அழகிய அன்னமே 43 & 44 (நிறைவு அத்தியாயம்)

திருமண மேடையில் மணப்பெண்ணின் வருகையை எதிர்நோக்கி அங்குமிங்குமாக பார்வையை செலுத்தியவனாய் ஐயர் கூறியனவற்றை செய்தவாறு அமர்ந்திருந்தான் சிவசுந்தரம்.

நிச்சயத்தன்று அன்னத்திற்கு பிடிக்காத நிறத்தினில் புடவையை வாங்கி கொடுத்ததாக சிவாவிடம் அவள் புகார் வாசித்திருக்க, திருமணத்திற்கான முகூர்த்த பட்டை அன்னத்தின் விருப்பப்படியே வாங்கியிருந்தான் சிவா.

தங்க சரிகை சேலையில் பொன்னாய் மின்னியவாறு வந்தவளை கண் சிமிட்டாது பார்த்திருந்தான்.

தான்‌ இருக்கும் தொழிலில் எப்பொழுதும் ஒப்பனையுடனான முகங்களையே பார்த்திருப்பவனுக்கு, ஒப்பனையற்ற முகமே பிடிக்கும் என பேச்சு வாக்கில் ஒரு முறை கூறியிருந்தான்.

அதை நினைவினில் வைத்து திருமணத்திற்கும் வரவேற்பிற்கும் நோ மேக்கப் லுக்கையே (no make up look) தேர்வு செய்திருந்தாள் அன்னம்.

ஒப்பனையற்ற மிதமான இயல்பான அலங்காரத்துடன் தங்க பதுமையாய் மேடையை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள் அன்னம்.

புகைப்படக்காரர் காணொளி எடுத்த வண்ணம் அவள் முன் வந்து நின்று இவனது பார்வையை மறைக்க, இவன் இங்குமங்குமாக தலையை அசைத்து அவளை பார்க்க, “பொண்ணு எங்கேயும் ஓடி போய்டாது சிவா! இங்க தான் வருவா! பொறுமையா பார்க்கலாம்” எனக் கேலி செய்தவாறு அவன் பின்னே வந்து நின்றாள் கல்யாணி.

அன்னத்துடன் அன்ன நடையிட்டு வந்துக் கொண்டிருந்த நங்கையும் மீனாட்சியும் மேடையில் வந்து நின்றதும், “எங்கேயும் இடிச்சிக்காம பார்த்து பத்திரமா நில்லு பப்ளிமாஸ்” என்று நங்கையிடம் கூறிவிட்டு தனது மகளை தூக்கி கொண்டு ராஜன் செல்ல,

மீனாட்சியை தூக்க சொல்லி அவளின் மகள் புடவையை இழுத்தவாறு அடம்பிடிக்க, அதனை பார்த்து அங்கே வந்த ஈஸ்வரன் மகளை தூக்கியவனாய், “ரொம்ப நேரம் நிக்காத! கால் வலிச்சிதுனா போய் உட்கார்ந்துக்கோ” என்று கூறி விட்டு சென்றான்.

“பாருங்கடா இந்த அண்ணன்களின் அலப்பறையை” கல்யாணி கூற, சிரித்திருந்தனர் மீனாட்சியும் நங்கையும்‌.

சிவாவின் அருகில் அமர்ந்த அன்னத்தின் முந்தானை அவளை இழுக்க, பின்னிருந்த முந்தானை எடுத்து அவளின் கையில் கொடுத்து அவள் வசதியாக அமர உதவி செய்தவனாய் சிவா இருக்க,

“ஏன்ப்பா இந்த சுந்தர்னு பெயர் வச்சாலே இப்படி தான் பொண்டாட்டியை தாங்குவாங்களோ! என் புருஷன் பெயரையும் சுந்தர்னு மாத்திக்க சொல்லிடவா” மூன்று சுந்தரங்களின் செயல்களை கண்டு மேடையில் கிண்டலடித்துக் கொண்டிருந்தாள் கல்யாணி.

கல்யாணியின் பேச்சில் அனைவரும் சிரித்திருக்க, ஈஸ்வரனும் ராஜனும்  வந்திருந்த விருந்தினர்களை கவனித்த வண்ணம் இருந்தனர். கல்யாணியின் கணவர் கருணாகரன் தனது மகனுடன் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார்.

இன்பா தனது மனைவி மகனுடன் வந்திருக்க, அவனை வரவேற்று பேசி அமர வைத்த ராஜன், அன்னத்தின் மேலாளரென அவளின் தாய் தந்தையரிடம் அவனை அறிமுகம் செய்து வைத்தான்.

அஞ்சலியும் ஜீவனும் மற்றும் சிவாவின் நடனப்பள்ளியில் பணிபுரிபவர்களும், நடனம் பயில்பவர்களென எவரும் கல்யாணத்திற்கு வரவில்லை. முக்கிய வேலையில் அவர்கள் ஈடுபட்டிருந்ததால் சென்னையில் நடைபெறும் வரவேற்பில் கலந்து கொள்ளவதாக கூறியிருந்தனர்.

ஆக சிவாவின் தாயும் தம்பியும் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்திற்கு வந்திருந்தனர்.

