அழகிய அன்னமே 6 & 7

ஒளியிலே தெரிவது தேவதையா

உயிரிலே கலந்தது நீ இல்லையா

இது நெசமா நெசமில்லையா – அது

நெனவுக்கு தெரியலையா

கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா

விடியற்காலை பொழுதில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த சிவாவின் கனவில் தோன்றியது அதே மின் தூக்கி காட்சி.

கைபேசி வெளிச்சத்தில் அன்னத்தின் முகத்தை கண்டதும் அவனது மூளைக்குள் ஒலிக்க தொடங்கியது இப்பாடல்‌.

உறக்கத்தில் இருக்கும் அவன் முகத்தில் அத்தனை ரசனை பாவங்கள்!

அதிர்ந்து விழிக்கும் அந்த கண்கள், பயத்தில் படபடவென பட்டாம்பூச்சியின் இறகாய் துடிக்கும் கண்ணிமைகள் என அவளை அத்தனை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான் கனவில்.

மின் தூக்கியிலிருந்து அவள் வெளியே செல்ல முனைந்த நேரம், ‘போகாதே! போகாதே’ என இவனின் நெஞ்சம் அடித்துக் கொள்ள, அவளின் கையினைப் பற்றி நிறுத்த முனைந்த நேரம், காற்றோடு கலந்தவளாய்  மறைய முற்பட்டவளை, நிஜத்திலேயே கைகளால் பிடிந்திழுப்பது போல் தனது கைகளை காற்றில் அசைத்தவன் கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்திருந்தான்.

இரவு படப்பிடிப்பு முடிந்து காலை வீட்டிற்கு வந்து உறங்கி கொண்டிருந்தவனோ, உருண்டு விழுந்து விழித்த அதிர்வில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவனாய், “ச்சே கனவா!” என தலையை தட்டிக்கொண்டான்.

நேரத்தை பார்த்தான். “படுத்து அரை மணி நேரம் தான் ஆகுதா” தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டவனாய், “லிப்ட்ல பார்த்ததுல இருந்து கண்ணுக்குள்ளயே நிக்கிறாளே இந்த வெள்ளைப்புறா!” வாய்விட்டு புலம்பினான்.


இவ்வளோ அழகான பொண்ணு கண்ணுக்குள்ள நிக்கலைனா தான் அதிசயம்’ இவனது மைண்ட்வாய்ஸ் கௌண்டர் கொடுக்க,

“ம்ப்ச் சினி‌ ஃபீல்ட்ல இல்லாத அழகான பொண்ணுங்களா! இந்த பொண்ணு சம்திங் வித்தியாசமா தெரியுறா! மனசுக்கு நெருக்கமா ஃபீல் செய்ய வைக்கிறா” தனக்கு தானே பேசிக் கொண்டவனோ,

“இதுக்கு மேல இதை பத்தி யோசிக்காதடா சிவா” என்று எச்சரித்துக் கொண்டவனாய் மீண்டுமாய் படுக்கையில் படுத்துக் கொண்டான்.

அங்கு இரவு ஷிப்ட் முடிந்து காலை வீட்டை அடைந்த அன்னம், நேராக சென்று கட்டிலில் விழுந்தவள் தான், ருத்ரனும் செண்பாவும் எவ்வளவு எழுப்பியும் எழவேயில்லை அவள்.

இரவு ஷிப்ட்டிற்கு செல்ல அவளை அனுமதித்ததே தவறோ என்று ருத்ரன் வருந்துமளவு உறங்கியிருந்தாள் அன்னம்.

காலை எட்டு மணியளவில் வீட்டை அடைந்தவள் அன்று மாலை ஐந்து மணிக்கு தான் விழித்தாள். அது வரை எதுவும் உண்ணவுமில்லை. ருத்ரனுக்கு பெருத்த கவலையாகி போனது. அன்னத்தின் வீட்டினரும் ருத்ரனை அழைத்து பேசி உண்ணாது உறங்குபவளை எண்ணி கவலைக்குள்ளாகினர்.

வாட்ஸ்அப் குழுவில் அன்றைய நாளில் அன்னத்திடம் இருந்து எந்த குறுஞ்செய்திகளும் வராது இருந்ததில் பயந்து போயினர் மூன்று பெண்களும்‌.

“என்னடி ஆச்சு உனக்கு இன்னிக்கு? எந்த மெசேஜ்ஜும் செய்யலை? நைட் ஷிப்ட் போய்ட்டு வந்தியா இல்லையா?” என மீனாட்சி அந்த குழுவில் மதியம் இரண்டு  மணியளவில் செய்தியனுப்ப, அதனை தொடர்ந்து “என்னடா அன்னம்? என்னாச்சு?” என்று நங்கையும், “என்னம்மா அன்னம்மா? ஆளையே காணோம்?” என்று கல்யாணியும் குறுஞ்செய்தி அனுப்பினர்.

