அழகிய அன்னமே 41 & 42

ருத்ரனுக்கும் அன்னத்திற்கும் அந்த பெண்ணை எங்கேயோ பார்த்தது போன்ற எண்ணம் தோன்ற, யோசித்த வண்ணம் நின்றிருந்தனர்.

“யார் நீங்க? சாரி உங்களை ஞாபகம் இல்லை” எனக் கேட்டாள் அன்னம்.

“என் பேரு ஆராதனா?” என்று அந்த பெண் கூறிய மறுநொடி,

“ஜஸ்ட் கெட் அவுட் ஆஃப் மை சைட் ஆரா (என் கண்ணு முன்னாடி நிக்காத ஆரா)” என கர்ஜித்தவனாய் சிவா ஒரு பெண்ணை அந்த நடனப்பள்ளியில் இருந்து வெளியே இழுத்து வந்து நிறுத்திய காட்சி மனக்கண் முன் வந்து போனது அன்னத்திற்கு.

அந்த நிகழ்விற்கு பிறகு தானே, தாம் சிவாவின் மீது பயம் கொண்டோம். அவரிடம் பேசாமல் தவிர்த்தோம். எப்படி இதனை மறந்தே போனோம் என யோசித்தவாறு அப்பெண்ணை பார்த்தாள் அன்னம்.

ஆனால் தான் அவனுடன் நெருங்கி பழகிய இந்த இரண்டு மாதங்களில் அவனது கோப முகத்தை கண்டதே இல்லையே! அனைத்து பெண்களிடமும் அத்தனை‌ மரியாதையாக நடந்து கொள்பவன் இவளிடம் மட்டும் ஏன் அவ்வாறு நடந்துக் கொண்டான் என பல்வேறு சிந்தனைகள் அவளை சுழன்றடிக்க அந்த பெண்ணை பார்த்திருந்தாள் அன்னம்.

அந்த பெண்ணிடம் குடிக்க நீரளித்தார் அன்னத்தின் அன்னை‌.

ருத்ரனுக்கு அந்த பெண் யாரென்று பொறி தட்டியதும், “நீ தான் இந்த மொட்டை கடுதாசி போட்டியாமா?” எனக் கேட்டார்.

“ஆமா அங்கிள்” சோகமான பாவனையில் கவலையான குரலில் கூறினாள் ஆராதனா.

‘சும்மா வெத்து கடுதாசினு நினைச்சா, எழுதின‌ பொண்ணே எதிர்ல வந்து நிக்குதே’ பேரதிர்ச்சியுடன்  நின்றிருந்தனர் அன்னத்தின் பெற்றோரும் ஆச்சியும்‌. முகப்பறையில் அந்த பெண்ணின் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தார் ஆச்சி.

ஆராதனா பேச தொடங்கினாள்.

“முதல் முதல்ல சிவா பங்கெடுத்த நடனப்போட்டில நானும் கலந்துட்டேன். அப்ப தான் எனக்கு சிவா அறிமுகமானார். அதுல சிவா முதல் பரிசு வாங்கினார். நான் இரண்டாம் பரிசு வாங்கினேன். அப்புறம் நான் எனக்கு கிடைச்ச சீரியல் அண்ட் டான்ஸ் வாய்ப்புகள்ல சிவாவை ரெக்கமெண்ட் செஞ்சேன். அப்படியே ஃப்ரண்ட் ஆகி நட்பா போய்ட்டு இருந்த எங்க உறவு காதலா மாறிச்சு. சிவா எனக்கு மோதிரம் மாத்தி எங்கேஜ்மெண்ட் கூட செஞ்சிக்கிட்டான்” என்று சிவா அவளின் கையில் மோதிரம் அணிவிப்பது போன்ற  புகைப்படத்தை அவர்களிடம் காண்பித்தாள்‌.

உணர்வுகள் துடைத்த முகத்துடன் அப்பெண்ணை பார்த்திருந்தாள் அன்னம். மனதிற்குள் சூறாவளி காற்று சுழன்றடித்துக் கொண்டிருந்தது‌.

“அப்புறம் ஏன் கல்யாணம் செஞ்சிக்கலை?” எனக் கேட்டாள் அன்னம்.

“டான்ஸ் ஸ்கூல் வச்சி நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு அவனுக்கு அஞ்சலி அறிமுகமானாள்‌. என்னை விட அஞ்சலி அவனுக்கு அழகா தெரியவும் அவளை காதலிக்கிறேன்னு அவ பின்னாடி சுத்தினான். அவனும் அஞ்சலியும் சேர்ந்தே தான் எங்கனாலும் போவாங்க. அந்தளவுக்கு இரண்டு பேரும் கிளோஸ்ஸா இருந்தாங்க. என்னை பிரேக் அப் செஞ்சிட்டு அஞ்சலி பின்னாடி சுத்துறியேனு அன்னிக்கு கேட்டதுக்கு தான் என்னை வெளியே இழுத்து தள்ளினான்.