இவர்களின் திருமண நிகழ்வை தான் பல யூ டியூப் சேனல்கள் முக்கிய செய்தியாய் அன்று ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

மங்கல வாத்தியங்கள் முழங்க, ஐயர் கெட்டி மேளம் கூற, மனம் நிறைந்த மகிழ்வுடன் மங்கல நாணை அன்னத்தின் மணிக்கழுத்தில் கட்டினான் சிவா. கைகளை கூப்பி இறையாசியை வேண்டியவாறு கழுத்தினில் தாலியை வாங்கிக் கொண்டாள் அன்னம்.

திருமண சம்பிரதாயங்கள் நடைபெற அன்றைய நாள் படு வேகமாய் நகர்ந்துக் கொண்டிருந்தது அனைவருக்கும்.

மறுநாளே சென்னையில் நடைபெறவிருக்கும் நடனப்போட்டியின் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் தான் பங்கெடுக்க வேண்டியது இருந்ததால், அன்றிரவே தனது மகிழுந்தில் அன்னத்தை அழைத்துக் கொண்டு சென்னைக்கு பயணமானான் சிவா.

மாப்பிள்ளை மணப்பெண்ணை முதல் நாளே தனியாக பயணிக்க வைக்க மனமில்லாமல், சிவாவின் மகிழுந்திற்கு பின்னேயே ஈஸ்வரன் மீனு குடும்பத்தினரை தவிர ராஜன், நங்கை உட்பட அன்னத்தின் குடும்பத்தினர் அனைவரும் மற்றும் சிவாவின் குடும்பத்தினரும் ஒரு டெம்போ டிராவலர் வேனில் பயணித்திருந்தனர்.

முதல் நாளே மாப்பிள்ளையை வண்டி ஓட்ட வைக்க வேண்டாமென, அவனின் மகிழுந்திற்கு ஓட்டுனரை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஓட்டுனர் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, பின்னிருக்கையில் அமர்ந்திருந்தனர் சிவாவும் அன்னமும்.

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே

இரவு வேளையில் தன்னவனின் கையோடு கோர்த்துக் கொண்டு, தோள் சாய்ந்து மெல்லிசை பாடல்களை ரசித்துக் கேட்டவாறு நெடுந்தூர பயணம்.

அவளின் நினைவுப் பெட்டகத்தில் பொன்னான பொழுதுகளாய் குறிக்கப்பட்டது அன்றைய பயணம்.

“இன்னிக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்க வேண்டியது” மெல்லிய குரலில் அவளின் காதினோரமாய் மீசை உராய உரைக்க, அங்கமெல்லாம் கூசி சிலிர்த்தது அவளுக்கு.

சட்டென அவனை விட்டு சற்றாய் தள்ளி அமர்ந்தவளாய், “டிரைவரை வச்சிட்டு என்ன பேச்சு” அதே மெல்லிய குரலில் உரைத்து முறைத்தாள். குறுநகை அவனிதழில்.

மெல்ல சிரித்தவனாய், “அதெல்லாம் அவருக்கு கேட்காது. நீ சொல்லு, உன்னை டிஸ்அப்பாய்ண்ட் செஞ்சிட்டேனா?” எனக் கேட்டான்.

“என்னது? எதுக்கு டிஸ்அப்பாய்ண்ட்..?” புரியாது விழித்தவாறு அவள் கேட்க,

“இல்லை இன்னிக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்க வேண்டிய நேரத்துல இப்படி டிராவல் செய்ய வச்சிட்டேனே! அதான்” என்று அவன் இழுக்கவும்,

முகம் செவ்வானமாய் சிவக்க, “ஆண்டவா! இந்த பேச்சை நிறுத்துறீங்களா?” அவன் தோளில் உறங்குவது போல் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அவளின் நாணத்தை கண்டு மேலும் அவளை சீண்டத் தோன்றியது அவனுக்கு‌.

“ஓ பேச்சை நிறுத்திட்டு நாளைக்கு செயல்ல காண்பிக்க சொல்ற! ஓகே ஓகே புரிஞ்சிடுச்சு” என்று குறும்பாய் அவன் கூற, அவன் வாயிலேயே பட்டென வைத்தாள் அவள்.

அந்நேரம் தேநீர் அருந்தவென அவர்களின் வண்டி நிற்க, இதனை பார்த்து பின்னே வந்தவர்களின் வேனும் நிற்க, விட்டால் போதுமென அவள் குடுகுடுவென இறங்கி செல்ல, அவனின் சிரிப்பு அவளை தொடர்ந்தது.

மறுநாள் காலை சென்னை அடைந்து ஒரு மணி நேரம் உறங்கியவன், நடனப்போட்டி நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு கிளம்பி சென்றான்.

இவர்களுடன் வந்திருந்த குடும்பத்தினர் அனைவரும் அவன் வீட்டினில் தான் அன்று தங்கியிருந்தனர்.

வீடு முழுவதும் ஆட்களாய் நிரம்பி இருந்தனர்.

நடனப் பயிற்சி செய்திருந்த நடன ஜோடியையும் தனது குழு மக்களையும் பார்த்தவன் அவர்களுடன் ஒத்திகை பார்த்தான். அஞ்சலி ஜீவனிடம் போட்டிக்கான அறிவுரைகளை வழங்கியவன் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் அன்னத்தை அழைத்து வருவதாக கூறி வீட்டிற்கு கிளம்பினான்.

