அழகிய அன்னமே 40

தனது மதுரை நண்பன் உரைத்ததை கேட்டவனுக்கு குழப்பமாகி போனது‌.

“எதுக்கு திடீர்னு பொய் சொல்லி வர சொல்லிருக்காங்க. நம்ம கல்யாணத்தை வச்சி எதுவும் பிரச்சனை வந்திருக்குமா?” யோசித்தவாறே மகிழுந்தில் தலையை பின்னோடு சாய்த்தவாறு அமர்ந்திருந்தான் சிவா.

இதனை அன்னத்திடம் கூறி அவளையும் குழப்ப மனமில்லாமல் மதுரையை நோக்கி பயணித்தான் சிவா.

இரவு பதினொரு மணியளவில் ருத்ரனும் அன்னமும் மதுரையை சென்றடைந்தனர்.

தனது இல்லத்திற்குள் நுழைந்தவள், “ஆச்சி எங்கப்பா? அவங்களுக்கு என்னாச்சு?” எனக் கேட்டாள்.

“அவங்க நல்லாயிருக்காங்கமா! உள்ளே ரூம்ல இருக்காங்க. பின் கட்டுல தண்ணீர்ல கால் லேசா வழுகிடுச்சு‌. கால்ல தான் அடிபட்டுருக்கு” என்று முருகன் கூறவும்,

“இதுக்கா அடிச்சி பிடிச்சி வர சொன்னீங்க? நான் என்னமோ ஏதோனு பயந்தே போய்ட்டேன்” எனக் கூறும் போதே கண்களில் நீர் கட்டிக் கொண்டது அவளுக்கு.

“ஆச்சிக்கு வலி ஒரு பக்கம்! உன்னை உடனே பார்க்கனும்னு ஆசை ஒரு பக்கம்! இப்படி சொல்லலைனா நீ உடனே கிளம்பி வர மாட்டனு ஆச்சி தான் எதுவும் சொல்லாம இப்படி சொல்லி உன்னை வர வைக்க சொன்னாங்க” என்றார் முருகன்‌.

“எங்க அந்த ஆச்சி! நான் எவ்ளோ பதறி போய் வந்தேன் தெரியுமா” என கண்களில் நீர் துளிர்க்க ஆதங்கத்துடன் கேட்டாள்.

முருகன் இயல்பாக பேசினாலும் எவரின் முகத்திலும் திருமணத்திற்கான மகிழ்வு இல்லையே, வேறு எதுவும் பிரச்சனை இருக்குமோ என முருகனையும் அவரின் மனைவியையும் பார்த்தவாறு நினைத்தார் ருத்ரன்.

“நீங்க முதல்ல போய் முகம் கழுவிட்டு வாங்க! சாப்பிட்டுட்டே பேசலாம்” என ருத்ரனையும் அன்னத்தையும் அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தார் முருகன்.

இருவரும் கால் மணி நேரத்தில் உணவு மேஜையில் வந்தமர அங்கே அமர்ந்திருந்தார் ஆச்சி.

ஆச்சியை பார்த்ததும் கட்டிப்பிடித்து அழுது கரைந்த அன்னம், “என்ன ஆச்சி, பாதத்துல இவ்வளோ பெரிய கட்டு போட்டிருக்காங்க. பார்த்து நடக்க மாட்டியா நீ! ரொம்ப வலிச்சிதா” கண்கள் கலங்க காலை தடவியவாறு அன்னம் கேட்க,

“சரியாகிடும்! வலிக்கு மாத்திரை மருந்துலாம் கொடுத்திருக்காங்க. நீ ஏன் இப்படி அழுது வடியுற” என்று அவளின் கண்களை துடைத்தார் ஆச்சி.

இருவரும் உண்டு முடித்ததும், “அன்னம் நீ போய் தூங்கு மா! காலைல பேசலாம்” என்று அவளை மேலே இருக்கும் அறைக்கு அனுப்பிய முருகன், ருத்ரனிடம் தீவிரமாய் சில விஷயங்களை பகிர்ந்தார்‌.