இப்ப அழகும் சொத்தும் சுகத்தோட அன்னம் கிடைக்கவும் அஞ்சலியை பிரேக் அப் செஞ்சிட்டு இங்கே தாவிட்டான்.‌ இன்னும் ஏன் அஞ்சலி அங்கே வேலை செய்றானு உங்களுக்கு கேள்வி வரலாம். அவளுக்கு சிவாவை விட பெரிய ஆளு சிக்கிடுச்சு‌. அது யாருனு தான் இன்னும் தெரியலை.

நான் அவனை‌ உண்மையா காதலிச்சது நிஜம். என்னை ஏமாத்திட்டான் இந்த சிவா” என்று கண்ணீர் சிந்தியவாறு கண்களை துடைத்தவள்,

“என்னை மாதிரி உங்க பொண்ணும் ஏமாந்திட கூடாதேனு தான்‌ சொல்ல வந்தேன்! அவனுக்கு காதல் ஒரு விளையாட்டு. பொண்ணுக்கு பொண்ணு தாவிட்டே இருப்பான்.

சிவாவுக்கு அன்னத்தை நிச்சயம் செஞ்சது எனக்கு இரண்டு நாள் முன்னாடி தான் தெரிஞ்சிது. சிவாவும் அன்னமும் ரோட்டுல பேசிட்டு இருக்க வீடியோ ஒன்னு யூ டியூப்ல பார்த்துட்டு விசாரிச்சப்ப தான் இது தெரிஞ்சிது. அதான் என் வேலையை முடிச்சிட்டு நான் வரதுக்கு முன்னாடி லட்டர் வந்து சேர்ந்துடும்னு அனுப்பினேன். இப்ப நேர்ல வந்து பேசுறேன். இதுக்கும் மேல நீங்க நம்பலைனா உங்க பொண்ணு வாழ்க்கை தான் பாதிக்கும்!” என்றவாறு அனைவரின் முகத்தையும் பார்த்தாள்.

கலங்கி போய் இருந்தனர் அனைவரும். ருத்ரன் அமைதியாக பார்த்திருந்தார்.

திருப்தியான மனத்துடன் இருக்கையை விட்டு எழுந்தவள், “சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க விருப்பம். நான் வரேன்” என்றதும்,

“ஒரு நிமிஷம் உட்காருமா” என்ற ருத்ரன்,

“நீ என்ன நினைக்கிற அன்னம்” எனக் கேட்டார்.

“அவர் அப்படிலாம் இல்லை மாமா” சொல்லும் போதே கண்களில் நீர் தேங்கியது அன்னத்திற்கு.

“இவங்க வேணும்னே அவர் மேல பழி போடுற மாதிரி இருக்கு. சிவா அப்படி ஒன்னும் பொண்ணுங்களை ஏமாத்துறவரு கிடையாது. நீங்க யாரும் அவரை தப்பா நினைச்சிடாதீங்க” தனது வீட்டினரை பார்த்து கண்ணீர் வடித்தாள்.

சிவாவின் மீதான ஆராதனாவின் குற்றம் சுமத்தும் பேச்சு அன்னத்தின் மனதை வெகுவாய் காயப்படுத்தியிருந்தது‌. கண்டிப்பாக சிவா இப்படியானவர் இல்லை என வெகுவாக நம்பினாள்.

பெற்றப் பெண்ணின் கண்ணீர் பெற்றோர்களை கலங்க செய்தது‌.

“அழாதமா” அவளின் கண்களை துடைத்த ருத்ரன் அவளுக்கு குடிக்க நீர் அளித்தார்.

பின் ஆராதனாவை பார்த்தவராய்,

“எந்த பொண்ணும் இந்த விஷயத்துல பொய் சொல்ல மாட்டானுலாம் சொல்றது அந்த காலம். எங்க மாப்பிள்ளை மேல பழி போடுற உன்னை தான் நாங்க முதல்ல சந்தேகப்படுவோம்” என்று முதல் பந்துலேயே சிக்ஸர் அடித்து அவளை கலங்க வைத்தார் ருத்ரன்.