இங்கிருந்து கிளம்பும் போதே அன்னத்தை கிளம்பி தயாராக இருக்க கூறியிருந்தான்.

பச்சை பட்டுடுத்தி மஞ்சள் கயிறு பளபளக்க முன் நெற்றியில் குங்குமம் மினுங்க தேவதையாய் கிளம்பியிருந்த மனைவியிடம் வந்தவன், “டைம் ஆச்சு டைம் ஆச்சு! ரெடி தானே! அங்கே ஃபங்ஷன் ஸ்டார்ட் செஞ்சிடுவாங்க” என்று உரைத்தவாறே முகம் கழுவி உடை மாற்றி கண்ணாடி முன் நின்று தலை சீவியவாறு தனக்கு பின்னே நின்ற மனைவியை கண்ணாடி வழியாக கண்டவன் பேச்சை அப்படியே நிறுத்தியிருந்தான்.

திரும்பி அவளை ஒரு நொடி பார்த்தவனாய் அவளின் கன்னங்களை பற்றியவனாய் அழுத்தமாய் அவள் இதழில் முத்திரை பதித்திருந்தான்.

திடீரென்ற அவனின் செயலில் முதலில் தடுமாறி கண்களை அகல விரித்து, பின் அவன் செயலை உள்வாங்கி கண்களை மூடி நெஞ்சம் படபடக்க அவள் மூழ்கியிருக்க,

சட்டென விலகியவனாய் இருவரின் உடையையும் முகத்தையும் பார்த்தவன், “அச்சோ டைம் ஆச்சு! வா போவோம்” அவளுடன் கை கோர்த்துக் கொண்டு அறையை விட்டு வெளியே அழைத்து சென்றான்.

‘இப்ப இவரு என்ன செஞ்சாரு’ தன்னை மீட்டுக் கொள்ளவும் நேரமளிக்காது இழுத்து செல்லும் கணவனை பார்த்தவள், “இவருக்கு ஒன்னுமே ஃபீல் ஆகலையா? நமக்கு தான் குறுகுறுப்பா இருந்துச்சா? முகத்துல எதுவுமே கண்டுபிடிக்க முடியலையே” என்றெண்ணியவாறு அவனுடன் மகிழுந்தில் ஏறினாள்.

மகிழுந்தை இயக்கியவனாய், “வயித்துக்குள்ள ஜிவ்வு ஜிவ்வுனு தான் இருந்துச்சு! அப்படியே உன்னை ஏதாவது செஞ்சிடுவேனோனு தான் வெளியே இழுத்துட்டு வந்துட்டேன்” என்றவன் கூறியதும்,

“அடப்பாவி” என்றவாறு அவன் கைகளில் அடித்தவள், “ஆமா நான் நினைச்சது உங்களுக்கு எப்படி தெரிஞ்சிது?” எனக் கேட்டாள்.

“ஆமா நீ என்ன நினைச்ச?” என்றவன் கேட்க,

‘ஓ நாமளே தான் வாயை விட்டுட்டோமா!’ நாக்கை துருத்திக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டவளாய், “இல்ல ஒன்னும் நினைக்கலை” என்றாள்.

“உன் ரியாக்ஷன் பார்த்தா அப்படி தெரியலையே! என்னமோ விவகாரமா நினைச்சிருக்க! என்ன நினைச்ச வெள்ளப்புறா?” என்றவன் கேட்க,

“அய்யோ அதெல்லாம் சொல்ல முடியாது” என்றவளின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.

“நீ வெட்கப்பட்டா கன்னம்லாம் அப்படியே செர்ரி மாதிரி ஆகிடுதுடா வெள்ளப்புறா” எனக் கூறி அவளின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டான்.

“போதும் போதும் ரோட்டை பார்த்து ஓட்டுங்க” என்று மேலும் சிவந்து போனாள் அவள்.

“ஆமா ஆமா… அங்கே ஃபங்ஷன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி போகனும் வேற! செம்ம டென்ஷன்ல வந்தேன் வெள்ளப்புறா. நிஜமாவே செம்ம ரிலாக்ஸிங்கா இருந்துச்சு” என்று கண்ணடித்தான்.

“அச்சோ கல்யாணமானதுலருந்து கெட்ட பையனாவே பேசுறீங்க” தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.

“இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே! அதுக்குள்ளவா” என வாய்விட்டு சிரித்தான் அவன்.

காதை மூடிக் கொண்டவளாய், “நான் எதுவும் கேட்கலை” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளை வம்பிழுத்தவாறே வந்தவனுக்கு அந்த இடத்திற்கு விரைவாக வந்து விட்ட உணர்வே வந்தது.

நிகழ்ச்சி துவங்கி ஒரு நடனம் முடிந்து, நடுவர்கள் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்த நேரம் உள்ளே நுழைந்தனர் இருவரும்.

“நம்ம டீம் ஜோடியோட டான்ஸ் முடிஞ்சிதா?” அன்னம் கேட்க,

“இல்ல இனி மேல் தான்! நீ இங்கே உட்கார்ந்து பாரு” என்று பார்வையாளர்களின் இருக்கையில் அவளை அமர வைத்து விட்டு தனது நடனக்குழுவினரை காணச் சென்றான்.

மாலை வேளையில் ஆரம்பித்த படப்பிடிப்பு இரவு நேரம் வரை சென்றுக் கொண்டிருந்தது.