“நேத்து இப்படி ஒரு மொட்ட கடுதாசி வரவும் ரொம்ப மனசு சங்கடமா போச்சு மாப்ள! அதை நினைச்சிக்கிட்டே பின்னாடி காய வச்ச துணியை எடுக்க போனப்ப தான் இப்படி ஆகிட்டு” என்று சொன்ன ஆச்சி,

“கல்யாண வேலை நடந்துட்டு இருக்க நேரத்துல இப்படி ஆகிடுச்சேனு கவலை வேற! அங்க கல்யாண கனாவுல இருக்க பொண்ணுக்கிட்ட போய் நாங்க விசாரிக்க வரைக்கும் சிவா தம்பிக்கிட்ட பேசாதனு எப்படி சொல்றது! அதான் மொதல்ல அன்னத்தை இங்கே வர வச்சிட்டு அப்புறம் சிவா தம்பியை பத்தி விசாரிக்கலாம்னு உங்களை வர வச்சோம்” என்றார் ஆச்சி.

“எனக்கு தெரிஞ்சி சிவா மேல எந்த தப்பும் இருக்காது அத்தை. மொட்டை கடுதாசி பொய்யா குத்தம் சுமத்தனும்னு நினைக்கிறவன் தான் போடுவான். நீங்க எதை நினைச்சும் கவலைப்படாம தூங்குங்க அத்தை. காலைல பார்த்துக்கலாம்! நீங்களும் போங்க மச்சான். கூட்டிட்டு போ தங்கச்சி” என்று அனைவரையும் அனுப்பியவர், தானும் சென்று ஓய்வறையில் படுத்துக் கொண்டார் ருத்ரன்.

அங்கே சிவாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் அன்னம்.

“ஆச்சிக்கு கால்ல அடிப்பட்டிருக்கு அத்தான்!” என்று அன்னம் அனுப்பியதும், மதுரை நண்பனின் இல்லத்தில் தங்கியிருந்த சிவா, “டேய் அவங்களுக்கு நிஜமாவே உடம்பு சரியில்லைடா. நீ எந்த ஆச்சியை போய் பார்த்துட்டு வந்த?” எனக் கேட்டான்.

“இல்லடா நீ சொன்னதும் ஹார்ட் அட்டாக், அது இதுன்னு பெரிசா யோசிச்சு அவங்க வீட்டுக்கிட்ட போனேனா, அங்க ஆச்சி சத்தமா யாரையோ வசைப்பாடிட்டு இருந்தாங்க. அதான் உடனே உனக்கு கால் செஞ்சி சொன்னேன். இப்படி கால்ல அடிப்பட்டதுக்குலாம் அவசரமா வர வைப்பாங்கனு எனக்கு எப்படி தெரியும்” என்றான் அந்த நண்பன்.

“உன்னை போய் அனுப்பி வச்சேன் பாரு! என்னை சொல்லனும்” என தலையில் அடித்துக் கொண்ட சிவா, மாடிப்படியில் ஏறியவனாய் அன்னத்திற்கு அழைத்தான்.

படுக்கையில் படுத்து கிடந்தவளாய் இணைப்பை ஏற்றவள், “என்ன அத்தான்! இந்த நேரத்துல கால் செஞ்சிருக்கீங்க?” எனக் கேட்டாள்.

“நான் மதுரை வந்துட்டேன். ஃப்ரண்ட் வீட்டுல தான் இருக்கேன்னு சொல்ல தான் போன் செஞ்சேன். அப்படியே உன்கிட்ட பேசலாம்னு தான். இன்னிக்கு நாள் முழுக்க டென்ஷன்லயே போய்டுச்சு” என்றான் சிவா.

“ஏன் என்னாச்சு? அங்க ஃபங்ஷன்ல எதுவும் பிராப்ளமா?” எனக் கேட்டாள்.

“இல்லமா! நீ ஆச்சிக்கு உடம்பு சரியில்லனு கவலையாய் கிளம்பவும் மனசு சரியில்லை! ஆச்சிக்கு என்னனு வேற சொல்லாம் கிளம்பி வர சொன்னதும் நம்ம கல்யாணத்தை வச்சி எதுவும் பிரச்சனையோனு வேற கலக்கமாகி போச்சு” மனதின் கலக்கத்தை அவளிடம் பகிர்ந்துக் கொண்டான்.