அடுத்த சில மணி நேரங்களுக்கு அவளிடமிருந்து பதில் இல்லாமல் போகவும் அவளின் எண்ணிற்கு அழைத்தனர். தவறிய அழைப்புகளாகவே சென்றது அனைத்தும்.

மீனாட்சி தனது தந்தை ருத்ரனை அழைத்து கேட்க, அவர் தான் அவளின் உறக்க நிலையை பற்றி கூறினார்.

“சரியான தூங்குமூஞ்சு! ஒரு நாள் நைட் தூங்காம இருந்ததுக்கே இந்த பாடா! இவலாம் குழந்தை பெத்தா எப்படி பார்த்துப்பா?” என்று மீனாட்சி அந்த வாட்ஸ்அப் குழுவில் அவளை வசைப்பாடியவாறு அவளின் நிலையை தெரிவிக்க,

“மீனு நீங்க முதல் ஸ்டெப்பை விட்டுட்டு அடுத்த ஸ்டெப்பை பத்தி யோசிச்சு கவலைப்படுறீங்களே! இவ முதல்ல மொத ராத்திரில இப்படி தூங்காம இருந்தா தானே குழந்தையே பொறக்கும்” என்று கண்ணில்  நீருடன் சிரித்தவாறு இருக்கும் ஸ்மைலிக்களுடன் நங்கை குறுஞ்செய்தி அனுப்ப,

மீனாட்சி நாண ஸ்மைலியும் சிரிப்பு ஸ்மைலியையும் அனுப்ப, கல்யாணி உருண்டு பிரண்டு சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பியிருந்தாள்.

மாலை ஐந்து மணியளவில் விழித்த அன்னம், படுக்கையிலேயே உருண்டவளாய், தனது கைபேசியை எடுத்து பார்க்க ஐந்து மணியென அது நேரத்தை காண்பிக்க, “என்னது! அஞ்சு மணியா?” எனப் படக்கென எழுந்தமர்ந்தாள் அன்னம்.

வாட்ஸ்அப்பில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் குறுஞ்செய்தி ஒலியினால் அந்த ஸ்டைலிஷ் தமிழச்சி குழுவிற்குள் சென்று பார்த்தவள், அதில் இருந்த குறுஞ்செய்திகளை பார்த்தவாறு படுத்து விட்டாள்.

நங்கையின் குறுஞ்செய்தியை பார்த்து சிரித்தவளாய், “ஒரு நைட் ஷிப்ட் பாருங்க அண்ணீஸ்களா! அப்ப தான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்! கிண்டலா செஞ்சிட்டு இருக்கீங்க எல்லாரும்” என முறைக்கும் ஸ்மைலிக்களை அனுப்பிவிட்டு தவறிய அழைப்புகளை பார்க்க, இந்த மூன்று பெண்கள் அல்லாது, பல தவறிய அழைப்புகள் அவளது தாய் மற்றும் தந்தையிடம் இருந்து வந்திருக்க, அவர்களுக்கு அழைத்து பேசி சமாதானம் செய்தவள், குளித்து முடித்து முகப்பறைக்கு வந்தாள்.

சமையலறைக்கு சென்று செண்பாவிடம் பேசியவாறு அங்கேயே மேடையில் அமர்ந்து சூடான தோசையை உண்டுவிட்டு வெளியே வந்தவள் ருத்ரனுக்கு அழைத்தாள்‌.

அந்த வீட்டின் பக்கத்து தெருவிலேயே பெயிண்ட்டிங் பொருட்களை விற்கும் கடையினை வைத்திருந்தார் ருத்ரன். மத்திய அரசாங்க பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றப்பின் மீனாட்சியின் திருமணம் வரை ஏதும் செய்யாது இருந்தவர், மீனாட்சியின் திருமணத்திற்கு பிறகு இந்த கடையை வைத்தார். இக்கடையை வைப்பதற்கு வெகுவாக உதவி புரிந்தான் மீனாட்சியின் கணவனான ஈஸ்வரன்‌.

பணியாட்களை வைத்து கொண்டு கடையை கவனித்துக் கொள்பவர், கல்லாவில் அமர்ந்து கணக்கு வழக்கு பார்த்துக் கொள்வார்.

அன்னம் அவருக்கு அழைத்ததும் கடையை வேலையாட்களை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு  வீட்டிற்கு வந்தவர், நேரே அன்னத்தின் அறைக்கு சென்றார்.

அலுவலகத்திற்கான மகிழுந்து வர ஒரு மணி நேரமிருக்க, தலையை வாரிக் கொண்டிருந்தாள் அன்னம்.

அறைக்குள்  வரும் போதே, “நீ இந்த மாதிரி உடம்பை கெடுத்துக்கிறதா இருந்தா, நான் உன்னை நைட் ஷிப்ட் அனுப்ப ஒத்துக்க மாட்டேன் அன்னம்” சற்று கடுமையான குரலில் உரைத்தார் ருத்ரன்.