இரண்டு சுற்றுகளும் ஆடி முடித்து நடுவர்களிடம் நல்ல கருத்துக்களை பெற்று போட்டி முடிவுக்காக காத்திருந்தனர் அனைத்து போட்டியாளர்களும்.

மூன்றாம் இடத்திற்கு இவர்களின் நடன ஜோடி தேர்வாக, மேடையில் ஆரவாரமாக அனைவரும் சத்தமெழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்க, சிவாவையும்‌ மேடைக்கு அழைத்தனர்.

அஞ்சலியையும் ஜீவனையும் மேடைக்கு அழைத்த சிவா, “இவங்க இல்லனா இந்த போட்டில இவ்வளோ ரிலாகஸ்ஸா என்னால வேலை பார்த்திருக்க முடியாது. அவங்களுக்கு நன்றி!” என்றவன் அனைவருக்கும் நன்றி உரைத்தான்.

சிவா பேசி முடித்ததும், “விஷ் யூ ஹேப்பி மேரீட் லைஃப் சிவா! நேத்து தானே கல்யாணம் முடிஞ்சிது” என்று நடுவர் ஒருவர் வாழ்த்து கூறி கேட்கவும், ஆமென தலையசைத்தவன், நன்றி உரைத்தான்.

“என்ன ஒரு டெடிகேஷன். கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாள்லயே வந்துட்டீங்க” என்று மற்றொரு நடுவர் பாராட்ட,

“இவர் மட்டுமில்ல இவரோட மனைவியும் இங்க வந்திருக்காங்க” என்றார் நிகழ்ச்சி தொகுப்பாளர்.

“எங்கே அவங்க? அவங்களையும் வர சொல்லுங்க” என்று அழைத்தார் ஒரு நடுவர்.

சிவா கை காண்பித்து அன்னத்தை அழைக்க, அவள் வர மாட்டேன் என தலையசைக்க, இவர்கள் இருவரையும் கேமராவின் வெளிச்சம் ஃபோகஸ் செய்து கொண்டிருந்தது.

அவள் தலையசைக்க, இவன் கண்களை சுருங்கியவாறு அழைக்க, அவள் கண்களை சுருக்கியவாறு வேண்டாமே என வாயசைக்க, மேடையை விட்டு இறங்கி அவளின் இருக்கைக்கு அருகில் சென்று கைப்பிடித்து, “நான் தான் இருக்கேன்ல! என்ன பயம்! வா” என்றவனாய் அழைத்துச் சென்றான்.

அவனின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டவளாய் மேடை ஏறியவள், அனைவருக்கும் வணக்கம் கூறினாள்.

“ரொம்ப அழகா இருக்காங்க உங்க மனைவி! ஃபர்பெக்ட் பேர் (perfect pair)” என்றார் ஒரு பெண் நடுவர்.

அவளின் கையை பிடித்தவாறே அவன் நின்றிருக்க, அன்னத்திற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் தைரியமாக இருப்பவளாய் காட்டிக் கொண்டவள் மென்னகை புரிந்தவளாய் நன்றி உரைத்தாள்.

“இஸ் இட் எ லவ் மேரேஜ்?” என்று ஒரு நடுவர் கேட்க,

ஆமென அவனும் இல்லையென அவளும் தலையசைக்க, “என்ன இது? இரண்டு பேரும் இரண்டு விதமா தலை அசைக்கிறீங்க? வாட் இஸ் த மேட்டர்?” நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க, அனைவரும் சிரித்திருந்தனர்.

மைக்கை வாங்கியவனாய், “நான் இவங்களை லவ் பண்ணேன். அம்மாக்கிட்ட சொல்லி அவங்க வீட்டுல பேச சொன்னேன். அப்படியே பேசி அரேஞ் செஞ்ச மேரேஜ் இது” என்றான் சிவா.

“பொண்ணுக்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உங்க அம்மாக்கிட்ட தான் சொன்னீங்களா?” நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆச்சரியமாய் கேட்க,

“ஆமா! அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னு இருக்கிறவங்ககிட்ட என் காதலை சொல்லி அவங்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாமேனு தான். வீட்டுல ஒத்துக்கிட்டா மேரேஜ் செஞ்சிப்போம் இல்லனா மறந்துடுவோம்னு நினைச்சி தான் அம்மாக்கிட்ட பேச சொன்னேன்” என்றான் சிவா.

“ஹே சூப்பர்ப்பா” என கைத்தட்டி அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் பாராட்ட, நடுவர்களும் பாராட்டினர்.

“இரண்டு பேருமே இப்படியே ஹேப்பியா சந்தோஷமா இருக்கனும்னு இந்த நிகழ்ச்சி சார்ப்பாக வாழ்த்துறோம்” என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் வாழ்த்து தெரிவித்து அனுப்பினார்.

இருவரும் ஜோடியாக மேடையிலிருந்து இறங்குவது வரை கேமரா அவர்களை பின் தொடர்ந்தது.

நிகழ்ச்சி நிறைவாகி, இருவரும் அந்த இடத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்த பொழுது மறுநாள் காலை மூன்று மணியாகி இருந்தது.

அழகிய அன்னமே 44

கதவை திறந்து விட்ட அன்னத்தின் அன்னை அவர்களுக்கு குடிக்க ஏதேனும் வேண்டுமா எனக் கேட்டுக் கொண்டு உறங்க சென்று விட, இவர்கள் தங்களது அறைக்குள் நுழைந்தனர்.