“நிச்சயம்ங்கிறது பாதி கல்யாணம் மாதிரி. எங்க வீட்டு பொண்ணை ஒருத்தரை நம்பி கொடுக்கும் போது கொஞ்சம் கூடவா விசாரிக்காம இருந்திருப்போம். எடுத்தோம் கவுத்தோம்னு மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிற பழக்கம்லாம் எங்க குடும்பத்துல கிடையாதுமா” என்று அவளை பார்த்து புன்னகைத்தவர்,

“சிவாவுக்கு முப்பது வயசு ஆகுது.‌ இது வரைக்கும் அவருக்கு கல்யாணமாகாம போனதுக்கு காரணம் இப்படி அவர் பத்தி தரகுறைவாக சிலர் சொன்னது தான்னு சிவாவோட அம்மாவே எங்ககிட்ட சொன்னாங்க. எங்க பையனை பத்தி முழுசா விசாரிச்சிட்டு பிடிச்சிதுனா மட்டும் சொல்லுங்கனு தான் எங்ககிட்ட பேசினாங்க” என்றார்.

“சென்னைல சிவாவை பத்தி விசாரிச்சது நான் தான். நீ சொன்ன மாதிரியே அவர் உன்னை காதலிச்சி ஏமாத்திட்டதா பலர் சொன்னாங்க. இப்ப அஞ்சலியை காதலிக்கிறதாகவும் கூடவே வச்சிட்டு சுத்துறதாகவும் கூட சொன்னாங்க.

அன்னிக்கு நீ அஞ்சலி பத்தி சிவாகிட்ட தப்பா பேசினதுக்கு தான் அவர் உன்னை கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளினார்னும் தெரியும்.

இவ்வளோ விஷயங்கள் தெரிஞ்சும் சிவாவுக்கு எங்க வீட்டு பொண்ணை நாங்க கொடுக்க ஒத்துக்கிட்டு இருந்திருக்கோம்னா நீ யோசிச்சிருக்கனும்மா” என்று நக்கலாய் சிரித்தார்.

“உன் மேல அவதூறு வழக்குனு ஒரு நோட்டிஸ் உனக்கு வந்திருக்கனுமே. அதை சிவாக்கிட்ட சொல்லி போட வச்சதே நாங்க‌ தான்.

நானும் என் ஈஸ்வரன் மாப்பிள்ளையும் தான் சிவாவை பத்தி விசாரிச்சோம். நாங்க விசாரிக்கிறது தெரியாம மாப்பிள்ளையோட தம்பி ராஜாவும் விசாரிச்சிருக்காரு‌. நாங்க மூனு பேருமே இந்த ஒரு பாய்ண்ட்ல தான் குழம்பினோம். உன்னையும் அஞ்சலியையும் அவர் காதலிச்சாருனு சொல்றது பொய்னு புரிஞ்சிது‌. ஆனா இப்படி பலரும் பேசுறதுக்கான காரணகர்த்தா யாருனு தேடும் போது அது நீ தான்னு தெரிஞ்சிது. நீ யார்கிட்ட எப்படிலாம் சிவாவை பத்தி தப்பு தப்பா பேசினங்கிற ஆதாரம்லாம் எங்ககிட்டயே இருக்கு‌மா. அதை வச்சி தான் கேஸ் போட சொன்னோம்”

அதிர்ந்து விழித்தாள் ஆராதனா.

இது வரை சிவாவிற்காக அவனின் தாய் பார்த்த பெண்களின் வீட்டில் எல்லாம் கைபேசியில் பேசியே அந்த கல்யாண பேச்சை நிறுத்தியவள், முதல் முறையாக இங்கு தான் நேரில் வந்து பேசுகிறாள். பின் எவ்வாறு இவர்கள் இவள் தான் இதன் காரணகர்த்தா என்று அறிந்துக் கொண்டனர் என்பதே ஆச்சரியமாக இருந்து அவளுக்கு.

இவள் பெண் வீட்டினரிடம் கைபேசியில் பேசிய மறுநொடி, நெருப்பில்லாமல் புகையுமா, ஏற்கனவே மீடியாவில் வேறு வேலை பார்க்கிறான் என எதையும் யோசிக்காமல், விசாரிக்காமல் கல்யாணத்தை நிறுத்தியவர்களை தான் இத்தனை காலமாய் பார்த்திருக்கிறாள்.

இப்படி தனக்கே தனது பந்தை திருப்பி அடித்தவரை கண்டு பேரதிர்ச்சி அவளுக்கு.

“உங்களை காப்பாத்த வந்தா என் மேலேயே பழிய போடுவீங்களா?” அதிர்ச்சியை மறைத்து ஆத்திரத்தில் கத்தினாள் ஆராதனா.