“நீயா பேசியது! என் மாமா நீயா பேசியது?” என்று அன்னம் பாட, சட்டென சிரித்து விட்டார் ருத்ரன்.

“ஹ்ம்ம் இப்படி சிரிச்சா எவ்ளோ நல்லா இருக்கீங்க! அதை விட்டுட்டு மிலிட்டரி ஆபிஸர் மாதிரி உர்ர்ருனு வந்தீங்க” என்ற அன்னத்தின் முதுகில் தட்டியவராய்,

“வாலு! நான் மிலிட்டரி ஆபிஸர் மாதிரி இருக்கேனா” என அவளின்‌ காதை திருகி விட்டார்.

“ஆஆஆ மாமா” என்று காதை தேய்த்துக் கொண்டவளாய், “அப்பா எதுவும் சொன்னாங்களா மாமா? என்னை நைட் ஷிப்ட் அனுப்ப வேண்டாம்னு?” எனக் கேட்டாள்.

“அவங்களுக்கு நீ உடம்பை கெடுத்துப்பியோனு தான் கவலை. அதுக்காக அவங்க வேலையை விட சொல்றதுல தப்பில்லையே” என்று ருத்ரன் கூறவும்,

“என்ன மாமா நீங்க! சேம் சைடு கோல் போடுறீங்க” என்று சிணுங்கிய அன்னம், “எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்கனு பார்த்தா அவங்களுக்கு சப்போர்ட் செஞ்சிட்டு இருக்கீங்க” எனக் கேட்டாள்.

“நீ இந்த வேலையை தொடர்ந்து செய்ய நான் ஒத்துக்கனும்னா நான் சொல்றதை கேட்கனும்” என்றவர் சொன்னதும்,

“சொல்லுங்க கேட்டுடுவோம்” என்றவாறு அவர் முன் சென்று நின்றாள் அன்னம்.

“நைட் ஷிப்ட்ல உடம்பு ரொம்ப சூடாகும். அதனால காலைல ஆபிஸ்ல இருந்து வந்ததும் எந்நேரமானாலும் குளிக்காம தூங்க கூடாது” என்றவர் சொன்னதும்,

“என்னது குளிச்சிட்டு தூங்கனுமா?” என்று சிணுங்கியவளை பார்த்த ருத்ரன்,

“அப்ப நீ ஒன்னும் வேலை போக தேவையில்லை” என்று ருத்ரன் சொன்னதும், “சரி‌ சரி குளிக்கிறேன்! அடுத்த ரூல்ஸ்ஸை சொல்லுங்க” என்றாள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு.

“குளிச்சிட்டு முதல்ல இளநீர் குடிக்கனும். அதுக்கு பிறகு தான் சாப்பிடனும்!”

“ரைட்டு! அப்புறம்”

“வாரத்துல ஒரு நாள் தலைக்கு எண்ணெய் வச்சி குளிச்சிடனும். இது நைட் ஷிப்ட்டுக்கு மட்டும் இல்லை. எந்த ஷிப்ட்ல வேலை பார்த்தாலும் இதை செய்யனும்” என்றார்.

சரி சரியென மண்டையை ஆட்டியவளை பார்த்து சிரித்தவராய், “மொத்தத்துல மூனு‌ வேலையும் ஒழுங்கா சாப்பிட்டு உன்‌ உடம்பை நீ கவனிச்சிக்கிட்டா போதும் எனக்கு” என்றார் ருத்ரன்.

“சரிங்க மாமா! இனி‌‌ சாப்பிடாம தூங்க மாட்டேன்! போதுமா! சரி நான் ஆபிஸ்க்கு கிளம்புறேன்” என்றவள் அடுத்த சில மணி நேரங்களில் வாசலில் அலுவலக மகிழுந்து வந்து நின்றதும் ஏறிச் சென்றாள்.

முந்தைய நாள் இரவு மோகன் சொல்லிக் கொடுத்ததை கைபேசியில் பதிவு செய்து வைத்திருந்தவள், பயண வழியில் ஒலிவாங்கி மூலம் அதனை கேட்டவாறே பயணித்தாள்.

‘நான் காலேஜ் படிக்கும் போது கூட காலேஜ் பஸ் டிராவல்ல படிச்சதில்லைடா! இப்படி என்னை படிக்க வைச்சிட்டீங்களே! இந்த இன்பா வேற‌ என்னலாம் கேள்வி கேட்பாரோ தெரியலையே’ எனப் புலம்பியவாறே மோகன் சொல்லிக்கொடுத்தவைகளை மனப்பாடம் செய்துக் கொண்டிருந்தாள் அன்னம்.

இரவு எட்டு மணிக்கு மேல் அலுவலகத்தை அடைந்ததும், ஓய்வறைக்கு சென்று முக ஒப்பனை செய்துக் கொண்டு அவளது பணியிடப் பகுதிக்கு சென்று கதவை திறக்க,

“நல்லா மேக் அப் செஞ்சிட்டு மினுக்கிட்டு சுத்த தெரியுதுல! வேலை ஒழுங்கா பார்க்க தெரியாதா?” என்று ஒரு கோபமான குரல் இவள் செவியை தீண்டியது.