ஓய்வறைக்கு சென்று உடை மாற்றிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தவள், “சூப்பரா இருந்துச்சு அத்தான் ஃபங்ஷன்! இது வரைக்கும் டிவில தான் பார்த்திருக்கேன். நேர்ல பார்க்கும் போது எவ்ளோ பேரு இதுக்காக உழைக்கிறாங்கனு பார்க்க ஆச்சரியமாக இருந்துச்சு” என்று அவள் சொல்லியவாறு கையிலிருந்த வளையல்களை கழற்றிக் கொண்டிருக்க, அவளின்‌ மடி மீது தலை சாய்த்து படுத்துக் கொண்டான் சிவா.

எதிர்பாராத அவனின் செயலில் உடல் சட்டென தூக்கி வாரிப் போட்டாலும், அவனின் கேசத்தை கோதியவாறு முகத்தை பார்த்தாள் அன்னம்.

“ரொம்ப டயர்ட்டா இருக்கு அன்னம்மா” என்றவாறு அவளின் இடையை கட்டிக்கொண்டு வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டான் அவன். அவனின் மூச்சுக்காற்று அவளது வயிற்றில் பட்டு உடலை சிலிர்க்க செய்தது.

“சிவா” என்றவாறு அவனின் தலையை அவள் கோத, அவனிடமிருந்து மறுமொழி இல்லை‌.

“சிவசு அத்தான்” என்று மீண்டுமாய் அழைத்தவள் அவனின் கன்னத்தை வருட, சீராய் வந்த அவனின் மூச்சினை வைத்து தான் அவன் உறங்கியதை உணர்ந்தாள் அன்னம்.

அவளிற்குமே உறக்கம் கண்களை இழுக்க, அவனை கலைக்க மனமில்லாது அப்படியே பின்னோக்கி சாய்ந்து கொண்டாள் அன்னம்.

காலை பத்து மணியளவில் முழிக்கும் பொழுது அவனின் கை வளைவில் அவனருகில் நேராக படுத்திருந்தாள் அன்னம்.

‘எப்ப முழிச்சி இப்படி திரும்பி படுத்தாரு? என்னையும் எப்படி இப்படி திரும்பி படுக்க வச்சாரு?’ என்றெண்ணியவளாய் திரும்ப முயல, அவளிடையை இறுக்கமாக அணைத்திருந்தான் அவன்.

இந்த அணைப்பும் நெருக்கமும் இறுக்கமும் அவளின் மனத்தினை உருகச் செய்தது‌.

இதே அழுத்தம் அழுத்தம்..
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே..

அவளின் மனதினுள் இவ்வரிகள் தானாகவே ஓட, காதலாகி கசிந்துருகியவளாய் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சிறு அசைவுமின்றி ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் அவன்.

உறங்கும் கணவனை சற்று நேரம் ரசித்து பார்த்திருந்தவள் நேரத்தை பார்த்ததும், “அத்தான்! அத்தான்” என அவனை எழுப்பினாள்‌.

சில நிமிடங்களில் இருவருமாக கிளம்பி வெளியே வந்து மதிய உணவை உண்ண, மீனாட்சியின் குடும்பத்தினரும் வரவேற்பிற்காக ஊரிலிருந்து வந்திருக்க மீனாட்சி கல்யாணியுடன் சேர்ந்து அன்னத்தை கலாய்த்து தள்ளினாள்.

அன்று மாலை சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தனர் அனைவரும்.

ராஜன் தனது குடும்பத்தினருடன் நேராக மண்டபத்திற்கு சென்றிருந்தான்.

சிவாவின் தொழில்முறை நண்பர்கள், பெரும்பாலான பிரபலங்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நெடுநேரம் நிற்க வேண்டிய நேரங்களில் அவளின் நலனை கேட்டு அக்கறையாக கவனித்தவாறு அவன் நிற்க, அவனையும் அதையே கேட்டவாறு நின்றிருந்தாள் அவள்.

வெகு விமர்சையாக நல்லபடியாக வரவேற்பு நடந்து முடிய, நெஞ்சார்ந்த நிம்மதியும் மகிழ்வுடனும் இல்லத்தை வந்தடைந்தனர்.

அன்றிரவும் உறவினர்களால் சூழப்பட்டிருந்தது அந்த வீடு‌.

அன்றிரவு தங்களது அறைக்கு வந்து உடை மாற்றி அன்னம் அமரவும், அதே போன்று மடியில் சாய்ந்து உறங்கி போனான் சிவா.

“உராங்குட்டான் உறங்கிட்டே இருக்காரு” என்று அவனது கன்னத்தை நிமிண்டிவளாய் சிரித்துக் கொண்டாள்.

மறுநாள் காலை உற்றார் உறவினர்கள் அனைவரும் அவரவர் ஊருக்கு கிளம்பி சென்றனர்.

அன்னம் அழுதவாறே தாய் தந்தை ஆச்சியை வழியனுப்பி வைத்தாள்‌. பிரிவின் துயர் மனத்தை அழுத்தியது அவளுக்கு‌. அதற்கு மருந்தாய் மாறியிருந்தான் அவன்.

