா டெவலப் செய்யனும். அது மூலமா உனக்கு நிறைய பேரும் புகழும் வரனும்” என்றவனை அத்தனை காதலாய் பார்த்திருந்தாள்.

மனைவியை தனக்கு அடிமையாய் நடத்தும் கணவான்களாய் இருக்கும் கணவர்களுக்கு மத்தியில் தன்னை உந்தி தள்ளி ஊக்கமளித்து வெற்றியடைய செய்து அதை தனது வெற்றியாய் கொண்டாடும் இவனை அத்தனையாய் பிடித்திருந்தது அவளுக்கு.

“லவ் யூ சோ மச் ஈஸூப்பா!” என்றவளிடம், “லவ் யூ டூ பச்சக்கிளி மை டார்லிங்” என்று முத்தமிட்டவனை அழுதவாறு விழித்து கலைத்தாள் அவர்களின் மகள் சிவரஞ்ஜனி.

— தொடரும்