சட்டென உள்ளம் அதிர, இன்பா தான் இப்படி பேசுகிறாரா என குரல் வந்த திசையை நோக்கி திரும்பினாள் அன்னம்.

வேறொரு டீம் மேனேஜர் அவரது டீமில் உள்ள‌ பெண்ணை நடு கூடத்தில் வைத்து திட்டியிருந்தார். அவ்விடத்தில் அவரது டீம் மட்டுமல்லாது பல குழுக்கள் இருக்க, அனைவரின் பார்வையும் அப்பெண்ணின் மீதே படிந்திருக்க, அவமானத்தில் கண்களில் நீருடன் நின்றிருந்தாள் அந்த பெண்.

அன்னத்திற்குள் இருக்கும் பெண்ணியவாதி விழித்துக் கொள்ள, ‘அவருக்கு கீழே வேலை செய்வறங்கனா அவருக்கு அடிமையா என்ன?’ என்று மனதிற்குள் குமைந்தவளாய் அவரை நோக்கி செல்ல,

அந்நேரம் அந்த மேனேஜரின் பேச்சை கேட்டு அவரருகே வந்த இன்பா, “கூல் டவுன் செல்வா! வா பிரேக் போவோம்” என்று அந்த மேனேஜரிடம் உரைத்தவன், அந்த பெண்ணை அங்கிருந்து போக சொல்லி தலையை அசைத்தான்.

இன்பாவும் செல்வாவும் தேநீர் அருந்தி விட்டு அவரவர் இருக்கைக்கு செல்ல, இன்பா முன் வந்து நின்றாள் அன்னம்.

“என்ன இருந்தாலும் நீங்க செஞ்சது தப்பு இன்பா! அவர் அப்படி திட்டிட்டு இருக்கும் போது அது தப்புன்னு நீங்க கேட்டிருக்கனும். நீங்க அவரை அங்கிருந்து கூட்டிட்டு போகலைனா நான் கேட்டிருப்பேன்” என்றாள் அன்னம்.

அவளை அமைதியாய் கூர்மையான பார்வையுடன் நோக்கிய இன்பா, “திஸ் இஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ் அன்னம்” என்றான்.

கோபம் அதிகரிக்க, “எது இன்பா என் வேலை கிடையாது! தனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பெண் தன்னை அழகுப்படுத்திக்கிறதை அசிங்கமா பேசுறதை கேள்வி கேட்குறது என் வேலை கிடையாதா! நியாயத்தை யார் வேணா கேட்கலாம் இன்பா. அதுக்கு நான் சமூக சேவகியா தான் இருக்கனும்ன்ற அவசியம் இல்லை. இப்ப நானே போய் அவர்கிட்ட சொல்றேன். நீங்க பேசினது தப்பு சார். போய் சாரி கேளுங்கனு நானே சொல்றேன்” என்றாள் அன்னம்.

அந்நேரம் உள்ளே நுழைந்தாள் அந்த மேனேஜரிடம் திட்டு வாங்கிய அந்த பெண்.

அத்தியாயம் 7

“தேங்க்யூ இன்பா! செல்வா வந்து சாரி கேட்டாரு! ஏதோ டென்ஷன்ல அப்படி பேசிட்டதா சொன்னாரு” என்ற அந்த பெண் மீண்டுமாய் நன்றி உரைத்து சென்று விட்டாள்.

தேநீர் அருந்த அழைத்துச் சென்று அவரின் தவறை உணர்த்தியிருக்கிறான் இன்பா என புரிந்தது அன்னத்திற்கு.

‘கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ! இப்ப இவர் என்ன நினைக்கிறாருனு தெரியலையே’ என்று மனதோடு எண்ணியவளாய் திருதிருத்தப்படி இன்பாவை அவள் பார்க்க,

“போங்க போய் வேலையை பாருங்க” என்ற இன்பா தனது கணிணியில் மூழ்கி போனான்.

விட்டால் போதுமென்று ஓடியே வந்து விட்டாள் அன்னம்.

‘அய்யோ இதை மனசுல வச்சிக்கிட்டு ஏடாகூடமாக எதுவும் கேள்வி கேட்பாரோ’ எண்ணியவாறே முந்தைய நாள் இஷ்யூவை பற்றி படித்து கொண்டிருந்தவளை நோக்கி வந்த இன்பா, அனைவரின் முன்பே அவளிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.

அவள் சில கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தடுமாறும் போது பாலாஜியும் மோகனும் எடுத்துக் கூறி விளக்கமளிக்க, இன்பாவும் தனது விளக்கத்தை அளித்தான். எவரும் அவளை குறை கூறாமல் அவளுக்கு தெரியாத போது எடுத்துக் கூறி இதை தேர்வு போல் அல்லாது உரையாடலாய் மாற்றியிருந்தனர்.