இவர்கள் இருவர் மட்டுமே இப்பொழுது அந்த வீட்டில் தனித்திருந்தனர்.

மதிய உணவினை அன்னத்தின் அன்னை சமைத்து வைத்து விட்டே சென்றிருக்க, அதனை பரிமாறியவாறு உண்டனர் இருவரும்.

படுக்கை அறையில் தனது கைபேசியில் தோழிகளின் வாழ்த்திற்கு பதிலளித்தவாறு அன்னம் படுத்திருக்க, முகப்பறையில் முக்கிய நடன நிகழ்ச்சி ஒப்பந்த விவரங்களை பற்றி கைபேசியில் எவரிடமோ பேசி முடித்தவன் ஆழ்ந்த மூச்செடுத்தவனாய் அறைக்குள் வந்தான்.

அவனை கண்டதும் அன்னம் எழுந்தமர, அவளின் மடியில் படுத்துக் கொண்டான்.

“என்னப்பா எப்ப பார்த்தாலும் மடியிலேயே படுத்து தூங்கிடுறீங்க?” சற்று அலுப்பாய் அன்னம் கேட்க,

“உன் மடியில் படுக்கிறது பிரச்சனையா? இல்லை உடனே தூங்கிடுறது பிரச்சனையா வெள்ளப்புறா?” சிரித்தவாறு சிவா கேட்க, “பேச்சை பாரு!நீங்க தூங்கினா எனக்கென்ன?” என உதட்டை சுழித்தாள் அன்னம்.

சுழித்த உதட்டை லேசாய் இழுத்து பிடித்து விட்டவனாய், “அது ரொம்ப நாள் ஏக்கம் வெள்ளப்புறா” என்றான்.

“என்ன ஏக்கம்?” புரியாது கேட்டாள்.

“சென்னைக்கு வீட்டை விட்டு வந்த பிறகு நிறைய லோன்லினஸ்! தனிமை விரக்தி! டென்ஷனோட வீட்டுக்கு வந்தா எல்லாமே சரியாகிடும்னு சொல்றதுக்கு ஒருத்தர் வேணும்னு மனசு ஏங்கும். அம்மாவை நிறைய நாள் வர சொல்லி கேட்டிருக்கேன். வருவாங்க ஆனா வந்தாலும் இரண்டு மாசம் தான் இருப்பாங்க. அப்புறம் அங்க தம்பியை பார்த்துக்கனும்னு போய்டுவாங்க. அவங்களுக்கு ஊரை விட்டு இங்க இருக்கிறது பிடிக்கலை.

எங்கலாமோ ஓடி உழைச்சி வீட்டுக்கு வரும் போது, எதிர்பார்த்து வரவேற்க வீட்டுல ஒருத்தர் இருக்கனும். வீட்டுக்கு வந்ததும் அப்படியே மடியில சாஞ்சி என்னோட துக்கம் சோகம் கஷ்டம் டயர்ட் பத்திலாம் நான் சொல்ல, அதை கேட்டு எல்லாம் சரியாகிடும்ப்பானு என் தலை கோதி என்னை ரிலாக்ஸ் ஆக்குற ஒரு உறவு வேணும்னு ரொம்பவே நான் ஏங்கினேன்னு சொல்லலாம்.

அன்னிக்கு நீ என் மடியில் தூங்கினப்போ அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. என்னை மாதிரியே ஃபீல் செய்ற நீனு ஒரு சந்தோஷம்” என்றான்.

கண்களில் கனிவு பொங்க அவன் பேச்சை கேட்டிருந்தவள், குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

முகத்தை திருப்பி அந்த முத்தத்தினை கன்னத்திற்கு மாற்றியவன், மென்மையான தேகத்தின் ஸ்பரிசத்தை உணர்ந்தவாறு  இதழோடு இதழ் சேர்த்து அவளுள் கரைந்து போனான்.

அவளை பின்னே சாய்த்து அவன் முன்னேறி சென்றான். பொன்னே, முத்தே, மணியே, கட்டிக்கரும்பே, இனிக்கும் தேனே ஒவ்வொரு முத்தத்திற்கும் அவளை வர்ணித்தவனாய் அவளை வெட்கங்கொள்ள செய்து, உருகி நெகிழச்செய்து, தானும் அவளை உணர்ந்து, அவளையும் தன்னை உணர வைத்து, ஈருடல் ஓருயிராய் அவளுள் கலந்து போனான்.

****

அடுத்த வந்த வாரத்தில் அந்த நடனப்போட்டியின் இறுதி சுற்றுக்கான விளம்பர காணொளியில் இடம்பெற்றிருந்தது ஜோடியாய் இவர்கள் நின்றிருக்கும் காட்சி.

அந்த நிகழ்ச்சி தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட தினத்தில் சிவாவின் பேச்சு வைரல் ஆகியது‌.

“அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னு இருக்கிறவங்ககிட்ட என் காதலை சொல்லி அவங்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாமேனு தான் சொல்லலை. அவங்க வீட்டுல ஒத்துக்கிட்டா மேரேஜ் செஞ்சிப்போம் இல்லனா மறந்துடுவோம்னு நினைச்சி தான் அம்மாக்கிட்ட பேச சொன்னேன்”

அவனின் இப்பேச்சை சிவசுந்தரத்தின் பொன்மொழியாய் வலைத்தளத்தில் ரீல்ஸ் ஸ்டேடஸ் என வைத்து வைரலாக்கினர் மக்கள்‌.