“உனக்கு சிவாவை பழி வாங்கனும். உன்னை கல்யாணம் செஞ்சிக்காம புறகணிச்ச சிவாவுக்கு யார் கூடவும் கல்யாணமாக கூடாதுனு அஞ்சலியோட அவருக்கு காதல் இருக்கிறதா பரப்பின! அப்படி தானே!

நாங்க சொல்ற வரைக்கும் அவருக்கு பார்த்த பொண்ணு வீட்டை எல்லாம் கலைச்சி விட்டது நீ தான்னு அவருக்கே தெரியாது.

அஞ்சலி காதலிக்கிறது சிவாவோட அசிஸ்டென்ட் ஜீவனை தான். அதை அஞ்சலியே என்கிட்ட சொல்லிட்டாங்க.

இனி அவர் எங்க வீட்டு மாப்பிள்ளை. அவர் மேல சுலபமா பழியை போட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு நினைக்காதமா! நாங்க எல்லாத்தையுமே லீகலா தான் டீல் செய்வோம். அப்புறம் நீ கோர்ட்டு கேஸ்ஸூனு தான் வாழ்க்கை முழுக்க அலைஞ்சிட்டு இருக்கனும்” என்றார்.

அன்னம் அவளை தீப்பார்வை பார்க்க,

“ஏம்மா நான் இதெல்லாம் டிவி நாடகத்துல தான் பார்த்திருக்கேன். நிஜத்துலயுமே இப்பல்லாம் இப்படி பழி வாங்குறேன்னு வாழ்க்கையை கெடுக்குறீங்களா? காதல் தோல்விக்கு பழி வாங்க நினைச்சா இங்கே யாருமே நிம்மதியா வாழ முடியாதேமா” என்றார் ஆச்சி.

தனது திட்டத்தை தூள் தூளாகியவரை முறைத்தவளாய் கோபமாக அங்கிருந்து கிளம்பினாள் ஆராதனா. அவரின் கோர்ட்டு கேஸ் என்ற வார்த்தைகள் அவளை போக வைத்திருந்தது.

அன்னத்தின் மனதை நிம்மதியும் அமைதியும் ஆட்கொண்டது.


புயலடித்து ஓய்ந்தது போல்

வீட்டினுள் பெருத்த அமைதி நிலவியது.

“என்ன‌ மச்சான்? எங்ககிட்ட இதெல்லாம் நீங்க எதுவும் சொல்லவே இல்லையே” எனக் கேட்டார் முருகன்.

“பொண்ணோட அப்பாவா இதை கேட்கும் போது அவருக்கு பொண்ணு கொடுக்க நீங்க யோசிப்பீங்கனு தான் சொல்லலை முருகன். ஈஸ்வரனுக்கு என் பொண்ணை கொடுக்க எனக்கு விருப்பமில்லாம இருந்தப்ப ஆச்சியும் நீங்க எல்லாரும் தான் தீவிரமாக இருந்தீங்க. உங்க நினைப்பு மாதிரியே இப்ப அவ நல்லா வாழுறா. அந்த மாதிரி தான் எனக்கு சிவாவையும் தோணுச்சு. சில சந்தேகங்களை வச்சிக்கிட்டு ஒரு மனுஷனை முற்றிலுமாக புறகணிச்சிட கூடாதுனு தோணுச்சு” என்றார் ருத்ரன்.

“ஆனா இவர் அந்த ஆராதனா பொண்ணு கூட மோதிரம் மாத்திருக்காரே மச்சான். வேற ஒருத்தியை காதலிச்சிருக்காருனு தானே அர்த்தம். அப்படிப்பட்டவருக்கு என் பொண்ணை எப்படி கொடுக்க முடியும்” கலக்கத்துடன் முருகன் கேட்க,

“அப்பா அதுக்குலாம் கண்டிப்பாக அவர் பக்கம் ஏதாவது காரணம் இருக்கும். எந்த பொண்ணையும் அவர் அவமரியாதையா பேசி கூட நான் பார்த்தது இல்லை. இந்த பொண்ணு தான் ஏதாவது குளறுபடி செஞ்சிருக்கும்” முருகன் சிவாவை தவறாக எண்ணி விடக் கூடாதென‌ படபடவென பேசினாள் அன்னம்.