“இது டிரேடிங் பிராஜக்ட் அன்னம்! டிரேடிங் பத்தின பேசிக்ஸ் படிச்சீங்கனா பிராஜகட்டை புரிஞ்சிக்க இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கும்” என்றான் இன்பா.

சரி சரியென அனைத்திற்கும் தலையாட்டி கொண்டாள் அன்னம்.

“அன்னம் நீங்க இஞ்சினியரிங்ல ஐடி தானே படிச்சீங்க?” எனக் கேட்டான் பாலாஜி.

ஆமென  அவள் கூற, “பரவாயில்லை உங்களுக்கு அப்ப சுலபமா புரிஞ்சிடும். நான் டிரிப்புள் இ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிச்சிட்டு வந்தேன். ஐடினா என்னனு சுத்தமா ஐடியா இல்லை. இதுல இங்க சொல்லி கொடுக்கிறதுல எது டிரேடிங் ரிலேடட்? எது டெக்னிகல் ரிலேடட்னு புரியாம மண்டை பிச்சிக்கிச்சு‌! அப்புறம் வேலை செய்ய செய்ய ஒரு வருஷத்துல நல்லா புரிஞ்சிடுச்சு. அப்ப எங்கம்மா அப்படி என்னய்யா வேலை செய்வீங்க அவ்ளோ பெரிய பில்டிங்லனு கேட்டாங்க ” தனது அனுபவங்களை கூறியவாறு இருக்க, அனைவரும் சிரித்தவாறு பாலாஜியை பார்த்திருந்தனர்.

“நீங்க என்ன சொன்னீங்க உங்க அம்மாகிட்ட”  என ஆர்வமாய் கேட்டிருந்தாள் அன்னம்.

“ஹ்ம்ம் அவங்களுக்கு புரியுற மாதிரி ஐடில என்ன வேலை செய்றோம்னு எக்ஸ்பிளைன் செஞ்சேன்”

“அப்படியா?” என் ஆச்சரியமாக கேட்டவள், “நீங்க சொல்றதை பார்த்தா உங்க அம்மா படிச்சவங்க மாதிரி தெரியலையே! அவங்களுக்கு புரியுற மாதிரி எப்படி சொன்னீங்க?” அன்னம் போன்று அதே ஆர்வத்துடன் அனைவரும் பாலாஜியின் முகத்தை பார்த்திருந்தனர்.

“நம்ம ஏடிஎம்ல காசு எடுக்கிறோம்ல. அது திடீர்னு வேலை செய்யாம போய்டுச்சுனா என்னம்மா செய்வ? யாரை குத்தம் குறை சொல்லுவனு கேட்டேன்?”

“அது அந்த பேங்க்காரனை தான் குறை சொல்லுவேன்! அவன் பொருளை அவன் தானே ஒழுங்கா பழுது ஆகாம பார்த்து வைக்கனும்னு அம்மா சொன்னாங்க”

“அப்படி பழுது ஆகாம ஒழுங்கா பார்த்துக்கிற வேலையை தான் அந்த பேங்க்காரன் எங்க கம்பெனிக்கு கொடுத்திருக்கான். நாங்க அது எப்பவும் ஓடிட்டே இருக்கானு பார்க்கனும். அப்படி அது திடீர்னு ஓடாம போய்ட்டா உடனே சரி செய்ய பார்க்கனும். ஏடிஎம்னு சும்மா உதாரணத்துக்கு சொன்னேன். ஏடிஎம் மாதிரி ஆன்லைன்ல நான் பணம் அனுப்புறேன்ல அந்த சைட் சப்போர்ட் அண்ட் மெயின்டெனனஸ்னு எல்லா சாஃப்ட்வேர் உருவாக்குறது, டெஸ்ட் செய்றது, மெயின்டெய்ன் செய்றதுனு ஒவ்வொன்னுக்கும் ஒரு டீம் இருப்பாங்கனு சொன்னேன்”

“குட் எக்ஸ்பிளனேஷன் பாலாஜி! அவங்களுக்கு புரிஞ்சிதா?” எனக் கேட்டான் இன்பா.

“ஓ நல்லா புரிஞ்சிதே! எங்க எந்த ஏடிஎம் வேலை செய்யலனாலும் உடனே எனக்கு போன் செஞ்சி, ‘யய்யா இங்க ஏடிஎம் வேலை செய்யலை என்னனு பார்த்து சொல்லுயானு’ கேட்குற அளவுக்கு புரிஞ்சிது” என்றதும் இதழ் விரிய சிரித்திருந்தனர் அனைவரும்.