சிவா அன்னத்தை மேடைக்கு அழைத்தது முதல் இறுதியாய் இருவரும் ஜோடியாக மேடையை விட்டு இறங்குவது வரை இவர்களின் காணொளிக்கு பிண்ணனியில் பல்வேறு விதமான காதல் பாடல்களை ஓட விட்டு அதனை காதல் காட்சியாக மாற்றி உலாவ விட்டிருந்தனர் பார்வையாளர்கள்.

ஏற்கனவே திருமணத்தை ஒட்டியே பல்வேறு வலைத்தள அமைப்புகள் இவர்களை பேட்டி எடுக்க அழைப்பு விடுக்க, எதிலும் பங்கேற்க மாட்டோமென தீர்மானமாக தெரிவித்திருந்தான் சிவா.

இப்பொழுது தொலைகாட்சியில் நேரடியாக நேர்காணலுக்கான அழைப்பு வர, அன்னத்துடன் கலந்துக் கொண்டான் சிவா.

இதனால் இன்னும் அதிகமாக பிரபலமான சிவாவிற்கு மேலும் கூடுதலாக நிறைய வாய்ப்புகளும் நிகழ்ச்சிகளும் வந்தன.

“என்னோட லக்கி சார்ம்டா (charm) நீ” என அவளை கொண்டாடி தீர்த்தான் அவன்.

*****

ஐந்து மாதங்களுக்கு பிறகு..

கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த நங்கையின் பாதங்களை அழுத்தி பிடித்து மசாஜ் செய்துக் கொண்டிருந்தான் ராஜன்.

சுரேந்திருடன் உறங்கி கொண்டிருந்தாள் அவர்களின் மகள் நந்திதா.

ஐந்து மாத கர்ப்பவதியானவள், நிறைய எடை கூடியிருந்தாள். அதன் பொருட்டு உடலில் உண்டான மாற்றத்தினால் பாதங்கள் எப்பொழுதும் வீங்கியவாறு இருக்க, தினமும் அவளின் பாதத்திற்கு சூடு நீர் ஒத்தடம் கொடுத்து அழுத்தி பிடித்து மசாஜ் செய்வதை வாடிக்கையாக்கி இருந்தான் ராஜன்.

“நான் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன் சுந்தர்! மேனேஜர் ஆயாச்சு. முப்பத்தி அஞ்சு வயசுக்கிட்ட ஆக போகுது. இனி இரண்டு பிள்ளைங்களையும் பார்த்துக்கிட்டு எந்த ஸ்டெரஸ் டென்ஷனும் இல்லாம நிம்மதியா வாழலாம்னு திங்கிங். என்னோட பெயின்ட்டிங் பேஷனை (passion) திரும்ப ஸ்டார்ட் செய்யலாம்னு நினைக்கிறேன். உனக்கு ஃபினான்ஷியலா சப்போர்ட் செய்றதுக்கு வேணா பிள்ளைங்க வளர்ந்த பிறகு அப்பா கூட சேர்ந்து ஏதாவது பிசினஸ் செய்றேன்” தனது எதிர்கால திட்டங்களை, எண்ணங்களை அவனிடம் பகிர்ந்தவாறு அவள் இருக்க, காலை அமுக்கியவாறு கேட்டுக் கொண்டிருந்த ராஜன்,

“உன் விருப்பம் போல என்னனாலும் செய்டா!” என்றான்.

தனது கையை நீட்டி அவனை தனதருகே வர வைத்தவள், அவன் தோளோடு சாய்ந்துக் கொண்டாள்.

“கொஞ்ச நேரம் இப்படியே தூங்கிடுறேன்” அமர்ந்தவாறு அவனது தோளில் சாய்ந்திருந்தவளாய் அவள் உரைக்க,

அவளின் கரத்தினை பற்றி வருடியவனாய், “இப்படி உட்கார்ந்து சாஞ்சியிருந்தா இடுப்பு வலிக்கும் பப்ளிமாஸ்! மடியில படுத்துக்கோ” என்று அவளை தனது மடியில் சாய்க்க,

“இல்ல எனக்கு உன் நெஞ்சுல தான் சாஞ்சிக்கனும்” என்று அவள் அடம்பிடிக்க,

அவன் படுத்துக் கொண்டு அவளை தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

“உனக்கு வசதியா இல்லைனா சொல்லுடா பப்ளிமாஸ்‌. நான் உட்கார்ந்துக்கிறேன்” என்றவன் சொன்னதும், “இல்ல இதுவே நல்லா இருக்கு” என்றவள் அவனின் இடையில் கைப்போட்டு மார்பில் தலையை வைத்திருந்தவளாய் அப்படியே உறங்கி போனாள்.

****

இரண்டு வருடங்களுக்கு பிறகு..

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிவாவும் அன்னமும் தங்களது மகன் சஞ்ஜயன் மொட்டை போட முழு குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.

ஈஸ்வரனும் மீனாட்சியும் தனது மகள் சிவரஞ்சனி மற்றும் மகன் தேவ் சுந்தரத்துடன் வந்திருக்க, ராஜனும் நங்கையும் மகள் நந்திதா மற்றும் மகன் விக்னேஷ் சுந்தரத்துடன் வந்திருந்தனர்.