அத்தியாயம் 42

“அன்னம் அப்படி பார்த்தா அவர் ஏற்கனவே ஒரு பொண்ணை காதலிச்சதா ஆகுது தானே! இதெல்லாம் அவர் முன்னாடியே சொல்லிருக்கனும் தானே‌. ஏற்கனவே ஒரு பொண்ணை காதலிச்சவருக்கு எப்படிமா உன்னை நாங்க கட்டிக் கொடுப்போம்” கவலையும் வேதனையுமாக முருகன் கூறவும்,

சிவாவை நியாயப்படுத்தி விடும் முனைப்பில், “அப்பா அப்படி பார்த்தா நான் கூட” என்று அன்னம் பேச வாய் திறந்த நேரம், அவசரமாக மாமா என அழைத்தவாறு பதறியடித்து உள்ளே நுழைந்தான் சிவா.

“நான் பேசிக்கிறேன் அன்னம். நீ எதுவும் சொல்ல வேண்டாம்” என்றவன் சொல்லாதே என தலையசைத்தான்.

ஆராதனா பேச ஆரம்பித்த பொழுது அந்த வீட்டின் வாசலுக்குள் நுழைந்தான் சிவா. வீட்டின் வெளியே நின்றவாறு இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவன் அன்னத்தின் பேச்சு போகும் திசை அறிந்தவனாய் அவசரமாக உள்ளே புகுந்தான்‌.

தனக்காக அவளது குடும்பத்தினருடன் வாதிட்டு அவளை பற்றியே கூற விழைந்தவளை கனிவுடன் நோக்கினான் சிவா‌.

தன்னால் என்றும் எப்பொழுதும் அவளுக்கொரு அவமானம் நேர்ந்து விடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தவனுக்கு அவளின் இந்த பேச்சு பெரும் பதட்டத்தை அளித்திருந்தது‌.

“எங்களுக்குள்ள என்கேஜ்மெண்ட்லாம் எதுவும் நடக்கலை மாமா. இந்த போட்டோ ஒரு சீரியலுக்காக எடுத்தது. அந்த சீரியலயே இந்த சீன் இருக்கும்” என்றவன் தனது கைபேசியில் யூ டியூப்பில் அந்த காணொளியை எடுத்துக் காண்பித்தான்.

“அடிப்பாவி! கொஞ்ச நேரத்துல எங்களைலாம் புத்தி பேதலிக்க வச்சிட்டாளே இந்த பொண்ணு. எங்க மாப்பிள்ள மட்டும் இதெல்லாம் விசாரிக்காம வச்சிருந்தா நாங்களும் அவ சொல்றதை நம்பி கல்யாணத்தை நிறுத்தியிருப்போம் சிவா தம்பி” அந்த காணொளியை பார்த்தவராய் உரைத்தார் ஆச்சி.

“ஆராதனா பேசும் போதே நான் வந்துட்டேன் மாமா. நான் உள்ளே வந்தேனா அவளோட எண்ணத்தை தெரிஞ்சிக்க முடியாதுனு தான் வெளில இருந்து கேட்டுட்டு இருந்தேன். எப்படிலாம் அவ பேசி நடிச்சி ஏமாத்துறானு பார்க்க தான் உள்ளே வராம இருந்தேன் மாமா.

ருத்ரன் பெரியப்பாவும் ஈஸ்வரண்ணாவும் சொல்லலைனா இவளை பத்தி எனக்கு தெரிஞ்சிருக்கவே செய்யாது. காலம் முழுக்க கல்யாணமாகாம சந்நியாசியா தான் இருந்திருப்பேன்‌” என்று புன்னகைத்தான்.

“நீங்க கேட்டது சரி தான் மாமா. எந்த அப்பா வேறொருத்தியை காதலிச்சவனுக்கு தன்னோட பொண்ணை கட்டிக் கொடுக்க விரும்புவாங்க. நான் அப்பாவா உங்க இடத்துல இருந்தாலும் இதெல்லாம் யோசிப்பேன் தான்” என்றவன் ஒரு நிமிடம் கண்களை மூடி தெய்வத்தை வணங்கியவனாய்,

“நான்‌ மாலை போட்டு விரதமிருந்து வணங்கிட்டு வந்த திருச்செந்தூர் முருகன் மேல சத்தியம் செஞ்சி சொல்றேன், என் வாழ்நாள்ல நான் காதலிச்ச ஒரே பொண்ணு என் அன்னம் தான். அவளை தவிர வேற யாரையும் காதலியா மனைவியா நான் நினைச்சு கூட பார்த்ததில்லை மாமா” முருகனின் கையில் அடித்து சத்தியம் செய்திருந்தான்.

“என்ன‌ மாப்ள இது” என பதறிவிட்டார் முருகன் என்றால், “அந்த பொண்ணு சொன்னுச்சுனு நீ எதுக்கு தம்பி இப்படிலாம் செய்ற” என்று ஆச்சி கலங்கியவாறு கேட்டார்.