“ஏன் அப்படிலாம் யோசிக்கிறீங்க? கல்யாணத்துல என்ன பிரச்சனை வந்துட போகுது” என்றவள் குழப்பமாக கேட்க,

“நீ இல்லாம எனக்கு வாழ்க்கை இல்லைடா அன்னம்மா! என்னை விட்டு உன்னை பிரிச்சிடுவாங்களோனு வர்ற நினைப்பே மனசை ரணமா வலிக்க வைக்குது. என்னை விட்டு போய்ட மாட்ட தானே வெள்ளப்புறா” அவனின் குரல் கரகரப்புடன் ஒலிக்க,

“ஏன்ப்பா இப்படி பேசுறீங்க? நீங்க இப்படி சொல்றதை கேட்க கூட என்னால முடியலை. நீங்க வருத்தப்பட்டாலே எனக்கு கண்ணு கலங்கிடும். அதெல்லாம் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன். நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கும். நீங்க எதுவும் நினைச்சு கவலைப்படாம தூங்குங்க” என்றவள் மேலும் சில நிமிடங்கள் அவனிடம் பேசி விட்டு இணைப்பை துண்டித்தாள்.

‘சிவா ஏன் திடீர்னு இப்படி பேசுறாரு’ என்று யோசித்த வண்ணமே உறங்கி போனாள் அன்னம்.

*****

மறுநாள் காலை ஐந்து மணியளவில் சென்னையில் தனது படுக்கையறையில் எழுந்து அமர்ந்தாள் நங்கை.

அவர்களின்‌ மகள் நந்திதா அவளது தாத்தாவுடன் அவரது அறையில் அன்று படுத்துறங்க, ராஜன் இங்கே நன்றாக உறங்கி கொண்டிருந்தான்.

உறங்கும் கணவனை தொந்தரவு செய்யாத வகையில் படுக்கையில் இருந்து இறங்கினாள். தனது கைப்பையினில் எதையோ எடுத்தவளாய் கழிவறைக்கு சென்று சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவளின் முகம் பூரித்து கிடந்தது.

ஒருக்களித்து படுத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தவனை பார்த்தவள், “சுந்தர்” என அவனை தட்டினாள்.

லேசாய் அசைந்து விட்டத்தை பார்த்து படுத்தவனாய் மீண்டும் உறக்கத்திற்குள் செல்ல, மெல்ல எட்டி அவனின் முகத்தருகே சென்றவள் அவன் இதழில் தனது உதட்டை ஒத்தி எடுத்தாள்.

உதட்டை துடைத்தவனாய் மறுபுறம் அவன்‌ சாய, அவனருகில் சென்று படுத்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு காதை கடித்தாள்.

ஆஆஆஆ என அலறியவனாய் கண்களை திறவாமலேயே அவளின் இடையோடு கையிட்டு தன்னோடு இறுக்கியவன், “என் பப்ளிமாஸ்க்கு காலைலயே என்ன வேணுமாம்” என்று அவளின் கன்னத்தை கடித்தான்.

அவன் தாடியை பிடித்திழுத்தவளாய், “கண்ணை திறந்து பாருடா” என்றாள்.

தன் மேலே அவளை இழுத்தவனாய் கண்களை திறந்து அவளை பார்க்க, “நான்‌ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சிரித்தவாறு அவளையே அவன் பார்த்திருக்க, “என்னடா எதுக்கு சந்தோஷமா இருக்கேன்னு கேட்க மாட்டியா?” எனக் கேட்டாள்.

“ஏன்னு தெரியுமே! டவுட்டாவே இருந்துச்சு இப்ப கன்ஃபர்மாகிட்டு” என்றான்‌.

ஆச்சரியமாக அவனை அவள் பார்க்க, “என்னோட எக்ஸ்ட்ராடினரி பெர்மாமென்ஸூக்கு (extra ordinary performance) பலன் கிடைச்சிருக்கு!” என்று கண் சிமிட்டியவாறு குறும்பாய் அவன் கூற,

“பேச்சை பாரு” என அவன் உதட்டினிலேயே ஒரு அடி வைத்தவள், இத்தனை நேரமாய் தனது கையில் பொதிந்து வைத்திருந்ததை அவனிடம் காண்பித்தாள்.

அதிலிருந்த இரண்டு வரியை பார்த்து உடலெல்லாம் புல்லரித்தது அவனுக்கு.