ஈஸ்வரனும் ராஜனும் சுந்தரம் பெயரினை சேர்த்தே தங்களது மகன்களின் பெயரை வைக்க வேண்டுமென மனைவியிடம் கோரிக்கை வைக்க, “ஆமாங்க அண்ணி! பாருங்க சுந்தரம்னு பேரு வச்ச எல்லாரும் எவ்ளோ பாசமா நேசமா இருக்காங்க‌. உங்க பையன்களுக்கும் சுந்தரம்னு பேரு வச்சா அவங்களும் சுந்தர நேசங்கள்ல ஒரு ஆளாகிடுவாங்க” என்று அண்ணன்களுக்காக அண்ணிகளிடம் வாதிட்டு இப்பெயரை ஒத்துக் கொள்ள வைத்தாள் கல்யாணி.

கல்யாணியும் கருணாகரனும் தங்களது மகன் அருண்மொழியுடன் வந்திருந்தனர்.

குழந்தைக்கு மொட்டை அடித்து குளிக்க வைத்து காது குத்தி விட்டு மொத்த குடும்பமும் மனம் குளிர சாமி தரிசனம் செய்து விட்டு வந்தனர்.

அன்னத்தின் பிறந்த வீட்டு குடும்பத்தினரும் சிவாவின் பிறந்த வீட்டு குடும்பத்தினரும் அங்கேயே சமைத்து உண்ணுவதற்காக அடுப்பு, பாத்திரங்கள், காய்கறிகளை எடுத்து வந்திருக்க, சுற்றி தென்னை மரங்களால் ஆன ஓரிடத்தில் குடும்பமாய் அமர்ந்து சமையலுக்கான வேலையில் ஈடுபட்டனர்

ராஜனின் மகள் அந்நேரம் ஓய்வறைக்கு செல்ல வேண்டுமென கூற, தாங்கள் தங்கியிருந்த அறையை நோக்கி அவளை அழைத்து சென்றான்.

அனைவரும் சமையல் செய்யும் இடத்தில் இருக்க, இவர்கள் மட்டும் அறையை நோக்கி நடந்து சென்றனர்.

தூரமாக செல்பவனை எங்கேயோ பார்த்தது போன்ற உணர்வு தோன்ற, அவனையே பார்த்தவாறு நடந்து சென்ற ராஜன், அவனருகில் சென்றதும், “ஹாய் நீங்க மோகன் தானே” அவனின் தோள் தொட்டு கேட்டிருந்தான்.

ராஜனை அச்சமயம் அங்கு எதிர்பாராதவன் முதலில் அதிர்ந்து பின் வியந்தவனாய் திருதிருவென முழித்தான்‌.

“ஹாய் சார்! எப்படி இருக்கீங்க? இது என் மனைவி! இப்ப தான் ஒரு மாசம் முன்னாடி கல்யாணம் ஆச்சு” மனைவி முன்னே தனது முன் காதலை பற்றி ஏதேனும் கேட்டு விடக் கூடாதென படபடவென இவ்வாறு அறிமுகம் செய்து வைத்தான்.

“ஓ சூப்பர். ஹார்ட்டி கங்கிராட்ஸ் (மனமார்ந்த வாழ்த்துகள்)” என்ற ராஜன்,

“லவ் மேரேஜா மோகன்?” எனக் கேட்டான்.

இக்கேள்வியில் மனைவியிடம் ஏதேனும் போட்டு கொடுத்து விடுவாரோ என பயந்த மோகன், “அய்யோ இல்லை சார்! அம்மா பார்த்த பொண்ணு தான்!” என்றவன்,

“அம்மா அங்கே வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அப்புறம் பார்க்கலாம் சார். வரேன்” என்றவாறு அங்கிருந்து விரைந்தோடி சென்றான்.

அவனை‌ பார்த்து சிரித்தவனாய் ராஜன் நின்றிருக்க, “அப்பா” என்று அவனின் கையை பிடித்திழுத்து முகத்தை சுருக்க,

“அச்சோ சாரிடா” மகளை தூக்கி கொண்டு விரைவாக நடந்தான்.

இருவரும் மீண்டுமாக சமையல் செய்துக் கொண்டிருந்த இடத்தை அடைந்த போது சமையலை முடித்திருந்தனர்.

சமைத்து முடித்து பதார்த்தங்களை எடுத்து வைத்ததும் அன்னமும் சிவாவுமே குடும்பத்தினர் அனைவரையும் அமர வைத்து பரிமாறினர்.

அவ்வப்போது சிவாவை அடையாளங்கண்டு ஓரிருவர் வந்து பேசி விட்டு சென்றனர்.

கும்பலாய் அவர்கள் உண்பதை கண்டு, அன்னத்தானம் அளிப்பதாக எண்ணி உண்ண வந்த மக்களுக்கும் அன்னத்தை பகிர்ந்தளித்து பரிமாறியிருந்தனர்.

குடும்பத்திலுள்ள தம்பதிகள் அனைவரையும் தம்பதி சமேதராய் நிற்க வைத்து, தனது குட்டி மகன் சஞ்ஜயனுடன் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர் சிவாவும் அன்னமும்.

சுந்தர குடும்பத்தினர் அனைவரும் மனமொத்த தம்பதியினராய் நெடுங்காலம் நீடூழி வாழ்க என வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்