அன்னத்தின் அன்னையோ, “நாங்க உங்களை நம்புறோம் தம்பி! நீங்க வெசனப்படாதீங்க” என்று ஆறுதல் உரைத்தார்‌.

அன்னத்தின் கண்கள் ஆனந்த கண்ணீர் பொழிய அவளின் அகம் குளிர்ந்து போனது‌.

உணர்ச்சி பிழம்பாக இருந்த அன்னத்தின் முகத்தை பார்த்த ருத்ரனுக்கு, மீனாட்சி தனது நிச்சயத்திற்கு பிறகு ஈஸ்வரனுக்கு ஆதரவாக பேசியது, அவனை சார்ந்தே தனது வாழ்வியலை மாற்றிக் கொண்டது எல்லாம் நினைவிற்கு வர,

‘கல்யாணம் நிச்சயமாகிட்டாளே இந்த பொண்ணுங்கலாம் புருஷனுக்கு ஏத்த மாதிரி மாறிடுவாங்க போல’ மனதோடு எண்ணிக் கொண்டவராய் சிரித்துக் கொண்டார் ருத்ரன்.

****

முருகன் கோவிலின் வெளியே,‌ சுற்றுப் பிரகாரத்தில் எவரும் நடமாடாத இடத்தில் மரத்தின் கீழேயிருந்த சிமெண்ட் மேடையில் அமர்ந்திருந்தான் சிவா.

அவனை முறைத்தவாறு நின்றிருந்தாள் அன்னம்.

சிவா சத்தியம் செய்துக் கொடுத்த பிறகு, அவன் மீது சிறு துளியாய் இருந்த சந்தேகமும் முற்றிலுமாய் நீங்கியிருந்தது அன்னத்தின் குடும்பத்தினருக்கு.

“உங்களை பார்க்க தான் வந்தேன் ஆச்சி! என்னென்னமோ ஆகிடுச்சு” என்றவாறு அடிப்பட்டிருந்த ஆச்சியின் பாதத்தை தடவியவாறு அவன் பேச, “அய்யோ என்ன செய்றீங்க தம்பி! எங்க வீட்டு மாப்பிள்ளை என் காலை பிடிக்கிறதா?” என அவனின் கையை விலக்கி விட, “வயசுல பெரியவங்களுக்கு பணிவிடை செய்றதுலாம் பாக்கியம் ஆச்சி” என்றவன் அவரிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்க, அன்னம் அவளது தாயுடன் சமையலறையில் இருந்தாள்.

“நான் ஈஸ்வரன் மாப்ளகிட்ட இந்த கடுதாசி பத்தி சொல்லிருந்தாலே அவர் அப்பவே எல்லாத்தையும் தெளிவுப்படுத்தியிருப்பாரு. இவ்வளோ கவலைப்பட்டிருக்க வேண்டியிருந்திருக்காது” என்று ருத்ரனிடம் கூறிய முருகன், ஈஸ்வரனிடமும் ராஜனிடமும் நடந்தவற்றை உரைக்கலாமென அழைத்து பேசினார்.

மாப்பிள்ளைக்கான விருந்து தயாராகி கொண்டிருக்க, அன்னத்திடம் தான் தனியே பேச வேண்டுமென ஆச்சியின் மூலமாக அன்னத்தின் பெற்றோரிடம் அனுமதிப் பெற்று அவளின் வீட்டினருகே இருக்கும் முருகன் கோவிலுக்கு அவளை அழைத்து வந்திருந்தான் சிவா.

மரத்தின்‌ கீழே இருந்த இலையை கையிலெடுத்து கிழித்தவாறு அன்னம் நின்றிருக்க,

“என் பொண்டாட்டிக்கு என் மேல என்ன கோபமாம்?” சிரித்தவாறு கேட்டான் சிவா.

“நான்‌ ஒன்னும் உங்க பொண்டாட்டி கிடையாது” என முகத்தை திருப்பிக் கொண்டாள் இவள்.

“ஆஹான் பொண்டாட்டியா இல்லாதவங்க தான் எனக்காக அவளோட அப்பா அம்மாக்கிட்ட உருகி உருகி வாதாடினாங்களாமா?” குறுங்சிரிப்பு அவனிதழில்‌.

“பொண்டாட்டியா நினைச்சிருந்தா அந்த பொண்ணை பத்தி என்கிட்ட சொல்லாம இருந்திருப்பீங்களா?” கோபமாய் கேட்டாள் அன்னம்.