“ஓகே!  பிரித்வி உங்க லாஸ்ட் வர்க்கிங் நாளுக்கு முன்னாடி அன்னம் கத்துக்கிட்டதை நம்ம டீம்க்கு பிரசன்ட் செய்யனும். அப்ப தான் பிராஜக்ட் பத்தின அன்னத்தோட புரிதலை தெரிஞ்சிக்க முடியும். அன்னம் எல்லாத்தையும் கத்துக்கோங்க” என்று கூறிவிட்டு இன்பா கிளம்ப, மதிய ஷிப்ட்டில் வேலை பார்த்தவர்களும் அவனுடன் கிளம்பி சென்றுவிட்டனர்.

பிரித்வி உடனே நாற்காலியை சாய்த்துக் கொண்டு உறங்கி போக, அவனையும் மோகனையும் மாறி மாறி பார்த்த அன்னம், “என்ன‌ அவரு உடனே படுத்துட்டார். எப்ப எனக்கு சொல்லி தருவாரு” என்று மோகனிடம் மெல்லமாய் கேட்டாள்.

“பேப்பர் போட்டுட்டு எவன் தூங்காம வேலை பார்ப்பான்?” என்றான் மோகன்.

இவள் புரியாமல் விழிக்க, “இன்னும் இரண்டு மாசத்துல அவரோட நோட்டீஸ் பீரியட் முடிஞ்சிடும். அதுக்கு பிறகு வேற கம்பெனில வேலை செய்ய போறாரு. நோட்டிஸ் பீரியட்ல ஏன் வேலை செய்யாம இருக்கனு யாரும் இவரை கேட்கவும் முடியாது! இப்ப வேலை செய்யாம இருக்கனால அவருக்கு பாதிப்பும் இல்லை. வேலை செய்றனால அவருக்கு லாபமும் இல்லை” என்றவன் சொன்னதும்,

“அய்யோ இப்ப இவர் எனக்கு சொல்லி தர மாட்டாரா? அப்புறம் நான் எப்படி பிரசன்டேஷன் செய்ய முடியும்” பயத்துடன் அவள் கேட்க,

“அதுலாம் சொல்லி தருவாரு. வேற ஷிப்ட்ல வரும் போது சொல்லி தருவாரு. உனக்கு எதுவும் புரியலைனாலும் என்னை கேளு! நான் சொல்லி தரேன்” என்றான் மோகன்.

“தேங்க் யூ மோகன். உன்னை நம்பி தான் இருக்கேன். நீ செய்றதுலாம் எனக்கு சொல்லிக் கொடுத்துட்டே செய். பிரித்வி சொல்லித்தரும் போது ஈசியா புரியும்” என்றவாறு அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டாள் அன்னம்.

****

“உங்க ஸ்மைல் ரொம்ப கியூட்டா இருக்கு” அவன் கூற, நிஜமாவா என்பது போல் அவள் பார்த்து வைக்க,

“அய்யோ நிஜமாங்க! உங்களை பார்த்ததும் சொல்ல நினைச்சேன். இப்ப தான் சொல்ல முடிஞ்சிது” இதழ் நிறைந்த சிரிப்புடன் தலையை கோதியவாறு அவன் கூற, வெட்க புன்னகை சிந்தினாள் அவள்.

“அப்புறம் உங்களுக்கு வர போற கணவன் அவங்க குடும்பத்தை பத்தின உங்க எதிர்பார்ப்பு எண்ணங்கள் என்ன?” என்று நேரடியாகவே அவன் கேட்க,

அதிர்ந்து அவனை பார்த்தாள் அவள்.

“என்னங்க ஆச்சரியமா பார்க்கிறீங்க? மேரேஜ் செய்யனும்னா இதெல்லாம் பேசி தெரிஞ்சிக்கனும் தானே” என்றவன் கேட்க,

அதே வெட்கச் சிரிப்புடன் தலையை ஆட்டியவள், “என் அம்மாவை உங்க அம்மாவா பார்த்துக்கணும்” என்றதோடு அவள் நிறுத்திக் கொள்ள,

“அவ்ளோ தானா?” ஆச்சரியமாய் கேட்டான் அவன்.

ஹ்ம்ம் என்று அவள் தலையசைத்து கண் சிமிட்ட, அந்த கண்களை ஆழ்ந்து நோக்கினான் அவன்.

அவனின் பார்வை வீச்சில் தலை குனிந்தவளாய், “எனக்கு எல்லாமே அம்மா தான். அவங்க சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். அவங்களுக்கு ஒரே பொண்ணு நானு. அதனால அவங்களை என் கூட தான் வச்சிப்பேன். என்னை கட்டிக்க போறவரும் அவங்க வீட்டாளுங்களும் எங்கம்மாவை நல்லா வச்சிக்கனும். அது போதும் எனக்கு” என்றாள்.

“ரொம்ப நல்ல பொண்ணுங்க நீங்க! கண்டிப்பா உங்க அம்மாவை என் அம்மாவை போல் நல்லா பார்த்துப்பேன் சரிங்களா” என்றவனின் பேச்சில் அவளின் கண்களில் நீர் சூழ, கண் சிமிட்டி அழக்கூடாது என தலையசைத்தான் அவன்.