“சீக்கிரமா உன்னை மாதிரியே ஒரு குட்டி சுந்தர் வரப் போறான்! லவ் யூ டா” ஆனந்த கண்ணீருடன் உரைத்தவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“லவ் யூ டா பப்ளிமாஸ்” என்றவாறு நெற்றியில் முத்தமிட்டவன் அவளை தன்னோடு இறுக்கி கொண்டான்.

இருவரின் மனங்களும் அதீத மகிழ்வில் தத்தளித்திருந்தது.

*****

காலை பத்து மணியளவில் தனது தோட்டத்தில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு வந்தார் முருகன்.

தனது தாய் மற்றும் ஆச்சியிடம் செல்லம் கொஞ்சியவாறு சமையலறையில் அரட்டை அடித்தப்படி பேசிக் கொண்டிருந்தாள் அன்னம்.

தனது மகளின் மகிழ்வான குரலை கேட்டு சந்தோஷித்தவராய் ருத்ரன் தங்கியிருந்த அறைக்கு சென்றவர், அந்த கடிதத்தை அவரிடம் காண்பித்தார்.

“இந்த கடுதாசியை பத்தி மாப்பிள்ளக்கிட்டயே கேட்டுடலாமா? எனக் கேட்டார் முருகன்.

“ஆமா மச்சான். இதை பார்த்தா வேணும்னே அவர் மேல பழி‌ போட்டு இந்த கல்யாணத்தை நிறுத்த செஞ்ச திட்டம் மாதிரி தான் தெரியுது” என்றார் ருத்ரன்.

அந்நேரம் அன்னம் அந்த அறையினுள் வர, அவளிடம் அந்த கடிதத்தை காண்பிக்குமாறு கூறினார் ருத்ரன்.

“என்ன லெட்டர்ப்பா?” எனக் கேட்டவாறு முருகனின் அருகே அவள் செல்ல,

“இந்த லெட்டர் நேத்து வந்துச்சுமா! இதை பார்த்துட்டு கவலையோட பின்கட்டுக்கு போகும் போது தான் ஆச்சிக்கு கால் வழுக்கிடுச்சு” என்றார் முருகன்.

அந்த கடிதத்தை வாங்கி படித்தவளின் முகத்தில் அதிர்ச்சியும் கோபமும் வந்து போனது.

“யாருப்பா இந்த லெட்டரை உங்களுக்கு அனுப்பினது?” எனக் கேட்டாள்.

“தெரியலைமா! நம்ம வீட்டு முகவரிக்கு வந்துச்சு!” என்றார் முருகன்.

கடிதத்தின் உரையை முன்னும் பின்னுமாய் திருப்பி பார்த்தவளுக்கு சென்னையிலிருந்து வந்திருப்பது புரிந்தது.

அந்நேரம் வீட்டின்‌ கதவை யாரோ தட்டிய சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தனர் அனைவரும்.

ஜீன்ஸ் குர்தி அணிந்தவாறு உயரமாய் நின்றிருந்த அப்பெண்ணை கேள்வியாய் பார்த்தார் முருகன்.

சமையலறையில் இருந்து வெளியே வந்த அன்னத்தின் தாய், “யாரு வேணுமா உங்களுக்கு? யாரை பார்க்கனும்?” எனக் கேட்டவாறு வாசலை நோக்கி சென்றார்.

“இது அன்னம் வீடு தானே” என்று அந்த பெண் கேட்டதும்,

“உள்ளே வா மா! அன்னத்தோட சிநேகிதியாமா நீ! அவ கூட வேலை பார்க்கிறியாமா” என்றவர்,

“அன்னம் என்னடி அப்படியே நிக்கிற! உன்னோட வேலை செய்றவங்க வந்திருக்காங்க பாரு” என்றார்.

இந்த பெண்ணை எங்கேயோ பார்த்தது போன்ற உணர்வு தோன்ற, “உள்ளே வாங்க! உட்காருங்க” அங்கிருந்த சோபாவில் அமர சொன்னாள் அன்னம்.

ருத்ரனுக்கும் அந்த பெண்ணை எங்கேயோ பார்த்தது போன்ற எண்ணம் தோன்ற, யோசித்த வண்ணம் நின்றிருந்தார்.

“யார் நீங்க? சாரி உங்களை ஞாபகம் இல்லை” எனக் கேட்டாள் அன்னம்.

— தொடரும்