“வெள்ளப்புறா” என்றவன் ஏதோ கூற வரும் முன்,

“சரி இது வரைக்கும் நானா கேட்காம நீங்க எதுவும் சொன்னதில்லை. அதுக்காக இப்படி ஒருத்தி உங்க வாழ்க்கைல ஃப்ரண்ட்டா சில வருஷமாவது இருந்திருக்காளே அதை கூடவா சொல்லாம இருப்பீங்க” கோபத்தில் முகம் செந்நிறமாகியது.

“அன்னம்மா” என்று அவன் அவளின் கையை பிடிக்க போக,

“தொடாதீங்க என்னை” அவனின் கை படாதவாறு ஒதுங்கி போனாள்.

“அந்த பொண்ணு சொன்னதை கேட்டதும் என் மனசு எவ்ளோ பாடுபட்டுச்சு தெரியுமா. அய்யோ அப்பா அம்மாலாம் உங்களை தரகுறைவா நினைச்சிடக் கூடாதேனு அப்படி தவிச்சிட்டு இருந்தேன். ஒரு தடவை மாப்பிள்ளைன்ற மரியாதை மீறி அவங்க பேசிட்டாலும் அதை மீட்டெடுக்க முடியுமா இல்ல நான் அவங்ககிட்ட உங்களுக்காக சண்டை போட தான்‌ முடியுமா” அத்தனை ஆத்திரமாக அவள் பேசிக் கொண்டிருக்க,

“உங்கப்பா அம்மா என்னை தப்பா நினைக்கிற மாதிரி ஆகிடுச்சேனு தான் உன் கோபமா வெள்ளப்புறா?” எனக் கேட்டான்.

“அதுவும் தான்” என்றவள்,

“யார்‌ முன்னாடியும் நீங்க அசிங்கப்படுறதை என்னால பார்த்துட்டுஇருக்க முடியாதுப்பா” கூறும் போதே கண்களில் இருந்து நீர் வழிந்தது.

எத்தனை நம்பிக்கை தன் மீது அவளுக்கு, எத்தனையாய் யோசிக்கிறாள் அவள் தனக்காக என நெகிழ்ந்து போனான் சிவா.

“அன்னம்மா” என்று மீண்டும் அவளின் கையை அவன் பற்றப் போக, தொட விடாமல் அவள் விலகிச் செல்ல, அவளை இழுத்து பிடித்து தனது அருகில் அமர வைத்தவன், அவளின் கையை தனது கரங்களுக்குள் கோர்த்துக் கொண்டான்.

“இனி என்‌ பொண்டாட்டிக்காக, கூட கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கிறேன் சரியா” என்று அவளின் நெற்றியில் முட்டினான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மனம் சமன்பட ஆரம்பித்தது.

“உங்க பக்கத்துல வந்தாலே என்னால ஒழுங்கா கோபம் கூட பட முடியாது” என்றவள் ஆதங்கமாக சொல்லவும்,

“ஏன் முடியாதாம்?” சிரிப்புடன் கேட்டான்.

“ஏன்னா அது அப்படி தான். உங்களை அவ்ளோ பிடிக்கும் எனக்கு! சின்னதா கூட உங்களை கஷ்டப்படுத்திட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாதுப்பா” என்றாள்.

கோர்த்திருந்த கரத்தினை வருடியவனாய்,

“என் அன்னம் மட்டும் அழகு இல்ல  அவளோட காதலும் பேரழகு தான்” என்று அக்கரத்தினை உதட்டினில் ஒத்தி எடுத்தான்.

உடனே தனது கரத்தினை விருட்டென இழுத்துக் கொண்டவளாய், “வாங்க போவோம். வீட்டுல எல்லாரும் சாப்பிடாம காத்துட்டு இருப்பாங்க” என்று எழுந்தாள்.

நண்பனின் வண்டியில் வந்திருந்தவன் அதனை ஓட்ட ஆரம்பிக்க, பின்னே அமர்ந்தாள் அன்னம்.

“நீங்க சொன்ன மாதிரியே அந்த வீடியோ வைரல் ஆகிடுச்சா? ஆனா ஏன் யாரும் என்னையோ உங்களையோ இதை பத்தி கேட்கலை” எனக் கேட்டாள்.

“அந்த வீடியோல என்‌ முகம் மாஸ்க்ல கவர் ஆகி இருந்துச்சு. என்னை நல்லா தெரிஞ்சவங்களால தான் அதை பார்த்து கண்டுபிடிக்க முடியும். உன்னோட முகமும் தெளிவா இல்லை. என் மேல சாஞ்சி இருக்க மாதிரி இருக்கனால பாதி தான் தெரியுது. இன்னொன்னு இது ஒரே ஒரு யூ டியூப் சானல்ல தான் வந்திருக்கு. நாம நினைச்ச அளவுக்கு பெரிசா வைரல் ஆகலை. அந்த சேனலை சப்ஸ்க்ரைப் செஞ்சிருக்கிறவங்க தான் இந்த வீடியோவை பார்த்திருப்பாங்களே தவிர மத்தவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை” என்றான்.