“சரி உங்களை கட்டிக்க போற பையனை பத்தி கண்டிப்பா ஏதாவது எக்ஸ்பெக்டேஷன் இருக்கும். அது என்னனு சொல்லுங்க” என்று கேட்டான்.

“எனக்கு அப்பா இல்லை. என்னோட சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க” கூறும் போது அழுகையில் உதடு துடிக்க ஆரம்பிக்க, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவளாய், “எனக்கு தெரியும் அப்பாவோட லவ்வை ரிப்ளேஸ் செய்ய முடியாது. ஆனாலும் என்னை கட்டிக்க போறவரு என்னை அப்பா போல பார்த்துக்கனும்” கண்ணீர் விழிகளை விட்டு கீழிறங்க, அது வரை ஒதுங்கி நின்று அவளுடன் பேசிக் கொண்டிருந்தவன், அவளின் தோளில் கைப்போட்டு தட்டியவாறு ஆற்றுப்படுத்தினான்.

“கண்டிப்பா உங்களுக்கு எல்லாமுமா நான் இருப்பேன்ங்க” என்றான்.

அப்படியே அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், கண்ணீருடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

கைபேசியில் இந்நிகழ்வை காணொளியாய் பார்த்துக் கொண்டிருந்த அன்னத்தின் கண்களில் நீர் நிறைந்திருந்தது. மனம் அத்தனை பூரித்து போய் கிடந்தது. தன்னிடமே ஒருவன் வந்து காதலை முன் மொழிந்தது போன்ற பரவசத்தில் திளைத்தது அவளின் உள்ளம். அவனை அத்தனையாய் பிடித்திருந்தது அவளுக்கு.

இது நடிப்பு என்றே நம்ப முடியவில்லை‌ அவளால்‌.

அந்த காணொளியில், “வாவ்” என்றவாறு அங்கிருந்த ஜட்ஜ்கள் எழுந்து நின்று கைத்தட்ட, சுற்றி அந்த செட்டில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர். அவனும் அவளுமாய் நின்றிருந்த சிவாவும் அவனின் சக நடிகையும், “தேங்க் யூ! தேங்க்யூ” என்றவாறு கைகளை குவித்து நன்றி தெரிவித்தனர்.

“வாவ் வாட் எ மேன் யூ ஆர்! எனக்கு தெரியும் இது முன்னாடி பிராக்டிஸ் செஞ்சது கிடையாது. எங்களோட சூப்பர் க்வீன் கண்டென்ஸ்டென்டுக்கு சர்ப்ரைஸ்ஸா இப்படியான லவ் பிரோபோசல் ரவுண்ட் வச்சோம். நேரடியாக அவங்ககிட்ட நீங்க பேசி பிரபோஸ் செய்யும் போது அவங்க எப்படி ரியாக்ட் செய்றாங்கன்றது பொறுத்து தான் பாயிண்ட்ஸ். ஆனா இந்த பர்டிகுலர் ஆக்ட்ல யூ ஸ்டீல் த ஷோ சிவா. உங்க சிரிப்பு வெட்கம், அந்த பொண்ணுக்கு அரவணைப்பா ஆதரவாக பேசின விதம்! ஐ ல்வட் இட் சிவா!” என்று அத்தனை பரவசமாக புகழாரம் சூட்டினார் அந்த நடுவர்.

அதையே தான் இங்கு அன்னமும் உணர்ந்திருந்தாள். எங்கேயும் அது வெளிப்பூச்சாக தெரியவில்லை‌. அவனின் இயல்பான நல்ல குணமே அந்நிகழ்வில் பிரதிபலித்ததாய் உணர்ந்தாள். அந்த பெண்ணின் மனநிலைக்கு ஏற்றவாறு இவனது பேச்சும் அரவணைப்பும் அவளை இயல்பாய் வைத்து கொண்ட பாங்கும், எங்கோ எப்படியோ அன்னத்தின் மனதை கவர்ந்திருந்தான் சிவா.

மோகன் பாதி இரவிற்கு பிறகு உறங்கியிருக்க, தனது கைபேசியில் மேலும் தொடர்ந்து சிவாவின் காணொளிகளை பார்த்துக் கொண்டிருந்தாள் அன்னம்.

அதே நேரம் அங்கு இரவு நேர படப்பிடிப்பின் இடைவேளையில் கேண்டீன் வந்த சிவாவின் கண்கள் அன்னத்தை தேடி கேண்டீன் முழுவதும் அலசியது. அவளுக்காக பிரேக் டைம் கடந்து மேலும் அரை மணி நேரம் அங்கே அமர்ந்து பார்த்தான் சிவா.

அவள் வருவதாய் இல்லை எனவும் அங்கிருந்து மின் தூக்கியில் அவன் கீழிறங்க, அருகிலிருந்த மற்றொரு மின் தூக்கியில் மோகனுடன் கேண்டீனுக்கு வந்திருந்தாள் அன்னம்.

மோகனிடம் தான் பார்த்த சிவாவின் காணொளியை பற்றி அவள் சிலாகித்துப் பேச, “சிவாண்ணா செம்ம நல்லவங்க! அவங்ககிட்ட பேசினாலே அவ்ளோ பாசிட்டிவ் வைப்ஸ் வருது தெரியுமா! இன்னிக்கும் அவரை போய் பார்க்கனும்‌” என்று சிவாவை பற்றி உரைத்தவாறு மோகன் அன்னத்துடன் கேண்டீனில் ஓரிருக்கையில் அமர்ந்தான்.

முந்தைய நாள் அன்னம் இறங்கிய தளத்தில் இறங்கிய சிவா, அங்குமிங்குமாக அன்னத்தை தேடி அந்த தளத்தின் வரவேற்பறை பகுதியில் நடக்க, அங்கிருந்த செக்யூரிட்டி இவனை பார்த்ததும், “என்ன சார்? என்ன வேணும்?” என்று கேட்டார்.

‘இந்த வெள்ளப்புறாவை பத்தி ஒன்னும் தெரியாம என்னனு விசாரிக்க?’ மனதோடு பேசியவனாய்,

“இல்ல ஒன்னுமில்லை சும்மா பார்க்கலாம்னு வந்தேன்” என்று வாயில் வந்ததை உரைத்தவன் மின் தூக்கியினுள்ளே சென்றான்.

அவனது கை கீழ் தளத்தின் எண்ணை அழுத்தப்போக, ஏதோ நினைத்தவனாய், ‘திரும்ப கேண்டீன் போய் பார்ப்போமா?’ எண்ணியவனாய் மேல் தளத்தின் எண்ணை அழுத்தினான்.

அங்கு ஓர் இருக்கையில் அவள் தனியே அமர்ந்திருப்பதை பார்த்தவனின் மனம் இன்பமாய் அதிர்ந்தடங்க, “ஹை நம்ம வெள்ளப்புறா” குஷியான மனநிலையில் துள்ளலாக உரைத்தவனாய் அவளின் இருக்கையை நோக்கி சென்றான்.

“ஹாய்” என்றவாறு அவள் முன் சென்று அவன் அமர, “ஹேய் ஹாய் சிவா! வாட் எ சர்ப்ரைஸ்” என்று உள்ளம் மகிழ்ச்சியில் துள்ள பரவசமாய் உரைத்திருந்தாள் அன்னம்.

“அய்யோ சிவா! உங்களை பத்தி தான் நினைச்சிட்டு இருந்தேன்! நீங்களே இப்படி நேர்ல வருவீங்கனு நினைக்கவே இல்லை” உற்சாகமான அவளின் பேச்சில்,

‘ஆஹா இந்த வெள்ளைப்புறாவும் நம்மளை தேடிருக்கு போலயே’ என்று குத்தாட்டம் போட்டது அவனின் மனது.

“யூ இம்ப்ரஸ்டு மீ எ லாட் சிவா! இது வரைக்கும் எனக்கு கிரஷ்னு யாருமே இல்லை. இனி நீங்க தான் என்னோட நெஞ்சு நொறுக்கி” என்றாள்.

“என்னது நெஞ்சு நொறுக்கியா?” என்று அவன் முழிக்க,

“கிரஷ்க்கு தமிழ் வார்த்தைங்க” என்று கூறி சிரித்தாள்.

தன்னை போலவே அவளுக்கு தன்னை பிடித்திருக்கிறது என்பதில் அவனின் மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது.

அது அப்பட்டமாய் அவன் முகத்தினில் மகிழ்வாய் ஒட்டிக்கொண்டது.

“உங்க பேரு என்ன?” எனக் கேட்டான்.

“ஓ என் பேரு சொல்லவே இல்லைல! அன்னம்! அன்னம் என் பேரு” என்றாள்.

‘அன்னம்’ வாய்க்குள் சொல்லிக் கொண்டவனாய், ‘வெள்ளைப்புறானு சரியா தான் பேரு வச்சிருக்கேன்’ என்று எண்ணியவாறு சிரித்துக் கொண்டான்.

அந்நேரம் இரண்டு டம்ளர் ஜூஸூடன் வந்த மோகன், “ஹே சிவா அண்ணா” உற்சாகமாய் கூறியவாறு மேஜை மீது ஜூஸ்ஸை வைத்தவன், “வாட் எ பிளசன்ட் சர்ப்ரைஸ்ண்ணா. நானே உங்களை பார்க்க வரனும்னு நினைச்சிட்டு இருந்தேன்” என்றான்.

சரியாய் அந்நேரம் படப்பிடிப்புக்கு வரச் சொல்லி சிவாவின் கைபேசியில் அழைப்பு வர, “சாரி அர்ஜண்ட்டா போக வேண்டியது இருக்கு! இன்னொரு நாள் பேசலாம்” என்றவாறு செல்ல மனமே இல்லாமல் கிளம்பினான் சிவா‌.

— தொடரும்