வீட்டிற்கு வந்து மதிய உணவை உண்டு முடித்து சிறிது நேரம் அனைவரிடமும் பேசி விட்டு சிவா கிளம்புவதாக எழுந்து நிற்க, அவனை அனுப்ப மனமே இல்லை அவளுக்கு.

ஏக்கத்துடன் அவனை அவள் பார்த்திருக்க, “இன்னும் ஒன்பது நாள் தான். அப்புறம் சிவா இருக்கும் இடம் தான் அன்னத்தோட இருப்பிடம்” என்று அவளின் நெற்றியில் முட்டி சிரிக்க செய்தவனாய் அங்கிருந்து கிளம்பினான் சிவா.

*****

ஒரு வாரம் கடந்திருக்க, ஈஸ்வரன் தனது மகளை பள்ளியில் இறக்கி விட்டு வீடு வந்து சேர்ந்தான்.

“கிளம்பிட்டியா மீனு” என்றவாறு அவர்களின் அறைக்குள் அவன் நுழைய, படுத்திருந்தாள் மீனாட்சி.

“என்னடா  பச்சக்கிளி? என்னாச்சு? இந்நேரத்துல படுத்திருக்க?” எனக் கேட்டான்.

“ஒரு மாதிரி சோர்வாக இருந்துச்சுப்பா! அதான்‌ நீங்க வரும் வரைக்கும் படுத்திருக்கலாம்னு இருந்தேன்” என்றவள் எழுந்து அமர்ந்தாள்.

அந்நேரம் ஈஸ்வரனின் கைபேசி அலற, எடுத்து பார்த்தவன், “ராஜா தான் கூப்பிடுறான்” என்றவனாய் அழைப்பை ஏற்றான்.

அங்கு ராஜன் கூறிய செய்தியில் மகிழ்ந்தவனாய், “ரொம்ப சந்தோஷம்டா ராஜா! அம்மா கல்லுமாக்கிட்டலாம் சொல்லிட்டியா? கேட்டதும் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்களே” என மகிழ்வாய் அவனுடன் இவன் பேசிக் கொண்டிருக்க,

“என்ன விஷயம்?” என வாயசைத்து கேட்டு கொண்டிருந்தாள் மீனாட்சி.

ராஜனிடம் பேசிவிட்டு மனம் நிறைந்த மகிழ்வுடன் மீனாட்சியின் அருகில் அமர்ந்தவன், “நம்ம ராஜாக்கு இரண்டாவது குழந்தை பிறக்க போகுது! நங்கை கர்ப்பமா இருக்காளாம்” என்றான்.

கண்கள் மின்ன, “வாவ் நங்கை சொல்லவே இல்லை. எங்க வாட்ஸ்அப் கிரூப்ல இன்னிக்கு இருக்கு கச்சேரி” என்று கூறியவளின் மனம் ஏதோ கணக்கு போட,

“ஈஸூப்பா” என சத்தமாய் அழைத்திருந்தாள் மீனாட்சி.

“நான் இதை யோசிக்கவே இல்லையே! காலைல இருந்து ஒரே வாமிட்ப்பா! நாள் கணக்கு தள்ளி போயிருக்கிறதே இப்ப தான் கவனிக்கிறேன். ஒரு வேளை நமக்கும் இப்படி இருக்குமோ” பூரிப்பான மகிழ்வுடன் நின்றிருந்த ஈஸ்வரனின் சட்டையை பிடித்து இழுத்தவாறு மீனாட்சி கேட்க,

அவளின் கன்னங்களை கைகளில் ஏந்தி கண்களில் ஊடுருவியவனாய், “ஆர் யூ சீரியஸ்?” எனக் கேட்டான்.

“ஆமாப்பா! வாங்க டாக்டர்ட்ட போய் செக் செஞ்சிடலாம்” என்று மீனாட்சி நம்பிக்கையாக கூறவும் இவனுள் தந்தையின் குறுகுறுப்பு!

“நினைக்கும் போதே ஹேப்பியா இருக்குடா பச்சக்கிளி! உண்மையா‌ இருந்தா இன்னும் சந்தோஷமா இருக்கும்” என்ற ஈஸ்வரன் அவளை அணைத்துக் கொண்டான்.

— தொடரும்.